பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். அது போல் அபூர்வமாகத்தான் கணினி விளையாட்டுப் பெட்டிகள் மலர்கின்றன. முதலில் வந்த எக்ஸ் பாக்ஸ் (XBox) வெளியாகி நான்காண்டுகள் கழித்து எக்ஸ்-பாக்ஸ் 360 ஆக முன்னேறியது. இப்பொழுது எட்டாண்டுகள் கடந்து விட்டன. மைக்ரோசாஃப்ட் அடுத்த எக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என்று முன்னோட்டம் விட ஆரம்பித்திருக்கிறது.
எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) என நாமகரணமிட்டிருக்கிறார்கள்.
எட்டாண்டுகளில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது. 2004இல் எல்லோருடைய இல்லத்திலும் சாம்சங் கேலக்சிகள் ஆக்கிரமிக்கவில்லை. அனைவரின் கையிலும் ஐஃபோன் சிரி பேசவில்லை. இப்பொழுது செல்பேசியில் விளையாட்டு; அது முடிந்தால் இன்னும் கொஞ்சம் பெரிய வடிவிலான ஸ்லேட் கணினியில் விளையாட்டு.
நானும் இப்படித்தான் கணினி விளையாட்டு ஆட ஆரம்பித்தேன். ஆரம்ப கால விண்டோசில் இலவசமாகக் கிடைக்கும் சாலிட்டேர் சீட்டு ஆட்டம். அதன் உந்துதலில் இன்னும் சில ஆட்டம். இருபதாண்டுகள் முன்பு ‘ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா’ விளையாடியது நினைவுக்கு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்கும் புத்தம் புதிய முதியவர்களையும் எக்ஸ் பாக்ஸ் ஒன் குறி வைக்கிறது.
எத்தனை நாளைக்குத்தான் ’ஆங்ரி பேர்ட்ஸ்’ உண்டி வில் அம்புகளும் ’டெம்பிள் ரன்’ ஓட்டங்களும் ஓடுவது? அப்படியே கொஞ்சம் விரிந்து பரந்த உலகங்களுக்குப் படிப்படியாக முன்னேற எக்ஸ் பாக்ஸ் போன்ற ஆட்டக்கலன்கள் உதவுகின்றன. ராஜா – ராணி கதை பிடிக்குமா? அரண்மனை சூது வாதுகளைத் திட்டமிட்டு அரசனாக அழைக்கிறது. இறந்தவர்களின் ஆவிகளும் சூனியக்காரிகளும் மனதைக் கவர்கின்றனவா? பாதாள லோக சக்கரவர்த்தியிடம் சிக்காமல் தப்பிக்க அழைக்கிறது. கட்டிடம் கட்டி கோட்டை எழுப்ப வேண்டுமா? நண்பர்களின் துணையுடன் வாஸ்து முறைப்படி பிரும்மாண்ட உருவாக்கங்களை நளினமாக வடிவமைக்க அழைக்கின்றன எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுகள்.
விளையாட்டு சாதனம் மட்டுமில்லை எக்ஸ் பாக்ஸ். இப்பொழுது அதன் மூலமாகத்தான் என் மொத்தத் தொலைக்காட்சியும் உயிர் பெறுகிறது. ஆயிரங்கோடி திரைப்படங்கள் நிறைந்த நெட்ஃப்ளிக்ஸ் வாயில் மூலமாக ஹாலிவுட்டும் பாலிவுட்டும் கோலிவுட்டும் டிவியில் கிடைக்கின்றன. சில காலம் முன்பு வரை இணையத்தைப் பார்க்க ஒரு கணினி, தமிழ் சேனல்கள் பார்க்க இன்னொரு பொட்டி, அதெல்லாம் இணைக்க இன்னொரு பொட்டி, என்று டிவியைச் சுற்றி இடைதடை ஓட்டப் பந்தயத் தடங்கல்களாக இருந்த கம்பிகளும் டப்பாக்களும் கழன்று அவற்றுக்கெல்லாம் ஒரேயொரு நிவாரணியாக எக்ஸ் பாக்ஸ் இருந்தது. அதைப் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் மேலும் விரிவாக்குகிறது.
