கனவு

g98

அபி, கூடத்தின் கருங்கல் தரையின் மேல் கால் மீது கால் வைத்து ஆட்டியபடியே படுத்திருந்தாள். அவள் ‘ப்ளே ஸ்கூலி’லிருந்து கொண்டு வந்த பையும் தண்ணி பாட்டிலும் அவள் கையருகே இருந்தன. அவளுக்கு மிக அருகில் தாழ இறங்கிய இரும்பு கட்டிலில் எம்.வி.மாமா படுத்திருந்தார். இந்த தூங்கும் நேரம் இன்னும் எத்தனை மணி நீளும் என்று அபி யோசித்துக்கொண்டிருக்கையிலேயே, ‘படுத்து தூங்கம்மா..கால நீட்டிக்கோ..அம்மா வர சாயங்காலம் ஆகுமே’, என்று கட்டிலில் படுத்தபடியே மாமா சொன்னார். அபி, தன்னையறியாமல் கண்ணைமூடிக் கொண்டாள். இல்லையென்றால், கண்டிப்பாக இன்னொரு முறை சொல்லுவார்.

மாமாவின் முடியிலிருந்து உடைகள் வரை எல்லாமே வெள்ளை தான். வெளியே சென்றாலும் வெள்ளை சட்டை வெள்ளைப் பான்டு, உள்ளே இருந்தாலும் வெள்ளை பனியன் வெள்ளை வேட்டி. வெள்ளையாக இருக்க வேண்டிய பல் தான் பழுப்பாக இருக்கும். மாமா வீட்டில் அப்போது வரை கோல்கேட் பல்பொடி தான் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த பல்பொடி டப்பாக்கள் தான் அபியிற்கு விளையாட்டுப் பொருட்கள். அந்த காலி டப்பாக்களை வைத்து மளிகைக் கடை விளையாட்டு விளையாடுவது தான் அங்கு அவளது பொழுதுபோக்கு. மாமா, ஒவ்வொன்றாக பொருள் லிஸ்டு சொல்லுவார். அதை கூடைக்குள் எடுத்து வைத்து அபி ரசீது கிழித்து தருவாள். மாமாவை சந்திக்க யாரேனும் வந்தாலும், அவர்களுக்கும் ரசீது கிழித்து தர சொல்வார்.

மாமாவின் வீட்டிற்கு நிறைய பேர் வருவார்கள். கிட்டதட்ட அறுபது வருடங்களாக அந்த வீட்டிலேயே மாமா இருப்பதால் இருக்கலாம். அது சரியாக மார்க்கெட்டிற்கு மிக அருகில் இருந்ததாலும் இருக்கலாம். வரும் அத்தனைப் பேரிடமும், மாமா ஐந்து பத்து நிமிடங்களாவது பேசாமல் இருக்க மாட்டார். மாலையில், வராந்தாவில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் நேரத்தில், மாமாவுக்கு தெரிந்த பலரும் அவ்வழி செல்வார்கள். மளிகை கடைக்காரன், அருகில் எலெக்ரிகல் கடை வைத்திருப்பவன், தோபி, அங்கு தெரு சுத்தம் செய்பவர்கள் முதல் எதிர்வீட்டு வக்கீல் வரை மாமாவுக்கு அனைவரும் பரிச்சயம்.

தினம் காலை ‘ப்ளே ஸ்கூல்’ முடிந்ததும், மாமா அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்வார். அபி, தனது உள்ளங்கை முழுவதையும் மாமாவின் சுட்டு விரலைச் சுற்றி பிடித்திருப்பாள்.அவர் வீட்டருகே தான் டவுன் ரயில் நிலையம் இருந்தது. மாமா, ஒவ்வொரு நாளும் தண்டவாளத்திற்கு மேல் செல்லும் நடைபாலத்தைப் பற்றி ஏதேனும் சொல்லுவார். ரயில் தண்டவாளத்தை ஒட்டி செல்லும் அந்த பாதையில் இருக்கும் ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் கடையைப் பற்றியும் மாமாவிற்கு தெரிந்திருக்கும். தண்டவாளத்திற்கு மேல் செல்லும் அந்த நடைபாலத்தின் மீது என்றாவது அபியைக் கூட்டி செல்வதாக சொல்வார். கதைகளுக்கு நடுவே அவ்வப்போது அபி, தன் பிடியை தளர்த்தி, வியர்த்திருக்கும் தன் உள்ளங்கையை கவுனில் துடைத்துக்கொள்வாள். அதுவரை, மாமா அதே இடத்தில் நின்று, விரலை நீட்டியவாரே காத்திருப்பார். அபி, மீண்டும் விரலைப் பிடித்துக்கொண்டதும் நடையும் கதையும் தொடரும்.

