இந்தியக் கவிதைகள் – இந்தி – ஜ்யோத்ஸ்னா மிலன்

jyotsna

இந்தியில் எழுதும் ஜ்யோத்ஸ்னா மிலன், குஜராத்தி இலக்கியத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது எழுத்துக்கள் இரண்டு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகள் மற்றும் இரண்டு கவிதைதொகுதிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சமூக சேவகி இலா பட் அவர்களின் 2 புத்தகங்களை மொழிபெயர்த்துள்ள இவர் 20 வருடங்களாக சேவா (SEWA) அமைப்பு வெளியிடும் பெண்கள் இதழான அனஸூயா வின் ஆசிரியராய் செயலாற்றுகிறார்.

மொழிபெயர்ப்பு: உஷா வை

met

ஓயாது
திடீரென
என் பாதங்களைப் பார்த்து
பீதியால் நிறைந்துபோனேன்.
பல வருடங்களுக்கு முன்
நான் நடப்பட்டிருந்த இடத்திலேயே
இன்னும் நின்றுகொண்டிருந்தேன்
எல்லோரும் என் மேல்
அவரவருக்குத் தோன்றியதை
தொங்க விட்டனர் –
ஒரு பை, ஒரு தொப்பி, ஒரு துண்டு
அல்லது அவர்களின் களைப்பு.
எனக்கோ இத்தனை காலமும்
நான் ஓயாது நகர்ந்துகொண்டிருந்ததாய்
தோன்றியிருந்தது

*****

பாதங்கள்

fp

பாதங்கள் தயங்கி நின்றன
நகர்வதற்கு முன்
சிந்தனையில் தொலைந்துபோய்
‘போகவேண்டுமா, நிற்கவேண்டுமா?’
முன்பெல்லாம் அவை உடனடியாய்
உயர்ந்து
நடக்கத் தொடங்கும்.
அவளின் குழந்தைப் பருவத்தில்
போவதற்கோ, இருப்பதற்கோ
நிலையான காரணங்கள் இருந்ததில்லை.
பாதங்கள் ஒருபோதும்
கற்பனை செய்ததில்லை
அவை ஒருநாள் சிந்திக்கத் தொடங்குமென்று.

ooOoo

பின்னால்

dont-look-back

பாதிவழியில் நின்று
அவள் திரும்பி
பின்னால் பார்த்தாள்
அங்கே சாலை, வயல்
அவள் பிறந்த
ஊர், வீடுகள்
இடங்கள்
மக்கள்
எதுவுமில்லை
அவற்றின் தடையமும் இல்லை
யாரோ
அவள் வாழ்ந்திருந்த வாழ்வை
கவனமாய் அழித்து விட்டிருந்தது போல.

ooOoo

வார்த்தைகள்
அவள் தன் கண்களை மூடிக்கொண்டு
ஒரு பென்சிலை வட்டமாய் நகர்த்தி
ஒரு கோட்டை வரைகிறாள்
எத்தனை வெறுமை
அதனுள் சூழ்ந்திருக்கிறது?
மொத்த மொழியிலும்
அவள் ஒருவார்த்தையைத் தேடுகிறாள்
அதை எதிர்த்துப் போராட.

ooOoo

வேறோர் இடம்
அவள் வீட்டிலிருந்து
வெகுதூரம்
போனாள்
வெறோர் இடத்திற்குப் போவதுபோல்
வீடு திரும்புதல் போல்
திரும்பி வரலாமே என்று.

ooOoo

அவள்
தன் கூந்தலை
உடைபோல் அணிந்துகொண்டு
அவள் அமர்ந்திருந்தாள்
கைகளை முழங்கால்களில் சேர்த்துக்கொண்டு
தன் கைகளாலேயே அணைக்கப்பட்டு.

ooOoo

இரவு
s99ஒரு தாயின் நாள்தான்
முதலில் துவங்கும்
விடியலிலேயே.
அது முடிவது
கடைசியாய்.
தாயின் இரவுகள்
எப்போதும் குறுகியவை
அவளது நாட்கள்
எப்போதும் நீண்டவை
இரவையும் அபகரித்துக்கொண்டு.
யாரும் இதை
தாயின் இரவுக்குள்
நாளின் அத்துமீறலாய் நினைப்பதில்லை.
ஒவ்வொரு நாளும்
அவள் தன் கால்களை
உள்ளே ஒடுக்கிக்கொண்டு
தூங்குகிறாள் –
ஒரு கசங்கிய தாய்.
மீதமிருக்கும் இரவில்.
தாயின் இரவு
போதுமான நீளமானது இல்லை,
காலை நீட்டுமளவுக்குக் கூட.