சீனா குட்டி

போன வருடம் அக்டோபர் 29-ம் தேதி மற்றுமொரு நாளாகத்தான் கடந்து கொண்டிருந்தது. இலக்கில்லாமல் ஃபேஸ்புக்கை மேய்ந்து கொண்டிருந்த போதுதான் ’சீனா குட்டி’ என்று அறியப்பட்ட வித்வான் மதுரை சீனிவாசன் மறைந்த செய்தி கண்ணில்பட்டது.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது தொலைபேசி அவரை அழைத்திராதிருந்தால்…”, என்று அத்தைக்கு மீசை வளர்த்தபடி அவருடன் கழித்த அந்த ஞாயிறு காலையை மனத்துக்குள் ஓட்டிப் பார்த்தேன்.

வளசரவாக்கம் பெத்தானியா நகரில் அவர் வீட்டை அடைந்த போது, அவர் வீட்டின் உள் அறையில் ஒரு மாணவிக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது கிட்டத்தட்ட 77 வயது. தன் வயதை விட 15 வயது குறைந்தவராய் எனக்குத் தோன்றினார். வித்வான்கள் வழக்கமாய் வெளிப்படுத்தும் போலி சுயதாழ்த்தலோ, அபரிமிதமான உதட்டளவு உபசரிப்போ கிஞ்சித்தும் இல்லாமல் உரத்த குரலில் என்னிடம் அன்பொழுகப் பேசினார். அவர் பெரிய சிரிப்பை உதிர்த்த போதெல்லாம் அவர் கண்களும் சிரித்து என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவர் கையில் இருந்த நீளமான 192 பக்க நோட்டுப் புத்தகம், பல முறை உபயோகத்தினால் ஓரங்களில் நைந்திருந்தது. அவர் புனைந்திருந்த பாடல்களின் தொகுப்பே அந்த நோட்டுப் புத்தகம் என்பது பேச்சு வாக்கில் தெரிய வந்தது.

‘கருணை தெய்வமே கற்பகமே’ என்ற சிந்து பைரவி ராகப் பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தப் பாடலைத் தவிர அவர் பாடல் வேறு ஒன்றையும் நான் கேட்டிராதபடியால், அந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்ததும் அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. தயங்கித் தயங்கி அவரிடம் அதைச் சொன்னேன்.

மீண்டுமொரு அந்தக் கண்கள் சிரித்தன. “இவளுக்கே நிறைய பாடமுண்டு”, என்று அவர் மாணவியை நோக்கி “ஒரு அரை மணி பாடலாமா? உனக்கு டைம் இருக்கா?”, என்றார்.

அந்தப் பெண் ஸ்ருதியுடன் கலந்து பாட ஆரம்பித்தாள்.

அவரிடம் திரையுலக அனுபவங்கள். கச்சேரியில் வாசிப்பதற்கும் சினிமாவுக்கு வாசிப்பதற்கும் உள்ள வேறுபாடு, சினிமாவில் வாசித்ததால் அவர் கச்சேரி வாய்ப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியெல்லாம் கேட்க நினைத்திருந்தேன். அவர் பாடல்களை அந்த மாணவி பாட ஆரம்பித்ததும் அவர் வாக்கேயக்கார முகத்தை கடந்து செல்ல மனம் ஒப்பவில்லை.

