நான் எப்போதும் எனது தம்பி பெயரையும் என் மகன் பெயரையும் குழப்பிக் கொள்வேன் இவனை அவன் என்றும் அவனை இவன் என்றும் அழைப்பேன். ஏனிப்படி /எப்படி குழப்பிக் கொள்கிறேன் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது
என் மனதில் இதுபோல நிறைய உணர்வுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றி சிக்கிக் கிடக்கின்றன. அல்லது விழித்திருக்கும் புத்தியின் கண்ணுக்குப் புலப்படாத எதோ ஒரு தர்க்கத்தில் அவை கோர்க்கப் பட்டுக் கிடக்கின்றன.
என் பையன் பிறந்து ஒரு வருடம் இருக்கும். அப்போதுதான் எனக்கு அவன் மீது ஒரு அன்பும் ஒட்டுதலும் உருவாகத் தொடங்கி இருந்தது . பிறந்த அன்றைக்கு மாமியார் ஒன்றரை முழத்துக்கு ஒரு பெரிய துவாலையில் அவனைச் சுற்றிக் ஒண்டு வந்து காண்பித்தபோது எனக்கு சற்று அருவெறுப்பாகக் கூட இருந்தது. மாமியாரின் சிரிப்பைக் கண்டு எரிச்சலாக வந்தது எதோ இவரது சாதனை என்பது போல இளிக்கிறாரே ?
அதன்பிறகு மூன்று மாதங்கள் பயல் இரவு பகல் என்றில்லாமல் வீல் வில் என்று வில்வண்டி வைத்து எனத் தூக்கத்தைக் கெடுத்தான். முதல் பார்வையில் எனக்கு அவன் ஒரு மனிதக் குழந்தை மாதிரியே படவில்லை. நான் பார்த்த ufo படங்களில் வரும் பெரிய கண் சிறிய உதடு வேற்றுக் கிரகவாசிகளைப் போல இருந்தான். ஒருவேளை எனது குழந்தை மாற்றப் பட்டுவிட்டதோ என்று கூட சந்தேகம் வந்துவிட்டது. நான் படித்த புத்தகங்களில் இதுமாதிரி நிகழ்கிறது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை என்று சொல்கிறார்கள். அமெரிக்கர்களில் பாதிபேர் இப்படி மாற்றப் பட்டவர்கள்தான் என்று பட் ஹாப்கின்சும் ரூத் மாண்ட்கோமேரியும் சொல்கிறார்கள். ஆனால் நல்லவேளையாக -பாலைவனத்தின் நடுவே புதருக்குள் தீப்பிழம்பாய் எறிந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் -அந்த மூன்றுமாத சோதனை ஓட்டம் முடிந்ததும் -பயல் திருந்தி ஒரு அழகான மனிதக் குழந்தை ஆகிவிட்டான் . என்னை அடையாளம் கண்டுகொள்ளவும் சிரிக்கவும் கூடச் செய்தான். தூக்கியதுமே முன்பு அழுகிறவன் தனது சிறிய கரங்களால் இப்போது என்னை இறுகப் பற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டான். முதன்முதலாய் அவன் என் தோள் மீதே தூங்கி விட்டபோது ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரோ ரிசர்வ் பேங்க் நிதியை முழுவதும் என்னை நம்பிக் கொடுத்து விட்டது போலிருந்தது.
ஒருநாள் நானும் எனது தம்பியும் எங்கயோ மாலையில் கிளம்பி போய்க் கொண்டிருந்தோம் . அவன் சாயங்காலம் ஆனதும் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலுக்கோ அனுமார் கோயிலுக்கோ போவான் . அல்லது சுத்தமல்லியில் ஒரு ராகவேந்திர மடம் உண்டு. அங்கு போவான் நான் புகைக்கப் போவேன். சாயங்காலம் ஆனால் அவனுக்குப் பக்தி அதிகம் தேவைப்படும்.எனக்குப் பங்க் .அப்போது சாலையில் எங்களைத் தாண்டி ஒரு பையன் மிக வேகமாக சைக்கிளில் ஏறக்குறைய எங்களை இடிப்பது போல போனான். அவனது அம்மா யாருடனாவது ஓடிப் போய் விட்டாளா என்ன ?என்று நான் சபித்துக் கொண்டிருந்த வேளையிலேயே ஒரு பெரிய சத்தம் கேட்டது.
தெருவின் திருப்பத்தில் படுத்திருந்த தாய் நாய் அதன் குட்டி இரண்டு மீதிலும் அவன் வண்டியை ஏற்றி விட்டான் . தாய் நாய் ஓவென்று கத்தியபடி அவனை விரட்டிபோனது. குட்டி நாய் வலியில் துடித்துக் கொண்டிருக்க நான் ஐயோ என்று கத்தியபடியே அந்த நாயைத் தூக்கிக் கொண்டு அணைத்துக் கொண்டேன் . அதன் கண்ணில் இருந்து ஒரு பெரிய துளி கண்ணீர் வழிந்து என் தொடையில் விழுந்தது. நான் கதறி அழுவது போல் உணர்ந்தேன்
சைக்கிளைத் துரத்திப் போன தாய் நாய் திரும்ப ஓடிவந்தது. அடிபட்ட தனது குட்டியையும் அதைத் தூக்கி வைத்து அழுது கொண்டிருக்கும் என்னையும் பார்த்தது. குட்டியைத் தன் நாவால் நக்கியது. பிறகு என்னையும் நன்றியுடன் புறங்கையில் நக்கியது.
குட்டிக்கு பெரிய அடியில்லை. அதிர்ச்சிதான். உலகம் இவ்வளவு கொடுமையானதா ?என்பது போல அதன் கண்கள் கேட்டன. முதல் அதிர்ச்சி போலிருக்கிறது. சீக்கிரமே பழகிவிடும். அவர்களை விட்டுவிட்டு நடந்தபோதுதான் எனது தம்பி சொன்னான். ”நீ அந்த நாய்க் குட்டியைத் தூக்கும்போது திரும்பத் திரும்ப உன் பையன் பேரைச் சொல்லிகிட்டே இருந்தே”.
