தூரத்தில் ஒரு ஒளிப்பொட்டு ஆரம்பித்து நெருங்க நெருங்க பெரிதாவது போல மண்டைக்குள் ஒரு வீறிடல் எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. சத்தம் சடசடவென பெரிதானவுடன் சிறு திடுக்கிடலோடு விழித்தேன். ஒரு குழந்தையின் வீறிடல் உச்ச ஸ்தாயில் கேட்டுக்கொண்டிருந்தது.
விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன் என்று புரிய சில கணங்களானது. சத்தம் முன்னே இரு வரிசைகள் தாண்டிக்கேட்டு கொண்டிருந்தது. அப்புறம் பின்னால் இன்னொன்று…இல்லை, இரண்டு.
அதிகாலை 4:30 மணிக்கு கிளம்பும் விமான பயணத்தை சங்கடமான விஷயங்கள் பட்டியலின் முதல் ஷெல்பில் வைப்பேன்.
அந்த ப்ளைட்டைப் பிடிக்க வேண்டும் என்றால் நடு இரவு ஒரு மணியளவிலேயே சென்னை ஏர்போர்ட்டில் இருக்கவேண்டும். அப்படியெனில் பன்னிரண்டு மணிக்கு முன்னால் கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பியாகவேண்டும். அப்படி கிளம்பி இந்த பிரமாண்ட சென்னை – லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங்கில் ஓர இருக்கையில் காலை 4 மணிக்கு போய் அமர்ந்த போது ஒரு மாதிரி பிரட்டிக்கொண்டு வந்தது, தலைவலியும் கூட மெள்ள ஆரம்பித்தது. ஏர் ஹோஸ்டஸ்ஸிடம் ஒரு பாராசிட்டமால் கேட்டு வாங்கி போட்டுக்கொண்டு எனது இருக்கையில் சுருண்டதுதான் தெரியும்…
நெற்றியைத் தேய்த்துக்கொண்டு தடுமாறி எழுந்து நின்றேன்.
மொத்த விமானமும் பளீரென விளக்குகளுடனும் சத்தங்களுடனும் திருவிழா உற்சாகமாக இருந்தது. அடுத்த வரிசையில் விமானப் பணிப் பெண்கள் பெரிய உணவு ட்ராலிகளை மெதுவாக ஒவ்வொரு வரிசையாக தள்ளி நிறுத்தி விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய வரிசையில் இன்னும் வரக்காணோம்.
மெல்ல எழுந்து கழிவறைகள் பக்கம் போனேன். என் பக்கம் இருந்த இரண்டுமே காலியாக இல்லை. பக்கத்திலேயே பெரிய அவசரக்கால கதவுகள்.
அதன் பக்கத்தில் ஒரு சிறு திண்ணைப் போன்ற இடத்தில் சாய்ந்துகொண்டேன். அந்த ஜன்னலின் வழியே வெளியே பார்த்தேன். மிக பிரகாசமாக இருந்தது. ஜன்னலின் கீழ் வெகு ஆழத்தில் இடைவெளியே இல்லாமல் நெருக்கமாய் பின்னப்பட்ட கெட்டியான பஞ்சு மேகங்கள்.
முதன் முறை பார்த்த போது தூரத்தில் நாரதர் தெரிந்தால் ஆச்சரியம் இல்லை என்று சிரித்துக்கொண்டது நினைவிற்கு வந்தது. இறங்கித் தாராளமாக நடக்கலாம் போலத் தோன்றியது. Walking in the thick clouds!
மேகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சின்ன வயதிலிருந்தே இந்தப் பழக்கம்தான் எனக்கு.
அம்மாவிடம் கேட்டால் தனாவிற்கு பிடித்த நிறம் நீலம் என்பாள். காரணம் வானம்தான் என்று தோன்றுகிறது. எப்போது வீட்டிற்கு வெளியே வரும்போதும் தலையை தூக்கி வானத்தைப் பார்த்துக்கொள்வேன். திரும்ப பள்ளியில் சைக்கிளை ஸ்டாண்ட்டில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவசரமாக வானத்தைப் பார்ப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவசரத்தில் கணுக்காலில் ஸ்டாண்ட் பல முறை கீறியிருக்கிறது!
வானம் எப்போதுமே புதிதாகவே, கலைடாஸ்கோப் போல சற்றுமுன் பார்த்தது போல் இப்போது இருக்காது. புதிதாய் ஒரு மேகத்துண்டு முளைத்திருக்கும் அல்லது கலைந்திருக்கும். அல்லது மேகமே இருக்காது. சில சமயங்களில் நிறைய மேகங்கள், தனது உறவினர்களுடன் இருப்பது போல நினைத்துக்கொள்வேன். ஆண்டு விடுமுறைக்கு வந்திருக்கும் சுற்றம் சூழ இருக்கும்.
நிறைய விஷயங்கள் மேகங்களுடன் கண்ணில் படும். பக்கத்தில் தெரியும் குருவிகளிலிருந்து காரசேவ்வின் கடைசி துண்டு மாதிரி தூரத்து பறவைகளிலிருந்து. எனக்கு என்னவோ அவைகளில் அவ்வளவு ஈடுபாடில்லை. வானம் – அதன் நிறங்களும்…என்னைப் பொறுத்தவரை மேகங்கள் வானத்தின் இன்னொரு நிறம்…எப்போதுமே அவை வெள்ளை நிறம் கிடையாது என்பதே ஒரு குறுகுறுப்பு.
ஏகப்பட்ட வானங்கள் விதவிதமாய்…
இப்படித்தான், கல்லூரி முதல் வருடத்தில், கோவையிலிருந்து ஆண்டு விடுமுறைக்கு வந்திருந்த சித்தி பையன்களோடு சர்க்கஸிற்கு போயிருந்தேன். மாலைக்காட்சியில் முதல் ஐட்டமாக ஆண்களும் பெண்களும் மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு பின்னால் படபடத்த படுதாவில் ஆயிரம் துளிகள் வானத்தைப் பார்த்தேன். சட்டென ஆயிரம் கண்கள் என்று சொல்லிவிடலாம். ஆனால் எனக்கு அப்படித்தோன்றவே இல்லை. ஆயிரம் துளிகள்தான். துளித்துளியாய் வானம்…
துளி வானம் என்று அன்றிரவு எனது டைரியில் எழுதினது கூட நினைவில் இருக்கிறது.