Courtesy : The Hindu
Courtesy : The Hindu

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சீனிவாசனின் பாடல்களில் ராகத்தின் புதிய பரிமாணங்களையோ, அதிசய லய கோவைகளையோ, கவித்துவம் வாய்ந்த வரிகளையோ நான் கண்டுகொள்ளவில்லை (நான் கண்டு கொள்ளாததால் அவை இல்லை என்று அர்த்தமாகாது). அந்தப் பாடல்களை ஒரு முறை கேட்டாலும் மனதில் ஒட்டிக் கொள்ளும்படியாய் அவை புனையப்பட்டிருக்கின்றன. ராகத்தின் சாரம் இதுதான் என்பதை எளிமையாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன. எட்டு ராகங்களில் அமைந்த அவரது அஷ்ட ராகமாலிகையில் ஒரு வரிதான் ஒரு ராகத்தில் அமைந்துள்ளது என்ற போதும், அந்த ஒரு வரியிலேயே ராகத்தின் ஜீவகளை அழகாக வெளிக் கொணரப்பட்டிருக்கிறது. அழகிய லய வேலைபாடுகள் பொதிந்துள்ள அவரது சுத்த தன்யாஸி வர்ணத்தின் சிட்டை ஸ்வரத்தை, வெறும் ராக பாவத்துக்காக மட்டுமே ரசிக்க முடியும். மூச்சிரைக்க விரட்டிப் பிடிக்கும் ‘பண்டுரீதி’ பாடலைக் (தியாகராஜர் என்ன காலப்ரமாணத்தில் அமைத்தாரென்று தெரியவில்லை. எலியைப் பார்த்த பூனை போல எட்டித் தாவும் காலப்ரமாணமே இன்று கேட்கக் கிடைக்கிறது) கேட்பதை விட இதமாய் வருடம் ‘மந்த்ர பலம்’ என்ற சீனிவாஸனின் கிருதியைக் கேட்டால் ஹம்ஸநாத ராக அமைப்பை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ராகங்களை அடையாளம் காண ஸ்வர ஞானம் தேவையில்லை. இது போன்ற பாடல்களின் போக்குகளை மனதில் நிறுத்திக் கொண்டாலே போதுமானது. அச்சுறுத்தாத வகையில் மாணவர்களுக்கு ராகப் பிரயோகங்கள் பரிச்சயமாக இந்தக் கீர்த்தனங்கள் உதவியாய் இருக்கும்.

கன ராகம், ரக்தி ராகம், சின்ன ராகம், பெரிய ராகம், பிரபல ராகம், அபூர்வ ராகம், ஹிந்துஸ்தானி, கர்நாடகம் என்று அனைத்து வகைகளிலும் சீனிவாஸனின் கிருதிகள் மிளிர்கின்றன. ஆறு அட்சரத்தில் தொடங்கி பதினான்கு அட்சரம் வரையில், ஒன்பது தாளங்களில் சீனிவாசனின் வர்ணங்கள் அமைந்துள்ளன. வாசந்தி, ஜோதிஸ்வரூபிணி, நீதிமதி போன்ற ராகங்களுக்கு இந்த வர்ணங்கள் வரப்ரசாதம். இருபத்திமூன்று தில்லானாக்கள் செய்துள்ள சீனிவாசன் அவற்றைப் பற்றி, “தில்லானாவின் கடைசியில் ஸ்வரமும் ஜதியும் கலந்து வரும். இந்தப் பகுதியில் ஸ்வரமும் ஜதியும் சமமான அளவில் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. பெரும்பாலான தில்லானாகளில் இப்படி சமமாக இல்லாமல்தான் இருக்கின்றன. என்னுடைய அத்தனை தில்லானாகளும், ‘சம எடை’ தில்லாகளாகத்தான் அமைந்துள்ளன.”, என்கிறார்.

‘விளையாட்டாய் ஏதோ செய்ய ஆரம்பித்தேன்’, என்று தன் பாடல்களைப் பற்றி கூறும் சீனிவாசன் நூறு உருப்படிகளுக்கு மேல் கவனம் செய்துள்ளார். திருமால், ஐயப்பன், முருகன், அம்பிகை என்று பல்வேறு தெய்வங்களையும், மதுரை, ஸ்ரீரங்கம், அழகர்கோயில் போன்ற பல்வேறு க்ஷேத்ரங்களையும் பாடு பொருளாய் கொண்டிருக்கிறார். ராகவேந்த்ரர் பெயரில் ‘தஸாங்க’ கிருதிகள் இயற்றியுள்ளார்.

இவை தவிர, நாட்டிய கச்சேரிகளுக்கு பயன் தரும் வகையில், சூலாதிசப்த தாளங்கள் எனப்படும் 35 தாளங்களிலும் அலாரிப்புகளும், ஜதிஸ்வரங்களும் செய்துள்ளார். வழமையில்லாத தாளங்களில் மாணவர்களால் ஆட முடியுமா என்று சில நாட்டிய கலைஞர்கள் தயங்கிய போது, “இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு இவை ஒரு பொருட்டல்ல என்று உற்சாகப்படுத்தினேன்”, என்றார்.

“சென்டரல் கவர்மெண்டுக்கு எழுதிப் போட்டு இருக்கேன். இந்தப் பாட்டையெல்லாம் நல்ல ஸ்டுடியோ-ல பதிவு பண்ணி archive செய்ய உதவி கேட்டு இருக்கேன்”, என்றார்.

