நான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அமெரிக்க பல்கலையில் உதவித்தொகை பெற்று ஒண்டிக்குடித்தனம் நடத்தும் ஏழை மாணவன் நான். என் வாழ்விடத்துக்கு படியேறி வருவதற்கென தனியாக வீட்டின் பின்புறம் மாடிப்படி பாதை உண்டு. கீழ்வாசலில் உள்ள கதவுக்கு இரண்டு சாவிகள் ஒன்று என்னிடம் இன்னொன்று ராபின்சனிடம். என்றால், இந்தக் குறுவட்டை என் அறையின் முன் வைத்துசென்றது அவராகத்தான் இருக்கவேண்டும். நான் குடியிருக்கும் வீட்டின் கீழே மனைவி, மகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தும் அமைதியான மனிதர் ராபின்சன். ஐந்தாறு தெருக்கள் தள்ளி தெருமுனையில் கார் பழுதுபார்க்கும் இடம் ஒன்றை நடத்துகிறார். இந்த கட்டிடத்தின் சொந்தக்காரர். அவர் மனைவி ஒரு சர்தாரியினியிடம் சிதார் கற்று வருகிறார். இவர்களின் பத்து வயது மகளுக்கு நான் பியானோ இசைக்கக் கற்றுத்தருகிறேன்.
அந்த குறுவட்டிலிருந்த பாடல்களை கேட்டதிலிருந்து பலவிதமான எண்ணங்கள். பலவிதமான பாடல்களையும் ஏதோ ஒரு காரணத்துக்காக தொகுத்திவிட்டால் அது இசைத்தொகை என்பதுபோல, பல்விதமான எண்ணங்களையும் ஏதோ ஒரு வகையில் தொகுத்துச்சொல்வதுதானே கட்டுரை? வரலாறும் முக்கியம் அல்லவா. ஆகவே எண்ணங்களையெல்லாம் வரலாற்றின் வரிசையில் தொகுத்துச் சொல்லிவிட்டால் என்ன? -என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்தக்கட்டுரை. நானூறு ஆண்டுகள் பின்னால் சென்று வரலாற்றின் வரிசையில் வருவோம்.
இங்கிலாந்தின் 1700-களில் ஹான்டெல் என்ற பெயரில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் இருந்தார். முழுப்பெயர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஹான்டெல் (Georg Friedrich Händel; pronounced [ˈhɛndəl]). ஜெர்மன் குடும்பத்தில் ஜெர்மனியில் பிறந்தவர் என்பதால் அவரது குடும்ப பெயரும் ஜெர்மனிய மொழியில். இதை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் தமிழில் சரியாக, ஜெர்மன் மொழியின் ஒலிக்கு நிகராக திருப்தியளிக்கும்படி எழுதிவிட முடியாது என்பதால் அப்படி சிரமப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. சரியோ தவறோ இடுகுறியாகக் கருதி ஹான்டெல் என்றே வைத்துக்கொள்வோம். பரோக் (Baroque) காலத்தின் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமையாகவும் இக்காலத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களுள் ஒருவரகவும் ஹான்டெல் அறியப்படுகிறார்.
எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும் புரியும்படியாக, எளியமையாக உணர்சி ததும்பும் ஓவியங்கள், சிற்பங்கள் வழி மதக்கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டி கி.பி 1550 ஆம் ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபை முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக தோன்றியது பாரோக் வகை கலை வடிவம். மிக்கலாஞ்சலோ, பீட்டர் பால், பிரடெரிகோ போன்ற பெரும் கலைஞர்கள் இம்முயற்சியில் முன்னோடியானவர்கள். நாடகீயமான மிகையான உணர்ச்சி ததும்பும் ஓவியங்கள், தீவிரமான உணர்வு வெளிப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் படைக்கப்பட்டு நிறுவப்பட்டது சமகாலத்தின் கலை வடிவத்தில் பெரும் பாதிப்பையும் புதிய பாய்ச்சலையும் உண்டாக்கியது. தீவிரமான உணர்வெழுச்சிகள், அதீதமான வெளிப்பாடுகள் கொண்ட இத்தகைய படைப்புகளின் அழகில் மயங்கிய அரசகுலத்தினர், உயர்குடியினர் தங்கள் அரண்மனைகள், மாளிகைகளிலும் அதைப்போன்ற பாணியில் ஓவியங்கள், சிற்பங்களையும் நிறுவும் வழக்கம் உருவாகி பரவலாகி மிகையுணர்ச்சி கலைவடிவம் ஐரோப்பா முழுதும் பரவியது.
