மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தெலுங்கு

aj33தெலுங்கு கவிதை வரலாற்றை எழுதுபவர்கள் அனைவராலும் முக்கியமான கவிஞராக குறிப்பிடப்படும் அஜந்தா (பெனுமர்த்திவிசுவநாதசாஸ்த்ரி, 1929-1998) மரங்கள் வீழும் காட்சி என்ற முதல் கவிதையிலேயே இலக்கியகர்த்தாக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மிகவும் குறைவான கவிதைகளை எழுதியவர். ஆந்திர பிரபா பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்தவர். தன் கவிதைகள் பிரசுரமானபின் தனக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லையென்ற கருத்து கொண்டவர். அதனால் அவற்றை இவர் சேகரித்து வைப்பதில்லை.

1997-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற ஸ்வப்னலிபி (கனவுப்பிரதி) கவிதைத் தொகுப்பு நண்பர்ளின் வற்புறுத்தலுக்கிணங்கி பிரசுரிக்கப்பட்ட கவிதைகளை நினைவுகூர்ந்து எழுதியது. இந்த தொகுப்புக்கு இவர் எழுதியிருக்கும் முன்னுரை அற்புதமானது.

இவருடைய கவிதைகள் வேகுண்ட மோகன் பிரசாத்(மோ) அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோ-கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திராவிட பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர்.

மாயாஜாலக்காரன்
கண்ணாடியென்றால்picasso-girl-before-mirror-resized-6001
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்
எப்போதும் வீரம் செறிந்த குதிரைவீரன்
எப்போதும் உலகின் ரகசியங்களை
உடைத்துத்தின்னும் ஒரு கோமாளி
வெளியாளாக
கண்ணாடி உன் உள்ளாழமான உலகம்.
கண்ணாடியில் மிதக்கும் பிம்பங்களை
அகற்றமுடியாது. அதனால்
நானே கண்ணாடிக்குள் நுழைந்தேன்
என் பிம்பம் இனி கண்ணாடிக்குள்ளில்லை
ஆனால் நான் அங்கிருக்கிறேன் தனியாய் உடலற்று.
உள்ளுக்குள் புலம்பல்
human-flowers91

மரணமென்பது ஒரு மலர்மாலையா?
மரணமென்ன, கைகளால் வணக்கம் சொல்கிறதா?
மலினமான சொற்கள் மலினமான சொற்கள் மலினமான சொற்கள்
உடல்கள் இங்கே விற்கப்படுகின்றன
கொடிகளும் கைத்துப்பாக்கிகளும் வைத்திருக்கும்
கைகளும் விற்கப்படுகின்றன தனியாக
மனிதனைக் கணங்களில் மாயமாக்கும்
முகமூடி மனிதர்கள் வேண்டுமா?
மரணத்தின் நவீன கணிதவிகிதங்களை
மன்னம் செய்த கொலைகாரன் வேண்டுமா?
மனிதனை வெடிக்கச்செய்யும்பொருள்கள்
எல்லாமும் இங்கே விற்கின்றன
மனிதனை மரணத்தின் கருவியாக்கும்
தனிரக எரிசக்தியும் இங்கே விற்கிறது
வணிகப்பொருட்களின் குரலொலிக்கும் சுவரொட்டியின் முன்பு
தனியாக்கப்பட்ட தலையின் எச்சரிக்கைக்குப் பொருளில்லை
மலர்ச்செடிகள் அழுகின்றனவா?
எல்லா மலின வார்த்தைகளுமிங்கே
எல்லா கடுமையான சப்தங்களும்……….அழிவு நாடகம்
எரிப்பு விளையாட்டு
மரணம் தன் முகத்தைக் காண பயந்ததுபோல
உறக்கத்தில் நடக்கும் மனிதன்
இரத்தக் குளத்தைத் தாண்டி வருவானா? மாட்டானா?
பூச்செடிகள் சாபமிடுகின்றனவா?
வன்மையான குரலில் கத்தும்
சுவரொட்டியின் முன்னால்
உள்ளுக்குள் புலம்புவதில் பொருளில்லை.
சுகபோக அறைகளில் இன்னமும் ஒலிக்கிறது இசை.
நாடகத்தின் இயக்குனர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்
நிர்வாணதேவதையின் வழிபாடு தடையிலாது
எப்படி அர்த்தமற்றதானது வாழ்க்கை!