பாடல்களில் அவர் தாலாட்டு

நம் வாழ்வின் மிகச் சிறந்த கணங்களாய் நாம் உணர்ந்தவை எத்தனையோ இருந்திருக்கும். அந்தந்த பருவத்தில் அவை இனிமையாய் இருந்தாலும் சில அனுபவங்கள் கொஞ்ச நேரத்திலே திகட்டிப் போகும், சில காலப்போக்கில். இளமையில் பிடித்தது முதிர்ச்சி வரவர சிறுபிள்ளைத்தனமாய் தெரியும். சில சமயம் அதற்கான மூட் இருக்காது. ஆனால் வாழ்வில் வேறு சில கணங்கள் உண்டு- சின்னக் குழந்தையின் ஸ்பரிஸம் போல, வீட்டில் அம்மாவின், பாட்டியின் சாப்பாடு போல, நிலவு போல, காலையில் குளிர்ந்த காற்றில் படர்ந்திருக்கும் பவழமல்லி மணம் போல என்றைக்கும், எத்தனை முறை கிடைத்தாலும் சுகமாய் இருக்கும். எனக்கு PBS ஸின் பாட்டுக்கள் அதுபோலத்தான். ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ போன்ற பாடல்களை ஒரு சில ஆயிரம் முறைகள் கேட்டிருந்தாலும் இன்றும் வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ அந்தப் பாடல்கள் வந்தால் அதை முழுக்க கேட்டுவிட்டுதான் ஸ்டேஷனை மாற்றுவேன். இது 60களில் தமிழ்பாடல்களுடன் வளர்ந்த பெரும்பாலானவருக்கும் பொருந்துமோ என்னவோ.

அன்று தொலைக்காட்சி கிடையாது, சினிமா வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ பார்க்கக் கிடைக்கும். பொழுதுபோக்கு என்றால் வானொலி மட்டுமே. தேன் கிண்ணம், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, நெஞ்சில் நின்றவை என்று மாறி மாறி பாடல்கள். பள்ளியில் மழைதினங்களில் வகுப்புகள் ரத்தாகும்போது, அடுத்த வகுப்புக்குக் கேட்காமல் தாழ்ந்த குரலில் ஆடும் விளையாட்டு அந்தாக்ஷரிதான். பள்ளி எக்ஸ்கர்ஷன் போகையில் மட்டும் டீச்சர்களே எங்களுக்கு அந்தச் சலுகையும் கொடுப்பார்கள். பயணம் முழுக்கப் பாடுவோம். அன்றைய எங்கள் வாழ்க்கைக்கு பின்னணி இசை கொடுத்தவர்கள் பிபிஎஸ்ஸும், டி எம் எஸ் ஸும், ஏ.எம்.ராஜாவும், சுசீலாவும், ஜானகியும். இன்றும் சிலசமயம் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்கையில் இவர்களின் பாடல்களும் பின்னணியில் ஒலிப்பதுபோல இருக்கும்.

பாடலைக் கேட்டே பெரும்பாலும் யாருக்குப் பாடிய பாடல் எனத் தெரிந்துவிடும். சிவாஜிக்கும் எம்ஜியாருக்கும் டி எம் எஸ் குரல் குத்தகை. அதே போல் ஜெமினிக்கும், முத்துராமனுக்கும் பிபிஎஸ். காதல் மன்னனுக்கு சரியான ஜோடி பிபிஎஸ்ஸின் மென்மையான குரலும் அலட்டல் இல்லாத பாணியும். பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்றவர்கள் காலத்தில் சினிமா இன்னும் கர்னாடக இசை சார்ந்த ம்யூஸிகல் வடிவத்திலும், அதிக நாடகத்தனமாகவும் இருந்ததினால் அவர்கள் படங்களில் காதல் பாடல்கள் கூட கீர்த்தனம் போல இருக்கும். காதலின் வெளிப்பாடு உணர்ச்சிப் பிரவாகமாக இல்லாமல் மிதமாக ஆனது ஜெமினி கணேசனின் நடிப்பிலும், ஏ.எம்.ராஜா. பிபிஎஸ் போன்றவர்களின் குரல்களிலும்தான்.

