அல் அல்வரெஸ் – ஒரு நேர்காணல்

அல் அல்vaரெஸ் [Al Alvarez], ஒரு விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் கவிஞர். அவருடைய பல புத்தகங்களில், தற்கொலைப் பற்றிய அவரது pondlifeஆய்வான ‘The Savage God’, ஸில்வியா ப்ளாத் மற்று டெட் ஹ்யூஸின் உறவைப் பற்றி பேசுவதுடன் அவரது சொந்த தற்கொலை முயற்ச்சியைப் பற்றியும் பேசுவது; “The Biggest Game in Town”, போக்கர் விளையாட்டு மீது அவருக்கிருந்த அதீத ஆர்வத்தைப் பற்றியும், “Feeding the Rat” மலையேற்றத்தைப் பற்றியும், ‘Where Did It All Go Right?’, சுய சரிதத்தையும் பேசுவன. வெகு சமீபத்தில் வெளிவந்த அவரது “குள வாழ்கை: ஒரு நீச்சல்காரனின் நாட்குறிப்புகள்” (Pondlife: A Swimmer’s Journal), ஹாம்ப்ஸ்டெட் குளத்திற்கு அவரது தினசரி வருகையைப் பற்றிய ஒரு தெளிவான வேடிக்கையான பதிவாகும்; மேலும், அந்த குளிர்ந்த நீர் எப்படி, குறுகிய காலத்திற்கேனும், வயதாவதை நிறுத்துகிறது என்பதையும் பேசுகிறது.

இங்கு, Granta இதழின் டெட் ஹாட்கின்ஸனுடன் (Ted Hodgkinson)், எப்படி ஒரு மாணவர் வசித்துப் படிக்கும் பள்ளி, அவருக்கு தெரியாதவனவற்றை எதிர்கொள்ளும் சுவாரஸ்யத்தை அளித்தது, ஏன் பெக்கெட் முதுமையைப் பற்றி சொன்னவை தவறு, எப்படி காலமும், நாட்குறிப்பு எழுதுவதும் ஸில்வியா ப்ளாத் மற்றும் டெட் ஹ்யூஸ் பற்றிய அவரது பார்வையை மாற்றின எனப் பேசுகிறார்.

al_alvarez

டெட்: இலண்டனைப் போன்ற பெரு நகரத்தில் கூட நாம் இயற்கையிடமிருந்து, அப்படிப் பார்த்தால் ஒரு நீர் காகத்திடமிருந்து கூட, அத்தனைத் தொலைவில் இல்லை என்பதன் பெரிய நினைவூட்டல் தங்கள் புத்தகம். இந்த அருகாமை தான் தங்கள் புத்துணர்வுக்குக் காரணமாகிறது என்று சொல்வீர்களா?

அல்: நீர்க் காகங்கள், அருகாமையிலதான் இருக்கின்றன என்று தெரிந்திருப்பது இதமாக இருக்கிறது, இல்லையா? ஆம், நிச்சயமாக இயற்கை புத்துணர்வின் காரணி தான். அது இல்லாமல் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. நான் ஹாம்ப்ஸ்டெட்-இல் வாழ்கிறேன். எனவே, இயற்கை என் சாலை முக்கில் தான் இருக்கிறது. இந்த இடம் சுவாரஸ்யமான மனிதர்களால் நிறைந்தது. மேலும், என் கதவிற்கு வெளியே பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. குளத்தினருகே, என்னுடன் பொழுதைக் கழிக்கும் கதாபாத்திரங்கள், வாழ்க்கையின், கதைகளின் ஊற்றாக இருக்கிறார்கள்.

டெட்: உங்கள் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டிருப்பது போல், நீங்கள் தங்கிப் படித்த பள்ளியில், உறையும் நீரில் குளிக்க வற்புறுத்தப்பட்டது தான், உங்களுக்கு குளிர் நீர் மீதான பிடித்தத்தை உருவாக்கியது என்று சொல்லலாமா?

