மருத்துவர் இல. மகாதேவன் – பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்)

யோகமாசாம் து யோ வித்யாத் தேஷ கால உபபாதிதம்
புருஷம் புருஷம் வீக்ஷ்ய ச ஞேயோ பிஷகுத்தமஹ
– சரக சம்ஹிதை, சூத்திர ஸ்தானம்

(எவனொருவன் கால – தேச வர்த்தமானங்களை துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப ஒவ்வொரு நோயையும் பகுத்தறிந்து, ஒவ்வொரு மனிதனுக்குமான தனித்துவமான சிகிச்சை முறைகளை உணர்ந்து, மருத்துவம் செய்கிறானோ அவனே சிறந்த மருத்துவன் (பிஷக் உத்தமன்))

“எனக்கு …,” ஏதோ ஒரு கடும் துவர்ப்பான கஷாயத்தைக் குடித்து முகமும் மனமும் கசந்த முகபாவனையுடன் நிதானமாகச் சொன்னார், “ஆயுர்வேதமே ஒரு க்வாக்கரின்னுகூட அப்பப்ப தோணுறதுண்டு”. அவர் அப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். குழம்பித் திரிந்த அந்த நாட்களில் எனக்குத் தேவைப்பட்ட நம்பிக்கையை யாசித்துச் சென்றிருந்த நான் அவரிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய கண்களை உற்று நோக்கினேன், அதில் குறும்பு மின்னுகிறதோ? அல்லது ஆழத்தை நோட்டம் விடும் கேள்வியா? என்னால் பிரித்தறிய முடியவில்லை. தயக்கமில்லாமல் சொன்னேன், “சார், எனக்கு மருத்துவமே அப்படித்தான்னுதான் கொஞ்ச காலமா தோணுது” அவருக்கே உரிய அதிர்வேட்டு சிரிப்பொன்று அங்கு வெடித்துக் கிளம்பியது.

மிகச்சரியாக இரண்டாண்டுகள் கழிந்துவிட்டன, நான் ஆயுர்வேத மருத்துவர் மகாதேவனை அவருடைய தெரிசனம்கோப்பு மருத்துவமனையில் சந்தித்து. அதற்கு முன்பும் பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். அவருடைய உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருநாள் முழுவதும் அவருடைய சென்னை மருத்துவமனையில் சக மாணவர்களுடன் சேர்ந்து உதவியிருக்கிறேன். எனினும் முற்றிலும் வேறு வகையிலான அனுபவம் என்றே இதைச் சொல்வேன். கொந்தளிப்பான அந்த காலகட்டங்களில் நான் சந்தித்த ஆளுமைகள் வழியாக புதியதொரு உலகம் என்முன் விரிந்தது. அதில் மகாதேவன் மிக முக்கியமானவர்.

ayur_dr_mahadevan

“தம்பி, மகாதேவன் சார பாக்கணும்னு சொன்னியே, வர்றியா?” என்று எனது கல்லூரி சீனியர் என்னை அழைத்தபோது எனக்கு ஏற்பட்ட பதட்டம் நன்றாகவே நினைவிருக்கிறது. அவருடன் ஒப்புநோக்க எனக்கிருக்கும் அறியாமையை உணர்ந்த பயம் – உள்ளூர நான் மட்டும் அறிந்திருந்த, பூசி மெழுகப்பட்ட என் மிகை பிம்பங்களைத் துளைத்து ஊடுருவி அவரால் நோக்கிவிட முடியும் என்று அஞ்சினேன். எனது கல்லூரி சீனியரும் அவரது நான்கைந்து நண்பர்களும் தெரிசனம்கோப்பில் உள்ள அவருடைய மருத்துவமனையில் சிலகாலம் தங்கி பயிற்சி எடுத்தவர்கள்.