அந்த ஆவணப்படுத்தல் இது நாள் வரை நடைபெறாத ஒன்றாக இருக்கிறது. என் சாதாரண வாய்ஸ் ரிக்கார்டரில், ஃபேன் இரைச்சலுக்கும், பேச்சுக் குரல்களுக்கும் இடையே பதிவாகி இருக்கும் அவருடைய 5-6 பாடல்களைத் தவிர வேறு சிலரும் பதிவு செய்திருந்தால் நாம் புண்ணியம் செய்தவர்கள்.

அரை மணி ஆனதும் அலாரம் அடித்தது போல, “கிளம்பம்மா! உனக்கு நேரமாச்சு”, என்று சிஷ்யையை அனுப்பி வைத்தார்.

அப்போது மணி பத்தாகியிருக்கும். இன்னும் ஒரு மணி நேரமாவது அவரைப் பேச வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சூடாக வந்த காப்பியை குடித்த படி நேர்காணலைத் துவங்க, அவர் பேச ஆரம்பித்தார்.

“நான் பிறந்தது 26 ஏப்ரல் 1933-ல். எங்கள் ஊர் மதுரை. என் அப்பா திருவேங்கட ஐயங்கார் ஒரு ஜோதிடர். அம்மா பெயர் அலமேலு. என்னுடைய அண்ணா மதுரை டி.வெங்கடேசன் நன்றாகப் பாடுவார். அடுத்த அண்ணாதான் நாட்டியத்துக்கு பாடுவதில் கொடிகட்டிப் பறந்த மதுரை டி.சேதுராமன்.”

“அவர்கள் வாய்ப்பாட்டுக்கு போன போது, நீங்கள் எப்படி மிருதங்கம் பக்கம் வந்தீர்கள்?”, என்றேன்.

”மதுரை பாலகிருஷ்ண ஐயங்கார் என்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, அவர் தலையில் மிருதங்கம் வாசிப்பது போலத் தட்டினேன். அவர் என் அப்பாவை அழைத்து, ‘இவனுக்கு மிருதங்கம் வரும் போல இருக்கு. விஜயதசமியில் இருந்து சொல்லிக் கொடுக்கிறேன்’, என்றார். சில மாதங்கள் சொல்லிக் கொடுத்தபின் என்னை சோழவந்தான் சேஷ ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து வைக்க என் அப்பாவிடம் பரிந்துரைத்தார். என்னுடைய ஆறாவது வயதில் சேஷ ஐயங்காரிடம் சென்றேன்.”

“அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.”

“சினிமா உலகில் பிரபலமாக இருந்த டி.ஆர்.மகாலிங்கம் சேஷ ஐயங்காரிடம் பயின்றவர்தான். சேஷ ஐயங்கார் பாடுவார், ஆர்மோனியம், வயலின், மிருதங்கம் எல்லாம் வாசிப்பார். இதெல்லாம் ஆச்சர்யம் இல்லை. இவற்றோடு கூட நாகஸ்வரமும் வாசிப்பார். அநேகமாய் நாகஸ்வரம் வாசிக்கத் தெரிந்த ஒரே பிராமணர் இவராகத்தான் இருக்க வேண்டும். எனக்கு ஐந்து வயதான போது அவரிடம் சென்றேன். என்னைப் பாடச் சொன்னார். அந்தக் காலத்தில், ‘குரல் இல்லாவிட்டால்தான் விரல்’. முதல் ஆறு மாதங்களுக்கு வாய்ப்பாட்டுதான் கற்றுக் கொண்டேன். அதன்பின், வாய்ப்பாட்டு மிருதங்கம், இரண்டையும் சேர்த்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.”

”குருகுல முறை பற்றி சொல்லுங்களேன்”

“மாடியும் கீழுமாய் ஒரு பெரிய வீட்டை சிஷ்யர்களுக்காகவே வாடகைக்கு எடுத்திருந்தார் எங்கள் குருநாதர். அந்த வீட்டு வராண்டாவில் 30 பேர் படுத்துத் தூங்கலாம். இவரிடம் படித்த அந்த ஊர் பிள்ளைகள் கூட, இரவுச் சாப்பாடு முடிந்ததும் இந்த வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலையில் ஐந்து மணிக்கு எழுப்பிவிடுவார். ஏழு மணி வரை சாதகம் செய்த பின் ஆத்தங்கரைக்குச் சென்று வருவோம். அப்போதெல்லாம் காலை டிஃபன் என்றால் என்னவென்றே தெரியாது. இட்லி தொசையை கண்ணால் கூட பார்க்க முடியாது. அங்கிருந்த ஆறு வருடங்களும் தினமும் காலையில் பழைய சோறுதான் டிஃபன். ஒன்பது மணிக்கு திண்ணைப் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் மூன்று மணிக்கு நாங்கள் வரும் போது குருநாதர் தயாராக இருப்பார்.”

