நல வாழ்வுக்கு விவசாயம்

organic-agriculture1

நல வாழ்வை மையமிட்டுத்தான் விவசாயம் வளர்ந்தது. உணவே மருந்தாக விளங்கியது. மேலை நாடுகளில் விவசாயம் விஷமான காலகட்டத்தில் இந்திய நாட்டில் இயற்கை விவசாயம் முழுமையுடன் விளங்கியது. மனிதர்களுக்கு நோய் வருவது குறைவு. வலிமையுடன் வாழ்ந்தனர். மருத்துவமனைகளும் குறைவு. அலோபதி வைத்தியம் அபூர்வமே. மனிதர்கள் நீண்டநாள் வாழ்ந்தனர். இன்று இயற்கை விவசாயம் முழுமையாக அழிக்கப்பட்டது. ரசாயன விவசாயத்தால் உணவு விஷமாயுள்ளது. மனிதன் நோயுறுகிறான். சிறுவயதிலிருந்தே மருந்து மாத்திரைகளுக்கு மனிதன் இரையாகிவிட்டான். மருத்துவமனைகள் பெருகிவிட்டன. மருந்து உற்பத்தி பெருகி விட்டது. நல வாழ்வை மனிதன் தொலைத்து விட்டான். வளவாழ்வை வைத்தியர்கள் தேடிக்கொண்டு விட்டனர். மீண்டும் ஒரு நல வாழ்வை மனிதன் பெறுவதைப் பற்றி யோசிக்கும் முன்பு சில கேள்விகள். விவசாயத்தில் ரசாயனம் எப்போது அறிமுகமானது? பசுமைப்புரட்சி எப்போது ஏற்பட்டது? விவசாயத்தில் ரசாயனம் புகுந்தகாலம் எப்போது? மாசாக்கப்பட்ட மண்ணால் மனிதன் நோயாளியான கதை என்ன?

பசுமைப்புரட்சி வருவதற்கு முன்பே விவசாயத்தில் ரசாயனப் புரட்சி ஏற்பட்டு விட்டது என்பதே கசப்பான உண்மை. உலகில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியவர் நார்ன் போலாக். உண்மையில் இவர் கண்டுபிடித்தது குள்ளரக கோதுமை. ஜப்பானியக் குள்ளரகத்தைக் கொலம்பிய ரகத்துடன் ஒட்டுக்கட்டி உருவான மெக்சிகன் வெள்ளை இவர் கண்டுபிடிப்பாகும். உலக கோதுமை ஆராய்ச்சி நிறுவனம் மெக்சிகோவில் உள்ளது. ராக்ஃபெல்லர் ஃபோர்டு அறக்கட்டளையால் பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வீரிய கோதுமை ரகத்தைக் கண்டுபிடித்த நார்மன் போலாக்கின் அதே உத்தியைக் கடைபிடித்து ஐ.ஆர்.8, தைச்சுங் போன்ற வீரியரக நெல் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையெல்லாம் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழந்தன. 5 அடி வரை வளரக்கூடிய நெல், கோதுமை ஆகியவற்றின் உயரத்தை 2½ அடிக்கும் பாதியாக குறைத்து வைக்கோலாக வேண்டிய நார்ப் பொருளை மாவுப் பொருளாக்கி நெல் அல்லது கோதுமை மணிகளைக் கூட்டும் D.N.A.(De-Oxy-ri-bo-Nucleic-Acid) மூலம் வீரியரக நெல், கோதுமை உருப்பெற்றன. இதைத் தமிழ்ப்படுத்திக் கூற வேண்டுமானால், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் ‘விதையில்’ உள்ள உயிர்மங்களை அடையாளமிட்டு பிரித்து மாற்றுதல் எனலாம். இதையெல்லாம் நினைத்தவுடன் செய்ய முடியாது பல்லாண்டு ஆராய்ச்சிக்குப் பின்னரே புதிய விதைகளை உருவாக்க முடியும். இதன் பின் விளைவு மிகவும் மோசமாயிருந்த விவரத்தை கவனிக்கும் முன்பு மண்ணைக் கெடுத்த மாபாவி ஜெர்மன் விஞ்ஞானியை அறிவோம். அவர்தான் பேரன் யொஸ்டஸ் வான் லீபெக் (Baron Justus Von Lie big) 1840 – ல் வேளாண்மையிலும் உடற்கூறிலும் ரசாயனப் பண்பாடு என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.