கல்லூரியில் எங்களுக்குக் கற்பித்த வெகுசில ஆசிரியர்களைத் தவிர பிறருக்கு ஆயுர்வேதத்தில் அத்தனை நம்பிக்கை இருந்ததில்லை. இந்தச் சூழலில் மாணவர்கள் சிலர் ஆண்டு விடுமுறைகளில் அங்கு சென்றுவந்து கதை கதையாக மகாதேவனைப் பற்றியும் அவர் குணப்படுத்திய நோயாளிகளைப் பற்றியும்  அவர்களுக்குச் செய்த சிகிச்சைகளைப் பற்றியும் சொல்வதை கேட்க எங்களுக்கெல்லாம் சற்று பொறாமையாகத்தான் இருக்கும். அதே வேளையில் அவருக்கே உரிய சில சுபாவமான மிகை நடத்தைகளைப் (eccentricities) பற்றியும், மாணவர்களிடமும் இளம் மருத்துவர்களிடமும் அவர் காட்டும் கண்டிப்பைப் பற்றியும் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது, சற்று தொலைவில் நம்மை இருத்தி வைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது என்று தோன்றும். அகங்காரக் கிளையைவிட்டுக் கீழிறங்குவது மனக்குரங்கிற்கு அத்தனை சுலபமில்லை.

அச்சங்கள் இருப்பினும், மயிலாப்பூரில் இருந்த அவரது மருத்துவமனைக்குச் சென்றேன். பத்து பதினைந்து மாணவர்களும் இளம் மருத்துவர்களும் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். “நோயாளியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார், ஏதேனும் ஒரு இடைவெளி கிடைக்கும்போது அறிமுகம் செய்கிறோம், அமைதியாக அமர்ந்திரு,” என்று சொன்னார்கள். பொதுவாகவே அவருக்கு இன்றைய ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மீது பெருத்த நம்பிக்கை இருந்ததில்லை. தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யும் விற்பனைக்கூடம் என்றே அவர் கருதினார். எனக்கு எப்படியாவது அவருடைய கவனத்தை ஈர்த்துவிட வேண்டும். அவரை அசரடிக்க வேண்டும். நான் நீங்கள் எண்ணும் சராசரியல்ல என்று உணர்த்தியாக வேண்டும் என்று மனம் பரபரத்தது.

சமஸ்க்ருதத்தில் பெரிய எழுத்துக்களில் ஓம் என்று பொறிக்கப்பட்ட காவி ஜிப்பா ஒன்றை அணிந்துகொண்டு அமர்ந்திருந்தார் மகாதேவன். ஒரு இடைவேளையின்போது என்னை அழைத்துச் சென்று அவர்முன் நிறுத்தினார் சீனியர். கேஸ் ஷீட்டை மேய்ந்தபடியே, “சார் யாரு? ஆயுர்வேத காலேஜ் ஸ்டாஃப்பா?” என்று விசாரித்தார் அவர். நாலைந்து பேரின் சிரிப்பொலி கேட்டது. “இல்ல, ஸ்டூடண்ட்” என்று தயங்கியபடியே சொன்னேன். தலை நிமிர்ந்து என்னை நோக்கி “நின்னுக்கோ” என்று சொல்லிவிட்டு, “அடுத்த ஆள வரச் சொல்லும்மா” என்றபடி தன் பணியைத் தொடர்ந்தார். சோர்வாக இருந்தது. என்னால் ஒன்றும் சாதித்துவிட முடியவில்லை. உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் தன்னை சுற்றி நிகழ்வதாகக் கற்பிதம் செய்து கொள்ளும் மனம். உலகத்தின் ஒவ்வொரு செயலும் தன் விரலசைவுக்கு காத்துக் கிடக்கும் மனோபாவம். அவருடைய இந்த உதாசீனம் அன்று என்னைச் சுக்கு நூறாக உடைத்தது.

அமைதியாக அவரருகே அவர் கண்படாத ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் நோயாளிகளைப் பரிசோதிப்பதைக் காண்பது ஒரு அலாதியான அனுபவம். புறவயமான சோதனைகளாலும் கேள்விகளாலுமே அவர் நோயறிய முற்பட்டார். தன் மாணவர்கள் அனைவரும் புறவய சோதனைகளுக்கு உதவும் ‘மெர்க்ஸ் மானுவல்’ எனும் நூலை வைத்திருக்க வேண்டும் என்பது அவருடைய கட்டளைகளில் ஒன்று. ஒவ்வொரு நோயையும் கண்டறிந்து இந்நிலைக்கு ஆயுர்வேதத்தில் பொருத்தமான மருந்து என்ன என்ற சூத்திரத்தைச் சொல்லிவிட்டு மருந்து எழுதிக் கொண்டிருந்தார். மதியம், மூலையில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி “அப்புறமா தத்வலோகா ஹாலுக்கு வா,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

