கண் விழித்த கானகம்- பொய்களும் சுயமயக்கங்களும்

ஜூலியன் பார்ன்ஸ்(Julian Barnes) எழுதிய ‘த ஸென்ஸ் ஆஃப் ஆன் என்டிங்’ (The Sense of an Ending ) என்ற நாவலின் கதைசொல்லி வரலாற்று மாணவனாக இருக்கிறபோது, அவனது ஆசிரியர் அவனிடம், “வரலாறு என்றால் என்ன?” என்ற கேள்வியைக் கேட்பார். “வென்றவர்களின் பொய்கள்,” என்பது அவனது பதிலாக இருக்கும். “இதை நீ மறக்காதவரை, தோற்றவர்களின் சுய மயக்கங்களும்தான் இந்த வரலாறு என்பதையும் நீ மறக்கக்கூடாது,” என்பார் அவனது ஆசிரியர். ‘கண் விழித்த கானகம்’ என்ற மலர்மன்னனின் நாவலைப் படித்ததும் இது நினைவுக்கு வந்தது.

phpthumb_generated_thumbnailjpg1

2004ஆம் ஆண்டு முதல் பதிப்பு கண்ட இந்தநாவலின் முன்னுரை இறுதியில் மலர்மன்னன் இவ்வாறு எழுதுகிறார்:

‘காலஞ்சென்ற நா. பார்த்தசாரதி நடத்தி வந்த ‘தீபம்’ இலக்கிய மாத இதழில் ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற தலைப்பில் தொடராக இது 1971-ல் வந்தபோது பெரிதும் பேசப்பட்டது. நா.பா. இன்று இல்லை. ‘தீபமு’ம் இல்லை. இருப்பது எனது நன்றி மட்டுமே.”

1971-ல் மட்டுமல்ல, இவர் எழுத எடுத்துக் கொண்ட இதே களத்தை மையமாகக் கொண்டு மகாஸ்வேதா தேவி எழுதிய ‘ஆரண்யேர் அதிகார்’ என்ற நாவலுக்கு 1979ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோதும் இது பெரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டும், பேசினார்களா என்ன என்று தெரியவில்லை. ஆனால், ‘மலர்மன்னன் வெளியீடு’ என்று தன் சொந்தப் பதிப்பாக, 2004-ஆம் ஆண்டு மலர்மன்னனே இதைப் பதிப்பித்ததைப் பார்க்கும்போது தமிழகம் இந்த நாவலுக்கான தேவையை உணரவில்லை என்பது தெரிகிறது.

‘கண் விழித்த கானக’த்தின் இலக்கியத் தகுதியைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அத்தனை அலட்சியம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இன்று ஜார்கண்ட் மாநிலமாக அறியப்படும் பகுதியில் பழங்குடியினத் தலைவர் ஒருவர், சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நிகழ்த்திய ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நாவல் இது. இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஆதிவாசித் தலைவரின் உருவப்படம், 1870 முதல் 1900 வரை முப்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பிர்ஸா முண்டாவின் படம்தான். பிரிட்டிஷ் காலனியம், சாதி ஆதிக்கம், மதமாற்றம் – இந்த மூன்றும் ஆதிவாசிகளின் வனங்களை அபகரித்து அவர்களை அடிமைகளாக்கிக் கொண்டதை எதிர்த்தவர் பிர்ஸா முண்டா.

புத்தகங்கள் மற்றும் வனவாசி குடியிருப்புகளில் நேரடியாக விசாரித்து மலர்மன்னன் அறிந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நாவல் இது. இதன் துவக்கத்தில் பிர்ஸா முண்டா, ஆனந்த பாண்டே என்ற வைணவரின் மாடுகளைக்காட்டுக்கு ஓட்டிச் சென்று மேய்த்து வருபவராக இருக்கிறார். பிர்ஸா முண்டாவை ஒரு அதிநாயகனாகச் சித்திரிப்பது இந்த நாவலின் நோக்கமாக இருப்பதால், பிர்ஸா வெகு விரையில் பாண்டேவின் தோழராகிறார், அவரது பதினைந்து வயது மகளின் நேசத்துக்குரியவரும் ஆகிறார். எந்தச் சிக்கலும் இல்லாமல் அவர்களது வீட்டில் புழங்குகிறார், ஆனந்த பாண்டே வாயிலாக ராமாயணம், மகாபாரதம் ஆகிய பெருங்காவியங்களையும் பக்தி கீர்த்தனைகளையும் கற்கிறார்.

