- திரு அரங்கத்து மாலை
இது பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அஷ்டப்பிரபந்தங்களில் ஒன்று. காப்புச் செய்யுள் ஒன்றும் , இறுதியில் அமைந்த தற்சிறப்புப் பாயிரம் தவிர்த்து, 111 செய்யுட்கள், கட்டளைக் கலித்துறையில்.
- திரு வேங்கட மாலை
காப்புச் செய்யுள் இரண்டும், அவையடக்கச் செய்யுள் ஒன்றும்,தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும் ஆக நான்கு செய்யுட்கள் நீங்கலாக 100 பாடல்கள் அனைத்தும் நேரிசை வெண்பாக்கள். காப்புச் செய்யுள் நல்ல வெண்பா.
‘திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பாவால் நூறும் விளம்புதற்குக் – கண்பாராய்
நாராயணா அடியே நாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோ பா!’
திருமாலைப் போற்று முன் நம்மாழ்வாரைப் போற்றும் பாங்கு எண்ணுதற்குரியது.
‘ஆழ்வார்கள் செந்தமிழை ஆதரித்த வேங்கடம் என்
தாழ்வான புன் சொல்லும் தாங்குமா?’
என்று அவையடக்கமும் பாடுகிறார்.
நல்ல இயற்கை வளம் பாடுகிறார் ஆசிரியர்.
‘காந்தள், இரவலர் போல், கை ஏற்ப, கொன்றை கொடை
வேந்தன் எனப் பொன் சொரியும் வேங்கடமே’
என்று நல்ல கற்பனை, நல்ல நயம். அதுபோல்
‘வன் குறிஞ்சி மாதர்பால், வானோர் மருந்துக்கு
மென் குறிஞ்சித் தேன் மாறும் வேங்கடமே’
என்கிறார்.
வன்மையுடைய குறிஞ்சி நிலத்து மாதரிடம் வானவர்கள் அமுதம் கொடுத்து மென்குறிஞ்சித் தேன் வாங்கிப் பண்டமாற்று செய்து கொள்கிறார்களாம்
- திரு இரட்டை மணிமாலை
இயற்றியவர் காரைக்கால் அம்மையார். தமிழுக்கும் பக்திக்கும் இவரது கொடைகள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி. 63 நாயன்மார்களில் ஒருவர் இவர். தமிழ்க் கவிதைப் புலத்தில், பெரும்பெண் ஆளுமைகள் ஔவை, காரைக்கால் அம்மை, ஆண்டாள். பின்னிருவரும் சைவமும், வைணவமும். ஆனால் சமயம் தாண்டியவை அவர்தம் கவிதைகள்.
காரைக்கால் அம்மை, திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற பெண்பால் அடியவர். அம்மையார் காலம் ஞானசம்பந்தருக்கும் முந்தையது எனவும் அவர்தம் பாடல் அமைப்பையும், சொல்லாட்சியையும் கண்ணுறும் போது, அம்மையின் காலம் கி.பி. 4 அல்லது கி.பி. 5ம் நூற்றாண்டு எனக் கருதுகிறார்கள்.
அம்மை, பேய் வடிவம் கொண்டதும் அருளியது இந்நூல். கட்டளைக் கலித்துறை, வெண்பா, அந்தாதித் தொடை, இருபது பாடல்கள். கட்டளைக் கலித்துறையில் தொடங்கி, வெண்பாவில் முடிவது.
‘உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்தமரம் அடுக்கித் தீயாமுன் – உத்தமனாம்
நீள் ஆழி நஞ்சு உண்ட நெய்யாடி தன் திறமே
கேள் ஆழி நெஞ்சே கிளர்ந்து.’