பரமஹம்ச யோகானந்தரின் சீடர்களில் ஒருவரான ராய் யூஜின் டேவிஸ் எழுதிய நூல் ஒன்றைத் தமிழாக்கம் செய்திருந்தார் மகாதேவன். அந்நூல் வெளியீட்டு விழா தத்வலோகா அரங்கில் நடைபெற்றது. டேவிசும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர் ஒரு சிறிய அறைக்குள் இருந்த டேவிஸிடம் எங்களை அழைத்துச் சென்றார் மகாதேவன். சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நல்ல உயரம், நிறம் மட்டும் கொஞ்சம் மங்கினால் ஜின்னாவைப் போல் இருப்பார் என்று தோன்றியது. சில மூச்சுப் பயிற்சிகளை பயிற்றுவித்தார் டேவிஸ். அவ்வளவுதான், அன்றைய தினம் சிறப்பாக எதுவுமே நடைபெறவில்லை. பெருத்த ஏமாற்றத்துடன் இரவு வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு அவரை காணும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை.

OoO

மருத்துவர் மகாதேவனின் பரிச்சயம் எனக்குள் ஒரு மிக முக்கியமான கேள்வியை கவனப்படுத்தி, அதற்கான விடை தேடி என் பயணத்தைத் துவக்கும் துணிவையும் ஆற்றலையும் கொடுத்தது – உண்மையிலேயே நவீன அறிவியலும் ஆயுர்வேதமும் நேரெதிர் திசைகளில் பயணிக்கும் அளவிற்கு முரண்பாடுகள் கொண்டவைதானா? இந்தக் கேள்வி எவ்வளவு முக்கியமானது என்பதையும், இதற்கு நடைமுறை விடையளிக்கக்கூடிய ஆசிரியனை ஒருவன் கண்டடைவது எவ்வளவு அவசியம் என்பதையும் உணர தற்கால இந்திய மருத்துவத் துறை மாணவர்களிடையே நிலவும் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் அறிந்திருக்க வேண்டும்.

நவீன மருத்துவம் பயில வேண்டும் எனும் பள்ளிப் பருவத்து கனவு பொய்த்த விரக்தியில் ஆயுர்வேதத்தின் நிழலில் ஒதுங்கிய பலரில் நானும் ஒருவன். வழக்கமான இயற்பியலையும் உயிரியலையும் மட்டுமே அதுவரை அறிவியல் எனக் கற்றறிந்த ஒருவன் திடுமென்று ‘பஞ்ச மகா பூத’ தத்துவங்கள் குறித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், புலனுக்கு அப்பாற்பட்ட வாத பித்த கபங்களைக் கொண்டு உடலைப் புரிந்து கொள்ள முயல்வதும் அத்தனை எளிதல்ல. அதுவரை சேமித்து வைத்திருந்த அறிவுக் களனுடன் பொருந்தாத தகவல்கள் அதில் இணைய முற்படும்போது நம் அகங்காரம் அதை நிராகரிக்கவே செய்யும்.

நவீன உடற்கூறியல், உடலியங்கியல், நோயறிதல் போன்ற அறிவியல் துறைகளில் அபார திறமை கொண்ட அதே வேளையில் பாரம்பரியமான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளிலும் அபார தேர்ச்சி கொண்ட ஆளுமைகள் இன்று இந்திய அளவில் வெகு சிலரே இருக்கக்கூடும். பெரும்பாலான நவீன மருத்துவர்களிடத்தில் பாரம்பரிய மருத்துவம் பற்றி மிகப் பிழையான கற்பிதங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்பக்கத்தில் ஆண்டிசெப்டிக் லோஷன் கொண்டு கை கழுவுவதுகூட ஆயுர்வேதத்தை அழித்துவிடும் எனக் கருதும் தூயவாதிகள். எவ்வகையிலான எளிய தர்க்கத்துக்கும்கூட ஆயுர்வேதம் உட்படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.

பெரும்பாலான மருத்துவர்கள் மரபு சார்ந்த அறிவுக்கும் நவீன அறிவியலின் நிரூபணங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளில் சிக்குண்டு குழம்பி, நம்பிக்கை இழந்து, தாம் கற்ற கல்வியை அன்றாட அனுபவத்துக்கு உட்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்ளும் முனைப்பு இல்லாதவர்களாக தேங்கி நின்றுவிடக்கூடும். ஆயுர்வேதம், சித்த மருத்துவம் பயின்ற மாணவர்கள் நவீன மருத்துவமனைகளில் இரவு நேர மருத்துவர்களாகப் பணியாற்றவும், சம்பந்தமில்லாத வேறு துறைகளில் புகவும் காரணம் மரபார்ந்த அறிவுக்கும் நவீன மருத்துவத்துக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள்தான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