அல்: ஆம், ஔண்டிலில்[Oundle], எனக்குக் குளிர் நீர்க் குளியல் எடுக்கவே பிடித்திருந்தது, அங்கு அவர்கள் எதிர்பாராத ஒன்றை செய்த போதிலும். அதாவது, தண்ணீரை முதல் நாளே திறந்துவிடுவது. அது நீரை இன்னும் குளிரச் செய்துவிடும். அதுவும், இது குளிர்காலத்தின் மத்தியில்,கோடையிலும் கூட. ஜன்னல்கள் எப்போதும் திறந்திருக்கும். நாங்கள் எப்படி அதிலெல்லாம் பிழைத்தோம் என்று தெரியவில்லை, ஆனால் பிழைத்துவிட்டோம்! ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் நானும் என் மனைவியும் அங்கு சென்றபோது, ஒரு ஆடம்பர விடுதிக்கு போவது போல இருந்தது.

டெட்: குளிர் நீர் சிகிச்சை என்றே சொல்லக்கூடிய இது, உங்களுக்கு அதீதங்களையும் அறியப்படாதவற்றையும் எதிர்கொள்ளும் ஆசையை இளமையிலிருந்தே தூண்டியதாகவும் எழுதியிருக்கிறீர்கள். மேலும், இதுவே மலையேற்றம், ‘போக்கர்’ விளையாட்டு மற்றும் கவிதையின் மீதான காதலுக்கும் இட்டுச் சென்றதாகவும் சொல்கிறீர்கள். கவிதை என்பது அறியப்படாதவற்றை எதிர்கொள்வதா?

அல்: கவிதை என்பது நிச்சயமாக அறியப்படாதவற்றை எதிர்கொள்வதுதான். கவிதையைப் பற்றிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை சரியாகப் பெறவேண்டும். எல்லாமே சரியாக வரவேண்டும். அதில் ஒரு வார்த்தை சரியில்லாமல் போனாலும், அதன் முழுமையும் தோற்றுப் போகும். அது 500 வரிகளோ, 5 வரிகளோ, அது பிரச்சினை இல்லை. சரியாக வராத அந்த வார்த்தையுடன் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். எல்லா வார்த்தைகளும் அவற்றின் சரியான இடத்தில் பொருந்தாதவரை, கவிதை முழுமையடையாது என்று நீங்கள் உணர்வீர்கள். அது ஒரு விசித்திரமான கலவை. எப்படியும், நான் கவிதை எழுதுவதை நிறுத்துவிட்டேன் என நினைக்கிறேன்.

டெட்: ஆனால், இந்த நாட்குறிப்புகளின் முக்கிய அம்சமே, நிறுத்தாமல் இருப்பது பற்றித் தான். அது முழுவதும் கவிதையும் சந்தோஷமுமாக இருக்கிறது. இதில் ஒரு அற்புதமான மரியாதை மீறல் தன்மையும் இருக்கிறது – பெக்க்கெட்-ஐ போன்ற எழுத்தாளர்களை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்.

அல்: பெக்கெட்டைப் பற்றி ஒரு விஷயம், அவர் ஒரு பிரமாதமான எழுத்தாளர், ஆனால், விஷயங்களைப் பற்றிய அதீத அக்கறையுடையவர் இல்லையா? அவரது நாடகங்களில், எல்லா அற்புதமான பேச்சற்ற நொடிகளும் இருக்கின்றன, முரண்களாக மாற்றப்படாத முரண்களும் இருக்கின்றன. இருந்தாலும், சில நேரங்களில் அவரும் தவறவிட்டிருக்கிறார். மேலும், பெக்கெட் ஒரே நேரத்தில், தவறாகவும், மிகச் சரியாகவும் ஒலிக்கக்கூடியவர்!

டெட்: உங்கள் நாட்குறிப்புகளில், சில எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் தோன்றுகிறார்கள், குறிப்பாக ஸில்வியா ப்ளாத், டெட் ஹ்யூஸ். இத்தனை காலம் கழித்து அவர்களோடு உங்கள் உறவை நினைத்துப் பார்க்கும் போது, அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை கொஞ்சமாவது மாறியிருக்கிறதா?

