நம்பிக்கை

nambikkai1

அருணாசலம் பவானியை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருடன் சேர்ந்து சங்கரியும் அல்லவா அதற்க்கு உடந்தையாக இருந்தாள். இத்தனைக்கும் அருணாசலம் சங்கரி தம்பதியினரின் ஒரே மகள் பவானி. அப்படி என்ன பக்தியும் பாவமும் வேண்டி இருக்கிறது இந்த பைத்தியங்களுக்கு? என்று சொல்லாத ஆளில்லை. அவர் தம்பி கதிரேசனும் கூட தான்.இல்லாவிட்டால் பதினெட்டு வயது ஒரே பெண்ணை, பவானியை யாரவது இந்த இந்த பகவான் ஆசிரமத்திற்கு தாரை வார்த்து கொடுப்பார்களா?

வாழ்கையின் விளக்க முடியாத பல மர்மங்களில் ஒன்று தான் அருணாசலம் பகவானை தேடி சென்றதும்.சங்கரியின் ஒரே தம்பியான கதிரேசன் தான் முதன் முதலில் பகவானை இவருக்கு அறிமுகபடுத்தியது. கண்ணுக்கு தெரியாத விதியின் கரங்கள் இவர் அலுவலக வாழ்கையை கலைத்து போட அதன் விளைவான மன உளைச்சல்களால் அருணாசலம் அவதிப்பட்டு கொண்டிருந்த காலம்.

“யார் யாருக்கோ நல்லது நடக்கிறதே அக்கா. என் நெருங்கிய சிநேகிதரின் உறவினர் ஒருவர. ஏழு தலைமுறைக்கு சொத்து. ஆனால் பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லை. ஒன்று இல்லை இரண்டு இல்லை, பன்னிரண்டு வருடம். ஒரு மண்டலம் விரதமிருந்து பகவானை பூஜை செய்தபின் அடுத்த மாதமே கை மேல் பலன். இரண்டு கோடி ருபாய் கடன் உள்ள ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தவர், லாட்டரி அடித்து அதில் இருந்து மீண்ட அதிசயங்களை கேள்வி பட்டிருகிறாயா? ஒரு நாள் ஆசிரமத்திற்கு போய் தான் பாரேன். ”

இந்த கதிரேசனே பின் ஒரு நாளில் அந்த பகவானையும் அந்த கூட்டத்தையும் விட்டோழிக்கும்படி மன்றாடியது வாழ்கையின் விசித்திரங்களில் மற்றொரு அத்தியாயம்.. இந்த பகவான் அவரது ஆரம்ப காலங்களில் குருஜி என்று மட்டுமே அழைக்கப்பட்டார. மின்சார துறை ஊழியராக இருந்தவர். தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் ஒரு குடிலில் வசித்து வந்த யோகியிடம் முறையாக யோகம் பயின்றதாக சொல்வார்கள். சிறிது நாட்களில் எல்லாம் அவர் கால வெளிகளை கடந்து சஞ்சரிக்க தொடங்கியதாக சொன்னார்கள்.கூடு விட்டு கூடு பாய்தல்,எதிர்காலத்தை அறிந்து சொல்வது என்று அவரது சித்திகளின் எண்ணிக்கை கூட தொடங்கியது.

ஒட்டிய வயிறும் நீண்ட தாடியும் வழுக்கை தலையுமாக அவரது அந்த நாட்களின் கோலம் இன்றும் ஆசிரமத்தில் காண கிடைக்கிறது. பின் மாடம்பாகத்தில் சிறிதாக ஒரு குடில் அமைத்து பக்தி பிரசங்கங்கள் செய்ய தொடங்கினார். சொற்ப எண்ணிக்கையில் இருந்த பக்தர் கூட்டம், போலந்தில் இருந்து ஒரு அணு விஞ்ஞானி வர தொடங்கியதும் நூற்றுக்கணக்காக அதிகரிக்க தொடங்கியது. போலந்தின் அந்த அணு விஞ்ஞானியே தலைமை சீடர் பொறுப்பை ஏற்று கொண்டார். குருஜி பொது மக்களுக்கு அளிக்கும் தரிசனங்கள் நின்று போய் சீடர்களே ஆசிரமத்தை நிர்வகிக்க தொடங்கினர். மெல்ல மெல்ல அவர் தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்து கொண்டு பகவான் என்று நாமகரணம் சூட்டி கொண்டார்.

