மகரந்தம்

‘காணாமல் போன’ வைரஸ்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள மருத்துவ-உயிரியல் ஆய்வகம் ஒன்றிலிருந்து வைரஸ் அடங்கிய ஒரு குப்பி ‘காணாமல் போன’ சம்பவத்தை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. வெனிசுலா நாட்டின் ஒருவகை எலிகளைத் தாக்கும் ‘க்வானாரிடோ’ என்றழைக்கப்படும் இந்த வைரஸ், பாதிக்virusகப்பட்ட எலிகள் மூலமாக மனிதரில் தொற்றி காய்ச்சலும் முற்றிய நிலையில் ரத்தநாளக் கசிவையும் ஏற்படுத்தக்கூடியது. வெனிசுலா உட்பட தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டும் தான் இந்த வைரஸ் தொற்று உள்ளது. ஆய்வக பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகக் கறாரான தரம் கடைபிடிக்கப்படும் நாடு என நம்பப்படும் அமெரிக்காவில் இது நடந்திருப்பது கவனிக்கத்தக்கது. வீட்டுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் என தங்கள் நாட்டின் கழிவுகளை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கொண்டு போய் கொட்டும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் இத்தகைய அலட்சியங்களால், இந்நாடுகளின் நச்சுக்கழிவுகளைச் ‘சுமக்கும்’ துர்பாக்கியத்துடன் தங்கள் கண்டத்துக்கே சம்பந்தமில்லாத புதிய புதிய நோய்க்கிருமிகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை வளரும் நாடுகளுக்கு உண்டாகும். இதில் நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியது இந்தியாவும் மேற்கின் குப்பைத் தொட்டிகளில் ஒன்று. உயிர் தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வுகள் சார்ந்த பெரும் தொழில்துறைகள் பெருகி வளர்ந்து வரும் நமது நாட்டிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்கானிக்கும் பொறுப்பையும் இந்தச் செய்தி நமக்கு அவசரமாக அறிவுறுத்துகிறது.

http://www.slate.com/blogs/future_tense/2013/03/25/guanarito_virus_goes_missing_at_umbc_highlighting_u_s_lab_security_problems.html

*****

கதைகள் நிஜமாகின்றன

fr88

ஆரம்பகாலங்களில் மின்னணு ‘சிப்’ களைச் சிறிய விலங்குகளின் உடலுக்குள் புதைத்து அதன் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற உளவு வேலைகள் செய்ய விஞ்ஞானிகள் முயன்றனர். ஆனால் அந்த விலங்குகளைத் தாங்கள் உளவு பார்க்க நினைக்கும் இடத்திற்கு போகச் செய்யுமாறு கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று உயிர்த் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, நரம்பியலின் வளர்ச்சி, கூடவே பரவலாக உயிரியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரபணுத் தகவல்களைக் கொண்டு விஞ்ஞானிகள் இந்த முடக்கத்தை மீற முயல்கிறார்கள். மரபணுப் பொறியியல் மூலமாக எலி, கரப்பன் பூச்சி, தேனீ  போன்றவற்றின் மூளையில் வேறு சில மரபணுக்களைச் செலுத்தி சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக அவற்றை தாங்கள் விரும்பும் திசையிலும், இடத்திற்கும் நகரச் செய்து, அதை உளவு வேலைகளுக்குப் பயன்படுத்த முயற்சி செய்கிற ஆய்வுகளைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை. ஆரம்ப நிலையில் இருந்தாலும், நம்ப முடியாத விஞ்ஞானப் புனைவுகள் உண்மையாகும் காலம் இது!

http://www.salon.com/2013/03/23/science_fiction_turns_real_genetically_engineering_animals_for_war/

*****

போர், விளையாட்டல்ல

கடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.

ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity)  இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார். சிசிலியில் கமாண்டராகச் சண்டையில் காயமுற்று ஜெர்மானியரால் சிறைபிடிக்கப்பட்டார்.பின் கடுமையான காயங்களால் மரணமடைந்தார்.

இவர் (கிரிக்கெட்) உலகின் புகழ் பெற்ற `Body line’ தொடரில் பங்கேற்றவர், கேப்டன் டக்ளஸ் ஜார்டின்னின் விருப்பமான ஸ்பின்னர். முக்கியமாக, உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேனை டெஸ்ட் போட்டிகளில் அதிகம் அவுட் செய்தவர் (8 தடவைகள்).

hedley-verity-bradman1

இவரைப்பற்றிய ஒரு உருக்கமான பார்வை கீழே

http://www.espncricinfo.com/magazine/content/story/627878.html

கொசுறு செய்தியாக டக்ளஸ் ஜார்டினும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றார். கடுமையான காயமடைந்தாலும் உயிர் தப்பினார்.

