நூற்கடலின் கரையில்…

சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் – ஆதார குணங்களின் தெறிப்பு


சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு ஜல்லிக் கட்டில் தன் தகப்பனைக் கொம்பால் குத்தி அவர் மரணத்துக்குக் காரணமான குறிப்பிட்ட ஒரு காளையை ஓர் இளைஞன் அடக்குவது பற்றிய கதை ‘வாடிவாசல்’.

sisuche_100கதை முழுவதும் ‘இப்போதே’ சொல்லப்படுகிறது. சஞ்சயன் பாரதப் போரை, அதைப் பார்க்க முடியாத திருதிராஷ்டிரனுக்குச் சொன்ன மாதிரி செல்லப்பா நமக்குச் சொல்கிறார். நடக்க நடக்க உடனுக்குடன். முன்னங்கதைகள் கூட இப்போதைய பேச்சில் இந்தக் கணத்தின் நினைப்பில் சொல்லப்படுகின்றன. கதை சொல்ல ஆசிரியர் உள்ளே நுழைவது இல்லை. முன்னால் நடந்ததைச் சொல்வதும் இல்லை. பாத்திரங்கள் இப்போது பேசுவது, இப்போது நினைப்பது என்பதிலேயே பழசும் நமக்குச் சொல்லப்படுகின்றது. சி.சு.செ.வின் காமரா நர்ந்து கொண்டே இருக்கிறது. பேனா தூரிகையாய் வண்ணங்குழைத்து வரைந்து கொண்டே போகிறது. கதை நடக்கும் களம் அப்படிப்பட்டது. துல்லியமான, கூர்மையான, நிகழ் காலத்தின் உக்கிரமான களம். அங்கு பார்வையோ, உடல் அசைவோ ஒரு நொடி தடங்கினால் போதும் மரணம்தான். மாடு அணைபவனுக்கு மட்டுமல்ல, பார்வையாளனுக்கும். புலன்களின் கூர்மை தானாகவே உச்சத்தில் இருக்கும் களம். இந்த ‘இப்போதைக்கு இப்போதே’ நடக்க நடக்க கதை சொல்வது இந்த உடனடி உணர்வை வாசகனுக்கு அப்படியே கடத்துகிறது. வாடிவாசல் ஒரு மகத்தான கதையானதற்கு இதுவும் முக்கிய காரணம்.

‘காரி’க் காளையை அடக்கிய மாடு அணையும் பிச்சி மாதிரிதான் இதன் ஆசிரியரும். அவனுக்கு மாடுகள் பற்றிய ஆழ்ந்த ஞானம் அதனால் விளைந்த தன்னிச்சயம். இவருக்கு தான் என்ன எழுதப் போகிறோம் என்பதில் பூரண பிடிப்பு. தன்னிச்சயம். இதனாலேயே அற்புதமாக நிகழ்ந்துள்ளது கதையின் மொழி. மிகத் துரிதமாக நடக்கும் கதை. ஆனால் செல்லப்பாவுக்கு இக்கதையின் மேல் உள்ள முழுப் பிடியின் காரணமாக வெளிப்பார்வைக்குச் சாதாரணம் எனத் தோன்றும் மொழியில், கதையின் அவசரம் ஆசிரியனைத் தொற்றாமல், சிறு சிறு வேக வார்த்தைகளாலான செயற்கை உத்வேகங்கள் இன்றி, தவ்வாத மொழியில், தவ்வலைச் சொல்லும் சர்வ நிச்சயம் உள்ள எழுத்து. போதை தரும் கதைக் கரு, களம். அதில் கம்பீரமாக செல்லப்பா நடை போடுகிறார். பதற்றம் கொள்ளாத, அவசரம் இல்லாத மொழியில் எழுதப் பட்ட சாகசக் கதை.

