சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்

நண்பர் லலிதா ராமுடன் இரண்டு நாட்கள் இருக்கும் வாய்ப்பு கடந்த ஆண்டு கிடைத்தது. அவரது எழுத்தை பல வருடங்களாகப் படித்து வந்திருப்பதாலும், அவருடன் அவ்வப்போது மடல் தொடர்பில் இருப்பதாலும் ஏதோ பழைய நண்பரை ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்தித்தது போல விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினோம். ஒரு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, அவர் ஊருக்குத் திரும்பிய ஞாயிறு மாலை வரை பல விஷயங்களைப் பேசித் தீர்த்தோம். இது போன்ற ஆரம்ப அறிமுகச் சங்கடங்கள் ஏதுமற்ற சந்திப்பு கடைசியாக எப்போது நடந்தது என யோசித்துப் பார்த்தேன், அவ்வளவாக எதுவும் நினைவுக்கு வரவில்லை.

எங்கள் பேச்சு குடும்பம், வேலை, இணைய நண்பர்கள் எனத் துவங்கி  எங்கெல்லாமோ சுற்றிவிட்டு முடிவாக இசை, இலக்கியத்தை வந்தடைந்தது. மூன்று மணிநேரப் பயணம் செய்து நாளெல்லாம் அலைச்சலாக இருந்தாலும், இசை பற்றி பேசத் தொடங்கியதும் லலிதா ராமுக்கு எங்கிருந்தோ ஒரு தனி சக்தி தொற்றிக்கொண்டது. அதிலும் குறிப்பாக, எஸ். பி. காந்தனுடன் இணைந்து அவர் அப்போது இயக்கிக் கொண்டிருந்த `எஸ்.ராஜம்` ஆவணப்படம் பற்றி அவரிடம் நான் கேட்டதும், அடுத்த நாளுக்குள் நுழையப் போகிறேன் எனும் கடிகார அறிவிப்பு எனக்கு மட்டும்தான் கேட்டது  போலும,  அவர் அப்போதுதான் புலர்ந்த நாளின் மலர்ச்சியும் துள்ளலுமாய் ஃப்ரெஷ் கார்ட் எடுத்துக்கொண்டு மடமடவென பேசத் தொடங்கினார்.

எஸ்.ராஜம் எனும் பன்முக கலைஞரைப் பற்றி எனக்கு ஓரளவு மட்டுமே அறிமுகம் இருந்தது. அதில் பலதும் கேள்வி ஞானம் மட்டுமே. கலைஞர்களைப் பல கோணங்களில் அணுகும்போது நமக்குக் கிடைக்கும் சித்திரங்கள் அலாதியான மன நிறைவைத் தரவல்லவை. கலைஞனுக்கும் கலைக்கும் உள்ள உறவை எந்த  வரையறைக்குள்ளும் அடைக்க முடியாது. கலையின் வெளிப்பாடு கலைஞனுக்குள் நிகழ்த்தும் வளர்சிதை மாற்றங்கள் என்றும் வசீகரமானவை.

எஸ்.ராஜம் பற்றி பதினைந்து நிமிட முன்னோட்டத்தை லலிதா ராம் கொண்டு வந்திருந்த குறுந்தகட்டில் காண முடிந்தது. ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது அதில் வரும் காட்சிகள் குறித்து மேலும் பல தகவல்களை அளித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் காட்டிய ஆர்வம் எஸ்.ராஜம் எனும் கலைஞனின் கலை பங்களிப்பை பற்றிய அறிமுகம் இல்லாத எனக்கும் தொற்றிக்கொண்டது. தனிப்பட்ட முறையில் கேள்விப்பட்ட சங்கதிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எஸ்.ராஜம் அவர்களுடன் பழகிய பெரும்பாலான கலைஞர்களை பேட்டி கண்டதோடு மட்டுமல்லாமல், அவரிடம் இருந்த ஓவியங்களையும் ஆங்காங்கே காட்சிகளாக இணைத்து லலிதா ராம் மற்றும் எஸ்.பி.காந்தன் இருவரும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர் என்பது அப்போதே புரிந்தது.

