புத்தக அறிமுகம் – தலையணை மந்திரோபதேசம்

நடேச சாஸ்திரி எழுதிய ‘தலையணை மந்திரோபதேசம்’ ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். 1901ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை மறுபிரசுரம் செய்திருக்கும் தமிழினி நம் நன்றிக்கு உரியவர்கள்.

தன் உரிமைகள் குறித்தும், தன் கணவனால் நிறைவேற்றப்படாத கடமைகள் குறித்தும் கடும் அதிருப்தியிலிருக்கும் மனைவி கண்ணியமும் கட்டுப்பாடும் நிறையப் பெற்ற தன் கணவனுக்களித்த அறிவுரைகளே இப்புத்தகமாகிறது.

இதற்கு மிகச் சிறந்த முன்னுரை எழுதி, மேற்கொண்டு நாம் எதுவும் எழுதமுடியாதபடி செய்துவிட்ட நா. விஸ்வநாதன் இந்த மந்திரோபதேசங்களைக் கொச்சைப்படுத்துவதைத் தவிர்த்திருந்தால் அப்பழுக்கற்ற ஒரு முன்னுரை என்று அதை நாம் தாராளமாகப் புகழ்ந்திருப்போம். ஆனால் கண்டனத்துக்குரிய ஒரு வாக்கியத்தை எழுதிவிட்டார் :

“18 வருஷ இல்லறத்தில் மனைவியாகப்பட்டவள் தினமும் இரவு உறங்கப் போகும் முன்பு, கணவனைக் கடும் வார்த்தைகளால், சில சமயம் இல்லாததும் பொல்லாததுமாக பழி வார்த்தைகளால் ‘அர்ச்சிக்கும்’ ஒருதலை உரையாடல்களாக, 36 பகுதிகளாக – முக்கியமான ‘அர்ச்சனை’ சம்பவங்களை மட்டும் சொல்வதாக ஒரு ஆணால் தைரியமாக எழுதப்பட்டுள்ளது!”

“தலையணையில் தலைவைத்தபடியே அம்மணிபாய் இவ்வுபதேசங்களை வாய்மலர்ந்தருளியபடியால் இக்கிரந்தத்துக்கு ‘தலையணை மந்திரோபதேசம்’ என்று பெயரிடப்பட்டது” என்றே பதிவு செய்திருக்கிறார் நடேச சாஸ்திரி. மேலும், அம்மணிபாய் மறைவுக்குப்பின், “மந்திரோபதேசம் பெற்று சித்தியடைந்த அப்பிரபு மூத்த மனைவியிடம் குருபக்தி வைத்து இரண்டாம் தாரம் என்ற எண்ணமேயில்லாதவனாய் துறவறத்தில் வாழ்ந்தான், பரம பாகவதன்” என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேமை!

dd

“இவ்வுபதேசங்களில் படித்து அறிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள் பலவென்பது இக்கிரந்ததைப் படிக்கும் ஒவ்வொரு நாயகனுக்கு நாயகிக்கும் படிக்கும்போதே விளங்கும். அவைகளை பிரமச்சாரிகளாகிய நாம் எடுத்துச் சொல்ல நமக்கு யோக்கியதையில்லை,” என்று நடேச சாஸ்திரியார் எழுதினாலும், இதில் உள்ள சங்கதிகள் அத்தனையும் சிந்தனைக்குரியவை, பயனுள்ள, பிற்காலத்தில் உதவக்கூடிய படிப்பினைகளாக இருக்கக்கூடியவை என்று சம்சார சாகரத்தில் கரைபுரண்ட நாம் சான்றளித்து சில தேர்ந்தெடுத்த மேற்கோள்களை சொல்வனம் வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம் .

