மகரந்தம்

சீனாவிற்கு இடம்பெயரும் ஹாலிவுட்?

2உலக சினிமா மையம் ஹாலிவுட்/ அமெரிக்காவிலிருந்து இடம் பெயர்கிறதா? ஜெர்மன் பத்திரிகை டெர் ஷ்பிகல் சொல்கிறதைப் பார்த்தால் சீனாவும், ஆசியாவும் உலகத்தின் சினிமா மையங்களாக மாறவிருக்கின்றன என்று தெரிகிறது. இது வழக்கமான யூரோப்பிய மனப் பிராந்தியாக இருக்க வாய்ப்புண்டு. புலி வருகிறது புலி வருகிறது என்று பயமுறுத்தி ஊரைக் கூட்டும் சிறுவன் போலப் பல யூரோப்பிய/ மேலைப் பத்திரிகையாளர்கள் வெகு காலமாக ‘அன்னியர்களைக் காட்டிக் காட்டி மேற்கு மக்களை ஒருங்கு திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், சிறிது காலம் யூதர்கள், அப்புறம் ஜப்பானியர், அப்புறம் அரபுகள், கொஞ்ச நாள், நகைப்புக்குரிய வகையில் இந்தியர்கள், அப்புறம் ஆஃப்ரிக்கக் குடியேறிகள், சமீபத்தில் யூரோப்பில் பல நூறு ஆண்டுகளாக அகதிகளாகவே வைத்திருக்கப்பட்ட நிலையில் வாழும் ரோமாக்கள் (ஜிப்ஸிகள்). இப்போது மறுபடியும் சக்கரம் சுழன்று சீனர்கள்/ ஆசியர்கள் என்று வந்திருக்கிறதா என்று நாம் யோசிக்கலாம்.

ஆனால் சமீபத்துப் பத்தாண்டுகளில் உலகில் நிறைய நல்ல படங்கள் ஆசியாவிலிருந்துதான் வந்திருக்கின்றனவா? சினிமாப் பித்தர்கள் நம் வாசகர்களிடையே இருப்பார்கள், அவர்கள் எழுதிக் கருத்து தெரிவிக்கலாமே? டெர்ஷிபீகல் சஞ்சிகையின் செய்தி இங்கே. இது பெர்லின் திரைப்பட விழாவை ஒட்டி எழுதப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

o00o

போலி முனைவர்!

annette-schavanஜெர்மனியானால் என்ன, பிரிட்டன் ஆனாலென்ன, யூரோப்பியர்களும் உலக மக்கள் நடுவே நிலவும் அனைத்து ஊழல்களையும் புரிகிறவர்கள்தான். பாண்டிச்சேரியில் ஒரு மந்திரி தனக்குப் பதிலாக இன்னொருவரைப் பரீட்சை எழுதச் செய்து அகப்பட்டுக் கொண்டார் என்று படித்தோம். ஜெர்மனியின் மைய அரசில் ஒரு ஆட்சிக் குழு உறுப்பினர் (மந்திரி போன்ற ஒரு பதவி) தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையில் பகுதிகளை வேறு ஆய்வுகளிலிருந்து ‘காப்பி’ அடித்தார் என்று உறுதியாகி அந்த முனைவர் பட்டத்தை முன்பு வழங்கிய பல்கலை இப்போது ரத்து செய்து விட்டது. இப்படிக் காலாவதி ஆன பட்டத்தால் அவருக்கு தனிப்பட்ட முறையில் நஷ்டம் இருந்திராது, ஆனால் ஒரு ஆட்சிக் குழு உறுப்பினர் இப்படிப் பித்தலாட்டம் செய்ததால், அவருடைய பதவி பறிக்கப்படும் என்று இந்தச் செய்தி சொல்கிறது.

இந்தியாவில் எத்தனை முனைவர் பட்டங்கள் இப்படி வழங்கப்படுகின்றனவோ? யாரும் அதைத் துப்புத் துலக்கியதாகத் தெரியவில்லை. சீனாவில் ஏராளமான முனைவர் பட்டங்களும், பிரசுரமாகும் ஆய்வுக் கட்டுரைகளும் உலகின் வேறு இடங்களில் எழுதப்படும் ஆய்வுகளை அப்படியே பிரதி எடுத்தவை என்று சீனப் பத்திரிகைகளே சொல்கின்றனவாம். ஆனால் அப்படிப் பிரசுரித்த சீன பல்கலையாளர்களை அரசு ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. டெர் ஷ்பீகலின் செய்தி இங்கே.

o00o

பழமைவாதிகளிடம் சிக்கிக்கொண்ட நபகோவ்

wladimir-nabokov

நபகோவ் அருங்காட்சியகம் தாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல அவருக்கெதிராக பழமைவாதிகள் கடும் பிரச்சாரம் செய்து வருகின்றனராம். அவருடைய கதைகள் ஒழுக்கக் கேட்டை ஊக்குவிக்கின்றன, சிறுவருடன் பாலுறவை வருணிக்கின்றன என்றெல்லாம் தாக்குதலும், பிரச்சாரமும். நபகோவின் நாவலான ‘லோலிடா’ சமீபத்தில் ஒரு நாடகமாக அரங்கேறியது. அதை ஏற்பாடு செய்து நடத்தியவரை அடித்துக் காயப்படுத்தி இருக்கின்றனர். இது ஒரு பழமைவாத ரஷ்ய வன்முறைக் குழு என்று தாக்குதல் நடத்தியவர்களின் பிரச்சாரம் தெரிவிக்கிறதாம். இவை நடப்பதெல்லாம் ரஷ்யாவில், செயிண்ட் பீடர்ஸ்பர்க் நகரில்.

