மகரந்தம்

கதைமாந்தர்களிடம் நட்பைத் தேடாதீர்

bqwe32

க்ளேய்ர் மெஸ்ஸட் (Claire Messud) பெயர் பெற்று வரும் நாவலாசிரியர். இவரைப் பற்றி ஒரு வேடிக்கையான குறிப்பு கூட உண்டு. அனாவசியமாக ஊதிப் பெருக்க வைக்கப்படும் சில வெற்று வேட்டுகளின் பலூன் ஆளுமைகளை கூரிய ஊசிக் குறிப்புகளால் குத்தி ஒட்டி உலரச் செய்யும் க்ரிஸ்தோஃபர் ஹிட்சென்ஸ் இவரிடம் கேட்டாராம்-”ஜனங்கள் நிஜமாகப் படிக்க விரும்பும்படி ஏதாவது எழுதினால் அது உன்னைக் கொன்று விடுமா?” (‘“Would it kill you to write something people actually want to read?” ) அப்படி அவர் சொன்னதாக வெறும் வதந்தி இல்லை. இந்தத் தகவலைச் சொல்வது மெஸ்ஸட்டின் கணவர், அமெரிக்காவில் உள்ள வெகு சில இலக்கிய விமர்சகர்களில் ஒருவர், ஜேம்ஸ் உட் (James Wood). ஆனால் ஹிட்சென்ஸ் அப்படிச் சொல்லி சில மாதங்கள் கழித்து வெளியாகும் புத்தகமான ‘த எம்பரர்ஸ் சில்ரன்’ (The Emperor’s Children) விமர்சகர்களாலும் பாராட்டப் பெற்று, நிறைய விற்ற புத்தகங்களிலும் ஒன்றாக சுமார் ஒரு வருடம் பிரபலமாக இருந்தது.

சமீபத்தில் அவர் எழுதிய ஒரு புத்தகமான ’த உமன் அப்ஸ்டேர்ஸ்’ (The Woman Upstairs) குறித்து அவரைப் பேட்டி காண வந்தவர், உங்களுடைய புத்தகத்தின் மையப் பாத்திரத்தோடு நீங்கள் நட்பு கொள்ள முடியுமா? என்று விசித்திரமாக ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு க்ளேய்ர் மெஸ்ஸட் பதில் சொல்வது இன்று ஓரளவு பிரபலமாகி விட்டிருக்கிறது. அது இங்கே:

Claire Messud responds to the question of whether she would “want to be friends” with the protagonist of her latest novel: “For heaven’s sake, what kind of question is that? Would you want to be friends with Humbert Humbert? Would you want to be friends with Mickey Sabbath? Saleem Sinai? Hamlet? Krapp? Oedipus? Oscar Wao? Antigone? Raskolnikov? Any of the characters in The Corrections? Any of the characters in Infinite Jest? Any of the characters in anything Pynchon has ever written? Or Martin Amis? Or Orhan Pamuk? Or Alice Munro, for that matter? If you’re reading to find friends, you’re in deep trouble.” For more on The Woman Upstairs, read Daphne Merkin’s review of the book in our April/May issue.

மெஸ்ஸட்டும், உட்டும் கேம்ப்ரிட்ஜ் எனப்படும் சிறு நகரில், பாஸ்டன் மாநகர் அருகே, வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்வு, எழுத்து, பின் படைப்பு முறைகள் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை இங்கே பார்க்கலாம்.