இதோ, இப்போதும் ஜன்னலுக்கு வெளியே முடிவில்லாத தூய்மையான நீல, அதே இன்னொரு வானம்…
சட்டென குழந்தை அழுகை அதிகமாக பக்கத்திலேயே கேட்டது. தலையைத் திருப்பி முன் வரிசையைப் பார்த்தேன்.
ஒரு குழந்தை கிட்டதட்ட இரண்டு வயது இருக்கும். அம்மாவிற்கு அடுத்த இருக்கையிலிருந்து எதையோ கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. அம்மா மடியில் சாப்பாட்டுத் தட்டு. அந்தப் பெண்ணைத் தெளிவாகப் பார்த்தேன்.
ஒரு சில நொடிகளுக்குப் பின் மெல்ல நடந்து அவள் அருகில் சென்று “பையன் ரொம்ப படுத்துறானா உமா? என்ன வேணுமாம் அவனுக்கு?” என்றேன்.
உமா திடுக்கிட்டு விழிகளை உயர்த்தி என்னைப் பார்த்தாள். ஜன்னலின் வெளிச்சம் அவள் முகத்தில் தெறித்து பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டுகொண்ட பார்வையாக மாற சில நொடிகளானது.
“தனா…நீங்களா…இங்க என்ன பண்றிங்க?”
இருவரும் சிரிப்பு வந்துவிட்டது.
“சினிமாக்கு வந்திருக்கேன்னு சொல்லிடாதிங்க” என்றாள். அதே மெல்லிய குரல். அதேதான்.
“சேச்சே, இண்டர்வியுக்குங்க”
“என்ன வேணுமாம் சாருக்கு? இங்க வாம்மா கண்ணு, உன் பேரென்ன?” என்று குழந்தையை மெள்ள தூக்கிக்கொண்டேன்.
எப்படி இப்படி சகஜமாக நடக்கிறேன், எனக்கே என்னைக் கண்டால் வியப்பாக இருந்தது.
அந்தப் பயல் அழுகையை நிறுத்திவிட்டு என்னை ஆர்வமாக பார்த்தான். கண்ணாடியை இழுக்கப்போகிறான் என்று நினைக்கும் போதே இழுத்துவிட்டான். ப்ரேம் கம்பிகள் மூக்கை நன்றாக கீறிவிட்டன.
“பாத்து, பாத்து. இவன் கையை வச்சிட்டு ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டான்,” உமா எழுந்து அவனை வாங்கிக்கொண்டாள். அதே மூக்கு, அதே மூக்குத்தியா தெரியவில்லை.
“அம்மா பாத்ரூம் போனா. இன்னும் வரலை, அதுக்குள்ள இவன் ஆட்டம், அடங்குவேனான்றான்”
“பாத்ரூமிலிருந்து வெளிய வர கஷ்டப்படறாங்களோ என்னவோ, ஒரு நிமிஷம் தனா,”
பயல் தொடர உமா பாத்ரூமிற்கு வெளியே நின்று ஏதோ கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.
நான் இப்போது பயலை நன்றாக பார்த்தேன். உமா ஜாடைதான். அந்த குருவி மூக்கு, அப்புறம் அந்தக் கண்கள். அதே கண்கள்.
வேறு ஜாடை தெரியவில்லை சந்தோஷமாக இருந்தது.
உமாவின் அம்மா பாத்ரூமிலிருந்து கஷ்டப்பட்டு வெளியே வந்தார். அப்படியே உமாதான்.பரம்பரை பரம்பரையாய் பிரதியெடுத்து வைத்திருப்பார்கள் போல.
“அம்மா, இவர் பெயர் தனசேகர். முன்னால பெருங்குடியில் அந்த டெலிகாம் கம்பெனியில் வேலை பார்த்தேன் இல்லையா, அதில கூட வேலை பார்த்தார்”
அந்த அம்மா மெல்ல மலர்வது போல ” ஓ, அந்த சாகன் டெலிகாமா?”
ஒரு பணி ஆண் “வெஜிடேரியன்? வெஜிடேரியன்?” என்று கூவி உமாவிடமும் அவள் அம்மாவிடமும் உணவுத்தட்டுகளை கொடுத்துவிட்டு போனார்.
“சரி, சாப்பிடுங்க உமா, நாம அப்புறமா பேசலாம்”
“உங்க ஸீட் எங்க தனா?”
“அதோ, 24C”
இப்போது என் கண்களையே பார்த்துக்கொண்டு தலையசைத்தாள்.
எப்படியோ என் ஸீட்டிற்கு வந்து சேர்ந்தேன். விமானத்தினுள் நன்றாகக் குளிரியது. என் ஸீட்டில் பேக் செய்யப்பட்ட உணவுத்தட்டு காத்திருந்தது. என்னவோ இருந்தது. என்னவோ சாப்பிட்டேன்.
யாரைப் பார்த்தேன், சற்று முன்பு? யாரிடம் பேசினேன்?
உமாவா? எல்லா புதன் மாலைகளையும் போல விடைபெற்றுப் போய்விட்டு மறுநாள் காலை வராது பல ஆண்டுகளாக என் கண்களிலிருந்து மறைந்து போன உமாவா?
போன ஜென்ம டைரிப்பக்கங்களைப் புரட்டுவதின் கனத்தை உணர்ந்தேன்.
…
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அந்த சாகன் டெலிகாம் கம்பெனியில் நான் அப்போது ஈடிபி எனப்படும் டேட்டா ப்ராஸஸிங் துறையில் இருந்தேன்.
சின்ன நிறுவனம். எல்லாமே சின்னவை- ஈடிபி துறையில் – ஐவர், மொத்த கம்பெனியே இருநூற்றுச்சொச்சம், சம்பள ஸ்லிப் பேக்கேஜ், பைனான்ஸ் பேக்கஜ், வேர்ஹவுஸ் பேக்கஜ், ஆர் என்டி என சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறைக்கான சில சாப்ட்வேர்கள், என் சம்பளம், மொத்தமே பத்து கணினிகள் என்று எல்லாமே குட்டி குட்டியாய் இருந்த காலங்கள்.
