மனிதர்களைப் போல வீடுகளுடனும் பழக பல மாதங்கள் ஆகிறது. பத்து வருடம் குடியிருந்த பழைய வீட்டில் கண்ணைக் கட்டிகொண்டு இருந்துவிடலாம், பழகிய கதியில் சிரமமே இல்லாமல் எந்த பருவத்தில் எந்த அறையில் படிக்க சரியான வெளிச்சம், படுக்க இதமாய் காற்று, எங்கே உட்கார்ந்துகொண்டால் வீட்டின் சப்தங்கள் முழுதும் காதில் விழும் என்றெல்லாம் பழகி இருக்கும். புதுவீட்டின் லயத்துக்கு இன்னும் மனமும் உடலும் பழகவில்லை. சொந்த வீடு, பார்த்துப் பார்த்துக் கட்டியது, வாழ்நாளின் சேமிப்பில் முக்கால்பகுதியை விழுங்கியது – ஆனால் இன்னும் அதனிடம் ஒட்டுதல் வரவில்லை. படுத்த உடன் தூக்கம் வருவதில்லை. கட்டிலை வேறு வேறு திசைகளில் மாற்றிப் போட்டுப் பார்த்தாயிற்று. புது காலனி. என்பதால் இன்னும் அதிகமாய் வீடுகளும், மரங்களும் இல்லாததில் ஒன்பது மணிக்கே அமைதி சூழ்ந்துவிடுகிறது. கட்டுமானத்தில் இருக்கும். கட்டிடங்களில் தொழிலாளர்கள் பத்து மணிக்குள் அசதியில் தூங்கி விடுகிறார்கள். வார இறுதியில்தான் யாராவது ஒருவன் குடித்துவிட்டுக் கத்த ஆரம்பிப்பான்.
அன்று ஒருவழியாய் 11- 11:30க்கு நான் கண் அயர்ந்திருக்கலாம். அமைதியின் ஆழத்தில் இன்னும் அதிகரித்துக் கேட்ட ஒரு அமானுஷ்யமான அலறலில் அதிர்ந்து எழுந்தேன். திரும்பவும் கேட்டது. விளக்கைப் போடாமல் தெருவிளக்கின் வெளிச்சத்திலேயே ஜன்னல் வழியே பார்த்தேன். எதிரே கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடத்தின் அருகே ஒரு பத்துப் பன்னிரண்டு வயது சின்னப்பெண், உட்கார்ந்திருந்தது தெரிந்தது. யாராவது அவளை பலாத்காரம் செய்யப்பார்க்கிறார்களோ? போலிசுக்குப் போன் செய்வோமா என்றெல்லாம் அவசரமாய் யோசித்துக் கொண்டிருக்கையில் கட்டிடத்தின் வாட்ச்மன் வெளியே வந்து அவளுடன் பேசுவது தெரிந்தது. அவன் பேசப் பேச அவள் அதே போல கத்திக் கொண்டிருந்தாள். அதற்குள் காலனியின் கூர்க்கா வாட்ச்மன் லாட்டியை தட்டிக் கொண்டு விஸில் அடித்தபடி ரோந்து வரும் சத்தம் கேட்டதும் பயந்த நாய்குட்டி போல கட்டிடத்தின் இருளில் ஒடுங்கிக் கொண்டாள்.
வந்த தூக்கமும் இந்த ட்ராமாவில் கலைந்து போக, புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
மறுநாள் மாலை வேலையிலிருந்து திரும்பும்போது அந்தப் பெண்ணை அதே கட்டிடத்தில் பக்கத்தில் திரும்பப் பார்த்தேன். 25 , 30 வயது இருக்குமோ என்னவோ. மொட்டைத் தலையில் முடி அங்கங்கே முளைத்திருந்தது. மண்டையில் நீளமாய் தையல் போட்ட தழும்பு இருந்தது. குச்சியான உடம்பிற்கு மிகபெரிதான ஒரு நைட்டியை போட்டுக் கொண்டிருந்தாள். நிறைய கிழிசல்கள். கையில் எதையோ வைத்துக் கொண்டு கட்டிட வாட்ச்மேனின் சின்னக் குழந்தையை ‘வா வா’ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை, இரண்டு வயதிருக்கலாம், உட்கார்ந்த இடத்திலேயே, விரலை வாயில் வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. செங்கல் சுமந்து கொண்டிருந்த குழந்தையின் தாயார் அதன் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே வேலை செய்வது தெரிந்தது.
உள்ளே போய் என் பெண்ணின் நைட்டி ஒன்றும் கொஞ்சம் ப்ரெட்டும் எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுத்தேன். நைட்டியை வாங்கிக் கொண்டு அதை என்ன செய்வது எனப் புரியாமல் என்னைப் பார்த்தாள். பிறகு அதை பக்கத்தில் வைத்துவிட்டு ப்ரெட்டை தின்ன ஆரம்பித்தாள். ‘பசிச்சா என் வீட்டில் வந்து கேளு. ராத்திரி கத்தி எல்லார் தூக்கத்தையும் கெடுக்கக் கூடாது. தெரிந்ததா?’ என்றேன். அந்த இரண்டு வயது குழந்தையைப் போலவே என்னை மலங்க மலங்கப் பார்த்தாள். அதையே திரும்ப கன்னடத்தில் சொன்னேன். மறுபடியும் அதே பார்வை. ‘அதுக்கு ஒண்ணும் புரியாதும்மா’ என்றான் கட்டிடத்தில் வேலை செய்பவன் ஒருவன். கையை தன் பொட்டருகே சுற்றிக் காட்டி அவள் பைத்தியம் என்று சைகை செய்தான்.
