'லா.ச.ரா' – எஸ்.ரங்கராஜன்

l90

ராமாமிருதம் டில்லிக்கு வந்திருந்தார். பஞ்சாப் நேஷன்ல் பாங்கில் சென்னையில் உத்யோகம் பார்க்கும் இவர் ஒரு ஓரியண்டேஷன் கோர்ஸ்`க்காக வந்திருந்தார். பஸ் பிடித்து பிரயத்தனமாக தினம் 25 மைல் அளவில் சென்று வந்து மறுபடியும் மாணவானாகி லெட்ஜர்களையும் “பாங்கிங்” சிக்கல்களையும் படிக்கும் ராமாமிருதமும் செயல் நடுவே சொல், சொற்களிடையே செய்கை, ஒரு சைகை, ஒரு புன்னகை, ஒரு கோடி என்ற உள்ளுணர்வின் ரகஸ்ய த்வனிகளைத் தேடும், ராமாமிருதமும் வேறு வேறு ஆசாமிகள் இல்லை. வயது ஐம்பத்திரண்டு. “சின்ன வயசில் நான் வெள்ளைக்காரக் குழந்தை போல் இருந்தேனாம்” – கவர்ச்சியும் இயல்பும் இருக்கும் பொய்யில்லாத சிரிப்பு. ஜிப்பா, சில வேளைகளில் சட்டை.

சாப்பாடு விஷயத்தில் ஜாக்கிரதையும் ஒரு James Bond Fastidiousnessம் காட்டுகிறார். என் வீட்டில் சாப்பிட நிபந்தனைகள் – புளியைக் குறை எலுமிச்சம் பழம் நிறையச் சேர்த்துக் கொள், மோர் வேண்டும், ரசத்தில் தாளித்துக் கொட்டும் போது கொஞ்சம் சீரகம் சேர்த்துக்கொள்…சமையலறையில் பிரவேசித்து இன்றைக்கு மதியம் என்ன சமைத்தாய் என்று கேட்கும் சகஜ பாவம் அவருடைய வெற்றியின் ரகசியங்களில் ஒன்று.

ஒன்றேகால் நாசி. மெல்லிய உதடுகள், சன்னமான குரல். வாக்கியங்களின் முடிவில் திடீரென்று கீழ்க் ஸ்தாயிக்கு இறங்கும் குரல். பேசுவதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகள் உபயோகிக்கிறார். My dear Friend என்று ஆரம்பித்து பிறருடன் அவர் பேசுவதை கவனித்தால் அவருடைய கவர்ச்சியின் காரணம் புரியும். ஆணவம் இருக்கிறது. “யாரோ ஒருத்தர் சொன்னார் ஒரு ராமாமிருதத்தில் 40 ஸாலிஞ்சர்கள் இருக்கிறார்கள் என்று” நமக்கு எதிரிலேயே அவர் நம்மை அழித்துக் கொண்டிருப்பது நமக்குத் தெரியாது. இந்த ஸாகஸம் அவர் பேச்சில் உண்டு. “I can get under the skin of even that wall”.

டில்லி தமிழ்ச் சங்கத்தில் அவரைப் பேசச் சொன்னார்கள். நான் பேச வரவில்லை நான் வந்திருப்பது உங்களுடன் உரையாடுவதற்காக என்று துவங்கி அவர் ஒரு மணி நேரம் சொன்னதில் ஒரு மிக உண்மையான, தீவிரமான உரையாடலின் எல்லா அம்சங்களுடன், முன் சொன்னதற்கு அழுத்தம் தரும் காலப்ரமாணமான மௌனங்களும் ஆவலைத் தூண்டும் சொந்த நினைவுகளும், அறிந்தோ அறியாமலோ ஸ்டீபன் பாட்டலஸமும் இருந்தன. வேடிக்கையாகப் பேசி சிரிக்கவைத்துவிட்டு “This is NOT a joke” என்று பாதியில் சிரிப்பை உறையவைக்கும் சாமர்த்தியம். அவர் கதைகள் எவ்வளவு தூரம் உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவானவை என்பது, அவர் அளவுடன் பேசிய சொந்த விஷயங்களிலிருந்து தெரிந்தது. பேசினது பல இடங்களில் அவர் எழுதியது போல் ஒலித்தது. அவ்வப்போது நேரும் ஆத்ம தரிசனத்தில் விழியும் கண்திரைகளும் சாவு, பிறப்பு என்ற முடிச்சுகளுக்கு இடையில் வாழ்வை ஒரு முடிவில்லாத கயிறாகப் பார்ப்பதும் அவர் சொல்கையில் மிகையில்லாமல் இருந்தன.

