சந்தை நாள்

ஜயந்த் காய்கிணி சமகால கன்னட இலக்கியத்தில் பிரபல எழுத்தாளர். 1955-ல் வடக்கு கர்நாடகத்தின் கோகர்ணா வில் பிறந்த இவரது தந்தை கௌரீஷ் காய்கிணியும் ஒரு கன்னட இலக்கிய ஆளுமை. உயிர்வேதியியல் (biochemistry) முதுகலைப் பட்டதாரியான ஜயந்த் மும்பையில் பலவருடங்கள் இத்துறையில் பணியாற்றியவர். சிறுகதைகள், கவிதை, சினிமா வசனங்கள், தொலைக்காட்சித் தொகுப்பு, பத்திரிகையில் தனிப்பட்ட பத்திகள், சினிமாப் பாடல்கள் என்று பலதுறைகளிலிலும் பிரபலமான இவரது 6 சிறுகதைத் தொகுப்புகளும், 4 கவிதைத் தொகுப்புகளும் புத்தகவடிவில் வெளிவந்துள்ளன. 1974, 1982, 1989, 1996 வருடங்களில் நான்கு முறை சாஹித்ய அகாதெமி விருது பெற்ற இவர் முதன்முறை தன் கவிதைகளுக்காக இவ்விருதைப் பெற்றபோது இவருக்கு 19 வயது.

j00

இவை தவிர தினகர் தேசாய் விருது, கதா இலக்கிய விருது போன்ற பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.

2000-லிருந்து பெங்களூரில் வசித்துவரும் இவர் சமீப வருடங்களில் வெளிவந்த முங்காரு மளே, காளிபட்டா, மனசாரே போன்ற திரைப்படங்களின் பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதும் பெற்றிருக்கிறார்.

இவரது சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பு ‘dots and lines” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள் பெரும்பாலும் மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வில் களம்கொண்டவை. அவ்வாழ்வின் சிறு சிறு கணங்களை வரிசைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட அனுபவத்தில் வந்து முடிபவை. அன்றாடப் பேச்சு நடையிலும் உரையாடல்கள் வட கர்நாடகத்தின் வழக்குப் பேச்சிலும் எழுதப்பட்டவை இவற்றில் இயல்பான நகைச்சுவையும் அன்றாட வாழ்வின் நகைமுரண்களும் இழைந்தோடும். இவை இலக்கிய இயக்கங்கள் எவற்றையும் சாராது சாதரண மக்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் நுணுக்கமான விஷயங்களையும், அவர்களிடையேயான உறவின் பலவர்ணங்களையும் இழைநயங்களையும் எழுத்தில் சித்திரப்படுத்துபவையாயுள்ளன. வணிகமயமாகியுள்ள உலகில் உறவுகள் அர்த்தமற்றுப் போயிருப்பதையும், நகர வாழ்வில் மனிதர்கள் அன்னியமாகிப் போவதையும் பற்றிய வருத்தம் இவரது பல கதைகளில் காணப்படுகிறது.

அவரது சிறுகதை ‘சந்தெய தின’ வின் மொழிபெயர்ப்பை இவ்விதழில் பதிப்பித்துள்ளோம். இதே இதழில் அவரது இரு கவிதைகளின் மொழிபெயர்ப்பும் பதிப்பாகியுள்ளது.

    சந்தை நாள்

லால்பஹதுர் சாஸ்திரி ரோட்டில் புறநகர் ரெயில் நிலையத்தின் அருகே இருந்த அந்த இரண்டு கடைகளிடையே பெரும் உறவு எதுவும் இருந்ததாய் தெரியவில்லை: சாலையோரம் நியான் பெயர்பலகையுடன் இருந்த ஜெராக்ஸ் கடையும், அதை அடுத்து பிளாட்பாரத்திலேயே ஒரு கள்ளிப்பெட்டியில் அடுக்கிய பழங்களுடன், பியாரிலால் ஒரு பளபளப்பான தராசுக்குப் பின் வெறுமையாய் நின்று கொண்டிருக்கும் பழக்கடையும். மற்றதன் இருப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அவை இரண்டும் தனித்தனியாய் நின்றுகொண்டிருந்தன. அலுவலகங்களுக்கும், பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்பவர்கள் ஜெராக்ஸ் கடைக்குள் விரைந்து விதவிதமான தாள்களில் பிரதிகள் எடுத்துப் போயினர். இதனால் காலைவேளைகளில் அந்தக் கடையைச் சுற்றி சோப்பு, செண்ட், மற்றும் நறுமணத் தைலங்களின் புத்துணர்ச்சியூட்டும் மணம் பரவி இருக்கும். மாலைவேளயில் இதே மனிதர்கள் பியாரிலாலின் பழக்கடைக்கு வந்து பழங்களைக் கேட்டு வாங்கி, தொட்டுப் பார்த்து, முகர்ந்து, பேரம் பேசிப் போவர். ஞாயிற்றுக் கிழமைகளில், அலுவலகங்கள் மூடி இருப்பதால் ஜெராக்ஸ் கடைக் கதவும் மூடி இருக்கும். ஆனால் பியாரிலாலுக்கு விடுமுறை நாளே கிடையாது. அவனுக்கு உடல்சுகமில்லாமல் போனலொழிய அத்தகைய நாட்களில் அவன் கடை போடும் இடம் வெறிச்சோடி, பழங்களில்லாமல் நிறமற்று இருக்கும். அன்று மட்டும், ஒரு ஆதரவு தேவைப்படுவதுபோல், அந்த கள்ளிப்பெட்டி ஜெராக்ஸ் கடையின் மேல் சாய்ந்திருக்கும்.

ஜெராக்ஸ் கடையில் கேகு ஷுக்லா எப்போது பார்த்தாலும் தன் மெஷினிலிருந்து வெளிவந்த சூடான பிரதிகளை எண்ணிக் கொண்டும், அவற்றை அடுக்கிக்கொண்டும், பணத்தை எண்ணி வாங்குவதிலும், மீண்டும் அடுத்த காகித அடுக்கை பிரதி எடுப்பதிலும் கவனமாய் இருப்பான். தப்பித்தவறி எப்போதாவது அவன் வெளியே பார்க்க நேர்கையில், ஏதாவது தப்பாய் போகும். இதற்காகவே காத்திருந்ததுபோல, மெஷினில் தாள்கள் சிக்கிக்கொண்டு பெரிய சத்தம் போடும். அது ஸெகண்ட் ஹாண்டில் வாங்கிய மெஷின்தான்.