அதே நிச்சயத்தால்தான் அந்த அவசரம் தொற்றாத, பழுப்பேறிய முரட்டுக் கதர்த் துணி பாஷையால் ஒவ்வொன்றாக பில்லை, கொரால், காரியென்று மூன்று காளைகளை அவரும் பிச்சியோடு சேர்ந்து அடக்குகிறார். பலர் அவசரத்தில் முதலிலேயே ‘முதல் கதாநாயகனான’ காரிக்குப் போயிருப்பார்கள்.

மொழி, நடை, உத்தி. – காளை அணைபவனின் புய பலத்தைப் போல – இவை வெளியில் தெரிபவை. பாத்திரங்களின் உளவியல், மனோதர்மம், இயல்பு, நடிப்பு, அவற்றை உள் நின்று நடத்தும் ஆற்றல் அந்தக் கதை கிளம்பும் ஊற்றின் கண் – இவை மாடு அணைபவனின் ஞானத்தைப் போல, கிழவன் சொல்கிறானே பிச்சியின் தகப்பன் அம்புலித்தேவனோடு போய்விட்ட அந்த சாத்திரத்தைப் போல – அனைத்தும் மிகச் சரியாக நிலவி இதன் அடர்த்தியையும், வலுவையும் அசாத்யமானவையாக்குகின்றன.

உச்சி நாழிகைக்கு முன்னாடியே எட்டி நடை போட்டு வரும் ஜனம், வண்டி போட்டு வருகிற ஜனம். முந்தின பொழுது மயங்கவும் வர ஆரம்பித்து இன்னும் மேலே மேலே சேர்ந்து கொண்டிருந்த காளைகளின் தொகை என்று அமர்க்களப்படும் செல்லாயி சாட்டு என்பதாகத் துவங்கும் கதை சில நாழிகைகளில் முடிகிறது. ஆனால் படிக்கையில் நமக்கு நேரம் தெரிவது இல்லை.

ஓரிரு வார்த்தைகள் பேசும் வெகு சில உள்ளூர்க் காரர்கள், முருகு, கிழவன், மருதன், ஜமீந்தார், பிச்சி என்கிற பாத்திரங்கள், இதைத் தவிர பேச்சில் வரும் அம்புலி, மொக்கையத் தேவர், செல்லாயி அம்மன். இவர்களால் மொத்தக் கதையும் நமக்குத் தெரிய வருகிறது.

‘வாடிவாசல்’ சொல்வது தமிழ்ச் சாதியின் மூலம் சொல்லும் மனித சாதியின், மிருக சாதியின் கதை. இது அட்டைக் கத்திகள் மற்றும் கத்தும் அட்டைகளின் வீரம் பற்றியது அல்ல. தமிழனின், இந்த மண்ணின், மனிதனின் அப்பழுக்கற்ற வீரம், தர்மத்தோடு இணைந்த வீரம் பற்றியது.

ஒரு எரிமலைத் தருணத்தில் கூட நிலைத்திருக்கும் இந்த மண்ணின் மதிப்புகள், தர்மங்கள், கண்ணியம், வீரத்தின் கூடவே இருக்கும் சாந்தம், மரியாதை, சமயோசிதம் என்பனவற்றைப் பேசும் கதை.

மூத்தோரை தாழ்வாக எண்ணாத, எள்ளாத, அதே சமயம் அப்பன் வெட்டிய குளம் என்பதால் உப்புத் தண்ணீரைக் குடிக்காத மனிதர்களைக் கண் முன் நிறுத்தும் கதை.

இம்மண்ணின் தர்ம சார்பை – அது அருகி விட்ட ஒன்றாக, துளிதான் இருக்கிறது என்ற போதிலும் – சொல்லும் கதை.

******

இது class or caste conflict பற்றிய ஒற்றைப் பரிமாணக் கதை என்று வகைப் படுத்தினால் அது இக்கதைக்குச் செய்யும் நியாயம் இல்லை. விளாதிமிர் நபொகோவ் இலக்கிய வரலாற்றில் வகைப்படுத்துதல் பற்றி, முத்திரை குத்துவது பற்றி இப்படிக் கூறுகிறார் :

“There are teachers and students with square minds who are by nature meant to undergo the fascination of categories. For them, “school” and “movements” are everything; by painting a group symbol on the brow of mediocrity, they condone their own incomprehension of true genius.”

