படிக்கட்டில் அழுதுகொண்டிருப்பவள்
ஈயாடும் காபி கோப்பையுடன்
யாரும் நடமாடாத
படிக்கட்டில்
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறாள்
மெல்லக்குலுங்கும் முதுகுடனும்
கண்ணீர் சொட்டுகள்
பிரதிபலிக்கும் காலணிகளுடனும்
தெரியாத ஒருத்திக்கு
சொல்வதற்கு என்னிடம்
எந்த ஆறுதல் வார்த்தைகளும் இல்லை.
அதே படிக்கட்டை
ஒவ்வொரு முறை கடக்கும்போதும்
நினைத்துக்கொள்கிறேன்
தெரிந்த ஒருத்திக்குச்
சொல்வதற்கு
எந்த ஆறுதல் வார்த்தைகளும்
இல்லாதவர்களை
– லதாமகன்
- இரங்குவதில் தான் இவ்வுலகு
ஏதோ
’குடை கவிழ்ந்தது’ போல்
சலித்திருப்பேன்.
இரவு இறங்கியிருக்கும்
இந்தப் பூங்காவில்
எத்தனையோ மரங்களில்
எந்த மரம் சலித்திருக்கும்?
பட்டுப் போயிருக்கும்
ஒரு மரமும்
பற்றற்றுக் கிடக்குமா?
வானம்
எவ்வளவு பெரிதெனினும்
என்ன?
சிறிது வானை
ஒரு
மரத்தின் இலைகள்
மறைத்திருக்கும்.
காற்று கெஞ்சி
இலைகள் சற்று
விலகும்.
சரேலென்று
முழுநிலவு
பொன்னிலையாய்
என் மனச் சரிவில் வீழும்.
தனியாய் வருந்தித் திரியும்
தண்ணிலவின் நிறைவில்
தவிக்கும்
என் வெற்று மனம்
தளிர்க்கும் ஒரு கணத்தில்.
யார் வருத்தத்திற்கு
யார்
வருத்தமாவது
இரங்குவதில் தான்
கல்லும் மண்ணுமல்ல இவ்வுலகு.
-கு. அழகர்சாமி
- பறப்பது இறக்கைகளில் இல்லை
எத்தனை
‘அலை இறக்கைகள்’ அடித்தும்
பறக்க முடியவில்லையா
கடலுக்கு?
கடல் விரிவின் மேல்
பறந்து பறந்து
காகங்கள்
கேலி செய்யும்.
கரை பிடித்து இழுக்குமென்று
கரையில் மோதி மோதிச்
சீற்றம் கொள்ளும்
கடலை
என்ன செய்ய?
பறப்பது
’இறக்கைகளில்’ மட்டும்
இல்லையென்று
கடலுக்கும் தெரியவில்லை.
எதையாவது
‘கட்டிக் கொண்டு அழும்’
என்
பாழும் மனத்திற்கும்
புரியவில்லை.
-கு. அழகர்சாமி
புத்தகங்களும் பறவைகளும்
மின் கம்பிகளும் பறவைகளும்.
மாறி மாறிப் போகும்
மின் கம்பிகள் மேல்
ஒன்றும் இரண்டும்,
மூன்றும் ஒன்றுமாக..
எழுத்துக்களின் கருமையில்.
கவனமின்மையின் இடைவெளிகளில்
வரிசை கலையாமல்,
மறைவதும் வருவதுமாக.
புத்தகத்தை மூடியபோது,
ஒவ்வொன்றாய் பறந்துவிட்டன.
மின் கம்பிகளும் பறவைத் தடங்களும்.
– ச.அனுக்ரஹா