மக்களிடையே பிரபலமாக வாழ்ந்த கலைஞர்களைப் பற்றிய முதல் அறிமுகம் ஏதேனும் தனிப்பட்ட வாழ்வு சம்பந்தமானதாகவே பெரும்பாலும் இருக்கும். அதில் ஏற்பட்ட வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அக்கலைஞர்களின் கலை பங்களிப்பைத் தேடித் தெரிந்து கொள்வதுண்டு. காந்தனுடன் சேர்ந்து லலிதா ராம் முன்னர் தயாரித்த ‘இசை வசீகரன்’ ஆவணப்படத்தில் ஜி.என்.பியெனும் ஆளுமை மீது அவருக்கு இருந்த அபரிமிதமான வசீகரத்தைக் கூறியிருந்தார். பலரும் கூறும் பழங்காலக் கதைகளை வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் கேட்பது அவருக்கு பொழுதுபோக்கல்ல, பொருளீட்டுவதை அப்படியே விட்டுவிட்டு அதிலேயே லயித்திருக்க இழுக்கும் மற்றொரு வாழ்வு. அதில் கிடைக்கும் தன்னிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை எனப் பலமுறை கூறினார். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் தொடர்ச்சியாக எஸ்.ராஜம் அவர்களைப் பற்றி தான் சேகரித்த குறிப்புகளையும், அவரைச் சந்தித்த நாட்களையும் இணைத்து ஆவணப்படமாகச் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதாகச் சொன்னார்.

அவர் ஊருக்குச் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் (11-11-2012) எஸ்.பி.காந்தனும், லலிதா ராமும் இணைந்து தயாரித்த `சகல கலா ஆசார்யர்` எனும் வித்வான் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப்படம் வெளியானது.

*

28

எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். அவ்விதத்தில் கர்னாடக சங்கீதத்தில் மேதமை என்பது பாடுவதோ ஒரு கருவியின் தேர்ச்சியோ  மட்டுமல்ல – மற்ற நுண்கலைகளின் தொடர்ச்சியாக எந்த ஒரு கலையையும் பாவிப்பதிலும், ஒரு நீண்ட சரடாக காலாதீதப் பயணத்தில் திசை எட்டில் உள்ள அனைத்தையும் வியாபித்திருப்பதிலும் கலையின் சாத்தியங்கள் அடங்கியுள்ளன.  சாதாரணத்தில் துவங்கி உன்னதத்தை உணர்த்துவதிலும், சிறு தீற்றலில் கச்சிதமான ஒரு உலகை வெளிப்படுத்துவதிலும் எஸ்.ராஜம் அவர்களுக்கு நிகரில்லை.

இசையை தனது உணர்வு வெளிப்பாட்டுத் தளமாக கொண்ட ஒரு கலைஞன், ஏன் தூரிகையைத் தொட வேண்டும்? மனோதர்ம சங்கீதத்தின் மூலம் பாடல் வரிகளிலிருந்து இசைப் பிரவாகமாகத் தாவும் உணர்ச்சியைப் பாடும் கலைஞன் வண்ணங்களிலும், கோடுகளிலும் எதை அடைய முயற்சித்தார்?

மும்மூர்த்திகள் பாடிய பாடல்களின் பேசுபொருளையும், ஆளுமையையும் கொண்டு எஸ்.ராஜம் வரைந்த படங்கள் இன்றளவும் மூர்த்தி ரூபத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. மும்மூர்த்திகளைப் பற்றி வரையத் தலைப்பட்ட எஸ்.ராஜம், ஓவியத்தின் நுண்செய்திகளுக்காக பாடல் வரிகளையும், அவர்களது ஆளுமையையும் கையிலெடுத்ததிலிருந்து அவரது முழுமையான கலைப்பார்வை நமக்கு விளங்குகிறது.

முழுமையான கலை உணர்வை அடைய அவரது வாழ்நாள் முழுவதும் ஓவியத்திலிருந்து இசைக்கும், இசையிலிருந்து ஓவியத்துக்கும் அவரது மனம் ஊசலாடிக்கொண்டே இருந்திருக்கிறது. எந்த ஒரு கலையிலும் குறைபட்ட உணர்வை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கண்டிப்பாக இருந்திருக்கிறார். புகழ்பெற்ற `நகுமோமு` பாடலில் சுத்த தைவதத்துடன் பாடாதது குறித்து மனவருத்தம் கொண்டவர், ஒரு செய்முறை விளக்கத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். (சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்த போது நகுமோமு-வின் சரியான பாடாந்திரத்தை பாடும்படி சுப்புடு எழுதிய கடிதமும் படத்தில் வருகிறது.)