*******

”அப்பா, இந்த வழிபாட்டில் முக்கியமான விஷயம் நாம பகவான் உடன் எப்படி தொடர்பு வைத்து கொள்கிறோம் என்பது தான். நாம் அவரை நண்பராக பார்க்கலாம், தாயாக பார்க்கலாம், தந்தையாக பார்க்கலாம். எந்த உறவு நமக்கும் அவருக்குமான ஆழமான தொடர்பை சாத்தியபடுத்துகிறதோ அந்த உறவை நாம் தேர்ந்தெடுப்பது தான் முதல் படி. பின் நாம் அவருடன் பேச வேண்டும். பேசி பேசி நம்முள் இருக்கும் காம குரோத மோகம் என்னும் அழுக்குகளை நீக்கும் படி பிரார்த்தனை செய்ய வேண்டும். பாவங்களை களையும் படி மன்றாட வேண்டும். அது நடந்த பின்னரே நமக்கும் அவருக்குமான பந்தம் பலப்படும். அந்த பந்தம் பலப்பட்டு பலப்பட்டு ஒரு நாள் நாமும் பகவானும் ஒன்றாகவே ஆகி விடுவோமாம். அதன் பின் நான் பவானி இல்லை. நான் பகவான். ”

அருணாசலம் செல்ல தொடங்கி சில மாதங்கள் கழித்தே பவானி இந்த ஆசிரமத்தில் அறிமுகம் பெற்றாள். ஆனால் அவளுடைய இளம் மனது அதை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்று கொண்டது. மிக எளிதாக அவள் அந்த நம்பிக்கையில் தன்னை கரைத்து கொண்டாள். பவானி..அருணாசலம் சங்கரியின் முக்தி அல்லவா அவள். திருமணம் முடிந்து ஆறு வருடம் கழித்து பிறந்தாள். அருணாசலத்தின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும். சில மாதங்களில் குழந்தை பூரித்து பொய் சிரித்து பார்ப்பவர் அனைவரையும் வசீகரித்தது. துடித்து கொண்டே இருந்த அதன் கைகளாலும் கால்களாலும் காற்றுடன் ஒரு யுத்தம் நடத்தி கொண்டிருந்திருந்தது. சதா சிரிக்கும் முகத்துடன்.

பவானி வளர வளர அவள் பெற்றோர்களின் நாட்களை ஆனந்தத்தால் நிரப்பினாள். கண் காணா ஆழத்திலிருந்து அர்த்தத்தை எடுத்து மொழியின் கொக்கியில் அவள் மழலையால் இணைக்கும் விந்தையை பார்த்து பூரித்தார்கள். நடந்தும் தவழ்ந்தும் விழுந்தும் உருண்டும் தூரத்தை அறிந்தாள்.கண்டும் கேட்டும் சுவைத்தும் முகர்ந்தும் உலகத்தை அளந்தாள். அவள் மன புத்தகத்தின் பக்கங்கள் இடைவிடாது அறிதல்களால் நிரம்பி கொண்டிருந்தன.

ஆத்தாளை, அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை

“அண்டம் எல்லாம் பூத்தாளை என்பது எத்தனை அழகான வரி இல்லையா சங்கரி” என்று தன் மனைவியை விளித்து கூறுவார். “பூவாகவும் காயாகவும் புல்லாகவும் நீயாகவும் நானாகவும் எல்லாம் பூத்து இருக்கிறாளாம் நம் அபிராமி“

***********

“அப்பா இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

அருணாசலம் அமைதியாக இருந்தார்.

அப்போது உங்களுக்கு பகவான் மேல் நம்பிக்கை இல்லை அப்படி தானே.

“அப்படி எதுவும் நான் சொல்லவில்லை.”

“பிறகு உங்கள் சம்மதத்தை தருவதற்கு என்ன? எனக்கு மனதில் உள்ள ஒவ்வொரு சொல்லாகவும் அந்த சொல்லில் எல்லாம் நிரம்பிய ஒலியாகவும் இருப்பதும் பகவான் தான்.கண் விழித்து இருக்கும் போதும் தூங்கும் போதும் எல்லா நேரங்களிலும் என் மனதின் அறுபடாத ஒரு நாமமாக இருப்பது பகவான் தான்.அவருடன் ஒன்றாவது தவிர இந்த பிறப்பின் நோக்கம் என்று எனக்கு எதுவும் இல்லை. திருமணம் குழந்தை போன்றவை எல்லாம் என்னால் யோசித்தும் பார்க்க முடியவில்லை. என்னை விடுங்கள் அப்பா..எனக்கு ஆசீர்வாதம் தந்து அனுப்புங்கள்.”