அல்: ஆம், மாறியிருக்கிறது. நான் சமீபத்தில் ப்ளாத்தை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் உண்மையிலேயே, மிக நுட்பமான, திறமையான கவி. நிஜத்தில், எந்த காலத்திலும் ஹ்யூஸ் இருந்ததைவிட மிகச் சிறந்த கவிஞராக ப்ளாத் உருவாகியிருக்கிறார். ஹ்யூஸ் எல்லா விருதுகளையும் வென்றார், உண்மைதான்; அவரது பெயர் கூட ‘Poet’s Corner’ இன் கற்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆம், அவர் நல்ல கவிஞர் தான், ஆனால் அந்த அளவிற்கு இல்லை. ப்ளாத் இன்னும் மேலே செல்கிறார். இது எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது, ஏனென்றால், இதைப் போல நான் முன்பு நினைத்திருக்கவில்லை. நான் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது பல ப்ளாத் ரசிகர்களை சந்தித்தேன். அவர்களில் மிகச் சிலரே ஹ்யூஸ்-ஐ வாசித்திருக்கிறார்கள். ஆனால், நான் திரும்பி வந்து, கவிஞர்கள் சதுக்கத்தில் ஹ்யூஸ் இருப்பதை பார்த்தபோது, ஒருவேளை நாம் தான் தவறாக கணித்துவிட்டோம் என்று யோசித்திருக்கிறேன். அவர்கள் முதன்முதலில் சேர்ந்தபோது, ஸில்வியா ஹ்யூஸிடம் வாசித்து காண்பிப்பாள், ஹ்யூஸ் ஸில்வியாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஸில்வியாவினுடைய முந்தைய கால கவிதைகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை, ஆனால், ஹ்யூஸை விட்டு சென்றதும், இல்லை இன்னும் சரியாக சொன்னால், ஹ்யூஸைத் தூக்கி எறிந்துவிட்டு சென்றதும் அவர் எழுதிய கவிதைகள் அசாதாராணமானவை. நினைத்துப்பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது, அவர்களிருவரும் நான் மிகவும் விரும்பிய கவிஞர்கள், ஆனால், ஒரு சமயம், அந்த கடைசி சில வருடங்களில் ஸில்வியாவிடம் ஏதோ ஒன்று மாறியது. என்ன நடந்ததென்றால், ஹ்யூஸ் தனக்கு நன்கு செய்யத் தெரிந்ததைச் செய்துகொண்டே இருந்தார், ஒரு வகை தானியங்கித்தனத்துடன், ஆனால் ஸில்வியாவிற்கு அவர் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிய அந்த ஒரு வருடம் அமைந்து வந்தது. அந்த இடத்தில், ஸில்வியா ஹ்யூஸை முந்திவிட்டார். ஸில்வியாவின் ஆரம்ப காலகட்டத்தில், அவர் மிகவும் தட்டையான கவிஞராகவே இருந்தார். நான் ஸில்வியாவின் முதல் புத்தகத்தை வாசித்தேன். சுமாராக இருந்தது. அவர் அங்கிருந்து எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று நினைக்க வைத்தது. ஆனால், அந்த கடைசிக் கவிதைகள், அவரது வாழ்க்கையின் கடைசி வருடம், அது ஒரு அசாதாரண மாற்றம். என்ன நடந்ததென்றால், மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், ஹ்யூஸ் ஸில்வியாவை விட்டு சென்ற போது, ஸில்வியா திடீரெனத் தனக்குள் இருந்த அந்தக் கோபத்தின் ஊற்றை உணர்ந்தார். அதை அவரால் நெருங்க முடிந்தது, அதை எழுதுவதிலும் வெற்றி கண்டார். அந்த சமயம், மற்ற எல்லாமுமே மங்கிப் போனது.