ஸ்கைப் மூலமாக உறவினருடன் தொலைபேச வேண்டுமா? எக்ஸ் பாக்ஸ் ஒன் மூலமாகவே விழிய உரையாடலை சோபாவில் அமர்ந்தபடி செய்யலாம். தமிழ் சினிமாப் பாடல்களை வேகமாக ஓட்ட வேண்டுமா? கையை ஆட்டினால் போதும். பாடல்களை தவிர்த்து விருப்பமான காட்சிகளுக்கு சென்றுவிடலாம். தொள்ளாயிரத்தி நாற்பத்தி இரண்டாம் சேனலில் சன் டிவி வருகிறது என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டாம். ‘சன் டிவி’ என்று சொன்னால் போதும். ‘விட்ட இடத்தில் இருந்து மகாபாரதம் போடு’ என்று உச்சரித்தால், எங்கு நிறுத்தினோமோ அங்கிருந்து துவங்கி விடும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போன்ற ஆட்டங்களைப் பார்க்கும்போது ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் வர்ணனை எல்லாம் பக்கத்தில் ஓடுமாறு அமைத்துக் கொள்ளலாம். கூடவே ஃபேண்டசி லீக் எனப்படும் தனிவிருப்பங்களைத் தொகுப்பதில் எக்ஸ் பாக்ஸ் முன்னோடி கில்லாடி.
எக்ஸ் பாக்ஸ் இருந்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய தொலைக்காட்சி சீரியல்கள் இருக்கின்றன. உங்களுக்கு மிக விருப்பமான நெடுந்தொடர் இணையத்தில் கிடைக்காது; நெட்ஃப்ளிக்ஸ் மூலமாக கூட கிடைக்காது; எக்ஸ் பாக்ஸ் இருந்தால் மட்டுமே கிட்டும்.
இப்பொழுது இணையம் மூலமாக கல்வி கற்பது பெரிதும் புகழ் அடைந்து வருகிறது. வைய விரிவு வலை துவங்கிய காலத்தில் இருந்தே வலை மூலமாக படிப்பு புழங்கினாலும், இன்றோ, ஹார்வார்ட், யேல், ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் மதிப்புமிக்க பேராசிரியர்கள் வகுப்பு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கல்விக் கட்டணங்களைக் குறைவாக்குவதிலும் இணைய வழிப் பட்டப்படிப்பு உதவுகிறது. கல்விக்கூடங்களுக்கோ வகுப்பறைகள் கட்டாமலே மேலும் பல்லாயிரக் கணக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடிகிறது. இதற்கெல்லாம் எக்ஸ் பாக்ஸ் ஒன் நுட்பம் பெரிதும் உதவும். சிதறிக் கிடப்பவர்களை விழிய மாநாடு கொண்டு ஒருங்கிணைக்கிறது. சோதனைச்சாலை ஆய்வுகளை உடனுக்குடன் துல்லியமாக ஒளிபரப்புகிறது. செய்முறை விளக்கங்களை நேரடியாக மாணவர்களின் அருகிலேயே முன்னிறுத்துகிறது.
இதெல்லாம் சாதாரணரை எக்ஸ் பாக்ஸ் பக்கம் இழுக்கும். ஆனால், முழுமூச்சாக ஹாலோவும் பயோ ஷாக்கும் விளையாடுபவர்களுக்கு ஆட்டம்தான் முக்கியம். மற்றதெல்லாம் ஊறுகாய். அந்த வகையில் பார்த்தால் சோனி-யின் ப்ளேஸ்டேஷன் 4 சரியான போட்டி போடுகிறது.