*************

பவானி வளரும் நாட்கள் எல்லாம் அருணாசலம் சங்கரி மனதில் தான் எத்தனை எத்தனை இனிமையான நினைவுகள். முதல் நாள் பள்ளியில் சேர்த்துவிட்டு வரும் போது பவானி முகம் சுருக்கி மோவாய் துடிக்க அழுகையில் வெடித்தது, சந்தன நிற பாவடையில் அரக்கு பார்டர் வைத்து தலை நிறைய மல்லியுடன் ஆறு வயதில் கோவிலுக்கு அழைத்து சென்றது, மயில் வாஹனா மன மோகனா என்ற கீர்த்தனையை கற்று கொண்டு பள்ளியில் பாடியது, சிரிப்பும் கும்மாளமுமாய் நண்பிகளுடன் வீட்டை சுற்றி சுற்றி வந்தது. அவள் மூன்று வயது இருக்கும் போது ஒரு முறை வீடு வாசலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி எங்கோ சென்றுவிட அருணாசலமும் சங்கரியும் செருப்பு இல்லாமல் தெரு தெருவாய் ஓடி தம்பதியினர் அழுத அழுகை என்ன. இரவு முழுதும் திரும்ப வராத பெண்ணை நினைத்து கதறி வாய் உலர்ந்து நெடுஞ்சான் கிடையாக படுத்து கிடக்க, அடுத்த நாள் தெய்வ சங்கல்பத்தில் அவள் திரும்பி கிடைத்த போது கிடைத்த சந்தோசம்.

அருணாச்சலத்தின் முன்னால் விரிந்த தலையும் கண்ணீர் உலர்ந்து ஈரமான கண்களுடன் பவானி மன்றாடி கொண்டிருக்கிறாள். அருணாச்சலத்திற்கும் அவள் சொல்வதில் பிழை இருப்பதாக தெரியவில்லை. “இல்லை, சிறிதாக ஒரு பயம் எட்டி பார்க்கிறதா என்ன? அப்போது தான் பகவானை சந்தேகபடுகிறேனா? என் நம்பிக்கையின் வீரியம் இவ்வளவு தானா? இல்லை நான் இதில் மகிழ்ச்சியே அடைகிறேன். கலியுகத்தில் இருந்து சுவர்ண யுகத்திற்கு உலகை எடுத்து செல்லும் ஒரு வாகனமாக என் பெண் இருக்கபோகிறாள். இந்த பேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்.” என்றவாறே அவர் சங்கரியை பார்க்கிறார். சங்கரி தன கணவனை மீறிய உலகை அறியாதவர். அவரால் அதை மறுக்கவா முடியும். “எனக்கு ரொம்ப சந்தோசம் பவானி” என்று கூறினார்.

*************

பவானி பிறந்து வளர்கிற நாட்களில் எல்லாம் அருணாசலம் வேலையில், பணத்தில், பொருளாதாரத்தில் எந்த குறையும் இல்லை. புல்டோசர்கள், ரோடு ரோலர்கள் போன்றவை தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் கணக்கராக சேர்ந்து கணக்கு அதிகாரியாக உயர்வு பெற்றிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ் வந்து, சீட்டு பிசினஸ், புடவை வியாபாரம், வம்பளப்புகள் எல்லாவாற்றிலிருந்தும் தன்னை ஒதுக்கி கொண்டு நேரம் பார்க்காமல் வேலை செய்ததால் கிடுகிடுவென்று பதவி உயர்வுகள் தேடி வந்தன. இருபது வருடங்களில் தலைமை கணக்கு அதிகாரியாக ஆகி இருந்தார்.

இவை எல்லாம் இப்படியே தொடர்ந்திருக்கலாம். விதி ஒரு கல்கத்தா மேனேஜரின் வடிவில் வந்து விளையாடியது. அந்த அலுவலகத்தில் இருந்த மூத்த அதிகாரிகள் பலர் பதவி இறக்கம் செய்யப்பட்டு குறைவான அனுபவமும் ஐஐடி ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் படித்தவர்களுமான இளைஞர்கள் கீழ் வேலை செய்யும் படி ஆயிற்று. அதில் அருணாச்சலமும் ஒருவர். சில மாதங்களிலேயே இருபது வருடங்கள் வேலை செய்த அந்த அலுவலகம் அருணாச்சலத்திற்கு அன்னியமாகி போனது. இவரது வேலையின் அளவு குறைக்கப்பட்டு அவரது முக்கியத்துவம் போனது.