வனவாசியான பிர்ஸா முண்டா, கிறித்தவ பள்ளியில் இந்தியும் ஆங்கிலமும் பயின்ற பருவத்தில் கிறித்தவ சமயத்தைத் தழுவி பின்னர் அதிலிருந்து வெளிவந்தவர். “எகிப்தில் அடிமைகளாய் உழன்ற தம் இனத்தவர்களை மீட்டு ஜெஹோவாவால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுதந்திர பூமிக்கு அவர்களை அழைத்துச் செல்ல பொறுப்பு ஏற்றுக் கொண்ட மோசேயைப் பற்றி எனக்குத் தெரியும்…,” என்று ஆனந்த பாண்டேவிடம் தன்னை விவரித்துக் கொள்ளும் முண்டா தொடர்கிறார் – இங்குதான் இந்தநாவலின் மையப்பிரச்சினை சுட்டப்படுகிறது, எனவே கொஞ்சம் விரிவாகவே மேற்கோளைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

“… ஹிந்து மதத்தைப் பற்றி, அது ஒரு மோசமான தொற்று நோய் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாதுதான். ஆனால் இதற்காக கிறிஸ்துவ மதத்தை எந்த வகையிலும் குற்றஞ்சாட்ட மாட்டேன். கிறிஸ்துவின் உண்மையான தொண்டர்களாய், ‘உன் அயலானை மட்டுமல்ல, உன் விரோதியையும் நேசி’ என்ற அவரது வாக்கை அப்படியே உள்வாங்கிக்கொண்டு வந்திருக்கும் சில பாதிரிமார்களையும் பழிக்க மாட்டேன். எனக்குத் தெரியும், அவர்கள் எவ்வளவு சீலர்கள் என்று. ஆனால் பாதிரிமார் வேஷத்தில் ஏராளமான பாஷாண்டிகளும் இந்தநாட்டுக்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்த பிறகுதான் இந்தநாட்டின் சரித்திரமே ஆரம்பமாகி இருப்பதாக இவர்கள் பிரசாரம் பண்ணுகிறார்கள். வெள்ளையர்கள் வந்தபிறகுதான் நமக்கு எல்லாம் முதுகெலும்பின் உபயோகமே தெரிய வந்ததாகக் கதை கட்டுகிற அளவுக்கு இவர்கள் இனத்துவேஷிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு இடப்பட்ட ஆக்கினைகளுக்கு முரணாய், மக்களின் பலவீனத்தையும், அவர்களுடைய தொல்லைகளையும் சாதகமாக்கிக் கொண்டு, பேராசை காட்டி, சத்தியத்துக்குப் புறம்பாய் அவர்களை எல்லாம் இவர்கள் மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மிஷனரிகளில் இந்த பாஷாண்டிகளின் ஆதிக்கந்தான் ஓங்கியிருக்கிறது. இவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஹிந்துக்களின் புராதானப் பண்பாடும் நம்பிக்கைகளும் பரிகசிக்கப்படுகின்றன. அதனால் உண்டான வெறுப்பில்தான் நான் என் கல்வியைத் தொடர மனமின்றிப் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டியதாயிற்று…”

இது ஏதோ மலர்மன்னன், தன் இந்துசமயப் பற்றை முண்டாவின் சொற்களாய் திணிப்பது போன்ற தோற்றம் கொடுக்கலாம். ஆனால் உண்மையில், வனவாசிகள் பிரிட்டிஷ் ஆட்சியின் புதிய சட்டங்கள், மற்றும் கிறித்தவ அமைப்பின் புதிய நியமங்களின் தாக்குதலில் தம் உரிமைகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் இழந்து, இந்து சமயத்துக்குள் தமக்கான இடத்தைத் தேடினர். தாம் சத்ரிய வர்ணத்தைச் சார்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உயிர்பலி கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுதல், பசுவதையைத் தடை செய்தல், புலால் மறுப்பு, பூணூல் அணிதல், பெருந்தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்றை அவர்கள் தம் விருப்பத்தின் பேரில் மேற்கொண்டு, இந்து சமய வர்ணங்களில் ஒன்றில் தமக்கென்று ஒரு புகல் தேடினர்.