பழி வாங்கல் அதிகாரம் அதிகார எதிர்ப்பு சாதி ஆதிக்கம் என்கிற வகையில் இந்நாவல் எழுதப் படவில்லை. அதற்கான விவரங்கள் கதை முழுவதும் காணக் கிடைக்கின்றன. செல்லப்பா இக்கதை குறித்து என்ன நினைத்தார் என்பது பற்றியோ, ஓரிரண்டு தவிர வேறு பல விமர்சனங்களையோ நான் படிக்கவில்லை. ஆனால் என் வாசிப்பில் இதன் பிரதான்யமான அம்சம் மனிதரிடையே நிலவிய குணநலன்கள். ஒரு ஆக்ரோஷமான களத்தில் அசையாது தெரியும் அரிய ஆதார குணங்களைப் பற்றிய கதை.

அம்புலித் தேவன் (பிச்சியின் தந்தை) காரியால் கொல்லப் படுகையில் அந்தக் காளையின் சொந்தக்காரர் ஜமீந்தார் இல்லை. மொக்கையத் தேவர். மேலும் பிச்சியின் நோக்கம் காரியைக் கொல்வது இல்லை. ஜமீந்தாரின் கௌரவத்தைக் குலைப்பதுமல்ல. அவன் தந்தை விட்டுச் சென்ற பணியை நிறைவு செய்வது.

இது மறச்சாதியின் தர்மம். தசரதன் வாக்கைக் காப்பாற்ற ராமன் கானகம் ஏகின மாதிரி, “எனக்கப்புறம் இந்த வாடியெல்லாம் ஒன் ராச்சியம்தான்” என்ற தந்தை அம்புலித்தேவன் மானம் காக்க பிச்சி வாடிவாசல் வருகிறான். இங்கு ஜமீந்தார் அவனுக்கு எந்த விதத்திலும் எதிரியல்லர். அவனைப் பொருத்தவரை வாடி, அவன், காளைகள் அவ்வளவுதான்.

இங்கு தான் காப்பாற்ற வேண்டியதாய்க் கருதும் கௌரவத்தின் சின்னங்களாக ஜமீந்தார் தன் காளைகளைக் கருதுகிறார். கடைசியில் காரியைக் கொல்வதும் அதனாலேயே. (wounded pride) இதே கௌரவ உணர்வை ஒரு சாதாரணக் குடிபடைக்காரனும், காணியாளனும் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் செல்லப்பா சொல்கிறார். இது அந்த அமைப்பில் இருப்பது. ஒருவனுடைய போலி கௌரவம் இல்லை. அந்தஸ்தாலோ அதிகாரத்தாலோ மட்டும் விளைவதும் இல்லை.

ஜமீந்தாரும் பிச்சியைத் தன் எதிரியாகக் கருதுவதில்லை. காரியைப் பிடிக்க பிச்சி ஆயத்தமானதும் கூட்டத்தில் “பய செத்தான்!”, “செல்லாயி வாடியிலே அவனுக்கு முடிவு போட்டிருக்கு!”, “குறுத்துப் பையன், அநியாயமா. . .!” “பட்டு உருமாவுக்கு ஆசைப்பட்டு உசிரை இந்தான்னு கொடுக்கிறானா பாவி !” “ரெண்டு பவுனு தங்கம் கண்ணுலே உறுத்துமில்லே!” என்று ஆளுக்கொரு அபிப்பிராயமாக கூட்டம் பரிமாறிக் கொண்டதும் ஜாமீந்தாரின் நிலைமை பற்றி ஆசிரியர் சொல்கிறர். “இத்தனை வருஷமும் இல்லாமல் தன் காளைமீது ஒருவன் விழுந்தான் என்றா பேச்சுப் பிறக்கப் போகிறதே என்று சற்று மயங்கியவருக்கு, திடீரென்று அந்த நினைப்பு மாறி தன் வாழ்நாளில் வாடிவாசலில் கண்டிராத ஒரு போராட்டத்தை எதிர்பார்க்கும் துடிப்பு ஏற்பட்டது. காரியைப்பற்றி அவருக்கு வெகு நிச்சயம்., அவனை வாழை நார் மாதிரி கிழித்து எறிந்துவிடும் அது. ஆனாலும். . . அது மேலே, என்ன ஆனாலும் விழுந்து விடுவது என்று துடியாத் துடிக்கும் அந்த வாலிபனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் படபடத்தது. பில்லையும், கொராலுமா காரி? நந்தி தேவனே யல்லவா அவதாரமாக வந்திருந்தது. அதைப் போய் “பாவிப்பய!” அவர் வாய்விட்டு கூடப் பக்கத்தில் இருந்தவர்கள் கேட்கும்படி சொல்லிவிட்டார்.” இவ்வாறு பிச்சி குறித்து கவலைதான் கொள்கிறார்.