இவையெல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்தது, சக மனிதன் மீது அளவுகடந்த வாத்சல்யமும், தாயைப் போன்றதொரு கனிவும் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். இது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. சக மனிதர்கள் மீது கருணையை விட  தாங்கள் நம்பும் கலை மீது எல்லையற்ற பக்தி கொண்டவர்கள்  என்பதே மேதைமையின் அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. பிற துறைகள் மீது, அவற்றில் புழங்கும் மனிதர்கள் மீது சதா அலட்சியம் வெளிப்பட்டபடியே இருக்கும். மேதைகள் புழங்கும் தளங்களின் தாத்பரியங்கள் புரியாததாலும், சமூகத்துக்கு அவர்கள் அளித்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டும் இச்சிறுமையை நாம் மன்னித்துவிடுவோம். ஆனால், எஸ்.ராஜத்தின் வாழ்க்கை பார்வையில் இச்சிறுமையின் சிறு கீற்றைக் கூட காண முடிவதில்லை.

சக மனிதர் மீதிருக்கும் சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட கலை மதிப்பீடுகளை அவரால் அளிக்க முடிந்திருக்கிறது.  `பத்து நாட்கள், பத்து வருடங்கள் கழித்து வந்து கேட்டாலும் ஒரு விஷயத்தைப் பற்றி இம்மியும் பிசகாமல் அதே மதிப்பீட்டை முன்வைப்பார்`, என லலிதா ராம் கூறுவதை அவரது ஞாபக சக்திக்கான கூற்றாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.

எழுத்தை தனது கலா சாதனமாகக் கொண்ட எஸ்.ராஜம் தனது பல கவலைகளை சதா பதிவு செய்துவந்திருக்கிறார்.

ஹவாய் தீவில் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட்ட படைப்புகளில் எஸ்.ராஜத்தின் ஓவியங்களும் உள்ளன எனும் செய்தியுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. உலக மானுடரின் பொதுச்சொத்தாக இவரை எப்படி நாம் அடையாளம் காண முடியும்? வெறும் இசைக் கலைஞராக மட்டும் இருப்பதோடு மட்டுமல்லாது, மனிதர்களின் உயரிய படைப்பான கலையின் பல்வேறு இணைப்புகளைத் தொகுத்து, ஒருமுகப்பட்ட வெளிப்பாட்டு மொழியை உருவாக்கியதில் எஸ்.ராஜத்தின் கலாசாதனை அடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. அவரது ஆர்வங்கள் இத்துடன் அடங்கிவிடவில்லை. இந்தியாவின் பல புராதன கோயில்கள், கற்சிற்பங்களை நுணுக்கமாகப் பார்த்து புகைப்படம் எடுத்துள்ளார். அவரது ஓவியங்களுக்கான மூலம் சிற்பங்களின் நுண்மை மீது அவருக்கிருந்த அசாத்திய ஈடுபாட்டால் சாத்தியமானது போலத் தோன்றுகிறது. மயங்கிச் சரியும் நீளமானக்  கண்கள், தொட்டால் சிலிர்த்துக் கொள்ளுமோ என திகைக்கும் வகையில் மேனி வளைவுகள், தீட்சண்யமான அங்க வடிவங்கள், தீர்க்கமான விரல்கள் என அவரது ஒவ்வொரு ஓவியமும் மிக உயிர்ப்பானக் கலைப்படைப்பாக உள்ளது.

`அவரது படங்கள் வழியே இசையைப் பார்க்க வைத்தவர்` என அவருக்குச் செய்யும் அறிமுகம் மிகப் பொருத்தமானது. அவரது ஒரு தீற்றல்கூட ஏனோதானோ என்று போட்டதாக இல்லை. கலை சத்தியத்துக்காக வேண்டி வாழ்ந்தவர்  என  திரு. என்.ராமனாதன் சொல்வது எப்பேர்ப்பட்ட உண்மை என்று அவரது மாணவர்களும், சக கலைஞர்களும் பேசும்போது நாம் உணர்கிறோம். இப்படிப்பட்ட ஒருவர் நம்மிடையே இருந்திருக்கிறார் என்பதே ஒரு சிறு குழுமத்தைத் தாண்டி தெரியாதபோது நமது சமூகத்தின் ஆர்வங்களை எண்ணி கவலை கொள்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது.

மந்தர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை அவர்  பாடும்போது மிக இயல்பாக எவ்விதமான பாவனைகள் அற்றதாக இருக்குமென  திரு. என். ராமனாதன் கூறும்போது அவரது இசையின் இயல்புகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பயிற்சியின்போது தனது ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொண்ட சாதனத்தை சிறிதுகூட மலிவுக்கு உட்படுத்தாது, ஆதர்ச  வித்வானாக  அவர் வாழ்ந்திருப்பதை நாம் ஆச்சர்யத்தோடு பார்க்க வேண்டியுள்ளது. இசை என்பது மேன்மை தரக்கூடிய சாதனம். அது சுட்டி நிற்பது மேலான ஒரு இலக்கை லட்சியமாகக் கொண்டு என்பதை முழுமையாக உணர்ந்த கலைஞராக, எந்தவிதமான சஞ்சலத்துக்கும் இடம் கொடுக்காமல் இறுதி வரை வாழ்ந்திருக்கிறார் எஸ். ராஜம்.