http://www.vulture.com/2013/04/claire-messud-and-james-wood-on-the-woman-upstairs.html

o0o0o0o

பகுதி புத்தக விற்பனை

article1

அச்சுப் புத்தகங்கள் நிறைய விற்கின்றன. இன்னமும் விற்கின்றன என்பது அதிசயம்தான் என நிறைய மேற்குலக கருத்தாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். அதே நேரம் முன்னெப்போதையும் விட ஏராளமான எழுத்தாளர்கள் இப்போது புத்தகங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதித் தள்ளுகிறார்கள். நிறைய முழு நேர எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் புத்தகங்கள் எழுதித் தொழில் நடத்த முடியவில்லை, வேறு வேலைகள் செய்தபடி அவ்வப்போது ஒரு புத்தகம் எழுதலாம், அது ஏதோ சில ஆயிரம் பிரதி விற்றால் அதிகம். அதையும் பெரும் பிரசுரகர்த்தர்களிடம் கொடுத்தால் நமக்கு ஏதும் கிட்டுவதில்லை என்கிறார்கள். அதனால் நிறைய எழுத்தாளர்கள் புத்தகங்களைத் தாமே பிரசுரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

தடிமனான புத்தகங்களை எழுதி விற்றுக் கொண்டிருந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட இப்போது யோசிக்கிறார்கள். ஒரு உத்தி இப்போது மேலோங்கி வருகிறது. ஒரு தடிப் புத்தகத்தின் பகுதிகளைச் சிறு புத்தகங்களாகப் பிரித்து வேறு தலைப்பில் தனித்தனியே குறைந்த விலைக்கு விற்கிறார்கள். நீல் ஸ்டீஃபன்ஸனின் ‘பரோக்’ வரிசை நாவல்களில் இரண்டாவது மூன்றாவது புத்தகங்கள் இப்போது இப்படிப் பிரித்து ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்களாக விற்கப்படுகின்றன. அதாவது ஆறு புத்தகங்களாக.

இதைத் தவிர பல எழுத்தாளர்கள் தம் புத்தகத்தின் முதல் ஒரு அத்தியாயம் அல்லது இரண்டை மட்டும் ஒரு குட்டிப் புத்தகம் போல, முன்னோட்டமாக, ஒரு டாலருக்கோ, இரண்டு டாலருக்கோ கொடுக்கிறார்கள். இவற்றைச் சமீப காலம் வரை அமேஸான் நிறுவனம் கிண்டில் என்கிற ஈ-ரீடர் எனப்படும் எலெக்ட்ரானிக் புத்தக வாசிப்பு சாதனத்தில் கோப்புகளாக விற்றுக் கொண்டிருந்தது. கிண்டில், நூக், ஐபாட், நெக்ஸஸ் என்பன தவிர பல வேறு எலெக்ட்ரானிக் புத்தக சாதனங்கள் சந்தையில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான கோப்புகளாகப் புத்தகங்களை விற்கின்றன. சாதாரணமாக இவை முழு அச்சுப் புத்தகத்தின் விலையில் பகுதி விலைக்குக் கிட்டுகின்றன.

இந்த முன்னோட்டப் புத்தகங்களைப் போலவே, சில பத்திரிகைகளும் தம் சமீபத்து இதழில் பகுதிகளை மட்டும் தனியே விற்கின்றன. இவையும் உடனடியாக வலை மூலம் உங்கள் சாதனத்துக்குத் தரவிறக்கும் வகையில் கிட்டும். கட்டணம் ஒவ்வொரு கட்டுரை/ கதைக்கும் ஒரு டாலர் போல இருக்கும்.
சமீபத்தில் அமேஸான் இந்த வகை விற்பனைகளுக்கு ஒரு ஆப்பு வைத்திருக்கிறதாம். 2500 வார்த்தைகளுக்குக் கீழே உள்ள எல்லா பதிப்புகளையும் தன் கிண்டில் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப் போவதாக அமேஸான் அறிவித்திருக்கிறது என்று ஒரு புத்தகங்கள் பற்றிய செய்தி வெளியீட்டுப் பத்திரிகை சொல்கிறது. அதை இங்கே காணலாம்.