அடுத்து மாடு திட்டி வாசல் விளிம்புக்கு வந்ததும் “பாத்தியா, காளை வரவும் கிழக்கத்தியான் பம்மிட்டான்.” “அவ்வளவுதான் பய !”, “சும்மா ஆர்ப்பாட்டக்காரனுங்க!” என்று தன்னைச் சுற்றி எழுந்த இந்த கேலிவார்த்தைகளைக் கேட்ட ஜமீந்தார் “ உளறாமே பாத்துக்கிட்டிருங்க!” என்று சுருக்கெனச் சொல்லி அடக்குகிறார். “அவன் ஒரு பிறவி! எந்த மாட்டு மேலே எப்படி விழணும்னு அவனுக்கு சுபாவத்திலேயே ஊறிக் கிடக்கும். பாருங்க.” என்றதும் கண்டன வாய்கள் மூடிக் கொள்கின்றன. கடைசியாக பிச்சியின் சளைத்த கைகள் மடிகையில், காரியின் கொம்புகள் அவன் நெஞ்சுக் குழிக்கு நேரே வந்து கொண்டிருக்கையில் “காளையை விரட்டு!” என்று ஜமீந்தார் மேடையிலிருந்து பதட்டமாகக் கத்துகிறார். பிறகுதான் மருதன் உள்ளே இறங்குகிறான்.

காளையை அடக்கிய பிச்சிக்குத் தர வேண்டிய அங்கீகாரத்தையும்,சன்மானத்தையும் தருகிறார். பின் காயத்திலிருந்து ரத்தம் கொட்ட கிடக்கும் பிச்சியை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்ல ஜமீன் வண்டிக்குக் கொண்டு போகச் சொல்கிறார். அதற்கெல்லாம் பின்பே காளையைக் கொல்கிறார். எங்கே இருக்கிறது ஆதிக்கம்?

பிச்சியிடமாவது ஜமீந்தார் மேல் துவேஷம் இருக்கிறதா என்றால் அவன் முழுக்க முழுக்க அவரிடம் மரியாதையாகவே இருக்கிறான். அதில் அவனுக்கு முரண்பாடோ, தயக்கமோ இல்லை. ஜமீந்தாரை மரியாதைக் குறைவாகப் பிச்சி நினைப்பது கூட இல்லை. அவரிடம் சங்கடம் இல்லாத மிகுந்த மரியாதையுடனேயே பழகுகிறான். பிச்சிக்கும் மருதனுக்கும் காரிதான் குறி. அவர்கள் நினைப்பில் ஜமீந்தார் இல்லை. ஜமீந்தாரிடம் பிச்சிக்கு இருப்பது மரபார்ந்த, பழக்கமாய்விட்ட, கேள்விகள் இல்லாத மரியாதை.

அந்த மரியாதையையே அவன் கூட்டத்தில் இருக்கும் ஏழைக் கிழவனிடமும் காட்டுகிறான். அது வீரமும், தர்மமும் நிறைந்த ஒரு மாடு பிடிக்கும் தொழிலில் பரம்பரை ஞானம் உள்ள தன்னிச்சயம் நிரம்பிய மறவனிடம் நிலவும் இயல்பான மரியாதை.

