ஒரே தீர்வு

எரிக் ஃப்ரான்க் ரஸல் (Eric Frank Russell) தமது அறிவியல் புனைவுகளுக்காகவும் சிறுகதைகளுக்காகவும் புகழப்பட்ட ஆங்கிலேய எழுத்தாளர். பெரும்பாலான இவரது எழுத்துக்கள் ‘Fortean’ எனப்படும் வகையில் அசாதாரணமான, விசித்திரமான நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டவை. டங்கன் எச் மன்ரோ மற்றும் வேறு பல புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார்.’Sole Solution’ என்ற இக்கதையின் மூலத்தை இங்கே படிக்கலாம்.

ltbl

இருளில் மும்முரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனைத் தவிர வேறு யாருமில்லை.ஒரு குரலோ, முணுமுணுப்போ, கையின் ஸ்பரிசமோ, மற்றொரு மனதின் கதகதப்போ எதுவுமே இல்லை.

இருள்.

தனிமை.

முடிவில்லாத சிறையடைப்பில் அனைத்தும் இருண்டு மௌனமாக இருந்தது. ஒன்றும் அசையவில்லை. முன்கண்டனமே இல்லாத சிறைவாசம். பாவமே இல்லாத தண்டனை. சுமக்க இயலாததை சுமக்க வேண்டி வரும், தப்பிப்பதற்கு ஓர் வழி வகுக்கவில்லை என்றால்.

வேறெங்கிருந்தோ விமோசனம் கிட்டும் என்ற நம்பிக்கையும் இல்லை. மற்றொரு ஆத்மாவிலோ, மனதிலோ ஒரு வருத்தமோ, அரவணைப்போ , கருணையோ, எதுவுமே இல்லை. திறக்கப்பட வேண்டிய கதவுகளோ, திருப்பப்பட வேண்டிய பூட்டுகளோ, அறுத்துப் பிளக்க வேண்டிய கம்பிகளோ இல்லை. தட்டுத்தடுமாறிக் கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லாத அந்த கொழுத்த, ஆழமான, மையிருட்டு இரவு மட்டும் தான்.

ஒரு கையால் வலதுபுறமாக வட்டமிட்டால் கிட்டுவது வெறுமை. இடப்பக்கம் சுழற்றினாலோ ஒரு முழுமையான பூர்ண சூன்யம். மறக்கப்பட்ட அகன்ற கூடத்தில் தொலைந்து போன குருடனைப் போல இருளிற்குள் முன்னகர்ந்தால் , அங்கே தரை இல்லை, காலடியோசையின் எதிரொலி இல்லை, பாதையைத் தடுக்க இடையூறுகள் இல்லை.

அவனால் ஒன்றை மட்டும் தான் தொட்டு உணர முடிந்தது. ஸ்வயம் ஒன்றைத் தான்.

ஆகையால் அவனுடைய இந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்க்கு அவனுள் உறைந்து கிடக்கும் வளங்களைத் தவிர வேறெதுவுமில்லை. அவனே அவனுடைய இரட்சிப்பின் கருவியாக வேண்டும்.

எப்படி?

தீர்வுகளுக்கு அப்பால் எந்தச் சிக்கலுமில்லை. இந்தக் கோட்பாட்டின் மூலமே அறிவியல் உயிர் வாழ்கிறது. அது இல்லாவிடில் அறிவியல் இறந்து விடுகிறது. அவனே கடைமுடிவான விஞ்ஞானி . அவனுடைய திறமைக்கு விடுத்த இந்த சவாலை அவனால் மறுக்க முடியாது.

அலுப்பு, தனிமை, மன மற்றும் உடல் ரீதியான மலட்டுத்தனம் இவையே அவனுடைய கடுந்தொல்லைகள். அவைகளை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. கற்பனை மூலமே இதிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியும். ஒரு தடுப்புக் காப்புடை அணிந்து கொண்டு உடலெனும் பொறியிலிருந்து தப்பியோடி நம்முடைய சொந்த கற்பனை உலகத்தில் சாகஸங்கள் புரிய வேண்டியது தான்!

ஆனால் கனவுகள் போதுவதில்லை. அவைகள் உண்மையற்றவை. மிகச்சுருக்கமானவை. கிட்டப்போகும் விடுதலை உண்மையாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி என்றால் அவன் கணவுகளைக் கொண்டு ஓர் கடுமையான யதார்த்தத்தை படைக்க வேண்டும். மிப்புனைந்து தோற்றுவிக்கப் பட்டதாலே இந்த யதார்த்தம் எக்காலமும் நிலைத்திருக்கும். அது தன்னை சுயமாக நிலைபேறுடையாக்கிக் கொள்ள வேண்டும். இதற்குக் குறைவான எதுவுமே விடுதலையை பூர்த்தி செய்ய இயலாது.