இரண்டாவது மந்திரோபதேசம் : ராமபிரஸாத் காய்கறி வாங்கினதற்காக மனைவி புகழ்தல்

“ஒருவள் ஒரு நாளைக்கு எத்தனை கீரைகள் சமையல் செய்வாள்! வாதமொடக்கி ஒரு கட்டு, அகத்திக்கீரை இரண்டு முடிப்பு, சேமைக்கீரை ஒரு கூடை, எல்லாம் ஒரேயடியாய் வாங்கி வந்தீர்கள். வாடிப்போகாதா என்று கேட்டால் வாய் திறக்கவில்லை. இன்று துவாதசியில்லையே அகத்தி ஏன் என்றால், பூவும் பிஞ்சுமாகவிருந்தது, ஆசையாக இருந்தது என்றீர்கள். மூன்றாங்கீரை என்னத்துக்கு என்றால் உடம்புக்கு நல்லது என்று பல்லிளிக்கிறீர்கள். நாளைக்கு நமது கொல்லையில் முளைத்திருக்கும் அருகம்புல்லை அறுத்து அதை உப்புப் போட்டு சுண்டி இலையில் போட்டால் அதுவும் ஒரு சுவைதான்.”

ஐந்தாவது மந்திரோபதேசம் : ராமபிரஸாத் பாகவத கோஷ்டியில் சேர்ந்தது

“நேற்று கூத்து! இன்று பாகவதம்! நாளை தாஸி வீடு! மற்றாம் நாள் உங்கள் வாழ்வு திண்ணையிலே! படிப்படியாய் அவன் உங்களைக் குழியில் தள்ளி விடுகிறான். மோக்ஷமாவது! வைகுண்டமாவது! ஒரு ஜாமகாலம் பஜனைக்கூடத்தில் உட்கார்ந்தால் வீட்டில் பெண்சாதி பிள்ளைகள் கதி என்னவாய் முடியும்? பணமில்லாமல் உங்களை பாகவதம் கேட்க யார் விடுவார்கள்?”

ஒன்பதாவது மந்திரோபதேசம் : ராமபிரஸாத் ஓரிரவு சாப்பிடும்போது சமையல் நன்றாயில்லை என்று சொன்னது

“இன்றிரவு சாப்பாடு நன்றாயில்லை! நாளை நானே நன்றாயில்லை என்பீர்கள்!! இப்பொழுது இந்த வீட்டில் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் நன்றாகப் புலப்படவில்லை! நான் நாளைப்போழுது விடிய வேண்டுமே என்று காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நான் வெளியே போய் விடுகிறேன். உங்களுக்கு யார் சமையல் செய்தால் நன்றாக இருக்குமோ அவர்களை அழைத்து வந்து ருசியாக சமையல் செய்யச் சொல்லி சுகமாக சாப்பிடுங்கள்”

பதினொன்றாவது மந்திரோபதேசம் : ராமபிரஸாத் சங்கரிக்கு தைப்பூசம் பார்க்கப் போனது

“கூத்து பார்த்துவிட்டு ராட்டனம் சுற்றினீர்கள். கழுதையின் மேல் உட்கார்ந்து சுற்றினீர்களா? குதிரையின் மேல் உட்கார்ந்து சுற்றினீர்களா? இன்னுமிரண்டு வயது போக வேண்டும், ராட்டன மேறிச் சுற்ற!! உம்முடன் வேறு உம்மைப் போன்ற எவனாவது ராட்டனத்தில் உட்கார்ந்தானா? குஷால்தாஸ் வரமாட்டேன் என்றான். ராட்டனமாவது நாம் ஏறவாவது போடா பைத்தியக்காரா, யாராவது நம் ஊரார்கள் கண்டால் கேலி செய்வார்கள் என்றான். அவனையும் பிடித்திழுத்து வைத்து சுற்றச் சொல்லி அவன் கூலியையும் நீங்களே கொடுத்தீர்கள். ஏனெனில் பணம் நமக்கு செலவிட வகை புலப்படாமல் இறைந்து கிடக்கிறது.”