முலுந்தில் மஹாஜன்வாடியில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த மூன்று சகோதரர்களில் இரண்டாமவன் கேகு ஷுக்லா. பெரியவனுக்கு தானாபஜாரில் உத்தியோகம். மீசையை முறுக்கும் தம்பி தாராபூரில் ஏதொ வியாபாரம் செய்துகொண்டிருந்தான். தங்களின் வியாபாரத் திறன் கேகுவுக்குக் கிடையாது என்பதை உணர்ந்திருந்த அவ்விருவரும் கேகுவுக்கு ஜெராக்ஸ் கடை வைத்துக் கொடுத்திருந்தனர். இல்லையானால் கேகு தன் வாழ்கையை ஒரு நண்பனின் ஸ்கூட்டரின் மேலோ கார் மேலோ சாய்ந்து கொண்டு, பான் பராக் மென்றுகொண்டு, தொளதொள பாண்டும், பிக்மி பூட்ஸும் போட்டுக்கொண்டு, அயல்நாட்டு செண்ட் வாசனையுடன் பரேஷ் ராவலைப் பற்றியோ பங்கஜ் உதாஸைப் பற்றியோ பேசிக்கொண்டு கழித்திருப்பான். பள்ளி முடித்த பின் பத்து வருடங்கள் போல் இதைத்தான் செய்துகொண்டிருந்தான். அந்த நேரத்தில்தான் அவனுடைய தம்பி காதல் வசப்பட்டு, அவசரமாகவும், பிடிவாதமாகவும் ஒரு மராத்தி பெண்ணை கலியாணம் செய்துகொண்டான். அண்ணியும், தம்பியின் மனைவியுமாய் சேர்ந்து தின்பதும், தூங்குவதுமாய் இருந்த சோம்பேறித்தனமான வாழ்க்கையிலிருந்து இவனை எழுப்பி ஜெராக்ஸ் கடையில் உட்காரவைத்தனர். அப்படியும் யாருக்கும் இவனுக்கு ஒரு கலியாணம் செய்து வைப்பதைப் பற்றி யோசிக்க நேரமில்லை. பெற்றோரும் பல வருடங்களுக்கு முன்பே போய்ச் சேர்ந்து விட்டிருந்தனர். சில சமயம் கேகு தான் எந்தத் தலைமுறையை சேர்ந்தவன் என்று யோசிப்பதுண்டு. தன் தம்பியுடன் இருக்கையில் தான் பெரியவன் என்று தோன்றினாலும், அவர்களின் குழந்தைகள், தொட்டிலின் ஆட்டம், தம் கணவர்களின் பனியன் ஜட்டிகளை மடித்து வைக்கும் வீட்டு மருமகள்கள் இவர்களைப் பார்க்கையில் தான் எல்லோருக்கும் இளையவன் என்று தோன்றும். குழந்தைகளைப் பள்ளியில் விடப் போகையில் பெரியவனாய் உணர்ந்தாலும், சலவைக்காரனிடம் எடுத்துப் போகும் கசங்கிய உடுப்புகளில் இருக்கும் சகோதரர்களின் மனைவியரின் ரவிக்கைகள், பெரிது பெரிதான சல்வார்கள், புடவைகளைப் பார்க்கையில் தான் ஏதோ சின்னவன் போல நடத்தப்படுவதாய்த் தோன்றும். இதனால் சில சமயங்களில் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரப் போகையில் காரணமே இல்லாமல் அவர்களைக் கோபிப்பான். கூடவே ‘வீட்டிலே போய் சொன்னால் தெரியும்!’ என்று மிரட்டுவான். சின்னப் பிள்ளைகள் கண்ணைக் கொட்டி, தலையை ஆட்டி, சாதுவாய் வீட்டுக்குள் போகும். தனக்கும் 30 -35 வயதாவதற்குள் தானும் ஒரு பெண்ணைக் காதலித்துத் தனக்கும் திருமணம் நடக்கும் என்று நம்பிக்கையுடன்தான் இருந்தான். ஆனால் கண் சிமிட்டும் நேரத்தில் அவனுக்கே தெரியாமல் வருடங்கள் கடந்துபோய் அவனை பிரம்மச்சரியத்திலேயே நிறுத்திவிட்டுப் போய்விட்டன. ஆனால் உலகமும், மார்க்கெட்டும், சகோதரர்களின் குடும்பங்களும் வளர்ந்து முன்னே போய்கொண்டிருந்தன. அவனது தலைமுடி வெளுத்து, பின் மண்டையில் சூரியகாந்தி போல ஒரு வட்டம் தோன்ற ஆரம்பித்தபோது, ஜெராக்ஸ் கடையும், மெல்லிய விரல்களும் பாலிஷ் போட்ட நகங்களுமாய் அவன் கடைக்கு வந்த இளம் வயதுப் பெண்களின் கிளர்ச்சியூட்டும் வரவும்தான் அவனது மனதின் அலைபாய்தலுக்கு அணை போட்டது. அவர்களின் சின்ன சேஷ்டைகளும், அவர்களின் முடியின் லேசான உரசலும் அவனைக் கடையிலேயே கட்டிபோட்டு வைத்திருந்தன. தன் இயல்பான பொறுமையின்மையை அடக்கிக்கொண்டு கடைக்கு ராஷன் கார்ட் , சொத்துப் பத்திரங்களை பிரதி எடுக்க வரும் வயதானவர்களிடம் எரிந்து விழுவதைக் கூட விட்டு விட்டான். ஒரிஜினல் கிழிந்திருந்தால் அதை செலோஃபென் டேப் போட்டு ஒட்டிக் கொடுப்பான்.