திருவான்மியூர் பூந்தோட்டத்தில் நானும் கோலப்பனும் தங்கி இருந்த மொட்டை மாடி ரூமிலிருந்து காலை 7:30 மணிக்கு ஹீரோ ஹோண்டா சிடி 100ல் கிளம்பி அவனை ஜெயந்தி ஸ்டாப்பில் இறக்கிவிட்டுவிட்டு எஸ்ஆர்பி டூல்ஸ் தாண்டினவுடன் ஒற்றையடிப் பாதையாகும் ரோட்டில் படுவேகத்தில் சென்று கந்தன் சாவடியில் இருக்கும் ஒரே ஒரு குட்டி ஓட்டலில் (“ஸார், வடை நன்னா க்ரிஸ்ப்பா இருக்கு” ) சாப்பிட்டு விட்டு 8:30 மணிக்கு பெருங்குடி எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டிற்குள் இருக்கும் கம்பெனிக்கு பரபரப்பாக போய்க்கொண்டிருந்த காலம்.
நான் சும்மா இருக்கும் நேரங்களில் பணியாளர் டிபேஸ் டேட்டாபேஸைத் திறந்து சுவாரசியமான பெயர்களைச் சத்தம் போட்டு ரேடியோ நேயர் விருப்பம் போல படிப்பேன்.
“ஐன்ஸ்டைன்…செம குசும்பரா இருப்பார் போல இவர் அப்பா!”
“இந்து…ம்ம்ம்…இவங்க தங்கை பேரு கண்டிப்பாய் இந்தியன் எக்ஸ்ப்ரஸ்தான்”
அப்படி ஒரு நாள்,
“என்னது இது உமா ரவேயா?…ரவே? ஒழுங்கா என்ட்ரி பண்ணலையா?”
பின்னால் கதவு திறந்திருந்தது கவனிக்கவில்லை.
“என்ட்ரியெல்லாம் சரிதான். அவங்க ஒரு உப்புமா குடும்பம்,”
பதறிப்போய் திரும்பிப் பார்த்தேன்.
மணியம் செல்வன் ஓவியம் நின்றிருந்தது. ஆம். மிகைப்படுத்தவில்லை. அதே மூக்குத்தி மூக்கு, கண்ணாடி ப்ரேம்கள் போல காதுகள் பக்கம் நீண்டு அதே சமயம் சுருங்கிச் சென்ற கண்கள்…
************
“எப்படி மக்கா இத்தனையும் ஒரே செகண்ட்ல பார்த்த?”
“ஒரே செகண்ட்லன்னு யார் சொன்னா? காலைல இருந்து திருப்பி திருப்பி மனசுல அந்த கணத்தை ஓடவிட்டுகிட்டே இருக்கேன்”
பேச்சுலர்களுக்கு இரவு பத்து மணி மொட்டை மாடி என்பது ஒரு அற்புத விஷயம். காற்று ஒட்டி இருந்த தென்னை கிளைகளின் வழியாக சொட்டிக்கொண்டே இருந்தது.
“அது சரி. என்ன பேரு சொன்ன? ஒன்னுமே புரியலையே?”
“அவங்க கன்னட பிராமின் போல, ரவேங்கறது அவங்க குடும்ப பேராம்.”
************
மண் மணமும் சேர்ந்து சொட்டுச்சொட்டாய் தூறிக்கொண்டிருந்த ஒரு மழைக்கால வெள்ளி மாலை.
கம்பனியின் இன்னொரு பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்த ஆர் அண்ட் டி (R&D) துறைக்கு செல்லவேண்டியிருந்தது. அந்தத் துறை என்பது குறைந்தது பதினைந்து மேசைகளும் கொஞ்சம் கணினிகளும் கொண்ட விஸ்தாரமான அறை. மெல்லப் படிகளேறி கண்ணாடிக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தேன்.
யாருமே இல்லை.
அந்த அறையின் ஒரு புறம் முழுவதும் கிட்டத்தட்ட கண்ணாடிதான் பதித்திருக்கும். அந்த தொழிற்பேட்டையின் பொட்டல்வெளி கண் முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும்.
நான் எப்போது அங்கு வந்தாலும் அந்த கண்ணாடிச்சுவரை பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் நிற்பேன். தப்பாமல் கண்கள் மேலே வானத்தைப் பார்க்கும்.
அன்றும் அப்படித்தான் நிற்கப்போனேன். சுவரின் அந்த கடைசி மூலையில் ஒரு பெண் அதே போல பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.
கூந்தலை முன்னால் போட்டிருக்கவேண்டும். உமாதான்.
நானும் ஒன்றும் சொல்லாமல் அருகில் சென்று கண்ணாடிக் கதவை வெறித்தவாறே நின்றேன். பொட்டல் வெளியில் அங்கங்கே செம்மண் குட்டைகள். கம்பனியின் முகவரி என்னவோ சென்னைதான்.
சற்று நேரம் சென்றது, சன்ன ஏஸி ரீங்காரம்.
“செம…வானமே யாரோ பெரிய பெட்ஷீட்டைத் துவைத்துக் காயப்போட்டது மாதிரி இருக்கில்ல?” என்றேன்.
“ம்ம்ம்…இப்பதான் ஒரு மணி நேரத்திற்கு முன்னால தொவைச்சு போட்டது மாதிரி…இன்னும் சொட்டிக்கிட்டே இருக்கு”
எனக்கு அந்தக் கணத்தில் அந்தப் பெண்ணை, அந்த மணியம் செல்வன் ஓவியத்தைப் பிடித்துப் போயிற்று.
அவள் மெல்லத் திரும்பி நான் அவள் பார்வையைச் சந்தித்தபோது ஒரு பெரிய அறையின் மூலையில் இருக்கும் பியானோவின் பெயர் தெரியாத ஏதோ ஒரு கீயைத் மெதுவாகத் தொட்டது போல இருந்தது.