பதினான்காவது மந்திரோபதேசம் : வீட்டைப்பூட்டி எடுத்துப் போய் திரும்பி வருவதாக ராமபிரஸாத் சொல்லுதல்

“அப்படியா! அப்படியே பூட்டிக் கொண்டு போய் விடுவீர்களா? அவ்வளவுக்கு தைரியம் வந்ததா? வெகு நாளாய் இந்த பதிலுக்கு நான் எதிர்பார்த்திருந்தேன். இன்று என் மனம் குளிர்ந்தது. வீட்டில் நெருப்பு பிடித்துக் கொள்ளட்டும். நாங்கள் எல்லோரும் அடியோடு வெந்து போக வேண்டும் என்பது உங்கள் கருத்து! நீங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு போய் விட்டு நாங்கள் கதவைத் திறந்து கொண்டு ஓட வழியில்லாமல் மாண்டு போகட்டும்”.

இருபதாவது மந்திரோபதேசம் : சேலத்துப் பெருமாள் கோயிலுக்கு அம்மணிபாயும் ராமபிரஸாதும் போயிருந்தபோது ரம்பாபாய் ராமபிரஸாதைப் பார்த்து சிரித்தது

“குஷால்தாஸ் வீட்டுக்கு நீங்கள் அடிக்கடி ஓடுகிற காரணம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிந்துவிட்டது. இதுவரையில் ஸந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்று சாயந்தரம் நிச்சயமாயிற்று. ஏதோ வெகு யோக்கியர்கள் போல் அதிகமாய்ச் சீற வேண்டாம். உங்கள் யோக்யதை எனக்கு நன்றாக விளங்கிவிட்டது! இத்தனை நாள்தான் நான் பைத்தியக்காரியாக விருந்தேன்! இத்தனை நாள் மோசம் செய்தாற்போல் இனிமேலும் மோசம் செய்ய முடியாது. நீங்கள் வெகு யுக்தியாய் அவளைப் பார்த்தும் அவள் உங்களைப் பார்த்து சிரித்ததும் எனக்குத் தெரியாது என்று எண்ணிவிட்டீர்கள். நான் என்ன கைக்குழந்தையா?”

இருபத்தைந்தாவது மந்திரோபதேசம் : பட்டணத்துக்கு ஒரு தடவை போய் வரவேண்டும் என்று அம்மணிபாய் கணவனை வேண்டல்

“ஐந்தாறு நாளைக்குக் கதவைப் பூட்டிக் கொண்டு குழந்தைகளைக் கூட அழைத்துக் கொண்டு பட்டணம் போனால் அங்கு இந்த சமஸ்தானத்து வேடிக்கைகளெல்லாம் இருக்கின்றதாம்; அவைகளைப் பார்த்து வரக்கூடாதா? ஏதோ கண்காட்சி சபை என்கிறார்கள். அதில் எல்லா சாமான்களும் வேடிக்கையாய் வைத்திருக்கிறார்களாம். ஐகொர்ட்டு, விளக்குக் கூண்டு, கும்பினித் தோட்டம், கரடி புலி சிங்கம் வைத்திருக்குமிடம், செத்துப் போன காலேஜூ எல்லாம் பார்க்கலாமாம். இப்போது பட்டணம் போய் வருகிறவர்கள் எத்தனையோ அதிசயம் பார்த்து வருவதாகச் சொல்கிறார்கள்”

இருபத்தாறாவது மந்திரோபதேசம் : அம்மணிபாய் காளஹஸ்தி, திருப்பதி முதலிய க்ஷேத்திரங்களுக்குப் போக உபதேசித்தல்

“போதும் இந்த ஊர்வாஸம். இங்கு என்ன குளமா, கோவிலா? ஒன்றுமில்லை. பறைப் பட்டணம்! காலை முதல் மாலை வரை நடந்து நடந்து கால்களும் கைகளும் அயர்ந்து போகின்றன. என்ன புண்ணியத்துக்காக இபப்டி நடக்க வேண்டும்?”

