முன் கதை
***
நேற்று இரவு என் நண்பர் வரதன் தொலைபேசியில் சொன்ன விவகாரம், என் உள்தலையைக் குடைந்துக் கொண்டே இருந்தது. நாளையே இதைக் கதையாக்கி குமுதம் பத்திரிக்கைக்கு அனுப்பிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டுத் தூங்கப் போனேன்.
கதை
***
இன்று செவ்வாய்க் கிழமை. எழுந்ததிலிருந்தே, கரப்பான் பூச்சி விர்ரென்று பறப்பது போல அவன் மனதுக்குள் ஏதோ இனம் புரியாத பயம். ஏன், எதனால், என்னவென்று தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமைகளில் அவன் தொழில் செய்ய வெளியில் எங்கும் செல்வதில்லை. அவசரப்பட்டு என்ன தொழிலாக இருக்கும் என்று நீங்கள் எந்த முடிவுக்கும் வரவேண்டாம். அவன் என்றால் சுந்தர் என்கிற சுந்தரவரதாச்சாரி. தொழில் – இப்போதைக்கு ஆயுள் காப்பீட்டு முகவர். கம்பெனியில் இருக்கும்போது எஸ்.வீ. ச்சாரி என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது சுந்தர். சென்னையில் கம்பெனி வேலை நன்றாகத்தான் இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரைதான் படித்திருந்ததால், சாதாரண உதவியாளனாகத்தான் சேர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிப் பின் விற்பனைப் பிரிவில் எழுத்தன். அப்புறம் விற்பனைப் பிரதிநிதி. அவனுடைய பேச்சுத் திறமைக்குக் கிடைத்த வேலை உயர்வு அது. தினசரிப் பயணப்படியாக முப்பது ரூபாய். போதுமான சம்பளம். அன்பான மனைவி கீதா, மகள் ப்ரியா, மகன் ராகவன்.
திடீரென்று ஒரு நாள் கம்பெனியில் ஆட்குறைப்பு என்று சொல்லித் தங்கக் கைகுலுக்கல் என்றார்கள். மேலாளர் கைகுலுக்கிக் கொடுத்த பணத்திலே பித்தளை கூட வாங்க முடியவில்லை. வாங்கியிருந்த கடனை எல்லாம் அடைத்தபின் மிச்சம் இருந்த தொகையிலே சென்னையில் காலம் தள்ளுவது என்பது இயலாத காரியம் என்று தோன்றியது.
அவன் அப்பா விட்டுச் சென்ற சொத்து ஒரு காலி மனை. சேலத்தில் மலை அடிவாரம் பக்கம். எப்படியாவது நிரந்தரமாகக் குடியேறிவிடலாம் என்று முடிவெடுத்து இங்கே வந்து விட்டான். சின்னதாக வீடுகட்டிக் குடிவந்துப் பத்து வருடம் ஆயிற்று. ப்ரியா பட்டப் படிப்பு முடித்துவிட்டு இப்போதைக்கு ஆறு மாதமாகக் காந்திநகரில் ஒரு கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள்.
தற்காலிக வேலைதான். மாதச் சம்பளம் இரண்டாயிரம். காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் புறப்பட்டுப் போனால், திரும்பி வர மாலை ஆறு ஏழு மணியாகும். ராகவன் பன்னிரெண்டாம் வகுப்பு. ஆயுள் காப்பீட்டில் கிடைக்கும் தரகுத் தொகையில் குடும்பம் நடக்கிறது. ஆனால் எதற்கும் பயமோ, கவலையோ படாத அவனுக்கு, இன்று மட்டும் என்ன பயம், எங்கிருந்து வந்தது என்றுப் புரியவில்லை. மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம் என்று தோன்றியது. தினசரித்தாளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். காப்பி இன்னும் குடிக்கவில்லை.
“ கீதா! காப்பி கொண்டு வா! ” என்று கத்தும்போதே, நேற்று இரவு அவளுடன் நடந்த சண்டையும் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அந்த சண்டைமழையின் தூறல்தான் இந்தப் பயமா? எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுதான் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்துத் தொல்லை தருகிறது. மறுபடி பயம் தலை காட்டியது.
