கார்ல் சேகனின் கட்டுமரங்கள்

மனிதர்கள் காணும் கனவுகளில் பல, வேற்று உலகங்களைக் குறித்ததாக இருக்கும். சொர்க்கம் என்றும், நரகம் என்றும், வேற்றுக் கிரகம் என்றும், விண்ணுலகம் என்றும் பலவாறு அதற்குப் பெயரிடுவார்கள். உண்மையில் விடுபடல் அல்லது விடுதலை அடைதல் என்ற ஆதார மனித ஏக்கத்தின் ஒரு வெளிப்பாடே இந்தக் கனவுகள் என்றும் கூறலாம். எல்லா வகையான விடுதலைக் கனவுகளும் அகவயமானவை மட்டுமே. விண்ணுலகம், சொர்க்கம் என்று கூறப்படும் எல்லா வார்த்தைகளுள், தனிமனித நம்பிக்கைக்கு அப்பால் பொருள் கிடையாது. புறவயமாகப் பொருள் கொண்டவைகளை மட்டுமே மற்றொருவருக்கு விளங்க வைக்க முடியும். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனின் விடுதலைக் கனவும் பகிர்ந்து கொள்ள இயலாத ஒரு கனவாக மட்டுமே இருந்து வருகிறது.
அந்தக் கனவை நிறைவேற்றவும், உணர்ந்து கொள்ளவும் மனித வரலாற்றில் பல வழிகளில் பல மனிதர்கள் முயன்று கொண்டே இருந்திருக்கிறார்கள். நட்சத்திரங்களைக் கரிய போர்வையின் துளைகளாக நம்பிய ஆதி மனிதனிலிருந்து ஆரம்பித்து, அதைத் தொலை நோக்கி மூலம் கூர்ந்து நோக்கி மேலுலகம் என்றொன்றில்லை, அதுவும் வெறும் ஒரு நட்சத்திரமே எனச் சொல்லி, மரபாகிப் பாசி பிடித்த நம்பிக்கைகளைத் தகர்த்தவனில் தொடர்ந்து, சுற்றும் கோள்களின் வேகத்தையும், நேரத்தையும் கணக்கிட்ட ஆப்பிள் மனிதன் வரை நீண்டு வரும் ஆர்வம் அந்த விடுதலை உணர்வின், சாகசப் பயணத்தின் ஈர்ப்பு என்றே சொல்லலாம்.
தர்க்கத்தை மறுக்கும் மனிதனின் நம்பிக்கை அதே நேரம், அவனைப் பறப்பதற்கு அழைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னால் இவை அனைத்தையும் விட்டுவிட்டு இன்னொரு வெளியில் சென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையே காலந்தோறும் வெறும் சிறகுகளை உடலில் ஒட்டிக் கொண்டு முகடுகளில் இருந்து அவனைக் குதிக்கத் தூண்டுகிறது.
இன்னொரு பக்கம் தன் உயிர் கரைந்து, உடல் அழிந்த பிறகும் தன் எச்சம் ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே அமைந்துள்ளது. ஒரு நுண்ணுயிரின் இனப்பெருக்கம் முதல் ஒரு மனிதனின் கலை வெளிப்பாடு வரை அந்தக் காரணத்தினால் நடை பெறுகிறது எனக் கூறிவிடலாம். அந்தரங்கமாகத் தனக்குச் சரியாக அமைந்த ஒரு விஷயம், அல்லது தன்னுடைய நிலைபாடு மற்றவர்களுக்கும் பொருந்தி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர இருந்து கொண்டேயிருக்கிறது. வரலாற்றில் தங்களுடைய வாழ்க்கை முறையை, கதைகளை மனிதர்கள் பலவிதங்களில் வருங்காலச் சந்ததியினருக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். குகை ஓவியங்கள், மண் பாண்டங்கள், பொம்மைகள், சிலைகள் என காலங்கள் தாண்டி ஒவ்வொரு நாளும் பல சுவடுகள் கண்டெடுக்கப் படுகின்றன. அவைகளில் இருந்து சின்னங்களையும், குறியீடுகளையும், அதன் வழியே அதை அனுப்பிய வேற்றுக் காலத்து மனிதர்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம்.
அதைப் போல முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நவீன மனிதன் தன் இனத்தின் வரலாற்றை ஒரு தட்டில் அடைத்து முடிவில்லாப் பிரபஞ்சத்தை நோக்கி வீசினான். அது நம் முற்றத்தை கடந்து சூரிய மண்டலத்தின் கதவுகளைத் தாண்டி இன்று வெளியே சென்று கொண்டிருக்கிறது.

