It Happened in Boston? – புத்தக விமரிசனம்

boston

பிரசுரிக்கப்பட்டபின் ஒரு புத்தகத்தின் பயணத்தை யாராலும் எளிதில் கணிக்க முடியாது. சில நூல்கள் முதலிலேயே விமர்சக/வரவேற்பபை பெற்று, காலம் செல்ல அதன் முக்கியத்துவம் குறையலாம். சில, வெளி வந்த காலத்தில் கவனம் ஈர்க்காமல் ஒரு தலைமுறை கழித்து கூட புகழ் பெறலாம், அதுவரை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே இந்த நூல் அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் . சில நூல்கள் வெளிவந்த காலத்திற்கு மிக நவீனமானதாக இருந்து அப்போது ஏற்கப்படாமல் போகலாம், அதற்கு நேர் மாறாக ஒரு காலத்தின் நாடியைப் (zeitgeist) பிடித்துப் பார்த்து நலன் சொல்லும் நூல்கள் அடுத்து வரும் காலகட்டத்திற்கு அந்நியமாக இருக்கலாம். அல்லது ஆசிரியரின் துரதிர்ஷ்டத்தால் கவனம் பெறாமல்இருக்கலாம்.

மேலும் கவனப்படுத்துதலும், சந்தைப்படுத்துதலும் முக்கியமே. இன்று கம்பன் ,ஷேக்ஸ்பியர் இவர்களைப் படிக்காதவர்கள் கூட “பெரிய கம்பன் இவன் ,” “ஷேக்ஸ்பியருன்னு நினைப்பு,” என்று சொல்வதும் தொடர்ந்த கவனப்படுத்தலால் தான். இதிலும் ஒப்பீட்டளவில் கம்பரை விட ஷேக்ஸ்பியர் மேல் அதிக கவனப்படுத்துதல் உள்ளது. எனவே ஒரு நூலின் புகழ் என்பது அதன் தரம்/தரமின்மை மட்டும் சார்ந்ததில்ல.

விமர்சகர்களிடம் அதிகப் புகழ் பெறாமல், சந்தையிலும் பெரிய அளவில் விற்காமல், அதாவது மைய நீரோட்டத்திற்கு வராமல், ஒரு சிறிய வட்டத்திற்குள் மிகவும் பேசப்பட்ட ஒரு நூல் ரஸ்ஸல் ஹெச். க்ரீனன் (Russell H. Greenan) எழுதிய ‘It Happened In Boston?’ நாவல். இதை ஒரு underground cult classic என்று கூறலாம்.

”சமீப காலங்களாக இந்த புறாக்கள் என்னை வேவு பார்க்கின்றன என்று எண்ணத்தொடங்கி உள்ளேன் ” (“Lately I have come to feel that the pigeons are spying on me.”) என்ற நாவலின் முதல் வாக்கியத்திலிருந்தே ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. இது அதி புனைவா, மர்ம நாவலா, திகில் நாவலா, கலைஞர்கள், கலை உலகம், அதில் நடக்கும் மோசடிகள் பற்றியதா, அல்லது ஒரு சிதைந்து கொண்டிருக்கும் மனதின் நாட்குறிப்பா என்று இறுதி வரை எந்த முடிவுக்கும் வரமுடியாமல், நாவலின் பெயரிடப்படாத கதைசொல்லியை, அவன் மனதை நாம் பின்தொடகிறோம். ஒரு கதையை நேர்கோட்டில் நடக்கும் சம்பவங்களாக எழுதி, பக்கங்களை முன் பின்னாக மாற்றிப் பிரசுரித்தால் எப்படிஇருக்குமோ அப்படி உள்ளது இது. இந்த நாவலின் முன் பின்னாகச் சொல்லப்படும் சம்பவங்களால் நாம் சற்றே மிதந்து கொண்டிருப்பது போல் தோன்றினாலும், கதையோட்டம் அவ்வப்போது சில ஆபத்துக்களையும் (எப்போதும் கீழே விழுவோமோ) உணரச்செய்யும். நம்மைக் கிறக்க நிலையில் அடிக்கடி வைத்திருக்கும் (hallucinatory) பயணம் தான் இந்த நாவலை வாசிக்கும் அனுபவம்.

