அம்புலி மாமாவும் செம்புலி மாமாவும்

நீங்கள் அலுவலக வேலையாகத் திருவனந்தபுரம் போய் மாட்டிக்கொண்டு ராட்சச வாழைப் பழம் தின்று பசியாறி, ராத்திரி ஹோட்டல் அறையில் தூக்கம் பிடிக்காமல் விரக்தியாக டி.வி ரிமோட்டை அமுக்குகையில், ஏஷியா நெட்டில் குலங்கராவைப் பார்த்திருப்பீர்கள்.

சந்தோஷ் ஜார்ஜ் குலங்கரா, ஊர் ஊராகப் போய்ப் பார்த்துவிட்டுத் தன் பயண அனுபவங்களை வீடியோவாகச் சுட்டு வந்து காட்டுபவர். அவர் பார்க்காத நாடில்லை, தின்னாத வாழைப் பழம் இல்லை. பூமி முழுவதையும் சுற்றி முடித்துவிட்டு, இப்போது இவர் கிளம்பியிருப்பது – விண்வெளிப் பயணம். வர்ஜின் காலாக்டிக் நிறுவனத்திடம் இரண்டு லட்சம் டாலர் கொடுத்து ராக்கெட் டிக்கெட் வாங்கியிருக்கிறார். சும்மா ஜாய் ரைடு மாதிரி ஒரு சுற்று சுற்றி வருவதற்குப் பத்து கோடி ரூபாய் !

சமீப காலம் வரை விண்வெளிப் பயணம் என்பது, காசு கொழுத்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும் என்ற நிலை இருந்தது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் துணிந்து இறங்கிக் கலக்குகிறார்கள். கோடீசுவரர் எலான் மஸ்க் போன்றவர்கள் அமைத்த ராக்கெட் நிறுவனங்கள் நம் கிங்ஃபிஷர் விமானக் கம்பெனியைவிட லாபகரமாக இயங்குகின்றன. நாசாவிடம் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள் சுமந்து செல்வதற்கு, சரக்கு லாரி போல லோடு அடித்துத் தருகிறர்கள்.

மேற்குறிப்பிட்ட வர்ஜின் காலக்டிக் நிறுவனத்தை ஆரம்பித்தவர் ஒரு பிரிட்டிஷ் பில்லியனாதிபதி – ரிச்சர்ட் ப்ரான்ஸன். அவருடைய அடுத்த மெகா ப்ராஜெக்ட்: செவ்வாய் கிரகத்துக்கு (மார்ஸ்) மனிதர்களை உயிரோடு அனுப்புவது ! இதெல்லாம் சாத்தியமா என்று யாரும் சந்தேகக் கேள்வி எழுப்புவதற்குள், போட்டி போட்டுக்கொண்டு நான்கு கம்பெனிகள் தத்தமது மார்ஸ் ப்ராஜெக்டை ஆரம்பித்துவிட்டன. சுறுசுறுப்பாக காசு வசூல் நடக்கிறது. நூற்றுக் கணக்கானவர்கள் செவ்வாய்ப் பயணத்துக்குப் பதிவு செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பயணத்துக்கு எந்த மாதிரி ஆட்களைத் தேர்வு செய்வார்கள் ? ராக்கெட் விஞ்ஞானம் எல்லாம் தெரிய வேண்டுமா?

“அதெல்லாம் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். விவரமான ஆளாக இருந்தால் போதும்” என்கிறார்கள். அப்புறம் ?… “பதினெட்டு வயது நிரம்பி இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு முனைப்பு, லட்சியம் இருக்க வேண்டும். நாலு பேரோடு அனுசரித்துப் போவது மிக அவசியம். நம்பிக்கை வேண்டும், வளைந்து கொடுக்க வேண்டும். எது வந்தாலும் துவண்டு போகக் கூடாது. ஆர்வம், படைப்பூக்கம், சமயோசிதம் எல்லாம் வேண்டும். இருந்தால் வாருங்கள்” என்கிறார்கள்.