nasa_ss_cygni_z_cam_white-dwarf

~௦~

பன்னிரண்டு வயதில் கார்ல் ஸேகனின் தாத்தா “நீ பெரியவனானதும் என்னவாக வேண்டும்?” எனக் கேட்ட போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் எனப் பதிலளித்தார். அதையே தன் லட்சியமாக கொண்டு கார்ல் ஸேகன் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளராகவும், மக்களிடத்தில் அறிவியலை எடுத்துச் செல்லும் மிகச் சிறந்த தொடர்பாளராகவும் வாழ்ந்தார்.  1960 – 70களில் அமெரிக்காவில் வேற்று கிரக உயிர்கள் பற்றிய ஆர்வம் அறிவியலாளர்கள் மற்றும் மக்களிடையே மேலோங்கி இருந்தது. வேற்று கிரகவாசிகள் இங்கே தரையிறங்கி மனிதர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று “பிடிபட்டவர்கள்” பலர் வாக்குமூலம் கொடுத்தனர்.  வானில் அடையாளம் கண்டுகொள்ள இயலாத பறக்கும் பொருட்களைப் (UFO) பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டேயிருந்தன. மேலும் அமெரிக்கா, ருஷ்யாவிற்கு இடையே நடைபெற்ற பனிப் போர் காரணத்தால் ரகசியமாக வடிவமைக்கப்பட்ட விமானங்களையும், போர்க் கருவிகளையும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் இரவுகளில் சோதித்துக் கொண்டிருந்தன. அக்காரணத்தால் இதைப் போன்ற பறக்கும் தட்டு குறித்த செய்திகளை அமெரிக்க அரசு ஆமோதிப்பதோ, மறுப்பதோ கிடையாது. அதனால் பல சமயங்களில் அந்த வதந்திகளை மக்களும் உண்மை என்றே நம்பினார்கள்.
வானவியல் துறையில் நுழைந்ததிலிருந்தே கார்ல் ஸேகன் வேற்றுக் கிரக உயிர்களைக் குறித்துத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தார். அவருடைய ஆர்வம் முழுவதும் அறிவியல் ரீதியானது. அதாவது, பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் ஜீவராசிகள் இருந்தால் அவை எப்படி உருவாகியிருக்கும், என்ன வளர்ச்சிகளை அடைந்திருக்கும், அவற்றோடு தொடர்பு கொள்ளக் கூடிய தொழில்நுட்பம் என்னவாக இருக்கக் கூடும் என்பது போல பல கேள்விகளை அவர் ஒரு மனப் பயிற்சி போலக் கேட்டு அதற்கு யூகத்தினாலான விடைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு வகை உயிரினம் தம்மைக் கடத்திக் கொண்டு போவார்களா அல்லது நம்மை அழிப்பார்களா என்ற எண்ணங்களை விட அவர்களை அறிந்து கொள்ள அல்லது அவர்கள் குறிக்கோள்களை யூகிக்க உதவும் கேள்விகளே அவருடைய மனதில் உருவாகிக் கொண்டிருந்தன.. அந்தக் கேள்விகள், எண்ணங்களின் தொகுப்பு 1973இல் The Cosmic Connection: An Extraterrestrial Perspective என்ற புகழ் பெற்ற புத்தகமாக வெளி வந்தது.
pioneer_10_final_stages_manufacturing_nasaஇந்தக் காலகட்டத்தில் அமெரிக்க, ரஷ்யப் பனிப் போரின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் போட்டி போட்டு விண்வெளிக்கு ராக்கெட்டுகளை செலுத்திக் கொண்டிருந்தன. ஆயுதங்களுக்காக உருவாக்கப்படும் தொழில் நுட்பங்கள் பல நேரங்களில் ஆக்கப்பூர்வமான விஷயங்களாக மாறி விடும் என்பதே உண்மை. உதாரணங்களாக தொலைத் தொடர்பு, அணு சக்தி, ரேடார், ஸோனார், கணினித் தொழில்நுட்பம் போன்றவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து 1960ளில் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களை அருகில் சென்று கவனிக்க நாஸாவைப் பல திட்டங்களைச் செயல்படுத்த உந்தியது. முதலில் பயனீயர் 10, 11 (Pioneer 10, 11) என்ற இரு நுண்ணாய்வுக் கோள்களை வியாழன் கிரகத்தையும், அதற்கு அடுத்ததாக உள்ள சனி கிரகத்திற்கு இடையில் உள்ள குறுங்கோள் பட்டையைக் (Asteroid Belt) கண்காணிக்கவும் அனுப்பியது.
அவற்றைத் தொடர்ந்து 1977இல் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்வதற்காக வாயேஜர் 1, 2 என்று இரு நுண்ணாய்வு கோள்களை அனுப்ப திட்டமிட்டது.
எல்லாம் திட்டமிட்டபடி செயல்பட்டால் அவற்றைக் கொண்டு நீண்ட விண்வெளிச் சுற்றுலா ஒன்றை நடத்திவிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதாவது வியாழன் மற்றும் சனி கிரகங்களோடு சேர்த்து தொலைவில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனையும் ஒரு எட்டு பார்த்து விட்டு, இறுதியில் சூரியக் குடும்பத்தில் இருந்து விலகி நட்சத்திரங்களை நோக்கி ஆய்வுக் கோள்களைச் செலுத்தி விடலாம் என்பது தான் அந்த திட்டம்.
நமக்குத் தெரிந்த கிரகங்களை குறித்து அறிந்து கொள்வதற்கான சாதனங்களை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் திட்டமிட்டார்கள். சூரிய மண்டலத்தைக் கடந்து நட்சத்திர வெளியில் பயணிக்கும் போது அந்த விண்கலங்கள் செய்ய வேண்டியதை திட்டமிடும் குழு கார்ல் ஸேகன் தலைமையில்  ஏற்படுத்தப்பட்டது. சூரியனைச் சுற்றும் கிரகங்களைக் கவனிக்கும் வரையில் இரு வாயேஜர் கலங்கள் நமக்கு தகவல்களைச்  சேகரித்து அனுப்பும் பணியைச் செய்து கொண்டிருக்கும்; அவை நமது மண்டலத்தைத் தாண்டும் பொழுது நாம் சொல்ல வேண்டிய செய்தியை யாருக்காகவோ சுமந்து செல்பவையாக மாறிவிடும்.
