பிரித்தானிய சின்னத்திரையில் குற்றப்புனைவுகள்

கொதிக்கும் பாத்திரம் கூட உடனே உறைக்காத உறை பனி காலத்தைத் தாண்டி வந்த ஒரு அற்புத ஆங்கில வசந்த காலத்தில் சற்று அதிக உற்சாகப்பட்டு கால்பந்து விளையாட முயற்சித்து கால் முட்டியை உடைத்துக் கொண்டுவிட்டேன். எனவே கொஞ்ச காலம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவேண்டியிருந்தது. மழை இல்லாத சமயங்களில் நானிருந்த வீட்டின் பின்கட்டு குட்டி தோட்டத்தில் போய் நொண்டியபடியே போய் அமர்ந்துகொள்வேன்.

தோட்ட எல்லையோடு பின் வீட்டுத்தோட்டம் சந்திக்கும் புள்ளியில் அந்த பின் வீட்டு தாத்தா எப்போதும் கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பார்.

சும்மாவே இருக்க மாட்டார். ஏதாவது தோட்டவேலை, கதவுகளுக்கு பெயிண்ட் அடிப்பது, செடிகளை உற்று நோக்கிக்கொண்டு இருப்பது, திடீரென்று தண்ணீர் விடுவது, எதோ தொலைத்துவிட்டதை தேடிக்கொண்டு அல்லது எதையாவது வெட்டிக்கொண்டு என்று துறுதுறுவென்றே இருப்பார்.

இவர் மட்டுமல்ல பொதுவாகவே இந்த பிரிட்டிஷ் காரர்களே இப்படித்தான். எப்போதுமே கொஞ்சம் வெளிச்சம் வர கதவருகே காத்துக்கொண்டே இருப்பார்கள் போல. வந்ததும் சடாரென கதவைத் திறந்து பரபரப்பாக தோட்ட வேலைகளை ஆரம்பித்துவிடுவார்கள்.

காலை நீட்டி உட்கார்ந்து இந்த பிரிட்டிஷ் மக்களின் மோகம் எதிலெல்லாம் உண்டு என்பதை குறித்து ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் என்னவெல்லாம் இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

  • மோட்டார் கார்கள்
  • கால்பந்து
  • கிசுகிசு
  • பழம் பெருமை, வெற்றிகள் (தோல்விகளையும் – டன்கிர்க்/போயர்)
  • உலகமே தங்களுடையது என்ற எண்ணம் (இன்னுமா என்று வியப்பாக இருக்கலாம். எனக்கென்னவோ அப்படித்தான் படுகிறது)
  • உலகத்தின் சகல மூலைகளிருந்து பழம், அரிய பொருட்களை தூக்கிக் கொண்டுவந்து (ராஜா/ராணிக்கு ‘பரிசாய்’ கொடுக்கப்பட்டதாம் – நம்பிவிடுங்கள்!) இவர்கள் ஊர்களிலுள்ள மியுசியங்களில் வைத்துக் கொள்வது (அப்படி வைத்திருப்பதனால்தான் இன்னும்அவைகள் இருக்கின்றன, முழுதாய் இருக்கின்றன என்பதும் உண்மைதான்)
  • பழைய ‘ராஜ்’ நினைவுகள்
  • உலக உணவுகள் தயாரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (Saturday kitchen, master chef…) என்னைப் பொருத்தவரை உலகிலேயே படு டல்லான உணவு எது என்றால் பிரிட்டிஷ் உணவுதான் என்பேன் – வெறும் உருளைக்கிழங்கு வருவல்களும், உப்புஉறைப்பில்லாத மீனும்…ச்சீ! எந்த உணவையும் குறை சொல்லத் தெரியாத நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கூட பிடிக்காது!
  • பிரிட்டனின் டாப் பிரபல உணவு – வேறேன்ன, நம்ம ‘கறி'(curry) உணவு தான்! எதையாவது கொண்டாடவேண்டுமென்றால் உடனே இந்திய உணவகங்களுக்கு போய்விடுவார்கள் (நடத்துபவர்கள் பெரும்பாலும் பங்களாதேஷிகள்)
  • ராணி குடும்ப விவகாரங்கள்

