ப்ரூஸ் ஸ்டெர்லிங்க் – ஒரு பேட்டி

இந்த பேட்டி, ப்ரூஸ் ஸ்டெர்லிங்கின் ’லவ் ஈஸ் ஸ்ட்ரேஞ்ச்’ என்கிற நாவலைச் சமீபத்தில் பிரசுரித்த 40key என்கிற பிரசுர நிறுவனத்தின் இதழில் 2 ஜனவரி 2013 அன்று பிரசுரமாயிற்று. அந்த பேட்டியின் மூலத்தை இங்கே படிக்கலாம். கேள்வி கேட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளரே.

கோரி டாக்டொரொவ்: கடைசியாகப் பார்த்தால், தொழில்நுட்பத்தால் உலகம் மேம்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா?

புரூஸ் ஸ்டெர்லிங்: இந்த உலகில் நம் இருவரைப் போல் மனிதராக இல்லாத, வேறெந்த ஜீவனுடைய பார்வையிலுமிருந்தும் இந்தக் கேள்வியைக் கேட்டால், அனேகமாய், ’முன்னேறவில்லை’ எனறுதான் விடை கிட்டும். நிறமிழந்த முயல்களும், மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ஒருக்கால் ‘ஆமாம்’ என்று வாக்குப் போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை உருவாக்கிய கிரேக்கர்கள் காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ, முள்கூம்பு பைன் மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளைக் கேட்பீர்கள்.

மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று அக்கறையோடு எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். நவீன உலகினர் மீது வருங்காலம் இப்படி சொக்குப்பொடி போட்டு வைத்திருப்பதில் ஏதும் விசித்திரமாய் இருக்கிறதா?

புரூஸ்: நம்மைப் போன்ற நவீன உலகினர் பார்வையில், எதிர்காலம் குறித்த என்றைக்குமான இந்தத் தவிப்பு, பன்னெடுங்காலமாக இருந்ததைப் போல மதகுருமார்கள் கையில் முழுதுமாக இருப்பது ஏற்க முடியாதது. உண்மையாகவே ’எதிர்காலத்தியம்’ என்று நாம் சமீபகாலத்தில் உருவாக்கி வைத்திருப்பதில் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” –அப்படி என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. இதனால், நம் காலத்தில் பாரம்பரியவாதிகள் நமக்குப் புரட்சியாளராகத் தெரிகிறார்கள். அதே நேரம், நம் ‘முற்போக்காளர்கள்’ பாரம்பரியக் காவலர்களாகி விட்டார்கள்.

முன்பிருந்த வேறெவரையும் விட இன்றுள்ள நாம், ஏராளமான, நிரம்ப ஆழமுள்ள தகவல்களைச் சேகரிப்பதில் மிக்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம். இப்படி உண்மையிலேயே ஏராளமான தகவல்கள் நம்மிடம் இருப்பதால், நாம் சமூகத்தையே வரைபடமாக மாற்றி விட முடிகிற நிலையில் உள்ளோம். இவற்றின் புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் சகஜமாகப் பயன்படுத்தப்படும் நிலைக்கு மாறும்வரை இவற்றில் நமக்கு ஆர்வம் இருக்கும்.

ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதமானது’’ என்ற புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார் <<நான் புத்திசாலிக் கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் சமூகப் போக்குகளைக் கவனிக்க முடியும்.>>

உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளைப் பொறுக்க முடியுமா?

புரூஸ்: என்னால் போக்குகளைப் பொறுக்க முடியும், ஆனால் அவை எப்படியோ உங்கள் கற்பனையைத் தூண்டினால்தான் நீங்கள் அவற்றைக் கவனிப்பீர்கள். உலகில் முதலாவதான அலை, இருப்பதில் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமானது, தட்பவெப்ப நிலை மாற்றம்தான். அதைக் கவனிக்க வேண்டி இருப்பதை மக்கள் வெறுக்கிறார்கள்; குற்ற உணர்வால் அதிலிருந்து ஒதுங்கப் பார்க்கிறார்கள், அல்லது அது நடப்பதை அதிர்ந்து மறுக்க முயல்கிறார்கள், ஆனால் அது உங்களது எதிர்காலத்தை, இப்போது நடக்கும் வேறெதையும் விட ஆழமாக, முற்றிலுமாக மாற்றப் போகிறது.