pbsbnw1

அன்றைய படங்களில் காட்டிய காதல் வெறும் ‘ஹார்மோன் செய்யும் கலக்கம்” இல்லை. ‘நீ எனதின்னுயிர் கண்ணம்மா, எந்த நேரமும் உந்தனைப் போற்றுவேன்’ என்று அமைதியாய் அன்பாய் சொல்லும் காதல். ‘ஓடிப்போகலாமா’ எனக் கேட்காத பண்பான காதல். உடன் வருகிறென் என்கிற பெண்ணிடம்கூட “யோசிக்கிறேன்’ என்று கண்ணியமாய் நிதானம் காட்டும் காதல். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, உண்மைக்காதல் மாறிப்போகுமா’ என்று உறுதிசொல்லும் காதல் காதலிக்க நேரமில்லாமல் போனவர்களையும் வாய்ப்பு இல்லாதவர்களையும் கூட அந்த “அனுபவம் புதுமை” பற்றி கொஞ்சம் ஆர்வத்தோடு யோசிக்க வைக்கும் காதல் இந்தக்காதலை வெளிப்படுத்தும் பாடல் வரிகளில் இருக்கும் பண்பையும் ஆழத்தையும் அதே அளவு நிதானத்துடனும், காதலுடன், லேசான சங்கோசத்துடனும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குரல் அவருடையது. வார்த்தைகளிலுள்ள கண்ணியத்துக்கு நம்பிக்கை சேர்க்கும் குரல். தேய்ந்த வழக்காய் இருக்கலாம் ஆனால் அவர் குரல் ஒரு தெளிந்த ஓடை போல நிதானமாய் ஓடும். குறைவான ஏற்ற இறக்கங்கள், ஆனால் அவற்றின் எல்லைகளுக்குள் ஒரு நளினம், சின்னச்சின்ன அசைவுகளில் ஒரு அழகு, மயிலிறகு வருடுவது .போல ஆதரவாய், தென்றல் போல குளிர்ச்சியாய், தாலாட்டைப் போல பாதுகாப்பாய் , என்றைக்கும் தெவிட்டாத ஒரு குரல்…’எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே’ என்று சொல்லி அவர் ‘கண்ணம்மா’ என்று விதவிதமாய் சொல்லும்போது அந்த அமுது நம் காதில் ஊறும்.

இன்றைய தலைமுறைக்கு இதெல்லாம் ‘போர் புடிச்ச அந்தக்கால விஷயம்’ போல தோன்றுமோ என்னவோ. அதே குரல் ‘கண் படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா’ என்றும் ‘உந்தன் பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா’ என கிண்டலும் கேலியுமாகவும் ஆனால் ஈவ்டீஸிங் போல் புண்படுத்தாமல். அதிலும் ஒரு மென்மையுடன் பாடி அன்றைய இளைஞர்களைக் கலக்கியிருக்கிறது. இளமைபொங்க ‘ராஜராஜஸ்ரீ ராணி வந்தாள்’ என்றும் ‘நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா.தா தா’ என்று துள்ளலும் போட்டிருக்கிறது. ‘விஸ்வனாதன் வேலை வேண்டும்’ என்று கோஷம் போடுகையிலும் ரௌடித்தனம் கிடையாது ‘ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசன் போல் வருவேன்’ என்று சும்மா பூச்சாண்டி காட்டும். எதிலும் மென்மை எங்கும் அடாவடி என்பதே கிடையாது. அவருக்குப் பெயரில் மட்டும்தான் பயங்கரம். அவருடைய முழுப் பெயர் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ்.

காதலுக்கும் கண்ணீருக்கும் எப்போதுமே நெருக்கமான உறவுபோலும். காதலுக்குப் பொருத்தமான இந்த ரொமாண்டிக் குரல் சோகத்தில் நம்மைக் கரைத்துவிடும். ‘நினப்பதெல்லாம் நடந்து விட்டால்’ பாடலாகட்டும், ‘மயக்கமா கலக்கமா’ வாகட்டும் அதிக ட்ராமா போட்டு ஆர்ப்பாட்டமாய் கத்தாமல், விக்கி விக்கி அழாமல், தன்னிரக்கத்தில் மூழ்காமல், யதார்த்தமாய் ஃபிலசாபிகலாய் ‘ஆமாம் சார் வாழ்க்கை கடைசீலெ இவ்வளோதான்’ என்று நம்மையும் சேர்த்து கண்ணைத்துடைத்து வைத்துக் கொள்ள வைக்கும். முதன்முதலாய் மிஸ்டர் சம்பத் படத்தில் இவர் பாடகராக அறிமுகமான சமயத்தில் இவர் குரலைக் கேட்ட ஜெமினி அதிபர் எஸ் எஸ் வாசன் அப்போது ஜெமினியின் இசைத்துறையின் தலைவராய் இருந்த ஏமனி சங்கர சாஸ்திரியிடம் சொன்னாராம்.”நீங்கள் கூட்டி வந்திருக்கும் பையன் நன்றாக பாடுகிறார். இந்தக் குரலில் இவர் வெறுமே ஹம்மிங் செய்தால்கூட போதும், கல்லும் கண்ணீர்விடும்’ என்று. இரவின் அமைதியில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடலைக் கேட்கையில் தியானம் செய்தது போல் ஒரு அமைதி கிடைக்கும்.