பிரபஞ்சத்திற்கு நாம் சொல்லப் போகும் செய்தி என்ன? எப்படிச் சொல்ல போகிறோம்? அதைக் கேட்கப் போகிறவர் யார்? அவர்களுடைய தொழில் நுட்பம் என்ன? எத்தனை காலம் கழித்து அவர்களை இந்தத் தகவல்கள் சென்றடையும்? என்று வினாக்கள் எழுந்தன. அதாவது, கார்ல் சாகனின் முந்தையக் கேள்விகளும், எண்ணங்களும் நடைமுறைச் சவால்களாக மாறி நின்றன.
ஒலிப் பதிவு செய்யும் கருவியில் (Phonograph) தெரிவிக்க வேண்டிய தகவல்களைப் பதித்து அனுப்பலாம் என அந்தக் குழு முடிவெடுத்தது. பூமிப்பரப்பில் உருவான உயிர்களின் தனித்துவமான வரலாற்றை சொல்லும் செய்திகளைக் காட்சியாகவும், ஒலிகளாகவும், அனேக மொழிகளிலும் பதிப்பித்து அனுப்பலாம் என முடிவெடுக்கப்பட்டது. அடிப்படையான கூட்டல் கணித முறை, பால் வெளியில் சூரியன் எங்கிருக்கிறது என்ற வரைபடம், பூமியின் அளவு, பூமியில் உள்ள பல முக்கிய இடங்களின் புகைப்படங்கள், மனித உடலின் பாகங்கள் குறித்த வரைபடங்கள், அண்டை கிரகங்களின் படங்கள், விலங்குகள் மற்றும் மரங்களின் படங்கள் என மொத்தம் 115 ஒலிக் கோப்புகள் அதில் பதியப்பட்டன. இதில் இந்தியாவின் போக்குவரத்து நெரிசலை காட்டும் ஒரு படமும், தாஜ்மகாலின் இன்னொரு புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட 27 இசைத் துணுக்குகள் பதியப்பட்டன. இதிலும் கேசரிபாய் கேர்காரின் பைரவி ராகத்தில் அமைந்த பாடல் இடம் பெற்றுள்ளது. உலகின் 55 மொழிகளில் வாழ்த்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இறுதியாக பல விலங்குகள், பூச்சிகள், பறவைகள், நீர், எரிமலை, வாகனங்கள் என நீளும் உலகின் சப்தங்களும் ஒலித் தகடில் இணைக்கப்பட்டன. தங்கம் பூசப்பட்ட ஒலித் தகட்டின் மீது அதை இயக்கும் விவரங்கள் இருமை எண் (Binary Code) கொண்டு பொறிக்கப்பட்டன.
1977 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே வாயேஜர் 2, 1 விண்கலங்கள் பூமியை விட்டு கிளம்பின. வாயேஜர் – 1 சனிக் கிரகத்தின் அருகில் பறந்து சென்று சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறும் பயணத்தை 1980களின் இறுதியில் ஆரம்பித்தது. வேறொரு பாதையில் வாயேஜர்- 2 யுரேனஸ், நெப்ட்யூன் கிரகங்களை பார்வையிட்டு முடித்துக் கொண்டு 1990இல் தன்னுடைய நட்சத்திரப் பயணத்தை ஆரம்பித்தது. இன்றைய நிலையில் அவ்விரு கலங்கள் நட்சத்திர வெளியின் மேகங்களும், கதிர் வீச்சுகளும் சூரியக் கதிர் தாக்கத்தை மீறும் எல்லைப் பகுதியில் (heliosheath) பயணித்துக் கொண்டிருக்கின்றன. சில வருடங்களில் அவை நமது மண்டலத்தை முழுவதுமாகக் கடந்த முதல் (கடைசியாகக் கூடவோ) மனிதன் உருவாக்கிய பொருளாகி விடும். சூரியக் கதிர் வீச்சு உணரப்படாத வெளியின் காந்த அலைகளைக் கணக்கிடும் கருவியைத் தவிர மற்ற சாதனங்கள் எல்லாம் செயல் நிறுத்தப்பட்டு விட்டன. விபத்துக்கள் ஏற்படாமல் இருந்தால் அந்த கலங்களில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் மின்சாரம் அடுத்த 20 வருடங்களுக்கு போதுமானது.  அதன் பிறகு அவற்றைக் குறித்த தகவலகள் எதுவும் நாம் தெரிந்து கொள்ள இயலாது.
ஸேகனின் தங்கத் தட்டை உருவாக்கும் குழுவில் தயாரிப்பாளராக இருந்த ஒரு பெண், ஆன் துரியன். அவர் வானவியல் குறித்த வெகுஜனப் படங்களை எழுதி, தயாரித்து வெளியிடுபவர். பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஒலிகளில் மனிதனின் மூளையின் அதிர்வுகளும் சேர்க்கப்பட்டன. நம்மை விடப் பல மடங்கு முன்னேறிய வேற்று கிரகவாசிகளால் அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அது திட்டமிடப்பட்டது. ஆன் துரியன் தன் மூளை நரம்பு அதிர்வுகளையே பதிவு செய்ய ஒத்துக் கொண்டார். மருத்துவமனையில் அது நடை பெறுவதற்கு இரு தினங்களுக்கு முன் தொலைபேசி உரையாடலில் ஒரே இரவில் கார்ச் சாகனும், ஆன் துரியனும் தங்களுடைய காதலைச் சொல்லித் திருமணமும் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். இரண்டாவது நாள் திட்டமிட்டபடி பதிவு செய்யும் கருவிகளை பொருத்திக் கொண்டு உலகின் கலாச்சாரங்களைப் பற்றி அமைதியாக தியானித்துக் கொண்டிருக்கும் பொழுது அதையும் மீறி ஆழ்மனதில் ஆன் துரியன், இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததை நினைத்துக் கொண்டு காதலில் இருந்ததாக குறிப்பிடுகிறார். அவருடைய நரம்பு அதிர்வுகளைப் பிரித்தறியக் கூடிய யாரும் அதன் ஆழத்தில், மனிதனின் தனித்துவமான உணர்வாகிய அன்பையும் அறிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