*****

சரியும் யூரோப்

DUTCH-PROPERTY/CRISIS

இதில் உள்ள ஒளிப்படம் நெதர்லாந்தைப் படம் பிடித்துக் காட்டுகிறதா என்று யோசித்தேன். பொதுவாக யூரோப்பியர் அமெரிக்கரளவு கார்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை வாழ்வதில்லை. நிறையவே சைக்கிள்களையும், பொது ஊர்திகளையும் பயன்படுத்துபவர்கள்தான். அதனால் முச்சக்கர பொருள் கடத்தும் வண்டியை இந்தப் பெண் பயன்படுத்துவது நெதர்லாந்தில் வறுமை நெளிகிறது என்பதைச் சுட்டுவதாகக் கொள்ள முடியாது. அதே நேரம் இந்தப் படம் அதிக விவரம் தெரியாத உலக வாசகர்களுக்கு ஒரு சின்னம் போல (Icon) யூரோப்பியச் சரிவைக் காட்டும் படமாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறதென்பதென்னவோ நிஜம்.

ஆம் உலகக் காலனியம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு யூரோப்பியரை உந்தியதும், டேகார்ட்,  போன்றாருக்குப் புகலிடம் கொடுத்து, லைப்னிட்ஸ் போன்றாருடைய பல தளச் சிந்தனைக்கு இடம் கொடுத்து மதச்சிந்தனை/ மீபொருண்மை ஆகியவற்றிலிருந்து சான்றுகளையும், முன்னூகங்களையும் இணைக்கும் தர்க்க முறைப்படி அறிவியலை முன்னகர்த்தும் முறைக்கு வழிகோலியதும் இந்தப் பிராந்தியத்தின் கலவையான அளிப்பு. இன்று யூரோப்பிய ஐக்கியம் தடுமாறி நிற்பதற்கு இப்பகுதியின் சரிவு ஒரு சான்று.

http://www.spiegel.de/international/europe/economic-crisis-hits-the-netherlands-a-891919.html

*****

’நார்டிக் மாடல்’ பெயருக்குக் காப்புரிமை- சோசலிச ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை

இந்த வருடம் ‘எகானமிஸ்ட்’ பத்திரிகை ’நார்டிக் நாடுகள்- அடுத்த சூப்பர் முன்மாதிரி’ என்று ஒரு கட்டுரை பிரசுரித்தது. அதொன்றுமில்லை, சமீபத்திய பொருளாதாரச் சரிவில் மொத்த யூரோப்பும் கலகலத்து நொந்து போயிருக்கையில்,ஜெர்மனியைத் தவிர சுதாரித்து நின்ற, இன்னும் கொஞ்சமாவது வளர்கிற நாடுகள் என்று பார்த்தால் ஸ்வீடனும், நார்வேயும். ஐஸ்லாந்து கூட பயங்கரமாக நொடித்துப் போய் விட்டு, இப்போது ஓரளவு எழுந்திருக்கிறது. ஃபின்லாந்தும் ஓரளவு எழுகிறது.

socialdemokraternasvgஆனால் இவற்றில் ஸ்வீடன் தான் அதிகம் முன்னேறிய வளர்ச்சியைக் காட்டுகிறது. முதலியத்தின் துந்துபியான எகானமிஸ்ட் பத்திரிகை நார்டிக் நாடுகளைச் சென்ற சில பத்தாண்டுகள் முன்பு வரை எகத்தாளமாகப் பேசி இருக்கக் கூடிய பத்திரிகை. ஏனெனில் இந்த நாடுகள் சோஷலிசம் என்ற ஒரு கருத்தைத் தமது அரசியலமைப்பில் வெளிப்படையாகக் கொண்ட நாடுகள். பெருநிதிக்காரர்களையும், மிக உச்ச வருமானம் கொண்ட உயர் மத்திய நிலைக்காரர்களையும் தீவிர வரி வசூலிப்புக்கு ஆட்படுத்தி, அப்படிக் கிட்டும் உபரி வருமானத்தை வைத்து சமூகத்தின் கீழ்நிலை மக்களுக்கு உபகாரத் தொகை கொடுக்கும் ஒரு சமூக அரசியல் பொருளாதார அமைப்பு நார்டிக் மாதிரி அமைப்பு என்பது எகானமிஸ்ட் பத்திரிகை போன்றவற்றிற்கு ஏற்காத வழிமுறை. பெருங்குவிப்பு என்பது தனிமனித உரிமை என்பது இந்தப் பத்திரிகையின் கொள்கை.

இன்று இப்பத்திரிகை இத்தனைக்கு இறங்கி வந்து சோசலிசத்தை ஏற்றுக் கொண்டு விட்டதா? அக்கேள்விக்கு நிலையை ஆழ்ந்து நோக்கினால்தான் விடை கிட்டும். இன்றைய ஸ்வீடனில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி பன்னெடுங்காலமாக அதிகாரத்தில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி இல்லை. மாறாக மரபுவாதக் கட்சி (Conservative party) அதிகாரத்தில் உள்ளது. ஒரே ஒரு வேறுபாடு. இந்தக் கன்சர்வேடிவ் கட்சி இன்று தொடர்வதோ பழைய சோசலிச ஜனநாயகக் கொள்கைகள். இவை தமது கொள்கைகளே, கன்சர்வேடிவ் கட்சி இவற்றுக்கு உரிமை கொண்டாடக் கூடாது என்று கருத்துரிமைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை விண்ணப்பத்தைக் கொடுத்திருக்கிறார்களாம். இது எத்தனை கேலிக்குரியது என்று எழுதுகிறது இந்தக் கட்டுரை.
http://www.magasinetarena.se/2013/02/14/historieatarna-striden-om-den-nordiska-modellen/

*****