அவர் ஜெமினிக்கும், முத்துராமனுக்கும் பாடியிருந்தாலும் அன்று ரசிகர்களுக்கு இவை எல்லாம் பிபிஎஸ் பாடல்கள்தான். இன்று பாடல்களை பெரும்பாலும் பார்க்கிறோம். அன்று கேட்டோம். இன்று கம்போஸர்களுக்குத்தான் மதிப்பு. இது ராஜா பாடல், இது ரஹ்மான் பாடல் என்று அறியப்படுகின்றன. பெரும்பாலும் யார் பாடினார்கள் என்று தெரிவதில்லை. அன்று பாடல் வரிகளுக்கும், பாடகருக்கும்தான் ரசிகர்கள்.

thespian-rajkumar1

பிபிஎஸ் தமிழ் பாடகர் மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு பெங்களூரில் வந்திறங்கிய முதல் நாள் ‘ஷரணு ஷரணய்யா’ என்ற பக்திப்பாடலைக் கேட்டதும் மெய்சிலிர்த்துப்போனது. பாடியவர் பிபிஎஸ். அப்புறம்தான் தெரிந்தது. கன்னடத்தில் அவர் ரொம்ப பாபுலர் பாடகர் என்று. கன்னட சூபர்ஸ்டார் ராஜ்குமார் சொந்தக்குரலில் பாட ஆரம்பிப்பதற்கு முன் அவர் பாடல்களுக்குக் குரல் பிபிஎஸ்தான். ராஜ்குமார் PBS அவர்களை ‘என்னுடைய சாரீரம்” என்றே சொல்வாராம். அப்புறம் கேட்பானேன், பிபிஎஸ் பாடல்கள் நாள் முழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.. ‘ஆஹா மைசுரு மல்லிகே‘ என்று துள்ளல் பாடல்கள்,, ‘நீ பந்து நிந்தாக நிந்து நீ நக்காக”, ரவிவர்மன குஞ்சதா கலே பலே சாகாதவு’ போன்ற மெலடிகள், ‘பாகிலனு தெரெது சேவெயனு கொடு ஹரியே’ போன்ற உணர்ச்சிமிக்க பக்தி பாடல்கள் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ‘ஆகஷவே பீளளி மேலே நானெந்து நின்னவனு’ என ராஜ்குமாரின் காவியங்களான பங்காரத மனுஷ்யா கஸ்தூரிநிவாசா, பக்த கனகதாசா ,ஷரபஞ்சரா, நியாயவே தேவரு போன்ற படங்களின் பாடல்கள் பிபிஎஸ்ஸின் குரலில் இன்றும் வானொலியில் ஒலிப்பவை. கந்தத குடி படத்திலிருந்து “நாவாடுவ நுடியே கன்னட நுடி’ (நாம் பேசும் பேச்சு கன்னடப் பேச்சு) என்ற பாடல் தேசீயகீதம் போல தினம் ஒருமுறை எங்காவது கேட்கும். பல வருடங்களுக்குப் பின் ராஜ்குமார் தானே பாட ஆரம்பித்ததும், சில சமயம் பிபிஎஸ்ஸுக்கும் ராஜ்குமாருக்குமே எவை தாம் பாடியவை என்று சந்தேகம் வருமளவுக்கு இருவரது குரலும், பாடும் பாணியும் ஒத்திருந்தன.

பிபிஎஸ்ஸின் குரல் ரேஞ்ச் அதிக சாத்தியங்களற்றது என்று சொல்பவர்கள் உண்டு. இருக்கலாம். ஆனால் அந்த ரேஞ்சுக்குள் அவர் பாடல்களில் கொண்டு வந்த அழகு அசாத்தியமானது. இப்போது பல தொலைக்காட்சி சேனல்களிலும் வரும் பாட்டுப் போட்டிகளில் மிகக் கடினமான பாடல்களைக் கூட பாடிவிடும் குழந்தைகள் இவர் பாடல்களைச் சரியாய் பாடத்திணறுவதைப் பார்க்கலாம். இவர் பாடுகையில் அத்தனை அநாயாசமாய் வெளிப்படும் அந்தப் பாடல்கள் மற்றவர்கள் பாடுகையில் உயிரற்றுப் போவதும் உண்டு. அவரது பாடல்கள் டிஸெப்டிவ்லி சிம்பில். கேட்க எளிமையானவை. பாட முயற்சித்தால் தெரியும் அவற்றில் உள்ள சின்ன சின்ன நுணுக்கங்கள். என்று ஒரு பாடல்போட்டியில் ஜட்ஜாக வந்திருந்த பாடகி சொன்னார். ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலில் பல சங்கதிகள் இருந்தாலும் கமகமே இல்லாத ‘நீ’ என்கிற இடம் கூட சிதாரின் மீட்டலை ஒத்திருக்கும்.

