மீட்பரிடம் தம்மை ஒப்புக்கொடுக்கும் ஆடுகள்

ஜ்யொர்ஜ் ஸாண்டர்ஸ் தன் குறு நாவலான ‘The Brief and frightening reign of Phil’ இல்  உருவாக்கியுள்ள நாடுகளான  இன்னர் ஹார்னர் (Inner Horner) மற்றும் அவுட்டர்  ஹார்னர் (Outer Horner) நாடுகளுக்கு உங்களை வரவேற்கிறேன். இந்த நாடுகளில் அப்படி என்ன விசேஷம்? பல உண்டு, உதாரணமாக அவுட்டர் ஹார்னர் நாட்டின் ஜனாதிபதிக்கு ஏழு வயிறுகள், ஐந்து மீசைகள், இன்னர் ஹார்னர் நாடோ ஒரே ஒரு ஆள் மட்டும் நிற்கக்கூடிய அளவிற்கு சிறிய நாடு. என்னய்யா இது என்று நீங்கள் திடுக்கிட்டால் , நீங்கள் ஸாண்டர்ஸின் உலகிற்குப் புதியவர் என்பது தெளிவாகும்.  தயக்கமில்லாமல்  இந்த உலகில் நீங்கள் நுழையலாம், நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத உருவகங்களாகவும், குறியீடுகளாகவும் விரியும் ஒரு அபத்தமான, ஆனால் அலாதியான உலகு அவர் விரிப்பது. அதே நேரம் நம் உலகிற்கும் நெருக்கமான, அதனாலேயே பீதியளிக்கும் உலகை அதில் நீங்கள் காண்பீர்கள்.

george_saunders

இன்னர் ஹார்னர் நாட்டில் மொத்தம் ஏழு பேர் மட்டுமே பிரஜைகள், இருந்தாலும் மீதி ஆறு பேர் எங்கே வசிப்பார்கள்? தங்கள் அண்டை நாடான அவுட்டர் ஹார்னரில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள குறுகிய கால வசிப்பிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். சுழற்சி முறையில் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் தாய் நாட்டில் சில காலம் இருப்பார்கள்.இவர்கள் இப்படித் தங்குவது அவுட்டர் ஹார்னர் பிரஜைகள் சிலர் கண்ணை உறுத்துகிறது, இன்னர் ஹார்னர் மக்களோ இன்னும் சற்றே பெரிய இடத்தைத் தங்களுக்குக் கொடுக்கக்கூடாதா என்ற எண்ணம் உடையவர்கள். இப்படிச் சில பூசல்கள் இரண்டு நாட்டிற்குள்ளும் புகைந்து கொண்டிருந்தாலும், பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்நிலையில் ஒரு நாள் இன்னர் ஹார்னர் இன்னும் சிறியதாகி விடுகிறது. எனவே அப்போது அந்நாட்டில் வசிக்கும் எல்மரின் ஒரு பகுதி அவுட்டர்  ஹார்னர் நாட்டிற்குள் இப்போது வந்து விடுகிறது. ஆரம்பிக்கிறது பிரச்சனை.

இரு நாட்டு மக்களும் இந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது எனக் குழம்ப, ஃபில் (phil) என்ற நடுவயதான ஆண்,  தன் கருத்துக்களால் மக்கள் கவனத்தை ஈர்க்கிறான். இவன் அதுவரை உருப்படியாக எதுவும் செய்ததில்லை, மற்ற அவுட்டர் ஹார்னர் மக்கள் அவனை ஒரு பொருட்டாக மதித்ததில்லை, சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் பார்வையில் அவன் ஒரு உதவாக்கரை (loser, nobody). இப்போதோ அவன் கருத்துக்களால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். என்ன சொல்கிறான் அவன்? இன்னர் ஹார்னர் மக்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்கிறான், அவர்களை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்கக வேண்டும் என்கிறான். இதற்கு அவனுக்கான தனிப்பட்ட காரணமும் உள்ளது, அவன் முன்புஇன்னர் ஹார்னர் நாட்டுப் பெண்ணைக் காதலிக்க, அவள் அவனை விரும்பாமல் தன் நாட்டிலேயே ஒருவனைக் காதலித்து மணக்கிறாள். இது இப்போது வரை ஆறாத ரணமாக ஃபில் மனதில் உள்ளது.