அந்த ஒலி, காதுகள் வழியாய் மனம் முழுவதும் நிரம்பியது. அந்த இடத்தை விட்டு நகர, அந்தக் கணத்தை விட மனமில்லை.
சற்று நேரத்தில் அட்மின் மைதிலி வந்து “வீட்டுக்கு போற நேரமாச்சு உமா. பஸ்ஸெல்லாம் ஒழுங்கா வருதோ என்னவோ, இந்த நச நச மழைனால” என்று உமாவை கூட்டிச்சென்ற போதும் நான் அப்படியே நின்றேன்.
அந்த சொத சொத வானம் மனதில் தங்கிவிட்டது.
தேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலி கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.
வழியில் கொஞ்சம் அவள் கதை சொல்லிவர, நான் அச்சுபிச்சு வார்த்தைகளை முயற்சித்துக்கொண்டு வந்தேன்- நனைந்த ஓவியம், கரையாத கண்மணி என்றெல்லாம்…மனதிற்குள்தான்.
உமா ரவேயின் சொந்த ஊர் எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில், திரு என்று ஆரம்பிக்கிற ஊர்களில் ஒன்று.
சென்னையில் பெரியப்பா வீட்டில் தங்கி, பெரியப்பா பையன் சிபாரிசில்தான் இந்த டெலிகாம் டிபார்ட்மெண்டில் ஆர் அண்ட் டியில் ஜூனியர் இன்ஜினியர்…
மாம்பலம் வந்த போது கடும் இருட்டு. மின்சாரம் இல்லை
“அதோ பிருந்தாவன் ஸ்ட் ரீட் எக்ஸ்டென்ஷன்…”
எப்படியோ தடுமாறி ஒன்வேயில் போய் அந்த நனைந்த அபார்ட்மெண்டில் நிறுத்தியபோது பெரியப்பா வீட்டின் வாசலில் அநேகமாய் அனைவரும் வெளியே நின்றிருந்தார்கள். ஆளாளுக்கு நன்றி சொன்னார்கள்.
உள்ளே போய் காப்பி குடித்தேன். அந்த நேரத்திற்கு சூடான காபி இதமாயிருந்தது.
ஒரு சிறந்த பொருத்தமான காதல் கதைக்குத் தேவையான எல்லாமே இருந்தது.
எனது தின ஆச்சரியங்களை, சந்தோஷங்களை கோலப்பனிடம் தான் பகிர்ந்துகொண்டிருந்தேன். சில ஞாயிறு முன் மாலைகளில் பெசண்ட் நகர் பீச்சில் மணலில் படுத்தபடியே எப்படித்தான் என்னுடைய புலம்பல்களை அவன் சகித்துக்கொண்டான் என்று தெரியவில்லை.
அவ்வப்போது வெடிச்சிரிப்போடு கிண்டலும் செய்வான்.
என்னுடைய முகமும் செயல்களும் பிரகாசமாக கம்பனியில் மற்றவர்களுக்கு, முக்கியமாக உமாவின் பெரியப்பா பையனுக்கு இரண்டும் இரண்டும் நான்கு என்று செய்தி அறிவித்திருக்கவேண்டும்.
ஒரு மாதத்திற்கு அப்புறம் என்று நினைக்கிறேன். ஒரு வியாழன் காலை அவள் வரவில்லை.
மைதிலி மதிய உணவு இடைவெளியில் காரணமே சொல்லாமல் உமாவின் ராஜினாமா செய்தி தொலைபேசியில் வந்தது என்று செய்தி சொல்லும் வரை வானம் பிரகாசமாகத்தான் இருந்தது.
நான் சினிமாக் கதாநாயகனைப் போல் அவள் ஊருக்கு தேடிச்சென்றிருக்கலாம். எதையாவது செய்திருக்கலாம். ஆனால் ஒன்றும் செய்யவில்லை.
அன்று மாலை சோர்வாக மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்தேன்.
அதைப் போன்ற ஒரு வலிக்கும் சூரிய அஸ்தமனமும் வானமும் மேகங்களும் எனக்கு அப்புறம் வரவேயில்லை.
கோலப்பன் “விடு மக்கா, எல்லாம் இன்பாச்சுவேசன்” என்றான் ஒரு முறை.
“வேற புதுசா யாராவது ஜாயின் பண்ணலையா என்ன” என்றான் இன்னொரு முறை.
ஆனால் பல முறைகள் ஒன்றுமே சொல்லவில்லை.
கிட்டதட்ட இரு மாதங்களுக்குப் பின் ஒரு மாலை அயோத்தியா மண்டபம் வழியாகப் போகவேண்டியிருந்தது. திரும்பத் திருவான்மியூர் வரும் வரை எப்படி இவ்வளவு கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. சட்டை நெஞ்செல்லாம் நனைந்ததை நன்றாக உணர்ந்தேன். இதைப் பற்றி சற்றும் உணராத ஜனங்கள் அவர்கள் கவலைகளோடு எனக்கு எதிரில் வந்தும் தாண்டியும் போய்க்கொண்டிருந்தார்கள்.
தெரு முனையில் ஹெல்மெட்டைக் கழற்றி, கண்ணாடியைக் கழற்றி முகத்தை கர்சீப்பினால் அழுந்த துடைத்துக்கொண்டேன். வாசலில் வீட்டுக்காரம்மா உட்கார்ந்திருக்கும்.
***
ஒரு சின்ன உறுத்தாத ஒலியுடன் “சீட் பெல்ட்டை அணிந்துகொள்,” என்ற அறிவிப்பு விளக்கு எரிந்தது.
என் பக்கத்திலிருந்த தம்பதியினர் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அசையவில்லை.
மெல்ல என் ஸீட்டிலிருந்து தலையை நகர்த்தி முன்னே பார்த்தேன். உமாவும் ஸீட்டிலிருந்து தலை திருப்பிப்பார்த்தாள்!
நான் புன்னகைக்க முயன்றேன். அவள் அப்படி முயலவில்லை. ஆனால் பார்வையில் ஏதோ இருந்தது.
சங்கடமாக, ஒரு மாதிரி uneasyயாக இருந்த மாதிரி தோன்றியது.