மாமா, அந்த பக்கம் திரும்பி படுக்கும் சத்தம் கேட்டது. அபி, விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த பழைய காலத்து வீட்டின் உயரமான கூரையிலிருந்து மிக நீளமான தண்டு கொண்ட மின்விசிறி அவளை நோக்கி மலர்ந்து கடக் கடக் என்று சுற்றிக்கொண்டிருந்தது. விட்டத்தை ஒட்டிய, சுவரில் ஜரிகை போல ஜன்னல் சட்டகங்கள் இருந்தன. அவற்றிலிருந்து செவ்வக ஒளி துண்டுகள் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன. அவற்றிலிருந்து தங்க தூசுகள் மிதந்து வந்த வண்ணம் இருந்தன. அதை அவள் தன் கால்களை வைத்து வெட்டி வெட்டிப் பார்த்தாள். அதற்கு அந்த பக்கம், சாம்பல் நிற மாடப் புறாக்கள் வந்து அவ்வப்போது எட்டிப்பார்த்து கொண்டும், கேள்வி கேட்டுக் கொண்டும் இருந்தன.

அந்த சுவரை ஒட்டிய செங்குத்தான அடுத்த சுவரில், பழைய பெரிய புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அதற்குள் ஏதோ காலத்து மனிதர்கள், அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வாராந்தாவில் இருக்கும் அதே மர நாற்காலியில் மாமாவின் தந்தை சுளித்த புருவத்துடன் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். மாமாவின் தந்தை அவரை விட இளமையாக இருந்தார். அவரருகில், அவரது மனைவி, சற்றே தலைகுனிந்து நின்றிருந்தார். அதற்கு கீழே நீளமான மர அலமாரி இருந்தது. அதன் இரண்டடுக்கிலும் இரு வீணைகள் இருக்கும். மேலடுக்கு வீணை அலமாரியில்தான் வாழைப்பழம் இருக்கும். மாமா, அதை திறந்து வாழைப் பழம் எடுக்கும் போது, அபி ஒரே ஒரு முறை அந்த வீணையைத் தொட்டுப்பார்த்திருக்கிறாள். அதன்பின், ‘ணங்க்’ என்ற அதிரும் ஒலி அந்த அலமாரியைப் பார்க்கும் போதெல்லாம் எதிரொலிக்கும்.

அபி, மெதுவாக எழுந்தாள். சத்தமே போடாமல், பாதம் தரையில் அங்குலம் அங்குலமாக பதிய மெதுவாக நடந்தாள். மாமா படுத்திருந்த கட்டில் மீது நிறுத்தப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் அபியின் தலைக் குடுமி மட்டும் தெரிந்தது. சற்று எக்கி, தன் முகத்தையும் பார்த்துக்கொண்டாள். நெற்றியில் இருந்த பொட்டை, தனது வழக்கம் போல புருவங்களுக்கு கீழே மூக்கின் மேல் வைத்து சரி பார்த்துக்கொண்டாள். கட்டிலைத் தாண்டியதும், எந்த பக்கம் போவதென்று சற்று யோசித்தாள். இடது பக்கம், சமயலைறைக் கதவு பாதி திறந்திருந்தது. அதிலிருந்து மேலே அப்பள தூக்கு தொங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. சமையலறைக்கு வாசலில் ஒரு ஸ்டாண்டின் மீது பெரிய ஃபரிட்ஜ் நிறுத்தப்பட்டிருந்தது. அதனுள்ளிருந்துதான் மாமா சாக்கலேட் எடுத்துக் கொடுப்பார். ஆனால், அதற்கு சீக்கிரம் சாயங்காலம் ஆக வேண்டும். அதுவரை என்ன செய்வது என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

கட்டிலின் வலப்புறம், இன்னொரு அறை. அவள் அங்கு சென்றதே இல்லை. அது எலிகளும் பெருச்சளிகளும் உலவும் அறை என்று சொல்லப்பட்டிருந்தது. அங்கு பூதங்களும் பேய்களும் கூட இருக்கும். அதற்குள் பனியனும் வேட்டியுமாக மாமா போனால், பளீர் வெள்ளை சட்டை வெள்ளை சட்டையும் வெள்ளைப் பாண்டுமாக வெளியே வருவார் வருவார். அப்போது அவ்வறையிலிருந்து நல்ல மணம் கசியும். அபி, அறையின் வாசல்படியை அடைந்த போது, எதிர் விட்டத்து ஜன்னலின் ஒளி மட்டும் தான் கொஞ்சமாக அங்கு வந்துகொண்டிருந்தது. அபி, முதல் படி எடுத்து வைத்துவிட்டாள். முதலில் முழு இருட்டாக இருந்த அறை, மெதுவாக பீரோக்களால் ஆனது போல இருந்தது. பழைய கருப்பு நிற மர பீரோக்களும் துரு படிந்த இரும்பு பீரோக்களுமாக.பாதங்களில் தூசு படிய அவள் இன்னும் உள்ளே சென்றாள். மாமாவின் குறட்டை சட்டென்று அறுபட்டது. அவள் அப்படியே குனிந்து, தவழ்ந்து வந்து தன் இடத்தில் படுத்துக்கொண்டாள். மாமா, ‘ஏய், சுட்டி பொண்ணே, எங்கே போன நீ…தூங்கம்மா…’ என்று சொல்லி மௌனமானார். அபியிற்கு இதயம் சற்று வேகமாக அடித்து ஓய்ந்தது.