மேலும் இதில் ஜமீந்தார் என்ன ஜாதி என்று சொல்லப்படவில்லை. அவரும் பிச்சியின் ஜாதியாகவே இருக்கலாம். அப்போது எங்கே வந்தது ஆதிக்க சாதி?

ஆதிக்க சாதிக்கெதிரான சலனமெல்லாம் இதில் சொல்லப்படுவது இல்லை அது இதன் நோக்கமும் இல்லை.

பிச்சியின் தகப்பன் அம்புலித் தேவன். காரியின் சொந்தக்காரர் மொக்கையத் தேவர். இதிலே வரும் ‘ன்’ விகுதியும், ‘ர்’ விகுதியும் அம்புலியின் பேச்சில் வருபவை. தன்னைத் தேவன் என்றும் மொக்கயன் என்பவரை மொக்கயத் தேவர் என்றும் சொல்கிறார். ராஜகோபாலாச்சாரி, கிருபானந்த வாரி, சிவஞான கிராமணி என்றுதான் அவர்கள் ‘ஆர்’ விகுதி சேராமல் தன்னை அழைத்துக் கொள்வார்கள். அதுபோல்தான் இது.

இன்னொரு முக்கியமான குறுநாவலான நாஞ்சில் நாடனின் ‘மாமிசப் படைப்பு’ படித்தால் எப்படி ஆள்பவன், அடிமை இரண்டு பேரும் ஒரே ஜாதியில் இருக்கிறார்கள் என்பதும், ஆதிக்கம் என்பது என்ன என்பதும் தெரியும்.

******

பிச்சியின் ஆதார குணம் மறச்சாதியின் வீரம். தந்தை மீது மட்டிலா மரியாதை, அன்பு. ஜமீந்தாரோ, ஏழைக் கிழவனோ மூத்தோரிடம் தானாக இயல்பாய் வரும் மரியாதை. வாடிபுரம் காளையைப் பற்றி “பார்த்துடலாம்’ என்று ஒரே வார்த்தைதான் பிச்சி சொல்கிறான். “என்ன தம்பி விளையாட்டுக்குப் பேசறயா” என்று குரல் தடுமாற கலக்கத்துடன் கிழவன் கேட்கையில் “ஏன் தாத்தா சும்மா போகிற மாட்டு மேலே மனுசன் விளறதே ஒரு விளையாட்டுத்தானே, இல்லீங்களா? சொல்லுங்க. ஏன், பாக்கிறவங்களுக்குக் கூட அது விளையாட்டாத்தானே இருக்கு. அதுக்குன்னு பிறந்து போட்டு. . .” மேலும் கிழவன் அவன் பாதுகாப்பு கருதி அறிவுரை சொல்கையில் “ என் அப்பனாட்டமா நீங்க சொல்றபோது” என்கிறதுதான் பிச்சி. அதே போல் ஜமீந்தாரிடம் அவன் காட்டும் மரியாதை.

பிச்சி வீரன். கெட்டிக்காரன். கேலிப்பேச்சு அவனுக்கும் தெரியும். அவன் அல்ப விஷயங்களில் கவனம் சிதறுவதில்லை. அவனுடையதும் ஒரே பாணம்தான். தந்தையின் மானத்தையல்லவா உருமாலாக மீட்டெடுக்கிறான்.

மருதனின் உற்ற தோழமை. ராமனுக்கு இலக்குவன் மாதிரி மாப்பிள்ளைக்கு மைத்துனன். தங்கச்சியின் தாலி பற்றி கிழவன் சொல்கிறான். ஆனாலும் மருதனுக்கும் ஒரு தன்னிச்சயம் உண்டு. அது பிச்சியின் திறமை மீதான பூரண நம்பிக்கை. அவன் பணியின் அவசியம், புனிதம் குறித்த சந்தேகமின்மை.