பல வகையான உணவுத் தாவரங்களை எரித்துப் பின் கிட்டிய சாம்பலில் உள்ள தாதுஉப்புகளை அளவிட்டு அந்த உப்புகளை சிந்தட்டிக்(செயற்கை) வடிவில் வழங்கலாமென்று கண்டறியப்பட்டது. பசுமைத்தாவரங்களில் அடிப்படையாக நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம், கால்சியம் உள்ள அளவையும் கணக்கிட்டு NPK தத்துவம் உருவானது. இதை உருவாக்கிய லீபெக் வயல்களில் சோதனை செய்தார். இந்த என்.பி.கே. கலவையுடன் சிறிது சுண்ணாம்பையும் (ஜிப்சம்) சேர்த்து மண்ணில் வழங்கிய போது நல்ல விளைச்சல் கிட்டியது. லீபெக் உண்மையில் ஒரு வெடிகுண்டு விஞ்ஞானி. இவர் கண்டுபிடிப்புகளை சூப்பர் பாஸ்பேட், பென்சீன், ஆலிக்கலி போன்றவை வெடிகுண்டுக்குரிய தாதுஉப்புகள் ஆகும். அவை போர்க்கப்பல்களில் வெடிகுண்டு வீசப் பயன்பட்டன. அதே வெடி உப்புகள் விவசாயத்திலும் பயன்பட லீபெக் காரணமானார்.

மண்ணுக்கு இயற்கை உரமே தேவை இல்லை என்றும் மேற்படி ரசாயன உரங்களே போதும் என்று போதித்த லிபெக்கை வெடிமருந்து நிறுவனங்கள் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடிய காலகட்டம் முதல் உலகப் போருக்கு முற்பட்டது. முதல் உலகப்போர் தொடங்கிய காலம் 1914. விவசாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்திய போது பசுமை மிகுதியால் பூச்சி பூசணத் தாக்குதல் அதிகமாயிற்று. அவற்றைக் கட்டுப்படுத்த உயிர்கொல்லிகள் பூச்சிமருந்துகளாகப் பயனாயிற்று. முதல் உலகப் போருக்கு முன்பே மண் விஷமாகிவிட்டது.

உலகில் முதல் முறையாக விவசாயத்தில் ரசாயன உரம் – பூச்சி மருந்து உபயோகத்தால் மண்ணும் மனிதர்களின் வாழ்விடங்களும் விஷமாவதை எச்சரித்த விஞ்ஞானி டாக்டர் அலக்சிஸ் கேர்ரல் (Dr. Alexis Carrel). இவர் எழுதிய மனிதன் – ஒரு புதிர் (Man – the unknown) என்ற நூலுக்கு நோபல் பரிசு 1912ஆம் ஆண்டு கிடைத்தது. மனிதன் தன்னுடைய வாழ்விடத்தை மாசுபடுத்துவதில் பன்றியை விட மோசமானவன் என்று அந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷமாக்கப்பட்ட மண்ணிலிருந்து விளையும் உணவு நோயை ஏற்படுத்தும் என்று கூறிய கேர்ரல் மண்ணில் இயற்கையாக உள்ள தாதுஉப்புக்களே மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிர்மங்களை காப்பாற்றும் என்றும் சிந்தட்டிக் (செயற்கை) உரங்கள் வழங்கும் உப்புகள் உயிர்மங்களை நோயுறச் செய்வதுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர் இயக்கங்களை அழித்து மண், காற்று, உணவு, எல்லாவற்றையும் மாசாக்குவதாக எச்சரித்தார்.