இந்த நாவலைக் கதைசொல்லி சொல்லும் சம்பவங்களை வைத்து மூன்று நிலைகளாக பிரிக்கலாம், அதே நேரம் நாவல் மூன்று அடுக்குகளாகவும் உள்ளது (three act structure). முதல் பகுதி அதி புனைவு போல் உள்ளது. கதைசொல்லி தனக்குச் சில காலமாக வேறு காலகட்டத்தில், வேறு நாடுகளுக்கு செல்லும் மனத்திறன் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார். இதை பகற்கனவென்றோ, அவரின் கற்பனை உலகமேன்றோ சொல்ல முடியாது, அவர் இந்த உலகினில் செல்லும் போது முற்றிலும் தன்னிலை இழப்பதில்லை என்று சொல்கிறார். இதை ‘mind translation’ என்கிறார். இப்படி நாவலின் ஆரம்பத்திலேயே அவர் சொல்லும் போது, அவரின் நம்பகத்தன்மை குறித்து நமக்கு கேள்வி எழுகிறது (நாவலின் முதல் வரியையும் நினைவு கொள்ளுங்கள்), எனினும் அவரை பின்தொடர்கிறோம். படிக்கப் படிக்க வழுக்கிச் செல்வது போல் செழிப்பான ஒரு ‘sensory pleasure’ஐ தரக்கூடிய நடையைக் கொண்டது இந்த நாவல். இங்கு ‘sensory pleasure’ என்பதை மன எழுச்சியையோ, அல்லது கதையோடு ஒன்றி விடுவதையோ குறிக்கச் சொல்லவில்லை, மாறாக படிக்கும் போது நம் உடலிலும் ஒரு வித கிளர்ச்சியை உணர வைக்கக்கூடிய மொழி.

“One DAY, at least a year ago, I wandered into a very crowded poorly lit antique shop on Charles Street. From floor to ceiling the single room was stuffed with a chaotic assortment of venerable objects. Chipped Colonial crockery mingled with Chinese bronzes and German steins on the scarred top of a French gaming table. Czechoslovakian glass goblets and Sandwich glass oil lamps sat precariously on a flimsy tiered table, which, in turn, rested upon a kind of music cabinet that was boldly decorated with intarsia. Every inch of wall space was covered by pictures, plaques, maps, samplers,scones,crucifixes, hanging shelves and gilded mirrors. Crystal chandeliers, copper caldrons, moth-eaten tapestries and brass bird cages hung from the overhead beams.”

பழங்காலப்பொருட்கள் விற்கும் ஒரு கடையின் அறை பற்றிய விவரிப்பு இது. நம் கண் முன் ஒளி குறைந்த ஒரு அறை, அதில் பல நாடுகளிருந்தும் அந்தந்த நாடுகளில் பிரபலமான பொருட்கள், பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட மரப் பெட்டிகள், சுவரெங்கும் ஓவியங்கள், வரைபடங்கள் என்று நிறைந்திருக்க, இருக்கும் குறைந்த ஒளியும் கண்ணாடிக் கோப்பைகளில் பட்டுச் சிதற, சுவற்றில் உள்ள கண்ணாடிகள் ஒன்றை ஒன்று பிரதிபலிப்பதோடு, சிதறிய ஒளியையும் பிரதிபலிக்க, காலம் உறைந்து நின்று விட்டது போல் தோன்றும் அந்தஒளிகுறைந்த அறையில் பல வண்ணங்கள் ஒன்று கலந்து ஜாலம் நடத்தும் காட்சி விரிகிறது.