56

செவ்வாயில் போய் இறங்குவது சுலபம். இப்போதே நம்மிடம் அதற்கான தொழில்நுட்பம் இருக்கிறது. திரும்ப வருவதற்குத்தான் அதிகம் செலவாகும். செவ்வாயில் ஒரு முழு ராக்கெட் ஏவு தளம் அமைக்க வேண்டும். அதை அக்கக்காகக் கழற்றிய வடிவில் இங்கிருந்துதான் கொண்டு போக வேண்டும். அதை இயக்குவதற்கு எஞ்சினியர்கள் முதல் கண்ட்ரோல் ரூம், காண்டீன், சாம்பார் சாதம் என்று வரிசையாகத் தேவைகள் நீளும்.

இதை யோசித்து, மக்கின்ஸி போன்ற விண்வெளி வீரர்கள் ஒரு மாற்று யோசனை தெரிவித்தார்கள்: முதல் பயணத்திலேயே நிரந்தரமாகப் போய் அங்கேயே குடியேறிவிடுவது ! நாலு நாலு பேராக அனுப்பி ஒரு சிறிய காலனி அமைத்தால் போதும். அவர்கள் முயல் மாதிரி பெற்றுத் தள்ளி (அந்தப் பொட்டல் காட்டில் வேறு பொழுது போக்குகளும் கிடையாதா,..) சீக்கிரமே பத்து நூறு ஆயிரம் என்று ஜனத் தொகை பெருகிவிடும். அவர்கள் அங்கேயே கிடைப்பதை வைத்து வீடு கட்டிக்கொண்டு, ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் செடி கொடி வளர்த்துச் சாப்பிட்டு எப்படியோ காலம் தள்ளுவார்கள். அத்தியாவசியத் தேவைக்கான மருந்துகள், நுட்பமான கருவிகள் மட்டும் பூமியில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இந்த ப்ராஜெக்டுக்கு மார்ஸ் ஒன் என்று பெயர்.

முதல் குழுவில் போகிறவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. முதலில் மூச்சு விட ஆக்ஸிஜன் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு தண்ணீர் சேகரிக்க வேண்டும். அடுத்து பயிர்த் தொழில், பம்பு செட் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. இதெல்லாம் செய்யக் கருவிகள் தயாரிக்க வேண்டும். உணவு-உடை-உறையுள் மூன்றும் அங்கே கிடைப்பதை வைத்தே சமாளிக்க வேண்டுமென்றால், ஏற்பாடுகள் செய்வதற்குப் பத்து வருஷமாவது ஆகும். அதன் பிறகு காலனி அமைக்கத் தொடங்கலாம்.

மனிதர்கள் போய் இறங்குவதற்கு ஐந்தாறு வருஷம் முன்னாலேயே ரோபாட்கள் போய் அடிப்படை வசதிகள் பலவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கும். ஆளில்லாத தானியங்கி வண்டிகள் பல முறை செவ்வாய்க்குப் போயிருக்கின்றன. இப்போது கூட ‘க்யூரியாசிடி’ என்ற அமெரிக்க ரோபாட் அங்கேதான் போய் சின்னக் கையால் கல்லையும் மண்ணையும் கிளறிக்கொண்டு இருக்கிறது.

nana
க்யூரியாசிடி

சரி. இத்தனை செலவுக்கும் துட்டு எங்கிருந்துட்டு வரும் ?

“டி.வி.யில் விளம்பர ஸ்பான்சர்கள்தான் !” என்கிறார்கள் மார்ஸ் ஒன்காரர்கள். “பயணத்துக்குப் பயிற்சி எடுப்பது முதல், ஏழு மாதப் பயணம், அங்கே போய் வசிப்பது எல்லாவற்றையும் டெலிவிஷன் காமிராக்களை வைத்துப் படம் பிடிக்கப் போகிறோம். நேரடி ஒளிபரப்பாக இருபத்து நாலு மணி நேரமும் ஓடிக்கொண்டு இருக்கும். நடு நடுவே விளம்பரங்கள். அதுதான் வருமானம். இந்த மாதிரி ஒரு மகா மெகா ரியாலிட்டி ஷோ மனித வரலாற்றிலேயே நடந்தது கிடையாது !”

