சென்ற பகுதியின் தொடர்ச்சியாக இந்தியாவின் இயற்கை விவசாயம் எவ்வாறு இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு ஹாவார்ட்டால் பரவியது என்பதை கவனித்துவிட்டு, இந்தியாவுக்குள், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனிக்க எனது பசுமை நினைவுகள் உதவட்டும்.
மண்ணில் ரசாயனங்களை வெடிஉப்பு வடிவில் தூவாமல் இயற்கை இடுபொருட்களை கம்போஸ்டிங் செய்து மக்காக வழங்கும் தனது உத்திக்கு இந்தூர் கம்போஸ்டிங் என்று பெயரிட்டு மேலை நாடுகளில் பரவச் செய்த ஹாவார்டு மிகவும் தெளிவாக இயற்கை வழிமுறைக்கும் ரசாயன வழிமுறைக்கும் உள்ள நுண்ணிய வேற்றுமைகளை எடுத்துக் காட்டினார்.
இயற்கை விவசாயத்திற்குரிய அடிப்படையான இடுபொருள் கால்நடைக் கழிவுகள் அல்லது தொழு உரம். தொழு உரத்தை மக்க வைக்க வேண்டும். கால்நடைக் கழிவு என்பது எல்லாவகையான நான்கு கால் பிராணிகளின் உண்டு கழித்த சாணம் என்று பொருள். தொழு உரம் என்பது மாட்டுக் கொட்டிலில் கட்டி வைக்கப்படும் மாடு, ஆடுகளின் சாணம் என்று பொருள். மக்காத நிலையில் இத்தகைய சாணத்தின் வெப்ப நிலை 50 முதல் 60 டிகிரி சென்டிகிரேட்டில் இருக்கும். இது மக்கும்போது வெப்ப நிலை 25 டிகிரி சென்டிகிரேட்டுக்குக் குறையும்போது மக்காகும். பயிருக்குப் பயன்படுத்தலாம். மக்க வேண்டிய சாணியுடன் அறுவடைக் கழிவுகளையும் சேர்த்து கம்போஸ்ட்டாக மக்க வைக்கலாம். அறுவடைக் கழிவில் அடங்குபவை வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி, துவரைச்செடி, கரும்புச் சோகை தவிர மரம் உதிர்க்கும் இலைச் சருகுகள் ஆகியவை அடங்கும். கால்நடைக் கழிவுகளில் பல வகையான குணபங்கள் (இறந்த உடல், மாமிசம், எலும்புகள், ரத்தம்) உட்பட சாணம் மூத்திரம் ஆகியவற்றில் அதிகபட்சமாக நைட்ரஜன் என்ற தழைச்சத்தும் பாஸ்பேட் என்ற மணிச்சத்தும் உண்டு. தாவரக் கழிவுகளில் கார்பன் சத்து (கரிமம்) அதிகம்.