முதன்முதலாய் அவனைக் கவனமாய் பார்த்து உண்மையாய் அவனை பாராட்டியது பழவியாபாரி பியாரிலால்தான்: ‘வா கேகுபாய், என்ன நேர்த்தியாய் உடை போடுறிங்க! காலையில் கடைக்கு வரும்போது இருப்பது போலவே நாள் கடைசிவரைக்கும் உங்கள் உடை மடிப்பு கலையாமல், புதிதாய், அப்படியே இருக்கே. உங்கள் வேலைலே உங்களுக்கு நிஜம்மாகவே எத்தனை விருப்பம்!!” என்றான். இது கேகுவின் உள்ளத்தைத் தொட்டு, அன்றிலிருந்து இரு கடைக்காரர்களிடையும் ஒரு பந்தம் உருவானது. பியாரிலால் வெளியே போகவேண்டுமென்றால் ‘போய் டீ குடிச்சுட்டு வந்திடறேன். கடைமேலே ஒரு கண் வெச்சுக்கங்க” என்று சொல்லிப் போவான். கேகு வெளியே போக நேர்ந்தால் ‘ இப்போ வந்திடுவார். அந்தக் கோடி வரைக்கும்தான் போயிருக்கிறார்’ என்று சொல்லி பியாரிலால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நிறுத்திவைப்பான். இப்படி மெதுவாய் அவர்களது நட்பு டீ பகிர்வது, சில்லரை வாங்கிக் கொள்வது என வளர்ந்தது. கேகு ஷுக்லா தன் சீரான இஸ்திரி போட்ட ஆடைகளுடன் கடை உள்ளே இருக்கையில், பியாரிலால், தன் பழங்களைப் போலவே காற்றில் வெளியே. ப்யாரிலால் உத்தர பிரதேசத்திலிருந்து வந்தவன். தன் இளம் வயதிலிருந்தே தன் உள்ளுணர்வுகளையே பின்பற்றியவன். காலத்தின் அலைகள் அவனை, பலரையும் போல, இந்த நகரத்தின் கரைகளில் கொண்டு சேர்த்திருந்தது. ஒரு சிதிலமான கட்டிடத்தின் மரப்படிகளினடியில் இருந்த முக்கோணப் பொந்தில் அவன் தங்கி இருந்தான். க்ராஃபோர்ட் மார்க்கெட்டிலிருந்து பழங்களை வாங்கி இந்த இடத்தில் விற்பதில் அவன் பிழைப்பு நடந்து கொண்டிருந்தது. நாற்பதுகளில் இருந்த அவன் தன் வயதைப்பற்றியோ வருங்காலத்தைப் பற்றியோ கவலைப்படுபவனாகத் தெரியவில்லை. வியாபாரம் முடித்தபின், நாளின் ஒரே உணவை எப்போதும் சாப்பிடும் ஒரு சிறிய உணவகத்தில் சாப்பிடுவான். மற்றபடி நாள்முழுதும் அவனுக்குத் தெம்பு கிடைக்கத் தேவையாயிருந்தது எட்டிலிருந்து பத்து கிலாஸ் குறைவாய் சக்கரை போட்ட டீ ஒவ்வொரு முறை டீ குடிக்கும்போதும் அவன் அதை கேகுபாயுடனும் அருகில் இருந்த பேபர்கடைக்காரனுடனும் பகிர்ந்துகொள்வான். கேகுபாய் லஸ்ஸிப் பிரியன். அதற்குமேல் ஒரு குஜராத்தி என்பதினால் கொஞ்சம் காசுகணக்கு பார்ப்பவன். லஸ்ஸியை கடையில் வாங்கிக் குடித்தால் அதை பியாரிலாலுடன் பகிரவேண்டுமே? அதற்கு பதிலாய் ‘இதொ டாய்லெட் போய் வந்துவிடுகிறேன்’ என்று ப்யாரிலாலிடம் சொல்லிவிட்டு.அடிக்கடி கடையை விட்டு வெளியே போய், காய்கறி மார்கெட்டின் கூட்டத்தில் புகுந்து அங்குள்ள பால்நிலையத்தில் போய் ரகசியமாய் லஸ்ஸி குடிப்பான். பியாரிலால் அங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனை அரித்தாலும் அதைப் ஒதுக்கிவிட்டு – அவன் நல்ல நேரமும் அதற்கு ஒத்துழைக்க – தன் பானத்தை ரசித்துப் பருகுவான். அதற்குப் பின் கொஞ்சம் குற்ற உணர்வோடு தன் கடைக்குள் போய் சற்று நேரத்துக்கு பியாரிலால் இருக்கும் திசையைத் திரும்பிப் பார்க்காமல் இருப்பான். ஏப்பம் விடும்போது மட்டும் பியாரிலாலை நினைத்து பரிதாபப்படுவான். பியாரிலாலோ எப்போதும் ஏதோ வம்படித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருப்பான்.

ஒருநாள் பியாரிலால் தன் பழப்பெட்டியின் அடியிலிருந்து சில பழங்களை எடுத்து அரிந்து, சில துண்டுகளை கேகுவிடம் நீட்டி “கேகுபாய், உங்கள் கடையில் சுவற்றுப்பக்கம் ஒரு அலமாரி வைக்கப் போதுமான இடம் இருக்கிறது. இப்போதெல்லாம் ஆடியோ கேஸட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. அவனவன் கீரை மாதிரி தெருவிலே கேஸட்டுகளை குவித்து விக்கிறான். நீங்களும் அதைப் பத்தி யோசிக்கலாமே. எப்படியும் இங்கே நகலெடுக்க வர்றவங்க கொஞ்ச நேரம் காத்திருப்பாங்க. அப்போ அவங்க இந்த பாட்டுகளை கேட்டு, மற்றதையும் பார்த்து வாங்குவாங்க இல்லையா?” கேகு நேரத்தை விரயமாக்காமல் அன்றிரவே இந்த யோசனையை செயல்படுத்தத் தீர்மானித்தான். இரண்டு வாரங்களில் ஜெராக்ஸ் கடையின் இரண்டு பெரிய ஸ்பீகர்களிலிருந்து பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. சுவர் முழுக்க கேஸட்டுகள் அடுக்கப்பட்டன. சில நாட்களிலேயே வியாபாரம் நன்றாய் நடக்க ஆரம்பித்தது. பியாரிலால் சொன்னது சரிதான். ஐந்து ரூபாய்க்கு பிரதி எடுக்க வந்தவர்கள் முப்பது ரூபாய்க்கு கேஸட் வாங்கிப் போனார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும் கேசட்டுகளை வி.டி ஸ்டேஷன் பக்கத்திலிருக்கும் கடைகளிலிருந்து பியாரிலால் பழங்கள் வாங்கப்போகையில் அவனிடம் சொல்லி கேகு தருவித்துக் கொடுப்பான். இத்தனையும் இலவசமாய்! கடையில் பலவிதமான இசைகளுக்கு இடம் இருந்தது – பாகிஸ்தானிலிருத்து கள்ளத்தனமாய் பெண்டி பஜாருக்கு வரும் பழைய மெஹ்தி ஹசன் கஜல்களிலிருந்து, தலத் சினிமாவுக்கல்லாது வானொலிக்கு என்று பாடிய பாடல்கள், மற்றும் ‘சோலி கே பீசே…’ வரைக்கும். போடோகாப்பி நகல்கள் அன்றி கேசட்டுகளில் குவியலாய் மாறிக்கொண்டிருந்த அவனது கடையின் வெளியே பியாரிலால் அமைதியாய் கபில்தேவின் தோரணையில் ஆப்பிள்களை துடைத்து பளபளப்பாக்கிக்கொண்டிருப்பான், இந்தச் சத்தத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் பாடல்களைக் கேட்டுக் கொண்டு. தன் யோசனையால் கேகுவின் வியாபாரம் பெருகியதைப் பற்றியோ, தன்னுடைய ஆலோசனையின் கனத்துக்கும் கேகுவின் வருமானத்தின் அளவுக்கும் ஒரு மெல்லிய இணப்பு இருக்கக்கூடும் என்பதை பற்றியோ அவனுக்கு ஒரு கவலையும் இருந்ததாய் தெரியவில்லை. சில சமயங்களில் கேட்டுக் கொள்வான் ‘கடைசியா போட்டீங்களே, அதென்ன பாட்டு, அதை இன்னொரு தரம் போட முடியுமா?’

m00

கேகுவின் கடையிலிருந்து பியாரிலாலின் திறந்த உள்ளத்தின் உவகையை நன்றாய் பார்க்க முடிந்தது. மசியின் மணம் பரவிய கடையின் உட்புறத்தில் காகிதங்கள் இறைந்து கிடந்தன. அலமாரிகளில் பாடகர்கள் டேப் சுருள்களில் அமைதியாய் அமர்ந்திருந்தனர். அவன் ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தான் – அதே பாடல்கள், அதே பாடகர்கள், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வேளைகளில் ஒரே பாடல்கள் கேசட்டுகளிலிருந்து ஒலிக்கும். உடைந்த ரெகார்டை போல – ஒரே ஆலாபனையும் பல்லவியும், ஒரே சரணம்; விருப்பப்பட்டால் வேகமாய் முன்னே ஓட்டலாம், வேண்டுமென்றால் அதே வேகத்தில் திருப்பி ஓட்டலாம். பியாரிலாலின் பழங்கள் வேறுமாதிரி. விற்றாலும் விற்காவிட்டாலும் ஒரு வித புதுப்பொலிவுடன். ஒவ்வொரு பழமும் ஒரு தனித்தன்மையுடன் வேறுபட்டதாய். பிலாஸ்டிக் கைப்பைகளும், காகிதமும் புழுதியுமான சூழலுக்கு அவை ஒரு ஒளிர்வைக் கொடுத்தன.