உணவுப் பரபரப்பு அடங்கிய விமானத்தில், ஐந்து நிமிடத்திற்கு முன்னால் அணைக்கப்பட்ட ஊதுபத்தி போல மெல்லிய விளக்குகள் மட்டும் புகைந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு செகண்டிற்கும் குறைவான நேரத்தில் அவள் பார்வையில் எப்படி இந்த uneasiness ஐக் கண்டுகொண்டேன் என்று கேட்காதீர்கள். எனக்கு அப்படிப் பட்டது. அல்லது அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
ஒருவேளை அவள் கணவன் கொடுமைக்காரனாக இருப்பானோ…கடும் கோபியாய்?
வெளிப்படையாய் எரிந்துவிழவேண்டும் என்று அவசியமில்லை.
ஒரு சின்னப்பார்வையாலேயே, அல்லது ஒரு கைவீச்சினாலேயே வெறுப்பைக் காட்டுவானோ?
அல்லது குத்தி, குத்திப் பேசுவானோ…
கண்டிப்பாய் குள்ளமாகத்தான் இருக்கவேண்டும் அந்த குண்டு கரிச்சட்டி.
“தனா ஏன் அப்போது என்னைத் தேடி நீ வரவில்லை? வீட்டு காலிங்பெல் சத்தம் கேட்கும்போதெல்லாம் நீயாக இருப்பாய் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேனே?”
அவள் கணவன் யாரென்றே தெரியாது, எப்படி இருப்பான் என்று தெரியாது. என்ன செய்கிறான் என்று தெரியாது.
அதற்குள் கற்பனைகள் கை நழுவிய மீன் தொட்டித் தண்ணீர் போல கண்டபடி சிதறுகின்றன. நான் புன்னகை செய்துகொண்டேன். கோலப்பனாக இருந்தால் பழைய மேலச்செவல் வெடிச்சிரிப்புதான்!
சற்று நேரத்தில் ஸீட் பெல்ட் விளக்கணைந்தது. அதற்காகவே காத்திருந்தேன் என்று தெரியாதபடி இயல்பாக எழுவதாக நினைத்துக்கொண்டு விருட்டென்றுதான் எழுந்தேன். ஸீட் பெல்ட் இழுத்தது. அதை அவிழ்த்துவிட்டு எழுந்து நின்றேன்.
மொத்த விமானமும் இதமான இருட்டில் அமிழ்ந்திருந்தது. அதனுள் அனேகமாக எல்லாரின் இருக்கைகளுக்கு முன்னும் விளக்கு பொட்டுத் திரைகள்.
மெல்ல அவளின் இருக்கையைத் தாண்டி அந்த அவசர கால கதவுகளுக்கு பக்கத்திலிருக்கும் திட்டில் சாய்ந்துகொண்டு ஏறிட்டுப்பார்த்தேன்.
உமா என்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் அவள் அம்மாவின் மடியில் பையன் தலை சாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் அம்மா காதில் அந்த ஹெட் போனை மாட்டியிருக்க முன்னால் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
உமா மெல்ல எழுந்து என்னருகில் நின்றாள்.
“எப்படி இருக்கீங்க தனா?”
இப்போது என்னால் நன்றாக ஏறிட்டுப் பார்க்க முடிந்தது. இவ்வளவு வருடங்களில் அவளது தோற்றத்தில் பெரியதாய் மாற்றமே இல்லை. கூட இன்னொரு புடவை சுற்றினது போல ஒரு சின்ன சுற்று.
ஓவியம், கொஞ்சம் பழையதாகத் தெரிந்தது. பைண்டு புத்தக பக்கங்களைப் போல. ஆனாலும் பிடித்த பக்கங்கள்.
“ஐடில தானே இருக்கிங்க?”
தலையசைத்தேன்.
“அக்சென்சரா?”
“இல்ல உமா, சிடிஎஸ்”
“எங்க வீடு? வைஃப் வரலையா?”
…
என்ன சொல்வது?
“அது…கொஞ்சம் பிரச்சனை உமா…அவங்க வரலை…நான்…தனியாதான் இருக்கேன், போய்க்கிட்டு இருக்கேன்”
இப்படிச் சொல்லியது எனக்கு ஒரு மாதிரி திருப்தியாக இருந்தது.
“ஓ”
சற்று விழித்து என்னையேப் பார்த்தாள். வேறு எதுவும் கேட்கவில்லை.
“எங்க வீடு உனக்கு உமா?”
“சவுத் எண்ட் ஆன் ஸீல…அவர் அங்க ஜீபியா இருக்கார்”
“ஓ…”
படுபாவி, டாக்டரா…ஹண்ரட் கே வாங்குவானே…அந்த சவுத் எண்ட்ல வீடு எல்லாம் சீப்பா இருக்குமே, தேம்ஸ் ஓரமா பங்களாவில பெரிய கார்டனில் உமாவை ராணி மாதிரி…
ஒரு பக்கம் நான் அமைதியாய் பேசிக்கொண்டே இருந்தேன், இன்னொரு பக்கம் இருண்ட மனப்பக்கத்தில் எரிச்சல் அமிலமாய், புகையுடன் ஏமாற்ற கொப்பளம் கொப்பளிக்க ஆரம்பித்தது.
“நல்லா இருக்கில்ல, உமா?”
பதிலே வரவில்லை. ஒன்றும் சொல்லாதே உமா ப்ளீஸ். நீ பதில் சொல்லாதவரை எனக்குச் சந்தோஷம்…
இருவரும் அந்த ஜன்னல் வழியே மேகத் தரையை பார்த்துக்கொண்டிருந்தோம்…
பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் எனக்குப் பிடித்த மணியம் செல்வன் ஓவியம் என் அருகில், கீழே உறுதியான மேகத்தரை, உள்ளே உறுத்தாத இருட்டும் வெளியே ஒளியும்..லிடரலி தரையை விட்டு மேலே பறந்துகொண்டிருந்தேன், ஓரிரண்டு அடிகள் இல்லை, முப்பத்திஐந்தாயிரம் அடிகளுக்கும் மேல்!