நீங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளை கொஞ்ச நாட்கள் பார்த்தால் போதும், இந்தப் பட்டியலில் கண்டிப்பாய் குற்ற ட்ராமாக்களை சேர்த்துவிடுவீர்கள்.

bluemurder

முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் என்று பார்த்தால் பிபிசி, ஐடிவி, சேனல் 4, சேனல் 5.- இவையே முக்கிய சேனல்கள். ஒவ்வொன்றிற்கும் மூன்று நான்கு +1 எனும் துணைச் சேனல்கள். எல்லா சேனல்களும் எல்லா நிகழ்ச்சிகளையும் கலந்து கொடுக்கின்றன -செய்திகள், டாக்குமெண்டரிகள், விளையாட்டுகள் (கால்பந்தும் ரக்பியும் தான் முக்கியமானவை; கிரிக்கெட் ஒரு மூலையில்; அல்லது ஸ்கை விளையாட்டு சேனலுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்), திரைப்படங்கள், ட்ராமாக்கள், இத்யாதி, இத்யாதி…

இந்த வரிசையில் அநியாயத்திற்கு குற்ற புனைவுகள் தொலைக்காட்சி திரைகளில் வந்துகொண்டே இருக்கும்.
New Tricks
Touch of Frost
Blue Murder
Inspecter Morse
Wallander
Murder, she wrote

இதைத்தவிர சொல்வனத்தில் அஜய் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டபடி “புலன் விசாரணை நடக்கும் முறை: விசாரணை செய்பவர்கள் மனதிற்குள்ளேயே அனைத்தையும் கண்டுபிடித்து, பின்னர் குற்றவாளியை எதிர்கொண்டு, குற்றவாளிகளும் தன் குற்றத்தை எந்த விதஆதாரமும் (material evidence) இல்லாமல் ஒப்புக்கொள்ள” வைக்கும் டாக்டர் வாட்சனின் நண்பர், போய்ரட், மார்பிள்…கதை இலாக்கா ஆசாமிகள் எப்படி வெரைட்டித் தரலாம் என்று பெரிய பெரிய castleல்களில் ரூம் போட்டு யோசித்திருப்பது நன்றாக தெரியும்

ஏன் இந்த குற்ற தொலைக்காட்சி தொடர்கள் இவ்வளவு பிரபலமாக, டெலிவிஷனைத் திறந்தால் குளவிகளாக கொட்டிக்கொண்டே இருக்கின்றன?

காரணங்கள் பொதுவாக தெரிந்தவைதான். பார்வையாளர்கள் அவர்களது அலுப்பான, ஒரே மாதிரியான தொடரும் வாழ்க்கையிலிருந்து, சலிப்பான காலநிலையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு, உலகிற்கு மாறுவதற்கான ஆர்வம்தான் – ஒரு மணி அல்லது இரண்டு மணிநேரங்களுக்காவது. ஒரு மாதிரி சாலை விபத்தை வேடிக்கைப் பார்ப்பது போன்று. பார்த்து சுவாரசிய விவரங்களை தெரிந்துகொண்ட பின் பிரச்சனையில்லாத அவரவர் வாழ்க்கைக்கு போய்விடலாம் பாருங்கள்.

Who done it யார் செய்தது என்னும் வழமையான கேள்விக்கான விடையே பெரும்பான்மையினரின் ஆர்வத்திற்கான முக்கிய காரணம். வேறு சிலருக்கு குற்ற காட்சிகளின் விரிவான தகவல்கள், துப்பறிவாளர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் நடக்கும்வாதங்கள், செயல்கள் ஈர்க்குமென்றால் இன்னும் சிலருக்கு அதன் சம்பந்தமான சட்ட சிக்கல்கள், நடைமுறைகள் ஈர்க்கும் காரணிகள்.

இவை எவையுமே பார்வையாளரின் இயல்பு வாழ்க்கையில் சாத்தியமில்லை, இல்லையா?