அடுத்தபடியாக டாக்டர் ஜோசப் வீயிஸ்மேன் (Dr. Joseph Weissman) நீண்டகால ஆராய்ச்சிக்குப்பின் திடுக்கிடும் உண்மையை வெளியிட்டார். முற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை. மாற்று இதயம், மாற்றுச் சிறுநீரகம், புற்றுநோய், பைபாஸ் சர்ஜரி ஆகியவற்றுக்கெல்லாம் உரிய மருத்துவக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்குத்தான் பில்லியன் பில்லியன் டாலராகப் பணம் செலவாகிறது என்று ஆதாரத்துடன் வரைந்துள்ளார். முதல் முறையாக 1910-இல்தான் ரத்தக்குழாய் வெடித்து இதய நோயால் மனிதன் இறந்த விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இன்று இதய நோய் இல்லாத மனிதனைக் காண்பதே அரிது. சுமார் 70 சதவீதமக்கள் இதயநோயால் இறக்கின்றனர். முற்காலத்தில் புற்றுநோய் அபூர்வம். இன்று உலகில் 5 சதவிகித மக்களுக்குப் புற்றுநோய் உள்ளது. சர்க்கரை நோய் சுமார் 50 சதவீத மக்களுக்கு உள்ளது. இதற்கெல்லாம் ரசாயன விவசாயமே காரணம்.

மேலை நாடுகளில் 19ம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின், நீரைப் பருகும் மரபு இருந்தது. இந்தியாவில் 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை குடிநீர் விஷமாகவில்லை. தொழில் வளர்ச்சி – தொழிற்சாலைகளின் கழிவுகள் – நகர வளர்ச்சிக் கழிவுகள் எல்லாம் ஆறுகளில் கலந்து கடலில் கலக்கின்றன. தொழிற்சாலைக் கழிவுகளால் நிலமும் நீரும் விஷமாகி அந்த விஷம் தாவரங்கள் வழியே மனிதனையும் கால் நடைகளையும் நோயாளியாக்கிய விஷயம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்துறை விஞ்ஞானிகள் எடுத்துக்காட்டிவிட்டனர். மேலைநாடுகளில் ஏற்பட்ட விழிப்புணர்வு இந்தியாவில் 100 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக DDT (Dichloro – Diphenyl – Trichloro – ethane) விஷம் குறித்து மிகவும் காலம் கடந்துதான் இந்தியாவில் உணர்ந்து தடைசெய்தனர். டி.டி.ட்டி விஷம் பற்றிய விழிப்புணர்வை முதலில் உணர்த்தியவர் டாக்டர் வீயீஸ்மேன். இவற்றைப் பயிர்களின் மீது தெளித்தனர். குறிப்பாகத் தீவனங்கள் தெளித்த டி.டி.ட்டி விஷம் மாடுகளில் எஞ்சி அவற்றின் மடிகள் வழியே பாலில் கலந்து அப்பாலை அருந்திய தாய்மார்களின் முலைப்பால் விஷமானது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் 99 சதவீதத் தாய்மார்களின் முலைப்பாலில் டி.டிட்டி விஷம் உள்ளது கண்டறியப்பட்டது. எனினும் டி.டிட்டி விஷம் பற்றிய விரிவான செய்திகளை அறிய ராச்செல் கார்சன் அம்மையாரின் மெளன வசந்தம் (Silent Spring) என்ற நூல் மூலம் அறியலாம். அமெரிக்காவில் டி.டி.ட்டிஐத் தடை செய்ய வேண்டிய நெருக்கடியை கார்சன் ஏற்படுத்தினார். டி.டிட்டி விஷத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஸ்விட்ஜர்லாந்தைச் சேர்ந்த பால் ம்யூலர் (Paul Muller) ஆவார். இவர் ஸ்விட்சர்லாந்தைச் சார்ந்தவர். 1874-ல் இக் கொடிய விஷத்தை இவர் கண்டுபிடித்தாலும் கூட, 1939-இல்தான் பயிர்களில் தெளித்து புழு பூச்சிகள் மடிவதை விவசாயிகள் கண்டறிந்தனர். மரணவிளைவு அறியப்படாமல் விவசாயத்தில் இந்தவிஷம் பூச்சிமருந்தாக மிக வெற்றிகரமாகக் செயல்பட்டதைப் பாராட்டி பால் ம்யூலரின் டி.டி.ட்டி கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றின் விசித்திரங்களுக்கு எல்லையே இல்லை. மண் விஷமானதை எடுத்துக் காட்டிய டாக்டர் அலெக்சிஸ் கேர்ரலுக்கும் நோபல் பரிசு. மண்ணை விஷமாக்கிய பால் ம்யூலருக்கும் நோபல் பரிசு அதுபோலவே வெடிமருந்துக்கும் பயன்பட்ட ஜெர்மனிய ரசாயன நிறுவனங்களுக்கு அமெரிக்க முதலீடு பெறப்பட்டது. ஐ.ஜி. ஃபார்பென் (I.G.Farben)1925-இல் மாபெரும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து பின்னர் ஹிட்லரின் சோவியத்-போலந்து படையெடுப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உதவியது. நியூ ஜெர்சி ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி வழங்கிய பெட்ரால் உதவியில் ஜெர்மானிய டாங்குகள் சோவியத்துக்குள் நுழைந்தன.

