கவிதைகள்

cc
விருந்து
நகரக் கோப்பையினுள்
தளும்பாமல் நிறையுமிருள்.
சர்க்கரை கட்டியென
வீழுமோர் வாகனம்.
‘சுவை என்பது,
இப்படி சமமாக கரைவது’ என,
காற்று சொல்லிச் சொல்லி சுழற்ற,
வீணாகியது தேநீர்.
வற்றும் குளமென
இனி விடியும்,
உயிர்கள் துடிக்கும்.
கூர்நகங்கள் விரித்திறங்கும்,
பசித்திருந்த பறவை.
-ஆதி கேசவன்.
சுதந்திரத்தின் முடிச்சு

fk

பொய் குற்றம் சாட்டப்பட்டு
பின்
மீண்டு வருபவன்
தன் உலகத்தின் சாவியை
அவர்களிடம் பறிகொடுத்துவிட்டே நகர்கிறான்
யாருமற்ற தெருக்களில் நடக்கையில்
பதுங்கிச்செல்வதான உடல் மொழி
அவன் விரும்பாமலேயே வந்து சேர்கிறது
காணாமல் போகும் “ஒன்று”
அதன் வாசனையை
அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது
தெளிந்த தனது கைகளை
மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்
அவன் வீட்டிற்குக் கதவுகளோ ஜன்னல்களோ
இனி தேவை இல்லை – அது மேலும்
அவனைப் பலவீனப்படுத்தக்கூடும்
அவனது சுதந்திரத்தின் முடிச்சு
மேலும் இறுகியபடியே இருக்கிறது
ஒரு குற்றவாளி
ஒரு போதும்
இத்தகைய பிரச்சனைகளைச் சந்திப்பதே இல்லை.
சுஜாதா செல்வராஜ்