பரோக் என்றால் ஆங்கிலத்தில் விரிவான, மிகையான, விவரணைகளுடன் கூடிய என்ற பொருள். மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய படோபடமற்ற எளிமையான அதே சமயம் உள்ளடக்கமான பூடகமான படைப்புகளை வேறுபடுத்தும் பொருட்டு சிந்தனையாளர்கள், விமர்சகர்கள் இதற்கு எதிரான வெளிப்படையான மிகையான வெளிப்பாடுகள் கொண்ட கலை வடிவத்தை பரோக் (மிகையுணர்ச்சி) கலை எனவும் இக்காலத்தை பரோக் (மிகையுணர்ச்சி) காலம் என்றும் வகைப்படுதினர். ஏறக்குறைய 1600 முதல் 1750 வரை (பாஹ் இறந்த ஆண்டு) நீடித்த பரோக் இசைக்காலம் மிகவும் அதீதமான உணர்ச்சி வடிவான இசையின் பொற்காலம். மேற்கத்திய செவ்வியல் இசை என இன்று நாம் அறிவதன் பல ஆதாரமான படைப்புகள் இக்காலத்தில் இயற்றப்பட்டவைதான்.
பரோக் (Baroque) என்ற சொல் baroque (ஃபிரெஞ்ச்), barrueco (இஸ்பானியால்), barroco (போர்த்துகீஸ்) ஆகிய சொற்களிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்திருக்க வேண்டும். தோராயமாக சொல்வதானால் இவை அனைத்தும் சுட்டுவது ஏறத்தாள “ஒழுங்கற்ற அல்லது முரடான முத்து” என்ற அர்த்தத்தை, என்று சொல்லலாம். அதாவது நன்முத்துக்கள் என நாம் கருதுபவை சீரான மேற்பரப்புடன் கூடிய பளபளப்புடன் எளிய கோளங்கள். அன்றி, அழகிய கோள வடிவின்றி ஒழுங்கற்ற மேற்பரப்புடன் அமைந்தவை குறைபாடுடைய முத்துக்கள் -என்ற எளிய உண்மையை நினைவில் கொள்க. மிகைப்படுத்தப்பட்ட கதையாடல்கள், நாடகீயமான மிகை உணர்ச்சிகளின் ஆழமான வெளிப்படையான வெளிப்பாடுகள் கொண்டது பரோக் இசை.
ஒரு வாத்தியத்தால் அல்லது குரலால் மட்டும் இசைக்கப்படும் ஒருகுரல் பாடல்கள் (aria), ஒரு வாத்தியத்தின் தனி ஆவர்த்தன இசையை மையமாகக்கொண்டு பின்ணணி இசையுடன் [பெரும்பாலும் மூன்று பகுதிகளாக அமைந்து] வரும் தனி இசைப்பாடல்கள் (concerto); குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் போது அதைக் கொண்டாட அல்லது குறிப்பிட்ட ஒரு இசைக்குழு இசைக்க என்று பிரத்யோகமாக அமைக்கப்பட்ட தனி கீதங்கள்(anthems); இசைக் குழுவின் பின்ணனி இசையுடனும் பிற கதை மாந்தர்களுடன் இயைந்து கதைக்கேற்ப ஒப்பனையணிந்த கலைஞர் குழுவால் பெரும் நாடக அரங்கில் நாடகமாக நிகழ்த்தி நடித்துக்காட்டி பாடப்படும் நாடக இசைப்பாடல்கள் (opera), இசை அரங்கில் இசைக் குழுவின் பின்ணனி இசையுடனும் ஒப்பனை, நடிப்பு ஏதுமின்றி பல பாத்திரங்களின் குரல்களாக ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களால் இசைக்கப்படும் பலகுரல் பாடல்கள் (oratorio). இது போல பலவகையான இசைப் பாடல்களையும் இயற்றியவர் ஹான்டல்.