“அவர் கச்சேரி செய்யவில்லையா?”

“இல்லை. முழு நேர வாத்தியாராகத்தான் இருந்தார். மூன்று மணிக்குத் தொடங்கினால் எட்டு மணி வரை எல்லொருக்கும் பாடம் எடுப்பார். இப்படி ஆறு வருடங்கள் கற்ற பின், என் பெரிய அண்ணா மதுரை டி.வெங்கடேசனின் கச்சேரியில் என் அரங்கேற்றுப்படி நடந்தது. எனக்கு 11 வயதாகும் போது, ‘மெட்ராஸுக்குப் போய் வாசித்து முன்னுக்கு வா’, என்று ஆசிர்வதித்து என்னை என் குருநாதர் அனுப்பி வைத்தார்.”

“அப்போது உங்கள் குடும்பம் மெட்ராஸில் இருந்ததா?”

“இல்லை. எல்லொரும் மதுரையில்தன் இருந்தனர். நானும் என் அப்பாவும் மட்டும் மெட்ராஸுக்கு வந்தோம். திருவல்லிக்கேணி வானமாமலை ஜீயர் மடத்தில் தங்கிக் கொண்டோம். பார்த்தசாரதி கோயிலில் தினமும் மதியம் ஒரு பெரிய மந்தாரை நிறைய எதோ ஒரு வகை அன்னம் பிரசாதமாகக் கிடைக்கும். அந்தக் காலத்தில் அதுதான் எங்களைக் காப்பாற்றியது. என் அப்பாவின் நண்பர் ‘கானம் வைத்தியநாத ஐயர்’ என்றொருவர் இருந்தார். அவர் ஒருநாள் வந்து, “என்ன இப்படி பையனை உண்டக்கட்டி வாங்க வெச்சுண்டு இருக்க? எனக்கு அஞ்சு குழந்தைங்க. இவன் ஆறாவது இருக்கட்டும்.”, என்று கூறி என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் மூத்த பெண் அலமேலு நன்றாகப் பாடுவாள். அந்த அம்முலு அக்காதான் என்னை, ‘இதை வாசி, அதை வாசி’, என்று வாசிக்க வைத்தவர்.”

“மெட்ராஸில் முதலில் யாருக்கு வாசித்தீர்கள்?”

“முதன் முதலில் வாசித்தது ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் ஹரிகதைக்கு. ஹரிகதைக்கு வாசிப்பது சாமான்யமான விஷயமல்ல. ‘திமிகிட திமிகிட’ என்று ஆரம்பித்தால் நாலுகால் பாய்ச்சலில் ஓட்டம் பிடிக்கும். அப்படி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் கச்சேரி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.”[ திரு.சீனிவாஸனின் குரலில்]

“உங்கள் அப்பா திரும்பிச் சென்றதும் நீங்களே உங்கள் கச்சேரி வாழ்க்கையை மெட்ராஸ்-இல் அமைத்துக் கொண்டீர்களா?”

“இல்லை. சீக்கிரமே என் குடும்பம் முழுவதும் மெட்ராஸுக்கு வந்துவிட்டது. என் சின்ன அண்ணா சேதுராமனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சிவகவி’ படத்தில் எம்.கே.டி ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்’ பாடுவாரே, அந்தப் பாடலில் பால முருகனாகத் தோன்றியது என் அண்ணாதான். அதன் பின் பி.யூ.சின்னப்பா நடித்த ஹரிசந்த்ராவில் லோஹிதாசனாய் நடித்தார். இதனால் என் குடும்பம் இங்கேயே இராமகிருஷ்ணா மடம் தெருவுக்கு குடிபெயர்ந்தது. எனக்கும் கச்சேரி வாய்ப்புகள் வர அரம்பித்தன. சாவித்ரி கணேசன், பி.லீலா, டி.வி.ரத்னம், டி.எம்.தியாகராஜன் பொன்ற பலருக்கு வாசிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக டி.வி.ரத்னத்துக்கு நிறைய வாசித்தேன். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கெல்லாம் அவருடன் சென்று வாசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. 1976-ல் ஆல் இந்தியா ரேடியோவில் சேர்ந்தேன்.”