எக்ஸ் பாக்ஸ் ஒன் அறிமுகங்களில் கூட புத்தம்புதிய விளையாட்டுகளைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல், டிவி பார்க்கலாம், அரட்டை அடிக்கலாம் என்றுதான் விளம்பரம் செய்தார்கள். வீடீயோ கேம்ஸ் விளையாடுவதற்காக வாங்கும் சமாச்சாரம் ஆய கலைகள் அறுபத்து நான்கும் செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் சோனி ப்ளேஸ்டேஷன் பக்கம் சாய்கிறார்கள். ஒரு மெஷின் வாங்கினால் அதுவே டூ-இன்-ஒன் போல் நான்கைந்து செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் எக்ஸ் பாக்ஸ் ஒன் பக்கம் வருகிறார்கள்.
எக்ஸ் பாக்ஸ் 360 வெளியாகி கொஞ்ச நாள் கழித்து வந்த கினெக்ட் (Kinect) இதற்கு நல்லதொரு உதாரணம். கினெக்ட் உதவியால் ரோபோ வடிவமைப்புகள் புத்தம்புது எழுச்சி பெற்றன. அது வரை பல்லாயிரக்கணக்கில் செலவழித்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய நுட்பங்கள் எல்லாம் எக்ஸ் பாக்ஸ் கினெக்ட் வரவால் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எவருக்கும் சாத்தியமாகின. தானியங்கியாக பறக்கக் கூடிய குட்டி ஹெலிகாப்டர்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து நீக்கும் கார்கள், நிலநடுக்கத்திற்குப் பின் அகழ்ந்து ஆராயக் கூடிய சாதனங்கள் எல்லாம் கினெக்ட் புண்ணியத்தால் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் இதுவரை மைக்ரோசாஃப்ட் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. கண்டுங்காணாமல் விட்டு வந்தது. ஆனால், எக்ஸ் பாக்ஸ் ஒன் இந்த மாதிரி புது முயற்சிகளுக்கு சந்தை அமைத்துக் கொடுக்கலாம். இனிமேல் கமிஷன் கேட்கலாம்.
புத்தம் புதிய கினெக்ட் இந்த ரக முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. உங்கள் முகத்தை வைத்தே சந்தோஷமாக இருக்கிறீர்களா, கவலை கொண்டிருக்கிறீர்களா என்று கண்டுபிடிக்கிறது. விரலை விஷ்க்.. விஷ்க்கென்று ஆட்டினால் கூட கவனிக்கிறது. உங்களின் சதைக்கடியில் உள்ள இரத்த ஓட்டம் எப்படி வேறுபடுகிறது என்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறதென்றும் உணர்கிறது. ஒரே எக்ஸ் பாக்ஸ் ஒன் கொண்டு ஆறேழு பேர்களை தொலைக்காட்சித் திரையில் உள்ளடக்குகிறது. நாம் பொய் சொல்கிறோம் என்பதை நம் உடல்மொழி காட்டிக் கொடுக்கும். நாம் பயப்படுகிறோமா என்பதை வைத்து விளையாட்டின் போக்கு மாறும்.
எக்ஸ் பாக்ஸ் ஒன் எப்பொழுதுமே இணையத்துடன் தொடர்பில் இருக்கும். இது தனி மனித அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதற்கு துணை போகிறது. நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் தகவலாக மைக்ரோசாஃப்ட் சேமிக்கும். உங்கள் செல்பேசி, உங்களின் தொலைபேசி, உங்களின் இணையம் என எல்லாவற்றிலும் நீக்கமற எக்ஸ் பாக்ஸ் ஒன் நிறைந்திருக்கும். அதை எப்படி பயன்படுத்தும், எவ்வாறு சந்தையாக்கும், எவருக்கு எல்லாம் தானமாக கொடுக்கும், எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதும் பலரை அச்சுறுத்துகிறது.
இன்னொரு மிக முக்கியமான சாராரையும் இப்பொழுது மைக்ரோசாஃப்ட் பகைத்துக் கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் விண்டோசில் நிரலி எழுதுபவர்கள் பலரும் குழப்பம் கலந்த குமைச்சலுடன் அச்சத்தில் விடப்பட்டுள்ளனர்.