கதைசொல்லி, முன் நடந்த சம்பவங்களைச் சொல்லச் சொல்ல, அதன் வழியே மற்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட நாவலின் இரண்டாம் கட்டத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. கதை சொல்லியின் இரு நெருங்கிய நண்பர்கள் பெஞ்சமின் மற்றும் ஃபேபர். இவர்களும் ஓவியர்கள் தான். மூவரும் நவீன ஓவிய முறைகளில் நாட்டமில்லாதவர்கள், ஐரோப்பியமறுமலர்ச்சி (Renaissance ) காலத்திய பாணியை விரும்புகிறவர்கள். கதைசொல்லி தான் அடிக்கடி செல்லும் பூங்காவில் சந்திக்கும் ராண்டால்ப் என்னும் சிறுவன், அவனுடனான கதைசொல்லியின் விடுகதை உரையாடல்கள் (“Do you know the difference between a cat and a frog?”. “A cat has nine lives but a frog croaks every night.”)அவரை காப்பீடு எடுக்க அடிக்கடி வற்புறுத்தும் பீல்ஸ் (Beels ) என்ற ஆசாமி, கொலைகாரச் சங்கம் (homicide club) என்ற ஒன்று இருப்பதாகவும் அது தன்னைக் கொல்ல முயல்வதாகவும் அதீத அச்ச உணர்வு கொண்ட பெண்மணி, ஓவியம் மற்றும் மரச் சிற்ப வேலைப்பாடு மட்டுமல்லாமல் வண்ணங்களை எப்படி நவீன ரசாயனங்களை உபயோகிக்காமல் உருவாக்கலாம் என பயிற்றுவித்த ஆசிரியர் (இவரின் கண்களை பார்த்தால் மெடுஸாவே மெய்மறந்து விடுவாள்) என பலர் வருகிறார்கள். கதைசொல்லியின் மனைவி குறித்தும் மண வாழ்க்கை குறித்தும் சில விஷயங்கள் சூசகமாகச் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தும் நாவலின் போக்கில் எப்படிப் பொருந்தும் என்று நமக்கு இந்த கட்டத்தில் தெரிவதில்லை.

விக்டர் டேரியஸ் (Victor Darius) என்ற ஓவிய உலகின் பெரும்புள்ளி இப்போது கதையில் நுழைகிறான். இதை நாவலின் இரண்டாம் கட்டமாகப் பார்க்கலாம். கதைசொல்லியின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை நல்ல விலை கொடுத்து வாங்குகிறான், பின்னர் கலை ஆர்வலர்களிடம் விற்கிறான் . ஆனால் அவை அனைத்தும் ஐரோப்பாவில்தான் விற்பனையாகின்றன. மேலும் அவன், கதைசொல்லியை மறுமலர்ச்சி பாணியில் (குறிப்பாக டாவின்சி) ஒரு செல்வந்தரின் பெண்ணை வரைய வேண்டும் என்கிறான். செல்வந்தர் டாவின்சியின் பரம பக்தர் எனவும் அதனால் ஓவியத்திற்கான வண்ணங்கள், கான்வாஸ் அனைத்தும் பழமையானதாக இருக்க வேண்டும் என்கிறான். (இங்கு கதைசொல்லி தன் ஓவிய ஆசிரியரிடம் கற்றது அவருக்கு உதவுகிறது). வரைந்து முடித்து கதைசொல்லி திரும்பும் போது, அவரிடம் உள்ள அவர் வரைந்த ஓவியத்தின் மாதிரி கோட்டோவியங்கள் களவு போகின்றன. இவை அனைத்திற்கு ஏதேனும் தொடர்பு உண்டா அல்லது அனைத்தும் நியாயமான விளக்கங்கள் இருக்கும் தற்செயலான சம்பவங்களா? ஒரு வேளை அமெரிக்கர்களின் கலை உணர்வு ஐரோப்பியர்கள் போல் இல்லாமல் இருக்கலாம் இல்லையா. இப்படி இந்த பகுதியில் ஒரு மர்மம் நாவலில் கவிழ்கிறது.