என்பது திருவிரட்டை மணிமாலையின் இறுதிப்பாடல். உத்தமராய் வாழ்ந்தவர்கள் கூட இறந்துபோனால் உற்றார்கள் செத்தமரம் அடுக்கிச் சுடுவார்கள். அதன்முன்னே, நீண்ட ஆழியின் நஞ்சை உண்டவன், நெய் முழுக்கு ஆடுபவன் திறம் கேட்பாயாக நெஞ்சே! ஆழி நெஞ்சே அவன் திறம் கிளர்ந்து கேட்பாயாக!
இறந்தால், செத்தால், மறைந்தால், நீத்தால், பட்டால் என்பதுபோல உலந்தால் என்று சொல் ஆளுகிறார். அம்மை. அதுபோல் பட்டமரம், காய்ந்த மரம், இற்ற மரம் என்பது போல் செத்தமரம் எனும் சொல் ஆளுகிறார். இங்கு குறிப்பு – கொன்ற மரம் அல்ல, தானாய் செத்தமரம். மரத்தை ஒரு உயிராக எண்ணிச் சொல்வது இந்தச் சொல்.
முன்னால் ஒரு பாடலில் ‘அன்பால் அடைவது எவ்வாறு கொல்? மேலது ஓர் ஆடு அரவம் தன்பால் ஒருவரைச் சார ஒட்டாதது!’ என்கிறார் இறைவனை நோக்கி.உன்னை அடைவது எவ்வாறு சிவனே சொல்? உன்மேல் எப்போதும் பொங்கி ஆடும் ஒரு அரவம் கிடந்து எவரையும் உன்னைச் சார ஒட்டாமல் அச்சுறுத்தும் போது!’ என்பது பொருள்.
- சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை
அந்தாதிப் பகுதியில் இவரைப் பற்றிப் பார்த்தோம். இவர் எழுதிய நூல்கள் மூன்று. மூத்த நாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி. இதை இயற்றிய கபில தேவ நாயனார் வேறு. சங்ககாலக் கபிலர் வேறு.
வெண்பாவில் தொடங்கி வெண்பாவில் முடியும் 37 பாடல்கள். ஒன்றுமாற்றி ஒன்று கட்டளைக் கலித்துறை.
‘கண்டம் நிறம் கருப்பக் கவ்வைக் கருங்கடல் நஞ்சு
உண்டல் புரிந்து உகந்த உத்தமற்குத் – தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக், குறுகுவரே, தீக்கொடுமைப்
பேசுவரே மற்றொருவர் பேச்சு.’
என்று ஒரு பாடல்.
இன்றையத் தமிழில் கூசுவரே, குறுகுவரே, பேசுவரே என்றால் கூசுவார்கள், குறுகுவார்கள், பேசுவார்கள் என்பது பொருள். அன்றைய தமிழில் கூசுவார்களோ, குறுகுவார்களோ, பேசுவார்களோ என்பது பொருள். கண்டம் எனில் கழுத்து. கவ்வை எனில் பேரொலி. இப்போது பாடல் ஓரளவு புரியும் அல்லவா? என்றலும் ஒரு சலுகையாகப் பொருள் வருமாறு:
தனது கண்டம் கறுத்துப் போகும்படியாக, பேரொலி எழுப்பும் கருங்கடல் நஞ்சு உகந்து உண்ட உத்தமர்க்குத் தொண்டராக அமைந்தவர்கள் கூற்றுவனை அஞ்சிக் கூசுவாரோ? தீக்கொடுமைக்குக் குறுகுவாரோ? மற்றொருவர் பேச்சைப் பேசுவாரோ?
கபிலதேவ நாயனார் சிவனடியார் என்பதால் இத்தனை சிறப்புச் சொல்லி இறை அடியார்க்கு அச்சமில்லை என்கிறார். இதனையே வைணவ அடியார், பௌத்த அடியார், சமண அடியாரும் பேசுகிறார்கள், அவர்தம் இறையின் சிறப்புச் சொல்லி. ஆக மொத்தம் நாம் தெரிந்து கொள்வது, இறைநாட்டம் உடையவர்கள் எதற்குக் கூற்றை அஞ்ச வேண்டும், தீக்கொடுமைக்குக் குறுகவேண்டும் என்ற அடிப்படையான விஷயம்.
- மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை
இதுவும் கபில தேவ நாயனார் அருளியது. மூத்த நாயனார் என்பது விநாயகரை. வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் அடுக்கில் இருபது பாடல்கள் அந்தாதியாக.
சீர்காழி கோவிந்தராஜன் குரலில், அறுபது ஆண்டுகளாக நான் கேட்டுவரும் எடுப்பான பாடல் ஒன்று. அது இந்த நூலின் பாடல் என்று இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. மார்கழி மாதத்தின் அதிகாலைக் குளிரில், ஆண்டாள் திருப்பாவையின் ஐந்தாம் பாடலான ‘மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத், தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத், தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைப்’ பரவும் நாளில் இந்தப் பாடலை எழுதும்போது, அதன் ஓசை நயம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.
பாடல் கீழ்வருமாறு:
‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து’
அந்தக் காலத்தில் கல்யாண வீடு, மறுவீடு, சடங்கு வீடு, கோயில் கொடை என்று ஸ்பீக்கர் செட் கட்டியவுடன், முதலில் வைக்கப்படும் இசைத்தட்டு இது. காற்றின் பெருந்திரளைக் கிழித்துக் கொண்டு, உற்சாகமான கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு சென்ற பாடல் இது.
வணக்கப் பாடல் தொடங்கும் போது, இந்த எழுச்சியை மனம் அடையவேண்டும். ‘ஜன கன மன அதி நாயக ஜயஹே’ என்று மகாகவி இரவீந்திரநாத தாகூரின் தேசீய கீதம் என்றாலும் சரி, ‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’ எனும் பாரதியின் நாட்டு வாழ்த்துப் பாடல் என்றாலும் சரி.
கல்லூரிகளில், பள்ளிகளில் உரையாற்றச் செல்லும் போது மாணவர் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து எனக்குப் பெரும் துக்கத்தைத் தருகிறது. அதன் தூங்கல் ஓசை. எழுதியது தத்துவப் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. அவரது செய்யுள் வடிவமான ‘மனோன்மணியம்’ நாடகம் இளங்கலைப் பட்டப்படிப்பில் எனக்குப் பாடமாக இருந்தது. கேரளத்து ஆலப்புழைக்காரர். தூரத்தில் சொந்தக்காரர். கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்பட்ட, ஹென்றி ஆல்ஃபிரைட் கிருஷ்ணப்பிள்ளையைக் கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராக இழுத்து வந்தவர், அவர்தான் இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்.
எல்லாம் சரிதான், இசை அமைத்த புண்ணியவான் எத்தனை முயன்றும் பாடல் எழுந்து நிற்கவில்லை! மாணவர்கள் ‘தமிழணங்கே! தமிழணங்கே!’ என்றும் ‘வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!’ என்றும் ஒப்பாரிக் குரலில் பாடும்போது எனக்கு அழுகை வருகிறது ஒவ்வொரு முறையும்.
கூடுதலும் புளிச்சீர் எனப்படும் நிரையசை பயன்படுத்துவதாலா, இலக்கணத்தில் பொருந்திப் போகாததாலா, எதனால் நாட்டு வாழ்த்துக்குரிய ஒரு வேகமும் எழுச்சியும் இந்தப்பாடல் பெறவில்லை? இலக்கண வல்லுனர்களும், இசை வல்லுனர்களும் கண்டு சொன்னால் நல்லது.
இது ஒரு திராவிட அரசியல் என்று நமக்குப் புரிகிறது. இதைச் சொன்னால் இதை எழுதுகிறவனுக்கு திராவிட ஒவ்வாமை வியாதி என்பார்கள் என்பதும் புரிகிறது.