எனவே அவன் பேரிருட்டில் அமர்ந்துகொண்டு சிக்கலுடன் போரிட்டான். சிந்தனையின் நீளத்தை அளப்பதற்கு அங்கு கடிகாரமோ நாளேடோ இல்லை. கணக்கிட வெளிப்புறத் தரவேதும் இல்லை. சுறுசுறுப்பான அவனுடைய மன இயக்கங்களைத் தவிர அங்கு வெறும் சூன்யம், சூன்யம்.

மற்றும், ஒரு கோட்பாடு: தீர்வுகளுக்கு அப்பால் எந்தச் சிக்கலுமில்லை.

இறுதியில் அதைக் கண்டடைந்தான்.அதற்கு அவன் முடிவில்லா இரவிடமிருந்து தப்பிச் செல்ல வேண்டும். அனுபவம், தோழமை, சாகஸம், மனப்பயிற்சசி, பொழுதுபோக்கு, அரவணைப்பு, அன்பு, குரல்களின் ஒலி, கைகளின் ஸ்பரிசம் இவ்வனைத்தையும் இத்தீர்வு அவனுக்கு அளிக்கும்.

இத்திட்டம் ஒன்றும் அவ்வளவு எளிமையானதல்ல. நேர்மாறாக அதன் சிக்கல்கள் பல யுகங்களானாலும் விடுவிக்கும் முயற்சிகளை எதிர்த்து நிற்கும். நிரந்தரமாக நிலைப்பதற்கு அவ்வாறே அது இருந்திருக்க வேண்டும். மௌனத்திற்கும் கசப்பான இருளிற்கும் திரும்புவதே வேண்டப்படாத மாற்று வழி .

அதை அமல்படுத்துவதற்கு கணிசமான உழைப்பு தேவைப்பட்டது. ஒரு கோடி அம்சங்களயும் அவை ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விளவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும். அதற்குப் பிறகு அடுத்த கோடி….மேலும் மேலும்….

அவனுக்கே சொந்தமான ஒரு மாபெரும் கனவை அவன் உருவாக்கினான். எல்லையற்ற சிக்கல்களாலான இக்கனவின் எல்லா நுணுக்கங்களும் , கடைசி புள்ளி வரையிலும் கூட திட்டமிடப்பட்டது. அதனுள் அவன் தன் வாழ்வை புதுப்பித்துக் கொள்வான். ஆனால் அவன் அவனாகவே இதில் இருக்கப் போவதில்லை. அவன் தன்னை எண்ணற்ற பகுதிகளாகவும், பெறும் பல்வகை வேறுபாடுள்ள வடிவங்களாகவும், உருவங்களாகவும் விரயம் செய்துக்கொள்ளப் போகிறான்.

அவை ஒவ்வொன்றும் தத்தம் தனிப்பட்ட சூழல்களுடன் போராட வேண்டும். இப்போராட்டத்தை முனைப்பாக்குவதற்கு, நோற்பின் விளிம்பிற்கே இட்டுச் செல்வதற்கு ,சிந்தனையில் தன்னையே இல்லாமலாக்கிக் கொண்டு , திடுக்கிடும் அறியாமையைக் கொண்டு தனது பகுதிகளை முடமாக்கி ,அவைகளை புதிதாய் கற்றுக் கொள்ள நிர்பந்தித்தான். விளையாட்டின் அடிப்படை விதிகளை ஆணையிட்டு அவைகளினூடே பகைமையை விதைத்தான்.

அவ்விதிகளைக் கடைபிடிப்போர்கள் நல்லவர்களாகவும், கடைபிடிக்காதவர்கள் கெட்டவர்களாகவும் அழைக்கப்படுவர். இவ்வாறு அந்தப் பெரிய முரண்பாட்டிற்குள் பல நேரங்கடத்தும் முரண்பாடுகளிருக்கும்.

எல்லாம் தயாரான போது அவன் தன் ஒருமையைச் சீர்குலைத்துக் கொண்டு ஸ்தூலப் பொருள்களாலான ஒரு பெருந்திரளாக உத்தேசித்தான். அதன் பிறகு அவனுடைய பகுதிகள் போராடி , ஒருமையை, தன்னை , வந்தடைய வேண்டும்.

ஆனால் முதலில் அவன் கனவை மெய்மைப் படுத்த வேண்டும்.

ஆ! அதுவே ஏற்ற தேர்வாகும்.

இப்பொழுதே தக்க நேரம். பரிசோதனை தொடங்கப்பட வேண்டும்.

முன்னே சாய்ந்து, அவன் இருளைக் கூர்ந்து நோக்கி கூறினான், ‘ வெளிச்சம் உண்டாகட்டும்’.

வெளிச்சம் உண்டாயிற்று.