பாட்டும் நானே பாவமும் நானே

Flamboyant என்கிற பதத்துக்கு ஆங்கில அகராதியில் இப்படி விளக்கம்:
Adjective
1. (of a person or their behavior) Tending to attract attention because of their exuberance, confidence, and stylishness.
(உணர்ச்சிப் பொங்கலாலும், தன்னம்பிக்கையாலும்,  தனக்குரிய பாணியாலும் கவனத்தைக் கவர்தல்)

ஒரு கோணத்தில் இது தவிர்க்க வேண்டிய குணம் போலத் தோன்றக்கூடும். ஆனால் இது குறிக்கும் பகட்டையும், ஆடம்பரத்தையும் தாங்க ஒரு தனி ஆளுமை வேண்டும். larger than life personality என்பார்களே, அதுபோல . ஐந்தடிதான் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய நடத்தையாலும், பேச்சாலும், நடையுடை பாவனைகளாலும் ஏழடிபோல தோன்றும் ஒரு கம்பீரம். தான் கதாநாயகனாய் நடிக்கும் பாத்திரங்களுக்கு இப்படி ஒரு கம்பீரத்தைக் கொடுக்கும் வகை நடிப்பு சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பு. அந்தச் சிம்மக்குரலோனுக்குக் குரல் கொடுக்க வேண்டியவரின் குரல் எப்படி இருக்கவேண்டுமோ அத்தகைய Flamboyance கொண்ட குரல் TMS அவர்களுக்கு. அவரே பாடிய ‘மகாராஜன் உலகை ஆளலாம், இந்த மகாராணி அவனை ஆளுவாள்’ என்ற பாடல் வரிகளில் வருவதுபோல, பாடல் காட்சிகளில் அந்த மகாராஜனின் மிகையான நடிப்பை இவரது குரல் ஆளுவது நல்ல பொருத்தம்.

tm_soundararajan2

பின் நாட்களில் சிவாஜிக்கு வேறு பலரும் பாடியிருந்தாலும், TMS – சிவாஜி ஜோடிப் பாடல்களிலிருந்த பொருத்தம் அவற்றிலெல்லாம் இருக்கவில்லை.

எங்கே நிம்மதி, போனால் போகட்டும் போடா, நான் உன்னை அழைக்கவில்லை, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா , பாலூட்டி வளர்த்த கிளி, இரண்டு மனம் வேண்டும் இவற்றையெல்லாம் இன்னொரு குரலில் கற்பனை செய்யவும் முடியுமா என்ன? M.S. விஸ்வநாதன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தப் பொருத்தம் பற்றி சொன்னார்:. ஒருநாள் M.S.V யின் மகன் சிறுவனாயிருக்கையில் பட்டினத்தார் படத்தை தொலைக்காட்சியில் பார்க்கையில் சொன்னாராம்:’ டி எம் எஸ்க்கு சிவாஜி பாடறாரப்பா’ என்று.

மற்றவர்களுக்கும் மிகச் சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்ப் பாடுவார். வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்தையும் குரலின் பாவத்தையும் மாற்றி யாருக்காகப் பாடுகிறரோ அந்த நடிகர் இதற்கு எப்படி பாவம் காட்டி நடித்திருப்பார் என்பதை காண்பித்துவிடுவார். பாட்டைத் தனியே கேட்டுவிட்டு, பாடல் காட்சியைப் பாட்டுடன் கேட்கையில், ஏற்கனவே படமாக்கிய காட்சிக்கு இவர் குரல் கொடுத்தாரா அல்லது இவர் பாடியபின் அதற்கு அந்த நடிகர் நடித்தாரா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு குரலும் உணர்ச்சிகாட்டி காட்சியில் நடித்திருக்கும். தான் பாடும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது நடிப்புப் பாணியிலேயே பாடி அந்த நடிகரின் முத்திரையை பாடலுக்குக் கொடுத்துவிடும் திறமைசாலி. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற பாடலில் பாலையாவுக்கும் நாகேஷுக்கும் இவரேதான் குரல். ஆனால் வரிகளிலுள்ள பாவ வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு பாலையாவின் நக்கலையும் நாகேஷ் அதற்குக் குத்தலாய் கொடுக்கும் பதிலடிகளையும் வித்தியாசம் காட்டிப் பாடியிருப்பார்.