பரிபூரண ஈடுபாடு என்பதை குறிக்கோளாகச் சிறு வயதிலேயே உணர்ந்ததால் அவர் இசையையும் பிற கலைகளையும் ஒரே நோக்கத்தோடு இணைத்துப் பார்த்திருக்கிறார். ஓவியம் வரையும் முறைகளை சிறு வயதிலேயே கற்றுக்கொண்டாலும், அஜந்தா ஓவியங்களைப் பார்த்தபின்னரே ஓவியக்கலையை முழுமையாக உணர்ந்ததாகச் சொல்கிறார். மேலும், ரமண மஹரிஷியின் ஆசிரமத்தில் வாழ்ந்த கவிஞர்  லூயிஸ் தாம்சன் வழிகாட்டியதைக் கொண்டு, ஓவியம் என்பது இயற்கையைச் சுட்டி நிற்கவேண்டுமே அன்றி, தத்ரூபமாக நகல் செய்யக்கூடாது என்ற இந்திய ஓவியக்கலையின் அடிப்படை தெளிவைப் பெற்றுள்ளார். அதன் பின்னர், அஜந்தா ஓவியங்களைப் பார்த்தபோது ராஜம் அடைந்த வியப்புக்கு எல்லையே இல்லாமல் ஆனது. ஒரு கச்சேரிக்காக பம்பாய் சென்றிருந்த ராஜம் ஓய்வு கிடைக்கும்போது அஜந்தா ஓவியங்களைப் பார்த்து, அவற்றின் வசீகரத்தில் மயங்கியிருக்கிறார்.

`நாலு அடி உயரத்துக்கும் முகம் மட்டுமே இருந்த ஓவியங்களைக் கண்டபோது, எனது ஆச்சர்யம் அளவிட முடியாமல் ஆனது. அரை அடி முகத்தின் பாவங்களை ஓவியத்தில் கொண்டு வரத் திண்டாடியபோது, நாலு அடி முகத்தை உயிர்ப்போடு வரைந்திருந்தனர்`

கவிஞர் லூயிஸ் தாம்சன் கூறியதை அங்குதான் அவரால் முழுமையாக உணர முடிந்தது. இயற்கையை நகல் செய்வதற்கும், இயற்கை சுட்டி நிற்கும் குறியீட்டை ஓவியத் தீற்றலாக மாற்றுவதற்கும் இருந்த அடிப்படை வித்தியாசத்தை உணர்ந்தார். ராஜம் வரைந்த ஓவியங்களிலிருந்த நீளமான கண்கள், பிஞ்சு விரல்கள், நளினமான கை கால்கள் போன்றவை அஜந்தாவின் குகை ஓவியங்களின் இலக்கணப்படி அமைந்திருக்கும். அப்பண்டைய இலக்கணங்களை, நமது காவிய பண்பாட்டுடனும், கர்னாடக சங்கீத பாவங்களை எதிரொலிப்பது போலவும் மாற்றியதில், ஓவியராக அவரது தனித்துவம் அடங்குயுள்ளது. இந்திய ஓவியங்களில் காவிய பண்பையும், இசை நுணுக்கங்களை இணைத்தது ஒரு புது பாணி என்றே சொல்லமுடியும். கலை என்பதே மேன்மைக்கான சாதனம் எனும்போது, எத்தனை எத்தனை சிறப்புகள் அதில் சேர்ந்தாலும் முழுமையை எட்டிவிட முடியாது. அனைத்து திசைகளிலிருந்தும் சிருஷ்டியின் உச்சகட்ட வெளிப்பாடுகளை தனது அசாத்திய லட்சியத்தால் துளிகூட மலிவுபடாமல் புது பாணியில் வடிமைத்தது அவரது ஆளுமையின் அபாரமான வெளிப்பாடு.