sylvia-plath-ted-hughes

ஹ்யூஸும் ஸில்வியாவும் பிரிந்த பின், என்னிடம் தான் ஸில்வியா தன் கவிதைகளைக் கொண்டு வந்தார். அக்கடைசிக் கால கவிதைகளை எல்லாம் என்னிடம் கொண்டு வந்தார். அவற்றை எனக்குச் சரியாக வாசிக்கத் தெரியும் என்று அவர் நினைத்தார். அது உண்மைதான். இப்போது நினைத்துப் பார்க்கும் போது, ஸில்வியாவோ ஹ்யூஸோ ஒரு கவிதை எழுதியதும், அதை அவர்களிருவரும் சேர்ந்து பிரித்து மேய்ந்து விட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தீவிரமான விவாதங்கள் செய்தார்கள். அவர்கள் பிரிந்ததும், ஸில்வியா என்னைப் பார்க்க வந்தார், நான் அதே தெருவில் சற்று தொலைவில் இருந்தேன். அவர் தனது கவிதைகளை சுமந்துகொண்டு வந்தார். நான் அங்கு இருந்ததே அவருக்கு ஒரு உதவியாக இருந்தது என நினைக்கிறேன். ஸில்வியாவிற்கு அது தேவையாகயிருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் குறிப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டோம். ஸில்வியாவிற்கு தெரியும் நான் ஹ்யூஸ் பக்கம் தான் என, எனக்கு அவர் கவிதைகளை பிடிக்கும் என்று. ஆனால், அந்த சமயத்தில் ஸில்வியா படைத்துக்கொண்டிருந்த கவிதைகள் அதை விட பல மடங்குகள் சிறந்தவையாக இருந்தன.

டெட்: அந்த கடைசி வருடம், ஸில்வியா எழுதியது டெட்-டுக்காகவா இல்லை, அவருக்கு எதிராகவா?

அல்: ஸில்வியா தான் கேட்கப்படுவதற்காக எழுதினார், அது தான் முக்கியமாக இருந்தது என நான் நினைக்கிறேன். அதை அவர் எழுத்தில் கொண்டுவர முயன்றார். அதை அற்புதமாகச் செய்தும் முடித்தார். அவர்கள் சேர்ந்த போது, ஹ்யூஸ் மிக மிகத் தேர்ந்தவராக இருந்தார். ஆனால், ஸில்வியா ஹ்யூஸையும் கடந்து சென்றுவிட்டார். அவர் தன் கடைசி வருடத்தில் எழுதியவை மொத்தமும் அசாதாரணமானவை. இது போன்ற கவிஞர்கள் இருக்கிறார்கள் – கீட்ஸ் போல, யேட்ஸும், ஏனென்றால் அவரும் திடீரென மாறுபவர்…

டெட்: தங்கள் நாட்குறிப்புகளில், ஷேக்ஸ்பியர் சில முறை தோன்றுகிறாரே, குறிப்பாக புதர்காட்டின் மேல் கிங்க் லியர். உங்கள் நாட்குறிப்புகள், எனக்கு  விதூஷகன்(Fool) சொல்லும் இந்த வசனத்தை நினைவு படுத்தியது : “‘It’s a naughty night for swimming nuncle!’”

அல்: எனக்கு அவ்வரி நினைவிற்கு வரவே இல்லை, அற்புதம்! விதூஷகனும் லியரும் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் அற்புதமான பாத்திரங்கள். ஷேக்ஸ்பியருக்கு அருகில் செல்லும் அளவு திறமையானவர்கள் யாருமே இல்லை என்றே சொல்லலாம். அது கிட்டத்தட்ட, அவரது நாடகங்களிலேயே சோகமானதும் கூட.

டெட்: மற்ற குள நீச்சல்காரர்களிடம் நீங்கள் அன்னியோனியமாக உணர்கிறீர்கள். அவர்களில் பலரும், முன்னாள் தடகள வீரர்கள் அல்லது தம் வாழ்வில் நிறைய இடர்களைச் சந்தித்தவர்கள். இதுபோன்ற மனிதர்களை நோக்கி உங்களை எது ஈர்க்கிறது?