சிவாஜி பாடல்களில் கம்பீரம்,flamboyance என்றால் எம்ஜியார் பாடல்களில் கொஞ்சம் வீரம், கொஞ்சம் துள்ளல், நிறைய ரொமான்ஸ், (நான் ஆணையிட்டால், துள்ளுவதோ இளமை, தொட்டால் பூ மலரும், மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே) ஜெயசங்கர் பாடல்களில் கனிவும், மென்மையும்  (நான் மலரோடு தனியாக, அன்புள்ள மான்விழியே). இப்படி என்று எதைச் சொல்வது எதை விடுவது? ஒவ்வொன்றும் முத்துக்கள் என்று சொல்கையிலேயே இவரது ‘முத்துக்களோ கண்கள்” நினைவுக்கு வருகிறது.  ஒரு காலகட்டத்தில் எம்ஜியாருக்கு இவர் பாடுவது நின்றுபோனாலும், இன்றும் எம்ஜியாரின் முத்திரைப் பாடல்களாய் ஒலிப்பவை இவருடைய  ‘ நான் ஆணையிட்டால்’ , ‘புதிய வானம் புதிய பூமி‘, ‘ தூங்காதே தம்பி தூங்காதே‘  போன்ற பாடல்கள்தான்.  கட்சிக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அந்த அதிரடிக்குரல் அவருக்குத் தேவைப்பட்ட்டது.

சோகப் பாடல்கள் என்றாலோ கேட்கவே வேண்டாம். நெஞ்சைப் பிழிந்துவிடுவார். எனக்குத் தெரிந்து விரக்தியின் எல்லையில் ஒருதரமாவது ‘போனால் போகட்டும் போடா’ என்று சொல்லாதவர்கள் இல்லை. எங்கே நிம்மதி, சட்டி சுட்டதடா, அம்மம்மா தம்பி என்று நம்பி என கண்ணதாசனின் அமரத்துவம் பெற்ற பாடல்வரிகளுக்கு ஜீவன் கொடுத்த குரல் அது. கண்ணதாசனுக்கே கூட இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறாரே : ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’, ‘பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?’

பூமாலையில் ஓர் மல்லிகை பாடலின் ஆரம்பமாகட்டும், நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் வரிகளின் இறுதியில் இவரது ‘ம்.ம்.ம்.’ ஆகட்டும்,பல பாடல்களில் இவரது ஹம்மிங் பாட்டுக்கு அழகு சேர்க்கும் .இவருடைய இன்னொரு ஸ்பெஷாலிடி. இவருடைய பளிச்சென்ற தமிழ் உச்சரிப்பு பாடல்வரிகள் பாட்டுக்கு முக்கியமாய் இருந்த அந்த நாட்களில் உச்சரிப்பு சுத்தம் மிக முக்கியமாய் இருந்தது.


அதே சமயம் ஒரு பகுதிக்காரர்களின் உச்சரிப்பில் பாடும் பாடல்களையும் குறைவைக்காமல் நிறைவாய் பாடியிருக்கிறார். ‘மணப்பாறை மாடு கட்டி’ ஆகட்டும்’ ‘என்னடி ராக்கம்மா,’ ‘முத்துக்குளிக்க வாரீகளா’ போன்ற பாடல்களை இன்றும் ரசிக்க முடிகிறதே.

இவர் பாட ஆரம்பித்த நாட்களில் ஜி ராமநாதன் போன்றவர்களின் இசையில் திரைப்பாடல்கள் கர்நாடக சங்கீதப் பாணியிலேயே அமைந்திருந்தன. கர்நாடக சங்கீதத்தில் பயிற்சி பெற்றிருந்ததினாலும் கணீர் என்ற இவரது குரல்வளத்தினாலும் பல சிறப்பான பாடல்கள் இவருக்கு அமைந்திருந்தன. உத்தமபுத்திரன், அம்பிகாபதி, கர்ணன், திருவிளையாடல், திருவருட்செல்வர் என எத்தனை பாடல்கள் நினைவுக்கு வருகின்றன!