carl_sagan_space_science_viking

~௦~

விண்வெளியில் மிதந்து சென்றுகொண்டிருக்கும் அந்த தங்கத் தட்டில் சூரியன் என்ற ஆற்றலால் உருவான பூமி என்ற வசிப்பிடத்தில் எழுந்த சகல உயிர்களின் ஆகச் சிறந்த பிரதிநிதியின் செறிவூட்டப் பட்ட அறிவியல் சின்னம் செதுக்கப்பட்டுள்ளது. அந்த குறியீட்டுத் தகடு அனுப்பியவரை விட காலத்தாலும், ஆற்றலலாலும் மேம்பட்ட உயிர் சக்திகளால் அடையாளம் காணவல்ல பிரபஞ்சத்தின் பொதுவான அறிவியல் விதிகளால் எழுதப்பட்டது.
அந்தக் கலத்தை எல்லையில்லா வெளியில் இன்னொரு அறிவு கண்டு கொள்ள பல லட்சம் வருடங்களாவது (குறைந்த பட்சம்) எடுக்கும். அன்று பூமி என்ற கோளில் மனிதன் அல்லது இன்று அறியப்பட்ட உயிரினம் இல்லாமல் போகலாம் நாமே நம்மை அழித்துக் கொள்ளாவிட்டாலும் தான்தோன்றியாக திரியும் குறுங்கோளகள் (asteroids) மோதி உலகம் அழிந்திருக்கலாம்). அன்றும் கூட எதிர்பாராத தற்செயலால் உதித்து, மலர்ந்த ஒரு உயிர்கூட்டத்தின் அதிசயக் கதையை பாணனைப் போலச் சொல்லிக் கொண்டு கேட்பவர்களைத் தேடி முடிவில்லா வெளியில் அந்தப் பயணக்கலங்கள் மிதந்து சென்று கொண்டிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.