ஆரம்பத்தில் இதை சாதரணமாக எதிர்கொண்ட அருணாச்சலத்திற்கு நாட்பட நாட்பட தன் இருபது வருட அலுவலக வாழ்கை தோல்வியில் முடிந்ததை ஏற்று கொள்ள முடியவில்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்ட ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு மூச்சு திணறுவதாக உணர்ந்தார். கண்ணுக்கு தெரியாத கரங்களால் அவர் அந்த அலுவலகத்தில் இருந்து வெளி தள்ளப்பட்டு கொண்டிருந்தார..எந்த நோக்கத்திற்காக வேலைக்கு செல்கிறோம் என்றே தெரியாமல் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அளிக்கபட்டிருந்த தனி அறையில் கதவை வெறித்தவாறே நாள் முழுதும் அமர்ந்திருப்பார்.காலை பத்து மணி பரபரப்பில் அலுவலகம் சுழன்றோடி கொண்டிருக்கும் வேளையில் வெளியில் தெரியும் கார்களை எண்ணி கொண்டும் ரோடு பேருக்கும் துப்புரவு தொழிலார்களையும் பார்த்து கொண்டும், எப்போதாவது கரையும் காக்கையை கேட்டு கொண்டும் அமர்ந்திருப்பார். அலுவலகத்தில் தொடங்கிய இந்த நடைமுறை வீட்டிலும் தொடர்ந்தது.ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்த பின் படுக்கை அறையில் உள்ள சாய்வு நாற்காலியில் விளக்குகள் எல்லாம் அணைத்துவிட்டு சுவரையே பார்த்தபடி அமர்ந்திருப்பார். எட்டு மணிக்கு சாப்பாடு. பின் படுக்கையில் படுத்து கொண்டே இது தொடர்ந்தது. பல நாள் இரவுகளில் அவர் படுக்கையில் உட்கார்ந்த வாறே தனியாக பேசி கொண்டிருந்ததை கண்டதும் சங்கரிக்கு பயம் வந்தது.

இந்த நாட்களில் தான் கதிரேசன் பகவானை அறிமுகபடுத்தி ஆசிரமத்திற்கு போக சொன்னார்.

அருணாசலம் ஆசிரமத்திற்கு சங்கரியுடன் செல்லவில்லை. தனியாக தான் சென்றார். அன்று சென்னையில் வரலாறு காணாத மழை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி பேய் மழை கொட்டி கொண்டிருந்தது. நடக்கும் வழியெல்லாம் தவளைகளின் சத்தம். ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருந்ததால் எந்த வாகனங்களின் சத்தம் கூட இல்லை. தூரத்தில் தெரிந்த ஆசிரமத்தை சுற்றிலும் வேற்று நிலங்கள் தண்ணீரால் நிரம்பி மழையை பெற்று கொண்டிருந்தன. அத்தனை இருளிலும் அமைதியிலும் அவர் பகவான் ஆசிரமத்தில் உள்ள ஒரு குடிலில் பஜனை பாடல்களின் சூழலில் தன் உடைகளின் ஈரத்தை உணர்ந்தவராய் சுவரை ஒட்டி கடைசியில் அமர்ந்தார்.

எதிரே முழு இருட்டில் ஒரே ஒரு குத்து விளக்கின் அருகில் பகவானின் ஆறடி படம். வெள்ளை ஆடை அணிந்து கை நீட்டி அழைத்து கொண்டிருந்தார். எங்கிருந்து பார்க்கும் போதும் அவரையே பார்க்கும் கண்கள். பூக்களும் நறுமண பொருட்களும் சேர்ந்த ஒரு சுகந்த வாசனை. சொர்க்கம். மேளம் ஒலிக்க ஒலிக்க கம்பீரமான ஒரு குரல் அங்கு இருப்பவர்கள் அனைவரின் இதயத்திலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தி கொண்டிருந்தது. மெதுவான தாளகதியில் கொஞ்சம் கொஞ்சம் என்று மேலேறி ஜல். பின் கீழிருந்து மீண்டும் கொஞ்சம் கொஞ்சம் என்று மேலேறி…அருணாசலம் அங்கிருந்தவர்கள் அனைவருடன் சேர்ந்தும் ஆட தொடங்கினார். ஒரே ஒத்திசைவில் அனைவருடனும் சேர்ந்து, அசைந்து, நெகிழ்ச்சியான ஒரு கணத்தில் உடைந்து ஓவென்று அழ தொடங்கினார். பிறந்தது முதல் சேர்த்து வைத்த அனைத்தையும் வெளி தள்ளில் வேகத்தோடு ஒரு அழுகை. மழை பெய்து முடித்த வானம் போல மனம் பளிச்சென்று இருந்தது

.வாரத்தில் ஒரு நாள் என்று அங்கு செல்ல தொடங்கிய அருணாசலம் மெல்ல மெல்ல அதை இரண்டு மூன்று என்று அதிகபடுத்தி, ஒரு கட்டத்தில் வாரத்தில் எல்லா நாட்களுமே அங்கு செல்லலானார். ஆறு மணிக்கே அங்கு சென்று பூஜைக்கான ஆயுத்தங்களை செய்வது, பூ அலங்காரம், மைக் செட் பக்தர்களை வரவேற்பது என்று ஆசிரமத்தின் இன்றியமையாத அங்கம் ஆனார். வீட்டிலும் பகவான் பேச்சுக்கள் அதிகமாக அருணாசலம் மெல்ல மெல்ல தன் சோர்விலிருந்து வெளி வர தொடங்கினார்.. அவரை தொடர்ந்து சங்கரியும் பவானியும் கூட ஆசிரமத்திற்கு வருகை தர தொடங்கினர்.