ஒருவன் தன் வாழ்நாளில் தனக்கான ஆசிரியனாக ஒருவரைக்கூட கண்டுகொள்ளவில்லை என்றால் தான் கற்ற கல்வி மீது அவனுக்கு நம்பிக்கையற்றுப் போய்விடும் அபாயம் உண்டு. நான் கல்லூரியில் நுழைந்த முதல் நாள் எங்களுக்கு அறிமுக வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் சொன்னார், “ இது காலேஜ் இல்ல, செத்த காலேஜ். நீங்க இங்க மருத்துவத்தை படிக்க வரல, வரலாறு படிக்க வந்துருக்கீங்க, வருங்காலத்துக்கு உதவாத வெத்து வரலாறு”. அவருடைய கண்டடைதல் அதுதான். இத்தனை ஆண்டு கல்வியும், அனுபவமும் அவருக்குப் பரிசளித்தது இந்த அவநம்பிக்கையைத்தானா? தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அன்று அவர் சொன்னதை உறுதிபடுத்தும் விதமாகவே அமைந்தன.

தெளிவற்ற அந்த காலகட்டத்தில் ஒரு நாள் சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் மருந்து நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கு பற்றிய அறிவிப்பு ஒன்று வந்தது. கருத்தரங்கில் பங்குகொண்டால் ஏதேனும் தெளிவு கிடைக்குமா என்று அந்த கருத்தரங்கிற்கு பெயரை பதிவு செய்துகொண்டு சென்று அமர்ந்தேன். காலையிலிருந்து அங்கு நான் கேட்ட அமர்வுகள், வாழ்க்கையை வீணடித்து விட்டோம், எனும் உணர்வை வலுப்படுத்தின. சரகர் சொன்னார், வாக்பட்டர் சொன்னார், சுசுருதர் சொன்னார் என்று எட்டு திக்கிலும் சொற் சிலம்பம் ஆடிக்கொண்டிருந்தார்கள். மேற்கோள்கள், அதை விளக்க மேலும் மேற்கோள்கள். சுயமான பார்வையையும் கண்டடைதலையும் அங்கு எவரும் முன்வைக்கவில்லை.

கொடுத்த இருநூற்றைம்பது ரூபாய்க்கு புலாவும் ரொட்டியும் பன்னீர் மசாலாவும் உண்டு ஏ.சி அறையில் கண்ணயரக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி புளங்காங்கிதத்துடன், ஃபைல் கொடுத்ததும் கிளம்ப வேண்டியதுதான் என்று காத்திருந்தபோது, அரங்கில் பரபரப்பு. ஒரு சிவந்த, தடித்த மனிதர். அடர்ந்து சுருண்ட தலைமயிர். அடர்நீல சட்டையில் மேடையேறி எங்கள் முன் நின்றார். “நான் எனக்குத் தெரிந்த ஆயுர்வேத சூத்திரங்களை மனனம் செய்து எனது மூளைத்திறனை வெளிக்காட்ட இங்கு வரவில்லை, சரகரும், வாக்பட்டரும் சொன்னதெல்லாம் இருக்கட்டும், நான் என் வாழ்வனுபவத்தில் அவர்கள் சொன்னவற்றைப் பொருத்தி பார்த்து கண்டடைந்த உண்மைகளைப் பேசப் போகிறேன்” என்றார் அவர். அரங்கம் நிமிர்ந்து அமர்ந்தது. அதுவே நான் மகாதேவன் உரையை கேட்ட முதல் முறை. அங்கு அவர் அசட்டையாக உரையாற்றியபோது எழுந்த உற்சாகமும், கரவொலியும், சிரிப்பொலியும், அந்த இறுக்கமான கருத்தரங்கிற்கு சற்றும் பொருந்தாத வேறோர் வண்ணத்தை அளித்தன. முதன்முறையாக நான் தேர்வு செய்த ஆயுர்வேதம் குறித்து மனதில் நம்பிக்கை எழுந்தது.