கதை சொல்லி சொல்வது உண்மையா என்று தோன்றினாலும் முதல் பகுதியில் ஒரு அதி-புனைவுத் தன்மை உள்ளது. இரண்டாம் பகுதியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. மூன்றாம் பகுதியில் என்ன நடக்குமோ, மோசமாக எதாவது நடந்து விடுமோ என்ற அச்சம் உண்டாகிறது. இப்படி நாம் உணர்வுகள் மாறிக்கொண்டே இருந்தாலும் எங்குமே முந்தைய பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டது போல் தோன்றுவதில்லை. முந்தைய பகுதியின் நீட்சியாகவே இதுவும் இருக்கிறது. ஒரே நாவலில் பல கலவையான வகைமைகளை ஆசிரியர் அனாயாசமாக எழுதிச் செல்கிறார்.

பெஞ்சமின் ஓராண்டுக்கு மேல் வரைந்து முடிக்கும் ‘இறப்பின் பிறப்பு’ (birth of death) என்ற ஓவியத்தால்தான் கதைசொல்லியின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. நண்பர்கள் மூவரில் பெஞ்சமின் மட்டுமே ஓவியங்கள் அதிகம் விற்காமல் பணத் தட்டுப்பாட்டில் இருக்கிறான். ஒரு கட்டத்தில் சாலைகளில் செல்வபர்கள் தவற விட்ட பணம் ஏதாவது கிடைக்குமா என்று தேடுவதை தன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கி விடுகிறான், அதற்காக தெருத் தெருவாக அலைகிறான், நண்பர்களின் உதவியை மறுக்கிறான். அவர்கள், அவன் அப்படி அலைவதால் ஓவியத்தை முடிக்க இன்னும் அதிக நாளாகும் என்று சொல்லும் போது “உலகிற்காக நான் காத்திருந்திருக்கிறேன், அது எனக்காகக் கொஞ்சம் காத்திருக்கட்டும் ( “As for the world, I’ve waited for it, let it wait a bit for me”) என்று அளிக்கும் பதில் அவனின் புறக்கணிப்பின் பின்னே உள்ள மனவலியையும், அதே நேரம் கலை கர்வத்தையும் காட்டுகிறது.

The main figure, Death, had just hatched form a shiny blue-black egg in the center of the picture. He was not a large figure-scarcely half the size of the humans around him- but he dominated everything. The lower part of his body was covered with skilfully rendered olive-green hair, which as it reached the hips thinned to reveal freckled chartreuse flesh that glistened hideously in the strange, shifting light. His head was large and contained a pair of bulging round eyes, noseless nostrils and a twisted-lipped fanged mouth. The malignancy of the expression made my heart miss a beat. The projecting eyes radiated a palpable hatred, while the crimson mouth, sawtoothed and gaping, was as cruel a maw as any in the annals of art.

Surrounding this demon was a vast throng of people, beasts and people-beasts. Those nearest Death cringed in fear, while those further away fought and killed one another. The number of forms arranged on the canvas seemed almost infinite and the variety of faces and postures stupefied the eye. His coloring was bold, the draughtsmanship unbelievably fine. The picture seemed to draw you into it and make you a part of the dreadfulness – the unbounded terror and the merciless slaughter.”

என்று பெஞ்சமின் வரைந்த ஓவியத்தை விவரிக்கும் போது, உண்மையில் அப்படி ஒரு ஓவியம் இருந்தால் என்ன உணர்வுகள் ஏற்படுமோ அதை நம்மிடையே ஏற்படுத்துகிறார். ஓவியத்தின் கருப்பொருளே வித்தியாசமாக உள்ளது, க்ரீனன் மனதில் உதித்த இந்த யோசனையை தன் மொழி மூலம் கிட்டத்தட்ட உண்மையான ஒன்றாக ஆக்கி விட்டார்.

