கவிதைகள்

கடந்து போகும்

c2dwe

ரயில் ஜன்னலூடாக தெரியும்
மின்சார கம்பி இணைந்தும் பிரிந்தும்
தறியென நெய்து எடுக்கிறது
ஆழ்மௌனத்தை
நீள்தனிமையை
கொடும் குற்றச்சாட்டை
நிற்க தேவையற்ற நிலையத்தை
ரயில் பெட்டி
எத்தனை எளிதாக கடக்கிறது?
***

நினைவின் ஊஞ்சல்

empty-swing

இறங்கியது தெரியாமல்
ஊஞ்சல் மட்டும்
இன்னும் ஆடிக் கொண்டிருந்தது.

***

எறும்பிழுக்கும் கனவுத் துகள்கள்

leafcutter_closeup

மனதோடு மயங்கிய
நாட்கள் சிலவற்றில்
கண்டிருந்தேன்
கனவுகள் சில கோடி
மதுவுண்ட வண்டென
கனவுண்ணி மேகங்கள்
கலைந்து கலைந்து மிதந்தன
மரங்கொத்தியொன்றின் அளகு
கனவுகளை துளையிட்டன
சிதறிய
கனவின் சில துகள்களை
இரையாக்கி இழுத்து சென்றன
உக்கிரமான சிற்றெறும்புகள்
***

ஈரம்

எப்போதுமே
நதியோர மணல்
மழை நனைக்கவியலாதபடி
நனைந்தே இருக்கிறது.

***

சிறுமியின் வெயிலோடு

hands-rainbow-hand-hands_large

ஜன்னலோர வெயிலை
கைப்பிடியில் பொத்திய சிறுமி
சேமிக்க இடம் தேடி
வீடு முழுக்க சுற்றி வந்தாள்
விரலிடுக்குகளில் வழியும்
பிரபஞ்சத்தின் ஒளி
கோடி நூற்றாண்டின்
புராதன இருளண்டிய இடுக்குகளை
ஒளியூட்டியது
விளையாட்டு பொம்மையிடம்
வெயிலை ஒளித்து வைத்து
விளையாட நினைத்தவள்
கையடக்க பொம்மை ஏதும்
கிடைக்காமல் வேறிடம்
தேடி நடந்தாள்
புத்தகப்பையில்
சேமிக்க நினைத்தவள்
படபடக்கும் பக்கங்களால்
காற்றோடு கரையுமென
மேலும் சிலதை தேடினாள்
ஆடைகள் இருக்குமிடம்
அலங்கார பொருள் வைக்குமிடம்
குளியலறை நீர்நிரப்பிகளென்று
எதிலும் வெயிலை இறக்கி
வைக்க இயலாதவள்
இறுதியில்
அடுக்களை சூரிய அடுப்பில்
சேர்த்து வைத்தாள்
வெயிலும் இவளோடு வளர்ந்து
உணவு சமைக்ககூடும்
பின்னொரு நாளில்.
லாவண்யா சுந்தரராஜன்
***

நதி போலும் என் காதல்

seaoflove

ஆண் பெண்ணைக்
காதலிப்பது போலன்றி
ஆதிச் சுடர் அண்டத்தைக்
காதலிப்பது போலவுமன்றி
நதி கரையைக்
காதலித்தல் போலானது
நம் காதல்.
நதியாய் நான்
ஒரே நேரத்தில்
ஓடிக் கொண்டும்
நின்று கொண்டும் இருக்கிறேன்.
அதே சமயத்தில் நீ
நின்று கொண்டும்
ஓடிக் கொண்டும் இருக்கிறாய்.
தொட்டுக் கொண்டே இருப்பினும்
நம் தளங்கள் வெவ்வேறு.
நாம் சேர்வதில்லை.
உன்னில்
வனம் பார்க்கவே
நான் விழைந்து நீர் கொணர்வேன்.
என்னைக் கடல் சேர்க்கவே
நீ திரண்டு திசை தருவாய்.
எனினும்
எதையும்
கொடுப்பதற்கும்
பெறுவதற்குமாய் அன்றி
இருப்பதற்காக மட்டும் இருக்கும்
நம்மிடையே காதல்.
ஓடையிலும் கோடையிலும்
ஓங்குமலை வீழ்ச்சியிலும்
திரட்டி வந்த காதலை எல்லாம்
ஒவ்வொரு புது வளைவிலும்
மறுபடி புதுப்பித்தவாறே
நான் கடல் ஏகுவேன்.
அங்கே கடல் என்னை
எதிர்நோக்கிக் காத்திருக்கும்
கடல் என்னை அரவணைக்கும்
நான் கடலைப் பூரணமாக்கும்
அதே நொடியில்
கடல் என்னைச் சூனியமாக்கும்.
விதிக்கப்பட்டபடி
பிரபஞ்சத்தின் காதல் எல்லாம்
கடலில் சங்கமிக்கும்.
மீண்டும் மழை வீழும்.
வனம் துளிர்க்கும்.
மிகச்சரியாய் அதே கணத்தில்
நான்
நதியாயும் இருப்பேன்.
நீ கரையாய் இருப்பாய்.
வேறொரு தளத்தில்
எனைக் கடந்து போகையில்
நதியென
நீ உணர்ந்தால்
நான் கரையில்
வனமாகிக் கிளைத்து ஒரு
மஞ்சள் மலரையும் பூத்திருப்பேன்.
மதி

0 Replies to “கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.