அவருக்கு எல்லா விதப் பாடல்களும் பாட முடியாது என்று சொல்பவர்கள் அவருடைய சந்தா ஸே ஹோகா வோ ப்யாரா , ‘அந்தரங்கம் நானறிவேன்’ போன்ற பாடல்களைக் கேட்டிருக்கிறார்களா என்று தெரியாது. முதலாவது TMS தமிழில் பாடிய ‘பூப்போல பூப்போல சிரிக்கும்’ பாடலின் ஹிந்தி வடிவம். ரஃபியின் குரல்போல் இருக்கும் இரண்டாவதைக்கேட்டால் இளம் SPB யோ என் யோசிக்க வைக்கும். ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடலை பிபிஎஸ் குரலில் கேட்க ஆசைப்பட்டால் இதோ ‘நன் எதய மாதெல்ல நீனாடபேகு.’

SPB கூட முதலில் சான்ஸ் கேட்க PBS பாடல்கள்தான் பாடுவாராம். ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைப் பாடுகையில் SPB ஒரு நிகழ்ச்சியில் இதைச் சொன்னார். PBSக்குப் பின் அதே போன்ற குரல் பாடகர்களிடையே தென்படவே இல்லை. என்று சொல்லலாம். SPB, யேசுதாஸ் குரல்களிலும் மென்மையான பட்டின் வழவழப்பையும்,, ரோஜாவின் மிருதுத்தனத்தையும் உணரலாம். ஆனால் கையில் கூட பிடிக்க முடியாமல் வழுக்கிக்கொண்டு போகும் ஒரு இழைநயமும் இனிமையும் PBS குரலுக்கு உண்டு – தேன் பாட்டிலை திறந்து சாய்த்து வைத்ததுபோல. அதனால்தான் ‘பார்த்தேன், சிரித்தேன்’ என்ற பாடலை இவருக்குக் கொடுக்கத் தோன்றியதோ திரு கே. வி.மகாதேவனுக்கு!

80களிலிருந்து அவர் அதிகம் திரைப்பாடல்கள் பாடவில்லையெனினும் பல மொழிகளில் ஒரு லட்சத்துக்கும் மேல் பாடல்கள் எழுதியிருக்கிறார். உருது கஜல்கள் உட்பட. இவரது தமிழ் கஜல்களை பிரபல பாடகர் ஓ எஸ் அருண் பாடி வெளியிட்டுள்ளார். PBS என்ற தன் பெயரை play back Singer என்றும் prayer believer Singer என்று சொல்லிக்கொண்ட இவருக்கு இறைபக்தி அதிகம் . பல மொழிகளிலும் பக்திப்பாடல்களின் கேஸட்டுகள் வெளியிட்டுள்ளார். அவர் இறப்பு ரசிகர்களுக்கு பெரும் இழப்பு எனினும், இத்தனை பாடல்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

PBS இறந்த விஷயம் கேள்விப்பட்ட சில நிமிடங்களில் சில நண்பர்கள் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவரவர்களுக்கு விருப்பமான PBS பாடல்கள் என சொல்லிக்கொண்டே கிட்டத்தட்ட அவரது திரைப்படப் பாடல்களில் அரைவாசி சொல்லிவிட்டோம். அத்தனையும் நினைவிலிருந்தே. கிட்டத்தட்ட 35 வருடங்களாய் அவ்வளவாய் சினிமாபாடல்கள் பாடாத ஒருவரின் இத்தனை பாடல்கள் நினைவில் இருந்தது எங்களுக்கே ஆச்சரியமாய் இருந்தது. இதில் சிலர் தங்களது முப்பதுகளில் இருப்பவர்கள். அப்படி தலைமுறைகளைக் கடந்த தாக்கம் கொண்ட ஒருவருக்கு நிறைய பரிசுகள்/ விருதுகள் கிடைத்ததில்லை என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றுகிறது.