எனக்கு என்னவோ இதில் கொஞ்சம் தீசல் வாடை அடிக்கிறது. செவ்வாயில் முதல் முறையாக மனிதன் கால் வைக்கிறான் என்றால், ஒரு வாரம், பத்து நாள் பூமியே பார்க்கும்தான். ஆனால் பிறகு மயிலாப்பூர் ஒண்டுக் குடித்தனம் மாதிரி கீக்கிடமான கூடாரத்தில் நாலு பேர் வசிப்பதை எத்தனை நாளைக்குத்தான் கண்டு களிக்க முடியும் ? நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் சரிந்து வருமானம் சுருங்கிவிட்டால் ? இவர்கள் விண்வெளிக் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு ‘ஈமு கோழிப் பண்ணை வைத்துத் தருகிறோம்’ என்று அடுத்த பிசினஸ் ஏதாவது தொடங்கிவிடுவார்கள். ஆனால் மேலே போனவர்களின் கதி ?

மற்றொரு போட்டி ப்ராஜெக்டை ஆரம்பித்திருக்கும் எலான் மஸ்க், செவ்வாயில் 80,000 பேர் வசிக்கும் ஒரு நகரத்தையே அமைக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். அதென்ன எண்பதாயிரம் கணக்கு ? இதற்குக் குறைவான மக்கள் இருந்தால், உள்ளுக்குள்ளேயே பெண் எடுத்து, பெண் கொடுத்து இனம் பெருக்குவார்கள். சில தலைமுறைக்குப் பிறகு அவர்களுடைய ஜீன் பூல் என்கிற மரபீனிக் குளம் வற்றிப் போக ஆரம்பித்துவிடும்; வியாதிகள் பெருகும். கலாச்சார மகிமைகள் மறந்து போய், எல்லோரும் ஒரே மாதிரி ஹிந்தி பேசி சப்பாத்தி சாப்பிடுவார்கள்.

எண்பதாயிரத்துக்கு அதிகம் ஜனத்தொகை போய்விட்டால், கறுப்பு வெளுப்பு வித்தியாசங்கள் நுழைந்துவிடும். ‘நீ ஸ்க்ரூ ட்ரைவர் பிடிக்கும் அற்ப ஹார்ட்வேர் எஞ்சினியர், நாங்கள்தான் உன்னத சாப்ட்வேர் எஞ்சினியர்கள்’ என்பது போன்ற பேச்சுக்கள் புறப்படும். சீக்கிரமே ஜாதிக்கொரு சங்கம் அமைத்து வீதிக்கொரு கொடி நட்டுவிடுவார்கள்.

செவ்வாய்க் கிரகம் ஒரு பரந்த பொட்டல் காடு. தகராறு செய்யும் மாவட்ட கலெக்டர்களை டிரான்ஸ்பர் பண்ணுவது தவிர வேறு பயன் கிடையாத ஊர். கண்ணுக்கு எட்டின வரை செம்மண் பாலை வனம். ஒரு குத்துச் செடியோ மரமோ, டீக்கடையோ கூடக் கிடையாது. புழுதிப் புயல் வீச ஆரம்பித்தால் மாதக் கணக்கில் நீடிக்கும். வானமே ஆரஞ்சுச் சிவப்பாகத் தெரியும் !

செவ்வாயில் ஒரு காலத்தில் நீரோடைகள் சலசலத்து ஓடிய அறிகுறிகள் மண்ணில் தெரிகின்றன. அதன் துருவங்களில் ஐஸ் பாறை வடிவத்தில் இன்னும் நிறையத் தண்ணீர் இருக்கிறது. குடியேறிகள் ட்ரிப்யூனல் எதுவும் அமைக்காமல் கோர்ட் கேஸ் என்று அடித்துக் கொள்ளாமல் அமைதியாகப் பகிர்ந்து கொண்டால், பல்லாயிரம் மக்கள் வாழப் போதுமான தண்ணீர் உண்டு.