மேலும் பிரித்தானியாவிற்கே உரித்தான சலிப்பான வானிலையும் காரணமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. அஜய்யின் ஒரு குற்ற புனைவு கட்டுரையில் கோலின் டெக்ஸ்டர் ஒரு விடுமுறை நாளில் குடும்பத்துடன் மழையால் விடுதியின் உள்ளே இருக்கவேண்டிய கட்டாய சமயத்தில்தான் இன்ஸ்பெக்டர் மோர்ஸ் என்ற தொடரை எழுத ஆரம்பித்ததாக கூறுகிறார். இது போல பணம் செய்து விடுமுறைக்கு இன்னொரு ஊருக்கு போகும்போது மழைக்கொட்டிக்கொண்டே வெளியே போக முடியாமல் இருந்தால் என்ன செய்யலாம்?

வயிற்றெரிச்சலில் கொலை செய்யலாம் அல்லது கோலின் டெக்ஸ்டர்போல கொலைகளை துப்பறிவர்களைப் பற்றிய கதை எழுதலாம். பிரிட்டன் அல்லது ஸ்கேண்டிநேவிய நாடுகளில் ஒரு வார விடுமுறையில் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் மழை நிச்சயம் (இல்லையெனில் மூதாதையரின் புண்ணியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்)

இப்படி தொலைக்காட்சியைத் திறந்தால் மாற்றி மாற்றி கொட்டிக்கொண்டே இருந்தது. திரும்ப திரும்ப திருட்டு, கொலை – ஆற்றில் ஆண் பிணம், பெண் காணாமல் போதல், குழந்தைக் கடத்தல், தொடர் கொலைகாரர்கள் விதவிதமான வகைகளில்,முறைகளில்…குற்றங்களை கண்டுபிடிப்பவர்களும் எத்தனை வகை…

நம்ம ஊர் சினிமா குழு நடனங்களில் தலைவனையும் தலைவியையும் விட்டுவிட்டு அவர்களை விட நன்றாக ஆடும் மற்ற தோழர்/தோழிகளை கொஞ்சமாகவாவது கவனித்திருப்பீர்கள். அது போல குற்றங்களை விட்டுவிட்டு (எப்படியும் கடைசியில் தெரியத்தான் போகிறது)அவற்றை துப்பு துலக்குபவர்களை, அந்த களங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

பொதுவாக ஒவ்வொரு தொடரிலும் ஒரு ஊர் மற்றும் அதைச்சுற்றிய இடங்களை கதைக் களனாக எடுத்துக்கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு இன்ஸ்பெக்டர் மோர்ஸ் என்ற தொடரின் களம் முழுக்க முழுக்க ஆக்ஸ்போர்ட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள். Blue murder தொடர் மான்செஸ்டர் மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் நடக்கும் குற்றங்கள்.

வழக்கமாய் புலனாய்வாளர்கள் சூப்பர் மேன் அல்லது பாண்ட் ரேஞ்சில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த வாகனத்தையும் இயக்கத் தெரியும், அல்லது சாவியில்லாமலேயே ஸ்டார்ட் செய்யத் தெரியும் (ஸ்டீயரிங் கீழ் குனிந்து இரண்டு கலர் ஒயர்களை தொடுவார்கள்,கார் ஸ்டார்ட் ஆகிவிடும்).

அவர்கள் பலசாலிகள், புத்திமான்கள். தனியே குற்றம் நடக்கும் கொடவுனிற்கு போனாலும், துணைக்கு கூப்பிட்டவுடன் உடனே SWAT குழு வந்துவிடும், இத்யாதி, இத்யாதி…

New Tricks என்ற லேசுரக குற்றத் தொடரில் மூன்று காவல் துறையிலிருந்து ரிட்டையர் ஆன தாத்தாக்கள், அவர்களது பாஸ், ஒரு 40 வயது திருமணமாகாத பெண். கண்டுபிடிக்க முடியாமல் வருடக் கணக்கில் மூடி வைத்துவிட்ட கேஸ்களை (cold cases) பார்ப்பவர்கள் (UCOS – Unsolved Crime and Open Case Squad).

ntc

ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள். முத்துக்கள் மூன்று.

