மேலும் கீழும்

ஸ்ருதி இரண்டிரண்டு படிகளாக குதித்துச்சென்று மொட்டைமாடியை அடைந்தாள். சரியாக, அவள் நுழைந்த நேரம், ஒரு பொசிந்த ராக்கெட், புஸ் என வளைந்து வளைந்து மாடியின் ஒரு இருள் கோடியில் சரிந்தது. அவள் பயந்து நிற்கவும், அவள் பின் படியேறிக் கொண்டிருந்த அவள் அக்கா சௌமியா அவளை வந்து மோதவும் சரியாக இருந்தது. ஸ்ருதி, அடுத்த ராக்கெட்டுக்கு பயந்தபடியே, பட்டாசுகளும் கையுமாக மெதுவாக தவழந்து, மாடிக்கு சற்றே உயரமாக, உள்புறமாய் குடை போல சரிந்திருந்த தென்னைக்கு அடியில் சென்று அமர்ந்தாள். சௌமியா, தன் குதிரைக் கொண்டை இங்குமங்குமாய் ஆட, குதித்து மாடி முழுவதுமாய் ஒரு சுற்று சுற்றினாள். மாடியின் ஓரத்திலிருந்த தண்ணீர் டாங்க் மீது ஏறி நின்று உலகை ஒரு முறை குனிந்து பார்த்தாள். ‘ஐயோ, ஏறாதயேன்!’ என்று பதறிய ஸ்ருதியைப் பார்த்து, தான் அவளைவிட நான்கு வயது பெரியவள் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு, டாங்கின் விளிம்பு வரைச் சென்று நின்று திரும்பிப் பார்த்தாள். ஸ்ருதியின் உச்சிக் குடுமியைப் போல விரிந்திருந்த தென்னையின் நிழலில் ஸ்ருதி பதுங்கியிருந்தாள். ‘பயந்தாங்கொளி. இங்க பாரு. பக்கத்து தெருவில எத்தன புஸ்வானம் விடறானு. கமலா மாமி ஆத்துல எல்லாரும் வந்திருக்கா. அரவிந்த் ராக்கெட் விடப் போறான்’ என்று ஸ்ருதியிற்கு ஆவலைத் தூண்டினாள். ஸ்ருதி, அவளை எப்படியாவது இறங்க வைக்க வேண்டுமே என்று அவசரமாக,’ சரி சீக்கிரம் இறங்கு. அப்பா இப்போ வந்துடுவா. பின்னாடியே வந்துடறேன்னு சொன்னா. பட்டாசையெல்லாம் எடுத்து வச்சிருக்க சொன்னா. இறங்கு!’ என்று பொறுப்பு ததும்ப அழைத்தாள். சௌமியா, டாங்கிலிருந்து கீழே ஒரு குதி குதித்து, அருகில் துணி கொடியில் படர்ந்திருந்த மல்லிக்கொடியிலிருந்து, அன்று பறிக்கப்படாமல் விட்ட இரு ராம பாணத்தைக் கிள்ளி, கையில் எடுத்து முகர்ந்து கொண்டே, ஸ்ருதியை நோக்கி வந்தாள்.

வெள்ளைக் காகிதத்தில் ஊறிப்படர்ந்த கரிய மை போல, மழை வடிந்த இரவு வானம் நட்சத்திரங்களை மறைத்திருந்தது. நல்லவேளையாக சாயங்காலமே மழை பெய்து முடிந்திருந்தது. மழை பெய்யாத தீபாவளியும் உண்டா என்ன? ஆனால், அது சரியாக எப்போது பெய்கிறது என்பதுதான் விஷயம்.இந்த தீபாவளி, எல்லாமே சரியாக அமைந்துவிட்டது. விடிந்ததும் போட்டுக்கொள்ள புதுச் சட்டைகள், முகர்ந்து பார்த்து சாமி முன் வைக்கப்பட்டாச்சு. ஒரு தூக்கு மிக்ஸரும் மைசூர் பாக்கும் வாங்கியாச்சு. அதற்கு மேல் அப்பாவிற்கு பிடித்த பாதுஷா செய்வதற்கென்று, அப்பா சாமானங்களும் வாங்கி வந்திருந்தார். முக்கியமாக, இந்த தீபாவளிக்கு நிறைய வித விதமான தரைப் பட்டாசுகள் வாங்கியிருந்தது. இதில் பலதும் சௌமியாவின் தேர்வு தான். ஃபௌண்டென் போலப் பொங்கியெழும் புஸ்வாணங்கள். தரை முழக்கச் சுழன்று திரியும் தரைச் சக்கரங்கள், விசிலடித்துக்கொண்டே சீறியெழும் விசில் பட்டாசு என. சௌமியா, பட்டாசுகளைத் திறந்து பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள்.அப்பா வந்ததும் தொடங்க வேண்டியதுதான். அதற்குள் உலகமே கொண்டாட ஆரம்பித்துவிட்டது.