மேலே குறிப்பிட்டது போன்ற பல வகையான இசைக்கோவைகள் மற்றும் ஹான்டெல் இயற்றிய நாற்பதுக்கும் மேற்பட்ட ஆப்பராக்கள் இதையெல்லாம் அவர் இறந்த பிறகு நூற்றியெண்பது பாகங்களாக தொகுத்தார்கள். அவற்றில் சில என் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் உண்டு. ஹான்டெல் இயற்றியவற்றுள் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது “நீர் இசை” (water music) என்ற இசைத்தொகை. ஹான்டெல் இங்கிலாந்தின் அரசவையின் பிரதான கலைஞராக இருந்தவர் என்பதால் முதலாவது ஜார்ஜ் மன்னரின் ஆணை அல்லது வேண்டுகோளுக்கு இணங்க ஹான்டெல் இயற்றியது. ஜூலை 17, 1717 அன்று நண்பர்கள் பரிவாரங்கள் சூழ உல்லாசப் படகில் அமர்ந்து ரசித்திருந்த ஜார்ஜ் மன்னரின் முன்னிலையில் தேம்ஸ் நதியின் மீது அரங்கேறியது இந்த இசைத்தொகை. மன்னரின் அரச படகின் அருகில் இன்னொரு படகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கொண்ட குழுவால் இசைக்கப்பட்டது. நீர் இசையை மிகவும் விரும்பிக் கேட்ட ஜார்ஜ் ஏற்கனவே களைத்திருந்த கலைஞர்களை ”ஒன்ஸ் மோர்” சொல்லி அவர்கள் அதையெல்லாம் திரும்ப வாசிக்கவும் அதைக் கேட்டு ரசித்து விட்டு, மீண்டும் ஒருமுறை ”ஒன்ஸ் மோர்” கேட்டு மொத்தம் மூன்று முறைகள் இசைக்கச் செய்து கேட்டு அனுபவித்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
பரோக் இசையின் இறுதியில் இயற்றப்பட்டதாலும் இன்னும் பல காரணங்களாலும் பரோக் கால இசைக்கு ஒரு சிறந்த மாதிரியாக இருப்பது நீர் இசை. 1) Suite in F Major (HWV 348), 2) Suite in D Major (HWV 349), 3) Suite in G major (HWV 350) ஆகிய மூன்று பகுதிகளால் ஆகிய ’நீர் இசை’ இசைத்தொகை முழுதையும் இந்த அசைபடத்தில் ஜார்ஜ் மன்னரைப் போலவே நாமும் கேட்டு மகிழலாம்!
டி.சி பாயில் என்ற அமெரிக்க எழுத்தாளர் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய கடுமையான நகைச்சுவை நாவலின் பெயரும் “நீர் இசை” என்பதுதான் என்ற தகவலும் தேடிப்பார்த்ததில் கிடைத்தது.
அமெரிக்காவில் வெர்மாண்ட் மாகாணத்தின் ராண்டால்ஃப் என்ற ஊரில் நீர் இசை என்ற பெயரில் ஒரு தன்னார்வ சேவை நிறுவனம் உண்டு. பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் பங்காற்றுகிறார்கள். மாசடைந்து பாழாகியும் அருகியும் வரும் உலக நீர்வளம் பற்றி விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களிடம் இசை நிகழ்ச்சிகள் வழி பரப்புவது இவர்களின் முக்கிய நோக்கம். நீர் இசை என்ற பெயரில் இவர்களே ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள லாங் பீச் என்ற ஊரில் நீர் இசை விழா ஆண்டுதோறும் விழா நடத்துகிறார்கள். 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கும் பல வகையான இசைப்போக்குகளையும் தரமாக குறைந்த கட்டணத்தில் வழங்குவது இவர்களின் நோக்கம்.
இதையெல்லாம் இப்போது நான் எதற்காக சொல்கிறேன், குழப்பமாக இருக்கிறதல்லவா? தொடர்ந்து வாசியுங்கள். அதிகம் பேசாத மனிதராகிய ராபின்சன் ஒரு இசை குறுந்தந்தட்டை என்னிடம் தந்திருக்கிறார் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கவேண்டும். அது என்ன என்பதில் என் ஆர்வம். KAMASUTRA LOUNGE MUSIC FOR SEDUCTION என்பதுதான் ராபின்சன் விட்டுச்சென்ற குறுவட்டின் தலைப்பு என்பதும், இதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் ’நீர் இசை’ என்பதும் இன்னும் ஆச்சரியமான தகவல்கள்.