ஜாக் ஹால்போர்ட் – மனைவியை இழந்தவர் – மனைவி இறந்தது விபத்தா/வேண்டுமென்று யாராவது செய்தார்களா என்று தெளிவாக தெரியாது. வீட்டுத் தோட்டத்தில் மனைவியை புதைத்துவிட்டு இரவில் ஒரு ஸ்காட்ச் தம்ளரோடு உட்கார்ந்து மானசீகமாக… இல்லை வெளிப்படையாகவே மனைவியோடு பேசிக்கொண்டிருப்பார். மென்மையான கேரக்டர் – ஜேம்ஸ் போலம் இந்த மென்மையான பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ப்ரைன் லேன் – இவருக்கு மனைவி உண்டு – குழந்தை கிடையாது (ஒரு மகன் இருந்து போல் ஒரு அத்தியாத்தில் பார்த்தேன், அப்புறம் காணோம்). இவருக்கு ஒரு பதறாத, புத்திசாலி மனைவி. ப்ரைன் அவ்வப்போது கிறுக்காய் ஏதாவது செய்வார், சட்டென புதிர்களைஅவிழ்ப்பார். சைக்கிளில்தான் அலுவலகத்திற்கு வருவார். மறக்காமல் சைக்கிளை, ஹெல்மட் தலையுடன் அலுவலகத்திற்கு உள்ளே தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்.

துப்பு துலக்கும் போகும்போது லைப்ரரியோ, பீர் தயாரிக்கும் brewerரோ தனியாக போய் விடுவார். பழைய காவல் துறை அணுகுமுறையுடன் நவீன கால துணையையும் சேர்த்துக்கொள்வார். (சமீபத்தில் வந்த எபிசோட்டில் டிவிட்டரில் இருக்கிறார் – Tiptop cop என்றபெயரில்!). குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் ஆலன் ஆர்ம்ஸ்ராங்க் (Alun Armstrong) என்பவர் நடிக்கிறார்.

Brave Heart, Patriot Games, Sleepy Hallow போன்ற பல படங்களில் இவரது முகத்தைப் பார்த்திருக்கிறேன். கனத்த குரலோன் மற்றும் உடலோன்.

மூன்றாமவர் ஜெர்ரி. அந்தக்காலத்து ப்ளேபாய் – ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், குழந்தைகள், ஜாலியான பேர்வழி…டென்னிஸ் வாட்டர்மேன் (Dennis Waterman) இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். Sweeney போன்ற அரத பழசான தொலைக்காட்சித்தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர்களின் பாஸான டிடெக்டிவ் சான்ரா புல்மேன் – இந்தம்மா அதட்டும் உடலும் குரலும் கொண்டவர்.

மூவருக்குமே கொஞ்ச தூரம் திருடனைத் துரத்தினால் மூச்சு முட்டும், தலை சுற்றும். நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். லண்டன் கதைக்களம். பாஸ் ஒருவரைத் திட்டும் போது மற்ற இரு கிழவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வதும்,பாஸ் டென்ஷனாக இருக்கும் போது மூவரும் அவர்களுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வதும்…சுவாரசியமான கதா பாத்திரங்கள். கேஸ் விஷயமாக தொலைவில் உள்ள ஊருக்கு அல்லது மற்ற ஐரோப்பிய நாட்டிற்கு போகவேண்டும் என்றால் ட்ராவல் பில் அப்ரூவ் ஆகுமோ என்று முதலில் கவலைப்படுவது போன்ற இயல்பாக நடைமுறைகளும் இருக்கும்.

Pub வராத, பீர் குடிக்காத எபிசோடே இருக்காது…

****

துப்பறியும் தொடர்களாக இருந்தாலும் பிரிட்டுகளுக்கே உரித்தான ஆச்சரியக்குறிகள் இல்லாத நகைச்சுவை (குசும்பு என தமிளில் அழைக்கபடலாகும்) இருந்துகொண்டே இருக்கும்.

உதாரணமாக இன்ஸ்பெக்டர் மோர்ஸ் என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடரில் ஒரு கேஸ் விஷயமாக மோர்ஸும் அவருடைய உதவியாளர் லூயிஸும் கார்ப் பயணத்தில் பேசிக் கொண்டே போவார்கள் (மோர்ஸ்தான் ஓட்டிச் செல்வார்). லூயிஸ் சற்றே கண்ணயர்ந்துவிடுவார். சற்று நேரம் கழித்து விழித்து அசட்டுத்தனத்துடன் “மன்னிக்கவும், மோர்ஸ். சற்றே தூங்கிவிட்டேன்” என்பார். அதற்கு மோர்ஸ் ‘அப்படியா, எனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை”

Inspector Morse என்ற பெயரில் Colin Dexter எழுதிய தொடர் நாவல்களை வைத்து எடுத்த தொலைக்காட்சித்தொடர்தான் இது. John Thaw என்ற (காலஞ் சென்ற) நடிகர் Morse வேடத்தில் நடித்திருந்தார். பிரபலமானவர்.