என்னளவில் என்றால், எனக்கு வளர்ச்சி அலைகளைக் கவனிப்பதில் ஆர்வம் உண்டு. வலு சேர்க்கப்பட்ட எதார்த்தம், பயன்பாட்டிலிருந்து வழுவிய ஊடகங்கள், டிஜிடல் ஊடகத்தில் எழும் புது மொழிவடிவுகள், பொருட்களின் உலகவலை, மேலும் அமெரிக்காவைத் தாண்டிய உலகில் பரவல் இசையில் தோன்றும் அலைகள் போன்றனவற்றைக் கவனிக்கிறேன். இவை உலகின் மிக முக்கியமான போக்குகள் இல்லை,ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. நான் புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. அதனால்தான் இவை எல்லாம் என்னுடைய வலைப்பதிவில் வகைப்பாடுகளாகக் காணப்படுகின்றன.

இந்த உலகம் பல்வேறு ”போக்குகளால்” நிரம்பியது. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றையாவது எடுத்துக் கொண்டு அதனுடன் நன்கு பழகினால்தான், அந்தப் போக்கு நிகழ்கிறது என்பதை அறிவதால் ஏதும் நாம் பயனடைய முடியும். உதாரணமாக, புகை பிடித்தல் என்ற போக்கை எடுங்கள். புகை பிடித்தால் உடல்நலம் கெடும் என்பதும் தெரிந்ததே.அனைவரும் அதையே உங்களிடம் இரைகிறார்கள். அது சட்டத்திலும் எழுதப்பட்டு, அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே படம் எல்லாம் போட்டு குறிக்கப்படுகிறது.. எனவே, அந்தப் ‘போக்கு’ குறித்தும், விளைவுகளைப் பற்றியும் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், ஒரு நாள் அந்த விளைவைப் பற்றி உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டாலொழிய, அந்த பாதிப்பு உங்களுக்கு முக்கியமாகத் தெரிந்தாலொழிய, அப்படி யோசனையில்லாது அதற்கு அடிமையாகி இருப்பதை நீங்கள் விடப்போவதில்லை. அது ஒரு ‘போக்கு’ என்பதில் ஐயமென்ன இருக்கிறது- அது நடப்பதைப் பலப்பல வருடங்கள் நீங்கள் பார்த்திருக்கக் கூடும், இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்கும்போதே கவனிக்கக் கூடும், அப்புறம் இன்னொன்றை, அடுத்ததைப் பற்ற வைக்கக் கூடும்—ஆனால் அந்தப் ‘போக்கை’ நீங்கள் நன்கு கவனித்து அறிந்து, அதைக் கையாள்வதெப்படி என்று கற்காதவரை அந்தப் பழக்கம் உங்களைப் பீடித்து உங்களை ஆளும், நீங்கள் அதை ஆள்வதில்லை..

கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்தைத் தனி வகையாகப் பிரிப்பது என்றாவது ஒழியுமா? அல்லது ஏற்கனவே இந்த வேறுபாடு கைவிடப்பட்டு விட்டதா?

புரூஸ்: இந்தப் பாகுபாடுகள் எல்லாம் மிகவும் இழுவையானவை. வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளை வாங்குவதற்கான ஏலங்களில் உலகெங்கிலும் இருந்து எப்படிப் போட்டி நடக்கிறது? போட்டி போடுபவர்கள் அந்த ஓவியத்தின் கணினிப் பிரதியைப் பார்த்தபடிதானே தம் விலையைச் சொல்கிறார்கள்.

மின்னணுசார் கலைகளில் ஒரு வகை உண்டு, அது வெளிப்படையாகவும், சுய உணர்வோடும் “மின்னணுசார்”ந்ததாக இருப்பது –அதில் பொதுவாக, பின்னிக் குலைந்திருக்கும் மின்கம்பிகள் காணக் கிடைக்கும, எத்தனை மின்னணு சார்ந்தது அது என்று தெரிவிப்பது போல. அந்த மாதிரி கலைப் படைப்பு கொஞ்ச நாள்தான் கவனம் பெறும், ஆனால் அது எப்போது துவங்கியது என்று சொல்வது எத்தனை கடினமோ அதே போல, அதன் காலம் எப்போது முடிந்தது என்பதைச் சொல்வது கடினம்,. ‘விடியோ கலை’ எப்போது துவங்கியது, எப்போது அது முடியும்? அதே போலவே, ‘கருவிக் கலை’யோ, ‘வலைவழிக் கலை’யோ, ‘மென்பொருள் கலை’யோ பற்றி என்ன சொல்ல முடியும்?