இருபத்தேழாவது மந்திரோபதேசம் : யாத்திரையில் நடந்த குற்றங்களை தனது கணவனுக்கு அம்மணிபாய் எடுத்துக்காட்டல்

“திருப்பதியில் நாமிறங்கியிருந்த வீட்டில் ஒருவருமில்லை. அது தர்மகர்த்தா வீடாம். கூடத்தில் நூறு சந்தனக்கட்டைகள் அடுக்கியிருந்தன. இரண்டு சிறு கட்டைகளைப் பொறுக்கி நான் நமது மூட்டைகளில் ஒளித்து வைத்தேன். ஒருவருக்கும் தெரியாதபடி துணியைப் போட்டு சுற்றியிருந்தேன். நீங்கள் என்ன மூட்டை கனக்கிறது என்று சொல்லி திருடியை சோதிப்பதுபோல் என் மூட்டைகளை சோதித்து அந்த சந்தனக்கட்டைகளை வீசியெறிந்து என் மேல் நாய் விழுகின்றாற்போல் விழுந்தீர்களே! அந்த அவமானம் எனக்கு ஒரு பொழுதும் ஆறவே ஆறாது!”

இருபத்தெட்டாவது மந்திரோபதேசம் : அம்மணிபாய் சேலம் திரும்பிவந்ததும் வீடு போன போக்கு

“எலி வளையானாலும் தனி வளை வேண்டும்! எப்படியோ நமக்கு என்று ஒரு குடிசையாவது இருந்தால் என்ன ஸந்தோஷம்!! சென்னப்பட்டணம் கண்காட்சி சபையைவிட இந்த வீடு எனக்கு சந்தோஷமாயிருக்கிறது!!! தன்னூரை விட்டு வேறு ஊருக்குப் போகும் சுகம் ஒரு சுகமா? எப்படி சில பேர் நாய்களைப் போல் அலைகின்றார்களோ அதுதான் எனக்கு விளங்கவேயில்லை!”

முப்பத்திநான்காவது மந்திரோபதேசம் : அம்மணிபாய் கொஞ்சம் காயலாயிருந்தபோது மரணபண்டுக்கு பணம் கட்ட புருஷனுக்கு மந்திரம் ஓதுதல்

“செவ்வாப்பேட்டை சங்கரராமன் மாப்பிள்ளை குழந்தைகளின் பேரில் பத்தாயிரம் ரூபாவுக்கு மரண பண்டில் பணம் கட்டி படக்கு என்று மாண்டு போனான்! சங்கரராமன் பெண் அப்பணத்தைக் கொண்டு அவள் சாமர்த்தியத்தால் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறாள்.”

முப்பத்தாறாவது மந்திரோபதேசம் : பரமபதம்

“என்னைவிட சாது ஒருத்தி உமக்கு இனி மனைவியாகக் கிட்ட மாட்டாள். நீங்களும் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய துர்க்குணத்தால் என் வாய் பெருகிற்றேயன்றி நான் வேண்டுமென்று சொன்னேனா? ஒரு பத்தினிக்கு தாலி கட்டின புருஷனை அதிகாரம் பண்ணத் தகாதா? அன்றியும் புருஷர்களே எப்போதும் அயோக்கியர்கள்.”

உண்மைதான். “என் பிராணன் போவதற்கு நீங்கள்தான் காரணம்,” என்று ராமபிரஸாத்திடம் சொல்கிறாள் அம்மணிபாய். அந்தக் காரணத்தை இறுதி அத்தியாயத்தில் அறிய வரும்போது அதிர்ச்சியாக மட்டுமில்லை, நமக்கு அம்மணிபாயின் நியாயமும் புரிகிறது. அதுவரை வேடிக்கையாக இருந்த அம்மணிபாயின் மந்திரோபதேசங்களின் தாத்பர்யம் அப்போது அதன் அத்தனை வேதனைகளோடும் நம்மைத் தாக்குகிறது. அதன்பின் அம்மணிபாய் போன்ற உத்தமிகள் ஒரு வாய் சோறு போட்டாலும் அதற்காக எவ்வளவு சொன்னாலும் ராமபிரஸாத் போன்ற அயோக்கிய ஆண்மக்கள் வாய் பேசாமல் எதற்கும் நன்றி சொல்லிக் குழைந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

முன் சொன்ன மாதிரி ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அத்தனையும் படிப்பினைகள்.