என்ன செய்வது? ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ எனும் வரி என் மனதில் எழுப்பும் இசை அலையை அரை நூற்றாண்டு ஆனபின்பும் என்னால் மறக்க இயலவில்லையே! அதன் காரணம் அந்த எழுச்சியான பாடல் அல்லவா?
தெக்கணம் என்றாலே திராவிடம்தான். விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதி, மரபார்ந்து பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்பட்டது. பிறகென்ன? ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’? ஒன்றுமே புரியவில்லை ஐயா நமக்கு! புரிந்துதான் என்ன நிலைநாட்டி விடப் போகிறோம்?
- கோயில் நான்மணி மாலை
இந்நூல் யாத்தவர் திருவெண்காட்டு அடிகள் எனப்பட்ட பட்டினத்து அடிகள். கோயில் நான்மணி மாலை எனும் இந்த நூல்தான், நான்மணி மாலை எனும் இலக்கிய வகையின் முதல் நூல் என்கிறார்கள்.
இரட்டை மணிமாலை என்பது வெண்பா, கட்டளைக் கலித்துறை ஒன்றுமாற்றி ஒன்று அந்தாதியாக வருவதென்றால், நான்மணி மாலை வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என ஒன்றன்பின் ஒன்றாக அந்தாதித் தொடையில் வருவது. இந்நூல் மொத்தம் நாற்பது செய்யுட்கள்.
- ஆளுடையப் பிள்ளையார் திருவுலா மாலை
திருநாரையூரில் தோன்றிய ஆதி சைவர் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருஞான சம்பந்தர் மீது ஆசிரியருக்கு இருந்த பக்தியைக் காட்டும் நூல். 143 கண்ணிகள். சீர்காழியில் சம்பந்தர் திருவுலா போன இயல்பு பாடுவது.
அற்புதமான இயற்கை வளம் பாடித் தொடங்குகிறார்.
‘திருந்திய சீர்ச் செந்தாமரைத் தடத்துச் சென்றார்
இருந் தண் இளமேதி பாயப் – பொருந்திய
புள்ளிரியப் பொங்கு கயல் வெருவப் பூங்குவளைக்
கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் – துள்ளிக்
குறுகிரியக் கூன் இறவம் பாயக் களிறு
முருகு விரி பொய்கையின் கண்மூழ்க – வெருவுற்ற
கோட்டகத்த பாய்வாளை கண்டு அலவன் கூசிப்போய்த்
தோட்டகத்த செந்நெல் துறை அடையச் – சேட்டகத்த
காவிமுகம் மலரக் கார்நீலம் கண்படுப்ப
வாவிக்கண் நெய்தல் அலமர – மேவிய
அன்னம் துயிலிழப்ப அஞ்சிறை சேர் வண்டினங்கள்
துன்னும் துணை இழப்பச் சூழ்கிடங்கில் – மன்னிய
வன்னை நகை காட்ட வண்குமுதம் வாய்காட்டத்
தெள்ளு புனல் பங்கயங்கள் தேன்காட்ட – மெள்ள
நிலவும் மலரணையில் நின்று இழிந்த சங்கம்
இலகு கதிர் நித்திலங்கள் ஈன’
என்று நடக்கும் கண்ணிகள்.
திருந்திய சீர் செந்தாமரைக் குளம் சென்று ஒரு இள எருமை பாய, அங்கிருந்த புள்ளினங்கள் பறந்தோட, கயல்மீன்கள் வெருவ, பூங்குவளை தேன் சொரிய, செங்கழுநீர்த் தண்டு சிதைய, துள்ளிக் குருகு பறக்க, இறால் மீன் பாய, களிறு எனும் பெருமீன் மணம் வீசும் பொய்கையில் மூழ்க, பயந்த வாளைமீனைக் கண்டு நண்டு கூசிப்போய் தோட்டத்தில் உள்ள செந்நெல் வயலை அடைய, தூரத்தில் இருந்த காவிமலர் முகம் மலர, கார்நீல மலர்கள் உறங்க, வாவியில் நெய்தல் வருந்த, மேவிய அன்னம் துயிலிழக்க, ஆழமான கிடங்கில் மன்னிய வன்னைக் கொடி நகை காட்ட, வண்மையான ஆம்பல் சிரிக்க, தெள்ளிய புனலில் மலர்ந்த தாமரைகள் தேன் காட்ட, மெள்ள மலர்ப் படுக்கையில் நிலவும் சங்குகள் முத்துக்களைச் சொரிய’ என்று என்ன வளமான கற்பனை!