கிழவனின் ஜல்லிக்கட்டு பற்றிய பூரண விஷய ஞானம். அம்புலியை அவன் நினைவு கூருவது, லாலா அமர்நாத், ஜி.ஆர். விஸ்வநாத், என்று கிரிக்கட் மைதானங்களில் நினைவு கூறுவார்களே பழைய ஆட்கள் அது மாதிரி. அது வயதானவர்கள் பாட்டையாக்களாக, தாத்தாக்களாக இருந்த காலம். அவர்கள் ‘பெரிசா’காத காலம். கிழவனுக்கு ஜமீந்தார் மீது உள்ள மதிப்பு காரியார்த்தமானது அல்ல. நோக்கம் உள்ளதும் இல்லை. ஆனால் மரபு அவனுக்குக் கற்றுக் கொடுத்த, மரபை அவன் காப்பாற்றிக் கொண்டிருக்கும், மரபின் ரூபமாக அவன் இருப்பது. ‘பிசாசுக்குப் பிசாசா பேரு பெத்த மாடு பிடிக்கிறவன்’ அம்புலியின் மகன் என்பதாலேயே அவனுக்குப் பிச்சியின் மேல் இன்னும் பாசம் பொங்குவது, முருகுவின் அடாத செயலைக் கண்டிப்பது, ஜமீந்தார் புகழ் பாடுவது எல்லாமே அவன் அறிவில், நேர்மையில், வாடிவாசலில் காளைகளுக்கும், மாடு அணைபவர்களுக்கும் இணையாக விஷய அறிவுள்ள பார்வையாளனுக்கு இருக்கும் பொறுப்பில், முக்கியத்துவத்தில் விளைந்தவை. கிழவன் ஜல்லிக் கட்டின் முழுச் சரித்திரத்தையும், சாத்திரத்தையும் உள் வாங்கியவன். வாடி வாசலை தன் தளராத ஈடுபாட்டால், அர்ப்பணிப்பால், கவனிப்பால் தனதாக சுவீகரித்துக் கொண்டவன். மருதன் அவனை மிகச் சரியாகப் ‘புதையல்’ என்கிறான்.

கிழவன் மரபின் பிரதிநிதி என்றால் முருகு எக்காலத்திலும் உள்ள ஜால்ராக் கூட்டத்தைச் சேர்ந்தவன். அக்கூட்டத்துக்கே உரிய கீழ்மை, பொறாமை, வஞ்சகம், அச்சம் நிறைந்த, வெட்டி ஜம்பப் பேச்சுக்காரன்.

இது பழம் தர்மங்களைப் பற்றிய அவற்றின் கம்பீரத்தை போற்றும் கதை. அதன் பரவசம் பற்றிய கதை. பிச்சி ஒருவேளை குடல் உருவப்பட்டு மாண்டிருந்தால்? அப்படி நிகழாது. அவன் அம்புலித்தேவன் மகன்தான். உண்மையில் அக்கணத்தில் அவன் அம்புலித்தேவனும்தான். மாடு அணையும் வீரர்கள் அனைவரும் ஒருவரேதான். ஆனால் பிச்சிக்கு சாதகமாக அவன் பக்கம் வயது இருக்கிறது. அம்புலித்தேவன் மட்டும் வயது என்கிற பளுவைச் சுமக்காது இளைஞனாக இருந்திருந்தால் அவனே காரியை வென்றிருப்பான். ஒருவிதத்தில் ஆதர்ச காலக் கதை. மானமாவது, வீரமாவது. அசட்டுத்தனம் என்பவர்களுக்கு இதில் ஒன்றும் இல்லை. எல்லோரும்தானே உலகில் இருக்கிறார்கள்.

******

019der

“மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!”

“என்ன இருந்தாலும் அது மிருகம்தானே!”

என்று ஜமீந்தாருக்குப் பின்னால் குரல்கள் ஆற்றுப்பக்கம் பூராவும் கேட்டுக் கொண்டிருந்தன என்று கதை முடிகிறது.

