தாகூரின் பேரன்

rg3105

ரிதுபர்ண கோஷ் ( ঋতুপর্ণ ঘোষ ) ஆகஸ்ட் 1963- மே, 2013

ரிதுபர்ண கோஷின் இரண்டாவது படமான உனிஷெ ஏப்ரில் ( উনিশে এপ্রিল, 1994) தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது. புகழ் பெற்ற ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவில் உள்ள சிக்கல்களைச் சொல்லிருந்த அந்தப் படத்தில் தாயாக வங்காளத்தின் மிக முக்கிய நடிகையும், இயக்குனருமான அபர்ணா சென் நடித்திருந்தார். சொல்லப் போனால் அபர்ணா சென் நடித்திருக்கும் படம் என்ற வகையில்தான் அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கி நகர நகர, ‘யாருய்யா இந்த டைரக்டர்?’ என்று மனதுக்குள் கேள்வி எழுந்தது. ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவுச் சிக்கலை அத்தனை இயல்பாக, ஆழமாகத் திரையில் பதிவு செய்திருந்த முறை ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் படுதீவிரமாக மலையாளப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். மலையாளம் தவிரவும் பிற மொழிகளில் இது போன்ற திரைக்கதைகள் சாத்தியம்தான் என்பதை உணர வைத்தார், கோஷ். சத்யஜித் ராய், மிருணாள் சென் இதற்கு விதிவிலக்கு. அவர்களை பொத்தாம்பொதுவாக வங்காள இயக்குனர்கள் என்று சொல்லிவிடமுடியாதே!

‘உனிஷெ ஏப்ரில்’ தேசியத் திரைப்பட விருதான தங்கத்தாமரை விருது பெற்றதுடன், சிறந்த நடிகைக்கான விருதையும் மகளாக நடித்த தேபொஷ்ரீ ராய் ( দেবশ্রী রায় ) பெற்றதில் ஆச்சரியமேதுமில்லை. அந்த நடிகை சிந்தாமணி என்னும் நாமாவளியில் ‘மனைவி ரெடி’ திரைப்படத்தில் நடித்ததுதான் ஆச்சரியம்.

ரிதுபர்ண கோஷ் என்னும் பெயர் மனதில் பதிந்து, அவருடைய மற்ற படங்களைத் தேடிப் பார்க்க வைத்தது. டிட்லி என்ற படத்தில், தனது அறை முழுதும் நடிகர் ரோஹித் ராயின் (மிதுன் சக்ரவர்த்தி) புகைப்படங்களை ஒட்டி வைத்து ரசிக்கும் ஒரு பதின்வயதுப் பெண்ணாக நடித்திருந்த கொன்கனா சென் என்னும் அற்புதமான நடிகையை கோஷ் மூலம் அறிந்து கொண்டேன். ‘உனிஷெ ஏப்ரில்’ இன் திரைக்கதையைப் போல, ‘டிட்லி’யிலும் தாய்க்கும், மகளுக்குமான உறவைத்தான் சித்திரித்தார், கோஷ். ஆனால் முற்றிலும் வேறுவிதமாக. ’நானும் சின்ன வயசுல உன்ன மாதிரியே பெரிய ராஜேஷ் கன்னா ரசிகை தெரியுமா?’ என்று மகளுக்குச் சொல்லும் தாயாக அபர்ணா சென்.