மிகுந்த பணமுடைய, ஆனால் கலைஞர்களை உண்மையாக மதிக்கத்தெரியாத ஒரு பணக்காரனின் செய்கையால் நடக்கும் சம்பவங்கள் கதைசொல்லியை முற்றிலும் மாற்றி விடுகின்றன. இப்போது அவருடைய குறிக்கோள் கடவுளை நேரில் சந்தித்து, கொலை செய்து, அவர் இடத்தைக் கைப்பற்றுவது. இது ஒரு வலுப்பிடிவாதமாக மாற அவருடைய ஓவியம் வரைவது, குடும்ப வாழ்க்கை அனைத்தும் பாதிக்கப்படுகிறது. ஒரு சோக நகை முரணில், அறிவொளியை ஐரோப்பாவில் ஏற்றிய மறுமலர்ச்சி காலத்து ஓவியங்கள், சிற்பங்கள் மீது ஆர்வம் கொண்ட கதைசொல்லி, தேவதைகளை, சாத்தானை இறுதியில் கடவுளையே வரவழைக்கும் மந்திர, தந்திரங்களை தேடி அலைகிறான். ஒரு திகில் நாவலை ஒத்த சம்பவங்கள் நடக்கின்றன. அவன் முதல் முறை ஒரு தேவதையை வரவழைக்கச் சில காரியங்களை செய்துவிட்டு இரவு தூங்கி, ஒரு சலசலப்பைக் கேட்டு எழ

“There, in the center of the marble shelf, the Bourg Angel was coming out of her panel. The head and shoulders had already cleared the frame and the upper torso was following rapidly. She rose smoothly, like smoke from a chimney, accompanied only by that soft rustling sound that had puzzled my ear”

க்ரீனன் ஒரு தேவதை எங்கிருந்தோ தோன்றினாள் என்று எழுதி இருந்தால் அவ்வளவு விறுவிறுப்பு இராது. கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஒரு தேவதை ஓவியத்திலிருந்து, அதன் சட்டகத்திலிருந்து விடுபட்டு வரும், பாதி விடுபட்டு இருக்கும் ஒரு உருவத்தை, அந்த கணத்தை, காட்டி கதைசொல்லியோடு நம்மையும் உறையச் செய்கிறார். (கதைசொல்லி சொல்வதை நம்பலாமா என்பது வேறு விஷயம்).

கடவுள் மேல் அவருக்கு வரும் கோபம், தனிநபர் சார்ந்த கோபம் மட்டுமல்ல, தன் படைப்புக்கள் என்ன புகழப்பட்டாலும், பாதுகாக்கப்பட்டாலும் அவை முடிவில் என்றோ ஒரு நாள் (நூறாண்டுகள் கழித்தோ அல்லது ஆயிரம் ஆண்டுகள் கழித்தோ) அழிந்துவிடும் என்ற உண்மையால், அந்த அ-நித்தியத்தால் ஏற்பட்ட கர்வ பங்கமே அதற்கு காரணம். படைப்பாளி என்று சொல்பவன் தன் படைப்பு அழிவதை எப்படி ஏற்றுக்கொள்வான் (அது அழிவது பல நூற்றாண்டுகள் கழித்துத்தான் என்றாலும்). எனவே இப்படிப்பட்ட நிலையில்லா உலகைப் படைத்த கடவுளை கொல்ல நினைக்கிறான். இப்படி யாராவது செய்வார்களா என்ற கேள்விக்கு, நாவலின் ஆரம்பத்தில் ஒரு சூசகமான பதிலைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். கதை சொல்லி சிறுவயதில் தான் வரைந்த குதிரை ஓவியங்களை பற்றி சொல்லும் போது

