புதுமைப்பித்தன் கவிதைகள்

“புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்.”
சரஸ்வதி ஆண்டுமலர் 1959இல் வெளிவந்த கட்டுரை – கவிதை, கலையின் பிறப்பு, க.நா.சு

pupi

மகா காவியம்
காளான் குடை நிழலில்
கரப்பான் அரசிருக்க,
வேளான் குடியூரில்
வெள்ளெருக்கு மூட்டருகே
கள்ளி தலைதூக்க
காட்டெருமை புறத்தேறி
சிட்டுக் குருவியவள்
சிங்காரப் பாட்டிசைத்தாள்.
வரிசை வைக்கும் பாங்கிமார்
வலசாரி இடசாரி
சில்லென்ற ரீங்கார
சிலம்புச் சிறகோடு
பம்புக் கருமேகப்
பந்தல் எடுத்து வர
ஆறாயிரம் பூச்சி
அமர்ந்த சபை நடுவே
அத்தாணி மண்டபத்தின்
அரியாசனத் தருகே
பல்லி யமர்ந்திருந்து
பதிவாய்க் குறிசொல்லும்.
உள்ளகுறி யத்தனையும்
உண்மை யுண்மை என்பது போல்
ஓணான் தலை அசைத்து
மண்ணாலும் மாராசன்
மனசைக் கவர்ந்திருக்கும்.
அச்சமயம், –
உயரப் பறந்து வரும்
வண்ணாத்திப் பூச்சியவள்
வாகாய் விலகி, ஒரு
தும்பை மலர் அமர்ந்து
துதி நீட்டத் தேன் எடுக்க,
தேனெடுக்கும் வேளையிலே
தெய்வச் சினத்தாலோ,
தேவர் அருளாலோ,
மண்டு மகரந்தம்
மங்கையவள் நாசியிலே
சுழிமாறிப் போனதினால்
சுருக்கென்று தும்மல்வர,
தும்மல்வர தும்மல்வர
தும்மல் பெருகிவர,
அத்தாணி மண்டபமே
அதிர நடுங்கிற்று!
அத்தாணி மண்டபத்துக்
கணியாய் இலங்கி நின்ற
கொற்றக் குடையும்
கோணிச் சரிந்தது காண்!
கோணிச் சரிந்த குடை
கொற்றவனார் தன் தலையில்
வீழ்ந்து பொடியு முனம்
வீரத் திரு மார்பன்
வீசி நடந்து,
வியன் சிறகைத் தான் விரித்துப்
பல்லிக்கு எட்டாத
பாழ்த்த இடுக்கினிலே
ஒண்டி உயிர் காத்து
உடல் நடுங்கி நின்றாரே!
சிங்காரப் பாட்டிசைத்த
சிட்டுக் குருவியவள்
சிரிப்பாணி மண்ட,
சிறகு விரித்து, அலகில்
நெளியும் புழுவேந்தி
நீள்வெளியில் தான் பறக்க
வந்திருந்த மந்திரிமார்
வரிசை பல கொணர்ந்த
குடிபடைகள் யாவருமே
உடற்பாரம் காக்க
ஓடி ஒளிந்தனரே!
காளான் நிழல் வட்டம்
கண்ணுறங்கிப் போயிற்றே
வேளான் குடியூரில்
வெள்ளெருக்கு மூட்டருகே
கள்ளி தலை தூக்கும்
கரை யருகே,
ஆளற்றுப் போச்சுது காண்,
அந்தோ அரசாட்சி!

2

மகா ரசிகர்
“வாரும்வோய் கவி ராயரே நுமது
கவியோவி தென்ன புகலும்?
வாக்கிலே பொருளிலே கருதிநீர் மறைவாக
வைத்ததெப் புதையல் ஐயா?
மாகாவியம் என, மனசிலே கொண்டு நீர்
மார் தட்டி வந்து நின்று,
கோரிய காசிலே குறிவைத்து எம்மை நீர்
குடுசங்கி போட வந்தீர்?
அங்குமிங்கும் ஓடும் அரணையைப் பல்லியை
அல்திணை ராசி ஒன்றை
அரியா சனத் தேற்றி அதனிலும் கடையான
அருவருப் பைக் கவியிலே
சிங்காரமாய்க் கூட்டிச் சின்னத்தன மிகு
சிறுமையைக் காட்டி விட்டீர்!
ஆலால முண்டவன் அற்றை நாள் மதுரையில்
அணி செய்த தமிழ ணங்கை
வாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை
வாரிச் சொரிந்த கவியே!
ஏலாத செயலிலே ஏனையா முயலுதீர்?
ஏதும் பிழைக்க மார்க்கம்
அறியாது, அறியாத அவலட்சணத் துறை
அதிசயக் கருவின் விளைவை
மூலைக் கொருத்தராய் மூச்சுத் திணறவே
முயன்றிடில் கவி யாகுமோ?