செவ்வாயின் காற்று மண்டலம் கிசுகிசுப்பு போல் சன்னமானது. பெரும்பாலும் கார்பன் டை ஆக்ஸைடு. கொஞ்சம் நைட்ரஜன், மிகச்சிறிது மீத்தேன். ஆனால் அதை மனிதன் சுவாசிக்க முடியாது ! பின்னே, மூச்சுக் காற்று ?

இரண்டு மூன்று யோசனைகள் இருக்கின்றன. செவ்வாயில் சிலிக்கன், இரும்பு, நிக்கல் போன்றவற்றுடன் கலந்து ஆக்ஸைடு வடிவத்தில் ஆக்ஸிஜன் சிறைப்பட்டு இருக்கிறது. அவைகளிடம் கெஞ்சிக் கூத்தாடி, அல்லது அணு சக்தியை உபயோகித்துப் பிடுங்கிக் கொள்ளலாம். இதற்கு ஏராளமாக சக்தி தேவைப்படும். அதற்குத்தான் அணு உலைகள்.

செவ்வாய்க்குப் போனாலும் கருமம் தொலையாது போலிருக்கிறதே – அங்கேயும் ஒரு கூடங்குளமா என்று தயங்கினால், சூரிய சக்தியை முயற்சிக்கலாம். ஆனால் கிரகம் முழுவதும் ஏக்கர் ஏக்கராக சூரியப் பண்ணைகள் அமைக்க வேண்டும். டி.வியில் பல்பொடி விளம்பரம் காட்டியே அந்த அளவுக்குக் காசு தேற்ற முடியுமா என்று தெரியவில்லை.

இதை விடக் கில்லாடி யோசனை, நாம் பூமியில் செய்யத் தவறியதை செவ்வாயில் போய்ச் செய்யலாம்: நிறையச் செடி கொடி மரம் வளர்த்து செவ்வாய்க் கிரகத்தைப் பசுமைக் காடாக ஆக்கலாம். தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உள் வாங்கிக் கொண்டு ஆக்ஸிஜனைத் தர வல்லவை. ஆனால் இதில் வேறொரு விதமான சிக்கல். செவ்வாயில் வருடம் முழுவதும் கடும் குளிர். மைனஸ் 60 டிகிரியெல்லாம் சர்வ சாதாரணம். எனவே முதலில் மொத்த கிரகத்தையும் வெள்ளாவியில் வைத்துச் சூடாக்க வேண்டும். எப்படி ?

அதுதான் நமக்குக் கை வந்த கலை ஆயிற்றே ! கண்ட கண்ட ஹேலோ கார்பன் வாயுக்களை ஏராளமாகத் தயாரித்து வெளியே விட்டுக்கொண்டே இருக்கிறோம். க்ளோபல் வார்மிங் என்று பூமியே சூடாக்கிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தொழிற்சாலைகளையெல்லாம் அங்கே அனுப்பிவிட்டால் போதும்.. சில வகை பாக்டீரியா கிருமிகளை ஏவிவிட்டால், அவை தண்ணீரையும் நைட்ரஜனையும் சாப்பிட்டு மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடும்.

ஆனால், அவசரப்படக் கூடாது. செவ்வாயில் நாம் சுதந்திரமாக பனியனோடு வெளியே உலாவப் போக வேண்டுமென்றால், 120 மில்லி பார் அளவுக்குக் காற்று அழுத்தம் தேவைப்படும். கிரகம் முழுவதும் காடு வளர்த்துத் தள்ளினாலும் இந்த அளவுக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க, குறைந்தது ஆயிரம் வருடம் ஆகும். அது வரையில் நீல் ஆம்ஸ்ட்ராங் மாதிரி எல்லோரும் பூதம் பூதமாக விண்வெளி உடையில்தான் நடமாட வேண்டும். ஆனால், அங்கே போய் வசிப்பது என்று ஆரம்பித்துவிட்டால், சீக்கிரமே மனிதன் மூளையை உபயோகித்துத் தொழில் நுட்பத்தைக் கூர் தீட்டி இதற்கு ஒரு வழி கண்டுபிடித்து விடுவான் என்று நம்பலாம். தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்.

