சத்தத்தின் நடனம்

கோயமுத்தூரில் ஒரு சிகிச்சைக்காக ஆர்ய வைத்யசாலாவில் தங்கி இருக்கையில் லால்குடி ஜயராமன் இயற்றிய யமன் கல்யாணி தில்லானா இது. இது உருவாகியதும் அந்த சந்தோஷத்தில் தனது சிஷ்யர்களுக்கெல்லாம் போஸ்ட் கார்டில் பாடல் வரிகளை அனுப்பினாராம். பின்பு 2011 ல் சௌடையா ஹாலில் அவரது மகள் விஜயலக்ஷ்மி லால்குடியின் தில்லானாக்களைக் கொண்ட கச்சேரியை தன் தந்தை/ குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிகழ்த்தியபோது லால்குடி நெகிழ்ந்துபோனாராம்: ‘நான் இவற்றை இயற்றியபோதுகூட இவை ரசிகர்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் என உணர்ந்திருக்கவில்லை. என் படைப்புகள் பாடகர்களாலும், நடனக்கலைஞர்களாலும் பரவலாய் பாடப்படுகின்றன. அவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்” என்றாராம். மதுவந்தி, ரேவதி, தேஷ் போன்ற ராகங்களில் இவர் இயற்றியுள்ள தில்லானாக்களில் இவர் என்றும் வாழ்ந்திருப்பார்.