கவிதைகள்

twilight-sky

சற்று முன் பூத்த ஆயுளுக்குமான நிலம்
விருப்பக் கூட்டிலிருந்து
வேட்கைப் புள்ளிக்குள்
கடற்கரைத் தடங்கள் போலல்லாது
பாதங்கள் நகர்கின்றன,
பெரும் சவாலாகவும்
அதிபயங்கரத் திகிலாகவும்
போதையும் அல்லாத மாம்சமும் அல்லாத
உன்னை எதிர்கொள்வதில் எனக்கிருக்கும்
அதிகச் சிரத்தையோடு கூடிய
மேலதிக கவனப்பிசகுத் துளியும் அற்று
என்னைக் கையாளும் முறையினை
மிக லாவகமாய் அறிந்து வைத்திருக்கிறாய்
இரவும் அல்லாத பகலும் அல்லாததொரு வெளியிலிருந்து
மெள்ள மெள்ள அவிழ்ந்து கொண்டிருக்கிறேன்
***

cs90

பிரகாசிக்கும் துயரம்
துள்ளும் டால்பின்களைக் கண்களில் வென்று
புன்னகை ஒன்றைப் பரிசளித்திருந்தாய்
தாயின் முதல் சுகப்பிரசவ வலியென
ரீங்கரிக்கிறது
திறக்கப்பட்ட ஜன்னல்களினூடே
மின்னிச் சிலிர்க்கும்
பனி
பேரலை முழங்கும் நமது இருப்பில்
வெண்சங்கினை ஒத்துப் பிரகாசிக்கும்
இத்துயரத்திற்கு
மரணம் மட்டும் ஒருபோதுமில்லையெனச்
சுற்றிச் சுழல்கிறது
நாளின் கடிகாரம்
***
ஆறுமுகம் முருகேசன்