புண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்

amm

பூமாதேவியே என்னை மன்னித்துவிடு.

உன் மண்ணை நான் உழும்போதும்,

காளைகள் நடக்கும் போதும்

கொழுவால் உன்னைக் கிளறும் போதும்

வலியைப் ​பொறுத்தருள்க.

நல்ல விளைச்சலை வழங்கி

மனிதர்களைக் காப்பாற்று…

கி.பி.800-ல் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ‘காஷ்யபர் க்ருஷி சுக்தி’ என்ற விவசாய இலக்கணத்தில் காஷ்யபமுனிவர் மண்ணின் மீது நான் ஏரோட்டம் செய்யும் போது உனக்கு வலிக்குமே என்று கவிபாடியுள்ளார். மண்ணின் மீது நமது முன்னோர்கள் கொண்டிருந்த அன்புக்கு வேறு சான்று தேவை இல்லை.

கி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.

நகரங்களில் வாழும் மக்களுக்கு நமது உணவு எப்படி விஷமாகிறது என்ற அடிப்படை புரியாமல் வாழ்கிறார்கள். கிராமங்களில் வாழ்பவர்கள் குறிப்பாக விவசாயிகளில் பலர் இவையெல்லாம் விஷம் என்ற புரிதல் இல்லாமல் யூரியாவையும் இதர ரசாயனங்களையம் பலதரப்பட்ட பூச்சிமருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். பூச்சிமருந்தல்ல அவை. விஷமான உயிர்கொல்லிகள் அவை. ‘பூச்சிமருந்து குடித்து இறந்து போனான்’ என்ற செய்தியின் வாயிலாக அதை அறிந்து கொள்ளலாம். ஏன் அவற்றை விஷம் என்று கூறுகிறோம்? நமக்கெல்லாம் நோய்வந்தால் மருத்துவரிடம் சென்று மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து எடுத்துக் கொள்வோம். ஒரு சிலர் பழைய மருந்துச் சீட்டைக் காட்டி அவர்களே கடையில் மருந்து வாங்கி உண்பதைப்போல், எல்லா விவசாயிகளும் அவர்களே மருத்துவர்களாக மாறி அவரவர் நோக்கத்திற்குப் பூச்சிமருந்து ​தெளிக்கும் பழக்கம் வேரூன்றியுள்ளது. அல்ட்ரின், டி.டி.ட்டி., லின்டேன், ஹெப்டோக் குளார், என்ட்ரீன், டையாகினான், அலுமினியம், பாஸ்பைடு, மாலத்தியான், பாரத்தியான் என்ற பெயர்களில் நூற்றுக் கணக்கான மருந்துகள் உண்டு. ஒன்றை தடை செய்தால் மாற்று என்ற பெயரில் புதிய லேபிளில் புதிய பூச்சிமருந்து விற்பனைக்கு வந்து விடும்.

இப்படிப்பட்ட எல்லாவிதமான பூச்சிமருந்துகளிலும் ஆர்மோ குளோரின், ஆர்கோபாஸ்ஃபைடு போன்ற விஷயங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பூச்சிமருந்துகள் சாதாரணமாக அடித்த சில மணிநேரங்களில் ஆவியாகிவிடும் என்றும் இதனால் எதுவும் தீமை இல்லை என்றும் பலர் நம்புவதுண்டு. ஆவியாவது சரியே. அடிக்கப்படும் மருந்தால் தீமை செய்யும் பூச்சி பூசணங்கள் மடிவதும் சரியே. ஆனால் பக்கவிளைவுகள் பயங்கரமானவை. பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளும், பறவைகளும் அழிகின்றன. இயல்பான மகரந்தச் சேர்க்கை பாதிப்புறுகிறது. பயிர்மீது அடிக்கப்படும் மருந்து மண்ணில் விழுந்து மண் விஷமாகிறது. பயிர்களின் தண்டுகள் வழியே ஊடுறுவிப்பாய்ந்து காய்கறி, பழங்கள், தானியங்களில் அந்த விஷம் எஞ்சி நிற்கிறது. ‘ஒரு துளி விஷம்’ என்பது அந்தக் காலம். மில்லியனில் இருபது பங்கு, முப்பது பங்கு நாற்பது பங்கு என்பது இந்தக்காலம். சாதரணமாக அனுமதிக்கப்படும் அளவு என்ற கணக்கு உண்டு. ஒவ்வொரு வகையான விஷமும் நமது உடலில் அனுமதிக்கப்படும் அளவில் செல்லும்போது பிரச்சனை இல்லை. மேற்கூறியபடி அனுமதிக்கப்படும் அளவு மில்லியனில் பத்துப்பங்கு என்றால் நாம் உண்ணும் ரசாயன விவசாய உணவுகளில் இத்தகைய விஷம் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நூறு முதல் 200 சதவீத அளவுக்கு அதிகம் உள்ளதாக பரிசோதனைக்கூட முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரசாயனம் – பூச்சிமருந்து விவசாயத்தால், நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், தானியங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு ​மேல் எஞ்சியுள்ள விஷம் நமக்கு ஏற்படும் நோய்களின் பட்டியல் நம்மை தலை சுற்றவைக்கும். ஆர்கோகுளோரின் கலந்த உணவு மூலம் வயிற்றுப்போக்கு, ஈரல்-குலை நோய், மூத்திரப்பை அடைப்பு, பித்தப்பை அடைப்பு, சிறுநீரகத்தில் கல், காலரா, புற்றுநோய் ஏற்படும். ஆர்கனோ பாஸ்பரஸ் விஷத்தினால் பல்வேறு வாதநோய்கள், நரம்புமண்டலக் கோளாறு, உடல்வலி, புற்றுநோய், இதயவலி வரும். யூரியா உரம் போட்டு வளர்த்த உணவு மூலம் ரத்தசோகை ஏற்படும்.