நான் ஒருநிமிடம் உறைந்து அங்கேயே நின்றேன்.
”அந்த குட்டியோட கண்ணு சிவா கண்ணு மாதிரியே இருந்தது. எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரித்தான் கண் இருக்குது.இல்லே?”.
”உனக்குப் பைத்தியம்”.
நான் மறுக்கவில்லை. பைத்தியமாய் இருப்பது எங்கள் ரத்தத்தில் ஓடுகிறது. பின்னாளில் தம்பி தன் சமநிலையை இழந்தபோது அவனைப் பரிசோதித்த டாக்டர் அப்படித்தான் சொன்னார்.4
”செத்துப்போன அப்பா உங்கள் தம்பி மூலமாக உங்களைத் தொட முயல்கிறார் . அவரது பைத்தியத்தின் கணக்கு இன்னமும் தீர்க்கப்படாமல் நிற்கிறது அல்லவா ?”.
ஊசி போட்டதுமே அவனுக்கு மிகுமயக்கம் உடனே வந்துவிட்டது. ஆட்டோவில் தூக்கிவைத்து வீட்டுக்குக் கொண்டுவந்தோம். அப்படியானால் அந்தக் கணக்கை நான் விடுவிக்காத வரை அது எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமா ?அப்பாவுக்கு எதனால் பித்து பிடித்தது ?
”உங்க அப்பாரு சாவு இயல்பான சாவு இல்லே தம்பி ”என்றார் ,ஆறுமுகநேரியில் ஒரு புகழ்பெற்ற ஜோசியர். அவருக்கு ஒரு கண் இல்லை. லோக்கல் டிவியில் கூட வந்து பலன் சொல்வார். ”சிங்க ராசி நேயர்களே .உங்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம். சாக்கிரதையாக இருக்க வேண்டும் …. ”நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
அவர் சொன்னார் .”துர்மரணம் அது.அவருக்கு ஆயுசு இன்னமும் இருக்கு”.
”அப்படின்னா ?””.
”உங்க சொந்தக் காரங்க யாரோ வச்ச ஏவல் அது. அதும் கொடுமை தாங்காம செத்துப் போயிட்டாரு . பைத்தியம் எல்லாம் இல்லே. பில்லி சூனியம்.”
”யார்?”‘என்று நான் பலவீனமாய்க் கேட்டேன். அம்மாவின் ஏற்கனவே இடுங்கிய கண்கள் இன்னும் அச்சத்தில் இடுங்கி ”அம்மா தாயே கோமதி இதுவென்ன சோதனை ?”
வீட்டிற்கு வந்துபடுத்துக் கிடந்த தம்பியிடம் சொன்னேன்
”நம்ம அப்பாவுக்கு யாரோ பில்லி சூனியம் வச்சூட்டங்களாம்.நாம் கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் எங்கு போயின ?””
அவன் ”எல்லாம் கர்மா ”என்றான்
சில சொற்களை சிலரிடம் அறிமுகப் படுத்துவது ஆபத்து. அவர்களிடம் அது விஷம் போல வேலை செய்கிறது. இந்தக் கர்மா என்ற சொல்லை அவன் எனது புத்தகங்களில் இருந்துதான் கொண்டான். அப்பா இறந்தபிறகு அவன் வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டிலேயே கிடக்க ஆரம்பித்தான் . ஏறக்குறைய நான்கு வருடங்கள் . பின்னால் மனச் சோர்வு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது அவன் அப்போது தீவிர மனச் சோர்வில் இருந்திருக்கிறான் என்பது புரிந்தது.
ஆனால் ஏனிப்படிக் கிடக்கிறாய் ?ஏதாவது வேலைக்குப் போகலாமே ?என்ற போதெல்லாம் எல்லாம் கர்மத்தின்படி நடக்கும் என்று சொல்லிவிடுவான் . ”எனக்கு இப்ப அஷ்டமாதிபதி தசை நடக்குது. இப்ப என்ன பண்ணினாலும் கதைக்கு ஆவாது ”. இந்த ஜோதிட இழவுகளையும் அவன் எனது புத்தகங்களில் இருந்துதான் கற்றுக் கொண்டான் . ஈரச் சுவரைக் கரையான் அரிப்பது போல அவை அவன் மனதை அரித்திருக்கின்றன. சுவர் ஈரமாய் இருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.
ஏவல் பில்லி சூனியம் எடுப்பது எளிதான கார்யம் அல்ல. நிறைய செலவாகும். எங்கள் அப்பாவுக்கு யார் அதைச் செய்திருக்க முடியும் ? எல்லோருக்கும் ஒரு சித்தியின் மீதுதான் சந்தேகமாகி இருந்தது. ஒரு சூனியக் காரியின் எல்லா அங்க குண லட்சணங்களும் அவரிடம் இருந்தன அவர் கொஞ்சநாள் பெந்தகொஸ்தே மதத்தில் சேர்ந்து பல மொழிகளில் பிசாசுகளை விரட்டிக் கொண்டிருந்தவர். அவருடைய முன்பல் நீட்டம் காரணமாக அவர் எந்த மொழி பேசினாலும் – நிச்சயமாக உங்கள் மீது எச்சில் தெறிக்கும் – ஆகவே பிசாசுகளுடன் நிறைய பரிச்சயம் இருந்திருக்க வாய்ப்புண்டுஎன்று சந்தேகப்பட்டோம்.