ஜெர்மனிடம் சரணாகதியடைந்த பிணைக்கைதிகளை அடிமைகளாக்கி ஐ.ஜி.ஃபார்பனுக்கு ஹிட்லர் வழங்கினார். அப்படிப்பட்ட அடிமைகளின் உதவியுடன் ஹிட்லரின் உத்தரவுப்படி ஆஷ்விட்சில் (Ausch Witz) இருந்த மரண முகாம்களில் பல லட்சக்கணக்கான யூதர்கள் மீது ஃபார்பன் அமோனியா விஷவாயுவைச் செலுத்திக் கொன்றார். ஜெர்மானிய ரசாயன விஞ்ஞான நுட்பங்கள் எல்லாம் இரண்டாவது உலகப் போர் சமயம் அமெரிக்காவை அடைந்து ஏராளமான ரசாயன கம்பெனிகள் – அதாவது வெடிகுண்டு நிறுவனங்கள் லாபத்தில் கொழித்தன. மக்களின் வரிப்பணம் எல்லாம் அமோனியா-நைட்ரஜன் வெடிகுண்டுகள் – சுமார் 10 லட்சம் டன் எடையுள்ளவை ஜெர்மனி மீது போடப்பட்டன. பெர்லின் தரைமட்டமானது. உலகப்போர் சமயம் இப்படியாக அமெரிக்காவில் வளர்ந்த 18 மாபெரும் அமோனியா வெடிமருந்து நிறுவனங்களில் டூபாண்ட், டெள, குறிப்பிடத்தக்கவை. போர் நின்றாலும் வெடி உப்புகள் தீரவில்லை. அவையெல்லாம் ரசாயன உரங்களாக மாறி விளைநிலங்களில் கொட்டப்பட்டன. மண்ணை மாசாக்கும் இந்தப் பாவிகளை ஏசு மன்னிப்பாரா என்று தெரியவில்லை.

ரசாயனங்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிலிருந்து எதிர்ப்புகளைத் தெரிவித்தவித்தவர்களின் இருவர் முக்கியமானவர்கள். முதலாவதாக டாக்டர் மக்காரிசன் (Dr. Mccarison) இம்பீரியல் இந்திய அரசில் ஊட்டச்சத்து ஆய்வுத்தலைவராகவும் பின்னர் கூனூரில் இருந்த லூயி பாஸ்டர் நிறுவனத் தலைவராகவும் விளங்கியவர். இவர் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் இந்தியாவில் பணிபுரிந்துள்ளார். இவர் பழங்குடி மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்தவர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் ஹுன்சாங் பழங்குடிகள் திடகாத்திரத்துடனும் நோயின்றியும் வாழும் ரகசியங்களைக் கண்டுபிடித்தார். அவர்களுக்குக் குடல் நோய் வருவதில்லை. தினம் 100 மைல் நடக்கக் கூடியவர்கள். சராசரி ஆயுள் 100 வயதுக்கு மேல் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை நஞ்சில்லாத – ரசாயனம் கலக்காத உணவு என்று புரிந்து கொண்டார். அவர்களின் விவசாயம் பற்றியும் அவர்கள் உண்ணும் காய்கறிகள் – கீரைகள், பருகும் நீர் எல்லாம் தாதுஉப்புக்கள் மிகுந்து இருந்தன என அறிந்தார். இமயத்துப பனி நீரின் தூய்மையைப் புரிந்து கொண்டார். வயிற்றுப் போக்கும் குடல் நோய்களும் தவறான உணவும் என்ற தலைப்பில் Faulty Food in Relation to Gastro Intestinal Disorders என்ற ஆய்வுரையை பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் படித்தார். இவருடைய கருத்து, வளமான வாழ்வுக்குத் தக்க அளவு ரசாயன ஊட்டங்களை ஏற்க வேண்டும் என்ற லீபெக்கின் கருத்தை உடைத்தெறிந்தது. ரசாயன ஊட்டங்கள் நோய்களை ஏற்படுத்தும் என்று மக்காரிசனைப் போல் பல நாடுகளில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகங்கள் எச்சரித்தன. அதனையும் மீறி மண்ணில் ரசாயனங்கள் கொட்டப்பட்டது. இது பற்றாமல் அறுவடை செய்த தானியங்களைப் பக்குவப்படுத்து வதிலும், பக்குவப்படுத்தியதைக் கெடாமல் பாதுகாக்கும் வழியிலும் ரசாயனங்கள், நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலை நாடுகள் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு மேலும் மேலும் ஊக்கமளித்ததுடன் ரசாயன விபரீதங்கள் பற்றிப் பேசிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஒரு சிலர் மீது சட்டம் பாய்ந்தது. மேலை நாடுகளில் பசுமைப்புரட்சி ஏற்படும் முன்பே ரசாயனப் புரட்சி ஏற்பட்டு ரசாயன உரங்களும் பூச்சிமருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்து இயற்கை விவசாயம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் இயற்கை விவசாயம் பாதுகாப்பாக இருந்ததைப் பற்றிய குறிப்பை ஆல்பர்ட் ஹாவார்ட் மூலம் அறியலாம். லீபெக்கின் ரசாயனத் தத்துவத்தை இந்தியாவில் எதிர்க்க இரண்டாவது நபர் இவர்