கற்பனையே ஆனாலும் நாலில் ஒரு பங்கு உண்மையாக இருந்திருக்கும். இன்று அவை எல்லாம் எங்கே?
பெருமூச்சு விட்டுப் பயனும் இல்லை.
- திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
இதுவும் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருநாரையூர் பொல்லாப் பிளையாரைப் பற்றியது. வெண்பா, கட்டளைக் கலித்துறை, அந்தாதித் தொடை 20 பாடல்கள்.
- திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை
இதுவும் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருநாவுக்கரசரைப் போற்றிப் பரவுவது. ஏகாதசம் எனில் பதினொன்று. பதினொரு பாடல்களை உடைய செந்தமிழ் மாலை.
- சகல கலாவல்லி மாலை
ஏழாவது அத்தியாயம் ‘குறம்’ எனும் பகுதியில், குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மை குறம்’ பற்றிப் பேசப் புகுந்த நாம் ‘சகல கலாவல்லி மாலை’. ‘சகல கலா வல்லி’ எனும் பெயரே அற்புதமான அழகுடன் விளங்குவது.
ஆகப் பத்து பாடல்கள், சகல கலாவல்லியின் அருமை பேச. நாஞ்சில் நாட்டுக் கவிஞர், கவிமணி, தேசிக விநாயகம் பிள்ளை,
‘நாடிப் புலங்கள் உழுவார் கரமும், நயவுரைகள்
தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும், செழுங்கருணை
ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும், உவந்து நடனம்
ஆடிக் களிக்கும் மயிலே! உன்பாதம் அடைக்கலமே!’
என்று ஏத்தும் கலைவாணி.
கலைமகள் அமர்ந்திருக்கும் தலங்கள் பேசுகிறார் பாரதி.
‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உயர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருளாவாள்.’
இது பாரதி. இதில் கவனிக்கப்படவேண்டியது கள்ளம் அற்ற முனிவர்கள் என்பது. இன்று அதை எப்படி கண்டு கொள்வது சகல கலா வல்லியே!
காளமேகமோ வெள்ளை அரியாசனத்தில் அரசர்களுடன் தன்னையும் சரியாசனத்தில் வைத்த தாய் சரசுவதி என்கிறார்.
‘வெள்ளைக் கலை உடுத்து வெள்ளைப் பணி பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்று இருப்பாள் – வெள்ளை
அரியாசனத்தில் அரசொடு என்னைச்
சரியாசனம் வைத்த தாய்.’
என்பது பாடல்.
என்ன சினிமா என்பது நினைவில்லை. ஆனால் பாடலின் முதல் வரி மனதில் வந்து போகிறது. ‘யார் தருவார் இந்த அரியாசனம்?’ என்று. கவிஞர் பேரும் தெரியாது. ஆனால் அவர் காளமேகத்துக்குக் கடன்பட்டவர்.
சரசுவதி அந்தாதி கம்பர் எழுதியது. எந்தக் கம்பர் என்பது தெரியேன்.
‘பெருந் திருவும் சமய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியைப், போற்றின் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும், இன்ப வேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும், அழியாப் பெருஞ்சீர் தருமே!’
‘செஞ்சொல் வஞ்சி’ எனும் பிரயோகம் மிக நன்றாக உள்ளது.