எல்லாக் கலையும் ஒரு நாள் ”மின்னணு சார்” கலையாகி விடுமா என்று கேட்பது எப்படி இருக்கிறதென்றால், ஏதோ ஒருநாள் நேரில் பார்க்கப்பட மேடையேறும் நாடகங்கள் சினிமாவிலிருந்து வேறுபடுத்தப் படாத நிலை வந்து விடுமா என்று கேட்பதைப் போல இருக்கிறது. அப்படி ஒரு நிலையை என்னால் கற்பனை செய்ய முடியும். அது நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது என நான் நினைக்கிறேன். ஆனால் அப்போது ‘மேடை நாடகம்’ என்பதும், ‘சினிமா’ என்பதும் கோட்பாட்டளவில் பயனிழந்த சொற்களாகி இருக்கும், அப்படிப்பட்ட ஒரு சமூகம் நமக்கு மிகவுமே அன்னியமான ஒன்றாகத்தான் இருக்கும்.

பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளின் சூழலில் நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைய சூழலில் அறிவியல் புனைவு எழுத்தாளராக எழுதத் துவங்கினால், நல்ல நுழைவைப் பெறவும், பிரபலமாகவும் என்ன உத்திகளைப் பயன்படுத்துவீர்கள்? வேறு வார்த்தைகளில் சொன்னால், 2013க்கான எளிய தந்திரங்கள் எங்கே உள்ளன?

புரூஸ்: இது கஷ்டமான கேள்வி. ஒரே ஒரு படைப்பு முறையை மட்டும் பிடித்துக் கொண்டு ‘தொழில்’ நடத்துவது என்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிவியல் புனைவுப் படைப்பாளியாகப் ‘பரபரப்பை’ உண்டாக்க வேண்டுமானால் உங்களுக்குச் சமூகவலை உலகில் வலம் வரத் தேவையான பலதும் -இவை சமூகத்தின் விளிம்பில்தான் நடப்பவை என்ற போதும்-தெரியவேண்டும். வலைப்பதிவு செய்யத் தெரிய வேண்டும்; மாநாடுகளுக்குப் போக வேண்டும், கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகு புரிய வேண்டும், கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா, அரும்பொருட்கள் சேமிப்பு.. இத்தியாதி. அறிவியல் புனைவு எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் எழுதிப் பிரசுரிப்பதையும், பத்திரிகைகளில எழுதுவதையும் மட்டும் செய்து கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு. எழுத்தாளராக நுழைவு பெறுவதற்கு முதல் படி என்பது உங்களுக்கு என்ன வாசிக்கப் பிடித்திருக்கிறதோ, அந்த வகைப் படைப்புகளை எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனம் செலுத்தி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். பிறகு அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயலுங்கள். ஒடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலில் பிரமாத சாதனை நிகழ்த்த முயன்று உங்கள் சக்தியை விரயம் செய்வது சலிப்பைத்தான் கொண்டு வரும்.

உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாளரும் பணம் தரத் தயாராக இல்லாவிடில் கொஞ்சமும் ஆச்சரியமே பட வேண்டாம்.

டெட் ஸ்ட்ரீஃபஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, உள்ளீட்டையோ, தற்காலக் கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறி்யதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

புரூஸ்: சுமாராக எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்தாள வாழ்க்கை இந்தப் பிரச்சினையால், மிகவும் சிரமதசையில் இருக்கிறது என்று நான் சொல்ல முடியும். இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய “புத்தகங்களுக்கும்” சம்பந்தமேயில்லை. இந்தப் போராட்டத்தின் பின்விளைவுகள் என்னவென்று சொல்வது சிரமம். ஆனால் என்னால் ஊகிக்க முடியும். வெளிப்படையாகச் சொன்னால், இவற்றால் என்னுடைய எழுத்து நடை கெட்டுப் போயிருக்கிறது.—என்னை வெளிப்படுத்திக் கொள்ள உதவக்கூடிய முறைகளை முழுமையாகக் கற்றுத் தேற எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால், அதுவே என்னை நெகிழ்வாகவும், விழிப்பாகவும் வைத்திருந்திருக்கிறது. இதைத் தற்கால இசைக் கலைஞர்கள் மீது டிஜிட்டல் இசையின் பாதிப்போடு ஒப்பிடலாம்– நிறைய புதிரான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை மிகத் துரிதமாகவும் உருவாக்குகிறார்கள். ஆனால், அவர்கள் அபாரமான இசைஞர்களாவதில்லை.