தன் திடீர் வளமையை அனுபவித்தபோதிலும், கேகுவை ஒரு பெரும் கவலை அவதியடையச் செய்தது. பியாரிலாலுக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடனை எப்படித் தீர்ப்பது? அவனால் இரண்டு வகைகளில்தான் நன்றி செலுத்தமுடியும்: இலவசமாய் நகல் எடுத்துத் தரலாம் ,அல்லது ஒரு கேஸட்டைக் கொடுக்கலாம். இவை இரண்டுமே பியாரிலாலிடம் நடக்காது. அதற்காக ஒரு டேப் ரெகார்டரைப் பரிசாய்க் கொடுக்கவும் முடியாது. அப்படிச் செய்தால் பியாரிலால் புண்படக் கூடும். பியாரிலால் மிக அருமையாய் கருதும் இணைபிரியா உடமை ஒரு சின்ன ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ. வண்ணமிழந்த அந்த ரேடியொ அவனது பழங்களைப் போலவே உயிர்ப்புடன், நாள் முழுதும் இனிமையான பாடல்களை பரப்பிக் கொண்டிருக்கும். காலையில் பக்திப் பாடல்களிலிருந்து, ராணுவவீரர்களுக்கான் ஜெயமாலா மற்றும் இரவில் பேலா கே பூல் வரை என்று நாள்முழுதும் பியாரிலாலுக்கும் அவனது கருவிக்கும் மிக நெருக்கமான உறவு. வானொலி நாடகங்களைக் கேட்கையில் அவன் கெக்கலித்துச் சிரிப்பது இந்தக் கிறுக்குத்தனமான சந்தையில் சிறுபிள்ளைத்தனமாய் இருக்கும். இருந்தும் கேகு ஒருநாள் தைரியத்தைக் கூட்டி அவனிடம் கேட்டான் ‘நீ ஒரு டேப் ரெகார்டர் வாங்கிக்கொள்ளேன்.”. பியாரிலாலுக்கு இந்த யோசனை ஏளனமாக இருந்தது. “ டேப் ரெகார்டர் உங்கள் போக்குப்படி ஆடும். உங்களுக்கு வேண்டும்படி அதை நடக்கச் சொல்லலாம். டேப் ரெகார்டர் கேட்பவர்கள் தங்களது செவியின்பம் தங்கள் கையில் இருப்பதாக நம்புபவர்கள். என்ன ஒரு மடத்தனம் இல்லை? ஆனால் ரேடியோ அப்படி இல்லை. நமக்குப் பழக்கப்பட்ட நிகழ்ச்சியில் கூட ஒரு ஆச்சரியம் இருக்கும். இந்த எதிர்பார்ப்புதான் நமக்குக் களிப்புக் கொடுப்பது. அதைவிட, வானத்தின் மூலம் ஒரு வித வயரும் இல்லாமல் நேரடியாய் நம்மை வந்து சேர்வது சிலிர்க்க வைக்கும் விஷயம் இல்லையா. வெறுமே ஸ்டேஷனுடன் இணைந்தால் போதும். அதற்கப்புறம் இந்த நாடோடியை யாராலும் தடுக்கமுடியாது.” கேகுவுக்கு பேச்சடைத்துப் போயிற்று. இனிமேல் லஸ்ஸியை ரகசியமாய் குடிக்காமல் இவனுடன் பகிரங்கமாய் பகிர்ந்துகொண்டால்கூட சங்கடப்படாமல் இருக்கமுடியாது போலிருந்தது. இது பியாரிலாலின் கர்மா என நினைத்தான். இருந்தும் அவனது உணர்ச்சிகளின் கனம் குறையவில்லை. முனிசிபாலிடியின் வண்டிகள் நடைபாதை வியாபாரிகளை நீக்கவந்தபோதுதான் அவன் ஆபத்பாந்தவனாய் ஓடோடிபோய், பழங்களையும், பியாரிலாலையும் தன் கடைக்குள் இழுத்துவந்தான். மற்ற வண்டிகளையும், விற்பனைப் பொருட்களையும் அந்த பெரிய லாரிகள் எடுத்துப் போனபோது பியாரியின் பழங்கள் கேகுவின் கேஸட்டுகளிடையே சிறுபிள்ளைகள் போல ஒளிந்திருந்தன. ‘பாருங்க அதுங்க எத்தனை பாவமா இருக்கு” என்று பியாரி சொன்னான் பாதி கிலாஸ் டீயை கொடுத்துக்கொண்டே. உதவிதான் என்றாலும் அது பியாரிலாலின் உதவிக்கு ஈடாகாது.

இன்னொரு பிளான் போட்டான். அவன் வீட்டிலிருந்து பியாரிலாலுக்கு வரும் கடிதங்கள் ‘கேர் ஆஃப் கேகு ஷுக்லா’ என்று போட்டுத்தான் வரும். ஒருநாள் கேகு கேட்டான் ‘பியாரிபாய், எத்தனை நாளைக்கு கேர் ஆஃப் விலாசத்துடனேயே ஒட்டிக்கொண்டிருப்பாய்? ஒரு சின்ன அறையை வாங்கி விட்டால் அங்கே பழங்களையும் பத்திரமாய் வைக்கலாம், நீயும் சாப்பிட தூங்க வசதியாய் இருக்கும். ரொம்ப ஒண்ணும் செலவாகாது.”

‘என்றைக்கும் நடக்காது’ என்றான் பியாரிலால், ஏதோ பைத்தியக்கார யோசனையைக் கேட்டது போல. பிறகு அதற்கு விளக்கமும் கொடுத்தான். ‘கேர் ஆஃப் விலாசம் எனக்கு ஒரு சந்தோஷத்தையும் திருப்தியையும் தருது. நமக்காக யாரோ கவலைப்பட இருக்காங்க என்கிற நினைப்பே கொஞ்ச நேரத்துக்கு இருந்தாலும், அது போதும். இல்லைனா இங்கே யாருக்காக யார் கவலைப்படறாங்க?” கேகுவுக்கு இது தன்னைச் சாடுவது போல இருந்தது. பியாரிலால் சொல்லிக்கொண்டே போனான் “ஒரு நாடோடி பத்துக்கு ஆறு சதுர அடி இடத்துக்கு எப்படி உரிமை கேட்கமுடியும்? இந்த பூமிக்கே வாடகைக்கு வந்த ஒரு உசிரு சில காகிதங்களை வெச்சுக்கிட்டு அதனாலே எனக்கு இந்த எடம் சொந்தம்னு சொல்லி பெருமைப்படறது வேடிக்கையா இருக்காது? வாடகை வீடுகள்ளேயும் வாடகை விலாசங்களிலேயும் எத்தனை ஆறுதல் இருக்கு, கொஞ்சம் இந்த ரேடியோ போலத்தான். எத்தனை பாட்டுங்க வானத்திலேர்ந்து பறவைகள் போல வழுக்கிட்டு வந்து, வாடகைக்கு எடுத்த மரக்கிளையிலே உட்கார்ந்துட்டு பறந்து போயிடுது.”