ஆல்பர்ட் ஹோவார்ட் (Albert Howord) உண்மையில் இயற்கை விவசாயத்தின் தந்தை என்று போற்றப்பட வேண்டியவர், ஜப்பானிய காந்தி என்று போற்றப்படும் புக்கோக்காவை விட ஹாவார்டு வயதில் மூத்தவர் மட்டுமல்ல. பசுமைப்புரட்சிக்கு முன்பே அறிமுகமான ரசாயன விவசாயத்தை முழுமூச்சுடன் எதிர்த்தவர். மேலைநாடுகளில் ரசாயான விவசாயம் அறிமுகமான காலகட்டத்தில் இவர் கண்ட இந்தியாவில் இவர் எழுதிவைத்துள்ள குறிப்பின்படி மேலை நாடுகளில் ரசாயன விவசாயத்தில் எடுக்கப்பட்ட விளைச்சலை விட இந்திய இயற்கை விவசாயத்தில் எடுக்கப்படும் விளைச்சல் கூடுதலாயிருந்து.

இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த கர்சான் பிரபு இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தவும், புசாவில் ஒரு ஆராய்ச்சிக்கு நிறுவனம் தொடங்கவும் தகுதியான நபர் ஒருவரை அனுப்பும்படி பிரிட்டனில் உள்ள ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிக்கல்ச்சருக்கு விண்ணப்பித்தார். 1906-ஆம் ஆண்டு அந்நிறுவனம் மேற்கத்தியத் தீவில் பணிபுரிந்து வந்த ஹாவார்டை கர்சன் பிரபுவிடம் அனுப்பி வைத்தது. தில்லிக்கு அருகில் உள்ள புசாவில் ஆய்வுக்கூடத்துடன் 75 ஏக்கர் நிலமும் ஹாவார்டின் ஆராய்ச்சிக்குக் கிடைத்தது. இந்தியாவில் பணிபுரிய வந்த ஹாவார்டு இந்திய விவசாயம் நேர்த்தியுடன் நிகழ்வதைக் கண்டு வியந்தார். 1940-இல் இவர் வெளியிட்ட “வேளாண் உயில்” (The Agricultural Testament) என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“பூச்சி பூசண நோய்களுக்கு இந்திய விவசாயிகள் விஷமான பூச்சி-பூசண மருந்துகளைத் தெளிப்பதில்லை. ரசாயன உரங்களை இடுவதில்லை. நோயியல் நிபுணர், பூச்சி-பூசண இயல் நிபுணர், வேதியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர், விவசாய நிபுணர் ஆகியோரின் உதவியில்லாமல் உயர்ந்த பட்ச மகசூலை இந்திய விவசாயிகள் எடுப்பது வியப்பாகவும் மலைப்பாகவும் உள்ளது. ரசாயன உதவியில்லாமல் பயிர்களை ஆரோக்கியமாக வளர்க்கும் உழவியல் நுட்பங்களை இந்தியர்களிடமிருந்து கற்க விரும்பினேன். இயற்கை விவசாயத்தில் இந்திய விவசாயிகளின் நுட்பங்கள் அவர்களின் ரத்தத்தில் ஊறிப் போயிருந்தன. இந்திய விவசாயிகளுக்கு ரசாயன போதகராக அனுப்பப்பட்ட நான் இந்திய விவசாயிகளின் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்ளை இங்கிலாந்துக்குக் கொண்டு செல்ல விரும்பினேன்……”