இது சோட்டா நாக்பூரின் மலைக்காடுகள் எங்கும் பல்வேறு மலைசாதியினரால் விரும்பப்பட்ட தேர்வு. வனவாசிகளின் வாழ்வை நெருங்கிப் பழகி ஆய்வு செய்த மானுடவியலாளர் வெர்ரியர் எல்வினும்கூட, மலைவாசிகள் சத்திரிய வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக தங்களை விவரித்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது என்றும், இந்து சமயம் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வது மட்டுமே அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும் என்றும் வலியுறுத்தினார். காலனியமும் கிறித்தவமும் ஆதிவாசிகளின் பொருளாதார கட்டமைப்பைத் தகர்த்து, சமூகப் பண்பாட்டுத் தளங்களைத் தீவிரமாக அழித்து அவர்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு புதிய அமைப்பில் அவர்களைத் திணிப்பதாக இருந்தன.

ஆனால் இந்த பரவலான சித்திரம் மலர்மன்னனின் ‘கண் விழிக்கும் கானகம்’ கதையை வாசிக்கும்போது நமக்குக் கிடைப்பதில்லை. நாம் பிர்ஸா முண்டா என்ற ஒரு தனி நாயகரை மட்டுமே அறிகிறோம். ஒன்றையொன்று தொடரும் நிகழ்வுகள், அலங்காரமில்லாத இயல்பான கதை சொல்லல், கருத்துகளை விளக்கும் நீண்ட, ஆனால் செறிவான மொழியில் நிகழ்த்தப்பட்ட உரைகள், சண்டி என்ற மறக்க முடியாத ஒரு பெண்ணின் உக்கிரமான சித்திரிப்பு, கச்சிதமான கதையமைப்பு, இவையனைத்தும் ஒரு பாத்திரத்தை மட்டுமே உயர்த்தி விவரிப்பதில் விரயமாகி விடுகின்றன. இது மோசமில்லை என்றாலும், மலர்மன்னன் இன்னும் சிறப்பான நாவலை எழுதியிருக்கலாம் – “ஒரு காடே எழுந்து போர் புரிய வருகிறது,” என்று ஓர் பாத்திரம் நினைப்பதாக எழுதுகிறார் அவர். ஆனால், பெரிய ஒரு களத்தை எடுத்துக் கொள்ளாமல், ஒரு அதிநாயக சித்திரிப்போடு மலர்மன்னன் நிறுத்திக் கொள்வதால் கானகத்தின் கண் விழிப்பும் அந்த நாளின் நிகழ்வாக மட்டுமே நின்று விடுகிறது. அதுவும் எப்பேற்பட்ட விழிப்பு!

ஒரு மீட்பனாகத் தன் மக்களிடம் திரும்பிய முண்டா இவ்வாறு கூறுவதாக வருகிறது:

“ஆகையால் என் நண்பர்களே, உங்கள் அனைவரையும் ஈசன் ஆக்கினைப்படி வழி நடத்திச் செல்ல நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னைப் பின்பற்றுபவர்கள் அதற்கு அடையாளமாக மார்பில் முப்புரி நூலைத் தரித்துக் கொள்ளுங்கள். என்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்பவர்கள், அதற் குஅறிகுறியாக புலால் உண்பதையும் வேட்டையாடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்….

“…சிங்பொங்கா ஒருவர் போதாதா நம்மையெல்லாம் ரட்சிக்க? சகலவிதமான வியாதிகளும் என் ஒருவனாலேயே குணமாகும். சகல சௌபாக்கியங்களும் சிங்பொங்கா ஒருவராலே வந்து சேரும். ஆகவே சிங்பொங்கா என்ற ஒரு கடவுளை, ஒரே கடவுளை வைத்துக் கொண்டு மற்றவர்களையெல்லாம் விடை கொடுத்து அனுப்பி விடுங்கள். உண்மையில் கடவுள் ஒருவர்தான்; அவரைப் பலராக்கித் தொழுவது அனாவசியம்…

“…எதன் பொருட்டும் எவருக்கும் நாம் வரி செலுத்த வேண்டியதில்லை. நம் உழைப்பை எவருக்கும் நாம் தானம் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய உழைப்பின் பலன் இன்று நமக்குக் கிட்டுவதில்லை. பாடுபடுவதற்கு நாமும், பலனடைவதற்குப் பிறருமான ஓர் அக்கிரமமமான ஏற்பாட்டுக்கு இன்று ஆளாகியிருக்கிறோம்…. நம்முடைய பூமி பரிபூரணமாக நமக்குச் சொந்தமாகிற வரை நாம் உழைக்கத் தேவையில்லை….”