சங்கரிக்கு முதலில் அந்த பூஜை முறைகளும் பாட்டுக்களும் ஆட்டமும் பிடிக்க தான் இல்லை.”சங்கரி உனக்கும் பகவானுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவருக்கு தான் கடவுள் என்பது தெரியும், உனக்கு தெரியாது என்பதே. காம குரோத மோகங்கள் என்பவை கண்ணாடியின் மேல் உள்ள தூசாக நம் சுயத்தின் மேல் படிந்திருக்கின்றன. இவற்றை நீக்குவதன் மூலமே நாம் நம்முள் உள்ள பகவானை தரிசிக்கலாம்.”

சங்கரிக்கு இதெல்லாம் புரியவேயில்லை. பக்தி என்ற பெயரில் பாவங்களை நினைத்து அழுவதும் ஆத்மா சுத்திகரிப்புக்காக வேண்டி கொள்வதும் அவளுக்கு அந்நியமாக இருந்தன. இருந்தாலும் அருணாசலம் மகிழ்ச்சியாய் இருப்பதை காண்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. இதை தொடர்ந்தே பவானியும் தன பெற்றோருடன் ஆசிரமம் செல்ல துவங்கினாள். தன் இயல்பான அறிவுத்திறனாலும் சூட்சுமத்தாலும் பவானிக்கு ஆன்மீக வகுப்புகளின் பாடங்கள் எளிதாக புரிந்தது. ஒரு தயக்கத்தோடு வரும் புதிய பக்தர்களை இவளால் எளிதாக பகவானின் தத்துவத்தை நோக்கி இழுக்க முடிந்தது. பல்வேறு மத நூல்களில் இருந்தும் சம காலத்தைய நிகழ்வுகளில் இருந்தும் உதாரணங்களை அள்ளி அவள் பக்தர்கள் முன்னால் வைக்கும் லாவகத்தில் எளிதாக அனைவரும் கவரப்பட்டனர்.பகவானை தன் கண்ணனாக பாவித்து கொண்டு சதா அவருடனான உரையாடலில் இருந்தாள்.

****

“இப்பொழுது நான் சொல்வதை நீங்கள் கவனத்துடன் கேட்க வேண்டும்” என்று தலைமை சீடரான போலந்து விஞானி ஆசிரமத்தின் ஒரு தனித்த அறை ஒன்றில் நாற்காலி மேல் அமர்ந்து , அருணாச்சலமும் சங்கரியும் கீழே அமர்ந்திருக்க முன்னால் குனிந்து சொல்ல தொடங்கினார்.”உங்கள் தாத்தா வாழ்ந்த வாழ்கையை எண்ணி பாருங்கள். படிப்பது,ஏதோ ஒரு வேலை செய்வது, குடும்பம் வளர்ப்பது, பிள்ளைகளுக்கு சேர்ப்பது, பின் கடைசி காலத்தில் இருமி சாவது..இதையே தான் உங்கள் தந்தையும் செய்த்திருப்பர்.சிறிய மாற்றங்களுடன் நீங்களும் செய்திருப்பீர்கள். நீங்கள் போன பின்பு உங்களை இங்கு யார் நினைவில் வைத்திருக்க போகிறார்கள். உங்கள் வாழ்க்கையால் நீங்கள் அடைந்ததும் பிறருக்கு கொடுத்ததும் என்ன?” பூஜ்யம் என்று சொல்லும் வண்ணம் அவர் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து முன்னால் கான்ம்பித்தார். “ஆனால் உங்கள் பெண் இந்த சமுதாயத்திற்கு ஒரு பெரிய சேவையை ஆற்ற வந்துள்ளார். பலர் உங்கள் பெண்ணை தங்கள் வாழ்நாள் தோறும் நன்றி பெருக்கோடு நினைவு கூற போகின்றனர். பெரும்பாலானோர் வாழும் சராசரி வாழ்க்கையில் இருந்து உங்கள் பெண் மேலழ போகிறாள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் தேவை.”