ஆனால் லோக்கல் மந்திரவாதி முதல் சென்னை மவுண்ட் ரோடில் ஹை டெக் ஆபிஸ் வைத்துக் கொண்டு பேய் விரட்டும் ஆவியுலக ஆராய்ச்சியாளர் வரைக்கும் முயற்சித்தும் அப்பாவைப் பற்றி இருந்த பேய் ஓடவில்லை
எல்லோருக்கும்அவர் அவர் பெயர் பொரித்த சக்கரம் தனித்தனியே இருக்கிறது என்று அப்பா சொல்வார். சக்கரம் என்றால் மலையாளத்தில் பணம் .அப்பாவின் ஆச்சிக்கு சுசீந்திரம் . ஆகவே மலையாளக் கலப்பு தவிர்க்க முடியாது.
”சிலநேரம் அது வேறு ஒருத்தர் பையில் இருக்கிறது. உடையார் விளி கேட்டதும் அது எழுந்து ”சேட்டா இதோ வந்துட்டேன் ”என்று எழுந்து உருண்டுஉருண்டு போய் அவர்கள் பையில் நங் என்று விழுந்துவிடும் .”என்பார்
எங்கள் பையில் இருந்த சக்கரங்கள் யாவும் உருண்டு உருண்டு ஓடி அவர்கள் பையில் விழுந்தன ”எல்லாம் கர்மா. கர்மப் பணம் . போகட்டும்’, என்றான் தம்பி.
ஆனால் ஒவ்வொரு சக்கரமும் எங்கள் குருதியில் நனைத்த சக்கரம் அல்லவா ?
ஆனால் இப்படி சொன்ன தம்பிக்கும் இதே சொல் சொல்லப்பட்டது.
வேப்பமரங்களின் நிழலில் ஸ்கூட்டியை உதைத்துக் கிளம்பு முன்பு குதிரைவால் கொண்டையும் மேல்நோக்கி மூச்சு வாங்கும் கிளிமூக்கு மாங்காய் மார்புக்களுமாய் இருந்த டாக்டரை வழி மறித்துக் கேட்டபோது ”உங்க தம்பிக்குவந்திருப்பது ”acute schizo disorder .ரெண்டு மாசமா அதோட வாழ்ந்திட்டிருக்கார் ஆழமாப் பதிஞ்சிருக்கு. ஆபிசுக்குப் போகாம ஒருவாரம் ரூம்லேயே இருந்திருக்கார். இரண்டு நாள் சாப்பிடவே இல்லை ”
நான் திரும்பி ”என்னடா ?டாக்டர் ஏதோ சொல்றாளே ?
அவன் ”ஒன்னுமில்லையே என்ன சொன்னா ?”
“ஒரு மாசம் ஆபிசுக்குப் போகலியா?”
”………””
”ஏன் ?”‘
”அங்கெ அவன் இருக்கானே ?
”யாரு?
”உன்னி கிருஷ்ணன்”
”அது யாரு ?”
”அவன்தான் உன்னிகிருஷ்ணப் பணிக்கர். மலையாள மந்திரவாதி .அவங்க அவனைக் கூட்டி வந்திருக்காங்க “
”எவங்க ?”
”அந்தப் பொண்ணோட ஆளுங்க ”
”எந்தப் பொண்ணு ?”
”அதான் அந்தப் பொண்ணு .ஆபிஸ்ல ரெட்டை சடை போட்டுட்டு ”
”ஆபிசுக்கு ரெட்டை சடை போட்டுட்டு இன்னமும் பொண்ணுங்க வருதா ?”
”………….”
”இரண்டு நாளா சாப்பிடக் கூட இல்லியாமே ?”
”ஹோட்டல்லயும் அவன் இருக்கான்”
”யாரு?”
அவன் ‘சலித்து”அதான் அந்த உன்னி கிருஷ்ணன். ஹோட்டல் பையன் கிட்டே அவன் சோத்துல விசத்தை கலந்திடுன்னு காசு கொடுக்கறான். அவங்களுக்கு நான் அந்தப் பொண்ணை லவ் பண்றது பிடிக்கலை. அவங்க கவுண்டர்.ரொம்ப சாதி பார்ப்பாங்க ”
”எந்தப் பொண்ணு?”‘
”அதன் அந்த இரட்டை சடை கவுண்டர்ப் பொண்ணு.”
‘அந்தப் பொண்ணும் உன்னை லவ் பண்ணுதா? ”
”அப்படித்தான் நினைக்கறேன் ”
”சொல்லுச்சா”
”அது சொல்லலை. ராகவேந்திரர் வந்து சொன்னார் ”
”ராகவேந்திரரா ?”
”ஆமா.இரண்டு தடவை என் சொப்பனத்தில வந்து சொன்னார் ”
”அப்படியா ?அந்தப் பொண்ணுகிட்ட பேசலாமா ?அந்த ஹோட்டலில போய்க் கேட்கலாமா ?”‘
அவன் மிகுந்த பதற்றம் அடைந்து,
”முடியாது.அவங்க ரொம்ப பெரிய ஆளுங்க. இந்த ஊர் முழுக்க அவங்க ஆளுங்கதான். வந்தா உன்னையும் கொன்னுடுவாங்க. இந்த டாக்டர் கூட அவங்க ஆள்தாம் .உள்ளே விஷ ஊசி வச்சிருக்கு. எப்படியும் என்னைக் கொன்னுடுவாங்க ”
”அப்படியா ராகவேந்திரர் உன்னைக் காப்பாத்த மாட்டாரா ?”
”முடியாது என் கர்மா இப்படி இருக்கறப்போ அவரு என்ன செய்ய முடியும்?”. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது . என் மனம் விம்மியது . அவனை அணைத்துக் கொள்ள நினைத்தேன்.ஆனால் எங்கள் வீட்டில் யாருமே யாரையும் தொட்டுப் பேசுவதில்லை.அணைத்துக் கொள்வது பழக்கமே இல்லை.அப்பா இறப்பதற்கு முந்தினநாள் கடுமையாக கால் வலிக்கிறது .மருந்து கொடு என்று கதறிக் கொண்டிருந்தார் .மருந்து கொடுத்தாலும் கால் வலி போகவில்லை.”நான் வேணா கால் அமுக்கிவிடட்டுமா ?”‘என்றதும் பதறி ”வேணாம் வேணாம் .இன்னொரு ஊசி போடச் சொல்லு ”என்றார்.ஸ்பரிசம் எங்களுக்கு எப்போதுமே பதற்றத்தைத் தந்திருக்கிறது.