பாலகங்காதரா முதலான பலபண்பாட்டு ஆய்வாளர்கள் கூறுவதில் ஒரு விஷயம் மிக முக்கியமானது. சூஃபி இசுலாம், கிறித்தவ மெய்ஞானம் போன்றவை காலனியச் சூழலில் மிகக் குறைவான தாக்கத்தையே கொண்டிருப்பதால் அவற்றை முக்கியப்படுத்தாமல், செமிட்டிய சமயங்கள், ஒருவனே தெய்வம் என்ற ஒற்றை உண்மையைத் தம் அடிப்படையாகக் கொண்டவை என்கிறார் பாலகங்காதரா. என் தெய்வம் உண்மை, என் தெய்வம் தந்தஆணைகள் உண்மை என்று சொல்பவை. உண்மையை வலியுறுத்துவதும், பொய்மையை அழிப்பதும் இந்த சமயங்களைச் சேர்ந்த ஆன்மிகவாதிகளின் கடமையாகின்றன. இவற்றை அவர்கள் தவிர்க்க முடியாது. ஆனால் இந்து     மற்றும் சமண பௌத்த சமயங்கள்தம் நம்பிக்கைகளை, பிற நம்பிக்கைகளை விலக்கிவைக்கக் கோரும் பேருண்மைகளாகக் கொள்ளாதவை, அவற்றை கருவி நிலையில் மட்டுமே வைத்திருப்பவை. பாலகங்காதராவின் இந்தப் புரிதல் குறித்து நமக்கு ஐயங்கள் இருக்கலாம், ஆனால் இதைக் கொண்டு அவர் மத சார்பின்மையையும் அதன் விளைவாக அடிப்படைவாதத்தையும் விசாரிக்கிறார் என்பது முக்கியமான ஒன்று.

தூல வாழ்வைத் தாண்டிய ‘உண்மை’மற்றும் அதை அறிய உதவுவதாக எழுந்த சமய வழி வாழ்வின் தன்மை ஆகியனவற்றைக் குறித்த புரிதல்களில் நிறையவே மாறுபடும் ‘சமயங்கள்’, ஒன்றையொன்று எதிர் கொள்ளும்போது, மதமாற்றம் என்பது சில நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வது, சில கடவுள்களின் பெயர்களை மாற்றிப் பயன்படுத்துவது என்ற பழக்கவழக்க மாறுதல்கள் என்ற நிலையைத் தாண்டி விடுகிறது. எது மதம், எது உண்மை என்ற வரையறைகளையே திருத்தி எழுதிக் கொள்வது கட்டாயமாகிறது. இங்கு செமிட்டிய சமயத்தைச் சார்ந்தவர்கள் தம் இறை நம்பிக்கையின் அடிப்படையில் பிற நம்பிக்கைகளுக்கு இடமில்லாத தனி ஒரு உண்மை தம்மிடம் இருக்கிறது என்ற நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொள்ள வேண்டியதாகிறது – சி. எஃப். ஆண்ட்ரூஸ் போன்ற மிஷனரி கிறித்தவ மறையாளர்கள் இந்தத் தளர்வை நடைமுறைப்படுத்த முயலும்போது, நிறுவனமாக்கப்பட்ட அமைப்பை விட்டு அவர்கள் வெளியேறுவது தவிர்க்க முடியாததாகிறது. அதே சமயம், இந்திய சமயங்களைச் சார்ந்தவர்கள் எது மதம், எது உண்மை என்ற வரையறைகளைத் திருத்தி எழுதிக் கொள்ளும்போது, தம் மதத்துக்கு ‘அன்னியமானவற்றை’ அகற்றிக் கொள்வதும், தம் நம்பிக்கைகளுக்கு உண்மையை அடிப்படையாகக் கோருவதும் தவிர்க்க முடியாததாகிறது.