ரசாயன விவசாயத்தில் மண் ஒரு பாத்திரமே. ஒரு தாவரத்தை எரித்து மண் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பலில் அடங்கியுள்ள சத்துக்களை சிந்தெடிக்காகவும் உலோக வடிவிலும் உப்புத்துகல்களாக ரசாயனம் வழங்கப்படுகிறது. இதை NPK பேக்கேஜ் என்பார்கள். மண்ணை ஒரு பாத்திரமாக அனுமானித்து ரசாயனங்களை ஊட்டமாக வழங்குவது ரசாயன விவசாயம். இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன் மனிதவளமும் பாதிக்கப்படுகிறது. இது ஒரு நோய்த்தத்துவம். ஆனால் இயற்கை விவசாயத்தில் 100 கிலோ கார்பன் பொருள் (அறுவடைக் கழிவு) மீது 20 கிலோ நைட்ரஜன் பொருள் (தொழுஉரம்) வழங்கி, மக்கிய நிலையில் கார்பன் நைட்ரஜன் விகிதம் 5:1 என்ற விகிதத்தில் உருவாகும் மக்கை இடுபொருளாக வழங்க வேண்டும். மண் பாத்திரமல்ல. மண் பாத்திரமாகும். மண் என்பது கரிமத் தொழிற்சாலை. மண்ணில் பல கோடிக்கணக்கான உயிரிகளை உருவாக்கி மண்வளத்தைப் பாதுகாத்து உயர்ந்தபட்ச அறுவடை செய்வதே நல்வழி விவசாயம் என்று ரசாயன புரட்சியின்போது எடுத்துக்காட்டியவர் ஆல்பர்ட் ஹாவார்டு. இவருடைய இந்தூர் கம்போஸ்ட்டிங் முறையில் கால்நடை – தாவரக் கழிவுடன் மரத்தூள், எலும்புத் தூள், ராக் பாஸ்பேட், கடற்பாசி போன்றவை (குறைந்த அளவில்) சேர்க்கப்பட்டு உருவான கரிய மக்கு வீரியம் பெற்று உயர்ந்த விளைச்சலை மேலை நாட்டில் அறிமுகம் செய்தபோது விளைந்தது.
ஹாவார்டு வாழ்ந்த காலத்தில் உற்ற நண்பரான ஜே.ஜே. ரோடெல், ஹாவார்டு எழுதியிருந்த வேளாண்மை உயில் என்ற தட்டச்சுப் பிரதிகளைச் சேகரித்து நூலாக வெளியிட்டார். ஜே. ஜே. ரோடேலும் டாக்டர் நிக்கலசும் ஹாவார்டை அமெரிக்காவுக்கு வரவழைத்தனர். ஹாவார்டின் உதவியால் அமெரிக்காவில் இயற்கை விவசாயம் புத்தூக்கம் பெற்றது. ஹாவார்டு இங்கிலாந்தில் இருந்தபோது ஃப்ரண்டு சைக்ஸ், ஈவா பெல்ஃபேர் ஆகியோர் தங்கள் பண்ணைகளை இயற்கைக்கு மாற்றி நல்ல விளைச்சலையும் பெற்றனர். இவை பற்றிய விபரங்களை இரண்டாண்டுகளுக்கு முன்பு சொல்வனம் வலைப்பின்னலில் வெளிவந்த எனது கட்டுரைகளில் கவனிக்கலாம்.
இப்போது தொடங்குவது எனது பசுமை நினைவுகளுடன் கூடிய பல பசுமை பயணங்கள். 1990ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னுமான ஒரு காலகட்டம். அப்போது நான் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். நான் வேளாண்மை சார்ந்த பொருளியல் துறை சம்பந்தமான கட்டுரைகளை தினமணி பத்திரிக்கையில் 1980லிருந்து வழங்கிக் கொண்டிருந்த நேரம். பி.பி.எஸ்.டி என்று சொல்லப்பட்ட, “தேசபக்தி மாணவர்கள் மக்கள் இயக்க அறக்கட்டளை” என்ற அமைப்பில் உறுப்பினரான திரு முகுந்தன் என்பவர் ஒரு நாள் வீடு தேடி வந்தார். தினமணி கட்டுரைகளை மிகவும் பாராட்டிய அவர் மிகவும் நாசுக்காக, “பசுமைப் புரட்சியால் இந்தியாவில் விவசாய முதலீடு ஆக்கம் பெற்றது என்றும் கிராமங்களில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது என்றும்” நான் கொண்டிருந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, “பசுமைப்புரட்சியின் மறுபக்கத்தைப் பார்க்க வேண்டும்…” என்ற கோரிக்கையுடன், பி.பி.எஸ்.டி. வெளியிட்டுள்ள பல நூல் வடிவ மலர்களை எனக்கு வழங்கி நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்து வழங்குமாறு கூறிவிட்டுச் சென்றார். நிஜமாகவே நேரம் இல்லாததால் அவற்றை பின்னர் படிக்கலாம் என்று பத்திரப்படுத்தி வைத்தேன்.