உலக விரி வலை மூலம் உலகமெங்கும் உள்ளவர்களிடம் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது, அது என் எழுத்தை ஆழமாகப் பாதித்தது.- இத்தனைக்கும், தேசிய பதிப்பு அமைப்புகள் சட்ட முறைகள் மூலம் என்னைக் கட்டுப்படுத்தின. உலகப் புத்தகச் சந்தை என்று ஒன்று இல்லாதது புத்தகங்களை எழுதிப் பிரசுரிப்பதில் என் ஆர்வம் மிகவும் குறையக் காரணமாகி விட்டது. தேசிய புத்தக வெளியீட்டு முறைகள் என்னைப் “பிரசுரிப்பது” இல்லை, மாறாக என்னை ஒளித்து விடுகின்றன. இது குறிப்பாக ஆங்கிலமல்லாத மொழிச் சந்தைகளில் உள்ள எழுத்தாளர்களுக்கு நிறையவே நடக்கிறது, எனக்கு அத்தகையோரில் நிறைய பேரைத் தெரியும், அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி எனக்கு நுட்ப உணர்வு கூடி இருக்கிறது. இது உலகமயமாதலின் பல பொதுப் பிரச்சினைகளில் ஒன்று.

டெட் ஸ்ட்ரீஃபஸ், ஜான் சண்ட்மான்: நெடும் நாவல்களின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலத்தில் குறைவான நீளமுள்ள, உரைநடைத் துண்டுகளின் கோர்வைகள்தான் புழங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை எடுத்துப் படிப்பாரா? அப்படி ஒரு நிகழ்வு நடக்க கொஞ்சமாவது வாய்ப்பிருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு, ஒழுங்கறுத்துத் தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். ஆனால் வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் என்பதை நான் எப்போதுமே அறிந்திருக்கிறேன். இது மேடையேறித் தொடர்ந்து ஜோக்குகளை அள்ளி வீசிப் போகும் நகைச்சுவைப் பேச்சாளரின் நிகழ்ச்சியை ஒத்தது.

டெட் ஸ்ட்ரீஃபஸ்: நல்ல அறிபுனைவு எழுத்தாளர்களைப் போல் (அல்லது, பல சிறப்பான அறிவியல் புனைவெழுத்தாளர்களைப் போல) நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள்- சொற்களாகவோ, சொற்றொடர்களாகவோ, “பக்கிஜங்க்’, ‘மேஜர் கன்ஸென்ஸஸ் நாரெடிவ்”, ‘ஸ்பைம்” இத்தியாதிகள்.
சொல்லாக்கங்கள் போன்றனவற்றை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றாலும், மொழியின் எல்லைகளை இப்படிச் சோதிப்பது அவசியமா?

புரூஸ்: அதெல்லாம் நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோற்றம் தரலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, சமூக மாற்றம்தான் மொழியில் உள்ள இடைவெளிகளை உணர்த்துகிறது. . உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் கருத்தை எடுங்கள், அது என் நோக்கில், அந்த இணையத்தினுள்ளே இருக்கவென்று குறிப்பாக உருவாக்கப்பட்ட ஒரு “பொருளை”க் குறிக்கும் சொல்லுக்கான இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது. அந்தப் “பொருள்’ என்ன மாதிரியான “பொருள்”? “ஸ்பைம்” என்பது ஒரு உயர்ந்த சொல்லாக்கம் இல்லை, ஆனால் யாருக்காவது அது வேண்டுமென்றால் அது இப்போது கிட்டுகிறது.