“என்ன இருந்தாலும் அது மிருகம்தானே” என்பது பல்வேறு த்வனிகளில் புரிந்து கொள்ளப் படலாம். அதன் கொலையை நியாப் படுத்தும், ஒரு பெரிய விஷயமாகப் பொருட்படுத்தாத குரலிலிருந்து. ஆனால் ஆதார குணங்கள் மட்டுமே நிற்கக் கூடிய அந்த நிகழ் களச் சூழலில் அதன் பொருள் இப்படித்தான் தெரிகிறது.

காளை பாவம். அது என்ன பிழை செய்தது. இந்த நாளுக்காகவே ஊட்டி ஊட்டி வளர்க்கப் பட்டது. அதற்கு விளையாட்டு தெரியாது. தான் கௌரவச் சின்னம் என்பது தெரியாது. விளையாட்டின் சட்டங்களோ, சதிகளோ தெரியாது. அதனிடம் பிச்சியைப் பற்றி எடுத்துச் சொல்ல கிழக்காளை இல்லை. உதவ மைத்துனன் இல்லை. எதற்கென்றே தெரியாமல் வாடிவாசல் வந்து, அங்கு மனித அளவீட்டின்படி அடக்கப்பட்டு, பின்னரும் அதுவெல்லாம் புரியாமல், மிகுந்த எரிச்சல் ஊட்டப்பட்டு பின் கொல்லவும் படுகிறது. செல்லப்பா ஒவ்வொரு முறையும் காளையையும், காளை அணைபவனையும் பற்றிய ஜல்லிக்கட்டுக் கதை என்பது போல் காளையையே முதலில் சொல்கிறார். காளைதான் முதல் கதாநாயகன்.

உபயோகத்துக்கு இல்லாத வாடிவாசல் காளை எதற்குப் பிரயோசனம். அது உயிரோடு எதற்காக இருக்க வேண்டும். (They shoot horses, don’t they? என்றொரு அற்புதமான படம் 1969ல் வந்திருக்கிறது. ஹொரேஸ் மெக்காயின் 1935ம் வருட நாவல். சிட்னி பொல்லாக்கின் டைரெக்ஷனில், ஜேன் ஃபோண்டாவும், மைக்கேல் சராஸின் நடித்து)

(இதுவும் வாடிவாசல் சம்பந்தப் பட்டதுதான். அவசியம் பாருங்கள் https://www.facebook.com/photo.php?fbid=10201029238999405&set=a.1213192296195.2033729.1420432403&type=1&theater)

******

வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்ட விளையாட்டுகள். இரண்டு சேவல்களை மோதவிடுவது மனிதத் தந்திரம். அதில் மனிதனுக்கு துளி அபாயம் இல்லை. யுத்தம் முழுக்க முழுக்க மனிதர்களால் தங்களில் சிலரை பகடைக் காயாக்கி நிகழ்த்தப்படும் பிரும்மாண்ட வன்முறை. சல்லியில் இரண்டுக்கும் இடையில். மிருகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில் இதில் ஈடுபடும் மனிதனுக்கும் காயமுற, பலியாக வாய்ப்பு இருக்கிறது. இங்கு பங்கேற்பவர்கள் தன்னிச்சையாகத்தான் வருகிறார்கள்; அவர்கள் யாராலும் அனுப்பப்படுவதில்லை.

இதில் பெண் பாத்திரங்களே இல்லை. செல்லாயி ஆத்தாவைத் தவிர. பெண்களுக்கு இந்த குருதி தோய்ந்த புழுதியில் என்ன வேலை. அவர்கள் ரத்தம் சிந்துவது மனித குலத்தை ரட்சித்து நீடிப்பதற்காக மட்டுமே. ஆத்தாவின் அனந்தகோடி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்று அவள் மட்டும் இருக்கிறாள் போலும். அதனால்தான் அவளை முன்னிறுத்தியே இதை செய்கிறார்கள். கிழவன் “ செல்லாயி ஆத்தா காப்பா! ஆனா ஒண்ணு என் மக்களா ! போறபோது அவளைக் கும்பிட்டுப் போகாமெ போயிராதிங்க.” என்று சொன்னாலும், பிச்சியோ, மருதனோ ஆத்தாவை வணங்கி இதை ஆரம்பிப்பதாக கதையில் சொல்லப்படுவதில்லை.