பிறகு வந்த நாட்களில் அவள் அங்கேயேதான் இருந்தாள். பெரும்பாலும் அந்தக் குழந்தை கண்ணில் படும்படி உட்கார்ந்து கொண்டிருப்பாள். அதையே பார்த்துக்கொண்டு. சிலநாள் இரவு அலறுவாள். சற்று நேரத்துக்குப் பின் அடங்கிப் போவாள். இதைத் தவிர அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. நான் சொல்லியிருந்தபோதும் ஒருநாள்கூட என்னிடம் வந்து சாப்பாடு கொடு என்று கேட்டதில்லை. நானாக ஏதானும் கொடுத்தால் சிலசமயம் சாப்பிடுவாள். சிலசமயம் வைத்துவிடுவாள். ஒரு ஞாயிறன்று வாட்ச்மேனின் மனைவி அவளுக்கும் ஒரு தட்டில் சாப்பாடு கொடுப்பதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.
ஒருநாள் மாலை வாசலில் ஏதோ கலவரம். என்னவென்று போய் பார்த்தால் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இந்தப் பைத்தியம் கொடுக்க மாட்டெனென்கிறது. குழந்தையோ பயந்து அலறுகிறது. இவள் கையில் ஒரு பன்னை வைத்துக்கொண்டு ‘இந்தா இந்தா’ என்று குழந்தையை பலவந்தப்படுத்தி ஊட்டிக் கொண்டிருக்கிறாள். குழந்தையின் அம்மாவுக்கோ அவளிடம் போக பயம். அவள் இறுக்கிப் பிடிப்பதில் குழந்தைக்கு ஏதானும் ஆகிவிடப்போகிறதே என்று எனக்கு டென்ஷன். அதற்குள் குழந்தையின் அப்பா வந்தான். அவனைப் பார்த்ததும் பைத்தியத்தின் பிடி தளர்ந்தது. அவன் அவளிடம் போய் வெறுமே ‘ கொடு’ என்றான். இவள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் போல கொடுத்துவிட்டு விசும்ப ஆரம்பித்தாள்.
‘அதுக்குத்தான் பைத்தியம்னு தெரியுமில்லை. குழந்தையை ஜாக்கிரதையாய் பார்த்துக்கக் கூடாது? இரு போலிசுக்கு போன் பண்றேன்’ என்றேன்.
‘வேண்டாம்மா. அது ஒண்ணும் செய்யாது. இருந்துட்டு போகட்டும்,’ என்ற குழந்தையின் தாயை விசித்திரமாய் பார்த்துவிட்டு நான் உள்ளே போனேன். இந்த மக்களை என்னால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. குழந்தைக்கு ஏதானும் ஆகி வைத்தால்!
இதுபோன்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து காயப்பட்டுக்கொண்ட அனுபவம் எனக்கு ஏற்கனவே உண்டு. என் வேலைக்காரியின் கணவன் அவளை சதா குடித்துவிட்டு அடிப்பதைப் பார்க்கப் பொறுக்காமல் ஒருநாள் அவளிடம் ‘நீ இனிமேல் இங்கேயே இரு. உன் சம்பளம் இல்லாமல் எங்கே போய் குடிக்கிறான் என்று பார்க்கலாம்’. என்றெல்லாம் சொல்லி வீட்டில் இடம் செய்து கொடுத்தேன். இரண்டு நாட்களுக்குப் பின் அவள் கணவன் வந்து வாசலில் கலாட்டா செய்தான் ‘ஆமாம், அவள் இனிமேல் அங்கே உன்னிடம் சம்பளத்தையும் கொடுத்து, அடியும் உதையும் பட வரமாட்டாள். போ’ என்று கண்டித்து அனுப்பிவிட்டேன். ஒருவாரம் போனபின் இவளே தயங்கி தயங்கி வந்து ‘ என் பக்கத்து வீட்டு வள்ளி வந்து சொல்லிச்சு. என் வூட்டுக்காரரு உடம்பு முடியாமெ படுத்துட்டாராம். போய் பாத்துட்டு நாளைக்கு வந்துடட்டா. பாவம் அதுக்கும் வேறே யார் இருக்கா’ என்றதும் எனக்கு வந்த கோபத்துக்கு அவளை ‘சரி, இப்போ போனால் திரும்ப வராதே’ என்றேன். ‘நான் இருக்கச்சே அதை எப்படி வாணா போன்னு வுட்டுட முடியுமாம்மா” என்று போய்விட்டாள்!