செவ்வாய் மண்ணைத் தோண்டி எடுத்து செங்கல் செய்ய முடியும். பீங்கான், கண்ணாடிப் பொருள்களுக்கும் குறைவிருக்காது. பூமிக்கு அடியில் ரோமாபுரியின் ஏட்ரியம் போல் உயரமான கட்டிடங்கள் கட்டலாம். தரைக்கு மேலே மாபெரும் ப்ளாஸ்டிக் அரைக் கோளங்கள் அமைத்து அதற்குள் விவசாயம் செய்யலாம். 3-டி ப்ரிண்ட்டிங் என்ற முப்பரிமாணத்தில் அச்சடிக்கும் தொழில்நுட்பமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. தேவையான வடிவங்களில் ப்ளாஸ்டிக் வில்லைகள் தயாரித்து அவற்றை அம்மா தோசை சுட்டு அடுக்குவது போல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி உருக்கி ஒட்டிக்கொண்டே வந்தால், எந்த சிக்கலான பொருளையும் தயாரிக்க முடியும். இந்தத் தொழில் நுட்பம் சின்ன சைஸில் இப்போதே வந்துவிட்டது.

செவ்வாய்க்காரர்களுக்கு என்ன ஸ்பேர் பார்ட் தேவை என்றாலும் அதை பூமியிலேயே வடிவமைத்து இங்கிருந்து ‘ப்ரிண்ட்’ பொத்தானை அழுத்தினால் போதும். செவ்வாயில் உள்ள ப்ரிண்ட்டர் அதை சுடச் சுட அச்சடித்துத் தந்துவிடும். வெளி கிரகங்களுக்குப் பொருட்களை அனுப்புவது கடினம்; தகவல் அனுப்புவது சுலபம். தகவல் தொழில் நுட்பம்தான் இனி நமக்கு சாமி, பூதம் எல்லாமே !

செவ்வாயில் டெலிபோன் உண்டா ? உண்டு. பூமியுடன் வீடியோ ஃபோனில் பேச முடியும். ஆனால் ரேடியோ தகவல் இங்கே வந்து சேர சுமார் 6 நிமிடம் ஆகும். “ஹலோ அப்பு, எப்படி இருக்கே ?” என்று கேட்டு “நான் நல்லா இருக்கேன் சுப்பு.. அப்பறம் ? சாப்பாடெல்லாம் ஆச்சா ?” என்ற பதில் வருவதற்குப் பன்னிரண்டு நிமிடம் ஆகும். ஒரு மணிக்கு ஐந்து வாக்கியம் என்ற ரேட்டில் உரையாடினால், பப்லுக் குட்டி இன்றைக்கு இட்லி மாவில் காலை விட்ட கதையை எல்லாம் எப்படிப் பகிர்ந்து கொள்வது ?

அந்த உலகத்தில் ஆடு மாடு கோழிகளே இருக்காது. அதை வேறு கட்டி மேய்த்து ஆக்ஸிஜன் புகட்டிச் சாணி அள்ளுவதெல்லாம் சிரமம். தாவரங்களைத் தின்று ஜீரணித்து, உண்ணக் கூடிய தசையாக மாற்றி நமக்குத் தருவதில் பிராணிகள் அவ்வளவு திறமைசாலிகள் அல்ல. எனவே செவ்வாய்க் கிரகம், முழுக்க முழுக்க வெஜிட்டேரியன் கிராமமாகத்தான் இருக்கும் ! மிச்சமிருக்கும் வாழ்நாள் பூரா லெட்டூஸ் கீரையைத் தின்று உயிர் வாழத் தயார் என்றால் தாராளமாகப் போங்களேன்.