d

நாலா பக்கத்திலிருந்தும், வாணவேடிக்கைகள் மலரத் தொடங்கின. தென்னை ஓலைகள் கலர்கலராக மாறின.துணி காயும் கொடிகளைக் கையில் பிடித்தாற் போல, சௌமியா வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எந்த திசையில் பார்ப்பதெனத் தெரியவில்லை. இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பக்கம் ஒரு ராக்கெட் பறந்து வந்து மலர்ந்தது. இருவரும் சேர்ந்து, ‘இங்க பாரு!’, ‘இங்க பாரு!’ என ஒவ்வொன்றாகப் பார்த்துக் களித்தனர். அது ஒரு விளையாட்டாக மாறியது. நாலு பக்கத்திலும் ஒரே சமயமாக ராக்கெட்டுகள் பறந்து போட்டியில் பங்கேற்றன.’இது நன்னாயிருக்கில்ல… இல்ல, இந்த கலர் எவ்ளோ அழகாயிருக்கு… எத்தன பெருசா விரியறது பாரேன்… அது பல்லி வால் மாறி போறது பாரு,’ என்று ஒவ்வொன்றும் மதிப்பிடப்பட்டு, ‘இது தான் எனக்குப் பிடிச்சிருக்கு,’ என்று ஒரு வெற்றி வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு சமயம், இருவரும் வானத்தின் மேல் நின்றுகொண்டிருப்பது போல இருந்தது. அவர்களுக்கென பூமியிலிருந்து அழகிய வண்ண ஜாலங்கள் வந்துகொண்டே இருந்தன. அவ்வப்போது தெருவில் பொங்கும் புஸ்வாணங்களின் மழை சத்தம் வேறு.

ஸ்ருதிக்கு ஆசையாக இருந்தது. ‘நாமளும் விடுவோமா?’ என்று பட்டாசுகளின் அருகில் சென்றாள். ‘இரு, அப்பா வந்திடுவா. மூஞ்சி அலம்பிண்டு வராளா இருக்கும்,’’ என்று, வண்ண ஜாலங்களில் மூழ்கியவாறு சௌமியா தடுத்தாள். அவள், மீண்டும் டாங்க் மேலே ஏறி நிற்கச் சென்றாள். ஸ்ருதி, மெழுகுவத்தியை பற்ற வைத்தாள். தான் ஒரு புஸ்வாணம் விடப்போவதாக எடுத்தாள். டாங்கின் மேலிருந்த படியே சௌமியா,’ புஸ்வாணம் வெடிச்சா, வந்தனா அக்கா கை மாறி ஆயிடும்..எனக்கு தெரியாது,’ என்றாள் டாங்க் மீது அமர்ந்து கால்களை ஆட்டியபடி. மத்தாப்பும் கையுமாக எழுந்த ஸ்ருதி அப்படியே நின்று விட்டாள். அவர்கள், நேற்று பள்ளியிலிருந்து வரும்போது, தங்களுடன் ஆட்டோவில் கூட வரும் வந்தனா அக்காவின் கை நினைவிற்கு வந்தது. அவள் முதல் நாளே புஸ்வாணம் விடப் போக, அது வெடித்து அவள் கை கரிய நிறமாக மாறியிருந்தது. அதன் மேல் தடவப் பட்டிருந்த ஆயின்ட்மெண்ட், நெய் போல அதில் உருகியிருந்தது. ‘எல்லா புஸ்வாணமும் வெடிக்காது,’ என்று சொல்லியவாறே, கையில் எடுத்திருந்த புஸ்வாணத்தைக் கீழே வைத்துவிட்டு, ஒரு தரைசக்கரத்தை எடுத்துப் பற்ற வைத்தாள்.அது ஆயிரம் கைகள் விரித்து மாடியை சுற்றத் தொடங்கியது.