இதற்குப் பின் என் தர்ம நியாய சட்டங்களின்படி இவர்கள் வாழ்வை அணுகுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். உதவி கேட்டு வந்தாலொழிய நானாகப் போய் எதையும் தலையில் போட்டுக் கொள்வதும் இல்லை. ஆனால் அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் குழந்தை எங்கே இருக்கிறது என்று கண்ணும் மனசும் கண்காணிப்பது தெரிந்தது.
அடுத்த சிலநாட்களில் எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலை அதிகம் இருந்ததால் அந்த வாட்ச்மெனின் மனைவியை உதவிக்குக் கூப்பிட்டேன். பேச்சுவாக்கில் அந்த பிச்சியைப் பற்றி விசாரித்தேன்.
‘ரெண்டு வருஷம் முன்னாலெ வரைக்கும் இதுவும் எங்க கூடதான் வேலை செஞ்சிட்டிருந்திச்சு. அதா அந்த அபார்ட்மெண்ட் பில்டிங் இருக்கிதில்லியா அங்கே. இதும்பேரு பாக்கியா. ஒருநாள் கட்டிட மேல்மாடிலேர்ந்து ஒரு பெரிய கல்லு இதுந்தலைமேலே வியுந்திருச்சு.. கட்டிட ஓனர் ஆஸ்பத்ரிலே சேத்து ஆப்ரேஷன் எல்லாம் செஞ்சாங்க. பொழைச்சப்றம் புத்தி சரியில்லாமே போச்சா, இத்தைகொண்டு ஓசூர் பக்கத்திலே இத்தோட அம்மா வூட்லே இவுருதான் வுட்டுட்டு வந்தாரு. எப்படியோ தப்பிச்சுக்கிட்டு இங்கே வந்திருச்சு. அவுங்க அண்ணன் தம்பி வந்து கூப்டா ஒரே கூச்சல் கலாட்டா போவமாட்டேங்குது. கொயந்தையைக் காட்டி அழுதுச்சா, சரி போன்னு என் புருஷன் அது இங்கேயே இருந்துட்டு போவட்டுன்னுட்டாரு” என்றாள்.
அதற்குள் போன் அடிக்க இந்தப் பேச்சு அத்துடன் நின்றுபோனது.
ஒருவாரம் ஊருக்குப் போய்விட்டுத் திரும்புகையில் தெரு அதிக அமைதியாய் இருந்ததுபோல் இருந்தது. பாக்கியாவும் கண்ணில் படவில்லை.
‘கடைசியில் ஊருக்குப் போயே விட்டாளோ. நல்லதுதான்” என்று நினைத்துக்கொண்டேன். வேலைக்காரி வந்ததும் கேட்டேன்.
‘ஐயோ அத்தை ஏம்மா கேக்கிறே. நாலு நா முந்தி ராவிலே எட்டு மணிபோல இருக்கும். அந்தக் கொயந்தை பிஸ்கோத்து இன்னாமோ துன்னுட்டிருந்திச்சாம். அப்போ இந்த தெருநாயி ஒன்னு அதாண்டே போயிருக்கிது. அத்தை இந்த பாக்கியா பாத்துட்டு அந்த நாயி மேலே பாஞ்சு அது அவளை புடிங்கிடுச்சாம். ரொம்ப ரத்தமாம். கவ்மெண்ட் ஆஸ்பத்ரிலே சேத்திருக்கிறாங்கோ. அது இன்னா வெறிபுட்ச நாயொ. அவ அவ்ளோதான்” என்றாள்.
பின்பு வந்த இரவுகளில் பாக்கியாவின் சத்தத்தை எதிர்பார்த்து என் மனம் காத்திருந்தது.
பலமாதங்களுக்குப் பின் காலையில் உலாவப் போகையில் நான்கு தெருதாண்டி இன்னொரு கட்டிடத்தில் இந்த வாட்ச்மேனும் அவன் மனைவியும் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் மனைவி என்னைப் பார்த்ததும் ‘நல்லா இருக்கியாம்மா?’ என்றாள். ‘ஆங். நீ? கொழந்தை?’ என்றேன். ‘அதோ அங்கே ஆடிட்டிருக்கா பாரு’ என்று கைகாட்டினாள். குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண். ‘அது யார்? பாக்கியாவா?’ என்றேன்.
‘ஆமாம்மா. நாய்கடிலேந்து பொயச்சுடிச்சு. திரும்ப கொயந்தையை தேடிக்கிட்டு வந்திருச்சு” என்றாள்.
‘அதென்ன பாசமோ போ ஒன் கொழந்தைகிட்டே’ என்றேன்.
‘அதுங் கொயந்தைதாம்மா. அதுக்கு ஆக்ஸ்டெண்ட் ஆனப்போ கொயந்தைக்கு 6 மாசம். அதான் அத்தை பாத்துக்க அதும் புருஷன் என்னை கட்டிக்கிட்டாரு. இது பொயச்சு வரும்னு யாருக்குத் தெரியும். இதுக்கு ஆயுசு கெட்டி,’ என்றாள்.