கதையில் திருமணமாகாதவர் (வயது 50க்கு மேல்) இசைப் பிரியர் (க்ளாசிக்கல் ஒன்லி, ப்ளீஸ்). மூடி, எப்போதுமே வாழ்க்கை தந்த ஏமாற்றங்களினால் சலித்த, சுருங்கிய முகத்துடன் பீர் டம்பளை முறைத்தவாறே இருப்பார். ஒரு சிவப்பு ஜாகுவார் கவிதைதான் இவர் வாகனம். கதைக்களம் முழுக்க முழுக்க ஆக்ஸ்போர்ட். விசாரணைகளில் ஆக்ஸ்போர்ட் காலேஜ்களில், தெருக்களில் மழை பெய்த அடையாளங்களுடன் சர்ச் மணி ஒலிக்க விசாரிக்க போய் வந்துகொண்டிருப்பார்கள்.

தொடரின் கடைசி அத்தியாயத்தில் மாரடைப்பில் இறந்துவிடுவார். தற்போது லூயிஸ் என்ற பெயரில் ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது – அதே லூயிஸ், அதே ஆக்ஸ்போர்ட், கூட ஒரு இளம் உதவியாளருடன்.

morse-jaguar2
ஜான் தா நடித்த ஒரு திரைப்படம் – Good night Mister Tom என்னை கவர்ந்த படங்களில் ஒன்று.
***

தொடர்களில் குற்றங்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, துப்பறிவார்களின் பாத்திரங்களைச் சித்தரிப்பது, முக்கியமாய் அவர்களது தின வாழ்க்கைப் பிரச்சனைகளை சித்தரிப்பதும் ஒரு பகுதியாக இருக்கும்.

உதாரணத்திற்கு Blue Murder என்ற தொடரில்- ஜெனனைன் லூயிஸ் – நான்கு குழந்தைகளுடன் விவாகரத்தான நடுத்தர வயது பெண் போலிஸ் அதிகாரி. பாப் தலையுடன் குண்டான, சராசரி பிரிட்டிஷ் நடுத்தர வயது பெண் தோற்றம். அதனாலேயே இந்த தொடர் பிரபலமானது என்று நினைக்கிறேன். உலகத்திலுள்ள அனைத்துப் பெண்களைப் போல அதட்டல் குரல். உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களைப் போலவே அவரது அணியிலிருக்கும் ஆண்களுக்கும் இவர் ஒரு டெரர் பெண் பாஸ்.

சில சமயங்களில் அலுவலகத்திலிருந்து மாலை வீட்டிற்கு கிளம்ப லேட்டானால் விவாகரத்தான கணவருக்கு மொபைலில் செய்தி சொல்லிவிடுவார். முன்னாள் கணவர் வீட்டிற்குப் போய் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார் – இவர் பக்கத்தில்தான் இன்னொருபெண்ணுடன் வாழ்கிறார். கடும் மழையில் பின்னிரவில் அதிகாரி களைத்து வீடு திரும்புவார். சாப்பாட்டு மேசையில் ஒயின் கிளாசுடன் முன்னாள் கணவன் கரிசனத்துடன் பேச ஆரம்பிக்க நமது கதாநாயகி பேச்சைக் கட் செய்து முன்னாள் பதியை நீயே வெளியேபோய்விடுகிறாய் அல்லவா என்று கேட்டு விடுவார்.

அலுவலகத்தில் ஒரு கனிவான, வசீகர சக அதிகாரி இருந்தும் அவரை எல்லை மீற அனுமதிப்பதில்லை! இடையிடையே இருவரும் ஒருவரையொருவர் கனிவாக பார்த்துக்கொள்வார்கள், பேசிக்கொள்வார்கள்.