அது தொடங்கி நான் அவரை மானசீகமாக பின் தொடரத் துவங்கினேன். தொடர்ந்து அவருடைய பல சென்னை உரைகளைக் கேட்கச் சென்றேன். ஒவ்வொரு முறையும் உத்வேகத்துடன் திரும்பி மூல நூல்களை முழுமையாக கற்க முயற்சிப்பேன், இந்த உற்சாகம் நீடிக்காதென்றாலும். நரம்பு மண்டலம் மற்றும் வாத நோய் சிகிச்சை தொடர்பாக ஒரு நாள் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார், மற்றொரு சமயம் அவருடைய நிபுணத்துவம் வாய்ந்த வஸ்தி சிகிச்சை (ஆசனவாய் வழியாக மருந்து செலுத்தும் சிகிச்சை முறை) பற்றிய அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஏனோ அவருடைய இத்தகைய செயல்பாடுகள் சிலர் கண்ணை உறுத்தின போலும். அதற்குப் பின் அவர் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏதும் எடுக்கவில்லை. இன்று பொது மக்களுக்கும், அரசு சித்த மருத்துவர்களுக்கும் மத்தியில்தான் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

OoO

மகாதேவன் மிகச்சிறந்த மேடை ஆளுகை கொண்டவர். அபார நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய திரி தோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் நூலில், ஆயுர்வேதம் கடந்து வந்த பாதை குறித்து இறுதியாக எழுதும்போது “இன்று ஆயுர்வேதம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மருத்துவ முறைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. அதேசமயம் பல்வேறு மருத்துவ பிரதிநிதிகள், கிராம வைத்தியர்கள், வர்மானிகள், ஆயாக்கள், மந்திரவாதிகள், ஜோசியர்கள், பூசாரிகள் மற்றும் பாட்டிமார்கள் போன்றோரையும் சமாளிக்க வேண்டியுள்ளது. தவிர பாம்பாட்டிகள், மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பவர்கள், ஆண்மைக் குறைவை அகற்றுபவர்கள் எனப் பல கூட்டங்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது.” என்று அவருக்கே உரிய எள்ளலுடன் முடிக்கிறார்.

அவருடைய குருநாதர் டாக்டர். பி.வைத்தியநாதன், நூறு வருடம் பழமையான மயிலாப்பூர் வெங்கட்ரமணா கல்லூரியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர். வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் அவரை நினைவுகூர மகாதேவன் தவறுவதில்லை. பாரம்பரியமான ஆயுர்வேத குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும்கூட பெரிய அளவு ஆர்வமின்றியே பெரும்பாலான கல்லூரி காலத்தை கழித்தார் மகாதேவன். அவருடைய குருநாதர் வைத்தியநாதனின் வழியாகவே ஆயுர்வேதத்தின்பால் ஈர்க்கப்பட்டார். வெவ்வேறு உரைகளின்போது அவருடைய குருநாதர் வைத்தியநாதனைப் பற்றி மகாதேவன் எங்களிடம் பகிர்ந்த இருவேறு நிகழ்வுகள் இன்னும் என் நினைவில் உள்ளன.

சிக்கலான நோய்களை மாறுபட்ட கோணங்களில், துணிவுடன் அணுகும் வழிமுறையை மகாதேவன் அவரிடமிருந்துதான் கைக்கொண்டிருக்க வேண்டும். வயிற்றில் குழந்தை தங்காமல் அடிக்கடி கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் ஒருவர் தன் பிரச்சினைக்கு சிகிச்சை செய்துகொள்ள வருகிறார். வெவ்வேறு பழங்கள் வாங்கி வந்து தினமும் அப்பழங்களை மகாதேவன் அவர்களை உண்ணச் சொல்லிவிட்டு அதற்குள்ளிருக்கும் விதைகளை மட்டும் தனியே சேகரித்து தரச் சொல்கிறார். தினமும் காலை அப்பெண் அங்கு வரும்போது, தான் சேகரித்த விதைகளை அரைத்து பொடி செய்து அதை அவருக்கு மருந்தாகக் கொடுத்து வரவும், சிலகாலம் கழிந்தபின் அப்பெண் கருவுற்று நல்லபடியாக பிள்ளை பெற்றாள். மகாதேவனுக்கு இதன் பின்னணி தர்க்கம் விளங்கவில்லை. ‘அந்த பொண்ணுக்கு ஜீவ சக்தி குறைவா இருக்கு, அதனாலதான் கரு தங்கல. விதை முழுசா ஜீவ சக்தியுள்ளது இல்லையா? தனக்குள்ள ஒரு வனத்தையே வெச்சிண்டுருக்கு இல்லையா? அதான் அவளோட குறைவான ஜீவ சக்தியை இப்படி நிறைவாக்கினேன்,” என்றாராம் அவர். மற்றொரு சமயத்தில் உடலில் தாமிர அளவின் சீர்கேடு காரணமாக உருவாகும் வில்சன் நோய்க்கு ரச சாத்திரத்தில் ( indian alchemy) தாமிர உலோகத்தை சுத்தி செய்யப் பயன்படும் மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளித்து நல்ல முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மரபிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவை முற்றிலும் வேறோர் வகையில் பயன்படுத்தும் சாதுர்யம் அவருக்கு இருந்தது.