இந்த ரஷ்யப் பழமைவாதக் குழுக்களில் கணிசமான எண்ணிக்கையில் சோவியத் ரஷ்யாவின், முன்னாள் ரஷ்யக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதையும் நாம் கவனிக்கலாம். அது குறித்த செய்தி இங்கே.
ரஷ்யாவில் பல நெடுங்காலப் பார்வை கொண்ட மனிதர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் பற்றி இங்கே.

o00o

பழமைவாதமும் மக்கள் உரிமைகளும்

i69

இன்னொரு பழமைவாதக் குழு ஆஃப்ரிகா, மேற்காசியா, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பலப் பல நாடுகளில் கடந்த சில பத்தாண்டுகளாக இப்படி சாதாரண மக்களையும், பழம் வரலாற்றை நமக்குக் கொடுக்கும் ஆவணங்களாகத் திகழும் இடங்களையும் தாக்கி வன்முறைக்கு ஆட்படுத்தி அழிக்கும் செயலைச் செய்து வருகின்றனர். இந்தக் கும்பல் எது என்று சொல்லாமலேயே தெரிந்திருக்கும். சமீபத்தில் ஃப்ரெஞ்சுப் படையினர் மாலி நாட்டிலிருந்து இந்தக் கும்பலை  ஒழித்துக் கட்டவென்று ஒரு படையெடுப்பைச் செய்து அந்நாட்டின் பெரும் பகுதிகளிலிருந்து இவர்களை விரட்டி இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகப் பல நகரங்களைக் கைப்பற்றி இருந்த இஸ்லாமிசவாதிகள் துரத்தப்பட்டு மக்கள் விடுதலை பெற்ற பின்னர் அந்த ஒரு வருட பயங்கரங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. கடும் இஸ்லாமியம் ஆட்சிக்கு வந்தால் மக்களும், பெண்களும் என்ன அவலங்களைச் சந்திக்க நேரும், என்னவிதமான ஒடுக்குமுறைகள் அவிழ்த்து விடப்படும் என்று கற்பனை கூடச் செய்யாது இந்தியாவில் பல நூறு இந்திய ‘செகுலரியர்கள்’ இந்தக் கடும், கொடும் போக்கோடு சமரசம் செய்ய வேண்டும் என்று இந்தியர்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களானால் கொடும் இஸ்லாமியம் ஆட்சிக்கு வந்தபின் நாட்டை விட்டு ஓடி மேலை நாடுகளில் தஞ்சம் புகக் கூடியவர்கள். தஸ்லிமா நஸ்ரின் படும் பாட்டை அறியாதவர்களா இவர்கள்? இல்லை. ஆனால் இந்துக்கள் கண்களில் பஞ்சைக் கட்டி அவர்களைக் கருத்துக் குருடர்களாக்குவதில் இந்திய செகுலரியர்களுக்கும், இடது சாரிகளுக்கும் நிகர் யாரும் இல்லை.

இஸ்லாமியத் தீவிர வாதம் ஒழிக்கப்பட்டபின் மாலியினரின் நிலையைப் படங்களில் பார்க்க இங்கே செல்லவும்:

இந்தியாவில் பல இடங்களில் இந்துப் பழமை வாதிகளும் இப்படித் தாக்குதல்களை மேற்கொள்கிறார்களே என்று எதிர்வாதம் வரும். மதப் பழமை வாதம் எல்லாம் ஒழிக்கப்பட்டால்தான் மக்கள் உலகில் சீராக மூச்சு விடக் கூட முடியும். மார்க்சியப் பழமை வாதம், தேசியப் பழமைவாதம், பண்பாட்டுப் பழமை வாதம் என்று இன்னும் எத்தனையோ வக்கிரப் போக்குகள் உலகில் நிலவுகின்றன. இவை அனைத்தும் மக்களை ஒடுக்கச் சில குறுங்குழுக்கள் நடத்தும் ஆக்கிரமிப்புகளே. இவற்றைப் பெருஞ்சமூகம் எதிர்த்து நின்று சுதந்திர சிந்தனையின் சார்பில் நின்றால்தான் ஜனநாயகம் தழைக்கும். இன்னொரு குறுங்குழு ஆட்சியை விடாமல் ஆக்கிரமிக்க என்னவும் செய்யும் அவலத்தின் விளைவை இங்கே பாருங்கள்.  (The river of the dead- in syria)

o00o

மறைந்த குறுங்கண்டம் தென்னிந்தியக் கோடியில்

புவியியலாளர்கள் அறிவித்திருக்கிறார்களாம், இந்தியாவுக்கும் மாரிஷியஸ் தீவுகளுக்குமிடையே பண்டைக் காலத்தில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு இருப்பதாக. அது இந்தியாவும் மாரிஷியஸ் தீவுகளும் இணைந்திருந்த ஒரு குறுங்கண்ட நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும், பின் உடைந்து இடைப்பகுதி கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நம் லெமூரியா கண்டத்து ஆதரவாளர்களுக்கு உடனே பெரும் உற்சாகம் எழும் என்பதில் ஐயம் இல்லைதானே.

வெள்ளையர்களுக்கே உரித்தான அறியாமையோடு இந்த ஆய்வாளர்கள் தாம் யாரும் அறியாததைக் கண்டு விட்ட உற்சாகத்தோடு அந்த நிலப்பரப்புக்கு ஒரு பெயர் சூட்டும் வேலையையும் மேற்கொண்டு அதை மாரிடா என்று அழைத்திருக்கின்றனர்.  ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த மாரிடானியாவை இது நினைவுபடுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மையம் ரோம் என்று நினைப்பதில் வெள்ளையருக்கு இணை யாரும் இல்லை. செய்தியை இங்கே பாருங்கள்.