****

வரும் வழியெல்லாம் அருணாச்சலமும் சங்கரியும் எதுவும் பேசி கொள்ளவில்லை. பகவானின் பிரதம சீடர்கள் ஐவரை தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.அனைவருமே பதினெட்டு முதல் இருபத்தி இரண்டு வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள். அவர்களுக்கு சந்நியாசம் அளிக்கப்பட்டு பகவானின் செய்தியை உலகம் எல்லாம் கொண்டு செல்ல போகிறவர்கள். இல்லற வாழ்கையை மேற்கொள்ளாமல் வாழ்கை முழுதும் துறவறம் பூண்டு வாழ போகிறவர்கள். பவானி அவள் ஒப்புதலை தெரிவித்த பின்னரே தங்கள் சம்மதத்தை வாங்க முயற்சித்துள்ளாள். இருந்தால் என்ன, ஒரு புனிதமான பணிக்கு தானே தன்னை ஒப்படைத்திருக்கிறாள். எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு வாரம் கழித்து பகவானின் ஜென்ம தின கொண்டாட்டங்களோடு இந்த இளம் துறவிகளை அறிமுகபடுத்தும் விழாவும் நடந்தேறியது. ஒரு சிம்மாசனம் போன்ற இருக்கையில் பகவான் கண்களை மூடி மோன நிலையில் அமர்ந்திருக்க ஐந்து துறவிகளும் அவர் பின்னால் இருந்து பிரசன்னமாயினர். பவானியோடு சேர்த்து இரண்டு பெண்கள்.அனைவரும் ஒரே மாதிரியான வெள்ளை பைஜாமா குர்த்தா அணிந்து ஒரு பெரிய சால்வை அணிந்திருந்தனர். இரு வாலிபர்கள் கண்ணாடி அணிந்திருந்தனர்.மீசை மழித்து வழவழப்பான முகத்துடன் இருந்ததால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. பவானியை கண்டதும் அவள் வெள்ளை உடையை கவனித்தார். பின் தலையின் மேல் முக்காடு இருப்பதை கவனித்தார். முடி முழுதும் மழிக்கப்பட்டு மொட்டையாக இருந்த தலையை கண்டதும் அவருக்கு என்னவோ செய்தது…காண வந்திருந்த அனைத்து பக்தர்களும் ஒரு சேர எழுந்து நின்று பகவான் பகவான் என்றபடி கோஷமிட்டு கரம் கூப்பினர்.பவானியை அங்கு அப்படி கண்டதும் அருணாச்சலத்திற்கு சொற்கள் எதுவும் எழவில்லை.

அண்டம் எல்லாம் பூத்தாளை என்ற சொற்களாய் மாறி மனம் அரற்றி கொண்டே இருந்தது.

சேதனா என்று நாமகரணம் சூட்டி, பவானி பக்தி-பரிணாம வகுப்புகள் எடுக்க தொடங்கினாள். நாலு நாட்கள் நீளும் இந்த வகுப்பில் பகவானின் ஆப்த வாக்கியங்களுக்கு அவள் சொல்லும் விளக்கவுரைகள் அதிகம் பேசப்பட்டன. அவர் கண்களை பார்த்து பக்தி கசிய இந்த அபலையை ஆட்கொள்ள மாட்டாயா என்ற ரீதியில் அவள் பாடும் பஜனை பாடல்களும் கேட்பவர்களை நெஞ்சுருக செய்தன.

அருணாசலம் சங்கரி இன்னமும் அதிகமாக தங்களை பகவத் சேவைக்கு ஒப்பு கொடுத்தனர்.புதிய பக்தர்கள் பலர் ஆசிரமத்தில் குவிய துவங்கினர். ஆசிரமம் விரிவடைந்து சுற்றி உள்ள நிலங்கள் எல்லாம் ஆசிரமத்தின் பகுதியாய் ஆகின. பக்தர்களை வெவ்வேறு வகைகளாக பிரித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பயிற்சி முறைகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பயிற்சிக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தை மக்கள் கொட்டி கொடுத்தனர். சின்னஞ்சிறு குடிலில் ஒரு எளிய பக்தி இயக்கமாக தோன்றியது மெல்ல கிளைகள் பரப்பி பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் கூட பரவ தொடங்கியது.

“என்ன இருந்தாலும் ஒரு சின்ன பொண்ண இப்படி சன்யாசினி ஆக்கிட்டீங்களே” என்று அவர் நண்பர்களிலும் உறவினர்களிலும் சிலர் கேட்டு கொண்டு தான் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருணாசலம் நீண்ட விளக்கங்கள் அளித்தார். இயேசு கிறிஸ்து பிறக்கும் போது அவருடன் இருந்த சொற்ப பேர்கள் இப்படி பட்ட பேச்சுகளுக்கு ஆளாகி இருப்பார்கள் என்று சொல்லி கொண்டார். பின் சில சமயம் கேட்பவர்களின் உள்ளீடற்ற வாழ்க்கையை பவானியின் அர்த்தம் பொதிந்த வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ஆசுவாச படுத்தி கொண்டார். ஆனாலும் பவானி வயதையொத்த உண்ணாமலைக்கு திருமணம் ஆகி ஒரு வயது குழந்தையோடு அவர் வீட்டிற்க்கு வந்திருந்த போது அவருக்கு மனதில் முட்டி கொள்ள தான் செய்தது.