மகாதேவன் சிறந்த ஆய்வாளரும்கூட. வஸ்தி சிகிச்சையின் செயலாற்று முறை பற்றியும், ஆயுர்வேத பிரகிருதி அறியும் வழிமுறைகள் பற்றியும், வாத பித்த கப தோஷங்களைப் புறவயமாக அறிந்துகொள்ள உதவும் அளவீடுகள் பற்றியும் மிக முக்கியமான பல ஆய்வுகளை அவர் செய்து வருகிறார். இந்திய மருத்துவ முறைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் இந்த மருத்துவர்கள் வட்டத்தில் சித்த மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் இடையே ஒருவித பிணக்கு எப்போதும் இருப்பதுண்டு. ஆனால், மகாதேவன் அவர்களுக்கு சித்த மருத்துவத்தின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஆழ்ந்த அறிவும் உண்டு. பல சித்த மருத்துவர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவருடன் இணைந்து பணியாற்றிய டாக்டர். ஸ்ரீ ராம், டாக்டர் வேங்கடப்பன் போன்றவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மருத்துவர் மகாதேவனுக்கு ஆயுர்வேதம் சார்ந்த மேட்டிமை ஏதும் கிடையாது. அவர் தன் எல்லைகளை அறிந்தவர். தனது தோல்விகளை ஒப்புக் கொள்வதில் அவருக்கு தயக்கம் ஏதுமில்லை. தசை நார் சீரழிவு நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் எவ்வித சிகிச்சையும் பெரிய அளவில் பலனளிக்காது என்பதை தாம் முயன்று பார்த்து அறிந்துகொண்டதாக ஒருமுறை சொன்னார். மற்றொருமுறை விந்தணுக்கள் உற்பத்தியே இல்லாதபோது (azoospermia) ஆயுர்வேதத்தில் எந்த சிகிச்சையும் பெரிதாக பலனளிக்கவில்லை என்பதே தனது அனுபவம் என்று சொன்னார். நாடி பிடித்து செய்யப்படும் பரிசோதனை தனக்கு பிடிபடவில்லை, உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், ஆகவே அதை நான் பூரணமாக நம்ப மாட்டேன் என்று மற்றொரு விவாதத்தின்போது கூறினார் (இக்கருத்தை அவர் இப்போது மாற்றிக் கொண்டிருக்கலாம்).

நவீன மருத்துவம் கைவிட்ட சில அரிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரும்போது நடைமுறை சாத்தியக் கூறுகளை நோயாளியின் குடும்பத்தாரிடமும் நோயாளியிடமும் ‘இது ஒரு பரிசோதனை முயற்சி,’ என்று தெளிவாக விளக்கிவிட்டுத்தான் சிகிச்சையைத் துவக்குவார். ஆயுர்வேதத்தைக் காட்டிலும் நவீன மருத்துவத்தில் சில நோய்களுக்கு மேலான தீர்வு இருக்கும் என்று அவர் நினைத்தால், ஆயுர்வேதமே உயர்ந்தது என்ற பிடிவாதத்தில் நோயாளியின் மேல் ஆயுர்வேத சிகிச்சைகளைத் திணிக்க மாட்டார். குணமாகக்கூடிய வாய்ப்புகளைத் தெளிவாக விளக்கிக் கூறி, நோயாளிக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை அளிப்பார். இயன்றவரை அவருடைய நோயாளி மைய பார்வையை எனதாக்கிக் கொள்ளவே இன்று வரை முயன்று வருகிறேன்.

