மேல்நாட்டுச் செருப்பு

மித்திலனின் கட்டுரை மற்றும் பஞ்சநதத்தின் கடிதத்தை ஒட்டி நடந்த விவாதத்தில் பிரகாஷ் சங்கரனின் கருத்துக்களின் சில பகுதிகள்.

poli90

1. //Logocentric சிந்தனைதான் இன்றைய மேற்குச் சிந்தனை என்பதோடு நவீனமாகுதல் என்பது அதீதமான மொழி மைய, எழுத்து மைய, புத்தக மைய, பிரதி மைய நடைமுறை. இதை நிராகரித்தால், மொழி இன்றி அனுபவங்கள் தன்னிலை தாண்டிய சமூக உடன்பாட்டுக்குச் செல்ல வழியுண்டா என்று கேள்வி எழும். அப்படிப்பட்ட ஒரு நடைமுறை இன்று நாம் மதித்துப் பேசக்கூடிய கருதுபொருளாக இருக்க முடியுமா என்றும் கேள்வியைத் தவிர்க்க முடியாது.//

இதைத் தான் ‘மேற்கு வைக்கும் -நமக்குப் பொருந்தாத ஒரு கருத்துச் சட்டகத்தை கீழை நாடுகள் வாங்கித் தலையில் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா?’ என பாலகங்காதராவும், கட்டுரை வழியாக மித்திலனும் நிராகரிக்கிறார்கள். இதற்கு உதாரணமாகத் தான் லிங்க வழிபாடு என்ற தத்துவம் பண்டைய இந்துச் சமூகத்தில் எப்படி இருந்தது, மேற்கத்திய ஆய்வாளர்கள் அதை எப்படி தங்கள் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் போட்டு மோலோட்டமாக “ஆண்குறி வழிபாடு” என்று குறுக்கினார்கள், இப்போது அதை மறுத்து அதன் குறியீட்டு ஆழத்தை விளக்க வேண்டுமானால் நாமும் அவர்கள் கருத்தியல் கருவிகளையே ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு எவ்வாறு ஆளாகிறோம், “அந்த அளவுகோளிலேயே பேச வேண்டும் என்பதே சரி” என எப்படி இந்திய அறிவுஜீவிகளும் இயல்பாக மனதில் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று விளக்குகிறார்கள்.

இந்துமதத்தின் பல சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் வரலாற்றுக் காலத்துக்கும் மிக முந்தைய ஆதிப்பழங்குடிக்கால வாழ்க்கையில் வேர் கொண்டு இன்று வரை அறுபடாது தொடர்ந்து வளர்ந்தபடி வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீண்ட அதன் வளர்ச்சிப் போக்கில், ஆரம்பகட்ட எளிய வழிபாட்டு முறைகள் தத்துவார்த்தமான உட்பொருள் கொண்ட குறியீடுகளாகவும், சடங்குகளாகவும் செறிவுபடுத்தப்பட்டு அழமும் விரிவும் கொண்டதாக இன்று உருப்பெற்றுள்ளன. லிங்க வழிபாட்டை எடுத்துக் கொண்டால், அது பழங்குடி வாழ்க்கையின் வளச்சடங்குகளில் இருந்து வளர்ந்ததாக இருக்கலாம் என்று கருதும் சிந்தனைப் பள்ளியும், அல்லது, சுவாமி விவேகானந்தர் உட்பட பலரால் விளக்கப்படும் ‘ஸ்தம்ப வழிபாடு’ என்பதன் நீட்சியே லிங்க வழிபாடு என்னும் சிந்தனைப் பள்ளியும் இம்மண்ணில் உள்ளது. கோள்கள், நதி, மரம், கல், பறவை, விலங்கு, சகமனிதன் என இப்பிரபஞ்சத்தில் உள்ள எதையும் தீயதின் உருவமாகப் பார்க்காமல், அனைத்திலும் ஒரே பிரபஞ்ச சாரத்தையே -மேண்மையின் உருவமாகவே காண்பவை இந்துமத வழிபாட்டு முறைகள். ஆனால், ஒரே இறைவன்-ஒரே இறைத்தூதர்-ஒரே இறை நூல் என்னும் எளிய நேர்கோட்டு ஆபிரகாமிய மதச்சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த மேற்கின் கலாச்சார ஆய்வு மனங்கள், அவற்றின் சிந்தனைக்கே எட்டாத, “நான் உட்பட இங்குள்ள அனைத்தும் இறையின் அம்சமே” என்னும் மகத்தான இந்து சிந்தனை முன் பிரமித்து நிற்கின்றன. அவர்களால் விளங்கிக் கொள்ளவும், செரித்துக் கொள்ளவும் முடியாத இந்தச் சிந்தனை உச்சத்தை மறுப்பதற்காக அதன் தத்துவார்த்த சாரத்தை புறந்தள்ளிவிட்டு “பயத்தால் வழிபடுகிறார்கள்” என்று ஒற்றைப்புரிதலில் குறுக்குகின்றனர். மேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.