“கச்சேரி வாசித்துக் கொண்டிருந்த நீங்கள் எப்படி சினிமாவில் நுழைந்தீர்கள்?”

“அதற்கு பி.லீலாவின் அப்பா ஈ.கே.கே.மேனன்தான் காரணம். ’நீ ஏன் சினிமாவில் வாசிப்பதில்லை?’, என்று கேட்டார். ‘வாய்ப்பு வந்தால் வாசிப்பேன்’, என்றேன். 1953-ல், ’எதிர்பாராதது’ என்ற சிவாஜி கணேசன், பத்மினி நடித்த படத்தில் பி.லீலா பாடும்படியாய் அமைந்தது. கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலுக்கு சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்தார். அப்போது என் பெயர் பரிந்துரைக்கப்பட்டதால், எதிர்பாராத விதமாய் ‘எதிர்பாராதது’-வில் வாசித்தேன். ”, என்று சிரித்தார்.

“இன்றைக்கு உங்கள் பெயரைத் தெரியாதவர்கள் கூட உங்கள் வாசிப்பை கேட்காமல் இருந்திருக்க முடியாது”, என்றேன்.

“கே.வி.மகாதேவன் என்னை ஆஸ்தான மிருதங்க வித்வானாகவே வைத்திருந்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ‘மறைந்திருந்தே பார்க்கும்’, ‘திருவிளையாடல்’ படத்தில் ‘பாட்டும் நானே’ போன்ற பல பிரபல பாடல்களில் என் வாசிப்பு இடம் பெற்றிருக்கிறது.”

“ஜி.ராமநாதனுக்கு வாசித்திருக்கிறீர்களா?”

“அருணகிரிநாதர் படத்தில் வாசித்திருக்கிறேன். ‘ஆடவேண்டும் மயிலே’ பாடலில் என் மிருதங்கமும் உண்டு.”

“கச்சேரி வாசிப்பதற்கும் சினிமாவில் வாசிப்பதற்கும் என்ன வித்யாசம்?”

”ஒரே ஒரு வித்யாசம்தான். கச்சேரியில் காலப்ரமானம் மனிதர்களால் நிச்சயிக்கப்படுவது. அதில் ஒரு இழை ஓட்டமோ தொய்வோ ஏற்பட்டாலும் பாதகமில்லை. பாடுபவருக்கேற்ப வாசிப்பவரே, வாசிப்பவருக்கு ஏற்ப பாடுபவரோ அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். சினிமாவில் காலப்ரமாணம் மெஷினால் நிர்ணயிக்கப்படுவது. ஒரு ஆவர்த்தம் இத்தனை வினாடி என்றால் இம்மி பிசகாமல் அத்தனை வினாடியில் வாசிக்க வேண்டும்.”

அவர் சொல்லிய விஷயம் சாதரணமான ஒன்றாகத் தோன்றினாலும், அனைவருக்கும் கைவரக் கூடும் ஒன்றல்ல. காலப்ரமாண சுத்தம் என்பது ஸ்ருதி சுத்தம் போல், இயற்கை வரமும், நிறைய உழைப்பும் இருந்தால் அன்று சாத்தியப்படுவதில்லை என்று நினைத்தடி, “மிருதங்க சக்கரவர்த்தியிலும் நீங்கள் வாசித்தீர்கள் அல்லவா?’

“ஆமாம். சிவாஜிக்கு உமையாள்புரம் சிவராமன் வாசித்தார். பிரபு ’தோற்கும் கட்சி’ என்பதால் யாரும் வாசிக்க முன் வரவில்லை. சினிமாவில் ஜெயிப்பாவது தோற்பாவது? என்னைக் கேட்ட போது ஒப்புக் கொண்டேன். ரிக்கார்டிங்கில் வாசிக்க ஆரம்பித்தோம். சிவராமன் வாசிப்பைக் கேட்க வேண்டுமா? அமிர்த்மாய் பொழிந்தார். நானும் எனக்குத் தெரிந்ததை வாசித்தேன். பார்த்துக் கொண்டே இருந்த எம்.எஸ்.வி , “நீங்களும் இவ்வளவு நன்றாக வாசித்தால் காட்சிக்குப் பொருந்தாது. ரொம்ப சாதாரணமாய் வாசிக்க வெண்டும்”, என்றார். “என்னை கூப்பிட்டு வாசிக்கச் சொன்னால் என்னால் முடிந்த வரை நன்றாகத்தான் வாசிப்பேன். இதுவரை சாதாரணமாக வாசிக்க முயற்சி செய்ததில்லை. அப்படி மாற்றி வாசிக்க வெண்டும் என்றால் ’டபிள் பேமண்ட்’ கொடுக்க வெண்டும் என்றேன். அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டதும் வாசித்தேன்.”