இன்னும் ஐந்தாறு மணி நேரங்களில் தரையிறங்கித்தான் ஆகவேண்டும்…
ஏன் இறங்கவேண்டும்?
விமானத்தை யாராவது ஹைஜாக் செய்து வேறு எங்காவது கொண்டு போனால்…கொண்டு போன இடத்தில் யாராவது குடிகார தீவிரவாதி அவள் மேல் கைவைக்கப்போக நான் சக் நாரிஸ் போல…
நூற்றைம்பது மைல் வேகத்தில் டையர் வெடித்த காராய் எண்ணங்கள் போய்க்கொண்டிருந்தது.
மறுபடியும் பக்கவாட்டில் அவளைப் பார்த்தேன்.
இப்போது பார்க்கும் போது அவள் கண்களில் ஏனோ ஒரு பதட்டம் இருப்பது போலத்தான் தோன்றியது. சங்கடமாக…எதுவாக இருந்தாலும் சொல் உமா…
நான் மட்டுமா, என்னுடன் ஷோபாவின் நினைவுகளும் வாசனைகளும் கூட இருக்கின்றன…
என் கண்கள் இயல்பாய் உமாவின் அம்மா பக்கம் திரும்பின. அவர் எங்களிருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தார். திக்கென்று இருந்தது. இவருக்கு எங்களிருவரைப் பற்றி எந்தளவிற்குத் தெரியும்?
நான் மெல்ல நழுவி டாய்லெட்டின் தீப்பெட்டிக் கதவின் ஊடே சிரமப்பட்டு நழுவி உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டேன். உடன் விளக்கு எரிந்தது.
கண்ணாடியில் என்னையே பார்த்துக்கொண்டேன். என்னதான் இந்த மண்டைக்குள் நடக்கிறது?
நன்றாக ஆறடிக்கு மேல் இருப்பேன். மகா யோக்ய முகம். பஸ் ஸ்டாண்டில் நம்பி சூட்கேஸ்களைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாத்ரூம் போகலாம் போன்ற முகம்.
ஆனால் உண்மையில் உள்ளே இருக்கிறது. ஒரு கொழ கொழ, கரிய, அருவருப்பான ஜெல்லி…
என்ன எதிர்பார்க்கிறேன், உமாவிடம்?
இவ்வளவு நாட்கள் உன்னையேதான் நினைத்துக்கொண்டிருந்தேன் தனா என்றா?
இப்போது உன்னைப் பார்த்தவுடன் என் மனம் சஞ்சலப்படுகிறது என்றா?
அப்படி இருக்கவேண்டாம் தான். ஆனால் இனிமேல் மீண்டும் பார்க்க ஆரம்பித்து, நானும் சவுத் எண்டிற்கு வீடு மாறி, அவள் கணவன் உண்மையிலேயே கொடுங்கோலனாக…அல்லது கூட வேலை செய்யும் குஜராத்தி டாக்டருடன் அல்லது ஒரு gayயாக…
முடிவே இல்லாத சாத்தியங்களின் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டு இருந்தேன்.
அன்றுதான் யங் அண்ட் ஸ்டுப்பிட்…இப்போது யங் இல்லை, நிச்சயம். ஸ்டுப்பிட்..?
மறுபடியும் அவள் ஸீட்டருகே போனால் செயற்கையாக இருக்கும்…இருந்தாலும் போனேன்.
அருகில் போய் பேச ஆரம்பிக்கும் போதே “ஸீட் பெல்ட் அணியவும்” விளக்கு எரிந்தது.
ஏர்ஹோஸ்டஸ் அதட்டும் முன் திரும்ப வந்து என் ஸீட்டில் முடங்கிக்கொண்டேன். இந்த தடவை எனக்கு சந்தேகம் உறுதியானது.
உமாவின் முகத்தில் ஏதோ இருக்கிறது. என்னவோ சொல்ல வருகிறாள்.
ஏன் நான் நினைப்பது போல இருக்ககூடாது? ஏன் வாழ்க்கையில் தற்செயல்கள், நூற்றில் ஒரு பங்கு சான்ஸ் இருக்ககூடாது?
இரண்டாம் உலகப்போரில், கிரிக்கெட்டில், ஏன் எத்தனை புராஜெக்ட்களில் இந்த மாதிரி “தற்செயல்”கள் நடந்திருக்கின்றன.
அது மாதிரி இன்னொன்று..என்னைப்போன்ற ஒரு சாதாரணனின் வாழ்க்கையில்?
****
பிரிட்டிஷ் மாலையில் விமானம் லண்டன் மாநகரத்தை அணுகும் போது என் பக்கத்திலிருக்கும் தம்பதியினரைத் தாண்டி ஜன்னல் வழியாக வெளியேப் பார்த்தேன்.
வளைந்து, நெளிந்த கொண்டை பின்னூசி தேம்ஸும் லண்டன் ஐயும் வெஸ்ட்மினிஸ்டர் பார்லிமெண்ட்டும் சர்ரியலாக தெரிந்தன…பக்கத்திலிருந்த தம்பதியினர் போனில் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
வழக்கமான மழையை விமானம் தடுமாறி ஊடுருவ முயன்று அசைந்து தாழ்ந்து அசைந்து தாழ்ந்து ஹீத்ரோ விமான நிலைய ரன்வேயை அணுகியது.
எனக்கு சோகமாக இருந்தது. அன்று திருவான்மியூர் மாலை மாதிரியே இன்னொரு மழை மாலைச் சோகம்.
நெடு நாள் குடும்ப நண்பன் போல இயல்பாக அவர்களின் ஹாண்ட் பேக்கேஜ்களை நான் எடுத்துக்கொண்டு மெதுவாய் பிரமாண்ட ஹீத்ரோவின் பல்வேறு எஸ்கலேட்டர்களில் இறங்கி, ஏறி பின் இறங்கி இமிக்கிரேஷன் தளத்தை களைப்பாய் அணுகினோம்.
அதற்கு முன் உமாவின் அம்மா ஹீத்ரோவின் டாய்லெட் அறைக்குச் சென்றார். உமா பயலை குழந்தைகளின் உடை மாற்றும் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
அம்மா முதலில் வந்தார், சற்று நேரம் பேசாமல் இருந்தார்.