தன்னுடைய விண்டோஸ் மென்பொறியில் ஓடுவதற்கான நுட்பங்களை அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் மாற்றிக் கொண்டே இருக்கும். தாஸ் இயங்கிய துவக்கத்தில் பேசிக் இருந்தது. கொஞ்சம் அறிவாளிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் ‘சி’ உபயோகித்தார்கள்.
விண்டோஸ் 3இல் இருந்து ‘விஷுவல் பேசிக்’ களைகட்டியது. பேசிக் மாதிரியே; ஆனால், விண்டோசிற்கு எழுதலாம் வாங்க என்று கைப்பிடித்து தூக்கிவிட்டது மைக்ரோசாஃப்ட். அப்பொழுதும் அறிவாளி என கருதிய கும்பல் சி++ பக்கம் சாய்ந்தது.
ஜாவா வந்த பிறகும் விஷுவல் பேசிக் கொடி கட்டியது. டாட் காம் கோலோச்சிய காலத்திலும் தன்னுடைய மென்பொறியாளர்களுக்காக திரிசங்கு சொர்க்கமாக சில்வர்லைட் துவக்கியது. அறிவுஜீவிகள் ‘சி#’ என்றார்கள்.
இப்பொழுது அவை எல்லாம் ஏறக்கட்டுப்பட்டுவிட்டன. இளைய தலைமுறையினருக்கு எதிலும் உடனடி; எங்கும் அவசரம். எனவே, எல்லோரும் ஜாவாஸ்க்ரிப்ட், எச்.டி.எம்.எல்.5க்கு மாறுங்கள் என்கிறது மைக்ரோசாஃப்ட். சென்ற காலங்களில் எல்லாம் விண்டோஸ்95 இருந்தால் கூட விண்டோஸ்2003க்குக் கூட நிரலி எழுதலாம். ஆனால், இன்றோ நவ நாகரிக விண்டோஸ்8 இல்லாவிட்டால் ஒரு அட்சரம் கூட வேலை செய்யாது.
ஆப்பிள் ஐபேட் கணினியில் இயங்கும் நிரலிகளை எழுத ஆப்பிள் மெகிண்டாஷ் கணினி தேவை. அது போல், விண்டோஸ்8 நிரலிகளை எழுத புத்தம்புதிய விண்டோஸ்8 தேவை. மைக்ரோசாஃப்ட் செல்பேசிகளில் இயங்கும் மென்பொருட்களை எழுத விண்டோஸ்8 தேவை.
முந்தாநேற்று வரை கொண்டாடப்பட்ட, முன்னிறுத்தப்பட்ட, பெருமளவு விளம்பரப்படுத்தப்பட்ட எக்ஸ்.என்.ஏ., போன்ற மைக்ரோசாஃப்ட் நுட்பங்கள் தூக்கியெறியப்பட்டுவிட்டன. ஆப்பிளுக்கும் ஆண்ட்ராய்டிற்கும் நிரலி எழுதுபவர்களின் பின் மைக்ரோசாஃப்ட் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு பழங்காலத்து சி++, சி#, பேஸிக் எல்லாம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது இணையம், எச்டிஎம்எல், கூகுள் மொழி. அந்த பாஷைதான் எங்களுக்கும் பிடிக்கும் என்று புத்தம்புதிய மைக்ரோசாஃப்ட் சத்தியம் செய்கிறது.
ஐம்பது பில்லியன் செயலிகளை ஆப்பிள் விற்றிருக்கிறது. அந்த ஒவ்வொரு செயலிகளிலும் உள் விற்பனையும் தொடர்ச்சியான உப விற்பனையும் நடந்திருக்கும். இதன் மூலம், மற்றவர்களின் செயலிகள் மூலமாக, பிறர் எழுதும் நிரலிகள் மூலமாக கல்லாப்பெட்டி நிரப்பும் வித்தையை ஆப்பிள் செவ்வனே நிறைவேற்றுகிறது. இடைத்தரகராக கோலோச்சுகிறது.
