எண்ணை விலை உயர்வால் உலகமயமாக்கம் முடங்குமா?

“உலகமயமாக்கம்” வெகு விரைவில் முடிவுக்கு வரப் போகிறது. எட்டாத உயரங்களை எட்டிவரும் எண்ணை விலை அந்த மாற்றத்தைக் கொண்டு வரும்”- என்று வாதிக்கிறார் ஜெஃப் ரூபின்(Jeff Rubin) தன் ‘Why Your World Is About to Get a Whole Lot Smaller: Oil and the End of Globalization‘ என்ற புதிய புத்தகத்தில். இவர் CIBC World Markets-ன் முன்னாள் தலைமைப் பொருளியலர் (Chief Economist). Canadian Imperial bank of commerce-ன் முதலீடு வங்கிஇயல் (Investment Banking) பிரிவுதான் CIBC World Markets என்ற நிறுவனம். ரூபின், அண்மையில் U.S.News-க்கு அளித்த பேட்டியில், அனைத்துலக ஆற்றல் (energy) பயன்பாட்டுப் பழக்கங்களின் எதிர்காலப் போக்கு குறித்தும், அதனால் உலகமய பொருளாதாரம் என்ன மாற்றங்களை எதிர்கொள்ளும் என்பதையும் விளக்கியிருக்கிறார். பேட்டியின் சில பகுதிகள்:

jeff-rubinஉங்கள் புத்தகத்தின் மைய விவாதம் என்ன?

எண்ணை விலை (ஒரு பேரல் விலை டாலர்களில்) மூன்றிலக்கமாகும் போது, உலகமயமாக்கலுக்குப் பின்னடைவு ஏற்படும். அது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மறுமலர்ச்சி அடைய வழி வகுக்கும். நாம் எதிர்கொள்ளப் போகிற உலகில், தூரம் விலையேற்றத்தை ஏற்படுத்தும். குறைவான ஊதியம் ஏற்கும் உழைப்பாளர் கிடைப்பதால், சீனாவில் உற்பத்தி செய்து, அந்த சரக்குகளை மேற்கு ஐரோப்பாவிற்கோ அல்லது வட அமெரிக்காவுக்கோ ஏற்றுமதி செய்வது பல சமயங்களில் விவேகமான செய்கையாக இருக்காது. சரியாகச் சொன்னால், உழைப்பின் விலையால் நீங்கள் சேமித்ததை விட அதிக தொகையை போக்குவரவில் இழந்திருப்பீர்கள்.

உங்கள் கருத்துகள் வாதத்துக்கு இடமளிக்கின்றனவா?

உலகமயமாகிய பொருளாதாரத்தை அடைய என்னென்ன தேவை என உண்மையாகக் கணக்கிட்டால், நாம் எதிர்கொள்ளப்போகும் மாறிகள் (variables) மூன்று என்பது என் கருத்து. அவை மலிவான உழைப்புக் கூலி, மிகக் குறைந்த விலையில் எண்ணை(petrol), சகாயமான விலையில் போக்குவரவு . ஆனால் இன்றைய உலகம் உழைப்பாளரின் சம்பள விகிதம் மட்டுமே கருத்திற்கொள்ளப் பட வேண்டியது என நினைக்கிறது. தற்போது நாடித் துடிப்பு போல் ஏறி இறங்கி வரும் எண்ணை விலை, பேரலுக்கு நூறு டாலர் அல்லது அதற்கு மேல் என்கிற நிலையை அடைந்து, இனி எப்போதும் மூன்றிலக்க (3 digit) எண்ணை விலைதான் என்பது உலகப் பொருளாதாரத்தின் நிரந்தர அம்சமாகி விடும் என்ற என் விவாதம் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது.

புதிய பொருளாதாரத்தின் தாக்கத்தால் உலக அரசியல் எப்படி மாறும்?

எப்போதோ வளரும் நாடுகளுக்கு தாரை வார்க்கப் பட்ட ஏராளமான வேலைகள் தாய் நாடு திரும்பும். மூன்றிலக்க எண்ணை விலையால், துரு பகுதி (rust belt) வலுக்கட்டாயமாகப் புத்துயிர் பெறப் போகிறது. தற்போது குறைந்த போக்குவரவு செலவினங்கள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வணிக ரீதியில் போட்டியிட முடிவதால் , பொருளாதாரத் தேக்கத்தால் நலிந்திருந்த அமெரிக்க எஃகு மற்றும் அறைகலன் (furniture) தொழில்கள், மறுமலர்ச்சி பெற்று வருவதை ஏற்கனவே கண்கூடாகக் கண்டு வருகிறோம். எதிர்காலத்தில் வட அமெரிக்காவில் நாம் காணப்போகும் அரசியல் முன்னணி, இங்கு எவருமே கற்பனை செய்திருக்க முடியாத தன்மை கொண்டிருக்கும்- ஆர்ச்சி பங்கர்ஸ்(Archie Bunkers), அல்கோருடன் (Al Gore) இணைவது போல- பாட்டாளி வர்க்கத்துப் பணிகள் பசுமையணிப் பணிகளாகும். அமெரிக்க முதலாளிகள் லாபநோக்கில், இந்நாட்டுத் தொழிலாளர்களைத் தவிக்கவிட்டு, வெளிநாட்டில் அமைத்துள்ள தொழிற்சாலைகள், தம் உறுப்பினர்கள் வேலை செய்யும் இங்குள்ள தொழிற்சாலைகளை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு கரிமப் பொருட்களை உமிழ்பனவாக இருப்பது தொழிற்சங்கங்களுக்குப் புரியும்போது, அதிக கரிம உமிழ்வு ஏற்படுத்தும் தொழில்கள் அதற்கான விலை கொடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார்கள் .