அப்போது, கீழிருந்து அப்பாவின் குரல் கேட்டது. இருவரும் ஓடிப்போய், படிகள் அருகே நின்றனர். குரல் சமையல் அறையிலிருந்து வருவது போல இருந்தது. அப்பா, அப்போது தான் முகம் கை கால் அலம்பிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.சமையல் அறை புகைபோக்கியிலிருந்து நெய் கொதிக்கும் வாடை வந்தது. ‘என்ன்ன இது.!………ஐய்யோ கடவுளே…….”, என்று புஸ்வாணம் போல அப்பாவின் குரல் மெதுவாக வலுத்தது. இருவரும் அமைதி கவிந்த முகத்துடன் மீண்டும் மாடியின் நிழலிற்குச் சென்றார்கள். பாத்திரங்களின் சலசலப்பு சத்தங்கள். அம்மா சத்தமாக பேச முயற்சிக்கும் போது அவள் குரல் கீச்சென்று மாறிவிடும்.’இல்ல்ல்லங்க….இப்பத்தான் அந்த…..’ என்று அவள் அந்த ஸ்தாயியில் ஏதோ பேசத் தொடங்கினாள். திடீரென்று, வாணலி போன்று ஏதோ பெரிய பாத்திரம் கீழே உடைந்து விழும் சத்தம்.’ போ….எனக்கு ஒண்ணும் வேண்டாம்…நீ எதுவும் செய்யவேண்டாம்……நான் எதுவும் கேட்கல,”, அப்பாவின் குரல் இரண்டு மாடிகள் தாண்டி கணீரென்று அறைந்தது. மீண்டும் அம்மா ஏதோ சொல்ல, “அப்பாவா….உங்கப்பன மட்டும் கூப்டாத….” மீண்டும் அம்மாவின் கீச்சுக்குரல். மேலும் சத்தங்கள். எப்போதும் நடப்பது தான். பள்ளி கிளம்பும் போது தினசரியின் அவசரங்களில் நடந்துதான் பழக்கம். நல்ல வேளை, இன்று தீபாவளி. எல்லாரும் வீட்டில் சத்தமாக டி.வி பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சௌமியா, மெதுவாக ஒரு புஸ்வாணத்தை எடுத்து வைத்தாள். அது ‘புஸ்ஸ்ஸ்’ என பெரிய சத்தத்தோடு பொங்கி எழுந்தது. இருவரும், அதன் சத்தத்தையே கேட்டுக்கொண்டிருந்தனர்.கீழிருந்து டி.வி யின் சத்தம் அதிகரித்தது. ஒருவர் மாற்றி ஒருவர், புஸ்வாணங்களை விடத் தொடங்கினர். அது தீர்ந்ததும் தரை சக்கரங்கள். ஸ்ருதி மெதுவாக சௌமியாவைப் பார்த்து,’அப்போ, நிஜமாவே அம்மாவும் அப்பாவும் டைவர்ஸ் பண்ணின்றுவாளா?” என கேட்டாள். அதுவரை, அது ஏதோ சௌமியா தான் படிக்கும் கதைப் புத்தகங்களிலிருந்து, தன்னை பயமுறுத்தச் சொல்லும் கற்பனை என்றே நினைத்திருந்தாள். சௌமியா “ஆமாம், நான் அன்னிக்கே சொன்னேன் இல்ல,” என்று தரையையே முறைத்துப் பார்த்தாள்.விசித்திரமான ஒளிக்கீறல்களாகத் தரை பிளந்து பிளந்து மூடியது. ஸ்ருதிக்கு டைவர்ஸ் என்பது ரொம்பவும் புதிய விஷயமாக இருந்தது. டைவர்ஸ் என்றால், அம்மாவும் அப்பாவும் தனித் தனி வீடுகளுக்கு சென்று விடுவார்கள் என்று சௌமியா  அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தாள்.அப்படியானால், அவள் எங்கு இருப்பாள்? வாசல் கதவுகளைத் திறந்து மாறி மாறி இருவர் வீட்டுக்குள்ளும் நுழைவது போல கற்பனை செய்துகொண்டாள். உலகமே அமைதியானது போல இருந்தது. தெருவில் புஸ்வாணங்கள் அடங்கியிருந்தன. வானமும் ஓய்வெடுக்கச் சென்றது போல, எல்லா வண்ண ஜாலங்களும் நின்று விட்டன. இரவு ‘ர்ர்ர்ர்ர்’ ரீங்கரித்துக் கொண்டிருந்தது.தன் வீடு மட்டும் தனித்து ஒரு உலகில் இருப்பது போல இருந்தது ஸ்ருதிக்கு. அப்பாவின் குரலால் சூழப்பட்ட தீவு போல. அவள் அக்காவின் முகத்தைப் பார்த்தாள். அங்கும் அதே அவ நம்பிக்கை. இனி, அப்பா வருவார் என்று இருவருக்கும் நம்பிக்கை இல்லை.’அதான் வேண்டவே வேண்டாங்கரேனே…..” என்று மீண்டும் குரல் கனத்து வந்தது.காத்திருந்து வரவில்லை என்றால், பட்டாசுகளை என்ன செய்வது. இன்றுடன் தீபாவளி முடிந்துவிடுமே.