காப்பி வரவில்லை. மீண்டும் சத்தமாய்க் கேட்கலாமா என்று நினைத்த போது, ப்ரியா காப்பி கொண்டுவந்து வைத்துவிட்டு, “ அம்மா கோபமா இருக்கா “ என்று எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
நேற்று ராத்திரி கீதா அப்படி ஒன்றும் தப்பாகச் சொல்லி விடவில்லை. ப்ரியாவின் கல்யாணம், ராகவனின் கல்லூரிப்படிப்புப் பற்றிய பேச்சு வந்தது. ராகவனின் படிப்புக்குக் கல்விக்கடன் வாங்கிக் கொள்ளலாம் என்றான். இந்தியன் வங்கி மேலாளருடன் நன்றாகப் பழக்கம். அந்தத் துணிச்சல். “ப்ரியாக் கல்யாணம்?” என்று திரும்பக் கேட்ட கீதாவின் கேள்விக்கு அவனால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
“ பேங்கில் நாலஞ்சு லட்சம் இருக்கு. ஆனா அது போறாது. இந்த வருஷம் இன்சூரன்ஸ் டார்கெட்டில் இன்னும் அம்பது லட்சம்தான் பாக்கி. அதையும் முடிச்சுட்டா, எனக்கு பீ.எம்.க்ளப்ஸ் மெம்பர் அந்தஸ்து கிடைக்கும். அதை வச்சு வெளியே கொஞ்சம் பணம் புரட்டலாம். அதனால இப்போதைக்குக் கல்யாணப் பேச்சை எடுக்காதே; கொஞ்சநாள் போகட்டும்; ப்ரியாவுக்கும் வேறு நல்ல வேலை கிடைச்சா, நல்ல மாப்பிள்ளையாக் கிடைப்பான். என்னை நிம்மதியாச் சாப்பிடவிடு” என்றுச் சத்தம் போட்டுவிட்டான்.
கீதா அதற்குப்பிறகு பேசவில்லை. அவனாக வந்துச் சமாதானப்படுத்தும்வரை இனி அவள் பேசமாட்டாள். அது அவள் குணம். சுந்தரின் முரட்டுப் பிடிவாதம் பல நேரங்களில் அவனை ஒரு மூர்க்கனாகக் காட்டினாலும், அதற்குக் காரணம் அவனது தவறான கொள்கைகளும், முடிவுகளும்தான்.
‘இந்த ஆண்கள் தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க நொண்டிச் சாக்குச் சொல்வதும், மீறினால் சத்தம் போடுவதுமே வழக்கமாய்ப் போய்விட்டது; ப்ரியாவின் கல்யாணத்துக்கும் இவர் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்? ’ என்பது கீதாவின் வாதம், கோபம்.
இவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று கவலைப்பட்டுக் கொண்டே தூங்கியத்தில், ப்ரியாவின் கல்யாணப் பேச்சு அவன் தூக்கத்தைக் கெடுத்து இப்போது காலைவேளையில் பயமாகப் பூச்சிக் காட்டுகிறதா என்றும் புரியவில்லை. எது எப்படியோ இந்தப் பயம் தேவையற்ற ஓன்று என்று ஒதுக்க நினைத்துக் காப்பியைக் குடிக்க ஆரம்பித்தான்.
‘க்ரீச்…….’ என்று வாசல் வெளிக் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டுக் காப்பியை வேகமாக உறிஞ்சினான்.
வழக்கமாக வீட்டுக்கு வருபவர்கள் வெளிவாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வரமாட்டார்கள். அல்லது திரும்பப் போகும்போது கதவை அப்படியே திறந்துப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
ஒரு இளைஞன், திறந்த கதவை மெல்லச் சாத்திவிட்டு உள்ளே நடந்து வந்து, வெளி வராந்தாவில் அமர்ந்திருந்த சுந்தருக்கு “குட் மார்னிங், சார்“ என்று வணக்கம் சொன்னான்.
மனித மனம் விசித்திரமானது. சிலரைப் பார்த்ததும் உடனே பிடித்துவிடும். சிலரைப் பார்த்ததும் காரணமே இல்லாமல் எரிச்சல் வரும். அந்த இளைஞனின் நிதானமும், பணிவும் கண்டுச் சுந்தருக்கு அவனைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்போது எரிச்சல்தான் வந்தது. காலங்காலையில் வந்துத் தொந்தரவு செய்கிறானே என்ற எரிச்சல். ஏதாவது நன்கொடை என்று கேட்டால் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.
