எரிமலையில் தொலைந்த காதலன் – இருந்தும், தொலையாத காதல்

craig_arnold

அமெரிக்கக் கவிஞர் க்ரெய்க் ஆர்னால்ட் (Craig Arnold) வயோமிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிந்தவர். இவரது கவிதைகள் 1998 ன் அமெரிக்காவின் சிறந்த கவிதைகளின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஏப்ரல் 27, 2009 அன்று ஜப்பானில் குச்சினொஎராபு ஜீமா(kuchinoerabu-jima) என்ற எரிமலை அருகே மலையேறச் சென்றபோது நடந்த எரிமலை வெடிப்பில் இவர் காணாமல் போனார். அப்போது இவருக்கு 42 வயது. ‘பொயட்ரி மாகஸீன்’ எனும் கவிதை இதழ் இந்தக் கவிதையை பதிப்பிக்கத் தேர்வு செய்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய அன்றுதான் அவர் எரிமலை விபத்துக்குள்ளான செய்தி வந்தது. இவ்வகையில் இது அவருடைய கடைசிக் கவிதை.

ஒரு பம்பளிமாஸ் பழத்தின் மேல் தியானம்

g89u

நாளின் போராட்டங்கள்

உன்னை இறுக்கிப் பிடிக்கும் முன்

அனைத்தும் சாத்தியமாயிருக்கையில் விழிப்பது

சமையலறைக்கு வந்து

காலையுணவுக்கு

ஒரு சிறு கூடைப்பந்தை உறிப்பது

பஞ்சு உறைபோன்ற

தோலைக் கிழிக்கையில் ஓர் எண்ணை மேகம்

அதன் ஊசித்துவாரங்களினின்று சாரலாகும்

சுத்தமாய், மிளகுபோல் சுருக்கென்று

ஒவ்வொரு இளரோஜாச் சுளையையும்

அதன் உறையினின்று நலுங்காமல் பிரித்து

மிகக் கவனமாய் ஒரு முத்து கூட

உடையாமல்

ஒவ்வொரு துணுக்கையும்

குளிர்ந்த நீலப் பீங்கான் கிண்ணத்தில் சரித்து

பழச் சாறு குளமாய்த் தேங்க முழுப்பழத்தையும்

அதன் தோலினின்று பிரித்து

அதன் பின்பே அதை உண்பது.

எத்தனை இனிமையான

ஓர் ஒழுங்கு

துல்லியமாய் அர்த்தமற்றதாய்

கைகளுக்கும் உணர்வுகளுக்குமிடையே உற்றதோர்

ஈடுபாடு

ஒரு இடைவெளி சற்று வெறுமை

ஒவ்வொரு வருடமும்

இதற்குள் வாழ்தல் அதிகக் கடினமாய்

ஒவ்வொரு வருடமும்

இதற்கு வெளியே வாழ்தல் அதிகக் கடினமாய்

மூலக் கவிதை- இங்கிலீஷில் ’பொயட்ரி’ பத்திரிகையின் அக்டோபர் 2009 இதழில் வெளியானது.
lindendberg
ரெபெக்கா லிண்டென்பெர்க், எழுத்தாளர், கவிஞர், க்ரெய்கின் காதலி. ஆறு வருடங்கள் அவருடன் குடும்பம் நடத்தியவர். இந்தக் கவிதை உருவான கதையை உணவு/ எழுத்து (food/writing) என்ற ‘சுவையான’ கட்டுரையில் ரெபெக்கா எழுதியிருக்கிறார்:

M.F.K.Fisher எனும் அமெரிக்க எழுத்தாளர் உணவைப் பற்றி எழுதுபவர். ஆனால் உணவைப் பற்றிய எழுத்தின் மூலம் மனிதவாழ்வைப்பற்றி எழுதுவார். How to cook a wolf  என்கிற இவரது புத்தகம் போர்க்கால உணவுக் கட்டுப்பாடுகள் பற்றியது. ஆகவே போரைப் பற்றியது. அதேசமயம் வீரம், தைரியம், மேலும் கடினமான சமயங்களைமனிதர்கள் சமாளிக்கும் தந்திரங்கள் பற்றியதும். இந்தப் புத்தகம் மனிதர்களின் தன்மானம், அவர்களது அடையாளம் பற்றியதும் கூட. அவரின் எல்லாப் புத்தகங்களும் இப்படிப்பட்டவைதான். இந்த எழுத்தாளர் எழுதிய பார்டர்லாண்ட்ஸ் (borderlands) எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இது. பிரான்ஸிலுள்ள ஸ்ட்ராஸ்பூர்க் (Strasbourg) எனும் ஊருக்கு சென்றிருக்கையில், அவரது கணவர் ஆல் (Al) நாளின் பெரும்பாலான நேரம் அலுவலுக்காக வெளியே போக நேர்கையில், இவர் எழுதிய கட்டுரை இது.