இந்தக்கட்டுரையின் முகப்பை அலங்கரிப்பதும் இதன் உறையின் உள்ள படம்தான். மடிக்கணினியைத் திறந்து ஆர்வத்துடன் ஒலிப்பட்டையை காதில் மாட்டிக்கொண்டேன். பாடல்களை கேட்குமுன் எத்தனை பாடல்களின் பெயர், பாடியவர்கள் இதையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தேன். ஸ்வர நைனா என்ற பாடலைப் பாடியவரின் பெயர் வசீகர கண்கள், பாவனா என்ற பாடலைப் பாடியவரின் பெயர் உணர்ச்சி. மாதுர் மிலான் பாடியவர் பெயர் என்றைன்றைக்குமான இன்பம், ஆனந்தா பாடியவர் பெயர் ஒரு நிமிட இன்பம், சாத் சாத் பாடியவர் பெயர் காதலின் பயணம், மன்மோஹினி பாடியவர் பெயர் வசீகரிப்பவள்; மண் கி புகார் பாடியவர் பெயர் அழுகையின் பரவசம், ஆனந் பிரேம் பாடியவர் என்றென்றைக்குமான காதல். இதுபோல இசைத்தொகையின் மொத்த பாடல்கள் அவைகளின் பெயர்கள், பாடியவர் விபரம் ஆகியவற்றை அறிய விழைபவர்களின் நலனை முன்னிட்டு கீழே உள்ள படம்.
இதில் குழப்பமான விஷயம் என்னவென்றால் ஆனந்தா, ஆனந்த் பிரேம், மாதுர் மிலன், பாவனா, மன்மோஹினி, ஸ்வர நைனா இதெல்லாம்தான் பாடகரின் பெயர் போலத்தான் இருக்கிறது. ஆனால் இதெலாம் பாடல் பெயர் என்று வருகிறது. வசீகரிக்கும் கண்கள், உணர்ச்சி, என்றைன்றைக்குமான இன்பம், ஒரு நொடி இன்பம், வசீகரி, அழுகையின் பரவசம், என்றென்றைக்குமான காதல் இதெல்லாம் பாடல் போல இருக்கிறது ஆனால் பாடியவரின் பெயர் என்று இருக்கிறது.
பாடல் மற்றும் பாடியவரின் பெயர் இரண்டும் ஏதோ ஒரு தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஒருவேளை மாறியிருக்குமோ என்று எனக்கு சந்தேகம். ஆனால் உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் கம்ப்யூட்டர் துறையில் நிபுணர்கள் என்றால் அதில் முன்னோடியானவர்கள் நிச்சயம் இந்தியர்கள்தான், இல்லையா? சந்தேகமே இல்லை. ஆகவே அவர்கள் இதுபோன்ற எளிய தவறுகளை செய்பவர்களா நாம்? ஆகவே நிச்சயமாக அப்படி இருக்காது என்று நினைத்துக்கொண்டேன்.
இதெல்லாம் பாடியவர்களின் பெயர்தான் என்று நான் நினைத்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆறாம் வகுப்பு படிக்கையில் ’லெட் ஸெப்லின்’ என்று தலைப்பிட்ட குறுந்தட்டின் பாடல்களை கேட்டுக்கொண்டு என்னுடன் வீட்டுப்பாடங்களை எழுதும்போதும் கூட அவற்றை மந்திரத்தை போல முனகிக்கொண்டிருப்பான் என் நண்பன் விச்சு. லெட் ஸெப்லின் என்பது பாடியவரின் பெயர் என்றுதான் ரொம்பநாள் நினைத்துக்கொண்டிருந்தேன், விச்சுவும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தான். அந்த குறுந்தட்டுகள் எல்லாம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவன் அண்ணாவுடையது என்பதால். ஆனால் பாடியவரின் பெயர் ’ஜிம்மி பேஜ்’ என்பதும் லெட் ஜெப்லின் என்பது அவரின் இசைக்குழுவின் பெயர் என்பதும் நான் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த முதல்வாரத்தில் அறிந்து கொண்ட நம்பமுடியாத உண்மைகளுள் சில. அது நாள் வரை அது போன்ற எளிய உண்மைகளைக்கூட தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருந்தது அவமானமாககவும் இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது தெரியவந்த இதைப்போன்ற இன்னொரு வெட்கரமான விடயம் ’பிங்க் ஃபிளாய்ட்’ என்பதும் இசைக் குழுவின் பெயர்தான், பாடியவர் அல்ல என்பது. இன்னும் குறிப்பாக சொன்னால் பாடியவர் பெயர் Syd Barrett ஆனால் அவரின் உண்மை பெயர் Roger Keith Barrett. பெரும் ஏமாற்றமாக இருந்தது, இதை கண்டறிந்து என்னிடம் சொன்னதும் விச்சுதான்.
