மனம் கீறி வளரும் விருட்சம்
பட்டாம்பூச்சியின்
சிறகு பிடித்த
விரல்நுனியின் மினுமினுப்பில்…
புனலடியில்
நெளியும்
மேலலையின் ஒளிவரியில்…
கருங்கல்லில் உறைந்திருக்கும்
அம்மன் சிலையின்
ஆயிரம்வயது குமிழ் சிரிப்பில்…
ஈன்ற பசுங்கன்றின்
ஈரக்கண்
பளபளப்பில்…
எதிலும்-
முளைத்தெழ
மழைக்காக
காத்திருக்கும் விதையென
அடிநெஞ்சில் உறங்கும்
உன் விழிகள்.
ooOoo
அற்புதர்கள்
அற்புதங்களைக் கண்டதாய்
சாட்சியம் சொல்லுகையில்-
பாதி மூடிய விழிகளில்
புருவங்கள் வளைந்து
மேலெழுந்திருக்கும்…
ஒவ்வொரு சொல்லையும்
அழுத்தி, நீட்டி
உருக்கிச் சொல்வார்கள்…
யாரை வேண்டுமானாலும்
ஒருமையில் விளிக்கலாம்…
எங்கிருந்தாவது
ஒரு பல்லி கத்தும்
அல்லது –
மனியோசை கேட்கும்…
தலையிலடித்துச்
சத்தியம் செய்வார்கள்…
பின்கழுத்தில்
மயிற்கூச்செரியும்…
மார்புகள் விம்ம
இமைகளைச் சுருக்கி நெரித்து
ஓரிரு துளி கண்ணீர்
பிழிவார்கள்…
அற்புதம் மெய்யோ பொய்யோ-
வாய் பிளந்து கேட்கும்
கூட்டத்தின் நடுவே
எப்போதும் நிராகரிக்கப்படும்
அவர்களே
அந்த கொஞ்ச நேரத்திற்காவது
அற்புதமாகிறார்கள்.
00OO00
ஜீவ ரகசியம்
சுட்டெரித்தாலும்
சூரியனின் ஈர்ப்பு
குறையவில்லை
யுகயுகாந்திரமாய்
காதலோடு
சுற்றிவருகிறார்கள்
கிரக கன்னிகைகள்.
ஒரு புழு பூச்சியும்
உண்டாகாத
மற்ற கிரகங்களுக்கு
பூமி நல்லாளிடம்
பொறாமை..
‘இவள் மட்டும் எப்படி
இத்தனை உயிர்களை
பிரசவித்தாள்?!’
ஆதவனை
அணுகாது அகலாது
மெல்ல நகைத்தபடி
மௌனமாய் சுற்றுகிறாள்
நிலமடந்தை.
ooOoo
ரோஜாவைக் கொஞ்சுவது
‘புதிது இது தானோ’ என்று
ரோஜா பூத்து
அழகைப் புதிது செய்யும்.
குன்று
மகிழ்ந்து மலைக்கும்.
வண்டு
ரீங்கரித்து வியக்கும்.
மயங்கி
ரோஜாவை
முத்தமிடப் போகும்.
காதலின் முன்
ரோஜாவின் முட்கள்
கூரில்லையா?
கோடை வாசத்தின்
கடைசிநாள் தனிமையில்
எனக்கும்
ரோஜாவுக்குமான
நேசம்
இன்னும்
எத்தனை சமயம் நீடிக்கும்?
எப்படி
என் தவிப்பை
ரோஜாவிடம் சொல்வது?
வண்டின் மொழி
தெரியாதே.
எப்படி ரோஜா
சிரித்த வண்ணமாகவே
இருக்கும்?
எப்படி
பிரியும் வேளையில்
ரோஜாவைக்
கொஞ்சுவது?
எப்படி
சின்னஞ்சிறு
குழந்தையைக் கொஞ்சுவோம்?
நிச்சயம் ரோஜாவை
நான்
கொய்யப் போவதில்லை.
0o0o0o0o0
முதன்முதல்
ஒரு குழந்தை
நிலவைப் பார்த்து
என்ன சொல்லும்?முதன் முதல்
ஒரு குழந்தை
கடலைப் பார்த்து
என்ன சொல்லும்?
முதன் முதல்
ஒரு குழந்தை
பறவையைப் பார்த்து
என்ன சொல்லும்?
முதன் முதல்
ஒரு குழந்தை
அம்மாவைக் கண்ணோக்கி
‘அம்மா’ என்று
முன்சொல்லித் தராமல்
சொல்லியது போல் இருக்குமா?
– கு.அழகர்சாமி