“சுமாராக வாசிக்க டபிள் பேமண்ட் வாங்கியவர் நீங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள்.”

“அப்போதெல்லாம் பரத நாட்டிய பாட்டுக்கு மட்டும்தான் மிருதங்கத்தை போட்டுக் கொள்வார்கள். இது இளையராஜா வந்தவுடன் மாறியது. நாம் நினைத்தே பார்க்க முடியாத பாடல்களில் எல்லாம் மிருதங்கத்தை உபயோகித்து இருப்பார்.”

[தனது சினிமா அனுபவங்களை சீனிவாசன் சொல்வதைக் கேட்க …]
“இதை இன்னும் கொஞ்சம் விளக்கி….”
அவர் செல்ஃபோன் அழைத்தது.

“இதோ வந்துட்டேன்.” என்று ஃபோனை அணைத்தபடி. “காமாட்சி கோயிலில் மீட்டிங் என்று மறந்தேவிட்டேன். நீங்க சாயங்காலமா வர முடியுமா?”

சென்றிருக்கலாம் – விதி.
“அடுத்த முறை சென்னை வரும் போது சந்திக்கிறேன்”, என்றேன்.

அடுத்து 50 முறை சென்னை சென்ற போதும் வளசரவாக்கம் செல்ல மட்டும் ஒழியவில்லை.

அவரைச் சந்தித்த பின் ஓடிவிட்ட இரண்டு வருடங்களில், இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் சீனிவாஸனின் மிருதங்கம் ஒலிக்கிறதா என்று காதைத் தீட்டிக் கொள்வேன். அவர் வாசிப்பைக் கண்டு கொள்வது அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல. ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மிருதங்கத்தின் திஸ்ர கதி அந்த முன்னிசையே தொடக்கம், வளர்ச்சி, முடிவு (climax) கொண்ட முழு இசையாய் ஒலிப்பதை தமிழ்நாடே நினைவுகூறும். ‘அந்தி மழை பொழிகிறது’ பாடல் முழுவதையும் சீனிவாசனின் மிருதங்க இசை அரவணைத்துக் கொஞ்சுவதைக் கேட்காதவர் இருந்தால்தான் அதிசயம்.

கிளாசிகல் வகை சினிமா பாடல்களில் ஒரு பாடலிலேயே ஒரு கச்சேரியைக் கேட்ட உணர்வு ஏற்பட வேண்டும். கச்சேரியில் களை கட்டுதல் என்று ஒன்று உண்டு. ஒரு வர்ணத்தையே, விறுவிறுப்பான கிருதியையோ சில நிமிடங்களில் பாடி இதைக் கச்சேரியில் பாடகர்கள் களை கட்ட வைப்பார்கள். சில நிமிடமே ஒலிக்கும் பாடலில் இதைச் செய்ய மிருதங்கமே பெரும்பாலும் பயன்படும். பாடகர் பல்லவியை ஒரு முறை பாடி முடித்ததும் ஃபரன்கள் நிறைந்த ஒரு தீர்மானத்தை வாசிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். உதாரணமாக ‘இவன்’ படத்தில் ‘எனை என்ன செய்தாய்’ பாடலில் இதைக் காணலாம். சீனிவாசன் இப்படிக் களை கட்ட வைத்த பாடல்கள் கணக்கில் அடங்காதவை.