OoO

தலையணை மந்திரோபதேசம் – சில கூடுதல் குறிப்புகள்.

நடேச சாஸ்திரி
நடேச சாஸ்திரி

மேற்கோள்கள் மட்டுமே கொண்ட ஒரு கட்டுரையை அங்கீகரிப்பதில் வாசகர்களுக்கு தயக்கமிருந்தாலும், இக்கட்டுரையாளரின் இன்னபிற விளக்கங்கள் வியாக்கியானங்கள் தரிசனங்கள் அறச்சீற்றங்களை வாசிப்பதைவிட இதுவரையிலான வாசிப்பனுபவம் சுவையாக இருந்திருக்குமென்பதில் நம் எவருக்கும் இரு கருத்துகள் இருக்க இடமில்லை . இருப்பினும் சில வழக்குகளை மதிப்பதே முறைமை.

எனவே காத்திரமான இலக்கிய விமரிசனமாக கூடுதல் குறிப்புகள் சில பின்னிணைப்பாக இங்கே அளிக்கப்படுகின்றன –

தலையணை மந்திரோபதேசம் நாவலின் நாயகி அம்மணிபாய் ஒரு குரூபி – அவளது ஐந்தாவது வயதில் அம்மை கண்டு முகமெல்லாம் வடுக்கள். ஒன்பதாவது வயதில் முட்க்கம்மை. ஒரு கால் குறுகி இழுத்துக் கொண்டு போய் விடுகிறது, தலையில் முக்கால்வாசி முடி உதிர்ந்து விடுகிறது;, மிச்சமிருக்கிற கொஞ்சம் முடியும் அதற்கப்புறம் வளர்வதில்லை. பதினைந்தாம் வயதில் நோய் கண்டு ஒரு கண் போய் விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத்தான் நடேச சாஸ்திரி, “ஈசன் இவளை ஏகாக்ஷியாகவும் அம்மை வடுவால் பொளியப்பட்ட விகார முகியாகவும் சிருஷ்டித்தார்,” என்று கேலி செய்கிறார். பெரிய பணக்காரரான அவளது அப்பா அவளுக்குத் தகுந்த வரனாக ராமபிரஸாத்தைக் கண்டெடுக்கிறார். பரம தரித்திரன், ஏழடி உயரம், கண்ணெடுத்துப் பார்க்க முடியாத அழகு.

நாம் அம்மணிபாயைப் பிறந்த வீட்டு பெருமை பேசுபவளாகவும், தன் அழகு குறித்த தாழ்வு மனப்பான்மையால் கணவனை அளவுக்கு மீறி சந்தேகித்து அடக்கி ஆள்பவளாகவுமே வாசிக்கிறோம் – அவளது மூடத்தனங்கள் ஆண் மனதுக்கு ஒரு சந்தோஷத்தைத் தருகின்றன. எதிர்த்துப் பேசத்தெரியாத அப்பாவி கணவன், இரவெல்லாம் வாயாக அவனைப் பிடுங்கி எடுக்கும் மனைவி. நல்ல நகைச்சுவை. அம்மணிபாய் இப்படி இருக்க வேண்டும் என்பதும் அவளைப் பார்த்து நாம் சிரிக்க வேண்டும் என்பதும் ஆசிரியரின் நோக்கங்களாக இருக்கலாம்.

ஆனால் புனைவில் ஒரு பிரச்சினை என்னவென்றால், பாத்திரங்கள் அதை எழுதினவனின் மூளையில் உறைந்து போனவை அல்ல, அவனது நோக்கங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவை அல்ல. எழுதும்போதே உயிர் பெற்று தன் போக்கில் செல்ல ஆரம்பித்துவிடுகின்றன. எவ்வளவுதான் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றாலும், ஆசிரியனை சில சமயம் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.

அம்மணிபாய் இந்த நாவலில் தன்னைப் படைத்தவனை இப்படியாகக் குழியும் பறித்து அவனைக் கீழேயும் தள்ளி விடுகிறாள். சாதாரணமான நகைச்சுவை கதை என்ற நிலையில் இருந்து ஒரு poignantஆன கதையாக தலையணை மந்திரோபதேசம் மாற, அம்மணிபாயின் இந்த புரட்சியே காரணம்.