ஒரு காலத்தில் பக்திப்பாடல்கள், திரையிசை என்று இவரது குரல் வானொலியில் எப்பொழுதும் ஒலிக்கும். ஆனந்தபைரவி ராகத்தை எனக்கு அடையாளம் காட்டியதே இவரது ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்” பாடல்தான். இதேபோல் இவரது முருகன்பாடல்களும் இவருக்கு அடையாளப் பாடல்கள். ‘அழகென்ற பெயருக்கு முருகா”, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ ‘உள்ளம் உருகுதையா’ பாடல்களின் பக்திவெள்ளத்தில் திளைக்காதவர் யார்?

ஒருகட்டத்தில் இவரை திரையுலகம் மறந்துபோனதற்குக் காரணம் இவர் குரல்வளம் குன்றியதால் எனச் சொல்வதற்க்கில்லை.. இவரது குரலுக்கு ஈடுகட்டும் வகை ஹீரோக்கள் திரையிலிருந்து மறைந்ததும் காரணம். இன்றைய இளம் ஹீரோக்கள் யாருக்காவது அந்தக் குரலைப் பொருத்திப் பாருங்கள் புரியும். அந்த பிரம்மாண்டக் குரலுக்குத் திரையில் வாயசைக்க இன்றைய கதாநாயகர்களில் யாருக்கு இயலுமா? நாடகத்தனம் கூடிய மிகைப்படுத்தப்பட்ட நடிப்பிலிருந்து விலகி சினிமா இன்றைய சாதாரண மனிதர்களின் யதார்த்த வாழ்வை நோக்கி நகர்ந்துவிட்ட நிலையில் வாழ்வை விட பிரும்மாண்டமான வகை சினிமாவும், ஹீரோக்களும் இல்லை பொன்மகள் வந்தாள் பாடலையோ தொட்டால் பூ மலரும் பாடலையோ இன்றைய ஹீரோக்களுக்குப் பொருத்தவேண்டுமானால் வேறு குரலில்தான் பாடவேண்டி இருக்கிறது.

ஆனால் 60களையும் 70களையும் இவருடைய பாடல்களை நினைக்காமல் நினைவுகூர முடியாது என்ற அளவுக்கு அவ்விரு பத்தாண்டுகளையும் இவருடைய பிரம்மாண்டக் குரல் ஆக்கிரமித்தது. அதற்குப் பின் வந்த குரல்களில் ரோமான்ஸ் உண்டு, இனிமை உண்டு, அபார ஞானம் உண்டு ஆனால் அந்த அழுத்தம், கம்பீரம் ,ஆடம்பரம், flamboyance TMS ஸொடு போய் விட்டது. 80களுக்குப் பின்னும் எங்கள் பசுமை நிறைந்த நினைவுகளில் அவரது குரல் தொடர்ந்திருப்பதினால் அந்த வருடங்களில் பிறந்து வளர்ந்த எங்களைப் பொறுத்தவரையில் அவருக்கு இறப்பு இல்லை.

0 Replies to “பாட்டும் நானே பாவமும் நானே”

  1. thanks once again to the author of this article and “Solvanam” in bringing before us the great musician -Playback singer who was a legend of his days -film music particularly.
    He carved out a path of his own somewhat different from MKT as MKT was acting and singing for his part of the acting but TMS had to playback different actors he is singing for which is a more difficult job!
    ramabhadran

  2. அருமையான பதிவு! பல நினைவலைகளை எழுப்பிய பதிவு. மிக்க நன்றி. நீங்கள் இப்பதிவில் பதிந்த பெரும்பான்மையான பாடல்களை தொகுத்துள்ள ஒலி அட்டவணை இங்கே http://www.youtube.com/playlist?list=PL7rY4wZIV4ycP6fQN2ASGn1vQPD8ctkts
    -மு.க

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.