சமீபத்தில், மதுரை சீனிவாஸனுக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒன்று இருப்பதைக் கண்டு இணைந்து கொண்டேன். அதிலிருந்து ‘ஸ்ரீ ராகவேந்திரா’ படத்தில் வரும் ‘ராம நாமம் ஒரு வேதமே’ பாடலில் ஒலிக்கும் குருவின் குரல் சீனிவாஸனுடையது என்பதைத் தெரிந்துகொண்டேன். பாடலின் தொடக்கத்தில் அவர் பாடும் மாயாமாளவகௌளை ஸ்வரங்களில் மத்யமத்தை ஒரு சுழற்றலோடு இசைக்கும் அழகைக் கடந்து போகவே பல நிமிடங்கள் ஆயின. வாணி ஜெயராமின் குரல் தார ஸ்தாயி ஷட்ஜத்தில் துல்லியமாய் தரித்து நிற்கும் போது சீனிவாஸன் ‘ஆஹா’ என்றிருப்பார். ஒரு தேர்ந்த ரசிகராய் எனக்குத் தெரிந்த சீனிவாஸன், இந்த ஆஹாவை அவர் தன்னிச்சையாய் சொல்லி இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.

அவர் வாசிப்பில் பரிமளித்த பாடல்களுள் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் வரும் ‘ஓ வஸந்த ராஜா’. பாடலின் தாள அமைப்பில் ஒவ்வொரு நான்காவது அட்சரத்திலும் பளிச்சென்று மிருதங்கத்தின் சாப்பு ஒலிக்கும். அநேகமாய் அந்தப் பாடலில் மிருதங்கத்திலிருந்து அந்தச் சொல் மட்டும்தான் ஒலிக்கும். அந்தச் சாப்பு இல்லாமல் பாடலை கற்பனை செய்து பார்த்தால் சீனிவாஸனின் பங்களிப்பையும் உணர்ந்து கொள்ள முடியும். இதைப் போலவே ‘காளிதாஸன் கண்ணதாசன்’ பாடலும் அதிசயிக்கத்தக்கது. பாடலின் நடையை வானாகக் கொண்டால் ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் சீனிவாசனின் மிருதங்கச் சொற்கள் மின்னுவதை உணர முடியும். இந்தப் பாடல்களில் எல்லாம் இன்னன்ன இடத்தில் மிருதங்கம் ஒலிக்க வேண்டும் என்ற இளையராஜாவின் கற்பனைகள், அவரது மேதமையை எடுத்துக் காட்டும் விஸ்வரூப தரிசனங்கள்.

2011 டிசம்பரில் பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றிய என் நூல் வெளியான போது, அதைக் கொடுக்க சீனிவாஸன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகவும் தளர்ந்திருந்தார். ஓராண்டு காலத்தில் அவர் முகம் 20 ஆண்டுகால மாறுதலைக் காட்டியது. அவர் பழனியைப் பற்றி கூறிய கருத்துகள் எனக்கு உதவியாய் இருந்தன என்று கூறிய போது, “நான் பழனியைப் பற்றி சொன்னேனா? எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாதே. நானா சொன்னேன்?”, என்று என்னை வியப்பாகப் பார்த்தார்.

இவர் நினைவு இன்னும் தப்புவதற்கு முன் நீண்ட நேர்காணல் ஒன்றை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். சீனிவாஸனின் மகன் சேஷாத்ரியும், அவர் உடல்நிலை சற்று தேறியதும் அழைப்பதாகச் சொல்லி என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். ஒராண்டு காலமாய் அவர் உடல்நிலை நலிந்து கொண்டே வந்தது என்று இரண்டு நாட்கள் முன்னால் பேசிய போது சேஷாத்ரி தெரிவித்தார்.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது தொலைபேசி அவரை அழைத்திராதிருந்தால்…”.
-0OO0-
சீனிவாஸனைப் பற்றி
இசைக் கலைஞர், வாக்கேயக்காரர், இசைப் பதிவு நிபுணர் எச்.எம்.வி. ரகு