மாபெரும் மக்கள் எழுச்சியான ஃபிரெஞ்சுப் புரட்சியில் ஒரு முக்கிய நபரான மாக்ஸ்மிலியான் ட ரோபெஸ்பியே (Maximilien de Robespierre), முதல் உலகப்போரில் அடைந்த தோல்வியில் ஏற்பட்ட தடைகளால் துவண்டிருந்தஜெர்மானிய மக்களின் மனநிலையை பயன்படுத்தி நாட்டுத் தலைமைக்கு உயர்ந்த ஹிட்லர், அன்னிய ஏகாதிபத்தியத்தில் சிக்கித் துன்புற்ற மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி நாட்டை ஆள வந்து அதைப் பிணக்காடாக மாற்றிய போல் பாட் (pol pot) ஆகியோரைப் போன்றவர் ஃபில். இப்படிப் பல பேரை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். ஒரு அசாதாரணச் சூழ்நிலையில் தைரியமாக முடிவெடுக்க முன்வருபவர்கள் இவர்கள். அறிவுள்ளவர்களும், நன்கு சிந்திப்பவர்களும் சொல்லவும் தயங்கும் பல அபத்தமானதும், அற்பத்தனமானதுமான மானுட சமூக விரோதக் கருத்துக்களை உணர்ச்சி வசப்பட்டும், வலுவாகவும், திரும்பத் திரும்பவும் சொல்வதன் மூலமே அவை சரியானவை, நியாயமானவை, தவிர்க்க முடியாதவை என்றெல்லாம் மக்களை நம்ப வைக்கும் திறமை கொண்டவர்கள் இவர்கள்.  அந்தச் சூழ்நிலையைச் சில நேரம் தங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்வர்.

ரோபெஸ்பியே ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு நடந்த உள்நாட்டு யுத்தத்தில், பல பயங்கர நிகழ்வுகளை நடத்தினான். பாரம்பரியக் கிருஸ்தவத்துக்கு மாறான ‘அனைத்து வல்லமையும் கொண்ட பரம்பொருளை’  (Supreme being) வணங்குவதை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்து அதன் வழியே குறையற்ற நல்லொழுக்கத்தை நாடும் சமுதாயத்தைக் கட்டுவதே சிறப்பு என்று கருதிய ரோபஸ்பியே, அந்த முயற்சிக்குத் தலைவனாகத் தன்னை நிறுத்த முயன்றான். ஹிட்லர் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை, யூதர்கள் மேல் அவனுக்கிருந்த வெறுப்பால், பல நாடுகள் மீது படையெடுத்து அங்கு ஜெர்மன் மேலாட்சியை நிறுவி, லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான்.

இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை அல்லது கண்டிப்பாக இருக்கவேண்டிய ஒரு குணம், எந்த குப்பையையும் கோமேதகமாக நம்பவைக்குமாறு பேசி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்ப்பது. இதற்கு ஃபில்லும் விதிவிலக்கல்ல.  மறை கழன்ற நிலையில்தான் இத்தகையை ஆசாமிகள் இருக்கிறார்கள் என்று ஸாண்டர்ஸ் பகடி செய்கிறார்.  ஃபில் சாதாரணமாகப் பேசுவதே உளறல் தான், இருந்தும் அவன் மூளை சில நேரம் கழண்டு விழுந்து விடுவது போல் கதையை அமைத்துள்ளார். மூளை மீண்டும் அவன் தலையில் பொருத்தப்படும் வரை அந்நேரங்களில் ஃபில் குரலே மாறுகிறது, அவன் உளறல் இன்னும் மோசமாகிறது ஆனால் என்ன ஆச்சரியம், இப்படிப் பேசுவதை அந்நாட்டு மக்கள் இன்னும் அதிகமாக விரும்புகிறார்கள், அதை அப்படியே ஏற்றும் கொள்கிறார்கள்.  அத்தகைய ஒரு உளறலைப் படியுங்கள்.இது தங்கள் மீது விதிக்கப்படும் பல அடக்குமுறைகளை எதிர்க்கும் கால்(Cal) என்ற இன்னர் ஹார்னர் பிரஜையைக் கொல்லும் முன் ஃபில் பேசுவது. கொல்வதை ‘disassemble’ என்று குறிப்பிடுகிறான் ஃபில். இந்த இடக்கரடக்கல்(euphemism) முக்கியமான ஒன்று, தங்கள் செய்வதை நியாப்படுத்த வல்லரசுகள் பயன்படுத்தும் ஆயுதம் மொழியில் இப்படிப்பட்ட இடக்கரடக்கல் அல்லவா.