3

மகா கவி
“தாளால் உலகளந்தான்
தனைமறந்து தூங்கி விட்டான்.
மூளாத சீற்ற
முக்கண்ணனும் இன்று
ஆளாக்கு அரிசிக்காய்
அல்லாடித் திரிகின்றான்.
காளான் அரசாட்சி
கசப்பாகித் தோற்றுகிற
ஆளான பெரியவரே,
அடியேன் ஒரு வார்த்தை.
இன்றைக்கு,
யாரையா காட்டுக்கு
அப்பன் மடத்தனத்தை
அப்படியே ஏற்றுத்தன்
பெண்டாட்டி கைப்பிடித்து,
பெரிய நிதியிழந்து,
திண்டாடி நின்று,
தீமைதனை சங்கரிக்க,
ராவணனார் காதுக்கு
‘ரதி போல்வாள் என் மனைவி’
என்பதனைச் சொல்லுதற்கு
இடும்பு பல புரிந்து,
அன்னவளைத் தானிழந்து
அதற்கப்பால்! மதியிழந்து
போகும் வழியினிலே
பொல்லாப்புக் கச்சாரம்
வாலி வயிறெறிய
வாங்கிச் சுமந்துகொண்டு,
பெரிய கடல்கடந்து
பெண்ணை, தன் நாயகியை
வில்லால், திறத்தால்,
விதிவலியால், மீட்டுப்பின்
அன்னவளைத் தீக்குழியில்
அருகிருந்தோர் நம்புதற்காய்
இறக்கி, தருமத்தை
ஏத்தி, எடுத்து
அரியாசனத் தேற்றும்
அதிசயங்கள் உண்டோ காண்!
கரப்பான் அரசிருக்க
கடுக்குதோ, உம்மனசு?
கரப்பானைப் போன்ற
காலறுவான் எத்தனைபேர்
மொண்டி அரசாட்சி
மூடக் குரோதமுடன்
தண்டெடுத்து,
தானே யறிந்த
தற்பெருமைச் சூனியத்தை,
பிறக்கும், இறக்கும்பின்
பேதுற்று மாளுகின்ற
அண்டாண்ட மூலத்தின்
அழியா விதி போல
நினைத்துத் தருக்கி
நடப்பதுவும் சரிதானோ?”

    o0o0o0o

‘நிசந்தானோ சொப்பனமோ’:

பட்டமரம் தழைக்க,
பைரவியார் சன்னிதியில்,
வெட்டெருமை துள்ள,
விளக்கெடுக்க,
வட்டமுலை மின்னார்
வசமிழந்த காமத்தால்,
நீலமணி மாடத்து
நெடியதொரு சாளரத்தைத்
தொட்டுத் தடவிவந்து
தோயும்நிலாப் பிழம்பை,
எட்டி, எடுத்து, –
இடைசுற்றிச் சேலையென
ஒல்கி நடப்பதாய்
உவமை சொல,
நோட்டெழுத, சீட்டெழுத
நூறுநுணாப் பேய்விரட்ட,
உடுக்கடித்து –
உள்ளத்தனல் அடிக்கும்
கறுப்புக் கதைசொல்ல,
காவிரியின் வளமை சொல,
வடுப்படாக் காதல்
வானுலகத் தொழில்படர
பூவிரிந்த பந்தரிலே
புது மணத்தின் தேன் நுகர,
சித்தம் பரத்து
சிவனார் நடங்கூற,
வத்திவச்சுப் பேச;
வாய்ப்பந்தல் தானெடுக்க,
செல்லரித்த நெஞ்சின்
சிறகொடிந்த கற்பனைகள்
இடுப்பொடிந்த சந்தத்தில்
இடறிவிழும் வார்த்தைகளில்
ஊரில் பவனிவர
உவப்புடனே நீயிருந்து
முத்தமிழை –
பாலித்து, பயிராக்கி,
பசிய உயிர் தான் தோன்ற
வளர்த்து வரும் வார்த்தை
நிசந்தானோ?
சத்தியமாய்க் கேட்கின்றேன்
சரஸ்வதியே நிசந்தானோ?
2
கள்ளம் விளைந்த களர்
கவியாமோ? காவியங்கள்,
நொள்ளைக் கதை சொல்லி
நோஞ்ச நடை பயின்று
உன்னை வணங்கிடுமோ?
ஒரு வார்த்தை
நிசமாகக் கேட்கின்றேன்
ஒரு வார்த்தை!
துச்சா சனனுரிந்த
துகில் என்ன சருகென்ன,
தொட்டுரிய, தொட்டுரிய,
தோன்றாத சூனியமாம்
ஒன்றுமற்ற பாழ்வெளியை
உள்ளடக்கும்
வெங்காயம்போல்
விகற்ப உலகமென
வித்தகர்கள் சொல்வதுபோல்,
நீயுமிருத்தல், நினை வணங்கே,
நிசந்தானோ?
உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகை துள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ?​