ஹாவார்டு 100 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ள விஷயம் இன்று குரூரமான நகைச்சுவையாகத் தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஒருவர் எழுதி பத்திரப்படுத்தியிராவிட்டால் நமது பாரம்பர்யத்தின் உழவியல் பெருமையை உலகம் அறிய வாய்ப்பு இல்லை. இன்று நாம் நூற்றுக்கு நூறு ரசாயன விவசாயமல்லவா செய்கிறோம். ஹாவார்டு மூலம் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இயற்கை உழவியல் நுட்பம் காரணமாக மேலைநாடுகளில் 5 முதல் 10 சதவீத விளைநிலமாவது காப்பாற்றப்பட்டுள்ளது.

உணவு உற்பத்திக்கு அடிப்படை விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண், மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது ரசாயனப் பொருள் இல்லை. மண் உயிருள்ளது. மண் உயிரோட்டம் உள்ளது. நுண்ணுயிர்கள் நிரம்பியது. அந்த நுண்ணுயிரிகள் நலமாயிருந்தால் மண் ஆரோக்கியமாயிருக்கும். ஆரோக்கியமான மண்ணிலிருந்து விளையும் உணவும் ஆரோக்கியமானது. விவசாயத்தின் முதல்பணி மண்ணில் இயற்கையான மக்குப் பொருள் – அதாவது ஹுமஸை உருவாக்குவதுதான் என்று கூறிய ஹாவார்டை பிரிட்டிஷ் அரசு விட்டுவைத்ததா? இவருடைய இயற்கை விவசாய ஆராய்ச்சியை புசாவில் நிகழ்த்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளானார்.

மண்வளத்திற்கும் மகசூலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து ரசாயனமற்ற உழவியல் நுட்பத்தில் சிகரத்தைத் தொடுவதுதான் ஹாவார்டின் இலட்சியம். இதை நிரூபிக்க தன் நண்பர்களிடமிருந்து நிதிதிரட்டி இந்தூரில் பயிர்த்தொழில் நிறுவனம் The Institue of Plant and Industry தொடங்கினார். புசாவில் அவருடைய அரசு வேலை பறிபோனாலும் இந்தூரில் காட்டன் கமிட்டி அவரை அழைத்துக் கொண்டு மத்திய இந்தியாவில் பருத்தி உற்பத்தியை உயர்த்தும் ஆலோசனைகளை வழங்க பணித்தது. ஹாவார்டின் ஆராய்ச்சிக்கு இந்தூர் மகராஜா 100 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இதன் காரணமாக தன்னுடைய கண்டுபிடிப்பை இந்தூர் வழிக் கரிம மக்கு உற்பத்தி என்று பெயர் சூட்டினர். ஆங்கிலத்தில் Indore Process of HUMAS production ஆகும். இந்தூர் கம்போஸ்டிங் என்றும் அழைக்கப்பட்டது. ஏழு வருட ஆராய்ச்சியில் மகசூலை உயர்த்தும் இந்தூர் வழிக் கரிம உற்பத்தியின் கண்டுபிடிப்பு எவ்வாறு இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிலும் அறிமுகமாகி மேலைநாடுகளில் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்ட விவரங்களையும், ஹாவார்டுடன் தொடர்புள்ள உயிர் மண் விஞ்ஞானிகள் பற்றியும், இந்தூர் கரிம உற்பத்தி அல்லது இந்தூர் கம்போஸ்டிங் பற்றியும் அடுத்த இதழில் பரிசீலிப்போம்.

[தொடரும்]