ஆகவே, இது போல இனிமேலும் வாழ்க்கையில் ஏமாறக்கூடாது என்ற உறுதியுடன் இதையெல்லாம் முன்னமே விவரமாக தெரிந்து சூதானமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளலானேன். நீங்களும் என்னைப்போல போலவே கவனமாக இருக்கவேண்டும் என்ற நல்லெண்னத்தில் அவற்றில் சிலதை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். குழப்பத்தைக் குறைக்க ஏதோ என்னாலான உபயம். பாடகரின் இசைப்பெயருடன் பாடகரின் இயற்பெயரை பச்சைநிறத்தில் தருகிறேன். Lady gaga – Stefani Joanne Angelina Germanotta, Babyface – Kenneth Brian Edmonds, Buckethead – Brian Carroll, Vitamin C – Colleen Fitzpatrick, 50 Cent -Curtis James Jackson III. Puff Daddy, Diddy, or P. Diddy -Sean John Combs, Patsy Cline – Virginia Patterson Hensley, Elvis Costello – Declan Patrick McManus.
இப்போது சொல்லுங்கள்.. வசீகரிக்கும் கண்கள், உணர்ச்சி, என்றைன்றைக்குமான இன்பம், ஒரு நொடி இன்பம், வசீகரி, அழுகையின் பரவசம், என்றென்றைக்குமான காதல் – இதெல்லாம் புனைபெயராக இருக்காது என்று என்னால் உங்களால் உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?
ஆனால் என்னை குழப்பிய இன்னொரு விடயம் ’ஆனந்த’ என்ற 5-வது பாடலில் ’ஒரு கணத்தின் இன்பம்’ என்று வருகிறது. மேலும் ’காதலில் இழந்து’ என்ற 3 –வது பாடலில் ’பியா’ என்று ஒரு வார்த்தை வருகிறது. கும்மோணத்தில் பிறந்து தஞ்சாவூர் மதுரை போன்ற ஊர்களில் வளர்ந்த கிராமத்தான் என்பதால் என் ஹிந்தி அறிவு பூஜ்யம்தான் ஐயா, ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ’பியார்’ என்றால் ’காதல்’ என்றும் ’பியா’ என்றால் ஏறக்குறைய ’பிரியமான’ என்றும் அர்த்தம் -என்பது கூடத்தெரியாத அளவுக்கு, நான் என்ன மடையனா? ஆகவே, லெட் ஸெப்லின் போலவும் இதை உறுதியாகவும் சொல்ல முடியவில்லை என்பதால் கூடுதலான குழப்பம்.
ஒரு வேளை பாடல், பாடியவர் இரண்டு இடத்திலும் பாடலின் பெயரை முறையே ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்… அதற்கு என்ன அவசியம்? இது முழுக்க ஹிந்திப்பாடல்களின் தொகுப்புமட்டும் என்றால், பாடல்களே முழுக்கவும் ஹிந்தியில் இருக்கும்போது, அதைக்கேட்டு ரசிக்கும் ஹிந்தி தெரிந்த ரசிகர்களுக்கு, தலைப்பு ஹிந்தியில் இருந்தாலும் அதையும் புரிந்துகொள்ள முடியும்தானே? என்ற என் எளிய சிற்றறிவின் புரிதாலால் ஆங்கிலத்திலும் பாடலின் பெயரைத்தர என்ன அவசியம்? என்ற கேள்விக்கு கடுமையாக யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.
இது போன்ற பல கேள்விகள் மூளையைக் குடையவே பாடல்களை தொடர்ந்து கேட்பதில் கவனம் பதியவில்லை. ஆகவே தலையிலிருந்து இசைப்பட்டையைக் கழற்றிவிட்டு தோழி ஸ்ருதியை அழைத்தேன். என் நண்பர்களுள் ஹிந்தியும் உலக இசையையும் அறிந்தவர்களுள் ஸ்ருதியும் ஒருவர் என்பதுடன் அவர் என் நலவிரும்பியும் கூட. அவரிடம் பேசியும் நெடுநாளாகி விட்டது என்பதாலும் அவரை அழைத்து நலம் விசாரித்து பிறகு விபரம் முழுதையும் சுருக்கமாக சொன்னேன்.