இது எந்த விதத்தில் சீனாவின் உலகமய நிலைப்பாட்டை பாதிக்கும் ?

இனி சீனத்தின் வளர்ச்சி எந்திரம், அமெரிக்க, ஐரோப்பிய ஏற்றுமதிகளை நம்பியிருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக (நிச்சயமாக அமெரிக்க பொருளாதாரத் தேக்கத்திற்குப் பிறகு ) சீனா அந்த நிலையில் இல்லை என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் வரும் நாட்களில் , எண்ணை விலை மூன்றிலக்கத்தை எட்டப் போகும் நிச்சயமும் , கரிம உமிழ்வுக் கட்டணம் டன்னுக்கு 40 டாலராகவோ அல்லது 50 டாலராகவோ ஆகிவிடும் என்னும் எதிர்பார்ப்பும் உள்ள சூழ்நிலையில், சீனா வால்மார்ட்டின் வழங்குநராக (supplier) நீடிக்கக் கூடுமென நான் கருதவில்லை . இதைவைத்து இனி சீனப் பொருளாதாரம் தற்போதய கம்பீரமான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என நான் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். வால்மார்ட்டுக்குப் போகும் ஏற்றுமதிகள் வழிநடத்தும் வளர்ச்சியாக அது இருக்காது.

உலகமயமாக்கம் எப்போது முடிவடையும்?

உலக வணிகம் ஏற்கனவே தடம் புரண்டு விட்டதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். பொருளாதார மீட்சியின் முதல் கட்டமாக, முதல் ஆண்டிலேயே, மூன்றிலக்க எண்ணை விலையை மீண்டும் தரிசிக்கப் போகிறோம். மற்றும் உலக வணிகம் திசை மாறிகொண்டிருப்பதும் தெரிய வரும். மிகப் பெரிய வணிகப் பெயர்வுகளில் சிலவற்றிற்கு வெகு தொலைவு வழங்குநர்கள் காரணமாவார்கள். என் அகக் கண்ணிற்குப் புலப்படும் அவ்வுலகில், பெருமபாலும், மெக்ஸிகோ போன்ற பொருளாதாரங்களுடன் உருவாகும் வணிகப் பற்றாக்குறை மிக முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிகிறது.

courtesy : www2.macleans.ca

எண்ணை விலையை மிக உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி வைப்பது எது?

பொருளாதாரச் சரிவின் தாக்கம் விநியோகக் (supply) குறைவுக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே இன்றைய விலையில் விநியோகம் கட்டுபடியாகாது என்ற காரணத்தால், திட்டமிடப்பட்ட 1.5 மில்லியன் பேரல் உற்பத்தி ரத்து செய்யப் பட்டுள்ளது. மேலும், இன்றைய எண்ணை விலையில், உறுதி செய்யப்பட்ட விநியோகங்களை நிறைவேற்றுவது, பேரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், உலகெங்கிலும் இத்தகைய விநியோக மறுப்புகள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதார மீட்சி (recovery) தொடங்கிய உடனே, தேவைகள் (demands) எல்லாம் சட்டென்று வெளிவரும். ஆனால் எண்ணை உற்பத்தி, 1.5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையும் விட மிகக் குறைந்து, விலை மூன்றிலக்க எண் வரிசைக்குப் போய்விடும்.

பிரசிடெண்ட் ஒபாமா இந்த புத்தகத்தைப் படிக்கவேண்டுமா?