அல்: அது போன்ற பல விஷயங்களை நானே செய்திருக்கிறேன் என்பதுதான். நான் நிறைய மலையேற்றங்கள் செய்திருக்கிறேன், நிறைய போக்கர் விளையாடியிருக்கிறேன். குளத்தருகே, சிரிப்புகள் நிறைய உண்டு. என்னைப் பொருத்தவரை, உங்களைச் சிரிக்க வைக்கும் எதுவும், உங்களுக்கு நல்லதுதான்.

டெட்: ஒரு இடத்தில், உறையும் நீரை ஒரு இறுக்கமான விஷயமாக, ‘கிட்டத் தட்ட உங்கள் முதல் திருமணத்தைப் போல’ என்று குறிப்பிடுகிறீர்கள்..

அல்: அட! நான் அப்படிச் சொன்னேனா? ரொம்ப சரி. என்னுடைய முதல் திருமணம், ஒரு முழுமையான துன்ப நிகழ்வு. இரண்டாவது, மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. அது அப்படித் தான் இருக்க முடியும் என நினைக்கிறேன்.

டெட்: உங்கள் வாழ்வில், இன்னும் பலவும் செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கக்கூடிய பகுதி ஒன்று இருக்கிறதா?

அல்: இன்னும் அதிகம் கவிதைகள் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆனால் நான் செய்ய முடியக்கூடிய அளவு தான் செய்ய முடியும். மொத்தத்தில், நான் ஒரு அற்புதமான வாழ்க்கையை பெற்றிருக்கிறேன். நிச்சயமாக, எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

டெட்: ஒரு இளம் எழுத்தாளருக்கு, நீங்கள் என்ன அறிவுறுத்த விரும்புகிறீர்கள்?

அல்: குதூகலமாக இருங்கள்.

டெட்: இது ஒரு துள்ளனான எழுத்தாளர் புகைப்படம், அதிக சதைப்பரப்பு தெரிய, நீங்கள் தலைகீழாக குதிப்பதற்கு சற்றே முன்பு எடுக்கப்பட்டது. ஆனால், இது வெட்டப்பட்டிருக்கிறதே! முழுப் படத்தையும் சேர்க்க நீங்கள் விரும்பவில்லையா?

அல்: சேர்க்க முடியுமானால்!

டெட்: எந்தக் கணத்தில், நீங்கள் எழுதிக்கொண்டிருந்த நாட்குறிப்புகள், நீங்கள் எழுத முனைந்திருந்த ‘வயதாவதை’ப் பற்றிய நூலாக மாறியதாக உணர்ந்தீர்கள்?

அல்: நீங்கள் அதைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அது எனது மனைவியின் யோசனை. நான் முதுமையைப் பற்றி ஒரு புத்தகம் எழுத நினைத்திருந்தேன், ஆனால் அதன்பின், சற்று உடல் நலம் குன்றிவிட்டது. அதுவே, அவளுக்கு என்னிடமிருந்து இக்காரியத்தை எடுத்துக்கொள்ள உந்துதலாக அமைந்தது என்று நினைக்கிறேன்.

டெட்: அப்படியானால், இதில் ஒரு வேரா நபகோவின் பங்கு இருக்கிறது?

அல்: ஆம், கண்டிப்பாக.

டெட்: இன்னும் அக்குளத்திற்கு அடிக்கடி செல்கிறீர்களா?

அல்: கடந்த வருடம் மிகவும் மோசமாக இருந்தது, உடல் நலக்குறைவினால். ஆனால், நான் மீண்டும் செல்ல என்னை தயார்படுத்திக்கொள்ள தான் முயற்ச்சிக்கிறேன். நான் வெளியே இருந்த இந்த முழு வருடமும் எனக்கு பைத்தியம் பிடிக்க செய்கிறது. நான் இப்போது செய்துகொண்டிருப்பது நீந்த தெரியாத பயந்தாங்கொளிகள் செய்வது போல, தண்ணீருள் மூழ்கிவிட்டு வெளி வருவது. எனக்கு இந்த நோய் நீங்கி மீண்டும் நீந்த வேண்டும்.