****************

மூன்று வருடங்கள் உருண்டோடின. ஒரு கட்டத்திற்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை தேக்கத்தை அடைந்தது. விறு விறுவென்று வளர்ந்து கொண்டிருந்த இயக்கம் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு மந்த கதியில் இயங்க ஆரம்பித்தது.அந்த நேரத்தில் கடவுளை மறுத்து யோகத்தை முன்வைத்த சில குருமார்கள் பிரபலமடைய தொடங்கி இருந்தனர். படித்த வர்க்கத்தினர் அந்த வகையான குருமார்களை அதிகம் நாட தொடங்கினர். மூச்சு பயிற்சியும், யோகாசனமும் அவர்களின் வழிமுறையாய் இருந்தன.

அதை ஒரு நாள் பார்த்து விட்டு வரலாமே என்று சென்ற அருணாசலம், பகவான் ஆசிரமத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த ஒரு ஆர்வமும், எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்ததை கவனித்தார். தங்கள் பிரச்சனைகளை யோகா தீர்க்ககூடும் என்று தேடுபவர்கள் ஒரு முனைப்போடு வந்து அங்கு பயிற்சி செய்து கொண்டிருப்பதை கண்டார். அதில் பழையவர்கள் யார், புதிதாய் வந்தவர்கள் யார் யார் என்று அவர்களின் உடல் மொழியே சொல்லி கொண்டிருந்தன.புதிதாய் வந்த சாதகர்களுக்கு அறிமுகம் கொடுக்க சிலர், பாடல்கள் பாட சிலர், பிரார்த்தனை கூடத்தை ஒழங்கமைக்கும் சிலர் என்று எல்லாமே அருணாசலத்திற்கு பழக்கமானவையாகவே இருந்தன. சின்ன சின்ன வித்தியாசங்களை தவிர்த்தால் எல்லாம் ஒரே மாதிரியாக தான் அவருக்கு தோன்றியது.

ஆனாலும் அவருக்கு இந்த வகையான யோக பயிற்சிகள் இன்னும் சரியானவையாக தோன்றின. பகவானை பிரார்த்திப்பது, பாவங்கள் போக்குவது போன்றவற்றில் ஒரு பிழை இருப்பதாக தோன்றி கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை கட்டுபட்டுத்த முயற்சி எடுத்து கொண்டிருந்தார்… ஒரு நாள் வீட்டின் அருகே தேவராஜனை கண்டார். பகவான் மின்துறையில் வேலை பார்த்த போது அவருடன் இருந்து, பின் பக்தராக மாறி பகவான் பாடல்கள் இயற்றி கொண்டிருந்தவர்.அவரை ஆசிரமத்தில் பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டிருந்தன.

“வரகூடாதுனு எல்லாம் இல்லை அருணாசலம். மின்சார துறை ஊழியராக அவர் இருந்ததில் இருந்தே அவரை அறிந்தவர் நான். எத்தனை பாடல்கள் எழுதி இருப்பேன் அவர் பேரில், உங்களுக்கு தெரியாதா? ஆனால் பண வரவு அதிகரிக்க தொடங்கியதும் எனக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு விலக்கம் வந்துவிட்டது. பணத்திற்காக புதிது புதிதாக வகுப்புகளை அறிமுகபடுத்துவதும், முக்கிய பொறுப்புகளில் அவர் குடும்ப உறுப்பினர்களே அமர்த்தபடுவதும் எனக்கு சரியாக தோன்றவில்லை. போதாகுறைக்கு சன்யாச அமைப்பும் எனக்கு உவப்பானதல்ல”.

ஏன் சார் அதுக்கு என்ன? அருணாசலம் இருதயம் துடிப்பது அவருக்கே கேட்டது.

“வளரும் வயதில் இருப்பவர்களை துறவறம் மேற்கொள்ள வைப்பது எந்த வயதில் நியாயம். அவர்கள் தன் வாழ்கையின் எல்லா இன்பங்களையும் துறந்து இருக்க இவரது மகன் மட்டும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வியாபாரம் செய்ய வேண்டுமா?”

“ஆனால் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் இல்லையா சார்.”

கேட்க நினைத்து வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கி கொண்டது.

அதற்கு அடுத்த சில மாதங்களில் ஆசிரமம் வரி ஏய்ப்பு புகார்களில் சிக்கி மீடியா அதை பற்றி புலனாய்வு செய்து கட்டுரைகள் வெளியிட தொடங்கின. சிறிது உண்மையும் பெரும் அளவில் கற்பனையும் சேர்த்து முகப்பு கட்டுரைகள் வெளியிட்டன.