நிறைய கவனிக்கிறார். கேட்கிறார். வெற்றிலை சீவல் பன்னீர்ப்புகையிலை சகிதம் உட்கார்ந்திருப்பவர்கள். நாங்களும் ராமாமிருதமும் ஸாம்யுவெல் பெக்கெட்டிலிருந்து “ஜாஸ்” வரை அவரவர்கள் தத்தம் வார்த்தைகளை விசிறியடித்துக்கொண்டிருக்கிறோம். இன்னா செய்தாரை என்னவோ செய்தல் பற்றி ஒருத்தர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ராமாமிருதத்தின் கவனம் எங்களிடமிருந்து மெதுவாக நழுவுகிறது. எங்கள் கோஷ்டியில் சேர்ந்துகொண்ட நண்பரின் 5 வயது பெண்ணை அடர்த்தியான புருவங்களின் நிழலில் இருக்கும் தன் சௌகர்யமான பூனைக் கண்களால் பார்க்கிறார். “அவரை வரைவது சுலபம் என்று நினைக்கிறேன். She seems to be all lines”.

இதை அவர் சிறுகதைகளிலும் பார்க்கமுடியும். நம்முடனே இருந்துகொண்டு கதை சொல்லிக்கொண்டிருந்தவர் மெதுவாக தன் திருப்திக்காக தன் மனதின் வடிவங்களுக்குப் பணிந்து அவைகளைத் தொடர்ந்து சொல்வார். செல்லும் பாதை சில வேலைகளில் L.S.D. பாதை.

ராமாமிருதத்தின் எழுத்தைப் பற்றி நிறையப் பேர் நிறைய இடத்தில் சொல்லியாகிவிட்டது. சொன்னவர்கள் எல்லோரும் அவரைப் படித்தவர்கள்தான். அவர் எழுத்தைப் படிப்பது ஒரு பாவனை. கண்களின் வழியாகத் திரையில் படும் கருப்பு, வெளுப்பு வித்தியாசங்களை மூளை அதன் சக்திக்கேற்பத் தெரிந்துகொள்ளும் “பிஸியாலஜி” விஷயம், ஞானம் வேண்டும், சோகம் வேண்டும், தைரியம் வேண்டும். இந்த ரீதியில் அவர் எழுத்தைத் தொட்டவர்கள் சிலர்தான்.

எழுதும் எழுத்துக்கு எழுதினவன் பெயர்கூடக் குறுக்கே நிற்கும் இடைஞ்சல் என்று சொல்லும் லா.ச.ரா “மனிதன் ஒரு கண்ணாடிச் சிதறல், ஒரு ஸர்வ வியாபகமான உண்மையின் மிகச் சிறிய சிதறல். ஆனால் அவன் பிரதிபலிப்பது என்னவோ அந்தப் பெரிய உண்மையைத்தான். என் எழுத்து ஒரு நீண்ட நினைவு, மனிதப் பரம்பரையின் நினைவு. அந்த நினைவு என்னை ஒரு கருவியாக அமைத்து வடிவம் பெறுகின்றது. என் வாழ்வின் விளக்கத்தின் மூலம் உயிரின் கதியைக் காண முயல்கிறேன். (அந்த கதி பாம்பின் கதியைப் போல அழகான இரக்கமில்லாத கதி). இதில் கற்பனை என்பது இருந்தால் அது உண்மையின், நித்தியத்துவத்தின் தொடர்பாகவோ விரிவாகவோதான் இருக்க முடியும் என்கிறார்.

கதை சாதாரணமாக ஆரம்பிக்கும் (பாற்கடல் – “நம்ஸ்காரம்”. புத்ர – விதிவிலக்கு) தினசைக் கொச்சை சகஜமாகப் பழகும். பிரமாணக் கொச்சை மட்டுமில்லை, மெதுவாக மெதுவாக நதி ஓட்டம் போல் சென்று “சில்லிப்பு சுறீலிடும்” வரிகளுக்கு நழுவுவது நமக்கே தெரியாத பரிணாமம். முடிவு மிக வலுவாக இருக்கும் (கஸ்தூரி).

கூட்ஸ் வண்டி (கார்டு வானைச் சேர்க்காமல் 26 பெட்டிகள்) இவர் கதையில் போவது ஸ்டீபன்ஸன் விதிப்படி இல்லை. “ஒரு தினுசா முக்கி முனகிண்டு, தொண்டையில் கதை அடைச்சுண்டு, பலஹீனமா – பாட்டி தள்ளாமையால் ஊங் கொட்டிண்டு தயிர் கடையறாளே – அது மாதிரிச்” செல்லும். “அத்தினி பாரத்தை இழுக்கமாட்டாமே இழுத்துட்டு போவுதே அந்த எஞ்சினுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்” என்ரு தேம்புவான் சிறுவன்.

அவர் நடையில் ஹெமிங்வேயின் “Repetitive rhythm” இருக்கிறது. வார்த்தைகளின் தொனி மதிப்பை முழுவதும் பயன்படுத்துகிறார். சில வேளைகளில் அருணகிரியின் அதிரவைக்கும் தாளம் இவர் வரிகளில் தெரிகிறது. தளைக்கு உட்படாத இயல்பான சந்தங்கள்.