”டேய் சிவா என்னடா இது ?” என்று விம்மினேன்.
அவன் சிரித்தான்
”மறுபடி என் பெயரையும் உன் பையன் பேரையும் குழப்பிட்டே ”.
பிறகு நினைத்துக் கொண்டார் போல சட்டை பையில் இருந்து ஒரு ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தான். ”இந்தா வச்சிக்க உன் பையனுக்குப் பொம்மை வாங்கிக் கொடு . நான் அவனுக்கு ஒண்ணுமே வாங்கிக் கொடுக்கலை இப்ப வேணாம் நான் செத்தப்புறம் .”
”பிரமை ரொம்ப ஆழமா இருக்கு. எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கணும் னு டாக்டர் சொல்லிட்டுப் போயிருக்காங்க ”என்று நர்ஸ் சொன்னதும் பதறி அந்தம்மாவிடம் மீண்டும் போய் விழுந்தோம்.
”டாக்டர் யார் இந்த உன்னி கிருஷ்ணன் ?”
‘அவர் பயத்தோட உருவம். அதுக்கு அவர் கொடுத்திருக்கிற பேர் அப்படி ஒருத்தர் இல்லை ‘
”அந்தப் பொண்ணு ?”
”அவரோட ஆசையோட உருவம். அதுக்கு அவர் கொடுத்த பேர். அப்படி ஒரு பொண்ணு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். அது மேல இவரு ஆசைப்பட்டிருக்கலாம் ”என்ற டாக்டர். அன்றைக்குத்தான் தலைக்கு ஷாம்பூ போட்டிருப்பாள் போல. தலை நுரைத்து பொங்கி முகத்தில் பறந்தது.
”ரொம்ப ஆழமாப் போயிடுச்சு. இரண்டு மாசமா இந்தப் பயத்தோட வாழ்ந்திருக்கார்..அவரும் அந்தப் பொண்ணும் லவ் பண்றது மாதிரியும். அதைத் தெரிஞ்சிகிட்டு அவளோட சொந்தக்காரங்க தனக்கு பில்லி சூனியம் வச்சிட்ட மாதிரியும் தன்னைத் தொடர்ச்சியா கண்காணிக்கற மாதிரியும் நினைச்சிப் பயந்து போய் இருக்கார். ஒரே அறையில ஒரு பெரிய காட்டு மிருகத்தோட வாழற மாதிரி ,இப்ப அவருக்குள்ள இரண்டு பேர் இருக்காங்க. அதாவது இரண்டு மெமரி. ஒண்ணு அவரு. இன்னொன்னு அந்த உன்னி கிருஷ்ணன் .உன்னி கிருஷ்ணனை எரேஸ் பண்ணனும் . அது ஒரு பிழை நினைவு. ஆனா அது ஒரு பிழை நினைவுன்னு அவருக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது it is never real for you but it is ever so true for him .மருந்து கொடுக்கணும். ஆனா அது மட்டும் போதாது. அது மெதுவாத்தான் வேலை செய்யும். உடனடி ரிலீபுக்கு ஷாக் கொடுக்கணும்”.
விஷயம் தெரிந்த உறவினர், “ஷாக் மட்டும் கொடுத்துடாதீங்க பையன் திரும்பிக் கிடைக்க மாட்டான். இப்படித்தான் எங்க ஊர் சாட்டப் பத்துல … ”, என்று அந்த சாமி கொண்டாடியிடம் அழைத்துப் போனார் நான் ஏற்கனவே அப்பா விசயத்தில் இந்தச் சடங்குகளில் எல்லாம் நுழைந்து பார்த்தாயிற்று என்று சொல்லிப் பார்த்தேன் . ”நீங்க சரியான ஆள்கிட்டே போகலை. இந்தம்மா காளிகிட்டே நேர்ல பேசுவாங்க. பெரிய பெரிய மந்திரி எல்லாம் இவங்க கிட்டே வராங்க ”.
நள்ளிரவில் ஒரு சிறிய அறையில் அகல் விளக்குகள் மட்டுமே மினுங்கும் வெளிச்சத்தில் மஞ்சள் சேலை மஞ்சள் ஜாக்கட்டில் பளீரென்று மஞ்சள் பூசிய முகத்தோடு எஸ் ஜானகி மாதிரி என்னா என்று விழித்துப் பார்க்கும் வண்டிச் சக்கரப் பொட்டு -சீவல் சேர்த்த வெத்திலை போட்டுச் சிவந்த நாக்குடன் அந்த அம்மாவே காளியின் ப்ரோடோ டைப் போல இருந்தாள் . மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பனை. அந்தக் கண்கள் மட்டும் எதோ ஒரு போதையில் அமிழ்ந்தது போலிருந்தன . நீரில் மிதக்கும் விளக்குகள் போல..அவள் இதழ்களே மீண்டும் கண்கள் ஆனது போல .
நீளமான லிங்கம் போன்ற ஒரு குத்துக் கல்லின் மீது ரத்தப் பொட்டின் கீழே அகன்று விரிந்த இரண்டு பொன்மணிக் கண்கள்தான் காளி. பக்கத்தில் ஐந்தடிக்கு ஒரு பெரிய கொடுவாள். கேரளத்தில் வெளிச்சப்பாடுகள் துள்ளித் துள்ளி சன்னதம் கொள்ளும்போது கையில் அதிர்வது போன்ற ஒரு வாள் .