இத்தனைக்கும் நடுவில் குற்றங்கள், அவற்றைக் கண்டுபிடித்தல்! இதன் களம் மான்செஸ்டர் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

***

உங்கள் உள்ளூர் காவல் துறை அதிகாரி சொந்தமாக ரெஸ்டாரண்ட் வைத்திருந்தால், மாலையில் ஆபிஸிலிருந்து கிளம்புவது போல் ஸ்டேஷனிலிருந்து கிளம்பி அதை கவனித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?

Pie in the sky என்ற தொடரில் – கொஞ்சம் பழசான தொடர் – டிடெக்டிவ் ஹென்றி க்ராப் – குண்டோ குண்டான இன்ஸ்பெக்டர். ஒரு விதமான சுவாரசிய கதாபாத்திரம். சமையலில் மிக ஆர்வம் கொண்டவர். சொந்தமாக ரெஸ்டாரெண்டை வைத்திருக்கிறார்.

தொடர் டைட்டிலிலேயே அவர் புத்தக அலமாரியில் குற்ற புத்தகங்களும் சமையல் புத்தகங்களும் அடுத்தடுத்து சேர்ந்து காட்டப்படும்! கதைகள் அந்த சிற்றூர், அவரது ரெஸ்டாரெண்ட் இங்கயே சுற்றிக்கொண்டிருக்கும்.

சமையல்காரர் – முன்னாள் குற்றவாளி.

***

a380

பொதுவாக எழுத்தாளர்களை விழாக்களுக்கு, பார்ட்டிகளுக்கு, எழுத்தாளர்கள் மாநாடுகளை அழைப்பது நடைமுறை. அப்படி ஒரு எழுத்தாளர் செல்லுமிடமெல்லாம் கொலை நடந்தால்? அதுவும் அந்த எழுத்தாளர் குற்றபுனைவுகளை எழுதுபவராக இருந்தால்?

Murder, She wrote – ஜெஸ்ஸிகா ப்ளட்ஸர் – 80/90களில் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடர் – பிரிட்டனில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. கதாநாயகி, ஜெஸ்ஸிகா பெளட்சர். உற்சாகமாய் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்யும் ஒரு பிரபல,வெற்றிகரமான குற்ற எழுத்தாளர், ஒரு சுறுசுறுப்பான பாட்டி. பல இடங்களுக்கு போவார், பார்ட்டிகள், புத்தகம் வெளியிடும் விழாக்கள். எழுத்தாளர் மாநாடுகள், வார இறுதியில் பண்ணைவீடுகள் இப்படி.

இந்த எழுத்தாளர் எங்கு போனாலும் அங்கு ஒரு திருட்டு, கொலை நடந்துவிடும். இவர் மட்டும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்…:) மற்றவர்கள் எப்படியோ, நான் இவரை சந்திக்க, இவர் கலந்துகொள்ளும்விழாக்களுக்கு போக மாட்டேன்,  இவர் விடுமுறைக்கு போகும் ஊர்களுக்கெல்லாம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டேன்!

கொலை நடந்தபின் உள்ளூர் ஷெரிப் வழக்கம்போல் most likely suspectஐ கைது செய்யத்துணிந்துவிடுவார். (ஒரு எபிஸொட்டில் ஜெஸ்ஸிகாவையே கைது செய்துவிடுவார்!) ஜெஸ்ஸிகா மட்டும் ஒவ்வொரு துண்டு சம்பவத்தையும் ஊசி போட்டு இணைத்தைத்து கடைசியில் குற்றவாளி உடையை அடைந்துவிடுவார். தெளிவான, கொழ கொழ என்றெல்லாம் இல்லாமல் ஆங்கிலம் பேசுவார்(அமெரிக்க தொடர் என்றாலும் கூட). ஆன்ஜெலா லான்ஸ்பரி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் Miss Froyயாக நடித்த ஹாஸ்ய துப்பறியும் படம் The Lady vanishes (ஒரிஜினல் 1938ல்ஹிட்ச்காக் எடுத்தார்) பார்த்திருக்கிறேன். பிரிட்டிஷ் ஒற்றனாக (ஒற்றியாக?) வருவார், பிடித்திருந்தது.

***

கிட்டதட்ட இருபது வருடங்களாக பிரிட்டன் தொலைக்காட்சிகளில் கணீரென வளையவரும் துப்பறிவாளர், யார்க்ஷையர் மேஜர் சுந்தர்ராஜன், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஜாக் ப்ராஸ்ட் வரும் தொடர் Touch of Frost.