இப்படி இருவரும் குறுக்கிடாத ஒரு தூரத்தில் தங்களது வேலைகளை கவனித்தாலும், அவர்கள் நெருங்கி வருவதற்கான சந்தர்ப்பங்களும் அமைந்தன. அவர்களது நெருக்கத்துக்கு புகழ் சூட்டுவது போல ஒரு அவகாசம் ஒருநாள் வந்தது. அன்றைக்கு மும்பையில் சிவசேனை முன்னறிவிப்பின்றி பந்த் ஏற்பாடு செய்தது. சூரியன் தலைக்குமேல் வருவதற்கு முன்பே நகரம் செயலிழந்து போய் நின்றுபோய் விட்டிருந்தது. கேகு அன்று காலை கடையை திறந்தபொழுது பந்த் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. எப்பொழுதும் போல் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி ஜெராக்ஸ் மெஷினுக்கும் கேஸட் டெக்குக்கும் காட்டியிருந்தான். வெளியே பியாரிலால் தன் அரை கிலாஸ் டீயை குடித்துக்கொண்டு ஆப்பிள்களையும் மாதுளம்பழங்களையும் கள்ளிப்பெட்டியின் மேல் அடுக்கிக்கொண்டிருந்தான். கேகு கேஸட் ஒன்றை டெக்குக்குள் நுழைத்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு கூட்டம் கையில் கற்களுடன் வந்து “பந்த் கரோ” (கடையை மூடு) என்று கூச்சலிட்டனர். அன்று மார்க்கெட் மூடப்பட்டது. எதிர்பாராத விடுமுறையின் சந்தோஷத்துடன் அலுவலகத்திலிருந்து மக்கள் தம் வீடுகளுக்கு விரைந்து கொண்டிருந்தனர். பஸ்களும் ஆடோரிக்ஷாக்களும் ஓடாமல் தெரு மயானம் போல் இருந்தது. நேரம் ஆக ஆக, மார்க்கெட்டில் இயல்பற்ற ஒரு அமைதி ரீங்கரித்தது. டீக்கடைகள்கூட திறந்திருக்கவில்லை. பியாரிலால் கோபப்பட்டான் “இந்த பந்த்களால் என்ன பிரயோசனம்? இதை ஏற்பாடு செய்பவர்கள் எல்லாம் மூடி இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வீட்டுக்குப் போய் நன்றாய் சாப்பிட்டு தூங்குவார்கள். தினக்கூலிக்கு வேலை செய்பவர்கள் பற்றியோ, தெருவண்டிகளிலும் ரோட்டோரக் கடைகளிலும் சாப்பிடுபவர்கள் பற்றியோ யாரும் கவலைப் படுவதில்லை. இந்த பந்தின் வெற்றி இன்றைக்கு இந்த நகரத்தில் எத்தனை குழந்தைகள் பசியோடு தூங்கிப் போயிருக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.” கேகு பியாரிலாலின் பெட்டியின் மேல் உட்கார்ந்தான். மார்க்கெட்டின் சப்தம் அடங்கிய அமைதியில் பியாரிலாலின் ரேடியோ தெளிவாய் ஒரு இனிமையான பாடலை பரப்பிக்கொண்டிருந்தது. ஓட்டல் தொழிலாளர்கள் கையில் கிரிக்கெட் பேட்டுகளுடனும், ஸ்டம்புகளுடனும் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்கள் போலிஸ்காரர்களுடன் ஒரு சுற்று ரம்மி ஆட உட்கார்ந்தார்கள். ஸ்டேஷனில் பூ விற்கும் தெலுங்குப் பெண்கள் கோவிலருகே விரைந்து போய் பார்த்துவிட்டு அங்கு ஒரு ஜீவனையும் காணாமல் அங்கேயே உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேன் பார்க்க ஆரம்பித்தனர். பியாரிலால் கேகுவின் தோளை உலுக்கி ‘வாங்க. நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் திரும்ப வராது. கொஞ்சம் உலாத்திட்டு வருவோம்” என்றான்.

கலர் கலராய் அரை டிராயர்களில் விஸ்கிக்கும் ரம்முக்கும் சேர்க்க சோடா தேடிக்கொண்டிருந்த சில பணக்கார வீட்டுப் பிள்ளைகளைத் தவிர மார்க்கெட் அமைதியாய் இருந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் பஜார் விசித்திரமாய் இருந்தது. ஏதோ ஒரு போர்வையால் மூடியதுபோல. கேகு பியாரிலாலைக் கேட்டான் ‘ட்ரெயின்கள் ஓடுகின்றன. நாம வி டிக்குப் போய் அங்கேயிருந்து கேட்வே ஆஃப் இந்தியாவும் கடலும் பார்த்து வருவோமா?” “நான் இங்கேயே உங்களுக்கு ஒரு கேட்வே காமிக்கிறேன்” என்று சொன்ன பியாரிலால் பக்கத்தில் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்ததுபோல இருந்த ஒரு சின்ன சந்துக்குள் அவனை கூட்டிச் சென்றான். கொஞ்சம் நடந்தபின், காலியான பேல்பூரி பாவ் பாஜி வண்டிகள் நின்றிருந்த ஒரு ஜூஸ் கடை அருகே நின்றார்கள். மற்ற நாட்களில் அந்த இடம் ஒரு ஊர்த்திருவிழா போல சந்தடியுடன் இருந்திருக்கும். அன்று ஒரு நடமாட்டமும் இல்லை. அந்த வண்டிகளின் மேல் சில கூலித்தொழிலாளர்கள் தூங்கிப் போயிருந்தார்கள். அந்தச் சாலையின் பக்கத்திலேயே கோட்டைச்சுவர் போல் உயரமாக அதன் மேல் கண்ணாடி சில்லுகள் புதைக்கப்பட்டு, துருப்பிடித்த இரும்புக் கதவுடன் ஒரு சுவர் இருந்தது. ‘இதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டான். கேகு அதை பார்த்திருக்கவில்லை. அதற்குப் பின் துருப்பிடித்த இரும்புக் கிராதிகளுடன் ஒரு கட்டடம் இருந்தது.

