மகரந்தம்

ஏழை படும் பாடு

hd

உலகெங்கும் ஏழை எளியவர்களை வறுத்தெடுப்பது என்பது நிலங்களைப் பிடுங்க உத்தேசிக்கும் ஆட்களின், நிறுவனங்களின், சக்திகளின் அணுகுமுறை. இங்கு ஜெர்மனியில் எப்படி பன்னாட்டு ஏழை அகதிக் கூட்டத்தை கட்டிடச் சொந்தக்காரர்கள் பயன்படுத்தி ஓட்டாண்டிகளாக்குகிறார்கள் என்பதைச் சொல்லும் ஒரு கட்டுரை.

http://www.spiegel.de/international/germany/investors-and-middlemen-exploit-helpless-in-berlin-real-estate-market-a-887039.html

    o00o

சுறாமீன்கள் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனவாம். அடுத்து என்ன? சுறாமீன் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை உலகெங்கும் துவக்கி, அதிலும் வெள்ளையரே அனைத்து நிர்வாக நிலைகளிலும் அமர்ந்து உலகெங்கும் மக்களிடம் நன்கொடை வசூலிக்கக் கிளம்புவார்கள். இந்தியர்கள் இந்த இயக்கங்களுக்கு நன்கொடை கொடுக்கிறார்களா என்பது குறித்துத் தகவல் எங்கே கிட்டும் என்று தெரியவில்லை. ஆனால் எல்லா பேராபத்துகளையும் துவக்கி நிகழ்த்தி விட்டு, அவற்றிலிருந்து பாதுகாப்புக்கான இயக்கத்தையும் துவக்கி நடத்துவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். அது யூரோப்பிய/ அமெரிக்க நாகரீகங்களுக்கு இருப்பது என்னவோ உண்மை. தொடர்ந்து ஏமாறுவதற்கும் ஒரு தனி மூடத்தனம் வேண்டும். அதுவும் உலக மக்களுக்கு நிறையவே இருக்கிறது. குறிப்பாக ஆசிய, ஆஃப்ரிக்க மக்களுக்கு இது நிறைய இருக்கிறது.

http://www.guardian.co.uk/environment/2013/mar/02/sharks-risk-extinction-overfishing-scientists

    o00o

அடேயப்பா, என்னவெல்லாம் யோசிக்கிறார்கள். ஒரு புறம் ஆழ்கடலில் உள்ள மீன்களை கப்பல் கப்பலாக வாரி எடுத்து மாகடலில் உள்ள மீன் எண்ணிக்கையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்ட உள்ள கடலேல்லாம் காலியான பின் பஸிபிக் மாகடல், இந்து மாக்கடல் என்று படையெடுக்கக் கிளம்பி இருக்கிறார்கள். இதன் நடுவில் யாரோ இரண்டு மூன்று அறிவியல் ஆய்வாளர்கள், நகர்களில் இருந்து நீர்நிலைகளில் கலக்கும் கழிவு நீரில் மனிதர் உட்கொண்ணும் மன அழுத்த நோய்க்கான மருந்துகளின் எச்ச சொச்சம் கலப்பது மீன்களைப் பாதிக்கிறது என்று அந்த மருந்துகளின் எச்சங்களை கழிவு நீரில் இருந்து அகற்ற வழி காண்கிறார்கள். இதில் இருந்து இதர மருந்துகள், கெட்ட வேதிப்பொருட்கள் ஆகியனவற்றையும் அகற்றும் முறைகள் கண்டால் எத்தனையோ நலம் பயக்கும், என்றாலும் மீன்களை ஒரு சாக்காகச் சொல்ல என்ன தேவை?

http://www.gizmag.com/antidepressant-fish-wastewater-treatment/26450/

    o00o