பதிவுகளுக்கு மிருதங்கம் வாசிப்பதை சீனிவாசனுக்கு முன் சீனிவாசனுக்குப் பின் என்றே பிரிக்கலாம். அவருக்கு முன்னால் மற்ற வாத்திய கலைஞர்கள்தான் நோட்ஸ் எழுதி வாசிப்பார்கள். இவர் வந்த பின் தான் மிருதங்கத்துக்கு நோட்ஸ் எழுதி வைத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தைப் புகுத்தினார். தபலாவுடன் சேர்ந்து வாசிக்கும் போது எங்கு மிருதங்கம் தாழ்ந்து ஒலிக்க வேண்டும், எங்கு பளீரிட வேண்டும் என்றெல்லாம் விவரமாக குறிப்பெழுதி வைத்துக் கொள்வார். ஐந்து கட்டை மிருதங்கத்தின் நாதம் அவ்வளவு ரம்மியமாக இருக்காது என்றொரு எண்ணம் இருந்தது. இதனால் பாடல் பதிவின் போது மிருதங்கத்தை தள்ளி வைத்துக் கொள்வார்கள். சீனிவாசனின் வரவு அதை மாற்றியது. ஐந்து கட்டை மிருதங்கத்திலும் ஜிலுஜிலு என்று வாசிப்பார். ஒவ்வொரு முறை ‘கருணை தெய்வமே’ பாடலை வானொலியில் ஒலிபரப்பும் போதும் சொற்ப தொகையை ராயல்டியாக சீனிவாஸன் வாங்கியிந்தால் கூட பல லட்சங்கள் சம்பாதித்திருப்பார்.

எச்.எம்.வி ரகுவின் மகள் ஸுசரித்ரா

அவர் வாசித்த பல செமி க்ளாசிகள் பதிவுகளுக்கு நான் ட்ராக் பாடியுள்ளேன். ஒரு முறை அவரிடம், ‘ஏன் எழுதி வைத்துக் கொண்டு வாசிக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு, ‘மனம் போனபடி வாசித்தால், இடையில் பதிவு தடைப்ட்டால் இரண்டாம் முறை வாசிக்கும் போது மனது சமநிலையில் இருக்காது. முதல் முறை வாசித்த எண்ணங்களுடன் அப்போது தொன்றும் எண்ணங்கள் கலந்து குழப்பம் எற்படுத்தும். முதலிலேயே இதைத்தான் வாசிப்பது என்று வகுத்துக் கொண்டால் தடையில்லாமல் வாசிக்கலாம்’, என்று விளக்கினார்.

மிருதங்க கலைஞர் கே.எஸ்.காளிதாஸ்

அவர் வாசிப்பும் அவர் வாழ்க்கையைப் போலவே கவுரவம் நிறைந்தது. அவர் வாசிப்பை புதுக்கோட்டை வழியென்றோ, தஞ்சாவூர் வழி என்றோ வகைப்படுத்த முடியாது. அவருக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். என் வாத்தியார் பழனி சுப்ரமணிய பிள்ளையின் பதிவுகளைக் கேட்டு அவர் செய்துள்ள விஷயங்களை சுட்டுக் காட்டி ஆனந்தமாய் ரசிப்பார். அவருக்கு வந்த கச்சேரி வாய்ப்புகள் அதுவாக வந்தவையே தவிர அவராகத் தேடிச் சென்றவை அல்ல.

விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம்

எனது முனைவர் பட்ட ஆய்வு 20-ம் நூற்றாண்டு தமிழ் வாக்கேயக்காரர்களைப் பற்றியது. அதற்காக மதுரை சீனிவாசனின் உருப்படிகளையும் ஆய்வு செய்துள்ளேன். உத்தம வாக்கேயக்காரருக்கான இலக்கணத்தில் முழுவதும் பொருந்துபவர் அவர். குறிப்பாக அவருடைய வர்ணங்களும் தில்லானாகளும் அற்புதமானவை. உலகப் புகழ் பெற்ற ‘கருணை தெய்வமே’ பாடலை அவர் ஹைதராபாதில் இருந்த போது சென்னைக்கு திரும்ப மாட்டோமா என்ற  ஏக்கத்தில் எழுதியதாகக் கூறினார்.

வித்வான் மதுரை ஜி.எஸ்.மணி

சீனா குட்டியை எனக்கு சிறு வயது முதல் பழக்கம். மிருதங்க கலையை நன்கு உணர்ந்து அழகாக எல்லோருக்கும் புரியும்படியாய் எடுத்துச் சொல்லக் கூடிய திறன் பெற்றவர். மிகவும் அடக்கமாய் இருந்தவர். லய ஞானம் தவிர பாட்டு ஞானமும் இருந்ததால் அவர் வாசிப்பு பாடுபவரை மிகவும் போஷிக்கும்படி அமைந்தது. எல்லாவற்றையும் விட அவர் ஓர் அற்புதமான மனிதர். தன் வாழ்க்கையை கொண்டாட்டமாய் சந்தோஷமாய் வாழ்ந்தவர்.