சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, தமிழில் அமைந்த ஒரு கிளாஸிக் குறு நாவல். இந்த 70 பக்க நாவலை எழுதியபோது, செல்லப்பா இதை தன் ‘எழுத்து’ பத்திரிகை சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவே அளித்திருக்கிறார்! 1947-இல், இந்தியா சுதந்திரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில், எழுதபட்ட இக்கதை அக்காலத்தின் விடுதலை வேட்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஜல்லிக்கட்டைக் களமாகக் கொண்டு இந்த நாவலைப் படைக்க, ஹெமிங்க்வே-யின் ஸ்பானிய காளைச் சண்டை பற்றிய கட்டுரைகள் தன்னை ஊக்குவித்ததாக செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார். உலக இலக்கியம், எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக வசந்தமளிக்கும் நிழல் தான் என்றாலும், அது அந்தந்த மண்ணிலிருந்து அவரவர் கலாச்சாரங்களை வேர்களாகக் கொண்டு வளரும் விருக்ஷம் என்பதை செல்லப்பா உணர்ந்திருப்பது இந்த நாவலை வாசிக்கும் போது நமக்கு புரியும். இதைப் பற்றி எழுத வேண்டும் என அவர் முடிவெடுத்ததும், அதற்காக ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பல தடவை பல இடங்களுக்கும் சென்று பார்த்திருக்கிறார். அதை பல நூறு போட்டோக்களில் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பாக வந்திருக்கும் இந்த நாவலின் அட்டைப் படமே செல்லப்பா எடுத்த புகைப்படங்களில் ஒன்று தான். ஒரு 70 பக்க புத்தகத்திற்காக, அவர் எடுத்துகொண்டிருக்கும் முயற்சிகள் அவரது எழுத்தின் மீது அவருக்கிருந்த காதலையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. காலத்தின் பார்வைகளுக்கேற்ப மாறி வந்துகொண்டிருக்கும் இவ்விளையாட்டைக் கொஞ்சமாவது அதன் தொல் மரபின் பின்னணியிலிருந்து அதன் வளர்சிதைகளையும் சேர்த்து காட்டும் இலக்கிய படைப்பாக செல்லப்பா இக்கதையை அமைத்திருக்கிறார். இது போன்ற முன்னோடி முயற்சிகளுக்கும், ஆவணப்படுத்துதலுக்கும் நாம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருப்போம்.
‘வாடிவாசல்’ என்பது ஜல்லிக்கட்டின் போது மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்படும் இடம். அதை சுற்றி, மாடு அணைபவர்களும், அவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களும் சூழ்ந்து நின்றிருப்பார்கள். அது தான் ‘வாடிவாசல்’ கதை நிகழும் களம். ஆனால், அது மட்டும் அல்ல, அங்கு தன் தந்தையைக் கொன்ற காளையைப் பழிவாங்க வந்திருக்கும் பிச்சியின் மனமும், அக் காரிக் காளையின் உரிமையாளரான ஜமீனின் அதிகார மனமும் சேர்ந்துதான் இக்கதையின் களம். ஒரே நேரத்தில், இதுவொரு விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு கதையாகவும், அதை தாண்டி சமூக கட்டமைப்புகளால் வேறுபட்ட மனங்களின் போராட்டத்தைப் பற்றிய கதையாகவும் இருக்கிறது. கதையின் முன்னுரையில் ஜல்லிக்கட்டு ஒரு ‘வீர நாடகம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கதை முடிவில் வரும் இவ்வரி, ‘மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோஸம் வந்தாலும் போச்சு’, வீரம் என்பதே ஒரு நாடகம் தானோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. என்ன தான் தன் சமூகம் தன்னை ஒரு பெரிய வீரனாக கொண்டாடினாலும், ஜமீந்தார் முன் குறுகி நிற்க மட்டுமே முடிபவனாக இருக்கும் பிச்சியின் வீரத்தை எந்தப் பொது அளவுகோலைக்கொண்டு அளக்க முடியும்? ஏறு தழுவதல் எனும் ஜல்லிக்கட்டின் துவக்கம், விவசாயத்தைப் பெரிதும் நம்பி வாழ்ந்த சமூகத்தில், அதிகார தளங்கள் வேறுவகையில் இருந்திருந்த சமூகத்தில், வீரத்தைக் கொண்டாடுவதற்காக இருந்திருக்கலாம். அன்றிலிருந்து பல பரிணமங்களை அடைந்திருக்கும் இவ்விளையாட்டைத் தொடர்ந்து வந்தோமானால், நமது சமூக அமைப்பு அடைந்து வந்துள்ள மாற்றங்களை நம்மால் உணர முடியும்.