“You people,” Phil shouted in the stentorian voice, “via shiftlessness and inertia, have forced us, a normally gentle constituency, into the position of extracting water from the recalcitrant stone of your stubbornness, by positing us as aggressors, when in fact we are selflessly lending you precious territory, which years ago was hewed by our ancestors from a hostile forbidding wilderness!”

மேலோட்டமாகப் பார்த்தால் இவன் சொல்வது சரியோ என்று தோன்றும், அவன் நாட்டு மக்கள் இன்னர் ஹார்னர் குடிமக்களுக்கு இடம் கொடுத்துள்ளது உண்மை தான். ஆனால் அதற்காக அவர்கள் கேட்கும் விலை?  இன்னர் ஹார்னர் மக்களின் இயற்கை வளத்தை (அந்த நாட்டில் இருக்கும் ஒரே மரம், ஒரே ஓடை),  தன் நாட்டிற்கு கொண்டு செல்வது, அவர்கள் உடைமைகளை, உடைகளைப் பறித்து நிர்வாணமாக வைத்திருப்பது போன்ற முறைகளால் அவர்கள் சுயமரியாதையை அழிப்பது. அதை அவர்கள் எதிர்த்தால், அவர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரைகுத்துவது. இப்படி அவனின் வெறியாட்டத்திற்குத்  துணையாக, ஜிம்மி, வான்ஸ் என்ற இருவர் உள்ளார்கள். இவர்கள் ‘special friends’ என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் மற்றவர்களால் அதிகம் மதிக்கப்படுவதில்லை, ஃபில் தங்களைப் புகழ்ந்தால் அவனுக்குச் சேவை செய்யத் தயாராக இருப்பவர்கள்.

உங்களுக்கு ஸாண்டர்ஸ் ஒரு அமெரிக்க எழுத்தாளர் என்பது நினைவிருக்கும். அதை வைத்து நோக்கினால், இந்நேரம் ‘அவுட்டர்  ஹார்னர்’ அமெரிக்காவையும், ஃபில் புஷ்ஷையும் குறிக்கின்றன என்று தெரிந்திருக்கும். அப்போது ‘special friends’? வேறு யார், உலகில் தங்கள் முதன்மை நிலையை இழந்து அமெரிக்காவின் தோழனாக இருப்பதையே கௌரவமாக நினைக்கும் இங்கிலாந்து தான். அவர்கள் தானே அல் இராக்கில் WMD ஆயுதங்கள் உண்மையில் உள்ளதா இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் போருக்கழைத்த அமெரிக்காவின் பின் சென்றவர்கள்.