“காலையில்…ஜன்னலில் அமர்ந்து டேஞ்செரீன் (Tangerine) பழங்களைத் தோலுரி, மூன்றொ, நாலோ, அவற்றை நசுக்கிவிடாமல், தெருமூலையிலும், அதற்கப்பாலும், ரைன் நதியை நோக்கிப் பாயும் கால்வாய் அருகிலும் குவியும் சிப்பாய்களைப் பார்த்தபடியே. ஒவ்வொரு பருத்த, நிறைந்த சின்னப்பிறையையும் தனித்தனியாய்ப் பிரி. முத்தம் (கிஸ்) எனப்படும் ரகசியப் பழச்சுளை கிட்டினால், அதை ஆலுக்காக (Al) எடுத்துவை.

தலையணைகளை தட்டி சீர்செய்யும் ஓட்டல் பணிப்பெண் போடும் சத்தத்தைக் கேள், அவள் அல்சேஷன் பகுதிக்குரிய வழக்கில் உள்நாடு, அதாவது பாரிஸ் நகரத்தைபற்றிச் சொல்லும் கதைகளை ஊக்குவிக்கும் சொற்களை முனகு, அவள் காதல் வசியம் பற்றியும், சக்கரங்கள் மட்டுமன்றி வேறு வகை ஆட்டங்களில் ஈடுபடும் பிரெஞ்சு சைக்கிள் ஓட்டுபவர்களையும் பற்றி முணுமுணுக்கையில், மெத்தென்ற சுளைக்குவியலிலிருந்து ஒவ்வொரு வெல்வெட் நூலையும் மென்மையாய்ப் பிரித்தெடு. டேஞ்செரீன் பழங்களை அவற்றின் தோலோடு இணைத்திருக்கும் அந்த வெள்ளையான சதைப்பற்றுள்ள நூல்கள் பற்றித் தெரியும்தானே? அவற்றைப் பிய்த்தெடுக்க வேண்டும். கவனமாய்.

நேற்றைய செய்தித்தாளை எடுத்து அதை ரேடியேடரில் மேல் பரத்தவேண்டும் (நாங்கள் ஸ்ட்ராஸ்பூர்க்கில் இருக்கையில் ல அமி து ப்யூப்ல் (l’ami du people) என்கிற செய்தித்தாள் இதற்கு உகந்ததாய் இருந்தது, ஏனெனில் காகிதம் சூடான போதும் அதன் மசி காகிதத்திலிருந்து பிரியாமல் இருந்தது). பணிப்பெண் போய்விட்டாள் – இல்லையெனில் அல்சேஷன் பகுதிக்குரியதான, உறுத்தலான, சண்டைக்கு வருவது போன்ற, அவளது ஆச்சரியப் பார்வையை தவிர்த்திருப்பது கடினம்.

டேஞ்செரீன் சுளைகளை சூடான ரேடியேடரின் மேல் பரப்பியபின், அவற்றை மறந்துவிடுவது நலம். ஆல் திரும்பியதும், பழுப்பு உணவறையில் நீண்ட மதிய உணவுக்குப் பின், எழுதும் மேஜை மேலிருந்து க்வெட்ச் என்ற பானத்தை நாங்கள் கொஞ்சம் பருகலாம். இறுதியில் அவர் கிளம்புகிறார். கஷ்டமாய்தான் இருக்கிறது ஆனால் –

ரேடியேடரின் மேல் டேஞ்சரீன் சுளைகள் இன்னும் பருத்திருக்கின்றன, சூடாய், முழுமையாய் நிறைந்து. அவற்றை ஜன்னலருகே எடுத்துப்போய், ஜன்னலைத் திறந்து, ஜன்னல்திட்டின் மேல் கட்டியிருக்கும் பனிக்குவியலின் மேல் சற்று நேரத்துக்கு விட்டுவிடவேண்டும். இப்போது அவை தயார்.

இனி மத்தியானம் முழுதும் தெருமூலையைப் பார்த்துக் கொண்டு உட்காரலாம். பிற்பகல் செய்தித்தாள்கள் கடைகளுக்குக் கொண்டு வரப்படுகின்றன. குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்புகிறார்கள். ஒரு கூடை ட்யூலிப் மலர்கள் ட்ராம் வண்டி நிறுத்ததில் வந்து அமர்கிறது, 6 மணிக்குக் களைத்து வரும் க்ளார்க்குகளுக்கு ஆசையூட்ட. இறுதியாய் சிப்பாய்கள் ரைன் நதிக்கரையிலிருந்து திரும்பி வருகிறர்கள். இருட்டிவிட்டது.