கதையின் முக்கியமான ஒரு அம்சம் அதன் மிகக் கச்சிதமான நடை, அதே நேரம் செறிவான நுணுக்கங்கள், ஒரு கோட்டோவியம் போல. இக்கதையிலுள்ள எல்லா பாத்திரங்களுக்கும் ஒரு ஒற்றை வரி அறிமுகமே. ஜல்லிக்கட்டிற்கு தலைமை தாங்க வந்திருக்கும் ஜமீன்தார். தன் தந்தையைக் கொன்ற காளையைப் பழி தீர்க்க வந்திருக்கும் இளைஞனான பிச்சி. அவனது மச்சான், மருதன். அவர்கள் அங்கு திட்டிவாசலில் சந்திக்கும் கிழவன். பல ஜல்லிக்கட்டுகளிலும் யாரிடமும் தோற்காத ஜமீனின் காரிக்காளை. அவ்வளவு தான், களமும் பாத்திரங்களும் அமைந்துவிட்டபின் கதை வேகமாக தொடங்குகிறது.
முதன்முதலாக செல்லத்தாயிக் கோயில் ஜல்லிக்கட்டிற்கு வந்திருக்கும் பிச்சியும் மருதனும், அங்கு அந்த ஊர் கிழவன் ஒருவனை சந்திக்கிறார்கள். சீண்டுதலில் தொடங்கி பரஸ்பர மரியாதை கூடிய நட்பில் முடிகிறது அவர்கள் பேச்சு. பிச்சியின் தந்தையின் வீரத்தைப் பற்றி அறிந்திருக்கும் அக்கிழவனுக்கு பிச்சி மீது பிரியமும் அபிமானமும் கூடுகிறது. தனது அனுபவ அறிவைக்கொண்டு அவன் அங்கு விடப்படும் காளைகளைப் பற்றிய தனது அனுமானங்களைக் கூறுகிறான். அந்த வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு பிச்சி முதலில் பில்லைக் காளையையும் அடுத்ததாக கொரால் காளையையும் அணைகிறான். இங்கு இந்த காளைகளின் நிறம், சுபாவம், அவற்றை அடக்க பயன்படுத்தப்படும் உத்தி என்று அந்த மண்ணின் வட்டாரவழக்கிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமான சமூக ஆவணங்களுமாகும்.
கதையின் உச்சகட்டம், பிச்சி வெல்ல காத்திருக்கும் காரிக்காளை வாடிவாசலில் இருந்து வெளிப்படும்போது துவங்குகிறது. பிச்சி, முதல் இரு காளைகளையும் அடக்கிய பின், கூட்டம் முழுவதும் அவனைப் பற்றியும் அவனுக்கு உதவிக்கொண்டிருக்கும் மருதனைப் பற்றியுமாகவே பேசுகிறது. அவனது வீரத்தை அங்கீகரிக்க, ஜமீனும் அவனை அழைத்துப் பாராட்டும் பரிசும் தருகிறார். மேலும், அவனால் தன்னுடைய புகழ் பெற்ற காரிக் காளையை அடக்கமுடியுமா என்றும் நிதானமாக சவால் விடுக்கிறார். அவனது நோக்கமும் அதுதான் என்று அறிந்துகொண்ட ஜமீனுக்கு, அவனது தந்தையைப் பற்றியும் தெரிய வருகிறது. அவர் தனது காரியின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அப்போது ஆட்டம் காண்கிறது. ஒரே நேரத்தில் ஆர்வமும், அச்சமும் அடைகிறார். காரிக்காளை, ஜமீன் நல்ல சுழி பார்த்து அதிக விலைக்கு வாங்கிய காளை. அது அன்று வரை எவருக்கும் அடிபணியாது அவரது அதிகாரத்தின் சின்னமாகவே இருக்கிறது. புகழ் பெற்ற வீரனாகிய பிச்சியின் தந்தை அம்புலியையே அது கொன்றிருக்கிறது. அதன் வலிமை பிச்சியின் வஞ்சத்தையும் வென்றுவிடுமா, இல்லை மனிதனின் எண்ணங்களுக்கு மிருக மூர்க்கத்தைக்கூட அடக்கும் வலிமை உண்டா, இதில் யார் ஜெயிப்பார்கள் என்ற விறுவிறுப்பு நிலையில் கதை தன் கடைசிக் கட்டத்திற்கு நகர்கிறது.
வாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிடப்படும் காரி, பிச்சியின் முன் வந்து ஒரு மனிதனைப் போலவே நிற்கிறது. நிதானமான கூர்மையுடன் அவனது அசைவுகளைக் கவனிக்கிறது. இங்கு மனிதனுக்குத் தான் இது விளையாட்டு என்று தெரியும், காளைக்கு அப்படியல்ல என்று ஆசிரியர் சொல்கிறார். ஆனால், ஜல்லிக்கட்டு காளைகள், இந்த விளையாட்டிற்காகவே ஊட்டமாக வளர்க்கப்படுபவை. அவர்கள் மனிதர்களாலேயே இதற்காக பழக்கப்படுத்தபடுகின்றன. அக்காளைகளின் சுபாவம் அவர்களை பழக்கும் மனிதர்களின் சுபாவத்தை ஒத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து நமக்குப் புரிவது, மனிதர்களிடையே வாழும் காளைகளும் மனிதர்களாகின்றன. காளைகள் இடையே செல்லும் மனிதனும் மிருகமாகத்தான் வேண்டும். மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.
பிச்சி, லாவகமாக அதன் கழுத்தை அணைந்து அமுக்கும் நேரம், காளை அவனை தன் மேலிருந்து உதிர்க்க தவ்வுகிறது. ஒரு தவ்வு, இரண்டு தவ்வு, மூன்றாவது தவ்வில், அவன் பிடியிழந்து விழுகிறான். அதற்குள் அதன் நெற்றியில் கட்டப்பட்டிருந்த பரிசையும் எடுத்துவிடுகிறான். அவன் அக்காரியை அணைந்துவிட்டான். ஆட்டம் முடிந்திருக்க வேண்டும். மனிதனுக்கு மட்டுமா ரோஸம், மிருகத்திற்கும் தான். கோபத்தில், காளை திரும்பி அவன் இருக்கும் திசை நோக்கி சென்று, தன் கொம்புகளால் அவனைக் குத்தப் பாய்கிறது. நல்ல காலமாக, தொடையின் ஒரு கிழிசலுடன் பிச்சி காப்பாற்றப்படுகிறான். காளை தோற்றே விட்டது. இனி அது தன் மிருக சுபாவத்திற்கு திரும்பும் நேரம். தன் உயிருக்குப் பயந்து அது கூட்டத்தினுள் பாய்ந்து ஓடுகிறது. அதன் வழியில் ஒரு சிலர் காயப்படுகிறார்கள். அதே நேரத்தில் மக்கள் பிச்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஜமீனின் காளை தோற்கடிக்கப்பட்டுவிட்டது! கூட்டம் முழுவதும் இதே பேச்சு. ஜமீன் நிலைகொள்ளாது தவிக்கிறார். பிச்சியையும் அவனது வீரத்தையும் பாராட்ட வேண்டிய தனது கடமையை முடித்துவிட்டு, நேராகச் சென்று அக்காளையைக் கொன்றுவிடுகிறார்.