மரபிலக்கியங்களிலும், ஓரளவிற்கு நவீன இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு. இசையின் மீது பேரார்வம் உண்டு. நான் அங்கு சென்றிருந்த சமயத்தில், தெரிசனம்கோப்பு கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு நலிந்த வித்வானின் குடும்பத்தினர் அங்கு வைத்தியத்திற்கு வந்திருந்தனர். கடந்த திருவிழாவின்போது அக்கலைஞர் நிகழ்த்திய வாசிப்பை அரைமணிநேரம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் மகாதேவன். பின்னர், இலவசமாக மருந்துகளை கொடுத்தனுப்பினார். நான் ஜெயமோகனைக் காணச் செல்கிறேன் என்று தெரிந்ததும், அகமகிழ்ந்து இலக்கியம் பற்றி பேச்சு சற்று நீண்டது.

OoO

ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவன் எழுதிய ‘திரி தோஷ மெய்ஞான தத்துவ விளக்கம்’ எனும் நூலுக்கு இவ்வாண்டு சிறந்த சித்தம் மற்றும் ஆயுர்வேத நூலுக்கான தமிழக அரசின் விருது கிட்டிய செய்தி உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எந்த அரசு விருதும் போல் இவ்விருதுகளும் பொதுவாக கட்சி / ஆட்சி சார்புடையவர்களுக்கு வழங்கப்படுவதுதான் இயல்பு. ஆண்டுதோறும் மிகச் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசளிக்கப்படும் நூல்களில் பெரும்பாலானவை தமிழ் இலக்கிய பரப்பில் பெயரளவில்கூட கவனம் பெற்றிருக்காது என்பதுதான் வழக்கம். ஆனால் அரிதினும் அரிதாக மிகச் சிறந்த படைப்புகளை இவ்விருதுகள் சென்றடைந்து தம் மரியாதையை மீட்டுக் கொள்கின்றன.

நான் தெரிசனம்கோப்பு சென்று அவரைச் சந்தித்துவிட்டு திரும்புகையில் அவருடைய இந்நூலை வாங்கிக்கொண்டு வந்தேன். திரி தோஷ தத்துவ விளக்கமாக மட்டும் இந்நூல் நின்றிருக்கக்கூடும். ஆனால் அது எப்படி மெய்ஞான தத்துவ விளக்க நூலாக மாறுகிறது? பிரபஞ்ச இயக்கத்தையே திரி தோஷங்களின் கூட்டுச் செயல்பாடுகளாக உணரும் ஒரு நிலையைத்தான் அவர் திரி தோஷ மெய்ஞான அறிவாக குறிப்பிடுகிறார். அன்னமய கோசமான உடலளவில் வாத பித்த கபமாகவும், மனோமய கோசத்தில் சத்வ ரஜஸ் தமசாகவும், பிராணமய கோசத்தில் பிராணன், தேஜஸ், ஒஜசாகவும், விஞ்ஞான மய கோசத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவனாகவும், ஆனந்த மய கோசத்தில் ஓம் தத் சத் ஆகவும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன இந்த திரி தோஷங்கள் என்பதை விளக்குகிறார் மகாதேவன். ஸ்ருஷ்டி, ஸ்திதி, பிரளயம், மற்றும் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி என அனைத்தையுமே திரிதோஷ வெளிப்பாடாகவே புரிந்துகொள்ளும் நிலையைத்தான் திரிதோஷ மெய்ஞானம் என்கிறார்.

மூன்று பகுதிகளாக, சுமார் 800 பக்கங்கள் கொண்ட விரிவான நூலிது. இந்நூலின் முன்னுரை மற்றும் ஆயுர்வேதம் கடந்துவந்த பாதை ஆகிய பகுதிகள் அபாரமான வாசிப்பனுபவத்தை அளிப்பவை. அடுத்தடுத்த பகுதிகள் ஆயுர்வேதம் பரிச்சயமானவர்களுக்கு கூடுதலாக ருசிக்கும் எனினும், புதியவர்கள் சற்று உழைத்தால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதி குண்டலினி, சீன மருத்துவம், தாவரங்களுக்கும் முக்குற்றங்களுக்கும் உள்ள தொடர்பு என விரிவாகச் செல்கிறது. இக்கட்டுரை இந்நூல் பற்றிய அறிமுகமோ அல்லது மதிப்புரையோ அல்ல. மற்றொரு விரிவான கட்டுரையின் வழியாகவே அதை அணுக முடியும். ஏனெனில் இந்நூல் நவீன மொழியில் எழுதப்பட்ட பண்டைய சம்ஹிதைக்கு இணையான விரிவு கொண்டது.