குறுந்தட்டின் உறையில் உள்ள விடயங்களை படிக்கச்சொல்லி கவனமாகக் கேட்டிருந்துவிட்டு ”ஐ திங்க் இட்ஸ் ஆல் த சேம் யார். எனிவேஸ் ஐம் ஆன் மை வே டு எ கிளாஸ்… தென் ஐ ஹெவ் மை எக்ஸாம்ஸ். வொய் டோண்ட் ஐ கால் யூ ஸம் டைம் நெக்ஸ் வீக்?” என்றார். ஸ்ருதியின் அமெரிக்க ஆங்கிலத்தில் ‘ஐ தின்க்’ என்றால் என் அகராதியில் ’ஏறக்குறைய அதுதான்’ என்று அர்த்தம். எப்படியோ, அவர் புண்ணியத்தில் இடப்புறம் இருப்பது பாடலின் ஹிந்தி தலைப்பு வலப்புறம் இருப்பது ”சற்றேறக்குறைய” பாடலின் ஆங்கிலத்தலைப்பு என்பதாவது சற்றேறக்குறைய உறுதியாகியதே, என்று சற்றேறக்குறைய நிம்மதியடைந்தேன்.
”காமசூத்ரா ஓய்விடம்” என்று தலைப்பிட்ட ஹிந்திப்பாடல்கள் கொண்ட தொகுப்பில் ஹிந்தி தெரியாத என் போன்ற ஒரு பாமர இசை ரசிகன் எதை எதிர்பார்க்க முடியும்? காமவர்த்தினி (நம்ம ஊர் பந்துவராளி) போன்ற தீவிரமான ராகங்களில் ஆவேசமான பிடிகள், மெட்டுக்கள்? சிலவாவது? அப்படித்தான் நானும் நினைத்தேன். பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும் தலைப்பு கொடுத்த ஆர்வத்தின் ஆவேசத்தில் உந்தப்பட்டு தொகுப்பின் எல்லாப்பாடல்களையும் பலமுறை கேட்டுப்பார்த்தேன். அழுகையின் பரவசம் பாடலில் தோடி (நம்ம ஊர் சுபபந்துவராளி)போன்ற கிட்டத்தட்ட ஒரு ராகத்தில் சில ஆலாபனைகள் செய்கிறார்கள். மேலும் பிற பாடல்களையும் அவற்றின் ராக விந்நியாசங்களையும் இசை நுட்பங்களையும் நுணுகி ஆராய்ந்து அதைவைத்து முழுமையாக நீண்டதொரு விமர்சனம் ஒன்றையும் எழுதிமுடித்தேன்.
பிறகு நான் எழுதியதையெல்லாம் படித்துப்பார்த்தபோது பல நினைவுகள் மனதில். ஸ்ருதியிடம் படிக்கக்கொடுத்தால், “ரைட் ஸம்திங்க் பாஸிடிவ் யார்”, யூ குரூயல் ……..” என்று கெட்ட வார்த்தையில் திட்டவும் செய்வார் என்று பயந்ததால் தரவில்லை. மேலும் பொறுப்பு உணர்ச்சி வேண்டுமல்லவா? இதில் பாடியவர்கள், பிண்ணனி இசைஞர்கள், தபலா, பியானோ, மிருதங்கம், ஜலதரங்கம், சந்தூர், டிரம்ஸ், பேஸ், புல்லாங்குழல், கித்தார், கீபோர்ட் மற்றும் இன்ன பிற பெயர் சொல்ல முடியாத வாத்தியங்கள் வாசித்தவர்கள், இசையமைத்தவர்கள், இதையெல்லாம் பதிவு செய்து கலந்தவர்கள், இதில் முதலீடு செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய இன்ன பிறறையும் மனதில் கொள்ள வேண்டுமல்லவா? முக்கியமாக இந்திய இசையை ஆதாரமாகக் கொண்ட ஒரு இசைத்தொகுப்பையும், இசைக்கலைஞர்களையும் மதிப்பதும் ஆதரவளிப்பதும் இந்தியக் குடிமகனாகிய என் கடமையன்றோ? மேலும் இசையில் புதுமைகளை செய்ய விழைபவர்களை ஆதரித்து ஊக்குவிப்பதினின்றும் வழுவி கடுமையாக விமர்சிப்பது என்பது பொறுப்பற்ற செயல் அல்லவா? ஆகவே எதிர்மறையான விமர்சனங்களை அனைத்தையும் கட்டுரையிலிருந்து நீக்கிவிட்டேன்.