உள்ளறையிலிருந்து ஒரு சத்தம், பாத்திரம் உருண்டது போல கேட்டது. ஒரு பெரிய பெருச்சாளி ஓடியது போலவும் இருந்தது. இல்லை, பூதமோ பூச்சாண்டியோ சோம்பல் முறித்தது போலவும் இருந்தது. இனியும் அங்கு படுத்திருக்க முடியாமல், உடல் முழுவதும் விழிப்பாக, அவள் மீண்டும் எழுந்து தவழ்ந்து அந்த அறைவாசல் வரை சென்றாள். சட்டென்று, எதிர்வீட்டு வக்கீல் மாமா போல கோட்டு அணிந்த மனிதர் நிற்பதைப் பார்த்து, தூக்கிய பாதம் நடுங்க நின்றாள். விட்டத்து ஜன்னலில் ஒரு பறவை படபடக்க, ஒளிகீற்று ஒன்று, கலங்கரை வெளிச்சம் போல அறையினுள் வெட்டி சென்றது. ஒரு நொடியில் மனிதர் பெரிய குடையாக மாறி அங்கு சுவரில் தொங்கி கொண்டிருந்தார். மீண்டும் பரவிய இருளில், மெதுவாக கையை நீட்டி தடவி தடவி அபி, உள்ளே சென்றாள். குகை போல நீளும் என நினைத்திருந்த அறை அதற்குள் முடிந்துவிட்டது. இனி, அங்கிருந்து ஒரு அரை வட்ட திருப்பத்துடன், மீண்டும் வெளியே செல்லலாம். கையை நீட்டி துழாவிய படியே, வளைந்த போது, அங்கு ஒரு குட்டி ஸ்டூல் மீது மோதினாள்.

இருட்டுடன் இருட்டாக அந்த குட்டி ஸ்டூலின் மீது கருப்பு படர்ந்த முறம் நிறைய இருட்டே சுருண்டது போல காய்ந்த உப்பு நார்த்தங்காய்கள் குவிந்திருந்தன. அவற்றிலிருந்து ஒரு சிறு விள்ளலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். ஒருவேளை இது தான் இந்த அறை தனக்கு விலக்கப்பட்டதன் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ஆச்சரியமும் சிரிப்புமாக வந்தது. அறையின் உயரத்திலிருந்து சிறு ஜன்னல் வழியே, ஜல் ஜல் என்ற ஒலி. வீட்டின் வெளியில் ஜுட்கா வண்டி வந்திருக்கக்கூடும். மாமா எழுந்திருக்கும் நேரம் வந்துவிட்டதென, வேகமாக மீண்டும் கூடத்தில் வந்து படுத்துக்கொண்டாள்.

நல்ல காலமாக மாமா, இன்னும் படுத்துக்கொண்டிருந்தார். அவரது இமைகள் பாதி தான் மூடியிருந்தன. அவர் எப்போதும் அப்படித் தான் தூங்குவார். வாயில் நார்த்தங்காவைச் சப்பியபடியே மீண்டும் விட்டத்தைப் பார்க்க தொடங்கினாள். இப்போது, மீண்டும் ஜல் ஜல் ஒலி, அதனுடன், ஒரு ‘ஹேய்’ சத்தமும் கேட்டது. மாமா விழித்துக்கொண்டார். முகம் கழுவிக்கொண்டு வந்தவர், அபியிற்கு ஒரு டம்ப்ளர் பாலும், அவருக்கு ஒரு டம்ப்ளர் காபியும் போட்டுக்கொண்டார்.