ஃபில்லின் இந்தச் செயல்களுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கிறது. இந்த ஜனாதிபதி தான் நான் முன்பு சொன்ன ஏழு வயிறும், ஐந்து மீசையும் கொண்ட ஆசாமி. கிட்டத்தட்ட சுயஅறிவை முழுதுமாக இழந்த senile ஆசாமி.  இவருக்கு ஆலோசனை கூறுபவர்கள் எப்படி? ஒருவர் முகமே கண்ணாடி தான், அதாவது ஜனாதிபதியை பிரதிபலிப்பதே, அவர் நினைப்பதை, எண்ணுவதை அப்படியே ஒப்புக்கொள்வதே அவர் வேலை.இன்னொருவருக்கு முகமே வாய் தான், வெறும் பேச்சு தான் அவர் வேலை. இப்படிப்பட்ட ஆலோசகர்கள் உலகில் இருப்பதால் தானே பல பேராபத்துகள் நிகழ்கின்றன ? போகப் போக   ஃபில் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறான், அவனைப் பின்பற்றுபவர்களிடமிருந்து எந்த வித எதிர்க் கருத்தையும் அவன் சகிப்பதில்லை. அவன் உத்திரவிடும் ஆணைகளில் , கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் கையெழுத்திட வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். அப்படிச் செய்யாதவர்களை, சந்தேகப் படுகிறான். ஒரு கட்டத்தில் ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்கித் தானே ஜனாதிபதி ஆகிறான். ஆலோசர்கள்? அவர்களுக்கென்ன, அவர்களுக்குத் தேவை ஒத்து ஊதுவதற்கேற்றபடி ஜனாதிபதி பதவியில் ஒரு ஆசாமி, எனவே அவர்களும் ஃபில் பக்கம் சாய்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும், நாம் வரலாற்றில் படித்ததும், இப்போதும் பார்த்துக்கொண்டிருப்பதும் தான். பல கட்டங்களில், பல நாடுகளில், பல விதமாக நடப்பவைதான்.

இன்று ஊடகங்கள் பற்றிப் பேசாமல், பொது மக்களின் மத்தியில் ஒரு கருத்து எப்படி பரப்பபடுகிறது என்று புரிந்து கொள்ள முடியுமா? ஸாண்டர்ஸ் ஊடகங்களையும் விட்டு வைக்க வில்லை. முதலில் அவை கொடுக்கும் தலைப்பு செய்திகள் இவ்வாறு உள்ளன

“BUG CARRIES BREADCRUMB”, “OTHER BUGS LOOK ON IN AWED SILENCE”

“WATER RUNS DOWNHILL TOWARDS SEWER”

“SKY REMAINS DARK AS NIGHT PROCEEDS”

செய்திகள் வெறும் காட்டுக்கத்தல் என்பதால் தான் அவை  ‘Upper Case’இலேயே இந்த நூலில் அச்சடிக்கப்பட்டுள்ளன. page 3, breaking news என ஆரம்பித்து infotaintment, paid news  என்று ஊடகங்கள் வந்தடைந்திருக்கும் இடமே “இரவில் வானம் இருளாக உள்ளது” என்பது போன்ற தலைப்பு செய்திகள்தாமே? ஊடகவியலாளர்கள் எப்படிச் சித்திரிக்கப்படுகிறார்கள்? அவர்களுடைய கழுத்துப்பட்டையில் (clavicle) ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது (தொண்டை கிழியக் கத்த வேண்டாமா), அது மட்டுமல்ல அவர்களின் பின்புறத்திலும் இயல்பாகப் பேச வழி உள்ளது. ஒரு ஊடக ஆசாமி சொல்வது (கத்துவது?) என்னவென்றால் “MAN ASKS QUESTION, EXPECTS ANSWER”. ஒரு வேளை ஸாண்டர்ஸ் அர்நாப் கோஸ்வாமியைப் (Arnab Goswami) பார்த்திருப்பாரோ, யார் கண்டது அர்னாப் தினம் தினம் கத்துவது (அல்லது கேள்வி கேட்பது) அமெரிக்காவிலும் கேட்டிருக்கலாம்.

இந்த ஊடகங்களும் ஃபில் பின்னால் அணி திரள்கின்றன. “NEW PREZ TO NATION: YOU SHALL KNOW PEACE”. “PREZ DOES WHAT PREZ MUST DO”.

அவர்களும் எத்தனை நாள் தான் பூச்சிகள் பற்றியும், சாக்கடைகள் பற்றியும் பேசுவார்கள். யுத்தம் இவற்றை விடச் சுவாரஸ்யமானது தானே.