சர்ச்சிக்க ஒரு பிரச்சினை இருக்கிறது, ஆனால் அதைச் நேராகச் சுட்டிப் பேச முடியாமல், சுற்றி வளைத்துத்தான் பேசவேண்டி வருகிறதென்றால்,

அந்தக் குழப்படியைத் தீர்க்க ஒரு சொல்லை உருவாக்கினால் என்ன தவறு? ஆங்கிலத்தின் பல வட்டார வழக்குகளில், ஆயிரக்கணக்கான புது கொச்சைச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘பக்கிஜங்க்’ என்று புது வார்த்தையை நான் உருவாக்குவதால் ஆங்கிலம் உருக்குலைந்து, அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன். ”பக்மினிஸ்டர்ஃபுல்லரீன்” என்கிற எளிதில் அழிக்கப் பட முடியாத ஒரு பொருளைக் கொண்டு நிறைய பயன்படு பொருட்களை உருவாக்குவதில் உள்ள மாசுபடல் பிரச்சினைகளை அது முன் கணித்துச் சுட்டுகிறது.

‘குப்பைவெளி’ (junkspace) என்றும் மொத்தையுரு(blobject) என்றும் கலகலப்பான சொற்களை நான் உருவாக்குவதாகச் சிலர் நினைக்கிறார்கள். நான் செய்யாதவை அவை. இந்த சொல்லாட்சிகள் இருந்ததைக் கண்டுபிடித்துப் புழக்கத்தில் விட்டுப் பரவலாக்கியது மட்டுமே நான். அதனால் எனக்கு என்ன குறைந்து போச்சு? நான் அறிபுனைவு எழுத்தாளன். புது வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.

மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாராத வகையில் நம் பொருட்களில் எவை நம் காலங்கடந்து நிற்கும்?

புரூஸ்: பெரும்பாலும், பழங்காலத்தின் பொருட்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கின்றன. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். நெடுங்காலம் வெற்றிகரமாக நீடித்து நின்ற பொருட்களில் அது இருக்கிறது, நம் காலத்துப் பொருட்களில் 99.9% பொருட்களை விட அதிக காலம் அது நீடிக்க வாய்ப்பு அதிகம். நாம் சேமிக்கும் மின் தகவல்களை விட காகிதமே தகவலாக நெடுநாள் நீடிக்கும் என்று சொன்னால் சிறிது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழிக்கப்படும், தொலையக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.

மற்ற நாகரிகங்களைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடுகள் மாதிரி குப்பை மலைகளைக் கொண்டிருக்கிறோம்.

bs

ரிச்சர்ட் நாஷ்: நீங்கள் முன்பொரு முறை குறித்ததை நான் கேட்டிருக்கிறேன், உங்களுக்கு எதிர்காலம் பற்றி நிச்சயமாகத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அது நம் எல்லாருக்கும் வயது அதிகரித்து வருகிறது என்பது என்று, அனைவரின் ஆயுளும் அதிகரித்து வருவதால் பண்பாட்டில் என்ன முக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?

புரூஸ்: இன்றைய ஓய்வு பெற்ற முதியோர் சமூகங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஜெனோவா நகரத்தை யூரோப்பில் ’”முதிய’ நகரமாக சொல்கிறார்கள். அங்கு அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.

ஜெனோவாவின் அன்றாட வாழ்வின் சிறு சிறு விஷயங்களில் இதன் தாக்கம் புலப்படும். பேருந்துகளில் தடுமாற்றத்தோடு ஏறி இறங்கும் முதியோர் நிறைந்திருப்பதால் அவை நிறுத்தங்களில் நின்றிருப்பதில் எவ்வளவு நேரத்தைக் கழிக்கின்றன என்பதில் தெரியும். வயதானவர்கள் நிறைந்திருப்பதால் காஃபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை, வாடிக்கையாளர்கள் கத்துவதில்லை, கைகளை ஆட்டுவதில்லை, இங்குமங்கும் திரிவதில்லை. ஜெனோவா நகரத்து இளைஞர்கள்/ சிறுவர்கள் தற்பாதுகாப்புக்கென்பது போல குழுக்களாகச் சேர்ந்து கொள்கிறார்கள். ஜெனோவா மூதாட்டிகள் நிறைந்த நகரமாக இருக்கிறது- ஆயுள்காலம் அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் எண்ணிக்கைச் சமநிலை மாறுகிறது.