‘இது என்ன இடம் தெரியுமா? இங்கே குற்றவாளிகளை அடைத்து வைக்கிறார்கள். வெளி உலகத்தை குற்றத்திலிருந்து, கொலை, கொள்ளையிலிருந்து காப்பதற்காக” என்றான். பியாரிலால் கடுமையாய் தோன்றினான். கேகு நடுங்கினான். “பயப்படாதீர்கள். இங்கே ஒரு ஆபத்தும் இல்லை, யாரும் வெளியே வரமுடியாது” என்று சொல்லிக்கொண்டே சுவற்றின் அருகிலிருந்த ஒரு பெரிய முனிசிபாலிடி குப்பைத்தொட்டி அருகே விரைந்தான். தொட்டியின் சுவற்றில் ஏறி அதன் விளிம்பில் நின்று கழுத்தை நீட்டி அந்தப்பக்கம் பார்த்தான். தான் காண்பதைப் பகிர்ந்துகொள்ள கேகுவையும் அழைத்தான். கேகு மிகுந்த பிரயாசையுடன் தொட்டியின் மேலேறி நின்றான். சுவற்றுக்குப் பின்னே இரும்புக் கிராதிகளுடன் கூடிய ஒரு கட்டிடம் இருந்தது. இரும்புக் கம்பிகளுக்குப் பின் சீருடை அணிந்த ஆந்தைகள் நெருங்கி நின்றுகொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. அவை கைகளையும் காலகளையும் ஆட்டிக்கொண்டிருக்கும் மனித உருவங்கள் என்று கேகுவுக்கு மெதுவாய்ப் புரிந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு கூர்ந்து பார்த்தான். மூன்று நான்கு வயது குழந்தைகளிலிருந்து பதின்ம வயதுகள் வரை அவனை அழைப்பது போல் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தனர். வெளியே காம்பௌண்டுக்குள்ளே விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. பெரிய ஒரு ஓட்டையுடன் இருந்த தகர சறுக்குமரம், உடைந்த பலகைளுடன் ஊஞ்சல்கள். அந்தக் குழந்தைகள் யாரானும் தம்மை கவனிப்பார்களா, அவர்களுக்குக் கையாட்டலாம் என்று காத்துக் கொண்டிருந்தார்களோ?

பியாரிலால் தொட்டியின் விளிம்பிலிருந்து கிழே குதித்து “போகலாம்” என்றான். வழியில் விளக்கினான் ‘எல்லா இடங்களிலிருந்தும் அனாதைக் குழந்தைகளையும் இளம் குற்றவாளிகளையும் பிடித்துக்கொண்டு வந்து இங்கே அடைத்து வைக்கிறார்கள். அவர்களது மாலை வழிபாட்டைக் கேட்கவேண்டுமே, ஒப்பாரி போல இருக்கும். கடைத்தெருவின் இரைச்சல்களினிடையே அதை யாரும் கவனிப்பதில்லை. போன வருடம் குழந்தைகள் தின இரவில் அவர்களில் 70 பேர் கழிவறைகளுக்குப் பக்கத்திலுள்ள கதவுகளை உடைத்துக்கொண்டு, பின்னாலுள்ள குழியைத் தாண்டி குதித்துத் தப்பியோடி விட்டார்கள். சாதுவான 20 -30 குழந்தைகள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். அதான் இப்போ பாதுகாப்பு அதிகமா இருக்கு.”

இதையெல்லாம் உள்வாங்கிக்கொள்ள கேகுவுக்கு சற்று நேரமானது. இதே தெருவில் ஆயிரம் தரம் நடந்திருக்கிறேன். இதை ஏன் கவனிக்கவில்லை? இவை எல்லாவற்றையும் இன்னும் ஏன் என்னால் பார்க்க முடியவில்லை? புழுங்கும் வெயிலில் திணறிக் கொண்டிருந்த தெருவை எழுப்புவது போல், ஒரு டீ விற்கும் சிறுவன் தன் அலுமினியம் கெட்டிலின் மேல் சில்லறைக்காசுகளைத் தட்டிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவனை அழைத்தனர். அன்றைக்கு இன்னும் ஒரு கிலாஸ் கிடைக்காது என்று பயந்தது போல் பியாரிலால் இரண்டு கிலாஸ் டீயை விழுங்கினான். அப்புறம் அந்தப் பையனிடம் திரும்பி “ ஏ குட்டிபையா, உன் வீடு எங்கே? உனக்கு உடம்பு சரியில்லாமல் போய் சாப்பாடு இல்லாமல் போனால், என்கிட்டே சாப்பாட்டுக்கு வா. ஸ்டேஷன் பக்கத்திலே நான் பழம் விக்கிறேன்” என்றான். மத்தியான வெய்யில் வறுத்தெடுத்தது.

கேகுவின் வீடு பக்கத்தில்தான் இருந்தது. பியாரிலால் அவனை வற்புறுத்தினான் “அரே! இது உங்கள் மத்தியான சாப்பாட்டு நேரம். போய் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு வாங்க. நான் என் சாப்பாட்டுக்கு ராத்திரி வரை காத்திருக்கணும். அந்த டீ என் நாளைக் காப்பாற்றிக் கொடுத்தது”

கேகு கெஞ்சினான் ‘பியாரிபாய், நமக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்காது.வீட்டுக்கு சாப்பிட வா” பியாரிலால் திகைத்துப் போய் நின்றான். பின் அந்த எண்ணத்துக்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது போல் தன் காதுகளை கையால் இழுத்து நாக்கை வெளியே நீட்டி “ சே சே கேகு, எனக்கு இத்தனை இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வாங்க. நான் கடை பக்கத்தில் காத்திருக்கிறேன்,’ என்று சுத்தியாலடித்தாற்போல் உறுதியுடன் சொல்லி, மீண்டும் அந்தப் வேண்டுகோளுக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டான். பணிவான மாணவனைப் போல கேகு தன் வீட்டுக்கு நடந்தான்.

பந்தின் காரணமாய், அவன் சகோதரர்களும் சீக்கிரம் வீடு வந்திருந்ததில் வீடு பண்டிகைக்கோலத்தில் இருந்தது. அவனுடைய அண்ணியர் விஸ்தாரமான விருந்து சாப்பாடு சமைத்திருந்தனர். சாப்பிடுகையில் கேபிள் டி வி யில் ஒரு புதிய படத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர். டி வி பார்க்கும் அம்மாக்கள் டி வி பார்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டி விடுகையில் உணவு அவ்வபோது அவர்களின் மூக்கையும்,புருவத்தையும் தொட்டது. இந்த நெருக்கடியில் அவன் பியாரிலாலை எங்கே உட்காரவைத்து அமைதியாய் சாப்பிட வைத்திருக்கமுடியும்? தோய்க்க வேண்டிய துணிமணிகள், உலர்ந்த துணிகள், ஸ்டீல் ட்ரங்குகள், ஆல்பம்கள், ஊறுகாய்கள், எம்பிராய்டரி, இதர சாமான்கள் என்று இறைந்து கிடக்கும் வீட்டில் பியாரிலாலை எங்கே உட்காரவைத்து, சாப்பாடு போட்டிருக்கமுடியும் என்று கேகு யோசித்தான். சாப்பிட்டபின் ஒரு சின்னத் தூக்கம் போட விரும்பினான் ஆனால் முடியவில்லை. அவனது அண்ணன் தன் பெண்ணை தன்வயிற்றின் மேல் உட்கார வைத்துக் கொண்டு ஏப்பம் விட்டான். அவன் தம்பியோ, ஊட்டியில் எடுத்த தன் தேன்நிலவுப் படங்களை பிறருக்குக் காட்டுவதில் கொண்டிருந்த ஆர்வத்துடனே அந்த எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தான். அப்புறம் குழந்தைகள். ‘தெரியாதவர்களுடன் பேசாதீர்கள், முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது….’ என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அவர்கள் உலகம் முழுவதும் தெரியாதவர்களே நிரம்பி இருப்பதாய் நம்பினர். அந்த ரிமாண்ட் காப்பகத்தின் குழந்தைகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயினர்.