“உயிருக்கு உயிர், உடல் இரண்டும் ஒருப்பட்டு கருவுற்று, உருப்பெற்று, முழுப்பட்டதும் வெளிப்பட்டு, யுகம் யுகமாய் நேர்ந்து நேர்ந்து வடுப்பட்ட உண்மைதானே இப்பவும் நேர்ந்துவிட்டது” (புத்ர)
அவர் காட்டும் காட்சிகளில் ஜப்பானிய ஹைகுவின் சலனங்களைப் பார்க்கலாம்.

“ஐப்பசியில் மாந்தோப்புக்களின் மேல் சாய்ந்திறங்கும் மேகக் கூட்டம்”
“எங்கோ பொழிய சரசரவென விரைந்தேகும் மேகக்கூட்டம்”
“மார்கழி விடிவேளை திரள்பனிப் படலம்”
“மண் தரையில் பாம்பு ஊர்ந்த வரிப்பதிவுகள்”
“மடத்து அரச மரத்தடியில் குடில்விட்டு நாளுக்கு நாள் உயரும் புற்றுத் தொடர்”
“வெளிவிட்டு உள்வாங்க மறுத்த அல்லது மறுத்துத் தடைபட்ட உயிர்மூச்சு”
“கிணற்றில் நள்ளிரவில் கவியிருளில் தன் ஆழத்தைப் பால் வடிவில் மறைத்து நலுங்காது நிற்கும் ஜலமட்டம்.
“மாவிலைகள் மறைக்க அவைகள் நடுவில் தொங்கும் மாவடு”
“நீல வெளியில் சிறகு விரித்து நீந்தும் பருந்தின் வட்டம்”
“நாள் கிழமைகளில் அருவாமனையடியில் தும்பையெனப் போர் குவியும் தேங்காய்த் துருவல்”
“எழுதிய படம் போல பசும் புற்றரை”
“பறக்கும் கொக்கின் சிறகடியினின்று புல் தரைமேல் உதிர்ந்து பளிரீடும் வெள்ளை இறகு”
“சீறி இறங்கும் விண்மீனின் வீழ்ச்சி”
“கை தவறிக் கீழே விழுந்து குதித்தெழும் வெள்ளியின் இனித்த மெல்லோசை”
“கரைபுரளும் பசுவின் பெருவயிறு”
“கன்று கண்டு கண் கனிந்து மடி கசிந்து காப்பு துளித்து தனித்துத் தொங்கும் உயிர்ச் சொட்டு
கும்முட்டியின் நடுகுழியில் தேங்கிக் கண கணக்கும் குங்குமப் பிழம்பு”
“கோடையில் நடு நடுங்கும் கானல்”
“சமயம், காரணம் தாண்டி ஒழுங்கை உள்ளினின்று கிளம்பி கூடம் முழுவதும் குபீரிடும் தாழம்பூவின் தாழ்ந்த மணம்” – [புத்ர]

டில்லி இவருக்குத் தந்த விருந்து உபசாரம் பற்றி ஆச்சரியப்படுகிறார். அவர் எய்த அம்புகள் தக்க இடத்தில் தைத்திருப்பது பற்றி ஆச்சரியம். ஆனால் இந்த மோகம் அவர் காலை வாரிவிடவில்லை.

மொட்டைமாடித் தனிமையில் ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில், மரத்தடியில் முழங்கால் மண்டி போட்டுக்கொண்டு 30 வருஷமாக இவர் எழுதிய கதைகள் எட்டு புத்தகங்களாக வந்திருக்கின்றன. அவை “ஜனனி”, “இதழ்கள்”, பச்சைக் கனவு”, “கங்கா”, “அஞ்சலி”, “அலைகள்”, “புத்ர” (வாசகர் வட்டம் நாவல்), “தயா”. பதிப்பித்தவர்கள் கலைஞன் பதிப்பகம், “புத்ர” தவிர. எழுத்தில் அதிகம் சம்பாதிக்காதவர். பதிப்பாளர் அழகாக பைண்டி பண்ணி சமர்ப்பிக்கும் முதல் பிரதிகளிலும், அவர் அவ்வப்போது பண்டிகைகளின் போதோ விசேஷங்களின் போதோ கொண்டு கொடுக்கும் “செக்”களிலும் சமாதானமடைகிறார்.

1947 வாக்கில் இவர் எழுதின “யோகம்”, “கணுக்கள்” போன்ற கதைகள் இன்றும் பேசப்படுவது காலத்தின் ஓட்டத்தை நிறுத்த முற்படும் லா.ச.ராவின் சொந்த வெற்றி.

நன்றி : கணையாழி களஞ்சியம் -1965 -75