நல்ல விஷயங்களை ஒட்டுமொத்தமாக சொல்வதெனில், உபத்தரமில்லாத சில நல்ல மெட்டுக்கள் எனலாம். இருந்துவிட்டுப்போகட்டும், பிரச்சினையில்லை. ஆனால் இசைத்தொகுப்புக்கு ”KAMASUTRA LOUNGE MUSIC FOR SEDUCTION” என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்? என்ற கேள்விக்கு எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விடை கிட்டவில்லை. நிச்சயமாக இசையை வைத்து இருக்க முடியாது என்பது என் குருவி மண்டையின் எளிய புரிதல். இதன் பாடல் வரிகளில் நுண்ணிய அழகிய குறியீடுகள், அர்த்தம் பொதிந்த படிமங்கள் நிரம்பிய கவிதைகள், தத்துவ விசாரங்கள், இதெல்லாம் இருக்கக்கூடும். அதையெல்லாம் ஹிந்தி படிக்கத்தெரிந்தவர்களின் விரிவான விமர்சனத்துக்கு விட்டுவிடுகிறேன்.
சில நாள்கள் கழித்து சனிக்கிழமை காலை. தோழி ஒருவருடன் இந்திய மளிகைக்கடைக்கு செல்வதற்காக அறையை விட்டு கீழிறங்கி வாசல் கேட்டை கடக்கும் சமயம். கையில் காரிலிருந்து எடுத்த பைகளுடன் எதிரில் வந்துகொண்டிருந்தார் மிஸ்டர் ராபின்சன், தன் வழக்கமான கெட்டப்பில். பனியனில் மூடிய பெரிய தொந்தி முழுக்கவும் வெளித்தெரியும்படியான மோஸ்தரில் பொத்தான் போடாத தொளதொளப்பான அரைக்கை சட்டை. நீல நிற ஜீன்ஸ், சாக்லெட் நிறத்தில் உறுதியான தோல் காலணி. செம்பட்டை நிற மீசையுடன் அறுத்த சேனைக்கிழங்கு நிறத்தில் சவரம் செய்த பெரிய முகம். வழக்கமான முகமனுக்குப்பின் நிகழ்ந்த உரையாடலை பிசகாமல் மொழிபெயர்த்து தருகிறேன்.
”நான் கொடுத்த பாடல்களை கேட்டாயா… அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
“ஆம், கேட்டேன். புதுவிதமான இசை முயற்சி. இது மாதிரி நிறைய வந்து கொண்டிருக்கிறது” என்றேன்.
”ஆனால் காமசூத்ரா ஓய்விடம், காமவயப்படுத்துவதற்கான இசை” என்று இருக்கிறதே?”
என்றார் ராபின்ஸன், குரலிலும் கண்களில் கடுமையான சந்தேகம்.
அவர் முகத்தை அதுபோன்றதொரு உணர்ச்சியில் அதுவரை நான் பார்த்ததில்லை என்பது மட்டுமல்ல. இதைப்போன்ற ஒரு கேள்வியை ராபின்ஸனிடம் நான் எதிர்பார்க்கவும் இல்லை என்பதால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆகவே,
”புது முயற்சி என்பதால் அப்படி வித்தியாசமான பெயராக இருக்கும் என நினைக்கிறேன்” என்று சமாளித்தேன். சற்று அசவுகரியத்துடன்.
”இல்லை! நீ அதை முழுக்க கவனிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். முகப்பு அட்டைகளை படித்துப்பார்த்தாயா?” என்றார், விடாமல். முகத்தில் இன்னும் சற்று கடுமை கூடியிருந்தது.