எனவேதான் அனைத்து சமயங்களையும் ஏற்றுக்கொள்ளும் காந்தியர்களும் மதமாற்றத்தை எதிர்க்கிறார்கள். ஏனெனில், தளர்ச்சியான சமயத்தையும் இறுக்கமான சமயத்தையும் சமநிலையில் மதித்து அவற்றுக்கிடையே மத மாற்றத்தை அனுமதிக்கும் சமயசார்பின்மைதான் இந்து அடிப்படைவாதத்துக்கும் வன்முறைக்கும் தூண்டுதலாகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். செமிட்டிய ‘சமயங்களைச்’ சார்ந்தவர்கள் இந்திய ‘சமயங்களை’யும் ‘உண்மை’யானவை என எதிர்கொள்ளும்போது, தம்சமயத்தில் முன்போல நீடிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால், இந்திய ‘சமயங்களை’ சார்ந்தவர்களில் ஒரு சாரார் (காட்டு: பிரும்மோ சமாஜத்தினர்)  செமிட்டிய ‘சமயங்களை’ ‘உண்மை’யானவையாக எதிர்கொள்ளும்போது தம் ‘சமயத்தை’ உள்ளபடியே தொடர்ந்து பழகுவதும் கடைப்பிடிப்பதும் சாத்தியமில்லாமல் போகிறது – தம் நம்பிக்கைகளை இறுக்கி, செமிட்டிய சமயங்களின் சாயலில், ஆனால் அவற்றுக்கு எதிரானவர்களாக, போட்டியாளர்களாக தம்மை வார்த்தெடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், ஒரு காரணம் காலனியத்தின் அடிமைகளாகிப் போனவர்களில் சிலர் காலனிய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு என்ன காரணங்கள் என்று தேடுவார்கள். இந்தத் தேடலுக்கு ஒரு காரணம் சுய நம்பிக்கை என்றாலும், இன்னொரு காரணம் சுய நம்பிக்கை இன்மை என்பதும் உண்மை. தம் தோல்விக்குத் தம்முள்ளேயேதான் காரணிகள் இருக்கின்றன என்று எதார்த்தமாக யோசிப்பவர்கள், விடுவிப்புக்கான ஆயத்தங்களை புறக்காரணிகளையும் அகக்காரணிகளையும் தமக்கு சாதகமாக மாற்றும் வகையில்  மேற்கொள்ள முடியும்.  ஆனால் புறக்காரணிகளை எதிர்கொள்வதற்குத் தேவைப்படும் பெரும்படைகள், போர்க்கருவிகளைத் தேடுவது தம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டு தம்மில், தம் அகத்திலும் தம் மரபிலும் தம் சமய நம்பிக்கைகளிலும் தம் சமூகப் மதிப்பீடுகளிலும் தம பழக்க வழக்கங்களிலும் குறைகளைத் தேடுகிறார்கள். இந்தத் தேடல் ‘சுத்திகரிப்பில்’ சென்று முடிகிறது. இது பல நூறாண்டுகளாகக் காலனிய நாடுகளில் பல சமூகக் குழுக்களிடையே நடந்திருப்பதுதான். தூய ஒன்றை நோக்கமாகக் கொண்ட இந்த சுத்திகரிப்பு எப்போதும் மீளுருவாக்கத்தில்தான் முடிந்திருக்கிறது.

இதை ஹோமி பாபா போன்ற பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் கருத்தாக்கமாகச் சொல்கையில், தோற்று அடிமையாக்கப்பட்ட காலனியப் பிரஜைகள் தம் அடிமைத்தனத்தை எப்படி எதிர்கொள்கின்றனர் என்று பல வழிமுறைகளைச் சுட்டுகின்றனர். ஒன்று பதிலி செய்தல், இன்னொன்று பகடி, மூன்றாவது கலப்பு. (Mimicry, mockery and hybridity).

வனவாசிகளான முண்டாக்கள் தம் பண்பாட்டின் ஆழ்நிலை நம்பிக்கைகளைக் கைவிட முடியாத நிலையில் கிறித்தவ வழிபாட்டு முறைகளை பதிலி செய்தும், பின் இவ்விரு பண்பாடுகளிலும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத தன்மைகளை விலக்கி, ஒரு புதிய கலப்புப் பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்றனர். எந்த சமூக அமைப்பிலும் இத்தகைய போக்கு உண்டு. மலர்மன்னன் இதை மிகச் சரியாகவே விவரித்திருக்கிறார்.

“தூங்குகிறவர்களையெல்லாம் எழுப்புவதற்காக வந்திருக்கிறேன் – நான் அந்தச் சூரியன் உதிக்கும் காலைப் பொழுது.

“தீமைகளையெல்லாம் எரிப்பதற்காக நான் வந்திருக்கிறேன் – நான் அந்த சூரியன் தகிக்கும் உச்சி வேளை.”