ஆசிரியன் குரலுக்கு, அவனது நோக்கங்களுக்கு மாறாக தன் மரணப் படுக்கையில் அவள் சொல்வதை இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய நா. விஸ்வநாதன் கவனித்ததாகத் தெரியவில்லை.

“கடைசி வரையிலும் ‘மனைவிக்குப்’ பொறுமை காட்டி, ஆனால் பயப்படவே பயப்படாத பாத்திரமாக இந்த கிரந்தத்தில் ‘புருஷன்’ இருப்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும்” என்று அவர் எழுதுகிறார். “அவன் மனைவி வீணாக பயந்தது போல் இரண்டாம் தாரம் கட்டாமல்…” என்று எந்த நுட்பமான வாசிப்பு இவருக்கு இப்படியொரு எண்ணத்தை உணர்த்தியதோ, அதே நுட்பமான வாசிப்புதான் ராமபிரஸாத்தை பொறுமையான, அச்சமற்ற கணவனாகவும் காட்டியிருக்க வேண்டும் – உண்மையில் ராமபிரஸாத் அம்மணிபாயின் புலம்பல்கள் தனது தூக்கத்தைக் கெடுக்கிறது என்பதைத் தாண்டி அவளைக் கொஞ்சமேனும் பொருட்படுத்துவதேயில்லை.

“அம்மணிபாய் வெகு விகாரமான உருவத்துடனிருந்த போதிலும் வேண்டியதற்கு மேலாக பொருள் கொண்டுவந்தவளாகையால் ராமபிரஸாத் அவளுக்கு பிராண நாயகனாகவேயிருந்தான்” (பக்கம் 10) என்று நடேச சாஸ்திரி எழுதியிருப்பதில் உள்ள நகைமுரண் அலாதியானது, அபூர்வமானது. அம்மணிபாயின் குள்ளக் கோமாளியின் சர்க்கஸ் குட்டிக்கரணக் கேளிக்கைகளில் நாம் இதைத் தவற விட்டு விடுகிறோம்.

“வெட்கப்படாமல் இது போன்றதொரு ‘கிரந்தம் ஒரு ஆணால் தைரியமாக எழுதப்பட்டு, தைரியமாக வெளியிடப்பட்டதும் அபூர்வம்தான்” என்று நா. விஸ்வநாதன் குறிப்பிடுவது நகைமுரண் பொருளில்தான் இருக்க வேண்டும். நடேச சாஸ்திரியும் இத்தகைய நுட்பமான நகைச்சுவையை முன்னிட்டுத்தான் இதை எழுதியிருக்க வேண்டும். வாயடங்காத மனைவி (“நாக்குப் பிசாசு’), அப்பாவி கணவன், தைரியமாக இதைப் பதிவு செய்யும் நூலாசிரியன் – என்ன ஒரு கூட்டணி! இந்த மாதிரி பெண்களுக்கு போலியாக பயப்படும் ஆண்களாக நாம் சிரித்துக் கொண்டாடிய நாட்களுக்கு எண்ணிக்கை உண்டா? ஒரு misogynistic பிரதி என்றால் அது இதுதான்.

– என்ற அபவாதத்திலிருந்தும் நடேச சாஸ்திரியை, அவரது நோக்கங்களுக்கும் புறம்பாக, அம்மணிபாய் காப்பாற்றி நமக்கு ஒரு பெண்ணியப் பிரதியைப் பரிசளிக்கிறாள். அவள் மரணப் படுக்கையில் இருக்கும்போது சொல்வது ஒன்று நம் பார்வைக்குத் தப்பி விடுகிறது, அவளது எத்தனையோ பிதற்றல்களில் ஒன்றாய் காதில் விழாமல் நம்மைத் தூக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது. ஆனால், இதையே முன்னிலைப்படுத்தி, இதையே பிரதானமாய் வைத்து தலையணை மந்திரோபதேசத்தைப் படித்துப் பாருங்கள் – 125ஆம் பக்கத்தில் அம்மணிபாய் சொல்கிறாள்,