அதுபோல அவர் என்னிடம் பேசக்கூடும் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் ஒரு இந்தியனிடம் இந்திய இசை பற்றி இதுபோல அவர் பேசுவது மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலாகவும். ஆனால் ராபின்ஸன் அதிகம் பேசுபவர் அல்ல. மிகவும் அமைதியான மனிதர். கேள்வி கேட்டு எதிராளியை நிறைய பேசவிட்டு இடையூறின்றி பொறுமையாகக் கேட்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரே இதைப்பற்றி இப்படி தூண்டித் துருவிக் கேட்டால் அதில் ஏதோ இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதிப்பட்டது.
“ஆம். இன்னும் முழுக்க கேட்கவில்லை. கேட்டபின் அதைப்பற்றிச் சொல்கிறேனே” என்றேன்.
“நல்லது” என்று மீண்டும் முகமன் கூறிச்சென்றார். வழக்கமான புன்னகை முகத்தில் சிறிதும் இல்லை.
அப்படி என்னதான் அதில் இருக்கிறது, எதற்காக ராபிஸன் அப்படி கேட்க வேண்டும், கோபப்படவேண்டும்? மளிகை சாமான் வாங்கும்போது இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். கடையிலிருந்து அறைக்கு திரும்பியதும் முதல் வேலையாக உடனடியாக இசைத்தொகையின் உறையை எடுத்துப்பார்த்தேன். அதன் பின் அட்டையில் உள்ள வாசகத்தை நீங்களே படித்துப்பார்க்கலாம்.
“In recent times the Kamasutra and its teachings have become known throughout the world and have been adopted by all age groups & cutures” என்பதை திரும்பவும் படித்துப்பார்த்தேன். ஆனால் காமசூத்ரா என்பதன் பொருளை, அதன் உட்கிடக்கையை முழுக்க அறியாத நிலையில் இப்படி அவர்கள் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்றுதான் உறுதியாக நினைக்கிறேன்.
***********
இதற்குப்பிறகு கொஞ்ச நாள் கழித்து சில சம்பவங்கள். இந்த இசைத்தொகுப்புக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் இப்பவும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இதையெல்லாம் கேட்டிருந்துவிட்டு சிகரெட்டை ஆழமாக இழுத்து விட்டபடி “அப்படி உறுதியாகச் சொல்லிவிடவும் முடியாது” என்றான் விச்சு. உறுதியான குரலில்.
ஆகவே அவை பற்றிய விபரங்களையும் கீழே தருகிறேன்.
1. சில மராமத்து வேலைகள் இருப்பதால் வீட்டை காலி செய்யும்படி என்னைக் கேட்டுகொண்டார் ராபின்ஸன். கையில் வலி இருப்பதால் என்னிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்த அவரின் மகள் கொஞ்சநாள் இசைக்கு விடுப்பு எடுக்கப்போவதாகவும் சொன்னார். என் அறிவுக்கு எட்டியவரை அது போல வீட்டில் எந்த தேவையும் இருந்ததாகத் தெரியவில்லை, புதிய வீடு. மேலும் நான் தியரி வகுப்பு எடுக்கும் இன்னொரு பியானோ ஸ்டுடியோவில் ராபின்ஸனின் மகளைப் பார்த்தேன், மிஸஸ், ராபின்ஸனுடன். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை.
2. வீட்டை மாற்றி பல்கலைக்கு அருகில் உள்ள ஒரு அபார்ட்மெண்டுக்கு மாறிவிட்டேன்.
3. அதற்குபிறகு ரொம்பநாள் கழித்து நான் கார் வாங்கிய பிறகு ராபின்ஸனை அவரின் கராஜில் சந்தித்தேன். அதே போலவே இருந்தார், என் படிப்பு, வீட்டு விபரங்களை அமைதியாக விசாரித்துகொண்டார். எவ்வளவு வற்புறுத்தியும் காரின் பேட்டரியை மாற்றித்தர கூலிவாங்க மறுத்துவிட்டார்.
4. எங்கள் ஊரின் இந்துக் கோயில் ஒன்றில் துப்பாக்கி சூடு. இச்சம்பவத்திற்கும் ராபின்சனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
5. நீண்ட நாள்களுக்குப்பிறகு கோயிலில் வசந்தா மாமியைப் பார்த்தேன். முன்பு போல யோகா கற்றுக்கொள்ள ஆள்கள் வருவதில்லை என்று அலுத்துக்கொண்டார்.