“மனோகரமானதொரு சமுதாய ஏற்பாட்டை உருவாக்குவதற்காக வந்திருக்கிறேன் – நான் அந்தச் சூரியன் தணியும் இதமான மாலை வேளை”

என்று சொல்கிறார் மலர்மன்னனின் பிர்ஸா முண்டா. தன் வனத் தெய்வங்களை விடுத்து முப்புரி நூலணிந்து கள்ளும் புலாலும் மறுத்து பெருந்தெய்வங்களைத் தொழும் புதிய ஒரு அமைப்பை இந்து சமயத்துக்குள் உருவாக்கிக் கொள்வதே கிறித்தவத்தை எதிர்கொள்ளும் வழியாகிறது அவருக்கு. கிறித்தவத்தைப் போன்ற இன்னொரு சமயமே – தீவிரமான இருமைகளை வலியுறுத்தும் சமயமாக இருக்கக்கூடிய இந்து சமயமே- அதை எதிர்கொள்ளும் வலுக்கொண்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரும் கிறித்துவின் மீட்பர் மொழியில் பேசுகிறார்.

9i

“நான் ஒரு நல்ல வண்ணான். உங்கள் இருதயங்களை என்னிடம் வெளுக்கப் போடுங்கள். அவற்றைத் தூய வெண்ணிறமாக்கித் திருப்பிக் கொடுப்பேன். நான் ஒரு தேர்ந்த கருமான். வளைந்தும், மடங்கியும், மழுங்கியும் போன உங்கள் ஆன்மாக்களை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவைகளை நிமிர்த்தியும் நேராக்கியும்கூராக்கியும் சீராக்கித் தருவேன். மங்கிப் போன உங்கள் மனசசாட்சிகளை என்னிடம் தாருங்கள். நான் ஒரு திறமையான பொற்கொல்லன். அவற்றைப் பிரகாசமாகவும் அழகான வேலைப்பாடுகளோடும் உருமாற்றிக் கொடுப்பேன். நான் ஒரு உறுதியான சுமைதாங்கி. உங்கள் பாரங்களையெல்லாம் என் முதுகிலே ஏற்றி வையுங்கள். நீங்களெல்லாரும் என் பின்னாலே வாருங்கள், என்னைப் பின் தொடருங்கள். நான் ஒரு கெட்டிக்கார வழிகாட்டி, உங்களையெல்லாம் சுபிட்சபுரிக்கு அழைத்துச் செல்வேன்.”

கிறித்தவத்தின் சாயையில் ஒரு விளிம்பு குறுங்குழுவை உருவாக்கிய பிர்ஸா முண்டா, அதன் நீட்சியாக கிறித்தவத்தின் மேல் போர் தொடுத்து சர்ச்சுகளைக் கொளுத்தி தன் சமயத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு போராட்டத்தைத் துவக்குகிறார். அவரது லட்சியங்கள் ஆன்மிக விடுதலை மட்டுமல்ல, சமூக, பொருளாதார விடுதலையும்தான். இந்து கிறித்தவ கூறுகள் இருந்தாலும் அவர் தன் சமயத்தை இந்து சமயத்துக்கு இணக்கமானதாகவே உணர்கிறார், ஆனால் கிறித்தவத்துக்கு எதிரானதாக நிறுவுகிறார் என்பது கவனிக்கத்தக்க விஷயம். இதன் பிரதான குறிக்கோள் எதார்த்தத்தில் விடுதலை பெறுவது என்பதாலேயே இது எதார்த்தத்தின் இரும்புத் தளைகளோடு மோதித் தோற்கிறது.

ஒரு நிஜ மனிதர் எதிர்கொண்ட நிஜ சிக்கல்கள் – அவரது சமூகம் எதிர்கொண்ட காலனியச் சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை, பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு ஒழிப்பு, இவற்றைப் பேசும்போது, மத மாற்றம் என்ற சிக்கலை மையத்தில் வைத்து இறுக்கமான இந்து சமயம் என்ற விடையை முன்வைத்த பிர்ஸா முண்டாவின் நினைவுகளை மலர்மன்னர் இந்நாவலில் அப்படியொன்றும் திரித்திருப்பதாகத் தெரியவில்லை – வரலாற்றுக் காரணிகள் என்று எந்தக் கோட்பாட்டைப் பேசினாலும், பிரச்சினையை இவ்வாறு புரிந்து கொண்டதும், அதற்கான விடையை இவ்வாறு கண்டதும்,முண்டா பகவானின் தேர்வுதான்.