எல்லோரும் வட்டத்தில் அமர்ந்தோம். சிறிய அறை என்பதால் மிக நெருக்கமாக. சாமியாடியின் தொடை என்னோடு உரசிற்று . ஒரு வாழைத் தண்டைத் தொட்டாற் போல எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது அவள் தொடை. ! அவளது அக்குள் ஈரத்திலிருந்து அவளது உடல் வாசனை சமீபத்தில் மூத்திரம் பெய்த மண் போல எழுந்து அங்கிருந்த தூப வாசனை எல்லாம் மீறி அறை எங்கும் பரவி மூச்சடைத்தது.
நான் காளியின் கொடுவாளை எண்ணிக் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
அதே போல மனதைத் தாழ்த்திக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் ?
குதிரைகளின் முகத்தில் மாட்டப் பட்டிருக்கும் blinkers போல்
blink
”என்னாச்சு மக்களே ?”‘
சாமியாடி புன்னகையுடன் கேட்டாள்
blink
”பேடிக்க வேணா மக்களே. அம்மை கிட்ட கேக்கறேன்”என்று கண் மூடிக் கொண்டாள்.
சன்னதத்தில் கண் மூடி மூச்சு வாங்கும்போது தொட்டில் போல அவள் மார்புகள் மேலே போய் போய் வந்தன .அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற இச்சை அபாரமாய் எழுந்தது.பப்பாய்ங் .
blink
அவள் சட்டென்று வீரிட்டு ”ஐயோ குஞ்சு வல்லாதொரு வாதையின் பிடியிலானு ”அறை முழுக்க மீட்டிவிட்ட வாத்தியம் போல அதிர்ந்தது ”அம்மே இப்ப இந்த முறியில உண்டு.அவ பறையறது -இன்னும் ஒரு திவசம் லேட் ஆயிருந்தாலும் உங்க கொச்சு நிங்களுக்கு கிட்டியிருக்காம்பாடில்லா”
நாங்கள் உறைந்து கிடந்தோம்.
அச்சம் ஒரு முட்டை உடைந்து மஞ்சள் கரு படவுவது போல அறையில் கந்தக வீச்சதொடு பரவியது.
blink
நான் அச்சத்துடன் அறையைச் சுற்றிப் பார்த்தேன்.
இந்த அறையில் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இன்னொரு ஜோடி விழிகளாய் காளியும் இருக்கிறாள் !
நான் படித்த தாந்திரீகப் புத்தகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.
blink
எனக்குள் ஒரு காட்சி
தன் தலையில் தானே வெட்டி ரத்தம் குடிக்கும் சின்ன மஸ்தா -தசமஹா வித்யா எனப்படும் சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்று-காலடியில் எழும்பிய லிங்கத்தோடு கிடக்கும் சிவனின் மீது ஏறி அமர்கிறாள் . சிவனின் குறி ஒரு பெரிய அடி குழாய்ப் பம்பு போல அசைய அசைய காளியும் மேலும் கீழுமாய் அசைகிறாள். ஒரு தங்க முட்டை அவளுள் உருவாகிறது. அதைநோக்கி வெள்ளி அம்புகள் சரமழை என்று விரைகின்றன.
blink
நான் சோர்ந்து போனேன்.
என்ன இது ? இந்த இடத்திலும் வருமா காமம் ?ஒருவேளை இது காமம்தானா ?வேறு ஏதாவதா ?ஒருவேளை அச்சத்தைக் காமத்தால் பதிலீடு செய்து கொள்கிறேனா ?
காமம் இல்லை கருமம்
எனது கருமவினைதான் என்னை இதுபோன்ற புனிதத் தருணங்களிலும் ஆபாசமாய் எண்ண வைக்கிறதா ?
எனக்குள் ஹிஹி என்று ஒரு இளிப்புக் குரல் கேட்டது. சாத்தானின் குரல். கலகக் குரல். எல்லா புனிதங்களையும் எதிர்த்துக் கலகம் செய் என்று கிசுகிசுத்தது ”புனிதங்கள் உன்னைக் காப்பாற்றாத போது நீ ஏன் இன்னும் அவற்றுக்கு அடிமையாக இருக்கிறாய் ?”
நான் அதனிடம் பேசினேன்
‘கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று சொல்லி இருக்கிறதே”
”ஆனால் காமமே அறிவின் கனி என்று மெய்யாலுமே நான் உனக்குச் சொல்கிறேன் ”
என் மூளையின் ஒரு பக்தியில் வெளிச்சமும் மறுபகுதியில் இருட்டும் ஒன்றுடன் ஒன்று விடாது போரிட்டுக் கொண்டே இருக்கின்றன. இருட்டு ஒரு பிசின் போல தார் போல அடைத்திருக்கிறது
the sacred and the profane இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கின்றன.
அமிர்தமும் மலமும் போல.
ஆனால் மலமே எப்போதும் ஜெயிக்கிறது.
ஆன்மா விருப்போடுதான் இருக்கிறது. ஆனால் சதையே ஜெயிக்கிறது.
எனக்கு எப்போதுமே இது நிகழ்ந்திருக்கிறது. கோயிலில் சாமி கும்பிடும்முன்பு தான் எனக்குள் மிக ஆபாசமான எண்ணங்கள் கிளம்பி வரும்.பீறிட்டு வாந்தி போல.ஒரு முக்கியமான எழுத்தாளரை ஒருதடவை நேரில் சந்திக்கப் போனேன்.நான் மிகவும் மதிக்கும் ஒரு எழுத்தாளர். நீண்டநாட்கள் திட்டமிட்டு கனவுகண்ட ஒரு சந்திப்பு. அனால் அவரை நேரில் சந்தித்தபோது நான் மிக மோசமாக நடந்து கொண்டேன் . அவரை எவ்வளவு எரிச்சல் படுத்த முடியுமோ அவ்வளவு எரிச்சல் படுத்தினேன் . அவருக்கு எதிரான சொற்கள் என் அகத்தில் எழுந்துகொண்டே இருந்தன. அவர் கிட்டத்தட்ட என்னை வீட்டை விட்டுத் துரத்தினார். நான் ஏனப்படிச் செய்தேன் என்று நெடுநாட்கள் எனக்குப் புரியவே இல்லை.