ஆனால் வந்தவனை அருகில் பார்க்கும் பொழுது நன்கொடை கேட்க வந்தவனாகத் தெரியவில்லை. அருமையான வெளிநாட்டு இறக்குமதி உடைகள், கழுத்திலே தங்கச் சங்கிலி, கையிலே விலையுயர்ந்த கடிகாரம், விரலிலே பெரிய தங்க மோதிரம். அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். அழகு என்று சொல்லமுடியாது. கருப்பு நிறம், சுருட்டை முடி, சதுர முகம்.
“ குட் மார்னிங், குட் மார்னிங் ! என்ன வேணும் உனக்கு? “ என்று வந்தவனை நிற்கவைத்தே சிடுசிடுத்தான் சுந்தர்.
“ சார், நீங்க எல்.ஐ.சி. எஜென்ட்தானே? எனக்கு ஒரு பாலிசி எடுக்கணும் “ என்றான் வந்த இளைஞன்.
பாழாய்ப் போன இந்தத் தொழில் கொள்கை இன்று செவ்வாய்க்கிழமை என்று இடித்துரைத்தாலும் மனதைக் குடைந்து கொண்டிருந்தக் கரப்பான் பூச்சி தற்காலிகமாக இடத்தைக் காலி செய்ய, மனதுக்குள் மத்தாப்பு வெடித்துப் பூப்பூவாய் விழுந்தது.
“ ஆமாம், உக்காருங்க “ என்று உடனே மரியாதைக்குத் தாவி அருகிலிருந்த நாற்காலியைக் காட்டிய சுந்தர், “நீங்க யாரு, எந்த ஊரு, என்ன பண்றீங்க, என்ன மாதிரி பாலிசி எடுக்கணும், என்னை எப்படித் தெரியும்? “ என்று கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனான்.
“ என் பேர் ரங்கராஜன். சொந்த ஊரு ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலிப் பக்கம். ஆனா இப்போ இந்த ஊரிலே செட்டில் ஆயிட்டோம். நான் பங்களூரிலே ஐ.பி.எம்.லே ஒர்க் பண்றேன். அம்மா அப்பால்லாம் இங்கதான் இருக்காங்க. மாசத்துக்கு ஒருதரம் வந்துப் பார்த்திட்டுப் போவேன்” என்று குடும்ப விவரம் சொன்னவன், “ இன்கம் டாக்ஸ் வராம இருக்க அர்ஜண்டா ஒரு பாலிசி எடுக்கணும். இன்னிக்குதான் கடைசி நாள். அதனாலதான் உங்களைப் பார்க்க வந்தேன் “ என்று மூச்சிரைக்க எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான்.
“ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க “ என்று சொல்லி வேகமாகத் தன் அறைக்குச் சென்று இன்சூரன்ஸுக்கு உண்டான விண்ணப்பங்களைக் கொத்தாக எடுத்துக் கொண்டு, வந்திருப்பவனுக்குக் குடிக்கக் காப்பி எடுத்து வரும்படிக் கீதாவிடம் கூறிவிட்டுத் திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டான் சுந்தர்.
“ இதப் பாருங்க; இந்தப் பாலிசி உங்களுக்குச் சரியாக ஆகும். ரிஸ்க் கம்மி. உங்க அப்பா பேரு சொல்லுங்க “ என்று விண்ணப்பத்தில் எழுத எத்தனித்தான்.
“ அப்பா பேரு ராமானுஜம். எல்லா டிடைல்ஸும் நானே ஃபில்லப் பண்ணிடறேனே“ – பிடுங்காத குறையாக விண்ணப்பத்தைத் தன் கையில் வாங்கிக் கொண்டான் ரங்கராஜன். அதில் ஒரு நடுக்கம் தெரிந்தது.
அவன் எழுதிக் கொண்டிருக்கும் போதே காப்பி வந்தது. இப்போதும் ப்ரியாதான் கொண்டுவந்தாள்.
“ காப்பி சாப்பிட்டிட்டு எழுதுங்க ரங்கராஜன்! “ எனச் சொல்லிப் பாதி எழுதியிருந்த விண்ணப்பத்தைத் தன் கையில் திரும்ப எடுத்துக்கொண்டு படித்துப்பார்த்த சுந்தர், “அட, காந்தி நகர்லதான் உங்க வீடா? என் பொண்ணுகூட அங்கதான் ஒரு ஸி.ஏ.கிட்ட ஒர்க் பண்றா. சரி, என்ன அமௌண்டுக்கு பாலிசி எடுக்கலாம்னு இருக்கீங்க? “ என்று ஆர்வத்துடன் கேட்டு எழுதப் போனான்.