ஆயகலைகள் அறுபத்து நான்கினுக்கும் அரசி அவள்.
‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை, – தூய
உருப் பளிங்கு போல்வாள், என் உள்ளத்து
இருப்பாள், இங்கு வாராது இடர்.’
என்பது மறுபடியும் கம்பர் பாடல்.
குமர குருபரர் சொல்கிறார்
‘நாடும் பொருட்சுவை, சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்!
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே,
சகல கலா வல்லியே!’
அறிவுடையோர் நாடும் பொருட்சுவையும், சொற்சுவையும் தோய நால்வகைக் கவியும் பாடும் பாணியில் என்னைப் பணிந்து அருள்வாய் சகலகலாவல்லியே! தாமரை ஆசனத்தில் பொருந்தி அமரும் பொற்கொடியே! கனத்த, குன்று போன்ற தனபாரமும், ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கூந்தல் காடும் சுமக்கும் கரும்பே! சகல கலா வல்லியே!
துறவியின், புலவரின், குமரகுருபரரின் ஏக்கம் நல்ல கவி படைப்பதுதான். நாற்கவி என்பது ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்மனார் புலவர். புலவர் ஆதியிடமும் பாவலர் இரணியனிடமும் ஐயம் கேட்டபோது, சொல்லலாம், யாப்பருங்கலக்காரிகை கூறும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் அடிப்படைப் பாவினங்களையும் சொல்லலாம் என்றனர்.
இன்னும் ஒரு பாடல் சகல கலா வல்லி மாலையிலிருந்து
‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்
வட நூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்செல்வமும்
தொண்டர் செந்நாவின் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலா வல்லியே!’
ஆய்வதற்குரிய அருந்தமிழ் நூல்களில் தோயும் கல்வியும், சொற்சுவை தோயும் வாக்கும் பெருகும்படியாகப் பணித்து அருள்வாய்! வட நூற் கடலும் வளம் கொண்ட செழுந்தமிழ் செல்வமும் தொண்டர்களின் வாக்கில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகல கலா வல்லியே!
‘பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெம்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே!’
எந்தப் புலவனும் கலைத் தாயிடம் யாசிக்கும் பொருட்கள்தாம், பாரதி உட்பட.
சகலகலாவல்லியே! எழுதா மறைகளிலும், விண்ணிலும் புவியிலும் புனலிலும் கனலிலும் வெங்காற்றிலும் – ஐம்பூதங்களிலும் – அன்பர்களின் கண்ணிலும், கருத்திலும் நிறைந்தவளே! எனக்குப் பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் நான் எண்ணும்பொழுது எளிது வந்து எய்த வரம் நல்குவாய்!
பொன் பொருள் கேட்கவில்லை, கடற்கரைச் சாலையில் பத்து ஏக்கர் வளாகத்தில் பங்களா கேட்கவில்லை, சுவிஸ் வங்கியில் ஆயிரம் மில்லியன் அமெரிக்கன் டாலர் கேட்கவில்லை,நாலைந்து செல்வச் சீமாட்டியரை மனைவியராய்க் கேட்கவில்லை, கலைத்துறைக்குச் சேவை செய்ய சினிமா தயாரிக்கும் வளம் கேட்கவில்லை, மாநில ஆளுநர் பதவி கேட்கவில்லை, வெளிநாட்டு தூதரக வேலை கேட்கவில்லை, கூட்டணி அரசில் கேபினட் அந்தஸ்தில் அமைச்சு கேட்கவில்லை…இசையும், நடமும், கல்வியும், தீஞ்சொல் பனுவலும் எண்ணும்பொழுது எளிது எய்த அருளுவாய் என்கிறார்.
இது தான் இயல்பான பக்தி நிலை, படைப்பு நிலை. உண்மையில் குமர குருபரர் செயல்பட்ட மொழியில் செயல்பட நான் கர்வம் கொள்கிறேன், சகல கலா வல்லியே!