செவ்வாயின் பொருளாதாரம் எப்படி இருக்கும் ? முதலில் சில வருடங்கள் வரை, ‘நம்ம மாமனும் மச்சானும் மார்ஸுக்குப் போயிருக்கிறான்’ என்று இங்கிருந்து அப்பளம், ஊறுகாய் எல்லாம் அனுப்பிக்கொண்டே இருப்போம். ஒரு தலைமுறை கழிந்த பிறகு உணர்ச்சிகரமான தொடர்புகள் இற்றுப் போய், அற்றுப் போய்விடும். பிறகு பூமியை நம்பி அவர்கள் வாழ முடியாது. அங்கேயே ஏதாவது தோண்டி எடுத்து பூமிக்கு ஏற்றுமதி செய்துதான் பதிலுக்கு சப்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் என்னதான் தங்கமும் ப்ளாட்டினமும் கிடைத்தாலும் அதை பூமிக்குக் கொண்டு வருகிற செலவு கட்டுப்படி ஆகாது.

ஆனால் அவர்கள் கண்டுபிடிக்கும் உயர் தொழில் நுட்பம், பேடண்ட் காப்புரிமை, மென்பொருள் என்று அறிவுபூர்வமான சொத்துக்களை சுலபமாக பூமிக்கு விற்கலாம். செவ்வாய்க் காலனியில் இருக்கப் போகிற சமூக, பொருளாதார சூழ்நிலைகள் ஒரு பிரஷர் குக்கர் மாதிரி. அந்த அழுத்தத்தில்தான் புதுப் புது கண்டுபிடிப்புக்கள் மலரும். சகல வசதியும் இருந்தால் சோபாவில் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு டிவி பார்க்கத்தான் தோன்றும் !

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா ? இது வரை இல்லை. விஞ்ஞானக் கதைகளில்தான் தலையில் இரண்டு ஆன்டெனா வைத்த பச்சை மனிதர்கள் உலவுவார்கள். ஆனால் அந்தக் கிரகத்தில் தண்ணீரும் இருக்கிறது, மீத்தேனும் இருக்கிறது என்பதில் கவர்ச்சிகரமான சாத்தியக் கூறுகள் உள்ளன. இவைதான் உயிரை அமைக்கும் செங்கற்கள். ஈ, எறும்பு மாதிரி இல்லாவிட்டாலும் பாக்டீரியா வடிவத்திலாவது ஏதேனும் உயிர் தென்பட்டால், அன்று விஞ்ஞானிகள் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவார்கள்.

இதற்கிடையில் 1976-ல் செவ்வாயைச் சுற்றிய வைக்கிங் விண்கலம் எடுத்த போட்டோ ஒன்றில் மனித முகம் போலவே ஒரு கற்பாறையில் தெரிந்தது என்று ஒரே பரபரப்பு எழுந்தது. எனக்குக் கூட அதை முதலில் பார்த்தபோது கொஞ்சம் ரெட்டை மண்டை சீனிவாச ராவின் சாயல் தென்பட்டது. பிறகு 20 வருடம் காத்திருந்து நல்ல காமிராவாக வாங்கி வேறொரு ராக்கெட்டில் அனுப்பிப் பார்த்தார்கள்; சே ! சாதாரணப் பாறாங்கல்தான். காமிராவின் கோணம், சூரிய நிழல் விழும் திசை இவற்றால் விளையும் இந்த மாதிரி பிரமைக் கற்பனைகளை ‘பரிடோலியா’ என்பார்கள்.

நம் பூமியைக் காற்று மண்டலம்தான் போர்வை போலக் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. இல்லாவிட்டால் விண்வெளியில் இருந்து சொரியும் உக்கிரமான கதிரியக்கத்தால் எப்போதோ கான்சர் வந்திருக்கும். செவ்வாயில் சதா கதிரியக்கத்தில் நனைவதால் மனிதனின் வாழ்நாள் குறைவுதான். அங்கே புவியீர்ப்பும் மிகக் குறைவு. அதனால் தசைகளும் எலும்புகளும் ஆபத்தான அளவுக்கு வற்றிச் சுருங்கிப் போய்விடும்.

பூமியில் மருத்துவ வசதிகள் புயல் வேகத்தில் முன்னேறிக்கொண்டு இருக்க, செவ்வாயில் ஒரே டாக்டர்தான் பகலில் பள்ளம் தோண்டுவார், ராத்திரி அவரே கிளினிக் திறப்பார். இருமலுக்கு நாமே ஒரு கஷாயம் வைத்துக் குடிக்கலாம் என்றால் கூட சுக்கு திப்பிலி எதுவும் கிடைக்காது.

இவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே யார் போவார்கள் ? அபரிமிதமாகக் கடன் வாங்கியவர்கள், வீட்டில் தினம் அப்பளக் குழவியால் அடிபடுகிறவர்கள் ஆகியோர் செவ்வாய்க்குப் போக முன்வரலாம். வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்கும் ஆர்வலர்கள் எல்லா ஊரிலும் நிரந்தரமாகச் சில பேர் இருப்பார்கள். ‘புதியதோர் உலகம் சமைப்போம்’ என்று கரண்டியுடன் கிளம்பும் வீரர்களுக்கும் குறைவிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், புதிய பூமியில் திறமை வாய்ந்த தொழிலாளர்கள் மிக மிகக் குறைவு. சம்பளம், ஜொள்ளு சொட்டும்படி இருக்கும். அமெரிக்காவில் அசட்டு ஜாவா எழுதுவதற்கே மணிக்கு ஐம்பது டாலர் தருவதில்லையா, அது போலத்தான். ஆனால், அவ்வளவு சம்பளம் கொடுக்கும் முதலாளி, ஒரு நிமிஷம் சும்மா இருக்க விடமாட்டான். இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு அத்தை வீட்டுக்குப் போய்வரவும் முடியாது. பாவம் !

செவ்வாய் யாத்திரைக்குச் செல்பவர்கள், பற்பல அபாயங்களைச் சமாளித்து உயிரோடு இருந்தால் மட்டும் போதாது; சிந்து வெளி மாதிரி, மெசபடோமியா மாதிரி, ஒரு புதிய மனித நாகரீகத்தையே நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

இத்தனை தொல்லையும் ஏன் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதற்கு ஒரு சரித்திரத் துணுக்கு சொல்கிறேன்: 1802-ம் ஆண்டு அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு ஃப்ரெஞ்சுக்காரர்களிடம் இருந்தது. நெப்போலியன் அதை வெறும் 20 லட்சம் டாலருக்கு விற்றுவிட்டார். அன்றைக்கு அமெரிக்கா ஓர் உபயோகமற்ற வறட்டுப் புறம்போக்கு ! மாம்பலம் லேக் வியூ ரோடில் நிஜமாகவே ஏரியும் பனை மரமுமாக இருந்த காலத்தில் என் தாத்தா மட்டும் ஒரு நாலு கிரவுண்டு வாங்கிப் போட்டிருந்தால், இன்றைக்கு என் பாஸை ‘என்னடா சங்கர் ?’ என்று தெனாவெட்டாகக் கேட்கலாம். அதே தப்பை நாம் மறுபடி செய்துவிடக் கூடாது என்றுதான் செவ்வாய்க்கு முந்த வேண்டும். இதை, தனியார் கம்பெனிகள் உணரும் அளவுக்கு அரசாங்கங்கள் யோசிக்கின்றனவா என்று தெரியவில்லை.

அதை விட முக்கியம், விண்வெளியில் பூமிக்கு ஒரு அவுட் போஸ்ட் தேவை. இன்றையத் தேதியில், பிரபஞ்சம் முழுவதிலும் நாம் வசிக்கத் தக்கதாக இருக்கும் ஒரே கிரகம், பூமி. அதை வசிக்கத் தகாததாக மாற்றுவதற்கு என்ன என்ன அக்கிரமம் உண்டோ, அத்தனையும் செய்துகொண்டு இருக்கிறோம். நம் தண்ணீரையும் காற்றையும் நாசம் செய்து, இனி இந்த மண் உருண்டையின் மேல் வாழ முடியாது என்ற நிலை ஒரு நாள் வரலாம். சந்திரனில் போய் வசிக்கலாம் என்றால், அங்கே சொட்டுத் தண்ணீர் கிடையாது. எனவே, செவ்வாய் கிரகம்தான் நமது ஒரே நம்பிக்கை !