எக்ஸ் பாக்ஸ் டப்பா விற்பதில் அதிக லாபம் கிடைப்பதில்லை. பெட்டியில் ஓடும் விளையாட்டுகளை விற்பதில்தான் லாபம். சொல்லப் போனால் விளையாட்டுப் பெட்டிகளை நஷ்டத்திற்கு விற்றுவிடுகிறார்கள். அதன் பின் ஆட்டங்களை விற்கும் கேந்திரம், அதில் சேவைக் கட்டணம் பெறுவது போன்றவற்றில் கிடைக்கும் பணத்தை வைத்து நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்கிறார்கள். மாதந்தோறும் சந்தா கட்டணம் செலுத்தினால் மட்டுமே எக்ஸ் பாக்ஸ் வேலைக்காகும். மைக்ரோசாஃப்ட் பாயிண்ட் பெறாவிட்டால், நமது பாடல்களை, நமது பந்தயங்களை எக்ஸ் பாக்ஸ் ஒன் மூலம் அணுக முடியும். ஒரேயொரு தடவை விண்டோஸிற்கும் ஆஃபிஸிற்கும் காசு கேட்பதை விட ஆயுள் பரியந்தம் உறுப்பினர் கட்டணம் செலுத்தும் வரவு முறைக்கு மைக்ரோசாஃப்ட் தாவுகிறது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் விற்றபோது, ஆப்பிள் வன்பொருள் விற்றது. மைரோசாஃப்ட் விண்டோஸில் புதுமை காட்டியபோது, ஆப்பிள் ஐபாட் போன்ற புதுப் பொருட்களை அறிமுகம் செய்தது.
ஆனால், இன்றோ மைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் போல் வன்சரக்கு விற்கும் சந்தைக்கு வந்திருக்கிறது. ஆப்பிள் போல் செயலிகளுக்கான கடை போட்டு, அதன் மூலம் கல்லா கட்டும் திட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஐபேட் மற்றும் சாம்சங் ஸ்லேட்டுகளுக்கு போட்டியாக மைக்ரோசாஃட் சர்ஃபேஸ் களத்தில் இறங்கி இருக்கிறது.
ஒரேயொரு மானை மட்டும் குறிவைத்து வீழ்த்துவது ஒரு ரகம். ஆயிரம் அம்புகளை விட்டுப் பார்த்து இரை தேடுவது இன்னொரு ரகம். இரண்டு வகைகளுக்கும் எக்ஸ் பாக்ஸில் ஆட்டம் கிடைக்கும் என்பது மட்டுமே நிச்சயம்.
எனக்கென்னவோ எக்ஸ் பாக்ஸ் dead on arrival என்று தோன்றுகிறது. மைக்ரோசாப்ட் ரொம்ப நாள் இழுத்துக்கொண்டு படுக்கையில் கிடக்கும் கிழவர் போலாகிவிட்டது. They have missed the boat in windows mobile. they are losing the tablet battle already. PC is overall losing sales numbers. ios7 came with new document suite competing with MS Office. இதிலாவது பிடிக்கிறார்களா என்று பார்க்கலாம்!
இப்படி எல்லாம் தொழில்நுட்ப கட்டுரைகள் சொல்வனத்தில் வருமா? தெரியாதே.. நல்ல அறிமுகம் பாபா.
XBOX gold live subscriptionஐ ஒழித்தால் மேலும் நிறைய காசு பாக்கலாம்.அதைச் செய்ய மாட்டேன் என்கிறார்கள். பேசிக்கான ஆப்புகளுக்குக் கூட லைவ் கேட்பது கொடுமை. சத்தமில்லாமல் ஆப்பிள் டிவி எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ESPN3 வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பையை காசு கொடுக்காமல் hdயில் பார்த்தேன் ஆப்பிள் டிவியில். xbox as a platform is under valued and microsoft marketing has failed on this aspect terribly.
சில வினாடிகள் முன்னால் · விருப்பம்