இப்போது மண் பற்றி பார்க்கலாம். ரசாயன உரமிடுவதாலும், பூச்சிமருந்து பூமியில் விழுவதாலும் மண் விஷமாகிறது. ரசாயன உரமிடுவதன் மூலம் மண்ணில் உள்ள அனைத்து உயிர்ச்சத்துக்களும் மிகவேகமாகச் சுரண்டப்படுகிறது. ஆகவே நல்ல நிலையில் உள்ள நன்னிலம் களர்நிலமாக மாறுகிறது. மண் இறுக்கமாகிறது. சில சமயம் உவராகவும் மாறுகிறது. களரைத் திருத்தலாம், உவரைத் திருத்த முடியாது. அந்தக் காலத்தில் ஒட்டுமண் என்பார்கள். சோப்புக்குப் பதிலாக வெள்ளையாக உள்ள உவர்மண் துணி வெளுக்கப் பயனாயிற்று. விளைநிலம் அப்படி மாறிவிடும்.

234

விவசாயத்திற்கு இலக்கணம் எழுதிய காஷ்யபர் (கி.பி.800) மண்ணை மேதினி என்கிறார். மேதினி என்றால் வளமை, செழுமை, முழுமை என்று பொருளுண்டு. மேதினிக்கு காஷ்யபர் வழங்கும் பொருள் விளக்கமாவது; ‘மனிதனுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும், உணவைத் தருவதால் மண் மேதினி. மண்ணில் நோய்தீர்க்கும் மூலிகைகள் விளைவதால் மேதினி. மண் உயிர்க்காற்றாகிய ஆக்ஸிஜனை உள்ளடக்கிய நீருற்றுகளை வழங்குவதால் மேதினி…’ மேதினி என்ற இச்சொல் பிற்கால வழங்கில ‘மேனி’ ஆனது. விவசாயத்தில் மேனி என்றால் ‘விளைச்சல்’ என்று பொருள். கிராமங்களில் நெல் நிகர விளைச்சலை ‘எவ்வளவு மேனி கண்டு முதல்? என்பார்கள். அதாவது ‘ஏக்கருக்கு எவ்வளவு மூட்டை? என்று பொருளாகும். மேதினியை பூமியின் மேனி என்று பொருள் கொள்ளலாம்.

​ மொத்தப்புவியின் நிலப்பரப்பில் உள்ள விளைநிலமே மேதினி. இந்த மேதினியை நாம் பாழடித்தவண்ணம் உள்ளோம். ரசாயன உரமிட்டும், பூச்சிமருந்து அடித்தும் நஞ்சாக்கிவிட்​டோம். பொன்னான பூமி (மேதினி) புண்ணாகிவிட்டது. இதற்கு வைத்தியம் செய்யவேண்டும். என்ன செய்யலாம்? ‘ஆறு மனமே ஆறு, ஆண்டவன் கட்டளை ஆறு’ என்று பாடிய கவிஞனை நினைவில் ​கொண்டு நான் வழங்கும் ஆறு கட்டளைகளை நிறைவேற்றினால் மேதினி சிறக்கும்.

1. மண்ணை வளர்க்க மண்புழுக்களை வளர்க்க வேண்டும்.

2. மண்புழுக்களை வளர்க்க மாடுகளை வளர்க்க வேண்டும்.

3. மேதினி வளர பசுக்கள் வழங்கும் ஐம்பொருள்களான ​ கோ மலமாகிய சாணி, கோ ஜலமாகிய மூத்திரம், ஆவின் பால், ஆவின் நெய், ஆவின் மோர் கலந்த பஞ்சகவ்யத்தால் மேதினியை சுத்தி செய்ய வேண்டும்.

4. மேதினி வளர வரப்புகளிலும், புஞ்சைகளிலும், மேய்ச்சல் காடுகளிலும் மரம் வளர்க்க வேண்டும். மரம் உதிர்க்கும் சருகுகள் பயிர்களுக்கு முழுமையான ஊட்டம் தருவதால் மேனி (விளைச்சல்) பெருகும்.

5. மேதினியை வளரக் குப்பை வேண்டும். எல்லா வகையான அறுவடைக் கழிவுகளிலும் மாடுகள் தின்ற மிச்சங்களும் கால்நடைக் கழிவுகளுடன் சேர்த்து கம் போஸ்ட் செய்யலாம். காய்கறிப் பயிர்களுக்கு வைக்கோல் அல்லது மரச்சருகுகளால் மூடாக்குப் போடலாம். கம்போஸ்ட் + மூடாக்கு ஐந்தாவது கட்டளை.

6. சுரபாலனின் விருட்சாயுர்வேதநூல் கூறிய வண்ணமா அல்லது காலத்திற்கு ஏற்ப நடைமுறை சாத்தியமான குணபக்கூறுகளை மண்ணில் இடவேண்டும். குணபம் என்றால் உயிரற்ற உடல் என்று பொருள், எலிகுணபம், மீன் குணபம், பன்றி குணபம், என்று பலவகை உண்டு. பலவகையான குணபஜலத்தைப் பாலில் கலந் தோ, மோரில் கலந்தோ, ஊறவைத்த உளுந்துக் கழுநீரில் கலந்​த, மதுவில் கலந்தோ சுரபாலர் (விருட்சாயுர்வேதம்) முன்மொழிந்தபடி பயிருக்கு விட்டால் மேனி செழிக்கும்.

பூமியின் புண்களை ஆற்ற இன்னும் எவ்வளவோ செய்யவேண்டும். அவற்றை அடுத்த இதழில் யோசிப்போம்.