******

காலச்சுவடு பதிப்பில் ஆதிமூலம் அவர்களின் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இக்கோட்டோவிங்களோடு விளிம்புகளற்ற வண்ணக் கலவைகளால் ஆன ஓவியங்கள் உக்கிரமான களத்தைக் காட்சிப்படுத்த இன்னும் உதவியாய் இருக்கும்.

******

கடல் நீர் மேலே படாமல் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ (Old man and the Sea) படிக்க முடியாது. புழுதியும், வெய்யில் பட்டுப் பட்டுக் காச்சுப் போன, மூடி இராத கறுப்பு முதுகுகளில் துளிர்த்து வெடிக்கும் வியர்வையும், உஷ்ண சுவாசமும், மனிதன், மிருகம் இருவரது குருதியும் உங்கள் மீது படாமல் நீங்கள் வாடிவாசாலைப் படிக்க முடியாது.

******

செல்லப்பா ‘வாடிவாசலை’ 1959ல் வெளியிட்டிருக்கிறார். அவர் இக்கதையைப் பற்றி சொன்னது : ஜெல்லிக் கட்டு ஒரு வீர நாடகம். இக்கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. நுட்பமாகவும் கூட. படிக்கும் போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.

வாடிவாசல் என்கிற தலைப்பின் கீழ் ‘காளையையும், காளை அணைபவனையும் பற்றிய ஜல்லிக்கட்டுக் கதை’ என்று குறிப்பிடப்படுகிறது.

“ஒரு தவ்வு, இரண்டு தவ்வு; மூன்றாவது தவ்வுக்கும் அவன் நின்று விட்டான்; மூன்று தடவையும் காளை அவனை உருட்டி எறிந்து கிழித்திருக்க வேண்டும்.” முதல் பதிப்பின் முன்னுரையில் சி.சு.செல்லப்பா அவர்களின் முதல் வார்த்தைகள் இவை. பிச்சி, காரிக்காளையை அடக்கிவிடுவதற்கான முயற்சியை, ‘வாடிவாசல்’ கதையின் ஒரு முக்கியக் காட்சியை, சுருக்கமாகச் சொல்கிறார். தவ்வுவது காரிக்காளை. அதன் மேல் விழுந்து அணவது பிச்சி. எழுதுகையில் அவரும் அதையே செய்திருக்கிறார். நடை, மொழி, உத்தி – ஒரு தவ்வு; களம், பாத்திரங்கள், உரையாடல்கள், சம்பவங்கள் – ஒரு தவ்வு; செறிவு, செம்மை, மனோதத்துவம், மனோதர்மம். கட்டுக்கோப்பு, மொத்தக் கதையின் தாக்கம் பற்றிய தெளிவு – ஒரு தவ்வு என்று அனைத்துத் தவ்விலும், துரிதமும், உக்கிரமும், துல்லியமும் நிறைந்த, அசாத்யமான தருணங்களைக் கொண்ட திமிறும், உருட்டி எறிந்து கிழித்திருக்கக் கூடிய இக்கதையைச் செல்லப்பா பூரணமாக அணைந்து ஆண்டு விடுகிறார்.

மிகச் சிறிய முன்னுரையின் இறுதியில் “இந்தப் பக்கங்களை மூடி வைத்து விட்ட பிறகும் அந்தக் காளையும் மனிதனும் வாடிவாசலும் உங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கதை மூலம் ஒரு புது உலகத்தையே அறிமுகப்படுத்துவதாக நான் நினைக்கிறேன்” என்று எழுதுகிறார். நீங்கள் படித்திருந்தால் ஒப்புக்கொள்வீர்கள். படிக்கவில்லையென்றால் . . . படித்துத்தான் பாருங்களேன். உண்மையென்று உணர்வீர்கள்.