நான் பற்களை கடகடவென்று கடித்துக் கொண்டேன்
இது என் விஷயம் இல்லை. என் தம்பி விஷயம்.. அவன் வாழ்க்கை. எனக்காக அவனைத் தண்டித்து விடாதே காளி.
blink
ஆனால் காளிகளும் பகவதிகளும் மாடன்களும் defunct ஆன நிரலிகள் இப்போது புதிய நிரலிகள் வந்துவிட்டன. தொரசின், லித்தியம் இன்னும் பிற அவற்றை தொழுவதே சாலவும் நன்று. பேயோட்டிகள் சாட்டையால் அடிப்பதைக் கூடக் குறுக்கி மிக நாகரிகமாக எலெக்ட்ரிக் ஷாக் தெரபி என்றாக்கிவிட்டார்கள்.
நீ ஏன் பழைய நிரலிகளைக் கும்பிடுகிறாய் ?
ஆனால் அப்பாவுக்கு எப்போதும் ஒரே தெய்வம்தான். சங்கரன்கோயில் கோமதி.(ஆனால் அவரும் லித்தியத்தைக் கும்பிடும் காலம் வந்ததே )
ஒவ்வொரு ஒடுக்கு வெள்ளியும் ஒவ்வொரு ஆடித்தபசும் அங்கு போகாது இருக்க மாட்டார்.
உன்னை அல்லால் எனக்கு வேறோர் தெய்வம் இல்லை என்றிருந்தவர்
ஆனால் அப்படிப்பட்ட பக்திக்கார பாசக்கார அப்பாவை போடா மயிரே என்று கைவிட்டுவிட்டது சங்கரன்கோவில் கோமதி. எல்லா பரிகாரங்களும் முனை முறிந்து விட்ட பிறகு திடீரென்று ஒருநாள் தோன்றி அவரை வண்டியில் வைத்து அவருக்குப் பிரியமான கோயிலில் அவருக்குப் பிரியமான தெய்வத்தின் முன் அமரவைத்தோம். அவள் முன்பிருந்த ஸ்ரீ சக்கரக் குழியில் உட்காரவைத்தோம் அது ஆதிசங்கரர் கைகொண்டு வரைந்ததாமே …
அதில் அமரவைத்து எல்லோரையும் விலக்கி ”சார் ஒருநிமிஷம் அப்பா சேவிச்சுக்கட்டும் .ரொம்ப உடம்பு முடியலை ”
எல்லாரும் கருணையுடன் விலகி நிற்க சக்கரக் குழியில் அமர்ந்த அப்பாவுக்கு எதிரே அரையில் தங்கப்பாவாடை அணிந்து நின்றிருந்த கோமதியை யாரென்றே தெரியவில்லை கோமதிக்கும் அப்பாவை தெரியவில்லை.கோன் ஹை தும் ? என்றுவிட்டது.
இனி இவனால் பயனில்லை என்று துப்பிவிட்டதோ என்னவோ ?
திராவிட சிசு தன் சிசுக் கரங்களால் கருங்கல் தரையில் வரைந்து அழுத்திய சக்கரக் குழியில் அமர்ந்தும் தான் பல பிறவிகளாய் வழிபாட்டுக் கொண்டிருந்த வேணுவன பகவதியை விட்டுவிட்டு அப்பா தனது மூளையில் குடிபுகுந்து கொண்டு விட்டிருந்த மிருகத்தைத்தான் வழிபட்டுக் கொண்டிருந்தார் அல்லது அதுதான் அவரது உண்மையான தெய்வமோ என்னவோ ?
phantoms in the brain may mutate into Gods in the brain மிஸ்டர் வில்லியனூர் ராமச்சந்திரன்
மலையாளச் சாமியாரிணி தம்பிக்கு ஒரு தாயத்து கட்டி விட்டாள் ”இதை எப்பவும் கழட்டாதே குஞ்சே .இதுதான் உன்னோட காவல்”. எனக்கு நம்பிக்கையே இல்லை. சங்கரன் கோயில் கோமதியை விட பெரிய தவசியா நீ என்று எனக்குள் இருந்த உன்னி கிருஷ்ணன் பேசினான்.
”எல்லாம் கர்மா”என்று உறவினர் சொன்னார்.
எனது இலக்கிய நண்பனோ ”உன் தம்பியைக் குஞ்சை அவிழ்க்கச் சொல் முதலில் அதுதான் அவனது பிரச்சினையே ” என்றான் ”He is suffering from chronic sexual deprivation”.