ஒருமுறை கேகு பியாரிலாலிடம் கல்யாணம் செய்து கொள்வது பற்றிக் கேட்க பியாரிலால் “இந்த உலகத்தில் எல்லோரிடமும், பணத்தாலோ உடலுறவாலோ களங்கப்படாத உறவு வைத்துக் கொள்ள முடியும். எதுக்கு இது போன்ற அற்பமான பொறிகளிலும், முடிச்சுகளிலும் மாட்டிக் கொள்ளணும்?” என்று சொல்லிவிட்டான். தன்னைப் பற்றிய சொந்த விபரங்களுக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்பது போல பியாரிலால் பேசுவான். பியாரியின் தாய் அவர்களது கிராமத்தில் இறந்து போன போது, கேகு அவனுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள மிகச் சிரமப்பட்டான். பழக்கடைக்காரன் ஒரு நாள்கூட தன் கடையை மூடவில்லை. ‘மனிதர்கள் நம் மனதில் , நம் வாழ்வில் ஒரு அங்கமாகி நம் ஆன்மாவைத் தூண்டுகின்றனர். அவர்களின் பௌதிக உடலின் இழப்புக்கு துக்கம் காப்பது அவர்களை நம் மனதிலிருந்து விரட்டுவது போல் ஆகும்’ என்று சொல்லி விட்டு ‘நான் ஒருநாள் கடையை மூடி விட்டு சோம்பி அலைந்திருந்தால் அவள் அதைப் பாராட்டி இருப்பாளா என்ன?’ என்ற கூர்மையான கேள்வியைக் கேட்டான்.

இன்னொரு தரம் கேகுவிடம் ஒரு நூறு ரூபாய் கடன் வாங்கி விட்டு அவசர அவசரமாய் அதை திருப்பிக் கொடுத்தான். அப்போது கேகு கேட்டான் ‘ஏன் இத்தனை அவசரம். நான் இந்த ஊரை விட்டுப் போய்விடப் போவதில்லையே?”

‘நீங்கள் போகப் போவதில்லை. நானும் போகப்போவதில்லை கேகு…ஆனால், இந்தப் பணம் ஓடிப் போகக் கூடும். பிறகு நீங்கள் மனவருத்தப்படக்கூடும். காலம் அப்படி இருக்கிறது கேகுபாய், குழந்தைகளுக்கு செலவழித்ததற்கு பெற்றோர் கணக்கு வைத்துக் கொள்கிறார்கள். பந்த் இல்லையென்றால் பியாரிலால் அந்தத் தெருக்களில் அவனைக் கூட்டிப் போயிருக்கமாட்டான், அவனும் அந்த கருங்கடலுக்கான கேட்வாசலைப் பார்த்திருக்கமாட்டான். இந்த எண்ணங்களால் அமைதி குலைந்து அவன் வெளியே போக எழுந்தபோது அண்ணன் கேட்டான் ‘கடையை மூடவில்லையா?” “ஜெராக்ஸ் மெஷினை அணைக்க மறந்துட்டேன் போலிருக்கிறது” என்று சொல்லி வெளியே கிளம்பினான்.

கேகு வெளியே வந்தபோது இன்னும் சாலைகள் பொரிந்துகொண்டிருந்தன. கடைக்கு வெளியே பியாரிலால் உறங்கிப் போயிருந்தான் இட முழங்கையை தலைக்கு அண்டக்கொடுத்து ரேடியோவுக்கு சற்றே தூரத்தில். அவனுடைய கால்விரல் சற்றே நடுங்குவதுபோல் இருந்தது. அவனுடைய முடி இன்னும் கொஞ்சம் வெளுத்தாற்போல் இருந்தது. கேகுவுக்கு அவன் தலையை கோதவேண்டும் போலிருந்தது. ஆனால் பியாரிலால் விழித்துக்கொண்டு ‘மோசமான நாள்! ஒரு கப் டீ கூட குடிக்க முடியாது! என்று சொல்லி முகத்தை கர்ச்சீப்பால் துடைத்தான். எழுந்து நின்று “அப்புறம் கேகு, நாம எங்கே போகிறோம். வி.டி யா இல்லை…’

திடீரென ஒரு பெண் கறிகாய் மார்கெட்டிலிருந்து ‘யாராவது காப்பாத்துங்க, என் பொண்ணை காப்பாத்துங்க..” என்று கத்திக் கொண்டே சாலையில் ஓடி வந்தாள். பியாரிலால், கேகு இன்னும் அங்கிருந்த சிலர் அவளிடம் விரைந்து ஓட அவள் பல்லைக் கடித்துக் கொண்டு பயத்துடன் நடுங்கியபடி ரோட்டிலேயே உட்கார்ந்து விட்டாள். அவளுடைய கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ நோவு எடுத்துவிட்டது. தாய் ஆட்டோவுக்காகக் காத்திருந்தாள். கிடைக்காமல் போகவே அவர்கள் கறிகாய் மார்க்கெட்டை நோக்கி நடந்து வரும்போது வலியும் தவிப்பும் சேர்ந்து கொண்டு பெண் ரோட்டிலேயே சுருண்டு விழுந்துவிட்டாள். தாய் உதவி தேடி இந்தப்பக்கம் வந்திருக்கிறாள்.

பியாரிலால் அங்கும் இங்கும் ஆட்டோ வருமா என்று பார்த்தான். பிறகு கேகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மார்க்கெட்டை நோக்கி ஓடினான்.அதற்குள் கர்ப்பிணிப்பெண்ணைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம் கூடியிருந்தது. பியாரிலால் ஓடி வருவதைப் பார்த்ததும் யாரோ உறவினர் என்று கூட்டம் நகர்ந்து வழிவிட்டது. ‘இனி நம் பொறுப்பில்லை’ என்று சொல்லிக்கொண்டு நகர்ந்து போயினர். பியாரிலால் ஒரு குழந்தையை தூக்குவதுபோல் அவளைத் தூக்கிக்கொண்டு முனிசிபாலிடி ஆஸ்பத்திரியை நோக்கி மெதுவாய் ஓடினான். வழியெல்லாம் அந்தப் பெண்ணிடம் ‘பயப்படாதே குழந்தை, எல்லாம் சரியாயிடும். நாங்க எல்லாம் உன்கூட இருக்கோம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஒரு சமயம் கேகுவிடம் திரும்பி ‘என்னிடம் நூறு ரூபாய்தான் இருக்கு. இன்னும் தேவைப்பட்டால் உங்களிடம் இருக்கா?” என்று கேட்டான்.

சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் வலி நின்றது. ஆனால் எட்டாவது மாதமாகிவிட்டதினால், வலி திரும்ப ஆரம்பிக்கலாம் என்று டாக்டர்கள் நினைத்தார்கள். அவளை ஒரு வெள்ளைக் கட்டிலில் கால்களை உயர்த்தி படுக்கவைத்தனர். வெளியே மரபெஞ்சில் அவளுடைய தாயும், பியாரிலாலும் கேகுவும் உட்கார்ந்திருந்தனர். முன்பின் தெரியாதவர்கள் என்றாலும் அந்தத் தாய் அவளது கஷ்டங்களைச் சொல்லத் தொடங்கினாள். சந்திரா என்ற ரிக்ஷா ஓட்டுபவன் அந்தப் பெண் பேபியைக் கலியாணம் செய்துகொள்வதாய் ஏமாற்றி மூன்று மாதங்களில் அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டான் – வழக்கமான, பரிச்சயமான கதைதான். இந்த விபரங்கள் பியாரிலாலுக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்தச் சிறுபெண்ணின் அப்பாவி முகத்தில் தெரிந்த பயம் மட்டுமே அவனை சலனப்படுத்தியது. அன்பு இல்லாத கொடுக்கல் வாங்கல்களின் பலன்களை அறிந்தவன் அவன். ஆனால் ஒரு அன்பற்ற தாம்பத்தியத்திலிருந்து வரப்போகும் புது உயிரைப் பற்றி அவனால் நினைத்தும் பார்க்கவும் முடியவில்லை. அந்தத் தாயின் தோளைப் பிடித்து ‘அக்கா, அவனை மறந்துடுங்க. அவன் ஒரு சாக்குதான். அவன் வேலை முடிஞ்சு போச்சு. கை கழுவிட்டான். இந்த உலகத்துலே அந்த புது உயிருக்கு ஒரு இடம் இல்லைன்னா நினைச்சீங்க?”

கேகு அந்த அறையிலிருந்த மற்ற நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்: வரிசை வரிசையாய் படுக்கைகள். ஒவ்வொன்றின் மேலும் ஒரு உயிர். ஒவ்வொரு கட்டிலைச் சுற்றியும் நெருக்கமாய் நின்றிருந்த உறவுகள், பிஸ்கெட்டுகள், தெர்மொஸ் ஃப்லாஸ்க், பழங்கள். ஒரு நோயாளியால்தான் இன்னொரு நோயாளியைப் புரிந்துகொள்ள முடியும், ஆறுதல் சொல்ல முடியும். ஒரு தாயால்தான் இன்னொரு தாயை அறியமுடியும்.

பந்தின் காரணமாய் பல பேஷண்டுகளையும் டிஸ்சார்ஜ் செய்ய முடியாமல் போனதில் ஆஸ்பத்திரி நிரம்பி இருந்தது. வார்ட் பையன்கள் பெட்பேனுடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெளியில் அடர்த்தியான இருள் ஆஸ்பத்திரியை சூழ்ந்துகொண்டிருந்தது. நோயாளிகளைப் பார்க்க வந்திருந்தவர்கள் பெரும்பாலும் போய்விட்டிருந்தனர். பேபி படுத்திருந்த ட்ராலியை உள்ளே தள்ளிக் கொண்டு போய் அங்கே ஒரு படுக்கையில் அவளைப் படுக்க வைத்தனர். மூவரும் அவளிடம் மெதுவாய் போனார்கள். பேபி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் இருந்த சிசுவைப் போலவே சின்னதாய், மென்மையாய் தெரிந்தாள். சலைன் திரவம் சொட்டு சொட்டாய் விழுந்துகொண்டிருந்தது. பியாரிலால் குனிந்து அவள் தலையைக் கோதினான். அவள் லேசாய் கண்ணைத் திறந்து பார்த்து மறுபடி உறங்கிப் போனாள்.

பியாரிலால் தாயிடம் சொன்னான் “நீங்க தனியா இருக்கீங்க. உங்களுக்கு உதவி வேணும் இல்லையா. நாங்க இங்கேயே இருக்கோம். வேணுமானா நீங்க உங்க வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் வாங்க”. பிறகு கேகுவிடம் ‘நான் கொஞ்சம் பழங்கள் கொண்டு வரேன்” என்று கிசுகிசுப்பாய் சொல்லிவிட்டு வெளியே விரைந்தான். அந்தப் பெண்மணி வீட்டுக்குப் போகவில்லை. அவள் பேபியின் காலடியில் உட்கார்ந்துகொண்டாள்.

கேகு பக்கத்தில் இருந்த ஜன்னலருகே போய் நின்றான். இருட்டைப் பார்க்கும் தைரியம் அவனுக்கு இல்லை. ‘கருங்கடலின்’ அலைகள் அவன் உள்ளத்தில் பலமாய் அடித்துக் கொண்டிருந்தன. இதைப் போன்ற ஒரு இரவில் தப்பித்த அந்த சிறுவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? அந்த ப்ளாக் கேட்வே யில் கதவுவழியில் இருந்த மற்ற குழந்தைகள் தூங்கி இருப்பார்களா? கீழே மார்க்கெட்டின் சந்துக்கள் ஆளரவமின்றி மங்கலாய் இருந்தன. தெருவிளக்குகளின் வெளிச்சம் மட்டும் கீழே சிதறிக் கொண்டிருந்தது. அவன் திரும்பினான். அடுத்த கட்டிலில் ஒரு முதியவர் கஷ்டப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்த இன்னொரு பிடிவாதமான முதியவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தார். அவர் தாடையில் ஒட்டியிருந்த பருக்கைகளைத் துடைத்துவிட்டுக்கொண்டே ‘ஆச்சு. இன்னும் ரெண்டே வாய்தான்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்த முதிய நோயாளியின் தலையணை அருகில் ஒரு ரேடியோ – மிகவும் பரிச்சயமாய் தெரிந்தது. சன்னமாய் பாடிக்கொண்டிருந்தது. ஒரு இனிய விடுதலைப் பாட்டு அந்த வார்டில் பரவி அவன் மனச்சுமையை குறைத்தது. பேபி திரும்பிப் படுத்து, எதையோ முணுமுணுத்து மறுபடியும் தூங்கிப் போனாள். இந்த இளம் கர்ப்பிணிப் பெண் தனக்குக் கொடுத்த கதகதப்பும் ஆறுதலும் அந்தக் குழந்தைகளுக்கும் போய்ச் சேரவேண்டும் என வேண்டியபடி, கேகு மெதுவாய் அவளை நோக்கி நகர்ந்தான்.