வயதானவர்கள் நிறைந்த உலகம் என்பது அதிர்ச்சி தருமளவு வித்தியாசமானதல்ல. ஆனால், ஜெனோவாவை மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு மிகவும் தண்டம். ஜெனோவாவோடு ஒப்பீட்டில் மாஸ்கோ வாழக் கடினமான நகரம், இரைச்சலும், கவர்ச்சியும், கூச்சலும் நிறைந்திருக்கும்.

ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் முக்கியமான கலாச்சார மாற்றங்களாக இன்று வரை என்ன ஆகியிருக்கின்றன, இனி என்ன நடக்கும்? இதைத் தொடரும் கேள்வியாக, ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ குழந்தை பெறுவது குறைந்து கொண்டே போகிறது, இந்த இரு போக்குகளும், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதென்ற நிலையை எதிர்கொள்ளும்போது என்ன நடக்கும்?

புரூஸ்: கருவுறுதல் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நீடிக்கும். அதற்கப்புறம் எந்தக் குழுவோட குழந்தைப் பேறு குறைந்து போனதோ, அவர்களிருந்த இடங்களை, அப்படி பிள்ளைப் பேறு குறைவடையாத இன்னொரு குழு நிரப்பி விடும். இன்னொரு விதமாகச் சொல்வதனால், பணக்காரங்க குழந்தை பெறவில்லையென்றால், புது பணக்காரர்கள் கிளம்புவார்கள்.

ஆயுள் காலம் அதிகரித்துக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகி விடும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்றைக்குமே வேலை செய்ததில்லை.

நீண்ட ஆயுள் உள்ளவர்களாக நிறைய பேர்களை ஆக்குவது மிக எளிது. ஆனால், மனிதர்களின் மொத்த ஆயுட்காலம் என்பதை நீட்டிப்பதற்கு நாம் ஏதும் செய்துவிடவில்லை. அதைச் செய்ய முடியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதைப் பற்றி நானே நிறைய அறிவியல் புனைவுகள் எழுதி இருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், அப்படி ஒண்ணும் நடந்துவிடவில்லை.

சோதனை எலியின் ஆயுளையாவது ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடிந்தால், ‘மெதுஸெலா’ எலிகளைப் பார்க்கத் துவங்கினோமானால், என்னோட மனோபாவம் உடனடியாக மாறும்; கூடவே மிகவும் கவலைப்பட ஆரம்பிப்பேன்; அப்போது அரசியலில், சட்டத்தில், அறத்தில், பொருளாதாரத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திருப்பி விட முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.

மரியான் டு பியர்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலததின் போற்றக் கூடிய ஒரு நற்குணமாக எதைச் சொல்வீர்கள்? உங்களுக்கு நம் வருங்காலத்தின் மீது பெருத்த நம்பிக்கையைத் தருகிற விஷயம் எது?

புரூஸ்: என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்துதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கொஞ்சம் கூடக் கணிக்கவே முடியாதவையும், நம் அறிதிறனுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவையுமான தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதைத்தான் காலங்காலமாகச் செய்து வருகிறோம். எப்படியோ நாம் தொடர்ந்து புதுப் புதுத் தவறுகளாகச் செய்து வருகிறோம் என்றால், அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன என்றுதானாகும். அதனால், நம் தொலைநோக்கை விட, நம் வெகுளித்தனத்தைத் தான் நான் நம்முடைய போற்றக் கூடிய நற்குணமாகக் கருதுகிறேன்.

நீல்ஸ் கில்மேன்:இலக்கியங்களில் வருங்காலமறிந்து சொன்னதில் எவற்றைச் சாதனை செய்தவை என்பீர்கள்?

புரூஸ்: சாதனைச் சின்னம் என்று பார்த்தால் நிச்சயமாய் வன்னீவர் புஷ் (Vannevar Bush) எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think)யைச் சொல்வேன். ஆனால், அது பரவல் அறிவியல் கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ளப்படாதோ என்னவோ. எனினும், அசாத்தியமானது. ‘துணிச்சலான புது உலக’த்தில் (Brave New World) ஓல்டஸ் ஹக்ஸ்லி நிறைய முன்கணிப்புகளைச் சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தின. ழ்ஜில் வெர்னின் (Jules Verne) முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயாசமாக முன்கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை புத்தகமாகப் பிரசுரிக்க முடியவில்லை என்பதால் ’சாதனை’யாகவில்லை. ஆல்பர்ட் ரொபிதாவின் கருத்துப் படங்கள் கேலி சித்திரங்களே எனினும் வரப்போவதை முன்கணித்ததில் அவற்றின் சாதனை அதிசயமானது.

ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் என்பது நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?

புரூஸ்: நான் ’மிகைப்படுத்தப்பட்ட எதார்த்தத்தின்”[Augmented reality] மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவிதங்களில் சிதறப் போகிறது. பலவிதமான மென்பொருள்களும், கருவிகளும், அணுகல்களும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.

கணினித்துறைக்கு ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ பொதுவாக அவசியம் ஏனெனில் அது அத்துறையின் மீமெய்யியல் லட்சியங்களில் ஒன்று – எது நிஜம்? நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? இவற்றிற்கு விடை என்னவென்றால், கணினித் துறையினால் ’யதார்த்த’த்திற்கு எந்த ஆபத்துமில்லை. ஆனால், மேற்படி முயற்சியில் கிட்டும் பல சுவாரசியமான விஷயங்கள் “விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்?” என்பது போன்ற எளிமையான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் கிட்டாதவை.

  0000000000000000000000

குறிப்புகள்:

  bsப்ரூஸ் ஸ்டெர்லிங் அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்கிற நகரில் 1954 ஆம் வருடம் பிறந்தவர். அறிவியல் நவீனங்கள் எழுதிப் புகழ் பெற்றவரானார். அறிவியல் நவீனங்களில் ‘சைபர் பங்க்’ என்கிற ஒரு கிளைப் பிரிவைத் தோற்றுவித்த சிலரில் இவர் ஒருவர் என்று அறியப்பட்டவர். சமீப காலத்தில் இவர் வலையுலகின் விமர்சகர்களில் ஒருவராகவும், சைபர் உலகின் கருத்தாளராகவும் அறியப்பட்டு, யூரோபியன் உயர்கல்வி நிலையம் ஒன்றில் விரிவுரையாளராகச் செயலாற்றுகிறார். அது இவர் செய்யும் பல வகைத் தொழில்களில் ஒன்று.

  சிறுவனாக இருக்கையில் இந்தியாவில் நிறைய காலம் செலவழித்திருக்கிறார் என்பதால் பம்பாயின் ஹிந்திப் படங்களை விரும்பிப் பார்க்கிறார். 1977 இல் முதல் புத்தகம் பிரசுரம், அதற்குப் பிறகு ஏராளமான நாவல்கள், சில பத்திரிகைகள், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் ‘காலேஜ் ஆஃப் டிஸைனி’ல் ஒரு நிலைய தீர்க்கதரிசி என்று ஒரு பதவி, காம்ப்பெல் விருது (1989), ஹூகோ விருது (1997, 1999), ஹயகாவா விருது (1999), க்ளார்க் விருது (2000) ஆகியன இவரது வரலாறு.

  விரிடியன் டிஸைன் மூவ்மெண்ட் என்ற ஒரு இயக்கத்தை நிறுவியவர் இவர். இது ஒரு சூழல் அழகியல் இயக்கம். இதன் மூலக் கருத்துகள், உலகக் குடியுரிமை, சூழல் அமைப்பியல், மேலும் பொறிநுட்ப முற்போக்குப் பார்வை. இவர் எழுதிய சில புத்தகங்களில் பட்டியல் இது: ஹெவி வெதர் (1994) ஹோலி ஃபயர் (1996), ஜைய்ட்கெய்ஸ்ட்(2000) … த கர்யாடிட்ஸ் (2009) ஆகிய புனைவுகள். தவிர, அ-புனைவுகளாக, த ஹாக்கர் க்ராக்டௌன்: லா அண்ட் ஆர்டர் ஆன் தி எலெக்ட்ரானிக் ஃப்ராண்டியர் (1993), … ஷேப்பிங் திங்ஸ் (2005) போன்றன.

  ——————————————————-
  [1] Buckyjunk, major consensus narrative, Spime என்ற மூன்று இங்கே குறிக்கப்பட்டவற்றின் மூலச் சொற்கள். Bucky என்பது Buckminister Fuller எனப்பட்ட ஒரு அசாதாரணமான சிந்தனையாளரையும், அவருடைய கண்டுபிடிப்புப் பொருள் ஒன்றையும் குறிக்கும்.
  O000O