காப்பிக் கொடுத்துவிட்டு உள்ளே போகவிருந்த ப்ரியா சட்டென்றுத் திரும்பி, ரங்கராஜனை ஒருமுறை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொன்னாள் : “ அம்பது லட்சம் ! “
*****
பின் கதை
கதையை எழுதி முடித்தப் பிறகுதான் நேரத்தைப் பார்த்தேன். காலை மணி பத்து ஆகிவிட்டது. இன்னும் குளிக்கவில்லை. இன்னொரு கோப்பை காப்பிக்குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லாமல் “அப்பா ! இந்தா உன் செகண்ட் டோஸ் காப்பி !“ என்று என் மகள் ப்ரியா காப்பியை என் கையில் கொடுத்துவிட்டு, நான் எழுதி வைத்திருந்த கதையைப் படிக்க ஆரம்பித்தாள்.
“ என்னப்பா இது ‘அப்பாவின் பயம்’னு டைட்டில் வச்சிருக்கே! முப்பது வருஷத்துக்கு முன்னால வந்த ஜானகிராமன் கதைன்னு நெனச்சிக்கப் போறாங்க; லேட்டஸ்ட் ஸ்டைல்ல ‘ஐம்பது லட்சம்’னு வை “ என்று ஆலோசனை சொல்லிவிட்டு, “ கதை நல்லா இருக்கு; மறக்காம வரதன் அங்கிளுக்குப் பாதி சன்மானம் குடுத்துடு “ என்றவள், “கதைலே வர பொண்ணுக்கு என் பெயரை ஏன் வெச்சிருக்கே? “ என்றுக் கோபமாகக் கேட்டாள்.
“ அப்பத்தாம்மா வரதன் சண்டைக்கு வராம இருப்பான் “ என்ற என் சமாதானத்தை முழுவதும் ஏற்காமல் முணுமுணுத்துக் கொண்டே காலியான கோப்பையை எடுத்துச் சென்றாள்.
பழங்காலமாக இருந்தால் ‘அப்பாவின் பயம் அல்லது ஐம்பது லட்சம்’ என்று தலைப்பு வைக்கலாம். சரி, எக்காலத்துக்கும் பொருத்தமாகப் ‘பயம்’ என்று மையமாக இருக்கட்டும் என்று, பேனாவை எடுத்து ‘அப்பாவின்’ மேல் பட்டையாக இரண்டு கோடு இழுத்தேன்.
வெளி வாசலில் ஏதோ நிழலாடியது. கையில் சில தாள்களும், தோளில் ஒரு பையும் தாங்கி இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். வெளிக் கதவைத் திறந்து அவன் உள்ளே வருமுன்னமே வேகமாக எழுந்துச் சென்றுக் கதவைத் திறக்கவிடாமல், “ யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு? “ என்று கேட்டு, அவனை உடனே அப்படியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்பது போல் அவசரப்பட்டேன்.
“சார், நீங்க எழுத்தாளர் முத்துக்குமார்தானே? கலைமலர் வாரப் பத்திரிகையிலே ஆசிரியர் குழுவில் இருக்கேன். ஒரு அம்பது வாரம் வராமாதிரித் தொடர்கதை எழுதித் தரமுடியுமா? எங்க எடிட்டர் உடனடியாக் கேட்டிட்டு வரச் சொன்னார். அடுத்த வருஷம் முடிஞ்சதும், புத்தகமாக் கூடப் போடலாம்னு சொன்னார். காப்பி ரைட் நீங்களே வச்சிக்கலாம். ராயல்டி வரும். “ என்று மூச்சுவிடாமல் பேசி தன் பத்திரிக்கை முகவரி அட்டையை எடுத்து என் கையில் திணித்தான்.
கதையில் சுற்றியக் கரப்பான் பூச்சியெல்லாம் இப்போது என் தலைக்குள் வந்து குடைவது போல உணர்ந்தேன். “உங்க பேரு என்ன? “ – பயத்தோடு நான் கேள்வி கேட்க, அவன் சிரித்துக்கொண்டே அழுத்தந் திருத்தமாகப் பதில் சொன்னான்:
“ர.ங்.க.ரா.ஜ.ன்.”