http://bookforum.com/paper/archive/20130429

o0o0o0o

கர்ப்பிணிகளின் பல்வலி

article21கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு தாம் கொடுக்கும் மருந்துகளால் ஏதாவது தீங்கு நடந்து அதனால் சட்டப் பிரச்சினைகள் வரலாம் என பயந்து அமெரிக்காவில் கர்ப்பிணிகளுக்கு வைத்தியம் செய்ய பல பல்வைத்தியர்களும் மறுக்கிறார்களாம். பயங்கர பல்வலியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த கர்ப்பிணி ஒருவர் மருத்துவ வசதி கிடைக்காமல் திருப்பப்பட்டு அவரது கன்னம் பொருவிளங்காய் உருண்டை அடைத்தது போல வீங்கிப் போனது மட்டுமன்றி அந்தக் கர்ப்பிணிக்கு பயங்கர வலி அவஸ்தை. பல்வைத்தியர்களுக்கு அவர்களது கல்லூரிகளில் கர்ப்பிணிகளுக்கு வைத்தியம் செய்யக்கூடாது என படிப்பிக்கப்பட்டிருப்பதே இதற்குக்காரணம். பல்வைத்தியத்தின்போது எக்ஸ்ரே, மயக்கமருந்து, ஆண்டிபயாடிக் போன்றவற்றை உபயோகிக்க வேண்டியொருக்கையில் அது கர்ப்பத்திலிருக்கும் சிசுவை பாதிக்குமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். மேலும் படிக்க:

http://well.blogs.nytimes.com/2013/05/06/obstacles-for-pregnant-women-seeking-dental-care/

o0o0o0o

வெறும் விளையாட்டல்ல

article3

உலகக் கால்பந்து ரசிகர்கள் சமீபத்தில் ஒரு நிகழ்வைப் பார்த்து அசந்து போயிருப்பார்கள். பார்ஸலோனா, மான்செஸ்டர் போன்ற க்ளப் டீம்கள் எல்லாம் கணிசமான எண்ணிக்கை வித்தியாசத்தில் தோற்றுப் போக இரண்டு ஜெர்மன் கால்பந்து குழுக்கள் யூரோப்பிய சாம்பியன்ஷிப் லீகின் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றிருக்கின்றன. பாயெர்ன் குழுவும், டார்ட்மண்ட் குழுவும் ஜெர்மன் க்ளப் குழுக்கள். இதில் என்ன பெரிய விஷயம் என்று கேட்பாருக்கு காலபந்து விளையாட்டில் எத்தனை நுண்ணரசியல் இருக்கிறது என்பது புரியவில்லை என்று அர்த்தம்.
எப்படி இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடையே போட்டிகள் நடக்கும்போது அது வெறும் விளையாட்டில்லை, அதில் என்னென்னவோ தேசிய அரசியல், பன்னாட்டு அரசியல் கணக்குகள் ரசிகர் மனதில் ஓடுகின்றனவோ அதே போன்ற ஒரு தேசிய – பல யூரோப்பிய உணர்ச்சி மோதல்கள் இந்த கால்பந்துப் போட்டியில் ஓடுகின்றன.
ஜெர்மனி ஒரு நாடுதான் சமீபத்திய யூரோப்பிய பொருளாதாரச் சரிவில் அதிகம் பாதிக்கப்படாது தொடர்ந்து ஊக்கத்துடன் இயங்கும் பொருளாதாரம். அங்கு ஏற்றுமதி தொடர்ந்து மேலேகிக் கொண்டிருக்க, தெற்கு யூரோப்பிய நாடுகளான, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகியன பெரும் சரிவில் உள்ளன. ஃப்ரான்ஸ், இங்கிலாந்தின் விஷயமும் ஒன்றும் ஏற்கும் விதமான நிலையில் இல்லை.
இந்தக் கட்டத்தில் இரண்டு கால்பந்துக் குழுக்கள், ஜெர்மனியிலிருந்து இறுதிச் சுற்றில் விளையாட வென்று வந்திருப்பது என்னவிதமான காய்ச்சல்களை எழுப்புகிறது என்று இந்தக் கட்டுரை சொல்கிறது. இதில் பற்பல விஷயங்கள் இணைந்திருப்பதும், அவற்றை இக்கட்டுரை லாகவமாக இணைத்துக் காட்டுவதும் இதன் சிறப்பு.