என்ன இருந்தாலும், மனிதனிடம் உள்ள சாதுர்யம் மிருகத்திற்கு வராதுதான். ஏனென்றால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு. அதில் காளை ஜமீனின் அதிகாரத்தின் பகடைக்காய் தான். பிச்சியின் வீரம் அப்பகடைக்காயை உருட்டித் தள்ள இன்னொரு பகடைக்காய். பிச்சி, தனது முதல் இரண்டு பகடைக்காய்களையும் வீழ்த்திய பின், தனது கடைசி வீழ்த்தமுடியாத பகடைக்காய் என காரிக்காளையை அனுப்புகிறார். ஆனால், அதுவும் வீழ்த்தப்பட்டதும் ஆட்டம் முடிந்துவிடுகிறது. பிச்சி வென்று விட்டான். அவன் தன் அடிபணிதலின் எல்லைக்குள்ளிருந்து ஜமீனையே வென்றுவிட்டான். ஆனால், ஜமீன் தன் அதிகாரத்தின் எல்லைக்குள்ளிருந்து அவனிடம் தோற்றுவிட்டதாக நினைக்க இடமில்லைதான். அவனது வீரமும் ஒரு பகடைக்காய் தானே? அதைப் பாராட்டிச் சென்றுவிட்டால் போதுமே? ஆனால், அவர் ஆட்டம் இன்னும் முடியாதது போல, அக்காரியை சுட்டு கொல்கிறார். அப்போது அவர் முழுமையாகத் தோற்றுப் போகிறார். அவரது அதிகாரம் என்பது அவர் கைகளுக்கு எட்டாது, தானாக ஆடும் பகடைக்காயாக இருப்பதை உணர்கிறார். சமூகத்தின் அதிகார அடுக்குகளில் மேலே இருப்பவர்களின் அதிகாரம் என்பது அவர்கள் கையில் இல்லாமல், மந்திரவாதியின் கிளி போல தூரத்தில் எங்கோ இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை நம்மால் உணர முடிகிறது.
இதுபோல, மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடக்கும் சந்திப்புக் களங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை இருவகையாக பார்க்கலாம். ஒன்று, குறியீடுகளின் வழி ஒரு கதைக் களனை விரிப்பது. இட ஒருமை இல்லாத போதும், புனைவொருமையால் வாசகர் மனதில் நிகழக்கூடிய கதைகள். சமீபத்தில் படமாக்கப்பட்ட ‘லைஃப் ஆஃப் பை’ எனும் யான் மார்டெலின் நாவல் அவ்வகை. நடுக்கடலில் தனித்து விடப்பட்ட புலியும் சிறுவனும் ஒருவரையொருவர் சந்திக்கும் தருணத்தைப் பற்றியது. வாழ்க்கையெனும் கடலில் மனிதன் அவன் பயங்களை, அவன் மனதை சந்தித்துக்கொள்ளும் தருணத்தின் குறியீடாக அதைப் பார்க்கலாம்.இரண்டாவது, அனுபவத் தளத்திலிருந்து குறியீட்டுத் தளத்திற்கு விரியக்கூடியது.இட ஒருமையும் புனைவொருமையும் கூடியது. ‘வாடிவாசல்’, இரண்டாவது வகையை சேர்ந்தது. செல்லப்பா கண்டு ஆராய்ந்து எனக்களித்திருக்கும் ஜல்லிக்கட்டு எனும் விளையாட்டின் இந்த சித்திரம் என் மனதில் பல திறப்புகளை உருவாக்குகிறது. நான் அந்த காளையை வாழ்க்கையாக உருவகித்துப் பார்க்கிறேன். பிச்சியைப் போல தனக்காகவே, எந்தவொரு எதிர்ப்பார்ப்புகளுமின்றி அதை அணைவதையே ஒரு கலையாக வளர்த்தெடுக்கலாம். இல்லை, ஜமீனைப் போல தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஓரிடத்தில் அதை நிறுத்தி, வேறு ஒருவரால் அது வீழ்த்தப்படும் கணத்திற்காக பதட்டத்துடன் காத்திருக்கலாம்.
2 Replies to “வாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய்”
Comments are closed.