ஃபிராய்டும் ஒரு உதாரணம். மேற்கு மனங்களையும் அதன் கலாச்சார பின்புலம் சார்ந்து அவர்கள் மனங்களில் எழும் சிக்கல்களையும் வைத்து அவர் உருவாக்கிக் கொண்ட புரிதல்களை, எப்படி உலகம் மொத்தத்துக்கும், எல்லா கலாசார பண்பாட்டுப் பின்புலம் கொண்ட மக்கள் குழுவிற்குமான புரிதலாக ஒரே நாடாவால் சுற்றினார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கிழக்கின் கலாச்சாரத்திற்கு -குறிப்பாக இந்தியப் பண்பாட்டுப் பின்புலமுள்ள வாழ்க்கை முறைக்கும், உறவுமுறைகளுக்கும், மனஓட்டத்துக்கும் சிக்மண்ட் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு எல்லா சூழலிலும் கைகொடுக்காது. ஒரு உதாரணம் – சத்யஜித் ராயின் ‘தேவி’ படத்தில் தயாமயி (ஷர்மிளா தாகூர்) தேவியாவதற்கு முன் வயதான தன் மாமனாருக்கு மருந்து கொடுத்து, கால் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதுபோல ஒரு காட்சி வரும். பின்னர் மாமனாரின் கனவில் அவரின் மருமகளே தேவியாக தோன்றுவாள். இதை ஃபிராய்டிய உள்ளோட்டம் இருப்பதாக விளங்கிக் கொண்டு விமர்சனம் செய்தார் உலகப்புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட விமர்சகர் பௌலின் கேல். தாய், தந்தை, உடன்பிறந்தோரைத் தவிர பிற அனைவரையும் ஆண், பெண் என்று பாலினம் மட்டுமாகவே பார்க்கும் மேற்கின் கலாச்சாரத்தில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் தாயாகவும், தந்தையாகவும், சகோதர சகோதரியாகவும், பாட்டன் பாட்டியாகவும் பார்ப்பதையும், அவர்களைத் தொட்டு பணிவிடை செய்வதையும் இப்படித்தான் தவறாக பாலியல் சிக்கலாக உளப்பகுப்பாய்வு செய்யமுடியும்.

இந்த ஃபிராய்டிய நனவிலி, உளப்பகுப்பு ஆகிய உளவியல் அறிதல் கருவிகளை மீறி ஒரு படி முன்னேறி கூட்டுநனவிலி வரை சென்றதாலேயே யுங் நமக்கு நெருக்கமாக வருகிறார். யுங்கின் வழியாகப் பார்த்தால் ‘பித்தில் பிறந்த போதம்’ சரியானதாகவே இருக்கும். இது நம் பண்பாட்டில் கூடுநனவிலியில் இருந்து நாம் உருவாக்கிக் கொள்ளும் குறியீடு, சடங்கு, வழிபாட்டு முறை.

2. // ஆண்குறி வழிபாடு குறித்த நம் எதிர்வினைகள்தான் அதைக் கொச்சைப்படுத்துகின்றன. லிங்க என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருத அகராதியே ஆணுறுப்பு என்றுதான் அர்த்தம் சொல்கிறது.//

இல்லை, இங்கு தான் மொழியைத் தாண்டிய புரிதல் முக்கியமாகிறது. இந்தியக் குறியீட்டு, படிம வெளிக்குள் புழங்காத மேற்கு மனம் மொழியில் இருந்து நேரடி அர்த்தத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதை இந்துக்கள் நிராகரிப்பது, ‘ஆண்குறி’ என்பதை விக்டோரிய ஒழுக்கவியல் நோக்கில் சங்கடமான / வெட்கத்திற்குரிய ஒரு செயலாக எடுத்துக்கொண்டு எதிர்ப்பது ஆகாது. மாறாக அந்த குறுகிய புரிதலை மறுத்து, சிவ சக்தி ஐக்யம் என்னும் ஆழ்ந்த குறியீட்டை விளக்கும் முயற்சியே. இந்த சிவசக்தி ஐக்யம் என்பது இன்னும் பிரம்மாண்டமாக பல தளங்களில் விரியும் ஒரு படிமம். அதை விளங்காமல் தட்டையாக ஆண்குறி வழிபாடு என்று மேற்கத்தியர்கள் குறுக்கினால், நாம் அதை எதிர்ப்பது இயல்பே.