எனக்கும் மால்கம் ஆதிசேஷையா உருவாக்கிய சென்னை வளர்ச்சிக் கழகம் (The Madras Institute of Development Studies) என்ற அமைப்புக்கும் உள்ள தொடர்பு நினைவுக்கு வருகிறது. மால்கம் ஆதிசேஷையா அன்றே ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியவர். நேர்மையின் இலக்கணம் அவர். தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் சென்னை வளர்ச்சிக் கழகத்துக்கு அர்ப்பணித்தவர். பல கோடி மதிப்புள்ள தன் பங்களாவையே பொருளியல் கல்வி நிறுவனமாக மாற்றிய மேதை. எனது வட இந்திய நண்பர் நிர்மல் சென்குப்தா முதலில் மார்க்சியவாதியாக இருந்தார். ஃப்ராண்டியர் (Frontier) என்ற பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதுவார். பாட்னாவில் அவர் முனைவர் பட்டத்துக்குரிய களப்பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் “தி மெயில்” என்ற ஆங்கில நாளேடு வெளிவந்தது. அது ஒரு மாலை இதழ். மோகன் ராமின் அரசியல் விமரிசனக் கட்டுரைகளுக்காக நான் தி மெயில் படிப்பதுண்டு. சொல்லப்போனால் நான் எழுதும் பாணிக்கு மோகன் ராம் வழிகாட்டி. அவர் மறைந்து பல காலமாகிவிட்டது.
மோகன் ராம் ஃபிராண்டியரிலும் எழுதுவார். “பிளிட்ஸ்’ என்ற பரபரப்பான ஆங்கில வார ஏட்டிலும் எழுதுவார். எல்லாமே இடதுசாரி இதழ்கள். நக்சல்பாரி இயக்கம் அப்போது நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தது. சாரு மஜூம்தார், காணு சன்யால், நாகபூஷன் பட்நாயக் பற்றிய செய்திகள் ப்ராண்டியரில் வரும். என் பங்குக்கு சிம்சன் தொழிற்சாலை மூலம் பிரபலமான குசேலர் பற்றி ஃபிராண்டியரில் நான் எழுதிய விதம், நிர்மல் சென்குப்தாவை மிகவும் கவர்ந்தது. இவையெல்லாம் ஓய்ந்த சூழ்நிலையில் நிர்மல் சென்குப்தா சென்னைக்கு வந்து 1979ல் சென்னை வளர்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார். அப்போது சி.டி. குரியன் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். நிர்மல் எனக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கினார். தமிழக அரசில் பிரதம செயலாளராக பணிபுரிந்த குகன், ஐ.ஏ.எஸ். அவர்களும் அங்கு ஒரு முக்கிய பொறுப்பு வகித்தார். வளர்ச்சி நிறுவனத்தில் பொருளியல் நிபுணர்களின் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள் எல்லாம் அங்குள்ள நிறுவனத்தில் குப்பைகளாகக் குவிந்திருந்தன. அவற்றில் எனக்குப் பிடித்ததை எடுத்துப் படித்து அதை வைத்து சுருக்கமாக எழுதி தினமணியில் வெளியிடுவது திட்டம். அப்போது தினமணியில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தார். நிர்மலுக்கு நான் டி.டி. கோசாம்பியின் “பண்டைய இந்தியா – பண்பாடும் நாகரிகமும்” நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ள விவரம் அறிந்தவர். ஒரு கணித பேராசிரியரால் எழுதப்பட்ட அந்த நூலை மொழிபெயர்ப்பது எளிதான பணி அல்ல. அந்த திறன் எனக்கு இருந்ததால் பொருளாதார அறிவுஜீவிகளின் ஆய்வுக் கட்டுரைகளின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் திறன் எனக்கு உண்டு என்று நிர்மல் நினைத்திருக்கலாம்.