நான் அவரைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றேன். அன்னமிட்டு அனுப்பிவைத்தார். ‘என்னுடன் தங்கி பணிபுரிய உனக்கு விருப்பமா?’ என்று என்னிடம் கேட்டார். எனது குடும்ப சூழல் வேறு மாதிரியானது. வேறுவழியில்லாமல் மறுத்துவிட்டேன். அண்மையில் அவருடைய செயலர் சஜுவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் வைத்தியம் செய்துகொண்ட வாத நோயாளி ஒருவர் அவருடைய மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும், அவர் நல்ல முறையில் குணமடைய எனது மருத்துவமும் காரணம் எனக் கருதியதால், பாராட்டையும் ஆசீர்வாதத்தையும் மகாதேவன் அளிக்கச் சொன்னதாக சொன்னார் சஜூ. இன்றளவில் இந்த இரு நிகழ்வுகளுமே இதுகாறும் நான் பயின்று பேணி வரும் ஆயுர்வேத மருத்துவம் எனக்குரியது என்பதை எனக்கு உணர்த்திய ஆகச்சிறந்த சான்றுகள் என ஆழமாக நம்புகிறேன். நான்தான் அவரை ஆசானாக ஏற்றுக்கொண்டவன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறேனே தவிர, அவருக்கு என்னை நினைவிருக்குமா என்பதைக்கூட நானறியேன். இயன்ற வரை சிறந்த மருத்துவத்தை மக்களுக்கு அளிப்பதே ஆசிரியனுக்கு மாணவன் செய்யும் கடமை. அவ்வகையில் என்றேனும் ஒருநாள் அவருக்குரிய மரியாதையை அளித்துவிடுவேன் என்றே நம்புகிறேன்.

அவருடைய திரி தோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் நூலின் முடிவுரையில் இவ்வாறு எழுதுகிறார் மகாதேவன் – “ஆயுர்வேதம் படிக்கின்ற ஒரு மாணவன் வாத, பித்த, கபங்களை, புத்தகத்தில் கூறியுள்ளபடி படிக்கிறான். பின்பு அதை நம்புகிறான். பின்பு அதில் அறிவு கிடைக்கப் பெறுகிறான். பின்பு அதில் மெய்ஞான உணர்வை பெறுகிறான். உலகத்தில் இருக்கின்ற அனைத்து விஷயங்களையும், அதாவது மருத்துவ சேர்க்கையானாலும் சரி, அன்றாடம் காணும் செயல்களானாலும் சரி, அனைத்தையும் திரி தோஷமாகவே காண்கிறான். ஆனால் இந்த திரிதோஷத்திற்கு அப்பாற்பட்டு என்ன இருக்கிறது என்ற கேள்வியை ஒருநாள் அவன் கேட்டாக வேண்டும்“.

இப்புள்ளியில் ஆயுர்வேதம் மருத்துவ முறை எனும் வரையறையை கடக்கிறது. ஏனெனில் ஆயுர்வேதம் என்றால் ‘வாழ்வை பற்றிய அறிவு’, அது மருத்துவ அறிவினால் மட்டும் பூரணம் அடைவதில்லை என்பதை ஆயுர்வேத மருத்துவன் உணர்ந்தே இருக்கிறான். ஆயுர்வேத மருத்துவன் உடற் பிணி நீக்கும் மருத்துவன் மட்டுமல்ல. அவன் முமுக்ஷுவும் கூட. “பனிக்கட்டி ஆயிரங் கோடி ஆண்டுகள் கடல் மீதே மிதந்தாலும், அது கடலின் முழுமைப் பெரும்பரப்பின் கூறாக முடியுமா? அப்பனிக்கட்டி எப்போது தன்னை உருக்கிக்கொண்டு, தன் அடையாளத்தை அழித்துக்கொண்டு கடலில் கலக்கின்றதோ அந்த நொடியே அது கடலின் முழுமையிலும் தன்னைக் கரைத்துக் கொள்கிறது, முழுமையைத் தன்னில் உணர்கின்றது.” (தி.தோ.மெ.ஞா.த.வி)

மருத்துவம் என்பதல்ல, மருத்துவத்தின் வழியாக ஆரோக்கியத்தையும், அதன் வழியாக வேறொன்றையும் கண்டடைபவனே சரகர் சொல்லும் பிஷக் உத்தமன் (தேர்ந்த மருத்துவன்). மகாதேவனும் இன்று அந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவராகவே நான் எண்ணுகிறேன்.