உண்மையில் சில காட்சிகளில் தங்கப்பதக்கம் சிவாஜி நடையை நினைவுபடுத்துவார். எல்லா தொடர்களைப்போலவே இந்த தொடரிலும் இவரது மேலதிகாரி லெக்சர்கள் கொடுப்பதில், ப்ரஸ்ஸின் முன் பேசுவதில் ஆர்வம் காட்டுபவர். முக்கிய திருப்பங்களில் இன்ஸ்பெக்டரிடம் அப்டேட் கேட்டு, அனாவசியமாக கோபப்பட்டுக்கொண்டு ப்ராஸ்டை வெறுப்பேற்றிக்கொண்டே இருப்பார். பல் வலி, கேர்ள் ப்ரண்டுடன் டேட்டிங் (வயது கண்டிப்பாய் ஐம்பதிற்கு மேல் இருக்கும்) என்று பல விஷயங்கள் குற்றங்களோடுதொடர்ந்துகொண்டேயிருக்கும்.

***

இவைகளாவது பரவாயில்லை. Whitechapel என்றொரு தொடரின் மையம் அதிர வைத்தது. Jack the Ripper என்ற தொன்ம பிரிட்டிஷ் தொடர் கொலைக்காரனைப் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லையெனில் கீழ்கண்ட சுட்டியின் வழியாக கேள்விப்படுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Jack_the_Ripper

1888 வருடத்தில் தென் லண்டனின் வொய்ட் சாப்பல் (Whitechapel) என்ற பகுதியில் பெண் விபச்சாரிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்கள். தற்போதைய மாலைப்பத்திரிக்கைகள் பாஷையில் “போலிஸ் திணறல்”. கண்டிப்பாய் ஐந்து கொலைகளை இந்தத்தொடர் கொலைகாரனின் பாணியில் சேர்க்கலாம். இதைத்தவிர ஜாக்கா அல்லது ஜாக்கில்லையா என்ற சந்தேகத்தில் மேலும் சில கொலைகள். கடைசி வரை கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்துகொண்டிருக்கலாம், நோயால்இறந்திருக்கலாம்…

இப்போது நீங்கள் லண்டன் சுற்றுலா சென்றால் கூட லண்டன் டவர் ஹில் பகுதிகளில் “அதிகாரபூர்வ ஜாக் தெ ரிப்பர்” டூர்களில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு கொலை நடந்த இடத்திற்கும் சென்று காட்டுவார்கள், விளக்குவார்கள். சரி, இப்போது, நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் ஏன் இதைப் பேசவேண்டும்?

இந்த தொடரில் நிகழ்காலத்தில் ஒரு கொலை இதே வொயிட் சாப்பல் பகுதியில் நிகழ்காலத்தில் நடக்கும். டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஜோன்ஸிற்கு இதுதான் முதல் பெரிய கொலைக் கேஸ். ஆசாமி OCD என்ற Obsessive–compulsive disorder நோயால் அவதிப்படுபவர். அவரது அணியினரின் ஏளனப் பார்வையில் அவர் ஒரு “ப்ளாஸ்டிக் அல்லது பேப்பர் போலிஸ் அதிகாரி”. இவர் எதைச் சொன்னாலும் ஒரு நொட்டை சொல்வார்கள். குழு கூட்டத்தில் திடீரென ஒரு திருப்பு முனையாக ஜோன்ஸ் எதையாவது “கண்டுபிடித்து” (lead) அதை விசாரியுங்கள் என்று சொன்னால் அலுவல நேரம் முடிந்துவிட்டது, ஓவர் டைம் ஒத்துக்கொண்டால் இன்று வேலை, இல்லையெனில் நாளைக் காலைதான் என்று நக்கலாக சொல்லி, நக்கலாக பார்த்துக்கொண்டே கோட்டை எடுத்துக்கொண்டு செல்லும் குழுமணிகள்.

சந்தர்ப்பம் கிடைத்தால், தைரியம் வாய்த்தால் நம்மில் பெரும்பாலானோர் இப்படித்தான் செய்வோம்…ஹும், பெருமூச்சுதான் விட முடிந்தது!