தினமணியில் வருவதில் அவர்களுக்கு என்ன லாபமோ! எனக்கு ஒரு கட்டுரைக்கு ரூ. 500 தருவதாக உடன்பாடு. நான்கு கட்டுரைகள் எழுதி வழங்கினேன். குகன் மூலம் தினமணிக்கு வந்தன. வளர்ச்சி நிறுவனம் பணம் தந்தாலும் தினமணியில் என் கட்டுரைகள் வெளிவராததால் ஒரு தினமணி அலுவலகத்துக்கு ஐராவதம் மகாதேவனைச் சந்திக்கச் சென்றேன். அந்தச் சந்திப்பு எனக்கு ஒரு திருப்புமுனை. குகன் மூலம் அனுப்பப்பட்ட எனது கட்டுரைகள் எல்லாம் அவரது மேசையில் இருந்தன. என்னை யார் என்று புரிந்து கொண்டதும் எனது கட்டுரைகளைப் பாராட்டிய அவர், தினமணியின் அளவுக்கு அவை பெரிது என்றார். கூவத்தைப் பற்றிய எனது மொழிபெயர்ப்பு கட்டுரை அவரை மிகவும் கவர்ந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வெளியிடுவதாக வாக்களித்தார். நான் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. 20 பக்க தட்டச்சு பிரதியை எட்டு பக்க எழுத்து பிரதியாக மாற்றும்போது சொந்தச் சரக்கும் சேர்ந்திருந்தது! அப்போது தினமணி ஏ. என். சிவராமனிடமிருந்து ஐராவதம் மகாதேவனின் பொறுப்பில் வந்தபோது ஹிந்து நாளிதழின் தலையங்கம் நடுப்பக்கப் பகுதியைப் பின்பற்றி துறைசார்ந்த எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். மொழிபெயர்ப்பை ஓரங்கட்டிவிட்டு என்னுடைய துறை பற்றி எழுதும்படி ஐராவதம் மகாதேவன் தூண்டியதைப் பின்பற்றியதன் விளைவாக தினமணி கட்டுரையாளனாக மாறி விவசாயத்தைப் பற்றி 33 ஆண்டுகளாக எழுதி வருவதைப் பின்னோக்கிப் பார்த்துவிட்டு இனி முன்னோக்குவோம்.
சென்னை வளர்ச்சி நிறுவனத்துடன் எனது தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து நிபுணத்துவக் கட்டுரைகள் அடங்கிய மாதவெளியீட்டை அனுப்பிய வண்ணம் இருந்தனர். 1992 காலகட்டம். அதில் ஒரு நிபுணர் கட்டுரை எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அக்கட்டுரையின் தலைப்பு, “காய்கறி பழங்களில் எஞ்சியுள்ள விஷ அளவு”. அதைத் தமிழ்படுத்தி தினமணிக்கு அனுப்பினேன். பூச்சி மருந்து என்றால் அது விஷம் என்ற உணர்வை அந்தக் கட்டுரை எடுத்துக் காட்டியது. அதே சமயம் ஹிந்து நாளிதழில் வந்தனா சிவா எழுதிய பசுமைப்புரட்சி என்ற நூல் மதிப்புரையைப் படித்தேன். அதில் எம்.எஸ். சுவாமிநாதனை வந்தனா சிவா கடுமையாக விமரிசித்திருப்பதைக் கண்டேன். அப்போதுதான் முகுந்தன் தேசபக்தி மானவர் இயக்க வெளியீடுகளை என்னிடம் வழங்கியிருந்தார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ள அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் இந்தியாவுக்கு பசுமைப் புரட்சி தேவையில்லை என்றும் ஐ. ஆர். எட்டையும் தைச்சுங்கையும் பயிரிட்டு விதைப்பெருக்கம் செய்ய மாட்டேன் என்று போராடிய விஞ்ஞானியும் கட்டாக் அரிசி ஆராய்ச்சி இயக்குனருமான ரிக்காரியா பழிவாங்கப்பட்ட விவரம் அறிந்தேன். எம்.எஸ். சுவாமிநாதனை ‘விதைக் கொள்ளைகாரன்” என்று விமரிசிக்கப்பட்டிருந்தது. ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த பாரம்பரிய நெல் விதைகளை எல்லாம் அமெரிக்க விதை நிறுவனங்களுக்கு ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டதை தேசபக்தி மாணவர்கள் அவ்வாறு விமரிசித்ததில் நியாயம் உள்ளது. இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தித் திறனை உயர்த்தக்கூடிய பாரம்பரிய விதை இழப்பு மாபெரும் நஷ்டம்தானே! தேசபக்தி மாணவர் இயக்க வெளியீடுகள் என் மனதை மாற்றியதால் பசுமைப் புரட்சிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பத் தொடங்கினேன்.