கொஞ்ச அவரது நம்பிக்கை கட்டுமானத்தில் விரிசல விழ தொடங்கியது. அதை தக்க வைக்க ஆசிரமத்தின் பழைய ஆட்களில் ஒருவரான கோவிந்தனை சென்று சந்தித்தார்.

நீங்கள் இதில் குழம்பவோ சந்தேகப்படவோ எதுவுமே இல்லை அருணாசலம். இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்ந்து வந்த சமுதாயம் சிலுவையில் அறைய வில்லையா? அதனால் அவர் பொய் என்று ஆகி விடுமா? கடவுளாக இறங்கி வந்தவர்களுக்கே உரிய சாபம் இது. அவர்களை சுற்றி உள்ள சமூகம் இயன்ற வரையில் துன்புறுத்தவே செய்யும். இதையெல்லாம் வென்று பகவான் தன் அவதார மகிமையை உலகிற்கு வெளி காட்டுவார் பாருங்கள்.

வரி ஏய்ப்பு கட்டுரைகளை தொடர்ந்து அடுத்த கட்டமாக பத்திரிகைகள் துறவிகளை குறித்து கதைகள் வெளியிட தொடங்கின. எந்த வித ஆதாரமும் இல்லாமல் பாலியல் புகார்களும் கிளப்பி விட பட்டன. முதன்மை சீடரான அந்த போலந்து விஞ்ஞானி திடீரென்று தலைமறைவானார். பகவான் இருப்பிடமும் இரகசியமாகவே வைக்கப்பட்டது.

அருணாச்சலத்தின் வாழ்கையின் மிக குழப்பமான நாட்கள் அவை.அவர் தன் நம்பிக்கையை வலுப்படுத்த கூடிய மனிதர்களை தேடி சந்தித்து கொண்டே இருந்தார். பத்திரிகைகளில் வரும் பிழைகளை இருட்டடிப்புகளை கண்டுபிடித்து ஒவ்வொருவரிடமும் அது குறித்த நகைச்சுவைகளை நடித்து காட்டினார். ஒருவருக்கும் அது ஹாஸ்யமாக தோன்றவில்லை. பத்திரிகை ஆபிஸ் முன் அமைதி போராட்டங்களில் பங்கெடுத்தார். லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதினார். சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம் பகவான் குறித்து மேலும் மேலும் வேகத்துடன் பேசி அவர்கள் கண்களில் நம்பிக்கையின் சிறு கீற்றை கண்டாலும் உள்ளுக்குள் மிகவும் மகிழ்ந்தார்.

கொஞ்ச கொஞ்சமாக மீடியா இந்த விஷயங்களை மறந்துவிட்டது. ஜென்ம தின வைபவங்களில் ஆயிரகணக்கில் கூடும் பக்தர் கூட்டம் இப்போது வெறும் நூற்றுகணக்கில் மட்டுமே கூடியது. ஐந்து துறவிகளில் ஒருவர் லௌகீக வாழ்விற்கு திரும்ப,, அருணாச்சலமும் பவானியை திரும்ப அழைக்க முயற்சிகள் செய்தார். பவானி மறுத்து விட்டாள். போலந்து விஞ்ஞானி இருந்த இடத்தை பகவானின் தம்பி எடுத்து கொண்டார். அவரும் கனலாக இருந்த பக்தியை ஊதி ஊதி நெருப்பாக ஆக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்தார்.பஜனைகளும் ஆடல்களும் முன் போலவே இருந்தாலும் அவற்றில் ஒரு வேகம் இல்லாததை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். பவானி ஆண்டாளாகி கண்ணனை நோக்கி மெய்மறந்துஎப்பொழுதும் போல் பாடி கொண்டே இருந்தாள். அனைவருள்ளும் கடலாக பரவி எழுச்சி கொண்டு ஆட வைக்கும் ஒரு பக்தி நிலையை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டே இருந்தனர். மனம் மிக பலவீனமான ஒரு மழை நாள் இரவில் அருணாசலம், “தப்பு பண்ணிட்டோமோ சங்கரி” என்று உடைந்து போய் அவள் மடியில் விழுந்து கதறினார்.. பின் தன் உள சக்தி முழுவதையும் திரட்டி எஞ்சி இருந்த நம்பிக்கைக்கு நீருற்றினார். பெரும்பாலானோர் வாழ்கின்ற உள்ளீடற்ற வாழ்கையை பவானியுடன் ஒப்பிட்டு ஒரு க்ஷண நேரம் பெருமிதம் கொள்ள நினைத்து அதுவும் தோல்வி அடைய எந்த உணர்ச்சியும் இல்லாது தூங்க போனார்.