“அந்த கடங்காரன் இன்னேரம் வெளியே இருப்பான்…சந்தேகப்பிசாசு. நீங்க கூட வரதைப் பார்த்தால் உமாவை யார்ன்னு கேட்டே கொண்ணுடுவான்” என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்தம்மா பேசாமல்தான் இருந்தார்.
நாங்கள் இமிக்ரேஷனை க்ளியர் செய்து வர கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. உமா கால்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு, நகத்தைக் கடித்துக்கொண்டு…இயல்பாக இல்லை, எனக்கு உறுதியாக தெரியும்.
செக்ட் பேக்கேஜ் என்று சொல்லப்படும் எங்களது பெரிய பெட்டிகளை கவருவதற்காக குறிப்பிட்ட கன்வேயர் பெல்ட் அருகே சென்றோம்.
அதன் அருகே வருவதற்குள் ஒரு மூன்று முறைகளாவது என்னவோ சொல்லவந்தாள். அப்புறம் நிறுத்திவிட்டாள்.
அவள் அம்மா அங்கு காணப்பட்ட ஒரு ஸீட்டில் அமர, நானும் அவளும் பெல்ட் அருகே நின்றோம். அவள் சட்டென தைரியம் பெற்றது போல என்னிடம் சொல்ல வந்தாள்.
நான் துளி கூட பதற்றத்தைக் காட்டாமல் கேட்க ஆசைப்பட்டதைக் கேட்க குனிந்தேன்.
எல்லாமே இப்போதேவா சொல்லிவிடப்போகிறாள்? ஒருவேளை சொன்னால்தான் என்ன?
சட்டென கன்வேயர் பெல்ட் நகர ஆரம்பித்தது. பெல்ட்டில் பெட்டிகள் தோன்ற ஆரம்பித்தன. சுற்றி நிற்பவர்கள் பரபரப்பாயினர். எங்களிடையில் சிலர் “எக்ஸ்யூஸ்மி” என்று புகுந்து போனார்கள்.
எனக்கு பின்னால் உமாவின் அம்மாவின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் என்ற எண்ணம் ஸீட் பெல்ட் விளக்கு போல எரிந்து கொண்டே இருந்தது.
கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் எங்கள் பெட்டிகள் வந்த பாடில்லை. வர தாமதம் ஆக ஆக எனக்கு சந்தோஷம் தான்.
வீட்டிற்கு போய்க்கொள்ளலாம், அதுதான் ட்யூப் நள்ளிரவுதாண்டி கூட இருக்கின்றது. வீட்டில் யார்தான் காத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள், சுப்புணிதான் இருப்பான்.
உமா தடுமாறிக்கொண்டிருந்தாள்…அவளுக்கும் இது பரபரப்பாயிருக்கும். ஒருவேளை கொடுங்கோல் கணவன் பொறுமையிழந்துகொண்டிருப்பானோ வெளியே?
இப்போது கன்வேயர் பெல்ட் நின்றுவிட்டது. எங்கள் பெட்டிகள் வரவில்லை!
எங்களுடன் ஒரு பத்து பதினைந்து பேர்களின் பெட்டிகள் வரவில்லை. சற்று நேரம் விழித்தோம். பின் நான் தொலைவில் இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் கஸ்டமர் கேர் ரிசப்ஷனுக்குச் சென்றேன்.
நான் சொல்வதை கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருக்கும் அந்த பளீர் சட்டைத் தாத்தா கேட்டதாகத் தெரியவில்லை. ஒரு விண்ணப்ப படிவத்தாளை கண்ணாடிக்கு அடியில் வைத்து என் பக்கம் தள்ளினார். என் பின்னாலேயே கொஞ்சம் பேர்கள் வந்ததைப் பார்த்துவிட்டு இன்னும் நிறைய படிவங்களைத் தள்ளினார்.
“என்ன சொல்றாங்க தனா?” உமா என் பின்னாலே வந்து நின்றாள்.
“புரியலை உமா. இந்த ஃபார்மை பில் பண்ணச்சொல்றாங்க”
என் கையில் இருந்த பார்மைப் பார்த்தாள்.
“இது…?”
“ஆமா…இது லக்கேஜ் மிஸ் ஆச்சின்னா ஃபில் பண்ண வேண்டிய ஃபார்ம். துபாய், ஃப்ராங்பர்ட்ன்னு எங்கயாவது மாறின ட்ரான்ஸிட் ப்ளைட்னாலாவது லக்கேஜ் மிஸ் ஆக சான்ஸ் இருக்கு. பட், நாம வந்தது டைரக்ட் ப்ளைட்தானே?”
“ஆமாம் தனா…அதுவும் கொஞ்சம் பேருக்கு மட்டும் எப்படி மிஸ் ஆகும்? கொஞ்சம் கேளுங்க தனா…”
கொஞ்சலாகத் தோன்றிய குரலால் உந்தப்பட்டு கவுண்டரை மறுபடியும் நெருங்கினேன்.
அதற்குள் பெட்டி வராதவர்களின் கூட்டம் கவுண்டரை மொய்த்தது. ஒரு சில “படேல்” தோற்றத்தவர்கள் குரலை உயர்த்தினர்.
இப்போது கஸ்டமர் கேர் தாத்தா யாருக்கும் பதில் சொல்லாமல் உள்ளே போய்விட்டார். எல்லாரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டுருந்தார்கள்.
உமா சற்று நெருக்கமாக என்னருகில் நின்று கொண்டிருந்தாள். முகம் வெளிறி இருந்தது. எனக்கு உடனே பெட்டிகள் வந்துவிடக்கூடாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருக்கும்.
இப்போது அவள் அம்மா அங்கிருந்து போன் செய்யுமாறு சைகை செய்தார். அவள் கணவனுக்காகத்தான் இருக்கவேண்டும். உமா கையால் வீசி மறுத்தது அழகாய் இருந்தது.
ஒரு பத்து நிமிடங்கள் போயிருக்கும். உமா தூரத் தெரிந்த வெண்டிங் மிஷினிற்கு மனமே இல்லாமல் சென்றாள், குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்க.