“They are beasts that would put Pegasus to shame, make Bucephalus look like Rosinante and reduce the steeds of Rhesus to nags and hacks”
ஐரோப்பிய தொன்மங்களில், இலக்கியங்களில், வரலாற்றில் குறிப்பிடப்படும் அனைத்து மிக முக்கியக் குதிரைகளை தன் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொண்டு தன் ஓவியத்தின் மீதுள்ள அவரின் பெருமையை பார்த்தால் அவர் கடவுளைக் கொல்ல நினைப்பதும், அதற்க்கான காரணமும் இயல்பான ஒன்றாகத்தான் தெரியும்.
ஏழு பேரைக் கொன்று, ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைச் சொன்னால் கடவள் வருவார் என்பதை ஒரு புத்தகத்தில் படித்து அதன் படி கொல்ல ஆரம்பிக்கிறான். முதல் முறை தான் கலந்த விஷத்தால் துடிக்கும் பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறான், பிறகு குற்றஉணர்வு நீங்கி, தொடர்ந்து கொல்கிறான். கடவுளைச் சந்தித்து கொன்று, தான் கடவுளானதும் தான் கொன்ற ஏழு பேரையும் உயிர்ப்பித்து விடுவேன் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்கிறான். இதற்கிடையே கலை உலகின் மோசடிகளும் அதனால் தான் பாதிக்கப்பட்டதும் அவனுக்கு தெரியவருகிறது. ஒரு கொதி நிலையில் இருக்கும் அவனக்கு உச்சகட்ட அதிர்ச்சியாக அவன் செய்யும் ஏழாவது கொலை இருக்கிறது.

இறுதியில் வரும் காட்சிகளில் அவன் மீட்சி அடைந்தானா இல்லையா என முடிவு செய்வது நம் கையில் உள்ளது. கதைசொல்லி ஒரு நம்பத்தகாத ஆசாமியாக இருப்பதால் (unreliable narrator), நாவலில் எது உண்மையில் நடந்தது, எது கற்பனை என்று நமக்குத் தெரிவதில்லை. நாம் கதையில் எது உண்மை, எது கற்பனை என்று ஏற்றுக்கொள்கிறோமோ அதை பொறுத்துக் கதையை, கதைசொல்லியை நாம் பார்க்கும், புரிந்து கொள்ளும் விதம் மாறுவதால் ஒரு வாசிப்பிலேயே பல கதைகளை இந்த நாவல் கொடுக்ககூடியது. இப்படிப்பட்ட நூல் இது என்று அறுதியிட்டுக் கூறமுடியாத, பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளதாலேயே இது பலருடைய வாசிப்பிலிருந்து விடுபட்டிருக்கலாம். 1968இல் வெளிவந்திருந்தாலும் இன்று தான் எழுதப்பட்டது போல் புத்தம் புதியதாக உள்ளது.

நாவலின் இரு இடங்கள் புனைவுகள் அதிகம் படித்தவர்களுக்கு நெருடலாக இருக்கும். ஒன்று ‘பெஞ்சமின்’ வரையும் ஓவியத்தின் முடிவு வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக தோன்றலாம், . இன்னொன்று கதைசொல்லியால் ஏழாவதாகக் கொல்லப்படுபவன். இதுவும் ஒரு வலிந்து   திணிக்கப்பட்ட அதிர்ச்சியாகவே தோன்றும், உண்மையில் அப்படி அந்த ஆசாமி கொல்லப்படுவதற்கு வாய்ப்புக்கள் மிக குறைவே. ஆனால் குற்ற,சாகச புனைவுகளில் இத்தகைய திருப்பங்கள் மிக அவசியம், அவை தான் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். எனவே முழுவதும் தர்க்கரீதியான விஷயங்களை மட்டும் நாம் எதிர்பார்க்க முடியாது, அதிலும் முதல் சம்பவத்திற்கு நாவலில் முன்பே  ஒரு அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கும். ‘truth is stranger than fiction’ என்ற மேற்கோள் படி பார்த்தால் இந்த சம்பவமும் நடக்கக் கூடியதே என விட வேண்டி வரும்.