முதலில் லிங்கம் என்ற சொல்லிற்கு ஆண்குறி என்று பொருளல்ல. அடையாளம், குறியீடு என்பதே லிங்கத்தின் நேரடிப் பொருள். எடுத்துக்காட்டாக, பாலின அடையாளம் சம்ஸ்கிருதத்தில் புல்லிங்கம், ஸ்த்ரீ லிங்கம், நபும்ஸக லிங்கம் என்னும் சொற்களால் குறிக்கப்படும். ஸ்த்ரீ லிங்கத்தில் லிங்கத்தை ஆண்குறி என எடுத்துக்கொண்டால் அர்த்தமே மாறிவிடும். அதுபோலவே லிங்கத்துடன் தொடர்புடைய ஒற்றை வேரிலிருந்து கிளைத்த வார்த்தைகளே lingua -> language. லிங்கம் ஆண்குறி என்றால் மேற்கத்திய மொழியே பாலினக்குறியுடன் தொடர்புடையதுதானா?

சிவனின் உருவ வடிவம் -பரமேஸ்வரன், நடராஜர். உருவரு -லிங்க அடையாளம். அருவம் -ஒளி.

அதுபோலவே யோனி என்ற சொல்லும். அது படைப்பின் குவிமையத்தைச் சுட்டும் சொல். ஒரு கலைஞனின் படைப்பு மனத்தின் மையத்தைக் கூட அவர் யோனி என்று சொல்லலாம். அது பெண்ணுறுப்பிற்கும் சொல்லானது. அவ்வளவு தான்.

3. //காத்திரமான தற்கால இந்தியச் சிந்தனைக்கு வழி கோல பண்டை இந்தியச் சிந்தனையை மீட்டுப் புனருத்தாரணம் செய்வது வழியாக இராது. ஏனெனில் இயற்கைச் சூழலில் இருந்து துவங்கி, உடைகள், பண்டங்கள், உணவுகள் என்று எதிலும் தொடர்ச்சி இல்லாத ஒரு வாழ்வாகிப் போனதில் உலகச் சூழலுக்கு எதிரான இந்தியச் சூழலை நிறுவ முடியாது, அப்படி ஒரு இந்தியச் சூழலுக்கு உலகத்தோடு ஒத்திசைந்து இயங்காத தன்னிச்சை இயக்கம் என்பதும் கிட்டாது. ஊடுருவும் உலகச் சூழல்- பண்டம், ஆடை, பணம், கனிமங்கள், உணவுகள், ஊடகங்கள், ஆர்ப்பரிப்பான ஆசைகள், அழகியல் விழைவுகள், இலக்கியம், இசை என்று என்னென்னவோ பாய்ந்திருக்கிறதை வெளியேற்றி தூய்மைப்படுத்த முடியாத கலவை இங்கு உள்ளது.//

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் மதத்தைச் “சுத்தப்படுத்தும்” வஹாபியம் போல் இல்லை இந்துமத புணருத்தாரணம். இந்து மதத்தைத் “தூய்மைப்படுத்துவது” என்ற பெயரில் அதன் பண்மைத் தன்மையை அழிப்பதோ, மாற்றங்களை வெறுப்பதோ, பழைமைவாதத்திற்குள் ஒடுங்கி மதத்தை இறுக்கமான நம்பிக்கைகளின் இருட்டுப் பெட்டியாக்குவதோ இல்லை என்பதில் முக்கியமான இந்து மத அறிஞர்கள் எக்காலத்திலும் தெளிவாகவே இருந்து வருகின்றனர். இந்துமத சீர்திருத்தம் என்பது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்ட சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றிலுள்ள தத்துவப் பின்புலத்தை முக்கியத்துவப்படுத்தலும், அவற்றை சமூக தேக்கநிலையிலிருந்து மேலெடுத்து ஜனநாயகப்படுத்தலுமே. திரித்துவிளக்கப்படும் இந்து மத தொண்மங்களுக்கான பாரம்பரிய தத்துவார்த்தமான விளக்கத்தை அளிப்பதும் அதில் ஒன்று, அதன் அங்கமாகத் தான் லிங்கவழிபாடு போன்ற விவாதங்களில் இந்துமதத் தரப்பு மேற்கின் பார்வையை அதன் தொடக்கத்திலேயே நிராகரிக்க வேண்டியுள்ளது.

***

(லிங்கம், யோனி குறித்தான தத்துவார்த்த தகவல்கள் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் கட்டுரைகளில் இருந்தும், உரையாடல்களில் இருந்தும் அறிந்து கொண்டவை. அவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்)