அன்றிரவு எனக்கொரு கனவு வந்தது ஒரு ராட்சதத் தாயத்து ஒரு பெரிய கோட்டை போல அதன் கயிற்றுடன் என்னைச் சுற்றிக் கிடக்கிறது. நான் அதனுள் கிடந்தது கரமைதுனம் செய்து கொண்டிருக்கிறேன்
தாயத்தின் மறுபுறம் கோட்டை வாசலில் ஏசுநாதர் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார். தாயத்து ஒரு தீச்சுவர் போல அவரை உள்ளே விடாமல் தடுத்து வைத்திருக்கிறது . வழியில் காவல் நிற்கும் காளியிடம் ‘-அவளுக்கு ஆடையே இல்லை- அவளது நாக்கு மட்டுமே வளர்ந்து அவள் மார் மீதும் பெண்மை மீது ஒரு பாம்பு போல அலைகிறது-அது அந்தப் புழுக்கத்திலும் உடல் முழுக்க அங்கி போர்த்தி இருக்கும் essene. ஏசுவுக்கு அவ்வளவு போதுமானதாக இல்லை போலும்-தனது ஆட்டுக் கண்களை விலக்கிக் கொண்டு-‘நான் சாரைப் பார்க்கவேண்டும் அவசரமாக. ”
”முடியாது.சார் முக்கியமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் . நீண்ட நாட்கள் கழித்துக் கர மைதுனம் செய்துகொண்டிருக்கிறார். யாரையும் உள்ளே விடக் கூடாது என்று உத்திரவு..அது கிடக்கட்டும். இந்தப் புழுக்கத்திலும் இவ்வளவு டிரஸ் எதுக்கு ?கழற்றிப் போட்டுவிட்டு விடுதலையாக இரும்”
அவர் கேட்காமல் ”எல்லா துவாரங்களிலும் மணல் புகுந்துவிடுமே ?”என்றார் .பிறகு ”அவசரமாக பார்க்கவேண்டும்.உயிர் போகும் விஷயம்”
”இதுவும் உயிர்போகும் விசயம்தான் ”காளி உள்ளே திரும்பிப்பார்த்து ”இதோ இப்போது போய் விடும் ”என்று அட்டகாசமாகச் சிரிக்கிறாள்.பிறகு ”மணல்?இங்கு ஏது மணல்? பாலும் தேனும் விந்தும் சுரோணிதமும் பொங்கி ஓடுகிற பூமி இது. இங்கு ஏது மணல் ?”
ஏசு அதிர்ந்து அவளை அடையாளம் கண்டுகொண்டு ”இஷ்டார்! உன்னை நான் கொன்று விடவில்லையா ? நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயா ?, என்று கேட்க காளி சட்டென்று தனது தலையை வெட்டி பீறிடும் ரத்தத்தை ஒன்றரை லிட்டர் கொக்கோ கோல்லா பாட்டிலில் பிடித்து ஏசு நாதரிடம் நீட்டி ”பாலைவனம் எல்லாம் கடந்து வந்திருப்பீர்கள்.தாகமாய் இருக்கும். குடியும் ”என்று நீட்டுகிறாள்.
நானே ஜீவ ஊற்று என்று சொன்ன ஏசுநாதர் பின்னங் கால் பிடரியில் பட ஓடுகிறார் .யாரு கிட்ட !என்று சிரிக்கிறாள் காளி .
கடைசியில் நான் தம்பியை அவனது உன்னி கிருஷ்ணனிடமே விட்டுவிட்டு என் வாழ்வுக்கு திரும்பினேன். கடைசியில் அந்த உன்னிகிருஷ்ணனை தம்பி எங்கிருந்து கண்டுபிடித்தான் என்பதையும் கூடக் கண்டுபிடித்தேன் . அதையும் புத்தகங்களில் இருந்துதான் எடுத்துக் கொண்டிருக்கிறான். அப்போது பத்திரிகைகளில் உன்னி கிருஷ்ணப் பணிக்கர் என்ற கேரளத் தாந்திரியைப் பற்றி ஒரே பரபரபரப்பாக இருந்தது. அந்த தகவல் மட்டும் எப்படியோ ஒரு விஷ விதை போல அவன் அகத்தில் விழுந்து விட்டிருக்கிறது. சுவர் ஈரமாக இருந்த நேரம் .
ஒருபக்கம் மாத்திரைகள் மறுபக்கம் உன்னி கிருஷ்ணன். மறுபக்கம் கொங்கைகள் குடை சாயும் கொற்றவை .அவள் கொடுத்த தாயத்து. ”பயப்படாமப் போயிட்டு வாங்க உங்க தம்பியை நல்லாப் பார்த்திகிடுதோம் ”, என்று உன்னிகிருஷ்ணனும் கொற்றவையும் சேர்ந்து சொன்னார்கள். ”அந்த எழவெடுத்த குளிசைகளை மட்டும் தொட வேணாம்னு அவன் கிட்டே சொல்லி வைங்க “.
ஆனால் பாருங்கள் . கர்மா பாதியில் எதையும் விடுவதில்லை. .நான் எழுதும் கதைகள் போலவோ செய்யும் காதல்கள் போலவோ அல்ல அது. ஊருக்குத் திரும்பி வந்த அன்றைக்கு இரவு நானிருந்த வாடகை வீட்டின் வீட்டு சொந்தக் காரியின் மூத்த பையன் விபத்தில் இறந்து போனான் . பெண் நண்பியிடம் செல்போனில் பேசிக் கொண்டே திருவட்டார் பாலத்தில் வண்டி வந்துகொண்டிருந்தபோது போன் தவறி அதைப் பிடிக்கும் அவசரத்தில் குனிந்து வண்டி கவிழ்ந்து தலையில் கல் பாலத்தில் தலை மோதிப் பிளந்து உள்ளே ரத்தம் ஜாம் மாதிரி பரவி மார்த்தாண்டத்தில் ஸ்கேன் எடுத்துப் பார்த்து ‘திருவந்திரம் கொண்டுபோங்க .இங்கே முடியாது’என்று சொல்லி பேய் பேய் என்று ஒலிக்கும் சைரன் கத்த கூட்டிப் போன ஆம்புலன்ஸ் வேனில் நானும் இருந்தேன் . ஒரு இழுப்பு மட்டுமே இருந்து கொண்டிருந்தது . யார் கூப்பிட்டாலும் பதில் இல்லை.சார் நீங்க கூப்பிட்டுப் பாருங்க எங்க நான் கூப்பிட்டதும் திடீரென்று ஹூம் ஒரு பெருமூச்சு விட்டான் பாருங்கள் எனக்கு அடி வயிற்றைக் கலக்கிவிட்டது . அதன்பிறகு அவன் எந்த சத்தத்துக்கும் அனங்கவே இல்லை. மூன்றுநாள் ஐசியுவில் இருந்து சர்ஜரி நிச்சயிக்கப் பட்ட முந்தினதினம் செத்துப் போனான். விதவைத்தாய்க்கு ஒரே பையன் அவனை புதைத்துவிட்டுவந்த அன்று -இங்கே எல்லாம்ஹிந்துக்களும் கூட வீட்டுக்குள்ளேயே ஒரு இடம் ஒதுக்கிப் புதைத்துவிடுவார்கள் -அந்த பெரிய வீட்டுள் நான் மட்டும் ஒத்தையில் அந்த பெரிய தோட்டம் சூழ்ந்த கேரளபாணி ஓட்டுவீட்டில் இருந்தேன். அந்த அம்மாவை தற்காலிகமாய் வேறு இடத்தில் மாற்றிக் கொண்டு போய் வைத்திருந்தார்கள்.