அப்போதுதான் கவனித்தேன். கன்வேயர் பெல்ட் மறுபடியும் நகர ஆரம்பித்தது, பெட்டிகளுடன்!
அடச்சே என்று நினைத்துக்கொண்டே அருகே சென்றேன். உமாவின் பெட்டிகளை அடையாளம் கொள்ள சிரமமில்லை. அவள் பெயர் கொட்டை எழுத்துக்களில் மார்க் அண்ட் ஸ்பென்ஸரில் வாங்கப்பட்ட பெரிய மூன்று பெட்டிகள்.
என்னுடையதையும் அவளுடையதையும் எடுத்து இரு ட்ராலிகளில் வைத்துவிட்டு – ஒரே ட்ராலியில் வைக்கத்தான் ஆசை, ஆனால் ஒரு ட்ராலி பத்தாது – வெண்டிங் மெஷினை நோக்கி நடந்தேன்.
“இந்த மெஷின் வேலை செய்யலை..ச்சே, இதுவரை மூணு பவுண்ட் வீண் தனா” என்று சொல்லி விட்டு என்னை ஏறிட்ட உமாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே “உமா, குட் நியுஸ்” என்றவாறே ட் ராலிகளை நோக்கி கை காட்டினேன்.
“வந்தாச்சா, உண்மையிலேயா?”
“ஆமா உமா. உள்ள ஏதோ குழப்பம் போல. அதெப்படி வராம போகும், டைரக்ட் ப்ளைட்ல”
“உன்னோடது எல்லாம் வந்தாச்சு”
அவள் ஒரு கணம் அசையவில்லை. “இவனை கொஞ்சம் பார்த்துகிறிங்களா தனா” என்று பயலை என்னிடம் கொடுத்துவிட்டு ட்ராலி அருகே சென்றாள்.
சிணுங்கிய அந்தப்பயலை “லுக் அட் தட்” என்று சுவரில் வெல்கம் டு லண்டன் போஸ்டரைக்காட்டிக்கொண்டு இருந்தேன்.
பின்னால் யாரோ நிற்பது போல இருந்தது. திரும்பினேன். உமா. சட்டென என் கையைப் பிடித்துக்கொண்டாள்.
நான் ஸ்தம்பித்து நின்றேன்.
“நான் எப்படி சொல்றதுன்னு தெரியலை தனா…”
…
“எக்ஸ்யூஸ்மி” என்று யாரோ வெண்டிங் மிஷினருகே செல்ல வந்தார்கள். இருவரும் சற்று நகர்ந்தோம். உமா இன்னும் கையை விடவில்லை
“உமா, என்னா ஆனாலும் பரவாயில்ல. நான் இருக்கேன்…”
மனம் இந்த நேரம் வானம் எப்படி இருக்கும் என்று பரபரத்தது.
வாழ் நாள் முழுவதும் நினைவு வைத்துக்கொள்ளவேண்டிய கணம் அல்லவா.
மூச்சு விடமுடியவில்லை.
“இப்பதான் மூச்சே வந்தது தனா. எப்படிச் சொல்றது…வழக்கமா ஜ்வெல்ஸையெல்லாம் ஹாண்ட் கேரிலதான் எடுத்துட்டு வருவேன். இந்த தடவை ஏன் அப்படிச்செய்தேன்னு தெரியலை. ஏதொ நெனைப்பல செக்ட் (checked) பேக்கேஜ்ல வைச்சு தொலைச்சிட்டேன். வழியெல்லாம் அதே ஞாபகம், இருப்பே கொள்ளலை…சென்னை ஏர்போர்ட்டிலோ இங்கியோ யார் வேணும்னாலும் பேக்கேஜை கிழிச்சு எடுத்துக்கலாம் இல்லை, ட்ரான்ஸிட்ல டேமஜ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டா?
…
அடுத்த மூன்றாவது நொடியில் “அப்படியா? என்ன உமா இது? என்ன பைத்தியக்காரத்தனம்? எவ்வளவு?” என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே கேட்டேன்.
“திட்டாத. கிட்டதட்ட நாப்பது பவுன்”
“அய்யோ”
“ஆமா! அம்மா கிட்ட சொன்னா கொன்னே போட்டுடுவாங்க, அவரைக் கூட சமாளிச்சிடலாம். ஆனா அம்மா…யப்பா”
முகம் பிரகாசமாக இருந்தது. மேகங்களே இல்லாத ஒற்றை மூக்குத்தி நட்சத்திரம் மட்டும் பளீடும் வேனிற்கால வானம்.
அவர்கள் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு கிட்டதட்ட க்ரீன் சேனல் வரை வந்தபோது என்னுடைய மொபைல் ஒலித்தது. அறை நண்பன் சுப்புணி.
“ரூம் மேட் உமா. சாப்பாடு ரெடி பண்ணி வைக்கட்டுமா, பசியில்லையான்னு கேட்பான். எனி வே, உன் நம்பர் தான் என் கிட்ட இருக்கே, அப்புறமா போன் செய்றன் உமா, நீ கிளம்பு. அம்மா, குழந்த எல்லாரும் டயர்டா இருக்காங்க”
“அய்யோ, அவர் கிட்ட உங்களை இன்ரடுயூஸ் பண்ணனுமே தனா. அவர் வெளியே தான் இருப்பார். வாங்க”
“சரி, நீ முன்னால போ உமா. இதோ வறன்”
அவர்களை முன்னால் போகவிட்டு பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அரைவல் (Arrival) பகுதியில் கணவன் – நான் நினைத்தது மாதிரியே, ஈஸ்ட்ஹாம் முருகன் கோவிலில் க்யூவில் முன்னால் நிற்கும், திரும்பிப் பார்க்கவைக்காத சாதாரணமான முகமாய், தடியாக, கருப்பாக இருந்தான்.
குழந்தையையும் உமாவையும் அணைத்துக்கொண்டான்.
இங்கிருந்து உமாவின் முகம் தெரியவில்லை. ஆனால் எப்படி இருக்கும் எனத் தெரியும்.
எனக்கு இப்போது உடனே வானத்தைப் பார்க்கவேண்டும் போல இருந்தது.