டேஞ்சரீன் சுளைகள் தீர்ந்துபோய்விட்டன. ஏன் அவை அத்தனை அற்புதமாய் இருக்கின்றன என என்னால் விவரிக்கமுடியாது. ஒருவேளை, ஒரு பீங்கான் கிண்ணத்தின் மேல் பூசப்பட்ட எனாமல் அளவே மெலியதானதும் சுவைக்கையில் பற்களின் கீழ் சன்னமாய் உடைவதுமான அந்த சிறிய கூடு, காரணமாய் இருக்கலாம். அல்லது அதன் மணமாய் இருக்கலாம். என்னால் சரியாய் சொல்லமுடியவில்லை.”

க்ரெய்குடன் ரோமில் இருக்கையில் ஒருநாள் ரெபெக்கா இந்தக்கட்டுரையை உரத்துப் படிக்க க்ரெய்க்கின் மேற்கண்ட கவிதை உருவானதாம்.

அந்தக் கட்டுரை வெறும் டேஞ்சரீன் பழங்களை எப்படி உண்ணுவது என்பது பற்றியதல்ல. உணவு சிலசமயம் தனிமைக்கு ஒரு மருந்து, சிலசமயம் ஒரு திருட்டுத்தனமான இன்பம், சில வகையான உணவுப் பழக்கங்களில் நமக்குக் கிடைக்கும் ஒரு சிறுபிள்ளைத்தனமான திருப்தி, இவற்றைப்பற்றியது.

இந்தப் பின்புலத்தில் படிக்கையில் தியானத்தின் குவிப்புடன் உரித்த அந்த பம்ப்லிமாஸ் மணிகளின் சில்லிப்பும், மிளகுச் சுருக்கும், நமக்கும் எட்டுகிறார் போலில்லை!

0o0o0o0o0

c23ew

ரெபெக்கா லிண்டென்பெர்க்:

2006ல் இவர் க்ரெய்க்குடனான வாழ்வு பற்றியும், காதல் அதிலுள்ள பல சிக்கல்கள் பற்றியும் ஒரு புத்தகம் எழுதத் தொடங்கியிருந்தார். 2009ல் க்ரெய்க்கின் மறைவுக்குப் பிறகு இப்புத்தகம் பல மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு 2012ல் love, an index என்ற தலைப்பில் வெளியானது. மூன்று பகுதிகள் கொண்ட இப்புத்தகத்தில் A-லிருந்து Z வரையான எழுத்துக்களில் ஆரம்பிக்கும் கவிதைகளில் இவர் க்ரெய்க்குடன் பகிர்ந்த அனுபவங்களைப்பற்றியும் அவர்களிடையே இருந்த உறவைப் பற்றியும் எழுதியுள்ளார்.

“நம்புவதற்கரிய ஒரு மனிதர், நம்புவதற்கரிய உரையாடல்கள், கட்டுப்படாத ஒரு வாழ்க்கை, உயிர்த்துடிப்புள்ளதும், கடினமானதும், வெற்றிகரமானதுமான ஓர் உறவு , இவற்றையெல்லாம் கொண்டாட எழுதப்பட்டவை இக்கவிதைகள்; நானும் க்ரெய்க்கும் கவிதையைப் பற்றி பகிர்ந்த கருத்துகளும் “

எதிர்பாராவகையில் அவருக்கு நேர்ந்த இழப்பை எதிர்நோக்கவும், அவரின் இன்மையைப் புரிந்துகொள்ளவும் இக்கவிதைகளில் அவர் முயன்றிருக்கிறார். இப்புத்தகத்திலிருந்து ஒரு கவிதை.

இழந்த பொருட்களின் அருங்காட்சியகத்தில்

“நீ நன்றாய் நேசிக்கும் எதுவும் உன்னிடமிருந்து பறிக்கப்படாது

நீ நன்றாய் நேசிப்பது எதுவோ அது உன் நிஜமான பரம்பரைச் சொத்து”

-எஜ்ரா பௌண்ட்

போனவற்றை விவரிக்கும் பெயர்ச்சீட்டுகளைக்

காணலாம்;

ஒரு பேரரசியின் எலும்புகள், களவுபோன ஓர் ஓவியம்,

இறகுகளாலான தலைக்கவசத்துடன்

கொடிசுற்றிய ஈட்டியைப் பிடித்த ஒரு மனிதனது.

தோல் தாளில் எழுதப்பட்ட ’தேவனின் நற்செய்தி’,

முற்காலத்தில் எங்கோ ஒளித்து வைத்து

மறக்கப்பட்டது, அந்தப் பீடத்தில் வீற்றிருக்கக் கூடும்.

இந்தக் கண்ணாடி அலமாரி

லெவாண்ட் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட முதல் உப்பைத்

தாங்கியிருக்கலாம்.