அது மிகத் தவறான ஒரு முடிவு . என்னை அவர்கள் அப்படித் தனியே விட்டிருக்கக் கூடாது. அதிலும் அப்பா,தம்பி என்று இரண்டு முன் அனுபவங்கள் இருக்கையில் . அன்றிரவு அந்தப் பையன் மண்ணைத் தோண்டிக் கொண்டு கிளம்பி மேலே வந்துவிட்டான் . எழுந்து நேராய்ப் போய் அந்தம்மாவின் போர்சனைப் போய்த் தட்டி ”அம்மே அம்மே -வல்லாது விசக்குன்னு அம்மே-சீக்கிரம் சாப்பாடு இடு ”என்று ரொம்ப நேரம் தட்டிக் கொண்டிருந்தான்
நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படுத்திருந்தேன்.
சற்றுநேரம் அமைதி.
பிறகு என் வீட்டுக் கதவும் தட்டப் பட்டது.
”சார் சார் கதவைத் திறங்க நான் உள்ளே வரணும் ‘.வெளியே ரொம்ப தணுக்குது ”.
நான் ”உன்னி இங்கே யாரும் இல்லே. உங்க அம்மா தாத்தா வீட்டுல இருக்கு அங்கெ போ”என்று கத்தினேன்.
ஒரு கணம் அமைதி.
”இல்லே இது என் வீடு இங்கேதான் வருவேன் ”.
”இல்லே நீ இங்கே வர முடியாதுஉன்னி .நீ செத்துப் போயிட்டே “.
இறந்துபோன அந்தப் பையனின் பெயரும் உன்னிகிருஷ்ணன் தான் என்பதில் உள்ள செய்தி என்னைத் தாக்கிற்று.
மீண்டும் அமைதி.
பிறகு மீண்டும்கதவு பலமாகத் தட்டப் பட்டது.
”அதெல்லாம் கிடையாது நாங்க இங்கேதான் வருவோம் ”/.
இம்முறை இன்னொரு குரலும் சேர்ந்திருந்தது. அந்த வீட்டின் முன்னால் பிள்ளையைக் கடித்துத் தின்னும் நீலியின் கோயில் ஒன்று உண்டு. நான் அந்தக் கோயிலுக்குப்போவதே இல்லை . ஒரு ஆரமாவது வங்கிக் கொடுங்க’ என்று எனது மனைவி சொன்னாள் . நான் சிறுதெய்வ வழபாடு தவறு என்று உறுதியாக மறுத்துவிட்டேன். அதன் குரல் தான் அது என்று கண்டு கொண்டேன். அதனால் அதற்கு என் மீது கோபம் உண்டு. ஐயோ சிறு தெய்வங்கள் எல்லாம் உயிர் பெற்று வருகையில் இந்தப் பெரும் தெய்வங்கள் எங்கு போயின ?
கதவு மீண்டும் ஆங்காரமாய் தட்டப்பட்டது.
இனி எப்போது வேண்டும் ஆனாலும் கதவு உடைந்து விழக் கூடும்.
ஆனால்
அவர்கள் தட்டுவது எனது வீட்டுக் கதவை மட்டும் அல்ல.
என் மூளையின் ஒரு பகுதியின் கதவை என்று உணர்ந்தேன்.
அமிர்தத்தை மலம் பெருகி தின்ன முயற்சிக்கிறது.
வெளிச்சத்தை ஒரு புழு போல இருட்டு விழுங்க முயற்சிக்கிறது.
கதவு அதிர்ந்து கொண்டே இருந்தது இன்னும் பலமாக
எனக்கு மெல்ல நீரலையில் தெளிந்து வருவது போல என் தம்பியின் முகம் நினைவில் வந்தது என் மகனின் பெயரோடு
பிறகு அந்த நாய்க் குட்டியின் அடிபட்ட முகம்
அதன் பெயர் என்ன ?
என் தம்பியின் பெயர் என்ன ?
எனது மகனின் பெயர் என்ன ?
எல்லா பெயர்களும் நதிக்குள் விழுந்து மறையும் காசுகள் போலத் தொலைந்து மறைவது போலக் கரைவதை நான் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
என் பெயர் மட்டுமே மிச்சம் இருந்தது.
உன்னி கிருஷ்ணன் பெயரும்.
எனக்கு சட்டென்று அந்தக் கணத்தில் எல்லாம் புரிந்தது.
எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
நான் அழிந்து முற்றிலும் உன்னிகிருஷ்ணனாக மாறிவிடுவது.
முற்றிலும் மலமாக.
பிளவுதான் பிரச்சினை.
அப்பாவின் பைத்தியக் கணக்கும் தீர்க்கப் பட்டுவிடும்.
அந்தச் சங்கிலி என்னோடு முடிந்துவிடும்.
என் மகன் அவன் பெயரோடவே இங்கு இருப்பான்.
ஒற்றை ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
ஆம்.
எந்த ஒற்றையானால் என்ன?
நான் எழுந்து கதவைத் திறந்தேன்