பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

pbs

முதல் முறை பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்தபோது சட்டைப் பையில் அவர் வைத்திருந்த பலவிதமான வண்ணப் பேனாக்கள் முதலில் ஈர்த்தன. சென்னை உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலில் அவர் உட்கார்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மூன்று மேஜைகள் தாண்டி நான் உட்கார்ந்திருந்தேன். தூரத்திலிருந்து பார்த்ததும் அவர்தானோ என சந்தேகம் இருந்ததால் அவரைப் பார்த்தபடி காலியாக இருந்த சீட்டைத் தேடி உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் அடிக்கடி அங்கே வருவார் என்பதோ, அடுத்தஇரண்டு வருடங்களில் பல முறை பார்க்கப்போகிறேன் என்பதோ உணராதிருந்தேன். ஒரு பிரபலத்தை திடீரெனப் பொது இடத்தில் சந்தித்தால் வரும் பதட்டம் இருந்தது. என்னுடன் வந்த வடக்கத்திய நண்பருக்கு சந்தேகமாகவே இருந்தது. பிரபலமான பாடகர் என்கிறாய், யாருமே கண்டுக்கவில்லையே! நெஜம்மாவே அவர்தானா? எனச் சந்தேகமாகக் கேட்டார்.

தடிமனான அவரது கண்ணாடி சட்டகம், புகைப்படிந்தது போன்ற கண்ணாடி இன்றும் நினைவிருக்கின்றன. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பழைய நினைவில் அணிந்த மெடல்கள் போல சட்டைப்பையில் வரிசையாக வண்ணப்பேனாக்கள். மேஜையில் பரத்தியிருந்த வண்ண பேனாக்களிலிருந்து ஒன்றை எடுத்து கொஞ்சம் எழுதிவிட்டு அவ்வப்போது சுற்றிப்பார்ப்பவராக இருந்தார். காப்பிக் கோப்பையை வைத்துவிட்டுப் போன சிப்பந்தி கூட கண்டுக்காததால் எனக்கும் கொஞ்சம் சந்தேகம் வந்தது. பில் கட்டும் போது கல்லாவிலிருப்பவரை கேட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டேன். பின்னர் பல முறை அவரை அங்கு பார்த்திருந்தபோதும், நினைவூட்டக்கூடிய முகம் அந்த புகை படிந்த கண்ணாடிச் சட்டகமும், சட்டைப்பை நிறைத்திருந்த பேனாக்களும் மட்டுமே.

வெளியே வந்ததும் சற்றுத் தொலைவு நடந்தபின் இன்றைய செம்மொழிப் பூங்கா முடிவிலிருக்கும் சிக்னலைத் தாண்டி இருந்த எஸ்.டி.டி பூத்துக்கு விரைந்தேன். எப்போதும் ஃபோன் செய்து அம்மா இல்லியா எனக் கேட்கும் நான், அன்று அப்பாவைக் கூப்பிடு எனச் சொன்னது அம்மாவை ஆச்சர்யப்படுத்தியது. மறுபக்கம் அப்பாவின் துள்ளலை எதிர்பார்த்திருந்ததால், என்னுடைய குரல் எனக்கே உற்சாகமாய் கேட்டது. சினிமா, தொலைக்காட்சி என எதுவும் பார்க்கப் பிடிக்காத அப்பாவுக்கு ரேடியோவில் P.B.ஸ்ரீனிவாஸ் பாடலைக் கேட்பது என்பது நானறிந்து ஒரே பொழுதுபோக்கு. ஆனால், அவருக்கு அது பொழுதுபோக்கல்ல. பல ரசிகர்களைப் போல, பி.பி.எஸ்ஸின் மென்மையான குரலுக்கு அவர் ஒரு பெரிய ரசிகர்.

`உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா’, `காலங்களில் அவள் வசந்தம்`, `எங்கும் துன்பமில்லை, `பெண் ஒன்று கண்டேன்`- அவரது டாப் ஃபேவரைட் பாடல்கள். இவர் பாடிக்கொண்டிருந்த காலத்தில் எத்தனை விதவிதமான மாஸ்டர்கள் புழங்கினர் எனக் கணக்கே கிடையாது. இந்தியில் ரஃபி, முகேஷ், கிஷோர் தொடங்கி தமிழில் டி.எம்.எஸ் வரை விதவிதமான குரல்கள். அத்தனையும் ஒரே விதமான குரல்கள் கிடையாது. உச்ச ஸ்தாயியில் பாடுவதும், காதல் பாடல்களில் துள்ளலாகப் பாடுவதும், நளினமாகவும் மென்மையாகவும் பாடுவதில் இவர்கள் ஒவ்வொருவரும் மாஸ்டர்கள். பி.பி.எஸ்ஸின் தத்துவப் பாடல்களும், காதல் பாடல்களும் மிகவும் மென்மையானவை. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடகராகப் பல பிரபலமான பாடல்களைப் பாடியிருந்தாலும், நடிகர்கள் ராஜ்குமார், ஜெமினி கணேசன், பாலாஜி போன்றோருக்குப் பொருந்தியது போல வேறு யாருக்கும் அவரது குரல் பொருந்தவில்லை. மென்மையாகப் பாடக்கூடிய ரஃபி, முகேஷ் பாணியிலிருந்து இவரது குரல் மிகவும் வித்தியாசமானது. முறையாக சாஸ்த்ரிய சங்கீதம் பயின்றிருந்தாலும், திரைப்பாடல்களில் அதன் சாயல் இருக்காது. மென்மையான குரலில் பாடியதால் அவரது பாடல்கள் குறிப்பிட்ட மன உணர்வுச்சூழலில் மட்டுமே ரசிக்க முடியும் எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். டி.எம்.எஸ் அளவுக்கு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் எனச் சண்டை போடும் வீட்டுப்பெரியவர்களைச் சந்தித்திருப்போம். ஆனாலும், P.B.எஸ்ஸின் குரலை மட்டும் மிகத் தீவிரமாக ரசிக்கும் பலரை நான் சந்தித்திருக்கிறேன்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் P.B.ஸ்ரீனிவாஸ் தனது மொழி ஆர்வங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் கவிதைகளும்/பாடல்களும் நிறைய எழுதிக்கொண்டிருந்த காலம் என நினைக்கிறேன். எட்டு மொழிகளில் கவிதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. மேலிருந்து கீழும், இடமிருந்து வலமும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய கவிதைகளை அன்று படித்துக்காட்டினார். இயல்பாக மொழி மீதும், கவிதை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

பாவமன்னிப்பு படத்தில் அவர் பாடிய `காலங்களில் அவள் வசந்தம்` பாடலுக்கு விருது வாங்கியிருந்ததாக எம்.எஸ்.வி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். என்ன விருது எனத் தெரியவில்லை. டி.எம்.எஸ் பல பாடல்களை அந்த படத்தில் பாடியிருந்தாலும், காலங்களில் அவள் வசந்தம் பாடலின் நளினம் இன்றும் பிரபலமாக இருக்கிறது. இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு, மென்மையான குரலினால் அவருக்கு பலவகையானப் பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லையோ என பேட்டியாளர் கேட்டார். மெல்லிய குரலில், `என்ன இயல்பா எனக்கு இருக்கோ அதுதான் பாடவரும்,` எனச் சொன்ன பதில் இன்றும் நினைவிலிருக்கிறது.

இன்று காலை அவரது எண்பத்து இரண்டாவது வயதில் P.B.ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டார் எனும் செய்தியை இணையத்தில் பார்த்து அறிந்துகொண்டேன். பலவிதமான நினைவுகள். யூடியூப்பைத் திறந்துவைத்து அவரது எந்தப் பாடலைக் கேட்கலாம் எனக் குழம்பியபடி ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்தேன். நெடுங்காலம் பல அற்புதமான பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டி அவரது குரல் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது. நான் தேடி எடுத்த முதல் பாடல், `மெளனமே பார்வையால்`. ஒவ்வொரு கலைஞருக்கும் ஒவ்வொரு அடையாளம். P.B.ஸ்ரீனிவாஸ் என்றாலே மதுரமான மெல்லிய குரல் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும்.

மென்மையான பாணியில் பாடி ரசிகர்களுக்கிடையே ஒரு தனித்துவ இடத்தைப் பிடித்திருக்கும் பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.