இரண்டாவது கொலைக்குப்பின் ஒருவர் வருகிறார். அவர் ஜாக் த ரிப்பர் டூர் வழிகாட்டி. மனுஷர் எந்த கொலை, என்று, எத்தனை மணியளவில் நடந்தது, உடலின் எந்த கொலையில் எந்த பாகங்கள் கிழிபட்டன, எத்தனை கத்திக்குத்துகள் என்ற விவரங்களை அத்தனை விரல்களின் நுனிகளிலும் வைத்திருக்கிறார். நகங்கள் வெட்டப்பட்டால் என்ன ஆகுமோ என்று நினைத்து அதைப் பற்றிய ஒரு புத்தகமும் போட்டிருக்கிறார். இவர் இன்ஸ்பெக்டரிடம் இந்த கொலைகள் ஜாக் தெ ரிப்பரை ஒத்த ஒருவன் நூறு வருடங்களுக்குப் பின் அதே இடங்களில் அதே மாதிரி கொலைகள் செய்ய ஆரம்பித்திருக்கிறான் (copy cat) என்று கண்கள் மின்னச் சொல்கிறார். சுவாரசியமான தியரி என்று இன்ஸ்பெக்டர் நினைக்க குழுவினரோ வழக்கம் போல கடலை எடுக்கப்பட்ட தொலியாய் இந்த தியரியைஒதுக்குகிறார்கள்.

அடுத்த கொலையும் எதிர்பார்த்தபடியே நடக்கிறது….கடைசியில் ஒரு மலிவான கிளைமாக்ஸில் நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது போலவே கொலையாளி அடையாளம் காணப்படவேயில்லை.

நிற்க, கால் சரியாகி நான் தினமும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தபின் ஒரு முறை லண்டனிலிருந்து இரயிலில் வீடு திரும்பும் போது ஒரு வழக்கமான (மழை) மாலையில் ஸ்டேஷன் வாசலில் நமது தாத்தாவைப் பார்த்தேன். மெல்ல அவரை கடக்கும்போது மாலை வணக்கம்என்றேன். சென்னை வீதிகளில் இரவு வேளை வலம் வரும் சோன்பப்டி தலைமயிர். இடுங்கிய கண்கள் சிரிக்கும் போது இன்னும் இடுங்கிக்கொண்டன. புருவ முடிகள் எல்லாம் வெள்ளை, போரிஸ் பெக்கர் போல.

தினமும் லண்டனிலிருந்து வேலை செய்து திரும்பும் மகளை கூட்டிச்செல்ல நிற்கிறார். மகள் வீடு அவரது வீட்டிற்கு அடுத்த தெருதான். அன்று மகள் மருமகனுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருப்பதாக போன் வந்தவுடன் என்னுடனே திரும்ப வந்தார்.

அவரிடம் பேச்சு கொடுத்தேன், மெல்ல குற்ற தொடர்களின் பேரில் பேச்சைத் திருப்பினேன். பார்த்தீர்களா, நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைகளைக் கூட விடமாட்டேன் என்கிறார்கள் என்று பேச ஆரம்பித்தேன் (போட்டுப் பார்த்தேன் என்ற வார்த்தை இன்னும்பொருந்துமோ, காண்?)

அவர் யார்? ப்ரித்தானியர் அல்லவா?

உற்சாகமாக “ஹார்ட் பீட்” என்ற தொடர் பார்த்திருக்கிறாயா? 1960களில் யார்க்ஷையர் பகுதிகளில் கதை நடக்கும், மெல்லிய கிண்டலுடன், டிபிக்கல் பிரிட்டிஷ் கிண்டல்” என்று ஆரம்பித்தார். “என்னது 1960ஆ” என்றேன்.

“ஆம். பிரமாதமாக இருக்கும். விக்டோரியன் கால கதைகளை எடுப்பது சுலபம், சகஜம். ஆனால் இந்த அறுபதுகளின் கதைகளன், உடை, போலிஸ் வண்டிகள், என்பீல்ட் பைக், யார்க்ஷையர் கிராமங்கள், அதில் சின்னச் சின்ன திருட்டுகள்” என்று சொல்லிக்கொண்டேபோனார்.

“சுத்தம், ஆளை விடுங்கள்” என்று நினைத்துக்கொண்டேன்.