இன்னும் இரண்டு பட்டாசுப் பெட்டிகள் மிச்சம் இருந்தன. ஒரே சமயம் இரண்டு மூன்றென தரை சக்கரங்களை விட்டார்கள். மாடி முழுவதும், எரிந்து போன பட்டாசுகளுடன், போர் முடிந்த களம் போல காட்சியளித்தது. அந்த அமைதியில், திடீரென மீண்டும் ஒரு சத்தம்.’ எனக்கு பாதுஷாவும் வேண்டாம்..ஒரு மண்ணும் வேண்டாம்………”செய்யத் தெரியலேனா, என்ன எழவுக்கு என்ன வாங்கிண்டு வரச் சொன்ன…….”. மீண்டும் ஏதேனும் விடுபட்டுப் போன பட்டாசு இருக்குமா என ஸ்ருதி தேடினாள். எதுவும் இல்லை. கீழே செல்லலாமா வேண்டாமா என்று தயங்கியபடி இருவரும் படிக்கட்டு அருகே அமர்ந்திருந்தனர். ஸ்ருதி மெதுவாக கொட்டாவி விட்டு சௌமியா மேல் சாய்ந்தாள்.”சரி, வா போகலாம்,” என்று சௌமியா சொல்ல, இருவரும் எழுந்து படி இறங்க தொடங்கினர்.

கீழிறங்கி, வீட்டினுள் நுழையும் போது, அப்பா முகத்தைth துண்டால் துடைத்துக்கொண்டு, வாயில் ஸ்லோகத்தை முணுமுணுத்தவாறே வெளியே வந்தார். “என்ன மேல போலாமா? பட்டாசெல்லாம் எடுத்து வச்சாச்சா,” என்றவாறே ஸ்ருதியின் கன்னத்தைத் தட்டி புன்னகைத்தார். “பட்டாசெல்லாம் முடிச்சிட்டோமே” என அப்பாவை திரும்பிக் கேள்வி கேட்பது போல ஸ்ருதி சொன்னாள்.அப்பாவின் முகம் அப்படி ஏமாற்றத்தில் சுருங்கும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை,” என்னது எல்லாத்தையுமா?! ஒண்ணு விடாமயா? நானும் சேர்ந்து வெடிக்கத்தானே வந்துண்டேயிருந்தேன்…” என்றார்.

O00O