விஷ அளவு பற்றிய கட்டுரையை மீண்டும் நினைவுபடுத்துவோம். பிற்காலத்தில் எனது பசுமைப் பயணத்துக்கு வித்திட்ட கட்டுரை அல்லவா இது! “காய்கறி பழங்களில் உள்ள விஷ அளவு” என்ற கருத்தரங்கை சென்னை வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பூச்சி மருந்து விஷம் 100 சதவிகிதம் அதிகம் என்று கூறி வியப்புற்றார்! கவலை கொள்ளவில்லை.
அனுமதிக்கப்பட்ட அளவு என்பது PPM என்பார்கள். Percentage per million என்றால் பத்து லட்சத்தில் உள்ள பங்கு. பழம் காய்கறிகளில் மில்லியனில் 009 அனுமதிக்கப்பட்ட அளவு என்றால் உண்மையில் 099 என்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் விஷம். அப்படிப்பட்ட விஷம் மனிதனை எப்படி பாதிக்கும்? 010லிருந்தே விஷம் என்று அர்த்தம்.
அல்ட்ரீன், டிடிடி, போன்ற ஆர்கோ குளோரின் பயிர்களின்மீது தெளிக்கும்போது விளைபொருளைத் தவிர மீன், பால், இறைச்சியும் விஷமாகும். வயிற்று நோய், ஈரல் நோய், புற்று நோய் ஏற்படும். லிப்ட்டேன், ஹீர்போக்ளோர், என்ரின், டையாசினான் எஞ்சும்போது மேற்படி நோய்களுடன் நரம்பு\ மண்டலம் பாதிப்புறும். மாலத்தியான், பார்த்தியான் போன்ற ஆர்கனோ பாஸ்பரஸ் விஷத்தால் கடுமையான வாத நோய் ஏற்படலாம். இதயம் பாதிப்புறும். நாம் மருந்து என்று நினைப்பவை எல்லாம் உயிர்க்கொல்லிகளே என்ற உண்மையை மேற்படி கட்டுரையைப் படிக்கும்போது உணர்ந்தேன்.
இதற்கு எதுவும் விடை உள்ளதா? மாற்று விவசாயம் உள்ளதா? என்றுதான் எனது தேடல் துவங்கியது. 1992-93 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தில் யாருமே ஈடுபட்டதாகத் தகவலும் இல்லை. ஒருசிலர் அப்போதுதான் ரசாயனத்திலிருந்து விடுபட்டு வெளிவந்தனர். புதுச்சேரியில் அரவிந்தர் பண்ணையில் இயற்கை விவசாயம் செய்வதாகக் கேள்விப்பட்டேன். எனது முதல் பசுமைப் பயணம் அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சொந்தமான குளோரியா பண்ணையில் தொடங்கிற்று. அங்கு நான் கற்ற பாடத்தை அடுத்த இதழில் கவனிப்போம்.
வாழ்க பாரதம்!