`வாணி குரல் வழியே வடிவம் கொண்டால், மறுபடியும் விரல் வழியே வண்ணம் பெற்று
பேணுகிற தெய்வங்கள் வரிசையாக,, பேசுகிற சித்திரமாக மிளிர்ந்ததிங்கே
பூணுகிற புகைப்படமும் கலைகள் நூறும், பொலிந்து இவருக்குள் பூத்து நின்ற விதம்தான் என்னே?`
20

1941இல் மும்மூர்த்திகளைப் படமாக வரைய வேண்டுமென அவரது குடும்ப நண்பர் சந்திரசேகர் பணித்தபோது, தீட்சிதர், தியாகையர், ஷ்யாமா சாஸ்த்ரி முகங்கள் மட்டும் கிடைத்ததைக் கொண்டு முழு உருவங்களை வரைந்தார். முகத்தை மட்டும் ஓவியமாக்கக்கூடாது, அவர்கள் வாழ்ந்த வாழ்வும் ஓவியக்குறிப்பாக மாற வேண்டும் என ஆசைப்பட்டார். நவக்கிரஹங்களைப் பற்றிப் பாடல் இயற்றிய தீட்சிதர்  ஓவியத்தின் பின்னணியில் நவக்கிரஹங்களை வரைந்தார். அவர் வீணை வைத்திருப்பார் எனும் குறிப்பைக் கொண்டு அவருக்கு வீணையும் அதில் பொறித்த யாளி மேல்நோக்கிப் பார்ப்பது போலவும் வரைந்திருந்தார். தினமும் உஞ்சவ்ருத்தி செய்ததால்    தியாகையரின் தலைப்பாகையாக வரைந்ததோடு, அவர் பஜனை செய்ததால் அருகில் ஜால்ராவையும் கையில் சிப்ளா கட்டையும்  வரைந்திருந்தார். அம்பாள் பக்தராக இருந்த ஷ்யாமா சாஸ்த்ரிக்கு சிகப்பு நிற சால்வையை வரைந்திருந்தார். ஓவியம் வரைவதை சரிதை எழுதும் துல்லியத்தோடு அணுகியதைப் பார்க்கும்போது கலையை முழுமையான வெளிப்பாட்டுத்தளமாக மாற்றுவதற்கு அவர் எடுத்துச் செய்த பங்களிப்புகள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

அனைத்திந்திய வானொலி நிலையத்தில் சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்ட  ஒரு ஆபராவில் பங்கு பெற எஸ்.ராஜத்தை அழைத்திருக்கிறார்கள். ஒன்றரை மணிநேரத்தில் நூறு ராகங்களில் சிலப்பதிகாரக் கதை இசைநாடகமாக மாற்றி ஒலிபரப்பப்பட்டது. அற்புதமான கருத்தாக இருந்தாலும், யாரையும் சென்றடையவில்லை – குழப்பமே எஞ்சியது என ஹாஸ்யத்தோடு சொல்கிறார்.  அதில் பங்கேற்றபோது அவருக்கிருந்த திறமையைப் பார்த்த வானொலி இயக்குனர் 1945இல் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் எஸ்.ராஜத்தை வேலையில் அமர்த்தினார்.

சங்கீத நாடக அகாடமி விருது, ஞான பாரதி விருது, சங்கீத கலா ஆச்சாரியா, ஸ்ருதி அறக்கட்டளை அளித்த வேலூர் கோபாலாச்சாரியார் விருது என பல விருதுக்குச் சொந்தக்காரர். மிகப் பெரிய சங்கீத ஆளுமைகளின் குருவாக இருந்திருக்கிறார். கர்னாடக சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த கலைஞர்களும் ராஜம் அவர்களின் மேன்மையை உணர்ந்திருக்கிறார்கள். பொதுவாகவே அங்கீகாரங்களுக்கும், புகழாரங்களுக்கும் ஆசைப்படாத சுபாவமாதலால் பொதுஜனங்களுக்கிடையே எஸ்.ராஜம் பெரிதும் புகழ்பெறவில்லை. ஆசிரியருக்கு ஆசிரியராக இருப்பவர்கள் கலை உலகின் சிறு குழுவுக்குள்ளாகவே மறைந்திருப்பர். ரசிகர்கள் மற்றும் ஆராதகர்களால் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் பிராபல்யத்தைக் கொண்டு சேர்க்க முடியும். அப்படிப்பட்ட ரசிகர்களாக நண்பர் லலிதா ராமும், எஸ்.பி.காந்தன் இருவரும் இணைந்து இந்த அற்புதமான ஆவணத்தைத் தயாரித்துள்ளார்கள்.

கர்மயோகி போல வாழ முடியுமா என்ற கேள்வியே கனவாகிப் போன லௌகீக வாழ்வில், கர்மயோகியாகவே கலாபரிபாலனம் செய்து வாழ்ந்து காட்டியவர் எஸ்.ராஜம். கலைக்காகவே  கலையாகவே வாழ்ந்த மனிதரைப் பற்றி நம்மிடையே இருக்கும் அற்புதமான ஆவணம் இது.

***

சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படத்தின் ஒரு முன்னோட்டம்