இல்லாமையின் பரிமாணத்தை நமக்கு உணர்த்துவதாக,

பெரிய அறைகள்

தங்கள் அற்புதங்கள் அற்றுப்போய் இருக்கின்றன – அந்த கொலொஸஸ்,

பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள்,

மற்றும், அலெக்ஸாந்த்ரியாவின்

அனைத்துச் சுவடிகளையும் கொள்ளுமளவிலான

இக்காட்சிக்கூடத்தின் வெறுமையான அடுக்குகள்.

என் அன்பே, நான் இதன் காப்பாட்சியரிடம் கோரியிருக்கிறேன்.

அவர் ஒரு காலியான பெட்டியை தேடிப்பெற்றிருக்கிறார்,

நீ இனி என்றுமே எழுத மாட்டாத  உன் கவிதைகளைக்

குறிப்பதாக. இது மற்றதோடு வைக்கப்படும்

கவிஞர்களின் காட்சிக்கூடத்தில். அடுத்திருக்கும்,

ஒரு காலியான அறை, எதிரொலிக்கிறது,

அவற்றைப் புதைத்த இடத்தைச் சொல்லுமுன்

இறந்த கடல் கொள்ளைக்காரனின்

நகைகள் சிதறி விழுந்த சத்தத்தில்.

நீ பொருட்படுத்தமாட்டாயே

உன்னுடைய சில கவிதைகளை

என் சொந்தச் சேகரிப்புக்காய்

வைத்துக்கொண்டேன்,

எவற்றைச் சொல்கிறேனென

உனக்குத் தெரியுமென நினைக்கிறேன்.

ரெபெக்கா தன் கவிதைகளில் பலவிதப் பரிட்சார்த்த முயற்சிகளைச் செய்பவர். இரண்டு கவிதைகளை முகநூல் ஸ்டேடஸ் அப்டேட்களைக் கொண்டு எழுதியிருக்கிறார். அவற்றைப் பற்றிச் சொல்கையில் அவை விலாசம் பற்றிய கேள்வியை அணுகுவதாய் சொல்கிறார். “ஸ்டேடஸ்ஸை யாருக்காக போடுகிறோம்? நம் 574 நெருங்கிய நண்பர்களுக்காகவா? என்ன நினைத்து? அவர்களில் யாராவது அதைப் பார்ப்பார்கள் என்றா? அல்லது அதைப் பொருட்படுத்துவார்கள் என்றா? இக்கவிதைகள் ஒரு வகையில் பரீட்சார்த்த முயற்சி – ஆனால் அவை உண்மையானவை, பாசாங்கற்றவை, அதே சமயத்தில் அவை தமது அபத்தத்தை தெளிவாய் தெரிந்தவை.”

பின்வரும் கவிதையும் ஸ்டேடஸ் அப்டேட்கள் போலவே ஒரு சிறு நேர இடைவெளியில் அவர் காணும் காட்சிகள் அவர் மனதில் எழுப்பும் சின்னச்சின்ன எண்ணங்களின் கோர்வையாய்.

fbstatus

இலையை வரையச் சொன்னால்

ஒரு குழந்தை தேர்வு செய்யும்

பச்சையில் ஒரு இலை.

*

இந்த அடர் இதழ் ரோஜா

இந்நாளில் என்னோடு கடிதங்களில்

உரையாடுபவனின்

பேச்சைப் போல ஈரம் மிகுந்திருக்கிறது.

*

பறவையால் பழங்களற்ற மரங்கள்

வண்டால் இலைகளற்ற மரங்கள்.

*

என் தொடர்பாளன்

முடிவெடுக்கத் தயங்குபவன்

எனக்கோ தயங்கும் ஆண்கள் பழக்கமில்லை.

*

வெள்ளை ரோஜா மலர்

ஓரங்களில் பழுப்பேறிக்கொண்டு.

காகித அட்டை புத்தகங்கள்.

*

வீட்டினுள், என் தாய்

நான் ஒருபோதும் கேட்டிராத ஒரு பாடலை

முணுமுணுத்துப் பாடிக்கொண்டு.

*

பலவகையான தெய்வீகம்.

*

பனிக்கால மான்களால் பட்டையற்றுப்போன மரங்கள்.

*

என் தொடர்பாளன்

அவனை  நான்  காதலிக்க விடமாட்டான்.

*

பச்சைநிறமானவை

என்ன மென்மையாய் சப்திக்கின்றன.

*

குறுக்காய் போட்ட கால்களைப் பிரிக்கிறேன்

காலணியற்ற பாதத்தால் உணர்கிறேன்

சூரியன் கல்லைச் சூடாக்கியிருப்பதை.

சூரியனைப் பகிர்கிறேன்.

*

கல்லையும் கூட.

*

—- ரெபெக்கா லிண்டென்பெர்க்
Rebecca Lindenberg, “Dispatches from an Unfinished World” from Love, an Index. Copyright © 2012 by Rebecca Lindenberg.