ஓவியம் வரைதல், சிற்பங்கள் செய்தல் பற்றிய விவரணைகள் மிக நுணுக்கமாக உள்ளன. நாம் பார்த்து வியக்கும் ஒரு ஓவியத்தின் பின்னால் எத்தனை விவரமான வேலைகளும், தொழில் நுட்பமும் உள்ளன என்பது இவற்றில் தெரிகிறது., நீடித்திருக்கும் வண்ணங்களைத் தேர்வு செய்வது எப்படி, தயாராக உள்ள வர்ணங்களைப் பயன்படுத்தாமல், பழைய கால ஓவியத்தைப் போல ஒன்றைத் தீட்ட முயல்கையில், அதற்கான வர்ணங்களை ஓவியரே எப்படி உருவாக்குவது, அப்படி உருவாக்க நவீன ரசாயனப் பொருட்களின் கலப்பில்லாத இயற்கையான மூலப்பொருட்களை எப்படி தேர்வு செய்வது, ஓவியத்தின் சட்டகத்தை செய்ய ஏற்ற மரப்பலகையைத் தேர்வு செய்வது எனப் பல விஷயங்களை விளக்கிச் செல்கிறார் க்ரீனன். விளக்குகிறார் என்று சொல்வதும் தவறாக இருக்கும்,  அவை பாடபோதனை போல எழுதப்படவில்லை.

ஒரு விஷயத்தை மிக ஆழமாக நேசிக்கும் போது, அதை பற்றிப் பேசும் போது குரலில் ஒரு மாற்றம் வரும் இல்லையா, ஆசை, உற்சாகம் கொப்பளிக்கும் குரல்,  அதை தான் நாவலில் இந்த பகுதிகளை படிக்கும் போது நாம் கேட்கிறோம். ஆனால் ஆசிரியர் தன் அறிவை காட்டுவதற்காக வலிந்து திணிக்கும் விஷயங்களாக இல்லாமல், கதையை மீறிச் செல்லாமல்   கதையின் போக்கில் இயல்பாக அமைந்துள்ளன. நாம் வரைகின்றோமோ இல்லையோ,  ஓவியங்களை நாம் பார்க்கும் முறை மீது குறிப்பிடத் தக்க மாற்றத்தை இந்த நாவலைப் படித்த அனுபவம் கொண்டு வரும்.

நாவலின் முக்கியச் சரடாக ஒன்றைக் கூற முடியும். மூன்று நண்பர்களில், ஃபேபர் இருவரை விடக் குறைந்த திறமை  உடைவன்,  சமூகத்தின் தேவைக்கேற்ப ஓவியங்கள் வரைவதை ஏற்றுக்கொண்டுள்ள, தன் கலை மீது உன்மத்தம் இல்லாத ஒருவன். அதனால் தான் அவன் மட்டும் எந்த மனரீதியான பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. ஒரு வேளை மற்ற இருவரும் தங்கள் படைப்பிலிருந்து கொஞ்சம் விலகி நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டிருந்தால்? எனவே தன்னை உபாசிப்பவனையே எரித்து விடும் கலையின் ஆற்றல் குறித்த ஒரு உருவகமாகவும் இதை வாசிக்கலாம். கடவுளைக் கொன்று அழிவில்லாத படைப்பை உருவாக்க முடியாவிட்டாலும், அதன் பயணத்தை நீட்டிப்பது வாசகர்களாகிய நம் கையில் தான் உள்ளது.அந்த வகையில் பத்தாண்டுகளுக்கு முன் மறுகண்டுபிடிப்பு வரிசையில் ‘Modern Library’ஆல் வெளியிடப்பட்ட நாவலின் புதிய பதிப்பு இன்னும் தனக்கான வாசகர்களுக்காக காத்திருக்கிறது.