ஆம், கட்டாயமாக. மேலும் அவர் கூறிவரும் பல கருத்துகள் எனக்கு ஊக்கம் அளித்தன. உதாரணமாக, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்ற, எண்ணைக் கொள்கையும் கரிம கொள்கையும் ஒருசேர முடிவு செய்யப் பட வேண்டும் என்கிற அவர் கருத்து. அடுத்த ஆண்டில் சீனா 80 நிலக்கரி எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களைத் திறக்கும் முனைப்பில் இருக்கும்போது, செயல்பட்டு வருகின்ற டெக்ஸாஸ், ஒண்டாரியோ நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடுவது என்ன நியாயம்? மற்ற நாடுகளுடன் நமக்கு உடன்பாடு ஏற்படாத நிலையில், இது முற்றிலும் வீண் வேலை. கரிம கட்டணம் விதித்தால் தான் ,மற்ற நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். அதாவது, எவ்வளவு நிலக்கரி வேண்டுமானாலும் எரித்துக் கொள்ளலாம் ; ஆனால் அதன் மூலம் கிடைக்கும் அசுத்த சக்தி வாகனத் தொழிற்சாலைகளையோ , எஃகுத் தொழிற்சாலைகளையோ இயக்கினால் அதற்கு நம் உற்பத்தியாளர்கள் கரி உமிழ்வுக்கு எவ்வளவு அபராதம் செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் எல்லாரும் அபராதம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவோம். கியோட்டோ நெறிமுறை அப்படிக் கூறவில்லை. கியோட்டோ நெறிமுறையை அமெரிக்கா நிராகரித்தது முற்றிலும் சரி. சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களை விட பொருளாதாரக் காரணங்களைக் கருதியே அது நிராகரிக்கப் பட்டது. கியோட்டோ நெறிமுறை கரி உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தும் செயல் திட்டமல்ல; வளர்ந்த நாடுகளின் கரி உமிழ்வை வளரும் நாடுகளுக்குப் பங்கிடுவதே அதன் நோக்கம். ஆனால் இப்போது கியோட்டோ நெறிமுறை விலக்களித்த நாடுகளே 90% கரிம உமிழ்வு வளர்ச்சிக்கு காரணம் என்று அறிகிறோம்.

எண்ணையை விட்டு விலக வலியுறுத்தும் இன்றைய நெருக்கடியும் 1970களின் நெருக்கடியும் எந்த வகையில் ஒத்திருக்கிறது?

இரு நெருக்கடிகளிலும் எடுக்கப்பட்ட முனைப்புகள் (initiatives) எல்லாமே ஒரே மாதிரியானவை தான். பெரும்பாலும் அன்று கேட்டவற்றையே இன்றும் கேட்கிறோம். ஆனால் 1970 மற்றும் 1980 களின் முரண்நகை (irony) எதுவென்றால், அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசுக் கொள்கைகள் சக்தி பயன்திறனை (energy efficiency) ஊக்குவிப்பதாக இருந்த போதிலும், கடைசியில் சக்தி உபயோகம் அதிகரித்து கொண்டே போனது தான் கண்ட பலன். அக தகன எந்திரங்களின் (internal combustion engine) பயன்திறன் விகிதம் (efficiency) கூடிய போதிலும், அமெரிக்க கார் மற்றும் பிற வாகனங்களின் சராசரி எரிபொருள் பயனீட்டளவு (consumption) மாற்றமேதுமில்லாமல் ,30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிலேயே இருந்து வருகிறது. ஏனெனில், எந்திரங்களின் பயன்திறன் அதிகரிப்பில் மிச்சப் படுத்திய எரிபொருளை, மிக அதிக எண்ணை உறிஞ்சுகின்ற, பெரிய அல்லது அதிவேகத்தில் செல்லக்கூடிய கார்களை உருவாக்கி உலவவிட்டு, ஊதாரித்தனமாக செலவிட்டு விட்டோம். குறைந்த விலை எண்ணை என்னும் வெகுமதியில்லாமலேயே, நமது செயல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்.

ooOoo

விளக்கக் குறிப்புகள் :
1. எண்ணை விலை : இது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணை விலையைக் குறிக்கும். ஒரு பேரல் (barrel) 159 லிட்டர் கொள்ளளவு கொண்டது. மூன்றிலக்க விலை என்றால் பேரலுக்கு $100 அல்லது அதற்கும் மேல்
2. Rust Belt : அமெரிக்காவின் இல்லினாய் ,இண்டியானா, மிச்சிகன் ,ஒஹையோ மாநிலங்களைக் குறிக்கும் . இவை முன்பொரு காலம் தொழில் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவை. பொருளாதார மாற்றங்களால் , இங்கு 1980 க்குப் பிறகு மூடப்பட்ட தொழிற்சாலைகளும், துருப்பிடித்த இயந்திரங்களுமே காணப் படுவதால் இப்பெயர் பெற்றது.
3. Archie Bunker: Archibald “Archie” Bunker is a fictional New Yorker in the 1970s top-rated American television sitcom All in the Family.
4. Al Gore:Al Gore was the 45th Vice President of the United States from 1993 to 2001. He is also known for his work regarding environmental issues.
5.கரிம உமிழ்வு :carbon emission
6.The Kyoto Protocol is an international agreement linked to the United Nations Framework Convention on Climate Change. The major feature of the Kyoto Protocol is that it sets binding targets for 37 industrialized countries and the European community for reducing greenhouse gas (GHG) emissions .These reductions amount to an average of five per cent against 1990 levels over the five-year period 2008-2012.