எழுந்து காபி குடித்ததும், எப்போதும் போல, மாமாவும் அவளும் வராந்தா பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள். மாமா, அவளை இரு கைகளாலும் தூக்கி, வாசல் கதவின் அருகிலிருந்த ஜன்னல் கம்பிகள் மீது நிற்க வைத்தார். ஜன்னல் வழியாக அவளுக்கு அந்த ஜூட்காவை காட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அன்று தான் அதைப் பற்றி முதலில் சொல்லுவது போல சொல்லுவார். “அங்க பார்த்தியா. எப்படி ஜல் ஜல் குதிர நிக்கர்து. அதில தான் நான், மாமியெல்லாம் ஸ்கூலுக்கு போவோம். அப்போலாம் குதிர வண்டில போறது பெரிய விஷயம் தெரியுமோ? நீயும் ஒரு நாள் போறியா?”. அபி, அந்த தொத்தலான குதிரையையும், அதன் மீது போடப்பட்டிருந்த பிங்க் கலர் அங்கியையும் பார்த்துக்கொண்டிருந்தாள். பீடி பிடித்தவாரே குதிரை வண்டிக்காரன் அவர்களை திரும்பி பார்த்தான். அபி மாமாவைப் பார்த்து ‘மாட்டேன்’ என்பது போல தலையசைத்தாள்.

மாமா, அவளுக்கு பதில் சொல்ல இருந்த போது, பக்கத்து வீட்டில் புத்தக கடை வைத்திருக்கும் தாத்தா பொக்கை வாயும் சிரிப்புமாக வந்துகொண்டிருந்தார். “என்ன சார், சவுக்கியம்மா?”, என்று கேட்டவாரே, மாமா கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்தார். அந்த நேரம், அங்கு ரயில் வரவே அபி திறந்திருந்த வாசல் கதவு வழியே நழுவி, ரோட்டைப் பார்த்திருந்த வெளி வாசலுக்கு ஓடினாள். ஐந்து நிமிடம் ரயில் கூ என்று நகர்ந்துகொண்டே இருந்தது. மெதுவாக ரயில்வே கேட்டை மீண்டும் திறந்த பொது, ரயில் ஊசி நூல் போல சாலையின் இரு பகுதிகளையும் தைத்துவிட்டு சென்றிருந்தது. அந்த குறுகலான கேட் வழியே வாகனங்கள் முந்த துவங்கின.

மாமாவும் புத்தக கடைத் தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். அபி, வெளியே அந்த தொடர்வீடுகளை ஒட்டியபடி, முன்னால் போடப்பட்டிருந்த கல் திண்ணைகள் மீது தாவி தாவி சென்று கொண்டிருந்தாள். மாமாவின் குரல் “அபீ, இங்க யாரு வந்திருக்கா பாரு…”, என்று கூப்பிட, அவளை வீட்டுக்குள் வரவைக்க மாமா ஏதும் சொல்கிறார் என்று நினைத்தபடியே அபி ஒரு கால் திண்ணையிலும் ஒரு கால் அந்தரத்திலுமாக வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். அப்போதுதான், பள்ளியிலிருந்து வந்திருந்த ஜெயஸ்ரீ, நீல ரிப்பன் பின்னல் கலையாமல் உடைகள் மாற்றி வந்திருந்தாள். பின் வாசல் வழியாக வந்திருக்க வேண்டும். வராந்தா நுழைவில் நின்று கொண்டிருந்தாள். அதன் இருபக்கமும் தொங்கிக்கொண்டிருந்த திரைகள் ஒன்றாக்கப்பட்டு அவற்றின் இடுப்பில் வளையல் மாட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. அந்த வளையல் வரையே நின்றிருந்த ஜெயஸ்ரீ அபியைப் பார்த்து சிரித்தாள்.

மாமா, உள்ளே சென்று இருவருக்கும் இரு சாக்கலேட்டுகள் கொண்டுவந்து தந்தார்.

ஜெயஸ்ரீ-யும், அபியும் ஒரு நிமிடம் ஒருவரையொருவர் பார்த்திருக்க, மாமா,”போயேன். அவங்க வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வா” என்று சொன்னார். அபி, விரைந்து, தனது விளையாட்டு சாமனங்களை எடுக்க கூடத்தினுள் செல்லும் போது, பின்னால் அம்மா வந்திருந்தாள்.

தோள் பையும், கையில் சாப்பாட்டு கூடையுமாக அம்மா வாசலில் நின்றிருந்தாள். ஒரு நொடிக்கூட யோசிக்காமல், அபி அம்மாவை நோக்கி ஓடி, அவள் புடவைக் கசங்க, மேல் ஏறி அமர்ந்தாள். “தங்கம்மா..”, என்று அபியை அள்ளி எடுத்தபடியே, அம்மா,’நல்லா தூங்கினாளா மாமா? என்று கேட்டாள். “உம்…சமத்து. அவளையே கேளேன்” என்று சொல்லும்போது, அபி அம்மாவின் தோள் மீது தூங்கிப்போயிருந்தாள். கையில் இருந்த சாக்கலேட்டு கீழே விழுந்தது. அபியின் பையையும் தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டு அம்மா கிளம்பினாள்.

அன்று அபியின் கனவில், பெரிய பெருச்சாளி ஒன்று ஜுட்காவில் ஏறி ஜல் ஜல் என அவள் வீடு நோக்கி வந்தது.