“கஞ்சி வேண்டாம். எனக்கு இனி கஞ்சி என்னத்திற்கு? எப்பொழுதும் எனக்கு கஞ்சியே பிடிக்காதென்பது உங்களுக்குத் தெரியுமே. இனி எனக்குப் போர்வை என்னத்திற்கு? கஞ்சி என்னத்திற்கு? என்னவோ பத்து நாளைக்குமுன் கண்ட ஜ்வரம் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இந்த ஜ்வரம் பத்து வருஷங்களுக்கு முன்னமே கண்ட ஜ்வரம். நீங்கள் கறுப்பி வீட்டிலிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு எனது பச்சை உடம்புடன் நான் மழையில் நடந்து கொண்டு வந்து உம்மைக் கண்டுபிடிக்கவிலலையா? நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றி நானிப்போது உம்மைக் கடிந்து பேசப்போவதில்லை. நீங்கள் நடுங்க வேண்டாம். ஒரு ஞாபகத்துக்காகச் சொன்னேன். அன்று (பத்து வருஷங்களுக்கு முந்தி) கண்ட ஜ்வரம். இது உள்ளூர இருந்துகொண்டு அப்போதைக்கப்போது என் பிராணனைப் பீடித்து வந்தது. இந்த தடவை வந்தது மீளாமல் என் உயிரைக் கொண்டு போகப் போகிறது. நான் ஏதோ பிதற்றுவதாக நீங்கள் எண்ண வேண்டாம். முன் ஒரு தடவை நான் இந்த விஷயமாகப் பேசியபொழுது நீங்கள் அப்படித்தான் சொன்னீர்கள். உங்களுடன் சண்டையிட இதுவல்ல சமயம். சுவாமிதான் உங்களைக் கேட்க வேண்டும். என் பிராணன் போவதற்கு நீங்கள்தான் காரணம்”.

அம்மணிபாய் பிதற்றுகிறாள் என்று நாமும் நினைக்கலாம், அம்மணிபாயைப் பார்த்துச் சிரிக்கலாம். ஆணால் வழக்கம்போல ஆண்பிள்ளைத்தன அலட்சிய “பேத்தாதே”வாக, ராமபிரஸாத்தின் வாயடைத்தலாக, இது இருந்து அம்மணிபாய் சொல்வது உண்மையாக இருந்தால்?

தலையணை மந்திரோபதேசம் ஒரு பிரதியாய் திறந்து கொள்கிறது. கேளிக்கையாகப் படைக்கப்பட்ட நாயகி, ஆசிரிய நோக்கங்களுக்குப் புறம்பாக, புனைவின் தேவைகளை மீறி, தன் மனவேதனையைப் பேச அனுமதித்து இதை எழுதிய நடேச சாஸ்திரி, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு உன்னதமான படைப்பை விட்டுச் சென்றிருக்கிறார், “அன்றியும் புருஷர்களே எப்பொழுதும் அயோக்கியர்கள்” என்று சொல்லும் அம்மணிபாய் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் அத்தனை பேருக்குமாய் சேர்த்து குரல் கொடுக்கிறாள். பெண்ணியம், பின்நவீனத்துவம், கட்டுடைப்பு என்று எந்த நவீன ஆயுதத்தைப் போட்டுப் பார்த்தாலும் இறவாத ஒரு உலகத் தரம் வாய்ந்த படைப்பு, 1901ஆம் ஆண்டு வெளிவந்த இது தமிழர்களாக நமக்குப் பெருமை சேர்க்கும் ஆக்கம். உலக இலக்கிய வரலாற்றில்கூட பெண்மன உணர்வுகளைப் பேசும் இது போன்றதொரு முன்னோடி இருக்குமா என்று தெரியவில்லை.

தலையணை மந்திரோபதேசம், நடேச சாஸ்திரி (2007),

முதல் பதிப்பு 1901

128 பக்கங்கள், விலை ரூ. 65