ஃபில்லின் அராஜகம் எல்லை மீறிப் போக, இறுதியில் இன்னொரு அண்டை நாடான ‘Greater Keller’ தலையீட்டினாலும், ஒரு அமானுஷ்ய சக்தியினாலும் நிலைமை ஒரு கட்டுக்குள் வருகிறது.  ஃபில்லின் கொடுங்கோல் ஆட்சி ஒரு முடிவுக்கு வருகிறது, அதுவும் ஒரு பகடியாகத்தான் தான் முடிகிறது. அவன் மூளை காணமல் போய் விட, அதைக் கொஞ்ச நேரம் அவன்  சாதகமாக ஆக்கினாலும், நேரம் ஆக ஆக, மூளையில்லாமல் அவன் உளறல் ஒரு உச்சத்தை அடைந்து, மூளை இல்லாததை அவனே தாங்க முடியாமல் நினைவற்று வீழ்கிறான் .எல்லாச் சர்வாதிகாரிகளும் இதே நிலையை தான் அடைய வேண்டும், முற்றிலும் மூளையை இழக்கும் போது தான் முற்றிலும் தறி கேட்டு, அவர்கள் வீழ்ச்சி நேர்கிறது. அவர்களும் கர்வத்தில் (hubris),  தாங்கள் தங்கள் மூளையை முற்றிலுமாக இழந்து வருகிறோம் என்பதை உணர்வதில்லை. ஆலோசகர்கள் பழைய ஜனாதிபதியைத் தேடிச் செல்கிறார்கள், வேறென்ன செய்ய முடியும் அவர்களால். ஊடகங்களும் அயர்வதில்லை. அவர்களுக்கு எந்த செய்தியும் நல்ல செய்தி தான் (அவர்கள் வியாபாரத்தைப் பொறுத்த வரை), எனவே அவர்கள் கத்துவது இப்படி மாறுகிறது

“HOW WAS NATION SO EASILY DUPED”

“WHY DID NATION IGNORE REPEATED WARNINGS BY MEDIA”

“MAJOR MEDIA FIGURES BRAVELY FOLLOW STRANGE EXODUS FROM BORDER DETERMINED TO SEE WHAT IS UP WITH THAT”

அந்த அமானுஷ்ய சக்தி

“THIS TIME, BE KIND TO ONE ANOTHER. REMEMBER: EACH OF YOU WANTS TO BE HAPPY. AND I WANT YOU TO. EACH OF YOU WANTS TO LIVE FREE FROM FEAR. AND I WANT YOU TO. EACH OF YOU ARE SECRETLY AFRAID YOU ARE NOT GOOD ENOUGH. BUT YOU ARE TRUST ME, YOU ARE.”

என்று கூறி இரு நாடுகளையும் இணைத்து “நியூ ஹார்னர்” என்ற, பழைய இரு நாடுகளிலிருந்த 15 பேரைக்கொண்ட ஒரு புது நாட்டை உருவாக்குகிறது. ஃபில் ஒரு சிலையாக மாற்றப்படுகிறான்.

மக்கள் மேலோட்டமாக பார்க்கும் போது  ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஃபில்லின் சிலை புதர்களால் சூழப்படுகிறது, மக்கள் அவனைப் பற்றி மறந்து விட்டாற் போல் இருந்தாலும் லியோனா என்பவள் மட்டும் அவ்வப்போது அங்கு சென்று சிலையைப் பார்த்தபடி இருக்கிறாள். இத்துடன் இந்த குறுநாவல் முடிகிறது, ஆனால் நடைமுறையில்?

இந்தக் குறுநாவலை அமெரிக்காவின் வல்லாதிக்கப் போக்கை விமர்சிக்கும் நாவலாகப் பார்ப்பது எளிது, அதைத் தொடர்ந்து சென்றால் நாம் இந்த குறுநாவல் சொல்ல வரும் முக்கியமான விஷயங்களைத் தவற விடுவோம் அவை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டியவை. ஒன்று, நம்மிடையே பரவலாக உள்ள, ஒரு மீட்பரை எதிர்நோக்கி இருக்கும் மனப்பான்மை. குறிப்பாகச் சில அசாதாரணச் சூழல்களில், யாராவது பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அவரையே நாம் மீட்பராக உருவகப்படுத்தி ஆட்டு மந்தை போல் அவர் பின் செல்வது. நம்மால் தலைமையேற்று முன்னடத்த முடியாமல் இருக்கலாம், அதற்காக அப்படிச் செய்ய முன்வருபவரை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லையே. (அதற்காக அவர்களை ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடவும் வேண்டாம்). அனைத்து சர்வாதிகாரிகளின் ஏற்றத்திற்கு, மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் தன்மையே அடிப்படைக் காரணி.

நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய இன்னொன்று என்னவென்றால், மானுட விரோதப் போக்கு என்பது எப்போதும் முழுமையாக அழிவதில்லை. அது வேறு, வேறு ரூபங்களில் , பல வண்ண முகமூடிகள் அணிந்து, புதிய கொள்கைகளை மேலங்கியாகக் கொண்டு வரலாம், அல்லது ஒரு நீண்ட உறக்கத்தில் (hibernation ) கூட இருந்து,  எப்போது வேண்டுமானாலும் உயிர்த்து எழலாம். அதனால் தான் வரலாற்றின் அனைத்து காலகட்டங்களிலும் பல ஃபில்கள் தோன்றி வந்திருக்கின்றனர். இந்தக் குறுநாவலின் இறுதியில் கூட லியோனா ஃபில்லின் சிலையை சென்று பார்ப்பது மானுட விரோதப் போக்கு முற்றிலும் அணையவில்லை, ஒரு சிறு கொதிப்பு இன்னும் உள்ளது என்பதைக்  குறிக்கிறது. புதிய நாட்டில், லியோனா மற்றும் சாலி போன்ற சிலர் பந்து போல் உருண்டையாகவும், கில் போன்ற சிலர் நீண்டும் உள்ளனர். பேதத்தின் முதல் விதை இதிலேயே தூவப்படுகிறது, அதுவும் புதிய நாடு உருவான உடனேயே. அந்த பேதம் தான் ஏனென்றே புரியாமல் லியோனாவை ஃபில் சிலையை நோக்கி செலுத்துகிறது. இந்த சிறு கங்கு பெரும் தீக்கொழுந்தாகும்  நாள் வெகு தூரத்தில் இல்லை.

எனவே ஒரு யுடோபியாவைக்  கற்பிதம்  செய்வதை விட, நாம் இத்தகைய மானுட விரோத செயல்பாடுகள் குறித்து விழிப்பாக இருப்பதே அவசியம். ஏனென்றால் யுடோபியா என்பது சாத்தியமற்றது, ஆனால் விழிப்புடன் இருப்பது நம் கையில் உள்ளது. இது அவநம்பிக்கை  (pessimism) அல்ல,யதார்த்தம்.

பி.கு: நுகர்வுக் கலாச்சாரம் பெருகியுள்ள, சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிற இன்றைய சூழலில் ஸாண்டர்ஸின் எழுத்துக்கள் கண்டிப்பாக அதிகம் படிக்கப்பட்டு, அது குறித்து உரையாடல்கள் நடத்தப்படவேண்டியிருக்கிறது. ஸாண்டர்ஸ் உருவாக்குகிற உலகிற்கும், நம் உலகிற்கும் தூரம் அதிகம் இல்லை.  அவர் உலகின் பல அம்சங்கள் ஏற்கனவே நம் உலகில் உள்ளதைச் சார்ந்தே, அதை இன்னும் சற்றே அதீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அந்த அதீதமும் இன்னும் சில காலத்தில் நம் உலகின் இயல்பாகலாம். நாம் விரைவாக அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

இந்தக் குறுநாவல் ” ஸாண்டர்ஸ் எழுதிய “In Persuasion Nation” என்ற அபாரமான சிறுகதை தொகுப்புடன் ஒரே புத்தகமாக கிடைக்கிறது. இந்த புத்தகம் அவர் எழுத்துக்களில் மிக முக்கியமானது எனலாம்.

—————————————————————————————————

புத்தக விவரங்கள்:

பிரசுரகர்த்தர்: Riverhead Books

வருடம்: 2007/ ISBN13: 9781594482427/ ISBN 10: 159448242x

Paperback/ கடைசியாகப் பார்த்தபோது விலை ரூ.861 (வரிகளைச் சேர்த்து)