இலக்கியத்திலிருந்து சினிமாவை உருவாக்கும் ரிதுபர்ண கோஷின் அழைப்புக்கு பிரபலமான ஹிந்தி நட்சத்திரங்கள் ஓடி வந்து அவரது படங்களில் பங்கு பெற்றிருக்கிறார்கள். அமிதாப் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி மட்டுமல்ல. 19வது நூற்றாண்டின் ஜமீந்தாராக கோஷின் அந்தர்மஹால் என்னும் படத்தில் ஜாக்கி ஷெராஃப் நடித்திருக்கிறார். அதே படத்தில் அபிஷேக்பச்சன் ஓர் உபகதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அகதா கிரிஸ்டியின் கதைக்கு கோஷ் திரைக்கதை எழுதி இயக்கிய ‘சுபமுகூர்த்’ திரைப்படத்தில் ஷர்மிளா தாகூரும், ராக்கியும் நடித்திருந்தனர். ராக்கிக்கு தேசிய விருது கிடைத்தது. ரவீந்தரநாத் தாகூரின் ‘சோக்கெர் பாலி’ (চোখের বালি ) நாவலைத் திரைப்படமாக்கிய கோஷ் அதில் அழகுப்பதுமை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்தார். அதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அமிதாப்பின் மருமகள் நடிக்கத் தொடங்கிய படம் அதுதான். அதற்குப் பிறகு கோஷின் ‘ரெயின் கோட்’ திரைப்படத்தில்தான் அவர் முழு நடிகையானார். ஓ ஹென்றியின் சிறுகதையைத் தழுவி எழுதி எடுக்கப்பட்ட ‘ரெயின்கோட்’ திரைப்படத்தை ஹிந்தியில் எடுத்தார், கோஷ். விரல் விட்டு எண்ணக்கூடிய வெளிப்புற காட்சித்துண்டுகள் (shots) உள்ள ‘ரெயின்கோட்’ திரைப்படம், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா ராய் இருவருக்குமே அவர்களின் வாழ்நாளில் சொல்லிக் கொள்ளும்படியான படம். அந்தர் மஹால் (অন্তরমহল), தோசார் (দোসর )என வரிசையாக கோஷின் படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். நியாயமாக அமிதாப் பச்சனுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டிய படமான ‘The Last Lear’ திரைப்படத்தை ஆங்கிலத்தில் எடுத்தார், கோஷ். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் நடித்து அதிலேயே ஊறிப்போன ஒரு வயதான மனிதரான ஹரிஷ் மிஷ்ராவாக அமிதப்பை நடிக்க வைத்திருந்தார், கோஷ். இன்றளவும் அமிதாப்பை நாம் மதிக்க வேண்டிய அவரது அண்மைக்காலப் படங்களில் முக்கியமான ஒன்று ‘The Last Lear’.

Courtesy - REUTERS

‘Shob Charitro Kalponik’ – (எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையே) என்னும் வங்காளத் திரைப்படத்தில் பிபாஷா பாசுவை நடிக்க வைத்து, அவர் மேல் படிந்திருந்த பாலிவுட் அழுக்கைத் துடைத்து, புடவை உடுத்தி, அவருக்கு வேறோர் சினிமாவை அறிமுகப்படுத்தினார் கோஷ். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த அனன்யா சாட்டொர்ஜி (অনন্য চ্যাটার্জি)என்னும் நடிகையை தனது ‘அபோஹோமன்’ (Abohoman)திரைப்படத்தில் நடிக்க வைத்து தேசிய விருது வாங்கிக் கொடுத்தார், கோஷ். கிட்டத்தட்ட எங்கள் வாத்தியார் ‘பாலு மகேந்திரா’ டைப் கதை, அது. ஒரு திரைப்பட இயக்குனருக்கும், நடிகைக்குமான உறவைச் சொன்ன அந்தத் திரைப்படம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் கோஷுக்குப் பெற்றுத் தந்தது.

சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர். வாழ்க்கையை, அதன் சுக, துக்கங்களை விற்கும் நோக்கில்லாமல், கலாரசனையோடு நம்மோடுப் பகிர்ந்து கொண்டு, விஷுவல் விருந்தளித்த மாபெரும் ரசிகன், கலைஞன். வங்காளத்தின் மூத்த கலைஞரான தாகூரில் தொடங்கி, இன்றைய தலைமுறைவரைக்கும் வந்துள்ள கலைஞர்களில், வங்காளத்தின் அழகுணர்ச்சியும், கலாரசனையுமுள்ள படைப்பாளியான ரிதுபர்ணகோஷ், என் கண்களுக்கு தாகூரின் பேரனாகத் தெரிகிறார்.

கோஷின் படங்களைப் பற்றி விரிவாக ஏதாவதொரு சமயத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இன்னும் சில படங்கள் வரட்டுமே என்று காத்திருந்தேன். இப்படி அவசர அவசரமாக அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டிவரும் என்று நினைக்கவேயில்லை. கிறுக்கன். ஏமாற்றி விட்டான்.

*    ***      *