அவரை ஒரு அதிநாயக அந்தஸ்துக்கு உயர்த்தியதை வேண்டுமானால் குற்றம் சொல்லலாம், பிர்ஸாவை பிரம்மசாரியாகச் சித்திரிக்கவும், அவருக்கு வன்முறையில் நாட்டம் இல்லை என்று வலியுறுத்தவும் சில சுதந்திரங்கள் எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மற்றபடி, வரலாறை ஆவணப்படுத்தும் இந்திய இலக்கிய புனைவாக்கங்களின் தொகுப்பில் மகாஸ்வேதா தேவியின் ‘ஆரண்யேர் அதிகார்’ நாவலுக்கு இடம் இருக்கிறது, கண் விழித்த கானகம் முப்பது ஆண்டுகளுக்கும் மேல், ஏன் இன்னமும், கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது என்பதுதான் இன்றைய நிலை. இந்தத் தேர்வுகள் நம்மைப் பற்றி என்ன சொல்கின்றன என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.

நான் முன்சொன்ன ஜூலியன் பார்ன்ஸ் நாவலின் கதைசொல்லி தன் அனுபவம் தந்த படிப்பினைகளின் வெளிச்சத்தில் கல்லூரி நாட்களின் உரையாடலை நினைத்துப் பார்த்து, பின்னர் எழுதுகிறார் – வரலாறு வென்றவர்களின் பொய்களல்ல என்பது இப்போது எனக்குப் புரிகிறது. அதைவிட அது பிழைத்துக் கொண்டவர்களின் நினைவுகள், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெற்றி தோல்விகள் இல்லை, என்று.

சாமானிய மனிதனுக்கு வெற்றி தோல்விகள் குறித்த பிரக்ஞை இல்லாமல் இருக்கலாம், ஆனால் வரலாற்று உணர்வு இருப்பவர்களுக்கும், வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும, வெற்றி தோல்வி குறித்த அக்கறை இருப்பவர்களுக்கும், வரலாறு திரும்பக் கூடாது என்ற அச்சம் இருக்கிறது – எனவே, பொய்கள் தொடர்கின்றன, சுய மயக்கங்களும் தொடர்கின்றன.

பொய்கள் எவை சுய மயக்கங்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ள நாவலில் ஒரு சிக்கலான பகுதி இருக்கிறது, அதை கவனிப்பது உதவும். ஆனந்த பாண்டேவின் வீட்டில் மாடுகளைப் பராமரிப்பவராக இருக்கும் பிர்ஸா முண்டா அருகிலுள்ள பொம்பாணி கிராமத்தில் ஒரு வைணவ துறவியைச் சந்திக்கிறார். இது அவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைகிறது.

“…உன் செயல்களும் உன் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளும் கடவுளின் கட்டளைப் பிரகாரம் நேர்வதாய் எப்போதும் வலியுறுத்து. அப்படியே நீயும் மனமார நம்பு. அப்போது உன் செயல்கள் எப்போதும் புனிதமாயிருக்கும். உன் வார்த்தைகளுக்கும் மந்திர சக்தியுண்டாகும். நீ வாய் திறந்து கேட்கவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் உனக்குச் சொல்கிறேன். உன்னிடம் இப்படி பேசுமாறு எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது,’

என்று சொல்லும் அந்த துறவி பிர்ஸா முண்டாவிடம் புலால் உண்ண வேண்டாம், யாரையும் வதைக்க வேண்டாம், பந்தங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறாரே தவிர, எந்த சமயத்துக்கும் உரியதான உபதேசமாக எதுவும் சொல்வதில்லை. “கருடா, பறந்து போ! வேகம் வேகமாய்ப் பற! உயர உயரப் பற! தீயதைத் தேடிப் பற! தீயது ஓட ஓடப் பற! அதை விரட்டி விரட்டிப் பற! பறந்து போ!” என்று ஆணையிடும் போதும், எது நல்லது எது தீயது என்று எதுவும் சொல்வதில்லை.

ஆனால், இதன்பின் பிர்ஸா முண்டாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை இந்த வைணவத் துறவியின் சொற்களோடு இணைத்துப் பார்க்கும்போது நாம் இரண்டையும் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதே நம் பொய்களையும் சுய மயக்கங்களையும் தீர்மானிக்கிறது.